Friday, July 28, 2023

கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கிடுக. தமிழக அரசுக்கு வைகோ MP வேண்டுகோள்!

கொரோனா பேரிடர் காலத்தில் உயிரை துச்சமெனக் கருதி கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த ஆயிரக்கணக்கான மருத்துவர்களுக்கு, அரசு மருத்துவர் பணியிடங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

உலகம் முழுவதும் 2020 -ஆம் ஆண்டு முதல் 2022 -ம் ஆண்டு வரை கொரோனா பெருந்தொற்று பரவி லட்சக்கணக்கான மனித உயிர்களைக் காவு வாங்கியது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான கொரோனா நோயாளிகளுக்கு, மருத்துவர்கள் தங்களது இன்னுயிரைப் பொருட்படுத்தாமல் மருத்துவ சேவையாற்றினார்கள்.
தெருவுக்கு தெரு ஆயிரம் ஆயிரம் என கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மணிக்கொருமுறை பல்கிப் பெருகியது.
நாடு முழுவதும் கொரோனா பேரச்சம் நிலவி வந்த நேரத்தில், மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் பயின்று முடித்த நிலையில் இருந்த அனைரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட முன்வரலாம் என முந்தைய தமிழக அரசு அறிவிப்பு செய்தது.
இந்த அறிவிப்பை ஏற்று, மருத்துவப் பணியாற்றிட வந்த நூற்றுக் கணக்கான மருத்துவர்கள் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கொரோனா காலத்தில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் குறைந்தபட்சம் நூறு நாட்கள் பணியாற்றினாலே, அவர்களுக்கு நிரந்தர பணி வாய்ப்பு வழங்கலாம் என ஒன்றிய அரசின் மருத்துவத் துறை 2021 - ஆம் ஆண்டு மே 3- ஆம் தேதி வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிட்டு இருந்தது.
ஆனால், கடந்த ஆட்சியில் இந்த மருத்துவர்களுக்கு உரிய பணிப்பாதுகாப்பு வழங்காமல் தற்காலிகமாக பணி வழங்கியதால், இன்று ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் வேலை இழந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அரசு மருத்துவர்களை சேர்ப்பதற்கு ஏப்ரலில் தேர்வு நடத்தி முடித்துள்ளது.
இந்தத் தேர்வில் தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்த ஆணையால், தமிழ்நாட்டு மருத்துவர்கள் அரசுப் பணிகளில் சேர்வதற்கான வாசல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை நான் மனதாரப் பாராட்டுகின்றேன்.
அதேபோல, கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றி, தற்போது பணி வாய்ப்பு இல்லாமலும், தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மருத்துவர்களுக்கு, சிறப்பு மதிப்பெண்கள் வழங்கி, அரசு பணி வாய்ப்பு வழங்கிடுமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
28.07.2023

நெய்வேலியில் பொது மக்கள் போராட்டம். தமிழக அரசு சுமூகத் தீர்வு காண வேண்டும். வைகோ MP வேண்டுகோள்!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், மூன்று நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க சுமார் 36,000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி, அனல் மின் நிலையங்கள் அமைத்து மின் உற்பத்தி செய்து வருகிறது.

நிலம் கொடுத்த குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என வாக்குறுதி கொடுத்து, இதுவரை அந்த வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப் படாததால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களும், விவசாயிகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் மீண்டும் 19,000 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் “ நிலம் எடுப்பு செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன” என்று கூறி உள்ளார்.
ஆனால் எந்த நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதோ, அந்த நோக்கத்திற்கு 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்படவில்லை என்றால், 2013 ஆம் ஆண்டு புதிய நிலமெடுப்புச் சட்டப்படி அந்த நிலத்தை மீண்டும் நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை கடலூர் மாவட்ட ஆட்சியர் உணரவில்லையா?
10 ஆண்டுகள் பொறுத்த நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு, விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை அறுவடை செய்யும் வரை 10 நாட்கள் பொறுக்க முடியாதா?
நிலம் எடுப்பில் இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டதில் மிகக் கடுமையான பாரபட்சம் நடந்திருக்கிறது. சட்டப்படி இழப்பீடு நிர்ணயம் செய்தால் விவசாயிகளுக்கு மறுவாழ்வு - மறுகுடியமர்வு பணிகளை முறையாக செய்திட வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களிடம் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். நெய்வேலியில் பொது மக்கள் போராட்டத்தின் போது காவல் துறை தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.
கைது செய்யப்பட்டுள்ள பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
28.07.2023

Thursday, July 27, 2023

இந்திய ஒன்றிய அரசால் நகர்ப்புற ஏழைகளுக்காக அரசாங்கத்தால் நடத்தப்படும் திட்டங்கள் என்ன? என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் வைகோ அவர்கள் எழுப்பிய கேள்விக்கு, 24.07.2023 அன்று இந்திய ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் கௌஷல் கிஷோர் அவர்கள் அளித்த பதில்!

