Sunday, September 26, 2021

ம.தி.மு.க. மாணவர் அணி சார்பில், நீட் எதிர்ப்பு கருத்து அரங்கம். வைகோ MP அறிக்கை!

மருத்துவக் கல்வியில் நீட் தேர்வை, ஒன்றிய அரசு திணித்த நாள் முதல், தமிழ்நாட்டில் அரியலுர் மாணவி அனிதா முதல் சௌந்தர்யா வரை 16 மாணவக் கண்மணிகள், தங்கள் உயிர்களைப் போக்கிக் கொண்டுள்ளனர். எனவே, நீட் தேர்வு கூடாது என, திராவிட முன்னேற்றக் கழக அரசு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவிடம் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கருத்து அளித்தனர். அவற்றுள் 80 விழுக்காட்டினர், நீட் தேர்வுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

அதன் அடிப்படையில், நீதிபதி ஏ.கே. ராஜன், நீட் தேர்வு கூடாது; அது சமூகத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது என்பதை விளக்கி, அரசுக்கு அறிக்கை அளித்து இருக்கின்றார்.

அந்த அறிக்கையில்,

1. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில், பல்வேறு பாடத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஆனால், நீட் தேர்வு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்துகின்றார்கள். எனவே, நீட் தேர்வு, கல்வித் துறையில் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கின்றது.

2. நீட் தேர்வு, தனியார் பயிற்சி மையங்களை ஊக்குவிக்கின்றது. அவர்கள் இலட்சக்கணக்கான ரூபாய் கல்விக் கட்டணக்கொள்ளை நடத்த வழிவகை செய்கின்றது. தனியார் பள்ளிகளில், 11 ஆம் வகுப்பு முதலே நீட் பயிற்சிகளைத் தொடங்கி விடுகின்றார்கள்.

3. அரசுப்பள்ளிகளில் படிக்கின்ற அடித்தட்டு, ஏழை, எளிய மக்களின் மருத்துவக் கல்விக் கனவை, நீட் தேர்வு தகர்த்துத் தரைமட்டம் ஆக்குகின்றது. பட்டியல் இனம் மற்றும் பழங்குடி மக்களுக்கான வாய்ப்புகளை முற்றுமுழுதாகத் தடை செய்கின்றது.

4. 2010-11 ஆம் கல்வி ஆண்டில், மாநிலக் கல்வித் திட்டத்தில் படித்த 2332 பேருக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைத்தது. சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த 14 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்தது. நீட் தேர்வு அறிமுகம் ஆன பிறகு, சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த 1604 பேர் மருத்துவக் கல்வியில் சேர்ந்து இருக்கின்றார்கள்.

எனக் குறிப்பிட்டு இருக்கின்றார்.

எனவே, நீட் தேர்வுக்கு எதிரான விழிப்புணர்வை, நாடு முழுமையும் ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கின்றது. அதற்காக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணி சார்பில், சென்னை, திருச்சி, கோவை, திருநெல்வேலி ஆகிய நான்கு மையங்களில், நீட் தேர்வுக்கு எதிரான கருத்து அரங்கம் நடைபெறும். மாவட்டச் செயலாளர்களின் வழிகாட்டுதலுடன், மாநில மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார் ஒருங்கிணைப்பில், மாநில துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்கின்றார்கள். பெற்றோர்களும், மாணவர்களும், இளைஞர்களும் பெருமளவில் கலந்து கொண்டு, கருத்து அரங்குகளை வெற்றி பெறச் செய்திடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’                                      
சென்னை - 8                               
23.09.2021

Tuesday, September 21, 2021

சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகிறார் வைகோ MP!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், நாளை 22.09.2021 காலை 10 மணி அளவில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.

கோ.நன்மாறன்
செய்தித் தொடர்பாளர்
மறுமலர்ச்சி தி.மு.க,
‘தாயகம்’
சென்னை - 8
21.09.2021

Monday, September 20, 2021

பெட்ரோல் டீசல் விலை உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி மதிமுக ஆர்பாட்டம்!

இன்று (20.09.2021) சென்னை அண்ணாநகர் இல்லத்தின் முன்பு மதிமுக பொதுச்செயலாளர் தலைவர் வைகோ எம்பி தலைமையில், மக்கள் விரோத - ஜனநாயக விரோத ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து, திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தலைவர் வைகோ எம்பி அவர்கள் தலைமையில், மதிமுக நிர்வாகிகள், வேளாண் சட்டங்கள் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி கட்சியினர் கண்டன முழக்கம் எழுப்பினர்.


