Thursday, March 25, 2021

வருமான வரித் துறையை ஏவி மிரட்டல் விடுக்கும் பா.ஜ.க. அரசின் அதிகார அத்துமீறல் - வைகோ கடும் கண்டனம்!

தமிழ்நாட்டில் நடைபெறப்போகும் சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றியை ஈட்டப் போவதற்குக் கட்டியம் கூறும் வகையில் தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் இலட்சோப இலட்சம் பேர் அணி திரண்டு வருகிறார்கள்; தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் உறுதி என்பதை அரசியல் வல்லுநர்களின் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மத்திய பா.ஜ.க. அரசு தனது அரசியல் ஆதாயத்துக்காக வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சி.பி.ஐ., போன்ற அமைப்புகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் செய்து வரும் அதே மிரட்டல், அதிகார அத்துமீறலைத் தமிழ்நாட்டிலும் அரங்கேற்றி இருக்கிறது.

இந்நிலையில் அரசியல் களத்தில் அ.இ.அ.தி.மு.க., - பா.ஜ.க., கூட்டணியை எதிர்த்து மக்கள் சக்தியைத் திரட்டி வரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மக்கள் ஆதரவைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பா.ஜ.க. அரசு வருமான வரித்துறையை ஏவி மிரட்டிப் பார்க்கிறது.

திருவண்ணாமலையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கின்ற நிலையில் அவர் தங்கி இருந்த அறை உள்ளிட்ட தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான திருவண்ணாமலை எ.வ.வேலு அவர்களின் வீடு, அலுவலகம், கல்லூரி, அறக்கட்டளை அலுவலகம், உறவினர்கள், நண்பர்கள் இல்லங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது வன்மையான கண்டனத்துக்குரியது.

மத்திய பா.ஜ.க. அரசின் இத்தகைய மிரட்டல்களால் ஒருபோதும் தி.மு.க. கூட்டணியின் வெற்றியைத் தடுத்து விட முடியாது; எடப்பாடி அரசு மற்றும் பா.ஜ.க. ஆட்சியாளர்களின் கூட்டுச்சதி தூள் தூளாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
25.03.2021

Tuesday, March 23, 2021

ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம்! வைகோ MP கண்டனம்!

இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு, ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்தியது போர்க் குற்றம் அல்ல, அப்பட்டமான இனப்படுகொலை. ஒரு இலட்சத்து 37 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. 2009 தொடக்கத்தில், தமிழர்களை பட்டினி போட்டு கொன்றது இலங்கை அரசு.

இதுகுறித்து, சர்வதேச சமுதாயம் தன் கடமையில் தவறியது. எனினும், அண்மையில் பிரிட்டன், ஜெர்மனி, கனடா, வடக்கு மாசிடோனியா, மாண்டினிரோ, மலாவி ஆகிய ஆறு நாடுகள் இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவந்தன. இந்திய அரசு, இலங்கையை ஆதரிக்கும் என்று இலங்கை வெளிவிவகாரத்துறைச் செயலாளர் ஜெயநாத் கொலம்பிகே நான்கு நாட்களுக்கு முன்பு கூறினார்.

அதேபோல இன்று, இந்திய அரசின் பிரதிநிதி வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் வெளிநடப்புச் செய்தார். இது ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத பச்சை துரோகம் ஆகும்.

தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதால், ஏமாற்றுவதற்காக வெளிநடப்புச் செய்தார்கள். இல்லையேல், இலங்iக்கு ஆதரவாகவே ஓட்டுப்போட்டு இருப்பார்கள்.

இந்திய அரசு செய்த துரோகத்துக்கு என்னுடைய பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
23.03.2021

Sunday, March 21, 2021

இனக்கொலை புரிந்த இலங்கை அரசுக்கு துணைபோகும் பா.ஜ.க. அரசை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள். வைகோ MP கண்டனம்!

இலங்கையில் இனப்படுகொலை நடத்தி, 2009 ஆம் ஆண்டில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகார ராஜபக்சே கூட்டத்தை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்று உலகத் தமிழினம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது.

ஐ.நா. மனித உரிமை மன்றம் 2015 இல் சிங்கள இனவாத அரசு நடத்திய படுகொலைகள், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கு மனித உரிமைச் செயல்பாட்டார்களையும் இணைத்துக் கொண்டு இலங்கை அரசு புலனாய்வு நடத்த வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

குற்றவாளியிடமே நீதியை வழங்குமாறு ஐ.நா. மனித உரிமை ஆணையம் கேட்பது ஒருபோதும் நடைமுறைக்கு வராது என்றும், சிங்கள பேரினவாத அரசின் கொலைக் குற்றத்தை மூடி மறைக்கவும், நீர்த்துப் போகச் செய்யவுமே இது வழிவகுக்கும் என்று நாம் எதிர்த்தோம்.

ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் 2021, பிப்ரவரி மாதம் ஐ.நா. மனித உரிமை தலைமை ஆணையர் அதன் உறுப்பு நாடுகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில், “இலங்கை அரசு அந்நாட்டு மக்களுக்கு பொது அரசாக செயல்படவில்லை. ஓர் இனச் சார்பாகச் செயல்படுகிறது. ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் தீர்மானத்தைச் செயல்படுத்தவே இல்லை. இனியும் செயல்படுத்தப்போவது இல்லை. இலங்கையில் நீதித்துறையின் தற்சார்பு சீரழிக்கப்பட்டுவிட்டது. பத்திரிகை, ஊடகங்களின் உரிமை பறிக்கப்பட்டுவிட்டது. அங்கு மனித உரிமை அமைப்புகள் நடுநிலையுடன் செயல்பட முடியாது. எனேவ மனித குலத்துக்கு எதிரான இலங்கை அரசின் குற்றங்கள், படுகொலைகள், காணாமல் போனவர்கள் என்று கூறப்பட்டவர்கள் அனைவருக்குமான பொறுப்புக்கூறல் போன்றவற்றை இலங்கை அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.