கேள்வி எண். 402

(அ) நகர்ப்புற ஏழைகளுக்காக அரசாங்கத்தால் நடத்தப்படும் பல்வேறு திட்டங்களின் விவரங்கள் யாவை?
(ஆ) கடந்த ஐந்தாண்டுகளில் திட்டங்களின் கீழ் மாநில வாரியாக, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட தொகை எவ்வளவு?
(இ) நகர்ப்புற வேலையற்ற இளைஞர்களுக்கு திறன் பயிற்சித் திட்டம் ஏதேனும் வழங்கப்பட்டுள்ளதா? அப்படியானால், கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தனித்தனியாக பயிற்சி பெற்ற இளைஞர்களின் எண்ணிக்கை எவ்வளவு? அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதா?
(ஈ) இந்தக் காலக்கட்டத்தில், மாநில அரசின் ஒத்துழைப்போடு, அரசால் ஒதுக்கப்பட்ட நிதியைக் கண்காணிக்க ஏதேனும் கண்காணிப்புப் நெறிமுறை இருந்ததா?
(உ) அப்படியானால், அத்தகைய கண்காணிப்பு நெறிமுறையின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரங்கள் என்ன?
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் கௌஷல் கிஷோர் பதில்:
(அ) முதல் (உ): நகர்ப்புற வளர்ச்சி என்பது மாநிலம் சார்ந்த திட்டம் ஆகும். ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், நகர்ப்புறங்களில் கீழ்க்கண்ட திட்டங்கள் மூலம் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு உதவுகிறது.
புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன் 2.0 (AMRUT- 2.0), ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன், தூய்மை இந்தியா திட்டம் (ஸ்வச் பாரத் மிஷன்- நகர்ப்புற 2.0 (SBM-U 2.0), பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா- நகர்ப்புற (PMAY-U), தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா-தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (DAY-NULM), பிரதமரின் தெரு வியாபாரிகளின் ஆத்மா நிர்பர் நிதி (PM SVANidhi) மற்றும் நகர்ப்புற போக்குவரத்து திட்டங்கள்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம், நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் வறுமை மற்றும் பாதிப்பை குறைக்க, தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் “தீனதயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்” என்ற ஒன்றிய நிதியுதவி திட்டத்தை செயல்படுத்துகிறது.
திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளின் மூலம், நகர்ப்புற ஏழைகளுக்கு சந்தை சார்ந்த சான்றிதழ் படிப்புகளை அளித்து, அவர்களுக்கு ஊதிய வேலை அல்லது சுய வேலை வாய்ப்புத் திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. தகுதியுள்ள சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 10,000/- சுழற்சி முறை நிதியாக வழங்கப்படுகிறது.
அனுமதிக்கப்பட்ட வங்கிகள் மூலம் இணைப்புக் கடன்களுக்கு 7 விழுக்காடு வட்டி விகிதத்திற்கு மேல் வட்டி மானியத்தை சுய உதவிக் குழுக்களுக்கு வழங்குகிறது. கடன்களை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தும் பெண் சுய உதவிக்குழுக்களுக்கு கூடுதலாக 3 விழுக்காடு வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
சுயவேலைவாய்ப்புத் திட்டத்தில், தனிநபர்கள்/நகர்ப்புற ஏழைகளின் குழுக்களுக்கு அவர்களின் திறன்கள், பயிற்சி மற்றும் உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப சுயதொழில் வியாபாரம் / சிறு, குறு நிறுவனங்களை அமைப்பதற்கான நிதி உதவியும் வழங்கப்படுகிறது. தனிநபர் சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் குழு நிறுவனங்களுக்கு, முறையே 2 லட்சம் மற்றும் 10 லட்சம் ரூபாய் வரை குறுந்தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது. திறமையான சுயஉதவிக் குழுவினர்களில் சிலர் தங்கள் சேமிப்புத் தொகையினால் சொந்த நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.
தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ், ஒட்டுமொத்த முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டை மதிப்பாய்வு செய்ய, தேசிய மற்றும் மாநில அளவில் ஆளும் குழு மற்றும் நிர்வாகக் குழு உள்ளது. நகர அளவில், நகராட்சி ஆணையர் தலைமையிலான நிர்வாகக் குழுவால் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் நிர்வகிக்கப்படுகிறது.
திட்டத்தின் கீழ் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் பயன்பாட்டைக் கண்காணித்து மறுஆய்வு செய்வது தொடர்ச்சியான செயல்முறையாகும். மேலும், மேலதிகாரிகள் கள ஆய்வு மற்றும் கணொலி காட்சி மூலம் கண்காணிக்கிறார்கள். நிதிநிலை மற்றும் பயன்பாடு தொடர்பாக நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையின் விரிவான வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படுகின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளில் (2020-21 முதல் 2022-23 வரை) தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் படி தமிழ்நாட்டில் பயிற்சி பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை முறையே 23,748 மற்றும் 23,518 ஆகும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் (அதாவது 2018-19 முதல் 2022-23 வரை) தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் இந்திய ஒன்றிய அரசால் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்ட நிதி, 371.21 கோடி ரூபாய் ஆகும்.
‘தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
தாயகம்’
சென்னை - 8
27.07.2023

Wednesday, July 26, 2023

கடந்த ஆறு மாதங்களில் கர்நாடகா மாநிலம் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்ட காவிரி நீரின் அளவு எவ்வளவு? வைகோ MP கேள்விக்கு ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் பதில்!