Friday, September 17, 2021

பெரியார் 143 வது பிறந்த நாளில் வைகோ மலர் மரியாதை!

தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மதிமுக தலைமை நிலையம் தாயகத்தில் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பெரியார் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

உடன் மாவட்ட மாநில செயலாளர்கள் நிர்வாகிகள் இருந்தனர்.

Thursday, September 16, 2021

தலைமைக் கழக அறிவிப்பு. ஊரக உள்ளாட்சித் தேர்தல்!

அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெறும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்துச் செயலாற்ற மறுமலர்ச்சி தி.மு.க. தலைமைக் கழகப் பொறுப்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். தொடர்புடைய 9 மாவட்டச் செயலாளர்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த அனைத்து நடைமுறைகளுக்கும் தலைமைக் கழகப் பொறுப்பாளர்களைத் தொடர்புகொண்டு தேர்தல் பணியாற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அ.கணேசமூர்த்தி எம்.பி.,
மல்லை சத்யா, துணைப் பொதுச்செயலாளர்
டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், ஆட்சிமன்றக்குழுச் செயலாளர்
1. காஞ்சிபுரம் மாவட்டம்
2. செங்கல்பட்டு மாவட்டம்
3. வேலூர் மாவட்டம்
4. திருப்பத்தூர் மாவட்டம்
5. இராணிப்பேட்டை மாவட்டம்

வழக்கறிஞர் கு.சின்னப்பா எம்.எல்.ஏ.,
ஏ.கே.மணி, துணைப் பொதுச்செயலாளர்
மு.செந்திலதிபன், அரசியல் ஆய்வு மையச் செயலாளர்
6. விழுப்புரம் மாவட்டம்
7. கள்ளக்குறிச்சி மாவட்டம்

டாக்டர் தி.சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ.,
புதூர் மு.பூமிநாதன் எம்.எல்.ஏ.,
புலவர் சே.செவந்தியப்பன், அரசியல் ஆலோசனைக்குழுச் செயலாளர்
டாக்டர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் எம்.எல்.ஏ.,
8. திருநெல்வேலி
9. தென்காசி

தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க,
‘தாயகம்’
சென்னை - 8
16.09.2021

Wednesday, September 15, 2021

வேலூர் மாவட்டம் - தலையாரம்பட்டு சௌந்தர்யா தற்கொலை! மாணவச் செல்வங்கள் மனம் தளர வேண்டாம் வேண்டுகோள்!

நீட் தேர்வினால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளின் கதவுகள் திறக்கப்படுவது இல்லை என்று பரவலாக குற்றம் சாட்டப்படும் நிலையில், அடித்தட்டு மக்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட்தேர்வு, பல மாணவ, மாணவியரின் உயிருக்கு உலை வைத்து வருகிறது.

மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் (நீட்) நுழைவுத் தேர்வு நடத்துவதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக் கோரி, தமிழ்நாடு சட்டப் பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது. இதனிடையே, நடப்பாண்டு நீட் தேர்வும் நடைபெற்று முடிந்துள்ளது. நீட் தேர்வு நடந்த நாளிலேயே மேட்டூர் மாணவர் தனுஷ் தற்கொலை, தேர்வு எழுதி முடித்து வந்த அரியலூர் மாணவி கனிமொழி தோல்வி பயத்தால் தற்கொலை என இரண்டு துயர சம்பவங்கள் நடந்தன.
மாணவ செல்வங்கள், எதிர்நீச்சல் போட்டு, வாழத் துணிய வேண்டும். நம்பிக்கை இழக்கக் கூடாது. உங்கள் உயிர்களைப் போக்கிக் கொண்டால், பெற்றோரும், உற்றாரும் வாழ்நாள் முழுவதும் கண்ணீர் விடுவார்கள்.
சமூகத்திற்கும், நாட்டிற்கும், வீட்டிற்கும் நீங்கள் ஆற்ற வேண்டிய பெரும் பணிகள் நிரம்ப இருப்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
இந்நிலையில், மூன்றாவதாக, வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த மாணவி சௌந்தர்யா, தோட்டபாளையம் பள்ளியில் படித்து, 510 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்.
மருத்துவராகும் கனவோடு நீட் தேர்வு எழுதிய சௌந்தர்யா, தேர்வில் தான் தோல்வியடைந்து விடுவேன் என தோன்றுவதாக பெற்றோரிடம் கதறி அழுத வண்ணம் இருந்திருக்கிறார். இந்நிலையில், மாணவி சௌந்தர்யா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்தி வேதனை அளிக்கின்றது. அவரை இழந்து வாடும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இதன் மூலம் நீட் தேர்வினால் தமிழ்நாட்டின் பலி எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது.
நீட் எழுதிய மாணவச் செல்வங்கள், எதிர்நீச்சல் போட்டு, வாழத் துணிய வேண்டும். நம்பிக்கை இழக்கக் கூடாது என எத்தனையோ அறிவுரைகள் வழங்கினாலும் இதுபோன்ற முடிவை ஒரு நிமிடத்தில் எடுப்பது வேதனை தருகிறது. மாணவச் செல்வங்கள் மனம் தளர வேண்டாம் என்று வேண்டி கேட்டுக்கொள்கின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
15.09.2021

