Thursday, November 4, 2021

ஹஜ் பயணம்: சென்னை வான் ஊர்தி நிலையம் புறக்கணிப்பு! வைகோ MP அறிக்கை!

கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஹஜ் புனிதப் பயணம் நடைபெறவில்லை. 2022 ஆம் ஆண்டில் பயணம் மேற்கொள்ள விழைவோர், விண்ணப்பம் செய்வதற்கான இணையதளங்களை, ஒன்றிய அரசின் ஹஜ் கமிட்டி அறிவித்து இருக்கின்றது.

வழக்கமாக, இந்தியாவின் 20 வான் ஊர்தி நிலையங்களில் இருந்து, ஹஜ் பயணிகள் பயணம் மேற்கொள்வர். ஆனால், அந்த எண்ணிக்கையை பத்தாகக் குறைத்து விட்டார்கள். சென்னை வான் ஊர்தி நிலையத்தின் பெயர், பட்டியலில் இல்லை.

தமிழ்நாடு மட்டும் அல்லாது, புதுச்சேரி மற்றும் அந்தமான் முஸ்லிம்களும், சென்னை வான் ஊர்தி நிலையத்தின் வழியாகவே ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்கள் அனைவரும் இனி, கேரளத்தின் கொச்சி அல்லது கர்நாடகத்தின் பெங்களூரு அல்லது ஹைதராபாத் சென்றுதான்,  ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையை, ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.

இது, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் பயணிகளுக்குப் பெருத்த அலைச்சலையும், கூடுதல் பொருட் செலவையும் ஏற்படுத்தும்.

எனவே, தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, சென்னை வான் ஊர்தி நிலையத்தையும் பட்டியலில் சேர்க்க ஆவன செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
 
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
03.11.2021

No comments:

Post a Comment