கர்நாடக மாநிலம் கடந்த ஆறு மாதங்களில் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்ட காவிரி நீரின் அளவு எவ்வளவு? என வைகோ எம்.பி. அவர்கள் மாநிலங்கள் அவையில் எழுப்பிய கேள்விக்கு 24.07.2023 அன்று இந்திய ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் பிஷ்வே°வர் துடு அவர்கள் அளித்த பதில் வருமாறு:-

கேள்வி எண். 426

(அ) உச்சநீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஆறு மாதங்களில் கர்நாடகா மாநிலம் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்ட நீரின் அளவு, மாதம் வாரியாக எவ்வளவு?

(ஆ) ஒப்பந்தத்தின்படி முழு டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசை வலியுறுத்துவதற்காக தமிழ்நாடு அரசிடமிருந்து இந்திய ஒன்றிய அரசுக்கு கோரிக்கைகள் ஏதுவும் வந்துள்ளனவா?

(இ) வந்திருந்தால், அமைச்சகம் தெரிவித்த பதில் என்ன?

(ஈ) முந்தைய மாதங்களில், தமிழக டெல்டா பகுதி பாசனத் தேவைக்காக உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடவதற்காக ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா?

இந்திய ஒன்றிய நீர்வளத்துறை இணை அமைச்சர் பிஷ்வே°வர் துடு பதில்:

(அ) 16.02.2018 தேதியிட்ட உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, கர்நாடகா மாநிலம் தமிழகத்துடன் மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில், அதாவது பில்லிகுண்டுலுவில் 177.25 டிஎம்சி தண்ணீரை ஒரு சாதாரண ஆண்டில் விடுவிக்க வேண்டும். கடந்த ஆறு மாதங்களில் பில்லிகுண்டுலுவிலிருந்து காவிரி ஆற்றில் திறந்துவிட நீரின் அளவு வருமாறு:

ஜனவரி 2023 வழங்க வேண்டிய நீர் 2.76, வழங்கிய நீர் 7.375.
பிப்ரவரி 2023 வழங்க வேண்டிய நீர் 2.50, வழங்கிய நீர் 4.512.
மார்ச் 2023 வழங்க வேண்டிய நீர் 2.50, வழங்கிய நீர் 4.305
ஏப்ரல் 2023 வழங்க வேண்டிய நீர் 2.50, வழங்கிய நீர் 2.992
மே 2023 வழங்க வேண்டிய நீர் 2.50, வழங்கிய நீர் 8.467
ஜூன் 2023 வழங்க வேண்டிய நீர் 9.19, வழங்கிய நீர் 2.833
ஜூலை 20232023 வழங்க வேண்டிய நீர் 31.24, வழங்கிய நீர் 1.071 (18.07.2023 நிலவரப்படி)

(ஆ) தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் - நீர்வளத்துறையின் செயலாளரிடமிருந்தும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (CWMA) தலைவரிடமிருந்தும், ஜூலை மாதத்தில் நிர்ணயிக்கப்பட்ட தண்ணீரை 10 நாள்களில் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறும், அதேபோன்று ஜூன் மாதத்தில் ஏற்பட்டுள்ள நீர் பற்றாக்குறையை உடனடியாகச் சரி செய்யுமாறும் 03.07.2023 அன்று கடிதம் பெறப்பட்டது. 03.07.2023 தேதியிட்ட மற்றொரு கடிதம் தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சரிடமிருந்தும் பெறப்பட்டது.

(இ) மற்றும் (ஈ) காவிரி மேலாண்மை வாரிய இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றத்தால் மாற்றி அமைக்கப்பட்ட தீர்ப்பின்படி, நடப்பு 2023-24 ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நீரை பில்லிகுண்டுலுவிலிருந்து சரியான நேரத்தில் வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க 04.07.2023 தேதியிட்ட கடிதத்தின் மூலம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசைக் கேட்டுக்கொண்டது.

ஜூலை 14, 2023 அன்று நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் (CWRC) 82வது கூட்டத்திலும் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. 01.06.2023 முதல் 12.07.2023 வரை பில்லிகுண்டுலுவில் ஒட்டுமொத்த நீர் இருப்பு 3.379 டி.எம்.சி. மட்டுமே என்று இக்குழு தெரிவித்தது. வரும் மாதங்களில் பில்லுகுண்டுலுவில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரின் அளவை முறையாக வழங்கிட வேண்டும் என்று கர்நாடக அரசை இக்குழு கேட்டுக்கொண்டது.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8

Tuesday, July 25, 2023

இயக்கத்தின் மூத்த தோழருக்கு உதவிய துரை வைகோ!

கடலூர் மாவட்டம், மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்டவர் ஜெயராமன்.