அண்ணா சிலைக்கு வைகோ மலர் மாலை!

தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா மதிமுக தலைமை நிலையம் தாயகத்தில் செப் 15 ஆம் நாள் கொண்டாடப்பட்டது.

கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திநார். உடன் மாநில மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் இருந்தனர்.

Tuesday, September 14, 2021

மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், அண்ணா பிறந்தநாள் விழா!

பேரறிஞர் அண்ணா அவர்களின் 113 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், நாளை 15.09.2021 புதன்கிழமை காலை 9 மணிக்கு, சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் உள்ள அறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கழகக் கொடியினை ஏற்றி வைக்கிறார்.

மாலை 3 மணிக்கு காணொளி வழியாக அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார். கழக முன்னணியினர் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க,
‘தாயகம்
சென்னை - 8
14.09.2021

மாணவச் செல்வங்களே, நம்பிக்கை இழக்காதீர்கள்; வாழ்ந்து காட்டுங்கள். வைகோ வேண்டுகோள்!

மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (NEET) நடத்துவதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக் கோரி, தமிழ்நாடு சட்டப் பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியைச் செயல்படுத்த முதல் அடியை எடுத்து வைத்து இருக்கின்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கல்வித் துறையில் ஒன்றிய அரசின் ஏகபோக ஆதிக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில், தி.மு.க. அரசு திட்டம் வகுத்துச் செயல்படுவது வரவேற்கத்தக்கது. மாநில அரசுகளின் உரிமைக் குரலை ஓங்கி ஒலிக்கின்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகின்றேன்.
நீட் தேர்வை ஒன்றிய அரசு திணித்த நாள்முதல் தமிழ்நாட்டில் 13 மாணவக் கண்மணிகள் தங்கள் உயிர்களைக் போக்கிக் கொண்டுள்ளனர்.
2017 நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால், அரிலூர் மாவட்டம், குழுமூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்ட துயரம் நாட்டையே உலுக்கியது. அதன் பிறகு தொடர்ச்சியாக, செஞ்சியை அடுத்த பெரவளூர் பிரதீபா, திருச்சி சுபஸ்ரீ, சென்னை சேலையூரைச் சேர்ந்த ஏஞ்சலின் சுருதி, திருப்பூர் ரிது ஸ்ரீ, மரக்காணம் கூனிமேடு மோனிசா, பட்டுக்கோட்டை வைஸ்யா, நெல்லை தனலட்சுமி, கோவை ஆர்.எஸ்.புரம் சுப ஸ்ரீ, மதுரை ஜோதி ஸ்ரீ துர்கா, செந்துறை விக்னேஷ், தருமபுரி ஆதித்யா, திருச்செங்கோடு மோதிலால் ஆகியோர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டனர்.
மேட்டூரை அடுத்த கூலையூரைச் சேர்ந்த மாணவன் தனுஷ் இருமுறை நீட் எழுதி தோல்வி அடைந்ததால் மீண்டும் தேர்வில் வெற்றிபெற முடியாமல் போகுமோ என்ற மன உளைச்சலில் நேற்று முந்தைய நாள் தற்கொலை செய்து கொண்டார்.
12 ஆம் தேதி நீட் தேர்வை எழுதிய அரியலூர் மாவட்டம் துலாரங்குறிச்சி எனும் ஊரைச் சேர்ந்த வழக்கறிஞர் கருணாநிதி என்பவரின் மகள் கனிமொழி, நீட் தேர்வு தோல்வி அச்சத்தால் நேற்று மாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்ற மரணச் செய்தி நெஞ்சைப் பிளக்கின்றது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் அதிகார ஆணவ எதேச்சதிகாரத்தால் புகுத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வால் தமிழ்நாடு 15 மாணவச் செல்வங்களைப் பறி கொடுத்து விட்டது.
இன்னும் உயிர்களைக் காவு கொடுக்க தமிழ்நாடு ஆயத்தமாக இல்லை என்பதை டெல்லிக்கு உணர்த்துவதற்காகத்தான், நீட் தேர்வு கூடாது என்று சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது. இந்திய அரசு அமைப்புச் சட்டத்தில் பொதுப்பட்டியலின் கீழ் உள்ள கல்வித்துறையில், மாநில நலனுக்காக சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கின்றது. அந்த அடிப்படையில்தான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவு நிறைவேறி உள்ளது.
அரியலூர் மாணவி அனிதா தொடங்கி. அதே அரியலூர் மாணவி கனிமொழி வரையில் தமிழ்நாடு நீட் தேர்வுக்காக உயிர்ப்பலி கொடுத்தது போதும். இனியும் இந்நிலை தொடர இடம் தரக் கூடாது.
எனவே, ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி உள்ள சட்ட முன்வடிவுக்குத் தாமதம் இன்றி ஏற்பு அளித்து, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்.
நீட் எழுதிய மாணவ செல்வங்கள், எதிர்நீச்சல் போட்டு, வாழத் துணிய வேண்டும். நம்பிக்கை இழக்கக் கூடாது. உங்கள் உயிர்களைப் போக்கிக் கொண்டால், பெற்றோரும், உற்றாரும் எத்தகைய இழப்புக்கு உள்ளாவர்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். வாழ்நாள் முழுவதும் கண்ணீர் விடுவார்கள்.
சமூகத்திற்கும், நாட்டிற்கும், வீட்டிற்கும் நீங்கள் ஆற்ற வேண்டிய பெரும் பணிகள் நிரம்ப இருக்கின்றன என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் எனக் வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
14.09.2021