இலங்கை அரசின் மேற்படி குற்றங்களுக்காக அந்நாட்டு ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்த வேண்டும். இதற்கான முன்னெடுப்பை ஐ.நா. பொதுப் பேரவையும், பாதுகாப்புக் குழுவும் எடுக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிச் செயல்பட உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும்” என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் தலைமை ஆணையர் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதனையடுத்து மார்ச் 22 ஆம் தேதி, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து ஒரு தீர்மானம் விவாதத்திற்கு வரப்போகிறது. இத்தீர்மானத்தை பிரிட்டன், கனடா, ஜெர்மனி, வடக்கு மாசிடோனியா, மலாவி, மாண்டினிக்ரோ உள்ளிட்ட ஆறு நாடுகள் முன் மொழிந்துள்ளன.

இத்தீர்மானம் முழுமையானதாகவோ, இலங்கை அரசை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிப்பதற்கான வகையிலோ இல்லை. எனினும், இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு, மனித உரிமை மீறலுக்கு எதிரான ஒரு முன்னெடுப்பு ஆகும்.

இந்த அரைகுறைத் தீர்மானத்தைக்கூட இந்தியா ஆதரிக்கப் போவதில்லை என்ற செய்திகள் தமிழர்கள் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டுகின்றன.

47 உறுப்பு நாடுகள் இடம்பெற்றிருக்கும் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் ஈழத் தமிழ் மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த சிங்கள பேரினவாத இனக்கொலை அரசின் மீது கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்.

ஆனால், இலங்கை வெளியுறவுத் துறைச் செயலாளர் ஜெயநாத் கெலம்பகே, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்காது; இலங்கை அரசைத்தான் ஆதரிக்கப்போகிறது என்று கூறியதாக இந்து ஆங்கில நாளேடு (19.03.2021) செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள எட்டுக்கோடி தமிழர்களின் இதயக் குமுறலை அலட்சியப்படுத்திவிட்டு, தமிழினத்திற்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் செயல் வன்மையான கண்டனத்துக்கு உரியது. இதை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

இந்திய அரசு, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் நாளை (22.3.2021) முன்வைக்கப்படும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
21.03.2021

Tuesday, March 16, 2021

வைகோ MP - 2021 சட்டபேரவை தேர்தல் சுற்றுப்பயண விபரம்!

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் தேர்தல் சுற்றுப்பயண விவரம்:

மார்ச் 18 - மாலை 5.00 மணி சென்னை கொளத்தூர்
7.00 மணி   வில்லிவாக்கம்
8.30 மணி   துறைமுகம்
19- மதுராந்தகம்  
20- அரியலூர்
21- பல்லடம்
22- மதுரை தெற்கு
23- சாத்தூர்
24- வாசுதேவநல்லூர்
25- கோவில்பட்டி-விளாத்திகுளம்-ஒட்டப்பிடாரம்
26- சங்கரன்கோவில் - கடையநல்லூர் - தென்காசி
27- திருநெல்வேலி - பாளையங்கோட்டை -தூத்துக்குடி-திருச்செந்தூர்
28- சிவகாசி-விருதுநகர்-அருப்புக்கோட்டை-திருச்சுழி
29- தேனி மாவட்டம்
30 - திண்டுக்கல் மாவட்டம்
31- மதுரை தெற்கு, வடக்கு, மேற்கு
ஏப்ரல் 1 - அரியலூர்
 2- வாசுதேவநல்லூர்
 3   - சாத்தூர்

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
16.03.2021

Sunday, March 14, 2021

இயக்குநர் ஜனநாதன் மறைவு - வைகோ MP இரங்கல்!

இனிய நண்பர், இயக்குநர் ஜனநாதன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து வருந்துகின்றேன். 

தஞ்சை மாவட்டம், வடசேரியில் பிறந்தவர். சென்னை நொச்சிக்குப்பத்தில் எளிய மக்களோடு வாழ்ந்தவர், கப்பல் தொழிலாளியாகப் பணி ஆற்றியவர்; மார்க்சியம் பயின்றார். ருஷ்ய இலக்கியங்களின் மீது நாட்டம் கொண்டார். திரைப்படத் துறையில் ஆர்வம் கொண்டு, ஒரு திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தபோது, தஸ்தாயேவஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’ என்ற புதினத்தைத் தழுவி, 2003 ஆம் ஆண்டு, ‘இயற்கை’ என்ற தலைப்பில், தன்னுடைய முதல் படத்தை இயக்கினார். 

சிறந்த அழகியல் நுணுக்கங்களுடனும், தொழில் நுட்பத் திறனுடனும் ஆக்கப்பட்ட அந்தப் படம், இந்திய அரசின் தேசிய விருதைப் பெற்றது. அதனால், இந்தியத் திரைப்படத் துறை அவரைத் திரும்பிப் பார்த்தது. 2006ஆம் ஆண்டு, ‘ஈ‘ என்ற தலைப்பில் இரண்டாவதாக இயக்கிய படத்தின் மூலம், மருத்துவக் கார்ப்பரேட்டுகள், எளிய மக்களைச் சுரண்டுவதை அம்பலப்படுத்தினார். பெரும் வரவேற்பைப் பெற்றது. 