என்பது வயதை கடந்து இருந்தாலும் நமது இயக்க தந்தை தலைவர் வைகோ அவர்களின் மீது கொண்ட பற்று காரணமாக தலைவர் வைகோ அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கு கொள்வார்.
அரசுப் பணியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையிலும் 2006 முதல் இன்று வரையிலும் மாதந்தோறும் கழக வளர்ச்சிக்காக 100 ரூபாயை வழங்கி முறைப்படி அதற்கான ரசீதையும் பெற்று கொள்பவர்.
தலைவர் வைகோ அவர்களை சந்திக்க முடியாத மாதங்களில் அதனையும் சேர்த்து அடுத்த மாதங்களில் தவறாமல் இன்று வரை வழங்கி வருகிறார்.
கடந்த மாதம் 29 ம் தேதி என்னையும் தலைவர் அவர்களையும் சந்தித்து அவரது மகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப் பணியில் இருப்பதாகவும், சில காரணங்களால் அவரால் அங்கு பணிக்கு செல்ல முடியவில்லை என்றும், மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அங்கிருந்து பணி மாறுதல் பெற்றுத்தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
நான் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்தாலும், அதற்கு முன்னதாக தலைவர் வைகோ அவர்களிடமும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் அவர்களிடமும் பேசி ஒப்புதல் பெற்று விட்டு தற்போது நான் வெளிநாட்டில் இருந்து கொண்டே இது தொடர்பாக தொடர்ந்து அமைச்சர் அவர்களிடம் பேசி அதற்கான பணி மாறுதல் ஆணையை பெற்று கொடுத்து விட்டேன்.
இத்தனை ஆண்டு காலம் மாமனிதன் வைகோ அவர்கள் காட்டிய திசையில் தடம் பிறழாமல் பயணம் செய்து கருப்பு துண்டை எந்நேரமும் தாங்கி பிடிக்கும் கொள்கை குணம் கொண்ட தொண்டரின் குடும்பத்திற்கு என்னால் இயன்ற உதவியை செய்து கொடுத்ததில் மனநிறைவு அடைகிறேன்.
அன்புடன்
துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
25.07.2023.

வந்தே பாரத் இரயில்களை தென்னிந்தியாவில் அதிகமாக இயக்காததன் காரணம் என்ன? வைகோ MP கேள்விக்கு இரயில்வே அமைச்சர் பதில்!

கேள்வி எண். 312

வந்தே பாரத் இரயில்களை தென்னிந்தியாவில் அதிகமாக இயக்காததன் காரணம் என்ன? என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., அவர்கள் கேட்ட கேள்விக்கு, ஒன்றிய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் 21.07.2023 அன்று அளித்த பதில் வருமாறு:-
(அ) இந்திய ரயில்வே மேலும் சில வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்கத் தொடங்கியுள்ளதா?
(ஆ) அப்படியானால், அதன் விவரங்கள் யாவை?
(இ) அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை எவ்வளவு?
(ஈ) வணிக மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளால் தேவை அதிகமாக இருக்கும் நாட்டின் தெற்குப் பகுதியில் அதிகமான வந்தே பாரத் ரயில்களை இயக்காததற்கான காரணங்கள் என்ன?
(உ) தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எதிர்காலத்தில் இதுபோன்ற ரயில்களை இயக்க அரசு பரிசீலிக்குமா?
இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்
(அ) முதல் இ) வரை கேள்விகளுக்கான பதில்:
2023 ஜூலை மாதத்தில், 22549/22550 கோரக்பூர் - லக்னோ வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் 12461/12462 ஜோத்பூர் சபர்மதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை இந்திய ரயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், 25 ஜோடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவைகள் இந்திய இரயில்வே மூலம் இயக்கப்படுகின்றன. மேலும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவைகளை அறிமுகப்படுத்துவது, இந்திய இரயில்வேயில் செயல்பாட்டு சாத்தியக்கூறுகள், போக்குவரத்து நடைமுறைகள் மற்றும் இரயில் பெட்டிகள் கிடைப்பது ஆகியவற்றுக்கு உட்பட்டது.
(ஈ) மற்றும் (உ) கேள்விகளுக்கான பதில்: இந்திய இரயில்வே, மாநிலம்/பிராந்திய வாரியாக ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தவில்லை, ஏனெனில் ரயில்வே நெட்வொர்க் மாநிலம்/பிராந்திய எல்லைகளை கடந்து செல்கிறது. இருப்பினும், 20643/20644 எம்ஜிஆர் சென்னை கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் 20607/20608 சென்னை - மைசூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை தமிழ்நாட்டில் அமைந்துள்ள நகரங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
20833/20834 விசாகப்பட்டினம்-செகந்திராபாத் எக்ஸ்பிரஸ், 20701/20702 செகந்திராபாத்-திருப்பதி எக்ஸ்பிரஸ், 20633/20634 காசர்கோடு திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் மற்றும் 20661/20662 கே.எஸ்.ஆர் பெங்களூரு-தார்வார் எக்ஸ்பிரஸ் போன்றவை என நாட்டின் தெற்குப் பகுதியில் இயக்கப்பட்டு வருகிறது.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
சென்னை - 8
‘தாயகம்’
25.07.2023

Monday, July 24, 2023

மணிப்பூர் இனக்கொலைக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வலியுறுத்தி I.N.D.I.A. கூட்டணி MP க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமை குறித்து இரு அவைகளிலும் விவாதிக்க கோரியும், இது குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வலியுறுத்தியும், பிரதமர் மோடி அவர்கள் பேச மறுப்பதைக் கண்டித்தும், I.N.D.I.A. கூட்டணி MP க்கள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மறுமலர்ச்சி தி மு கழகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ MP அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்.

மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக வனத்துறை நில அளவீடு! வைகோ MP கண்டனம்!

கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கடந்த ஜூலை 7 ஆம் தேதி அம்மாநில சட்டமன்றத்தில் வரவு- செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது அவர், “மேகேதாட்டு அணை கட்ட ஒன்றிய அரசிடம் தேவையான ஒப்புதல் பெற துரித நடவடிக்கை எடுக்கப்படும். முதல் திட்ட அறிக்கை, சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற ஒன்றிய அரசிடம் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அணைக்கு நிலம் கையகப்படுத்துவதே அரசின் முதன்மைப் பணி என்றும், மேகதாது அணைக்கு நிலம் கொடுக்கும் மக்களுக்கு மாற்று இடத்தில் நிலம் வழங்கப்படும்” என்றும் முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.