Monday, September 13, 2021

Dr.ராமதாஸ் இல்ல மணவிழாவில் வைகோ எம்பி வாழ்த்து!

13.9.2021 மாலை கிண்டியில் உள்ள ஐ.டி.சி.கிராண்ட் சோலாவில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் எஸ்.இராமதாஸ் சரசுவதி இராமதாசு அவர்களின் மகன்வழி பேத்தியும் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் பேரியக்கத்தின் முதுபெரும் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர் ஐயா டாக்டர் மு.கிருஷ்ணசாமி அவர்களின் மகள்வழி பேத்தியும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் திருமதி சவுமியா அன்புமணி ராமதாஸ் அவர்களின் மகள் சங்கமித்ரா சொளமியா அன்புமணி பி.இ சென்னை சோழிங்கநல்லூர் மிராசுதாரும் எனது உறவினருமான அண்ணன் பூ.தனசேகர் அண்ணியார் திருமதி கலைவாணி அவர்களின் இளையமகன் த.சங்கர் பாலாஜி எம்.டெக் ஆகியோர் திருமண வரவேற்பு நிகழ்வில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இணையர் ரேணுகா அவர்களுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார். அவருடன் மகன் துரைவைகோ அவர்களும் இருந்தார். மற்றும் மாவட்ட செயலாலர்கள் இருந்தனர்.

Friday, September 10, 2021

அமல்ராஜ் இல்ல மண விழாவில் வைகோ எம்பி வாழ்த்து!

நெல்லையில் மதிமுக சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் அரசுஅமல்ராஜ் இல்ல மணவிழாவில் வைகோ அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அன்புமணி MP வைகோ எம்பி வீட்டில் சந்திப்பு!

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் இல்லத்தில் வருகை தந்து மகள் திருமண அழைப்பிதழ் வழங்கி திருமணத்திற்கு அழைத்தார்...

Saturday, September 4, 2021

கப்பல் ஓட்டிய தமிழர், மாமனிதர் வ.உ.சி. புகழ் நீடு வாழ்க!

1878 செப்டம்பர் 5 ஆம் நாள் தோன்றிய வ.உ.சிதம்பரம் அவர்களின் அரசியல் வாழ்வில், 1905 முதல் 1908 வரை, நான்கு ஆண்டுகள், எழுச்சி மிக்கவை.