2009 பரீஸ் வசிலியேவ் என்கின்ற ரஷ்ய எழுத்தாளரின், உலகப் புகழ்பெற்ற ‘அதிகாலையின் அமைதியில்’ என்கின்ற நாவலின் பாதிப்பில், ‘பேராண்மை’ என்கின்ற படத்தை ஆக்கினார். அது பெருவெற்றி பெற்றது; மக்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்தது. 

2015 ஆம் ஆண்டு, புறம்போக்கு என்கின்ற பொது உடைமை என்ற படத்தை இயக்கினார். அதன் மூலம், பொது உடைமைக் கருத்துகளை, எளிய மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் கடமை ஆற்றினார். 

ஜனநாதன், திருமணம் செய்து கொள்ளவில்லை. தான் ஈட்டிய பொருள் அனைத்தையும், நண்பர்களுக்கும் சமூகத்திற்கும் உதவிடும் வகையில் செலவிட்டார். பிறருக்குக் கொடுத்து உதவிய அந்தப் பெருமகன், கொரோனா காலத்தில், உணவு கிடைக்காமல் அவதிப்பட்டேன் என்று கூறிய செய்தி, வேதனை அளித்தது.  

கார்ல் மார்க்சின் பொருளாதாரக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, ‘லாபம்’ என்கின்ற படத்தை ஆக்கி, அதன் தொழில்நுட்பப் பணிகளில் ஈடுபட்டு இருந்தார். படத்தொகுப்பு இடைவேளையின் போது, உணவு அருந்தச் சென்றவர், மயங்கி விழுந்தார்,மூளைச்சாவு அடைந்தார். திரைப்படத் துறையின் எளிய தொழிலாளிகள் முதல், உச்ச நட்சத்திரம் வரை கலங்கிடுகின்ற அளவிற்கு, நன்மதிப்புப் பெற்று இருக்கின்ற அவரது மறைவுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
14.03.2021

Saturday, March 13, 2021

புதூர் ஒன்றியக் கழகச் செயலாளர் எரிமலை வரதன் மறைவு! வைகோ MP இரங்கல்!

தூத்துக்குடி வடக்கு மாவட்டம், புதூர் ஒன்றியக் கழகச் செயலாளர் எரிமலை வரதன் அவர்கள் சற்றுமுன் மறைந்தார் என்கிற துயரச் செய்தி கேட்டு பெரிதும் துடி துடித்துப்போனேன்.

கடந்த வாரம்கூட என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கழகச் செய்திகள் குறித்தும், என் உடல்நலன் குறித்தும், சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் மிகுந்த ஆர்வத்தோடு பேசியதை என்னால் மறக்க இயலவில்லை.

கழக மேடைகளில் கனல் கக்க உணர்ச்சிமயமாக உரையாற்றி, கேட்போரை தன்வயப்படுத்தும் ஆற்றல் மிக்க சொற்பொழிவாளர் இவர் என்பதால், எரிமலை வரதன் என்று அனைவராலும் பாராட்டப் பட்டவர் இவர்.

கழகப் பணியாற்றுவதில் மட்டும் இல்லாமல், தோழர்களுக்கான பல்வேறு உதவிகளை செய்வதிலும், அரசு அலுவலகங்கள் மூலம் பரிந்துரைகளைப் பெற்று உதவி செய்வதிலும் சிறந்த அணுகுமுறையை கொண்டிருந்த அவர், அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு, சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்தார்.

பொதுமக்களையும், தோழர்களையும் பெருமளவில் திரட்டி, பிரம்மாண்டமான கூட்டங்களை ஏற்பாடு செய்வதிலும், கழகத்திற்காக தேனீயாக பறந்து ஓடி பெருமளவு நிதி திரட்டுவதிலும் அவருக்கு இணையாக மற்றொருவரை குறிப்பிட இயலாத அளவுக்கு கடமையாற்றிய ஓர் இலட்சியத் தோழரை நாம் இழந்து தவிக்கிறோம்.

அவரை இழந்த துயரில் மூழ்கியுள்ள அவரின் குடும்பத்தாருக்கும், கழகத் தோழர்களுக்கும் மறுமலர்ச்சி தி.மு.கழக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
13.03.2021

எரிமலை வரதன் இறப்பு மதிமுகவிற்கு பேரிழப்பு-ஆழ்ந்த இரங்கல்!

தூத்துக்குடி வடக்கு மாவட்ட புதூர் ஒன்றிய செயலாளர் எரிமலை வரதன் அவர்கள் உடல்நிலை குறைவால் 13-03-2021 இயற்கை எய்தினார் என்ற செய்தி வருத்தத்தை தருகிறது.

கழகத்தை மூச்சாக நினைத்தவர். தூத்துக்குடி கழக முன்னோடிகளுக்கு பக்கபலமாக இருந்தவர். அவர் மறைவு கழகத்திற்கு பேரிழப்பு. தூத்துக்குடியில் அவர் புகழ் நிலைத்து நிற்கும்.

ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மைக்கேல் செல்வ குமார்

பஹ்ரைனில் JEE தேர்வு மையம். வைகோ MP கோரிக்கை ஏற்பு!