இதற்கு முன்பு மேகேதாட்டு அணை தொடர்பாக ஜூலை 4 ஆம் தேதி துணை முதல்வர் சிவகுமார் தலைமையில் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, அணை கட்டுவதற்கு எல்லை அடையாளம் காணும் பணிகளை மேற்கொள்ளும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


இதன்படி, அணை கட்ட திட்டமிட்டுள்ள இடத்தில் எல்லைகளை அடையாளம் காணுவதற்கும், அகற்றப்பட வேண்டிய மரங்களை கணக்கீடு  செய்வதற்கும், கர்நாடக வனத்துறை சார்பில், 29 துணை வன அதிகாரிகளை நியமித்து, கூடுதல் முதன்மை தலைமை வனக் காப்பாளர் அனில்குமார் ரதன் உத்தரவு பிறப்பித்து உள்ள தகவல் வெளியாகி இருக்கிறது.


பெங்களூரு சதுக்கம், பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தில் தலா ஐவர்; பெங்களூரு, வன ரோந்து படை, சாம்ராஜ் நகர் சதுக்கம், பிலிகிரி ரங்கமலை புலிகள் காப்பகத்தில் தலா நால்வர்; மைசூரு சதுக்கம், மலை மாதேஸ்வரன் வன விலங்கு சரணாயலத்தில் தலா மூவர். காவிரி வன விலங்கு சரணாலயத்தில் ஒருவர் என 29 துணை வன அதிகாரிகள் நில அளவீடுப்  பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.


இவர்கள், உடனடியாக சாம்ராஜ்நகர் சதுக்கத்தின் தலைமை வனக்காப்பாளர் அலுவலகத்தில்  இப்பணியில் இணைய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றம்,16.02.2018 இல் வழங்கிய தீர்ப்பிலும், காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு கர்நாடக மாநிலத்திற்கு எந்த உரிமையும் இல்லை. தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெறாமல் எந்தக் கட்டுமானமும் மேற்கொள்ளக்கூடாது என்று தெளிவுபடுத்தப் பட்டிருக்கிறது. 2007, பிப்ரவரி 5 ஆம் தேதி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், தமிழ்நாட்டிற்கு கர்நாடகா 192 டி.எம்.சி தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.


ஆனால் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 16, 2018 இல் அளித்த தீர்ப்பில், கர்நாடகா, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை 177.25 டிஎம்சி ஆக குறைத்து உத்தரவிட்டது.


ஆனால் இந்த குறைந்த அளவு நீரைக் கூட கர்நாடகா திறந்து விட மறுக்கிறது.


இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறியும்,தமிழ்நாட்டின் மரபு உரிமையை மீறியும் மேகேதாட்டு அணை கட்டுமானப் பணியை  கர்நாடக அரசு தொடங்கி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.


உடனடியாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில்  இது தொடர்பாக மற்றொரு மனு தாக்கல் செய்து மேகேதாட்டு அணை வழக்கை துரிதப் படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’

சென்னை - 8

24.07.2023

தமிழ்நாடு - புதுச்சேரி நீதிமன்றங்களில் தலைவர்கள் படம் வைக்க புதிய கட்டுப்பாடு. உயர்நீதிமன்ற பதிவாளர் ஆணையைத் திரும்பப் பெறுக. வைகோ MP அறிக்கை!

சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவுத் துறை சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் திருவள்ளுவர், காந்தியார் ஆகிய தலைவர்களின் உருவப் படங்கள் மட்டுமே வைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி, ஆணை பிறப்பித்துள்ளது.


பல உயர்நீதிமன்றங்களில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் உருவப் படங்களை வைக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்கம் முன்வைத்த வேண்டுகோள் இதன் மூலம் மறுக்கப்பட்டுள்ளது. ஆலந்தூர் நீதிமன்ற வாயிலில் அமைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உருவச்சிலை இதன் காரணமாக அகற்றப்பட்டுள்ளது. காஞ்சி மாவட்ட முதன்மை நீதிபதி இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.


அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உருவப்  படம் நீதிமன்றங்களில் இடம்பெறக் கூடாது என்ற புதிய போக்கு பல பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும். மற்ற தலைவர்களின் உருவப்படங்கள் வைக்கப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற உயர்நீதிமன்றத்தின் கருத்தும் ஏற்கதக்கது அல்ல.


எனவே, புதிய ஆணையை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் திரும்பப் பெறுமாறும், திருவள்ளுவர், காந்தியார் ஆகிய படங்கள் வரிசையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உருவப் படமும் இடம்பெற அனுமதிக்குமாறும் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’

சென்னை - 8

24.07.2023

Saturday, July 22, 2023

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் பத்து அம்சக் கோரிக்கைகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.க ஆதரவு!

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம், விவசாயிகள் நலனுக்கான பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, ஜூலை 5 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 16 இடங்களில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தினை நடத்தி வருகிறது.