வீரபாண்டிய கட்டபொம்மன், கயத்தாறு புளியமரத்தில் தூக்கு மரத்தை முத்தமிட்ட அக்டோபர் 16 ஆம் நாள் அன்று, 1906 இல் தூத்துக்குடி கிரேஸ் காட்டன் ரோடு, 85 ஆம் எண் இல்லத்தில் சுதேசி கப்பல் கம்பெனியை வ.உ.சி. துவக்கினார். இரண்டு ஆண்டுகளுக்குள், ஆங்கிலேய அரசு வ.உ.சி. மீது தேசத் துரோகக் குற்றம் சுமத்தி, 1908 ஜூலை 7 ஆம் நாள் இரட்டை ஆயுள் தண்டனை, அத்துடன் நாடு கடத்தல் தண்டனை விதித்து, கோயமுத்தூர், கண்ணனூர் சிறைகளில் அடைக்கப்பட்டு வதைபட்டார்.

கோவை சிறையில்தான் செக்கு இழுத்தார். அவரது உயிர் நண்பர் தியாகி சுப்பிரமணிய சிவாவுக்கு, பத்து ஆண்டுகள் சிறையும், நாடு கடத்தல் தண்டனையும் விதிக்கப்பட்டது.

வீர சிதம்பரம் 1912 டிசம்பர் 24 இல் விடுதலை பெற்றார். புதுச்சேரியில் அரவிந்தர், பாரதியார், வ.வே.சு. ஐயர் ஆகிய தேசபக்தர்களைச் சந்தித்தார்.

1912 முதல் 1919 வரை மைலாப்பூரிலும், பெரம்பூரிலும் வணிகம் செய்தார்.

1919 முதல் 1922 வரை கோவையில் வாழ்ந்தார்.

1922 முதல் 1932 வரை கோவில்பட்டியில் வாழ்ந்தார்.

1932 முதல் 1936 நவம்பர் 18 வரை தூத்துக்குடியில் வாழ்ந்தார்.

தந்தை பெரியாருடன் நெருங்கிய நட்பு கொண்டு இருந்தார். 1927 நவம்பர் 5 ஆம் தேதி, சேலம் மாவட்ட காங்கிரஸ் அரசியல் மாநாட்டுக்குத் தலைவர் ஆனார். வரதராஜூலு நாயுடு வரவேற்புக் குழுத் தலைவராக இருந்தார்.

சிறையில் இருந்து வெளியே வந்தது முதல் விடுதலை முழக்கம் எழுப்பி வந்தார்.

1936 நவம்பர் 13 இல் உணர்வு குறைந்து பேச்சு நின்றது.

பாரதியின் சுதந்திரப் பாடல்களைக் கேட்க விரும்பினார்.

தூத்துக்குடி காங்கிரஸ் கமிட்டி காரியதரிசி கந்தசாமி பிள்ளை, தொண்டர்களை அழைத்து வந்து, பாரதி பாடல்களைப் பாடச் செய்தார். காது குளிர அப்பாடல்களைக் கேட்ட வ.உ.சி., என்னைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தியவர்கள் முன்னால் நான் சுதந்திர இந்தியாவில் வாழ முடியவில்லையே? என்று தன் மனவேதனையைக் கொட்டினார்.

தொல்காப்பியம், திருக்குறள் நூல்களைப் பதிப்பித்தார். திருக்குறள் அறத்துப்பாலுக்கு உரை எழுதினார். பொருட்பால், இன்பத்துப்பாலுக்குத் தான எழுதிய உரைகள் நூலாக வெளிவரவில்லையே என்ற ஆதங்கத்துடன் மறைந்தார்.

வ.உ.சி. அவர்களையும், அவர் நாட்டு விடுதலைக்காக ஆற்றிய அரும்பெரும் தொண்டுகளையும், தியாகத்தையும் மக்கள் மறக்க முடியாது.

பெயரையும், புகழையும் விரும்பாமல், ஆடம்பரம்அற்ற எளிய வாழ்வு நடத்தி, ஒப்பற்ற சேவை புரிந்தவர் சிதம்பரனார்.

என் மனமும், என் உடம்பும், என் சுகமும், என் அறமும்
என் மனையும், என் மகவும், என் பொருளும்
என் மனமும் குன்றிடினும்
யான் குன்றேன்
கூற்றுவனே வந்திடினும்
வென்றிடுவேன் காலால் உதைத்து

என்று எழுதினார்.