பஹ்ரைன் நாட்டில் உள்ள இந்திய சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், JEE பொறிஇயல் நுழைவுத்தேர்வு எழுதுவதற்கு, இணையவழியில் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் தேர்வு மையங்கள் பட்டியலில் பஹ்ரைன் நாட்டில் ஒரு மையமும் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து பஹ்ரைன் மறுமலர்ச்சி தமிழர் பேரவைத் தோழர்கள் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

வைகோ அவர்கள் இது தொடர்பாக, நடுவண் அரசின் கல்வி அமைச்சர் மற்றும் அயல் உறவு அமைச்சருக்கு மின்அஞ்சல் வழியாக கடிதம் எழுதி கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை  ஏற்றுக்கொண்டு, பஹ்ரைன் நாட்டின் இந்தியத் தூதரக வளாகத்தில் தேர்வு மையம் அமைத்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைன் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தலைமை நிலையம்

மறுமலர்ச்சி தி.மு.க.,

சென்னை - 8

‘தாயகம்’

ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க, இந்திய அரசு கடமை ஆற்ற வேண்டும். வைகோ வேண்டுகோள்!

2009 ஆம் ஆண்டு, சிங்கள இனவெறி அரசு நடத்திய இனப்படுகொலைத் தாக்குதலில், 1.37  இலட்சம் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக, மார்சுகி தாருஸ்மன் தலைமையில், ஐ.நா. மன்றம் அமைத்த மூவர் குழு அறிக்கை அளித்து, பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றன. ஆனால், இன்றுவரையிலும், இலங்கை அரசின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை; இனப்படுகொலைக் குற்றவாளிகளை, பன்னாட்டுக் குற்ற இயல் நீதிமன்றத்தில் நிறுத்தி, விசாரணை மேற்கொள்ளவும் இல்லை. இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்த ஈழத்தமிழர்களுக்கு இன்று வரை நீதி கிடைக்கவும் இல்லை. 

மாறாக, இனப்படுகொலைக் குற்றத்தை, போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் என வருணித்து, இரண்டு தரப்பினரையும் குற்றவாளிகள் ஆக்கி, இலங்கை அரசைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளையே வல்லரசு நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இலங்கை அரசுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கின்ற அவலமும் நிகழ்கின்றது. 

இனப்படுகொலையாளர்கள், இலங்கைத் தீவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி விட்டனர். இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை, விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஒதுக்கித் தள்ளிவிட்டனர். போர்க்குற்றங்களை நாங்களே விசாரிப்போம் எனக் கூறி, ஐ.நா.மன்றத்திலும், மனித உரிமைகள் மன்றத்திலும், காலக்கெடு பெற்றனர். ஆனால், பத்து ஆண்டுகள் கடந்தபின்னரும், எந்தவிதமான விசாரணையும் இல்லை. இறுதிக்கட்டப் போரின் போது சிறைப்பிடித்துக் கொண்டு போன ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் நிலை என்ன என்பது இன்றுவரை தெரியவில்லை; மாறாக, அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என்றே ஆணவத்துடன் பேசி வருகின்றனர். எட்டுத் தமிழ் இளைஞர்களை அம்மணமாக்கி, தரையில் உட்கார வைத்து, பிடரியில் சுட்டுக்கொன்றது போல, காணாமல் போன இளைஞர்களையும் சுட்டுக்கொன்று விட்டதாகவே தெரிகின்றது. 

ஐ.நா. மன்றத்திலும், மனித உரிமைகள் மன்றத்திலும், ஈழத்தமிழர்களின் அவலக்குரல் எத்தனையோ முறை ஒலித்துவிட்டது. அந்த மன்றத்தின் 36 ஆவது கூட்டத்தொடரில், நான் பங்கேற்றுப் பேசினேன். தனித்தமிழ் ஈழம் அமைப்பதுதான், ஈழத்தமிழர்களுக்கு ஒரே தீர்வு; அதற்காக பொது வாக்குப்பதிவு நடத்த வேண்டும்; உலகம் முழுமையும் பல்வேறு நாடுகளில் பரவி இருக்கின்ற ஈழத்தமிழர்கள், அந்த வாக்குப்பதிவில் பங்கேற்க ஆவன செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன். 

ஆனால், இலங்கை அரசும், அதற்கு ஆதரவாக நிற்கின்ற இந்தியா உள்ளிட்ட வல்லரசுகளும், ஈழத்தமிழர்களுக்கு இன்றுவரையிலும் நீதி கிடைக்காமல் உலக அரங்கில் தடுத்து வருகின்றன.

தற்போது, ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் 46 ஆவது கூட்டத்தொடர், ஜெனீவா நகரில் நடைபெற்று வருகின்றது. இப்போதும், மனித உரிமைகள் மீறல் குற்றங்களை விசாரிக்க, தனக்கு மீண்டும் கால நீட்டிப்புத் தேவை என, பிரித்தானிய அரசின் மூலம் தீர்மானம்  கொண்டு வர, இலங்கை அரசு முனைந்து வருகின்றது. 

இலங்கை அரசின் சூழ்ச்சிக்கு, பிரித்தானிய அரசு துணைநிற்கக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து, பிப்ரவரி 27 ஆம் நாள் முதல், திருமதி அம்பிகை செல்வகுமார் அவர்கள், லண்டனில் உண்ணாநிலை அறப்போர் மேற்கொண்டு வருகின்றார். அவர், ஐந்தாம் வகுப்பு முதல், முதுநிலைப் படிப்பு  வரை தமிழ்நாட்டில் பயின்றவர். தற்போது, இலண்டனில் மனித உரிமைகள் செயல்பாட்டாளராகக் களமாடி வருகின்றார். 