விவசாயிகள் நலன் காக்கவும், சுற்றுச் சூழல் வளம் பெறவும் இந்திய அரசிடம் நான்கு கோரிக்கைகளையும், தமிழ்நாடு அரசிடம் ஆறு கோரிக்கைகளையும் முன்வைத்து, அவைகளை நிறைவேற்றித் தருமாறு தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் இந்தப் போராட்டத்தினை நடத்தி வருகிறது.
இந்திய அரசு நியமித்த எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றித் தருமாறும், பயிர் காப்பீட்டுத் திட்டத்தை காப்பீடு செய்த உழவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் இழப்பீடு பெறும் வகையில் மாற்றி அமைக்க வேண்டியும், தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வரும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கும் திட்டத்தை செயலிழக்கச் செய்யும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டியும், உழவர்களின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்யுமாறு வேண்டியும் ஒன்றிய அரசிடம் இந்தச் சங்கம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை வேளாண் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டியும், வனவிலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படும் விவசாய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் இழப்பீட்டை உயர்த்தித் தருமாறும் தொழிற்பேட்டைகளுக்கு விவசாய நிலங்களை எடுப்பதை தடை செய்யுமாறும், ஆனைமலை ஆறு, நல்லாறு திட்டத்தையும், அப்பர் அமராவதி அணைத் திட்டத்தையும் விரைந்து செயல்படுத்தவும், அமராவதி அணையை தூர் வாரவும், கொப்பரை தேங்காய், பச்சை தேங்காய், நெல், கரும்பு, மரவள்ளிக் கிழங்கு, மஞ்சள், மக்காச் சோளம் ஆகிய விவசாய விளைபொருட்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தித் தருமாறும் தமிழ்நாடு அரசிடம் இந்தச் சங்கம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் முன்வைத்துள்ள இக்கோரிக்கைகளை மறுமலர்ச்சி தி.மு.கழகம் முழுமையாக ஆதரிக்கிறது. அவர்களின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது. தமிழ்நாடு அரசும், இந்திய ஒன்றிய அரசும் இவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து, விவசாய பெருமக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
22.07.2023

Friday, July 21, 2023

ஒருமித்த கருத்து ஏற்படும் வரை பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது: சிறுபான்மை சமூகங்களுக்கு அரசாங்கம் உறுதியளிக்குமா? வைகோ MP கேள்விக்கு ஒன்றிய சட்ட அமைச்சர் பதில்!

 


கேள்வி எண். 128

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில், பொது சிவில் சட்டம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு, 20 ஜூலை, 2023 வியாழன் அன்று ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

(அ) சட்ட ஆணையம் அண்மையில் புதிய ஆலோசனை செயல்முறையைத் தொடங்கியுள்ளதா? பொது மற்றும் மத அமைப்புகளிடமிருந்து ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் (UCC) பற்றிய கருத்துக்களைக் கேட்டதா?

(ஆ) அப்படியானால், அதன் விவரங்கள்என்ன?

(இ) பொது சிவில் சட்டம் சிறுபான்மை மக்களின் கருத்துக்கு எதிராக இருக்கும்போது, சட்ட ஆணையம் மறுபரிசீலனை செய்வதற்கான காரணம் என்ன?

(ஈ) அனைத்து அரசியல் கட்சிகளிடையே பரந்த ஒருமித்த கருத்து ஏற்படும் வரை பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது என்று சிறுபான்மை சமூகங்களுக்கு அரசாங்கம் உறுதியளிக்குமா? அபப்டியானால் அதன் விவரங்கள்...

*சட்டம் மற்றும் நீதி அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பதில்:*

(அ முதல் ஈ வரை) இந்தியாவின் 21ஆவது சட்ட ஆணையம் 31.08.2018 அன்று “குடும்பச் சட்டத்தின் சீர்திருத்தம்” குறித்த ஆலோசனைக் கட்டுரையை வெளியிட்டது. ஆனால் அது எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை. மேற்கூறிய வெளியிடப்பட்ட தேதியிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதால், பல்வேறு நீதிமன்றங்களின் உத்தரவுகளையும், அதன் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, 22ஆவது சட்ட ஆணைம், 14.06.2023 அன்று மத அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளையும், எண்ணங்களையும் பெற முடிவு செய்தது.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8

Wednesday, July 19, 2023

அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வைகோ MP உரை!