1943 ஜனவரி 7 இல், வரகவி ஆ.சுப்பிரமணியர் எழுதிய கட்டுரையில், வ.உ.சி.யை ‘கப்பல் ஓட்டிய தமிழர்’ என்று முதன் முதலாகக் குறிப்பிட்டார். அதே பெயரில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. நூல் எழுதினார்.

1972 இல் சுதந்திர தின வெள்ளி விழாவில், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், கோவை சிறையில் சிதம்பரனார் இழுத்த செக்கினை நினைவுச் சின்னமாகக் கருதி, சிறப்புமிக்க இடத்தில் வைக்கப்படும் என கலைஞர் அறிவித்து, சென்னை அரசினர் தோட்டத்தில் காந்தி இல்லத்துக்குப் பக்கத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

வ.உ.சி.யின் நூறாம் ஆண்டு விழாவில், கலைஞர் தலைமையில் தூத்துக்குடி துறைமுகத்தில் வெண்கலச் சிலை நிறுவப்பட்டு, இந்திரா காந்தி அவர்கள் திறந்து வைத்தார்கள். மத்திய அஞ்சல் துறை அமைச்சர் பகுகுணா, வ.உ.சி.யின் அஞ்சல் தலையை வெளியிட்டார்.

வ.உ.சி.யின் 150 ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, மாண்புமிகு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பான அறிவிப்புகளைச் செய்து இருக்கின்றார்.

தூத்துக்குடியில் மேல பெரிய காட்டன் சாலை இனி ‘வ.உ.சிதம்பரனார் சாலை’ என அழைக்கப்படும்; வ.உ.சி. அவர்களின் முழு உருவச் சிலை, கோவை வ.உ.சி. பூங்காவில் அமைக்கப்படும்; ஒட்டப்பிடாரத்தில் வ.உ.சி. வாழ்ந்த நினைவு இல்லமும், திருநெல்வேலியில் உள்ள சிதம்பரனார் அவர்களின் மணி மண்டபமும் புதுப்பிக்கப்பட்டு, ஒளி, ஒலி காட்சி அமைக்கப்படும்.

இவ்வாறு, 14 அறிவிப்புகளை முதல் அமைச்சர் அவர்கள் அறிவித்து இருக்கின்றார்; உ.வ.சி.யின் புகழை உலகு அறியச் செய்து இருக்கின்றார்.

நாட்டு விடுதலைக்கு தியாகம் செய்தவர்களை இந்த அரசு இமயத்தின் உச்சியில் வைத்துப் போற்றுகின்றது; தமிழகம் பெருமிதம் கொள்கின்றது.

 வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
04.09.2021

Thursday, September 2, 2021

முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் குடி உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். வைகோ MP அறிக்கை!

தமிழ்நாட்டில், 100 க்கும் மேற்பட்ட முகாம்களில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்விற்காக, ரூ 317 கோடியில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து இருக்கின்ற, தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, அறிக்கை வெளியிட்டு இருந்தேன். அவர்களுக்கு, 7469 வீடுகள் கட்டித்தருதல், முகாம்களில் மின் வசதி, குடிநீர், கல்வி மற்றும் பல்வேறு நலத்திட்டப்பணிகள், நிகழும் நிதி ஆண்டில் மேற்கொள்ளப்பட இருப்பது, மகிழ்ச்சி அளிக்கின்றது. அதேபோல, அவர்களது குடி உரிமை குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக ஒரு குழு அமைப்பதாகவும் முதல் அமைச்சர்  அறிவித்து இருக்கின்றார்.

19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக, தமிழ்நாட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கானோரை, பிரித்தானியர்கள் அழைத்துக்கொண்டு சென்றனர்.

இருபதாம் நூற்றாண்டில், 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் நாள் இலங்கை விடுதலை பெற்றது. அப்போது, அந்த நாட்டின் மலையகப் பகுதிகளில், தேயிலை, காப்பித் தோட்டங்களில் பணிபுரிந்து கொண்டு இருந்த,  இந்தியர் வழித்தோன்றல் தமிழர்கள் 10 இலட்சம் பேர்களுக்கு இலங்கைக் குடி உரிமை கிடையாது; அவர்கள் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என அறிவித்தனர்.

பிறப்பின் அடிப்படையில் குடி உரிமை வழங்குவது, உலகம் முழுமையும் பெரும்பாலான நாடுகளில் உள்ள நடைமுறை ஆகும். ஆனால், 150 ஆண்டுகளுக்கும் மேலாக, அங்கே வாழ்ந்து, பல தலைமுறைகள் கடந்து விட்ட தமிழர்களுக்குக் குடி உரிமை கிடையாது என, இலங்கை அரசு அறிவித்தது, மனித உரிமைகளுக்கும், பன்னாட்டுச் சட்டங்களுக்கும் எதிரான நடவடிக்கை ஆகும்.
  