இலங்கை அரசின் இன அழிப்புக் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றை, பன்னாட்டுக் குற்ற இயல் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லுமாறு, ஐ.நா. பொதுப்பேரவைக்கும், பாதுகாப்பு அவைக்கும் பரிந்துரை செய்யும் தீர்மானத்தை, மனித உரிமைகள் மன்றம், இந்தக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும்;
ஈழத்தமிழர்களுக்கு எதிரான பன்னாட்டுச் சட்ட மீறல்கள் குறித்த சாட்சியங்களைப் பாதுகாப்பதற்கு, மியான்மர் மற்றும் சிரியாவுக்கு அமைத்ததைப் போன்ற, பன்னாட்டுப் பொறி அமைவு ஒன்றை உருவாக்க வேண்டும்; 
இலங்கையில் நடைபெற்று வருகின்ற மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்க, ஐ.நா. சிறப்புப் பிரதிநிதி ஒருவரை பொறுப்பு அறிவிக்க வேண்டும்; 
ஐ.நா. மேற்பார்வையில், தனித்தமிழ் ஈழம் அமைக்கப் பொது வாக்குப் பதிவு நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, இலட்சக்கணக்கான தமிழர்கள் பங்கேற்ற எழுச்சிப் பேரணி, இலங்கையில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலும் நடைபெற்றது. 

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, இலண்டனில் அறப்போர் நடத்தி வருகின்ற அம்பிகை அம்மையாரின் உடல் நலனில் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். அவரது உயிரைக் காக்க வேண்டிய பொறுப்பும், ஈழத்தமிழர்களுக்கு விடியல் பெற்றுத் தருகின்ற  மனித நேயக் கடமையும் இந்திய அரசுக்கு உள்ளது; அதற்கு ஏற்ற வகையில், ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் இந்திய அரசு செயல்பட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
12.03.2021

Wednesday, March 10, 2021

தாயகத்தில் மதிமுக வேட்பாளர் நேர்காணல்!

நடைபெற இருக்கின்ற, தமிழக சட்டப்பேரவைப் 2021 பொதுத் தேர்தலில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கீழ்காணும் தொகுதிகளில் போட்டியிடுகின்றது.

1. 35. மதுராந்தகம்
2. 204. சாத்தூர்
3. 115. பல்லடம்
4. 192. மதுரை தெற்கு
5. 220. வாசுதேவநல்லூர்
6. 149. அரியலூர்

மேற்கண்ட தொகுதிகளில், கழகத்தின் சார்பில் போட்டியிட விழைவோருக்கான நேர்காணல், 11.03.2021 வியாழக் கிழமை காலை 10.00 மணி அளவில், தலைமைக் கழக அலுவலகம் தாயகத்தில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெறும். 

தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
10.03.2021

2021 தேர்தலில் மதிமுக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. மதுராந்தகம்
2. பல்லடம் 
3. மதுரை தெற்கு
4. அரியலூர்
5. வாசுதேவநல்லூர்
6. சாத்தூர்

மதிமுக வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்கள்.

Monday, March 8, 2021

அப்துல் கலாம் அண்ணன் மறைவுக்கு வைகோ இரங்கல்!

இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர், மேதகு அப்துல் கலாம் அவர்களின் அண்ணன், முகமது முத்து மீரா லெப்பை மரைக்காயர் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன்.

இராமேஸ்வரத்தில் எளிமையான விவசாயி; இஸ்லாமிய மார்க்க நெறிப்படி கண்ணியமான வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்;  உடன்பிறந்த ஒரே தம்பியை, அன்புடன் அரவணைத்து, அறிவியல் படிக்க வைத்து, அணு விசை ஆய்வு அறிஞராக உயர்வு பெறுவதற்கு, அடித்தளமாகத் திகழ்ந்தவர் பெருமகன்  முத்து மீரா லெப்பை மரைக்காயர் அவர்கள் ஆவார்.

தம்பி இந்தியக் குடியரசின்  தலைவராக உயர்ந்த போதும், வசதியான மாளிகை வாழ்க்கையை விரும்பாமல், பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு விட்டு உடனே  ஊர் திரும்பினார். அவர் அப்துல் கலாமுக்கு மட்டும் அண்ணன் அல்ல; ராமேஸ்வரம் தீவின் அத்தனைக் குடும்பத்திற்கும் ஒரு மூத்த உறுப்பினர். எல்லோரையும் அரவணைத்துச் செல்வார்.

எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், அப்துல் கலாம் அவர்கள், தம் அண்ணனிடம் ஆலோசனை கேட்டுத்தான் செய்வார்.

அப்துல் கலாம் அவர்கள் இயற்கை எய்திய போது முத்து மீரா மரைக்காயர் அவர்களைச் சந்தித்து இருக்கின்றேன். பண்பாளர், 104 வயது வரை நிறைவாழ்வு வாழ்ந்த பெருமகன், கண்ணியத்திற்குரிய முத்து மீரா மரைக்காயர் அவருடைய மறைவிற்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
08.03.2021

உலக மகளிர் நாள் - வைகோ வாழ்த்து!

மார்ச் 8. உலகம் முழுமையும், மகளிரின் உரிமை எழுச்சி நாளாகக் கொண்டாடப்படுகின்ற நிலையில், தமிழக மகளிருக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 

மகளிரின் உடல் அமைப்பைக் கொண்டு, அவர்கள் மென்மையானவர்கள் என்று கூறுவோர் உண்டு. ஆனால், வன்மையில் எல்லாம் வன்மையாகத் திகழ்கின்றவர்கள் பெண்கள். அதனால்தான், பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், 

‘எங்கெங்கு காணினும் சக்தியடா 
ஏழு கடல் அவள் வண்ணமடா
அங்கு தங்கும் வெளியினில் கோடி அண்டம்
தாயின் கைப்பந்தெனவே ஓடுமடா’

என்றார். ‘பெண் அடிமை தீரும் மட்டும், வாழும் திருநாட்டின் மண் அடிமை தீருதல் முயற்கொம்பே’ என்றார். 