19.07.2023 மாலை 3 மணிக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம், இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர்கள் பிரகலாத் ஜோசி, பியூஸ் கோயல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-
தாங்க முடியாத வேதனையோடும், துயரத்தோடும் என் உரையைத் தொடங்குகின்றேன். கடந்த 40 ஆண்டுகளில் 800 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் நமது கடல் பகுதியிலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ் மீனவர்கள் இந்திய நாட்டின் குடிமக்களா? இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.
அடுத்து, தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்தைத் தருகிற பிரச்சினை காவிரிப் பிரச்சினையாகும். உச்சநீதிமன்றத் தீர்ப்பு, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு இவற்றுக்கெல்லாம் எதிராக மேகேதாட்டுவில் அணை கட்டியே தீர்வோம் என்று கர்நாடக அரசு திமிர்வாதம் செய்கிறது. மத்திய அரசு இதில் வேடிக்கை பார்க்கக் கூடாது.
இன்னொரு பிரச்சினை, ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையில் ஏற்படுகிற ஆபத்து ஆகும். முதலில், பாபர் மசூதியை இடித்தார்கள். காஷ்மீரத்தை மூன்று துண்டுகளாக மத்திய அரசு ஆக்கிற்று. அரசியல் சட்டத்தின் 370 ஆவது பிரிவை நீக்கிற்று. இப்பொழுது தலைக்குமேல் தொங்குகின்ற கத்தி என்னவென்றால், இந்தியா முழுவதும் ஒரே சிவில் சட்டத்தைக் கொண்டுவர முயற்சிப்பதாகும். இது அரசியல் சட்டத்திற்கு முரணானது ஆகும்.
கடந்த ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி, பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொது சிவில் சட்டத்திற்கான தனிநபர் மசோதா கொண்டுவந்தார். நாங்கள் கடுமையாக எதிர்த்ததனால், மசோதாவை நிறைவேற்ற முடியாது என்று அஞ்சி பின்வாங்கிப் போனார்கள். இந்த ஆண்டும் அதே மாநிலங்களவை உறுப்பினர் மீண்டும் பொது சிவில் சட்டத்திற்கான மசோதாவை அறிமுகம் செய்ய முயன்றார். நாங்கள் கடுமையாக எதிர்த்ததனால் பின்வாங்கிக் கொண்டார்.
ஆனால் வரும் நாட்களில் பொதுசிவில் சட்ட மசோதாவை எப்படியும் நிறைவேற்ற பாரதிய ஜனதா கட்சியினர் துடிப்பார்கள். அப்படி நிறைவேற்றப்பட்டால், வகுப்பு மோதல்களுக்கும், இரத்தக் களறிகளுக்கும் வழிவகுக்கும். அதற்கு இடம்கொடுக்கக் கூடாது என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
19.07.2023

Tuesday, July 18, 2023

எதிர்கட்சிகள் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் பங்கேற்பு!

எதிர்கட்சிகளின் கூட்டம் பெங்களூரில் 17, 18-07-2023 ல் நடைபெற்றது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டார். அதில் இதை ஒரு அமைப்பாக உருவாக்கி அதற்கு இந்திய மக்கள் முன்னணி என்ற பெயரை ஆலோசனையாக தெரிவித்தார்.

அனைவரையும் கலந்து ஆலொசித்து மம்தா பானர்ஜி அவர்கள் சொன்ன I.N.D.IA என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் பேசிய வைகோ MP அவர்கள் ஆளும்கட்சிதான் நரி, எதிர்கட்சி புலி என பேசினார்.

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவுக்கு வைகோ MP இரங்கல்!

கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உம்மன் சாண்டி அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.

கோட்டயம் மாவட்டம், புதுப்பள்ளியில் இருந்து, 1970 ஆம் ஆண்டு முதல் 50 ஆண்டுகள் தோல்வியே சந்திக்காமல், அந்தத் தொகுதி மக்களால் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டவர் உம்மன் சாண்டி ஆவார்.
அவரது 50 ஆண்டுகால சட்டசபை வரலாற்றில், நான்கு முறை மாநில அமைச்சராகவும், 2006 - 2011இல் எதிர்க்கட்சித்தலைவராகவும், 2004 - 2006 மற்றும் 2011 - 2016 என இரண்டு முறை முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.
எளிமையான வாழ்க்கை வாழ்ந்த அவருக்கு, சில மாதங்களுக்கு முன், தொண்டை புற்றுநோய் ஏற்பட்டது. இதற்காக ஜெர்மனிக்கு சென்று சிகிச்சை பெற்றார். அதன்பின் பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக, பெங்களூரு மருத்துவமனையில் இன்று அதிகாலை உம்மன் சாண்டி காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியும், வேதனையும் தருகிறது.
உம்மன் சாண்டி அவர்கள் என் மீது மிகுந்த பாசம் கொண்டவர். அவர் முதலமைச்சராக இருந்தபோது, 2004 ஆம் ஆண்டு செண்பகல்லி அணை மற்றும் அமராவதி அணை பிரச்சினை குறித்து குறித்துப் பேசுவதற்காக அவரைச் சந்தித்தேன். மீண்டும் 2015 இல், நியூட்ரினோ திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவருடன் விவாதிப்பதற்காக கொச்சின் சென்றிருந்தேன். அப்போது கேரள உள்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் சென்னிதாலா அவர்களும் உடன் இருந்தார். கொச்சினிலிருந்து நான் திருவனந்தபுரம் திரும்பும்போது, கேரள காவல்துறையினரின் பாதுகாப்போடு என்னை வழியனுப்பி வைத்தார்.
சிறந்த பண்பாளரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
18.07.2023

Monday, July 17, 2023

மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் தேர்வு. தலைமைக் கழகம் அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் - செம்பனார்கோவில் ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. சி. சந்திரமோகன் (எ) கொளஞ்சி அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் மயிலாடுதுறை மாவட்டக் கழகச் செயலாளராகத் (முகவரி : நந்தி தெரு, முடிதிருச்சம்பள்ளி (அஞ்சல்), மயிலாடுதுறை மாவட்டம்; கைப்பேசி எண். 97877-41588) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை மற்றும் வட்டக் கழக நிர்வாகிகளும், கழகத் தோழர்கள் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. சி. சந்திரமோகன் (எ) கொளஞ்சி அவர்களுடன் இணைந்து கழகப் பணியாற்றுவார்கள்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
‘தாயகம்’
சென்னை - 8
17.07.2023

Saturday, July 15, 2023

செயற்குழு உறுப்பினர் பிரேம் ஜாஸ்பர் மரணத்திற்கு ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை ஆழ்ந்த இரங்கல்!

