Saturday, April 10, 2021

யாழ்ப்பாணம் மேயர் கைதுக்கு வைகோ MP கண்டனம்!

யாழ்ப்பாணம் நகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை, இலங்கை அரசு நேற்றுக் காலையில் கைது செய்தது; கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில், பிற்பகலில், நீதிமன்றம் பிணை விடுதலை வழங்கி இருக்கின்றது.


இந்தக் கைது நடவடிக்கையை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


இதன் பின்னணி என்ன?


யாழ்ப்பாணம் மாநகராட்சியின் சார்பில், மாநகரக் காவலர்கள் ஐந்து பேர் நியமிக்கப்பட்டனர். பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுவோர், அசுத்தம் செய்வோர், எச்சில் துப்புவோர், சாலைகளை மறித்து ஊர்திகளை நிறுத்துவோரிடம் அபராதம் வாங்குவது போன்ற சிறிய ஒழுங்குபடுத்தும் பணிகளை மேற்கொண்டு வந்தனர். இவர்களுக்கு சீருடை கிடையாது. சாதாரண உடை அணிந்து மேற்கண்ட பணிகளைச் செய்யும்போது, சில இடங்களில் பிரச்சினைகள் எழுந்தன. எனவே, அந்தக் காவலர்களுக்கு, கொழும்பு மாநகரக் காவலர்கள் அணிவது போன்ற சீருடையை வழங்குவது என, விஸ்வலிங்கம் மணிவண்ணன் முடிவு செய்தார். ஏற்கனவே, மாநகரட்சிகயின் வேறு வகையான பணியாளர்கள் சீருடை அணிந்துதான் பணியாற்றி வருகின்றனர். இலங்கை அரசு கெசட் ஆணையின்படி, இவ்வாறு சீருடை வழங்க அவருக்கு அதிகாரம் உள்ளது. எனவே, அவர் அந்த ஐந்து காவலர்களுக்கும் தனிச் சீருடை தைக்க ஆணை பிறப்பித்தார்.


ஆனால், அந்தச் சீருடை, முன்பு விடுதலைப்புலிகளின் ஆளுமையில் இருந்த தமிழ் ஈழக் காவல்துறையினர் அணிந்து இருந்ததுபோன்ற வண்ணத்தில் இருக்கின்றது; எனவே, அவர் விடுதலைப்புலிகள் அமைப்பை மீளவும் கட்டி எழுப்ப முயல்கின்றார்;  இது ஒரு பயங்கரவாத நடவடிக்கை என்று கூறி, இலங்கை அரசின் பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்புப் பிரிவு, இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கின்றது.


அதாவது, இலங்கை உள்ளூர் ஆட்சிச் சட்டத்தின்படி, முதல்வருக்கு வழங்கப்பட்டு இருக்கின்ற ஒரு சிறிய அதிகாரத்தையும் செயல்படுத்துவதை, சிங்கள இனவெறி அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கொழும்பு மாநகரக் காவலர்களும் அதே சீருடையைத்தான் அணிந்து இருக்கின்றனர். அவர்களுக்கு  ஒரு நீதி; யாழ்ப்பாணத் தமிழருக்கு அநீதி என்ற நிலையே தொடர்கின்றது.


இந்தியாவின் பொடா (ஞடீகூஹ) சட்டத்தின் பெயரிலேயே, பயங்கரவாதத் தடைச் சட்டம் (ஞசநஎநவேiடிn டிக கூநசசடிசளைஅ ஹஉவ) இலங்கை அரசு கொண்டு வந்தது. அந்தக் கொடிய அடக்குமுறைச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என, எதிர்க்கட்சிகள் கோரி வருகின்ற நிலையில், அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, யாழ்ப்பாணம் மேயரை, இலங்கை அரசு கைது செய்து இருக்கின்றது.


மியான்மர் அரசுக்கும், இலங்கை அரசுக்கும் வேறுபாடு இல்லை; இலங்கை ஒரு பாசிச நாடு என்பதையே, இந்தக் கைது நடவடிக்கை காட்டுவதாக, பன்னாட்டு அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்து இருக்கின்றனர். வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனும், தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் குற்றம் சாட்டி இருக்கின்றனர்.


ஒரு மாநகர சபைக்கு நிர்வாக கட்டமைப்பைத் தமிழர்கள் ஏற்படுத்த முயல்வதைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கள ஆட்சியாளர்கள், ஒருபோதும் தமிழருக்கு சம உரிமை தர மாட்டார்கள். ஈழத் தமிழரைக் கரு அறுப்பதற்கான நடவடிக்கைகளையே தொடர்ந்து மேற்கொள்வார்கள்.


எனவே, ஈழத்தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமைகள் கிடைத்திட, உரிய நடவடிக்கைகளை, உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.


‘தாயகம்’ வைகோ

சென்னை - 8 பொதுச் செயலாளர்,

10.04.2021 மறுமலர்ச்சி தி.மு.க

No comments:

Post a Comment