புரட்சிக் கவிஞன் பாரதி, பெண்களை, பெண் குழந்தைகளை முன்னிலைப்படுத்தி, ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று, ஆழமான சமூகக் கருத்துகளை பெண் குழந்தைகளின் மனதில் விதைத்தார். 

சமூக எழுச்சிக்கும், மலர்ச்சிக்கும் பெண்களின் பங்களிப்பு என்பது, மறைக்கவோ, மறுக்கவோ முடியாத ஒன்று ஆகும். ‘பெண் ஏன் அடிமை ஆனாள்?’ என்ற கேள்வியை எழுப்பி, அதற்கு விடை காணும் வகையில், மகளிர் தங்களை விடுவித்துக் கொள்ள எத்தகைய முயற்சிகளில், பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதைக் காட்டியவர் தந்தை பெரியார். ‘பெரியார்’ என்கின்ற பட்டத்தை ஐயாவுக்கு வழங்கியவர்களும் பெண்கள்தான். 

இன்று இந்திய அளவில், தமிழக மகளிர் முதன்மை இடத்தில் சாதனை படைத்து வருவதற்கு, திராவிட இயக்கம் அடித்தளம் அமைத்துத் தந்தது. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான டாக்டர் முத்துலெட்சுமி அவர்கள் நிறுவிய அடையாறு புற்று நோய் ஆராய்ச்சிக் கழகத்தை, டாக்டர் சாந்தா அவர்கள் சீரும் சிறப்புமாக வழிநடத்திப் பெருமை சேர்த்து இருக்கின்றார்.

உலகில் புரட்சிகர மாற்றங்களைக் கொண்டு வந்தோர்களுள், இரண்டு நோபெல் பரிசுகளைப் பெற்ற மேடம் கியூரி, ஹெலன் கெல்லர் ஆகியோர், உலக மனித உரிமைகள் ஆவணத்தை வரைந்த எலெனார் ரூஸ்வெல்ட் போன்றோர், முதன்மை முன்னோடிகளாகத் திகழ்கின்றனர். 

அந்த வரிசையில், இந்தியாவில் இந்திரா காந்தி, பிலிப்பைன்சில் கொரசான் அகினோ, வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா, இந்தோனேசியாவில் மேகவதி என ஆசிய நாடுகளின் ஆட்சி அதிகாரத்தில் பெண்கள் பெரும் புரட்சி செய்தார்கள். ஐரோப்பாவின் பல நாடுகளில், பெண்கள் பிரதமர், குடியரசுத் தலைவர் பொறுப்புகளை வகித்து இருக்கின்றார்கள். ஜெர்மனி சான்சலராக ஆங்கெலா மெர்கல், 18 ஆண்டுகளாக, வலிமை வாய்ந்த ஆளுமையாகத் திகழ்கின்றார். 

மகளிர் விடுதலைக்காகவும், உரிமைகளுக்காகவும், அயராது  தளராது நாளும் உழைப்போம் என சூளுரை மேற்கொள்வோம்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
07.03.2021

Thursday, March 4, 2021

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார் வைகோ எம்பி!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி அவர்கள் இன்று (04.03.2021) அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

தினமலர் கிருஷ்ணமூர்த்தி மறைவு! வைகோ MP இரங்கல்!

தினமலர் நாள் இதழின் ஆசிரியர் பெருந்தகை ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன்.


கன்னியாகுமரி மாவட்டம் வடிவீஸ்வரம் இராமசுப்பு அவர்கள், 1951 திருவனந்தபுரத்தில் தொடங்கிய தினமலர் நாள்இதழ், 57 முதல் திருநெல்வேலி தச்சநல்லூருக்கு இடம் பெயர்ந்து வந்தது.

அவரது மூத்த மகன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள், சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றபிறகு, ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்தார்.

ஐஏஎஸ் அதிகாரி ஆக மக்களுக்குத் தொண்டு ஆற்றுவதை விட, நாள் இதழ் மூலமாக அடித்தட்டு மக்களின் சமூக, கல்வி மேம்பாட்டுக்குப் பெருந்தொண்டு ஆற்ற முடியும் என்ற வேண்டும் என்ற தந்தை இராமசுப்பு அவர்களின் அறிவுரையை ஏற்று, தினமலர் நாள் இதழ் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இதழ் இயல் துறையில் பல புதுமைகளைப் புகுத்தினார். அயல்நாடுகளில் இருந்து புதிய அச்சுப்பொறிகளை இறக்குமதி செய்து பொருத்தினார்.

இந்திய நாள் இதழ்களில், டெலிபிரிண்டர்களைப் பயன்படுத்திய முன்னோடிகளுள் ஒருவர் ஆனார்.

இன்று, கணிணிகளில் தமிழ் மொழியின் பயன்பாடு, உலக அளவில் முதன்மையான பல மொழிகளுடன் போட்டி இடுகின்ற இடத்தில் இருக்கின்றது என்றால், அதற்கு அடித்தளம் அமைத்துத் தந்தவர் ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் என்றால் அது மிகை அல்ல.