துடிப்பு மிக்க இளைஞன், தலைவர் வைகோவின் பக்தன் என்று சொல்லலாம். அப்படிபட்ட ஒரு கழக கண்மணிதான் ப்ரேம் ஜாஸ்பர். ஒமான் மறுமலர்ச்சி பேரவையின் செயற்குழு உறுப்பினராக இணைந்து பணியாற்றியவர். இப்ரா என்னும் இடத்திலிருந்து ஏறத்தாள 2 மணி நேரம் பிரயாணம் செய்து ஒமான் கழக கூட்டங்களுக்கு வருபவர். அவர் மட்டுமல்லாது கழக உறுப்பினர்களையும், கழக ஆதரவாளர்களையும் தன்னுடன் அழைத்து வந்து கழக பணியாற்றியவர். ஒமானில் பணி செய்தாலும் ஊரில் செல்லும்போது கழக செயல்பாடுகளில் பங்காற்றியவர்.

மக்கள் நலக் கூட்டணி அமைந்த போது கடைசி கட்ட பிரச்சாரத்திலாவது பங்கேற்க வேண்டுமென்று ஒமானிலிருந்து புறப்பட்டு சொந்த ஊர் வந்து, கன்னியாகுமரி கூட்டுறவு சங்க தலைவராக இருந்து மறைந்து போன நமது வழக்கறிஞர் சம்பத் சந்திரா அவர்கள் குளச்சல் சட்டமன்றத்திற்கு போட்டியிட்டபோது அவருக்கு பிரச்சார அணிவகுப்பில் கலந்து கொண்டவர்.

கழக செயல்பாடுகள் குறித்து மிகுந்த அளவில் அளவாவியவர். ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவைக்கு பக்க பலமாக இருந்தவர். குமரி மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் பள்ளியாடி குமார் அவர்களுக்கு மிக்க நண்பராக அவருடன் பணியாற்றியவர். கடந்த சில வருடங்களாக உடல் நல பாதிப்பில் இருந்தாலும், ஊருக்கு சென்று சிகிச்சை பெற்றுவிட்டு ஓமான் வந்து தனது பணியை தொடர்ந்தார். 

இன்னிலையில் சில மாதங்கள் உடல் நல முன்னேற்றத்திற்காக, ஊருக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள், சில உடலுக்கு ஒவ்வாத பழக்கங்களிலிருந்து மீள வேண்டுமென்று என்று பலமுறை அவரை அன்போடு கண்டித்திருக்கிறேன். ஆனாலும் கடந்த மே மாதம் கழக 30 ஆண்டு விழா தொடக்க விழாவின் போது பேசியபோது சிகிச்சையில் இருந்தாலும் சுறுசுறுப்பாக ஆரோக்கியமாகவே பேசினார். நல்லவிதமாக சிகிச்சை மேற்கொண்டு விரைவில் ஒமான் வாருங்கள் என்று சொல்லி பேசியபோது சீக்கிரம் வந்துவிடுவேன் என்று சொன்னார்.

ஆனால் கல்லீரல் செயல்பாடு மிக மோசமாகி இன்று 15-ஜூலை 2023 ல் அவர் மறைந்தார் என்ற செய்தி எட்டியபோது பேரிடியாக இருக்கிறது. அவர் புகழ் ஒமான் தமிழர் மறுமலர்சி பேரவையில் என்றும் நிலைத்திருக்கும்.  ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.


மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
15 ஜூலை 2023

Friday, July 14, 2023

நூற்பாலைகள் மூடப்படும் நிலையைத் தடுக்க வேண்டும்! வைகோ அறிக்கை!

தமிழ்நாட்டில் இயங்கி வரும் சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் ஜூலை 15ஆம் தேதி முதல் நூல் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருக்கின்றன.

பஞ்சு விலை உயர்வு காரணமாக நூற்பாலைகள் பெரும் நட்டத்திற்கு உள்ளாக்கப்பட்டு உள்ளதால் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமலும், பஞ்சு கொள்முதல் பணம் செலுத்துதல் மற்றும் மின் கட்டணம், ஜிஎ°டி போன்ற செலவினங்களை சமாளிக்க முடியாமலும் தத்தளிக்கின்றன.
தமிழ்நாட்டில் உள்ள 700 சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டால் நாளொன்றுக்கு 35 லட்சம் கிலோ நூல் உற்பத்தி பாதிப்பு ஏற்படுவதுடன், 100 கோடி ரூபாய் வரையில் வருவாய் இழப்பு ஏற்படும் என்று சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் கூட்டமைப்பு தெரிவித்து இருக்கிறது.
மேலும், சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 12 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயமும் ஏற்படும்.
எனவே ஒன்றிய அரசு, பஞ்சின் மீது விதிக்கப்பட்ட 11 விழுக்காடு இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும். உயர்த்தப்பட்ட வங்கிக் கடன் வட்டி விகிதங்களை பழைய நிலைக்கு அதாவது 7.5 விழுக்காடு அளவுக்கு குறைக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு மின்சார கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் கூட்டமைப்பு முன் வைத்திருக்கிறது.
இதனைப் பரிசீலனை செய்து, நூற்பாலைகள் மூடப்படும் நிலையை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
14.07.2023