அதை எதிர்த்து, மலையகத் தமிழர்கள் பல போராட்டங்களை நடத்தினர்.

‘இந்தியாவில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், பர்மா, மொரீசியஸ் போன்ற நாடுகளுக்குச் சென்ற இந்தியர்களுக்கு, அந்த நாடுகளில் குடி உரிமை வழங்கப்பட்டு இருக்கின்றது; அதுபோல, இலங்கையும், குடி உரிமை வழங்க வேண்டும்’ என, பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் தலைமையிலான இந்திய அரசு, வலியுறுத்தியது.

1953-54 ஆம் ஆண்டுகளில், இலங்கைப் பிரதமர் சர் ஜான் கொத்தலாவல, பண்டித நேரு ஆகியோர் இடையே பேச்சுகள் நடைபெற்றன. ஆனால், குடி உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படவில்லை. 

இந்தப் பிரச்சினை, 15 ஆண்டுகளாக நீடித்தது. 

1962 இல், இந்திய-சீன எல்லைப் போர் வெடித்தது. ஏற்கனவே, கிழக்கு பாகிஸ்தான் பிரச்சினையில், மேற்கு பாகிஸ்தானுடன் மோதல் போக்கு நீடித்து வந்தது. அதனால், இந்திய அரசின் நிலைப்பாட்டில் மாறுதல் ஏற்பட்டது. இலங்கையுடன் இணக்கத்தைக் கடைப்பிடிக்கக் கருதி, இந்தியர் வழித்தோன்றல் தமிழர்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள இசைந்தனர். 

1964 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் நாள், இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, இலங்கைப் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகே ஆகியோர், ஒரு உடன்படிக்கை செய்து கொண்டனர். 

அதன்படி, ‘5,25,000 இலட்சம் பேரை இந்தியா திரும்ப அழைத்துக் கொள்வது;  மீதம் உள்ள 3 இலட்சம் பேருக்கு, இலங்கைக் குடி உரிமை அளிப்பது’ எனத் தீர்மானித்தார்கள். படிப்படியாகத் தமிழர்கள், தமிழ்நாட்டுக்கு வரத் தொடங்கினர்; நீலகிரி, கொடைக்கானல் தேயிலைத் தோட்டப் பகுதிகளில் குடி அமர்த்தப்பட்டனர். 

10 ஆண்டுகள் கடந்த பிறகு,1974 ஆம் ஆண்டு, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, இலங்கைப் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகே இருவரும், அந்த உடன்படிக்கையைப் புதுப்பித்தனர். தாயகம் திரும்பி வர வேண்டியவர்களுள் 1,50,000 பேரை இரு நாடுகளும் சரிபாதியாகப் பிரித்து, குடி உரிமை வழங்குவது எனத்  தீர்மானித்தனர். அதன்படி, இலங்கை குடி உரிமை அளித்து விட்டது.

1987 ராஜிவ் காந்தி - ஜெயவர்த்தனே செய்து கொண்டஉடன்படிக்கையிலும், இலங்கையில் உள்ள இந்தியக் குடிமக்கள் தாயகம் திரும்புவதை விரைவுபடுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. 

தற்போது, தமிழக அரசு மறுவாழ்வுத் துறையிடம் உள்ள புள்ளி விவரங்களின்படி, 1984 ஆம் ஆண்டு வரை, 4 இலட்சத்து 71 ஆயிரம் பேர், இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு, இந்தியக் குடிமக்கள் ஆக்கப்பட்டு இருக்கின்றனர்.  உடன்படிக்கையின்படி, இந்தியக் குடி உரிமை  பெறத் தகுதி உள்ள, 1 இலட்சத்து 30 ஆயிரம் பேர் உள்ளனர்.

1983 ஆம் ஆண்டு, இலங்கையில் வெடித்த ஜூலை இனக்கலவரத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். எனவே, உயிர் தப்புவதற்காக,  இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ஈழத்தமிழர்கள், படகுகளில் இந்தியாவுக்கு வந்தனர்; அவர்களுடன், மலையகத் தமிழர்களும் வந்தனர். அப்போது வந்த அனைவருமே, தமிழ்நாட்டில் 100 முகாம்களில் அடைக்கப்பட்டனர். 