எழுத்து உருக்களைக் கையால் அச்சுக்கோர்த்து அச்சிடுகின்ற முறையில் இருந்து மாறி, கணிணிகளில் தட்டச்சு செய்து கோர்ப்பதற்குத் தேவையான, தமிழ் எழுத்து உருக்களை (Fonts) ஆக்கிய முன்னோடி அவர்தான். அதற்காகப் பல நாடுகளுக்குப் பயணித்து, பல்வேறு தமிழ் எழுத்து உருக்களை ஆக்கினார். ஆனால், அந்த எழுத்து உருக்களுக்குக் காப்பு உரிமை செய்து கொள்ளாமல், அனைவரும் பயன்படுத்திக்கொள்கின்ற வகையில், பொதுப்பயன்பாட்டுக்கு அளித்தார். அதன் காரணமாகவே, இன்று கணிணிகளில் தமிழ் சிறப்பு இடம் பெற்று இருக்கின்றது.

அதேபோல, தினமலரில் வெளிவருகின்ற சிறப்புக் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகங்களாக வெளியிட வேண்டும் என சிலர் கூறியபோதும், அது புத்தகங்கள் அச்சிடுகின்ற பதிப்பகங்களைப் பாதிக்கும் எனக்கூறி, அந்த எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதழியல் அறத்துடன் இயங்கினார். தினமலர் நாள் இதழுக்கு என தனிப்பட்ட கருத்து இயலை ஆக்கினார்.

பழந்தமிழர் வாழ்வியல் தடங்களை ஆய்வு செய்து, தமிழரின் தொன்மையை நிறுவுவதில், மிகப் பெரும் ஆர்வலராகத் திகழ்ந்தார். அவர் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாகவே, காவிரிப்பூம்பட்டினம் ஆராய்ச்சிகள் நடைபெற்றன. தமிழ்நாட்டில் நாணய இயலின் தந்தை என்கின்ற அளவிற்கு, பழந்தமிழ் நாணயங்கள் சேகரிப்பு தொடர்பான ஆராய்ச்சிகளில் அறிஞராகத் திகழ்ந்தார். அவரது நாணய சேகரிப்புகளும், அந்தத் துறையில் அவர் எழுதி இருக்கின்ற ஆய்வு நூல்களும், தமிழரின் வரலாற்று ஆவணங்கள் ஆகும்.

நான் வேலூரில் பொடா சிறைவாசம் இருந்தபோது, என்னைச் சந்திப்பதற்காக, சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு வந்தார்.

அப்போது என்னிடம், “நான் இதுவரை சிறை வாயிலை மிதித்தது இல்லை. இந்த வழக்கை நீங்கள் எதிர்கொள்கின்ற விதமும், உங்கள் மன உறுதியும், நேர்மையும்தான் என்னை இங்கே வரச் செய்தது. உங்களைப் பார்த்து ஆறுதல் கூறுவதற்காக வந்தேன்” என்று சொன்னார்.

பலமுறை அவரைச் சந்தித்து உரையாடி இருக்கின்றேன். என் தந்தை போல, என் மீது பாசமும், பற்றும் பரிவும் கொண்டு இருந்தார். என் அழைப்பினை ஏற்று, என் இல்லத் திருமண நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்று வாழ்த்திச் சிறப்பித்தார்.

அவருடைய மறைவு, தமிழ்நாட்டுக்குப் பேரிழப்பு. இந்திய அரசின் உயர் விருதுகள் பெற்றவர் என்றாலும், அன்னாருக்கு தமிழக அரசு தனிச்சிறப்பு செய்ய வேண்டும்.

பெருந்தகை ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மறைவால் துயருறும் தினமலர் குடும்பத்திற்கும், உற்றார் உறவினர்கள், நண்பர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
04.03.2021 

Wednesday, March 3, 2021

வைகோ எம்பியை சந்தித்த திமுக எம் எல் ஏ க்கள்!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி அவர்களின் அக்கா இராஜலட்சுமி அம்மையார் மறைந்ததையொட்டி 02-03-2021 அன்று மதிமுக தலைமை நிலையம் தாயகத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏஆர்ஆர் சீனிவாசன், விருதுநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர் ராஜா அருள்மொழி ஆகியோர் வருகை தந்து ஆறுதல் தெரிவித்தனர்.

Monday, March 1, 2021

மருத்துவ மேற்படிப்புகளுக்கான தேர்வு மையம் தமிழ்நாட்டில் இருக்கின்றதா? வைகோ MP கேள்வி!

மருத்துவக் கல்வியில், அனைத்து இந்திய அளவில், தமிழ்நாடு முதல் இடம் வகிக்கின்றது. தற்போது, 50 க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. எனவே, இயல்பாகவே, மருத்துவ மேற்படிப்புத் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை, தமிழ்நாட்டில்தான் ஆகக் கூடுதலாக இருக்கின்றது. 

இந்த நிலையில், மருத்துவ மேற்படிப்புகளுக்கு (ஞழு சூநுநுகூ), நீட் தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பங்கள், பிப்ரவரி 23 ஆம் நாள் பிற்பகல் 3 மணி முதல் பெறப்படும் என அறிவிப்பு வெளியாகியது. விண்ணப்பிக்கின்ற நேரம் தொடங்கியவுடன் மாணவர்கள் பதிவு செய்தனர். அதற்கு, ஓடிபி எண் கிடைப்பதற்கு, இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கும் மேல் ஆனது. அந்த எண் கிடைத்தபிறகுதான், மாணவர்கள், தேர்வு மையத்தைத் தேர்வு செய்ய முடியுயும். அப்படி ஓடிபி எண் கிடைத்தவுடன் பார்த்தபொழுது, தமிழ்நாடு, கேரளா ஆகிய  ஆகிய மாநிலங்களில், தேர்வு எழுதும் மையங்கள் நிரம்பி விட்டதாகக் காண்பித்தது.  