அவர்களுள், மலையகத் தமிழர்கள் சுமார் 28000 பேர். இப்போது, அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளையும் சேர்த்து, 45000 பேருக்குக் கூடுதலாக உள்ளனர். இந்தியக் குடி உரிமைச் சட்டத்தின்படி, இவர்கள் குடி உரிமை பெறத் தகுதியானவர்கள். ஆனால், இவர்கள் அனைவருமே, அகதிகளாக வந்து குடியேறியவர்களாகக் கருதப்படுவதால்,  இவர்களுக்குக் குடி உரிமை மறுக்கப்படுகின்றது. 

சட்ட விரோதமாக வந்தவர்கள் என்றால், ரகசியமாக வந்திருக்க வேண்டும். ஆனால், போரின் காரணமாக அடைக்கலம் தேடி வந்தவர்கள்; அரசால் முறையாக வரவேற்று, ஆவணங்களில் பதிவு பெற்று, முகாம்களில் குடி அமர்த்தப்பட்டவர்கள். எனவே, இவர்கள் சட்டவிரோதக் குடியேறிகள் அல்ல. கடந்த 30 ஆண்டுகளாக, இந்திய, தமிழ்நாடு அரசுகளின் உதவிகளைப் பெற்று வருகின்றவர்கள். 

இவர்கள் அனைவருக்குமே, அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் குடி உரிமை வழங்க வேண்டும். ஈழத்தமிழர்களுள் சுமார் 10,000 க்கும் மேற்பட்டவர்களும், இந்தியக் குடி உரிமை கோருகின்றார்கள். அவர்களுக்கும் குடி உரிமை வழங்க வேண்டும். 

அவர்களுள் ஒரு பகுதியினர், இலங்கைக்குத் திரும்பிச் செல்லவும் விருப்பம் தெரிவித்து இருக்கின்றார்கள். அவர்களுடைய உடைமைகளை, வான் ஊர்திகளில் கொண்டு செல்ல முடியாது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம், அவர்கள் நாடு திரும்புவதற்கான உதவிகளைச் செய்து தருகின்றது. வான் ஊர்தி பயணக் கட்டணம், செலவுத் தொகை வழங்குகின்றார்கள். 

அப்படி ஏற்கனவே அங்கே சென்றவர்களுக்கு, உறுதிமொழி அளித்தபடி, உதவிகள் கிடைக்கவில்லை. வேலைவாய்ப்புகள் இல்லை; நிலம் திரும்பக் கிடைக்கவில்லை. தங்குவதற்கு இடமும் இன்றி, உறவினர்களின் வீடுகளில் தங்கி இருக்கின்றனர். 

அதனால், இனி அங்கே போக விழைவோர் தயங்குகின்றனர். அவர்கள் அங்கே செல்ல வேண்டுமானால், அவர்களுக்கான வீடு, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்த வேண்டியது இந்திய அரசின் கடமை ஆகும். 

இந்திய இலங்கை உடன்படிக்கைகளின்படி, இந்தியாவுக்குத் திரும்ப வந்து, நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில், தேயிலைத்தோட்டங்களில் குடி அமர்த்தப்பட்டவர்களுக்கு அப்போது அரசுகள் வழங்கிய உறுதிமொழிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அவர்களது வசிப்பிடங்களில், அடிப்படை வசதிகள் இல்லை. அதுகுறித்தும், தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும்.

ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்ற ஈழத்தமிழர்களுக்கு, பல நாடுகள் குடிஉரிமை வழங்கி இருக்கின்றன. 

ஒருவர் பிறப்பின் அடிப்படையில் குடி உரிமை பெறலாம்; இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கி இருப்பதால் குடி உரிமை பெறலாம்; இங்கே உள்ளவர்களைத் திருமணம் செய்தவர்கள் குடி உரிமை பெறலாம்; இப்படிப் பல வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும், சட்டத்திற்கு எதிராகக் குடியேறியவர்கள் என்று கூறி, அவர்களுக்குக் குடி உரிமை மறுக்கப்படுகின்றது. அவர்கள் சட்டவிரோதக் குடியேறிகள் அல்ல என அறிவித்து, அவர்களுடைய விருப்பத்தைக் கேட்டு அறிந்து, குடி உரிமை வழங்க வேண்டும்.

இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு, கூடிய விரைவில் தீர்வு காண வேண்டும்; ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
02.09.2021