கடந்த ஆண்டு விண்ணப்பித்தவர்களுக்கு, 3 நாள்கள் கழித்தும் கூட, தமிழ்நாட்டின் தேர்வு மையங்களைத் தேர்வு செய்கின்ற வாய்ப்புகள் கிடைத்தன. எனவே, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில், இந்த ஆண்டு தேர்வு மையங்கள் எதுவுமே இல்லை; அல்லது மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதாகத் தெரிகின்றது. அது எத்தனை இடங்கள், எத்தனை பேர் எழுதுகின்றார்கள் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. 

எனவே, தமிழக மாணவர்கள், ஆந்திரா, கர்நாடகா அல்லது வட மாநிலங்களுக்குச் சென்றுதான் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கின்றது.  

எனவே, தமிழ்நாடு அரசு உடனே இந்தப் பிரச்சினையில் தலையிட்டு விளக்கம் அளிப்பதுடன், தேர்வு எழுதுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை, தமிழ்நாட்டில் உயர்ந்து இருப்பதால், தமிழகத்தில் மேலும் புதிய தேர்வு மையங்கள் அமைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
01.03.2021

சமையல் எரிவாயு விலை; மூன்றே மாதங்களில் ரூ 225 உயர்வு! வைகோ எம்பி கடும் கண்டனம்!

மத்திய பாஜக அரசு தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி மக்கள் மீது பேரிடியை விழச் செய்து வருகின்றது. பிப்ரவரி 25 ஆம் தேதி சிலிண்டர் விலையை ரூ 25 உயர்த்திய மத்திய அரசு, மூன்று நாட்களுக்குள் மீண்டும் ரூ 25 விலையை அதிகரித்து இருக்கின்றது.

கடந்த 2020 டிசம்பர் மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ 594 ஆக இருந்தது. இன்று மார்ச் 1, 2021 இல் ரூ 819 ஆக உயர்ந்துவிட்டது.
டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான இந்த மூன்றே மாதத்தில் சமையல் எரிவாயு விலை ரூ 225 ஆக உயர்த்தப்பட்டு இருக்கின்றது.
பெட்ரோல், டீசலுக்கு விலை நிர்ணயம் செய்வதைப் போன்று, சமையல் எரிவாயு உருளைக்கும் நாள்தோறும் விலையைத் தீர்மானிக்கும் வகையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி, மக்களைச் சூறையாடி வருவது கடும் கண்டனத்துக்கு உரியது.
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்தாலும், இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் விலை குறையவில்லை. மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளால் மீள முடியாத துயரப்படுகுழியில் சாதாரண மக்கள் தள்ளப்பட்டு வருவது ஏற்கத்தக்கது அல்ல.
மத்திய அரசு உடனடியாக சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
01.03.2021

ஒரத்த நாட்டில் தந்தை பெரியார் சிலை அவமதிப்பு! வைகோ MP கடும் கண்டனம்!

28.02.2021 அன்று தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் உருவச் சிலைக்கு காவித் துண்டு அணிவித்தும், தலைக்கு தொப்பி அணிவித்தும் சில அநாமதேயங்கள் நள்ளிரவில் இழி செயலில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா ஆகிய தலைவர்களின் உருவச் சிலைகள் மட்டுமல்ல, வான்புகழ் வள்ளுவம் தந்த திருவள்ளுவர் சிலைகளும்கூட இந்த ஆட்சியில் அவமரியாதை செய்யப்படுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. தேர்தல் நெருங்கும் இந்த நேரத்திலும்கூட இத்தகைய கேவலமான செயல்கள் அரங்கேறுகிறது என்றால், தமிழக காவல்துறை பொறுப்பின்றி மெத்தனமாக கிடக்கிறது என்பதைத்தான் இது சுட்டிக்காட்டுகிறது.
காவல்துறை அதிகாரிகள் தமிழர் தலைவர்களின் சிலைகள் கேவலப்படுத்தப் படும்போதெல்லாம் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, அந்த அக்கிரமச் செயலை நீர்த்துப் போகச் செய்வது என்பதும் வாடிக்கையாகி விட்டது.
மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக நம் சமுதாயம் அமைவதற்கு வாழ்நாள் முழுக்க கண் துஞ்சாமல் போராடியவர் தந்தை பெரியார். எதிர்ப்புகள் சூழ்ந்தபோதெல்லாம் அதனை முறியடித்து, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஆதிக்க சக்திகளிடமிருந்து தாய்ப் பறவையாக பாதுகாத்திட்டவர் தந்தை பெரியார்.
அவர் மறைந்து அரை நூற்றாண்டு காலம் நெருங்குகிற இந்த வேளையிலும் அவருடைய உருவச் சிலை குறி வைத்து தாக்கப்படுவதும், தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தண்டிக்கப் படாததும் இந்த ஆட்சியில் தொடர் கதையாக தொடர்ந்து வருகிறது. இந்த அக்கிரமச் செயலை மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கடுமையாக கண்டிக்கிறேன்.
இந்தப் பிரச்சினையிலாவது குற்றவாளிகளைக் கைது செய்து, கூண்டில் ஏற்றி, தண்டிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் வற்புறுத்துகிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
01.03.2021