Monday, March 1, 2021

ஒரத்த நாட்டில் தந்தை பெரியார் சிலை அவமதிப்பு! வைகோ MP கடும் கண்டனம்!

28.02.2021 அன்று தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் உருவச் சிலைக்கு காவித் துண்டு அணிவித்தும், தலைக்கு தொப்பி அணிவித்தும் சில அநாமதேயங்கள் நள்ளிரவில் இழி செயலில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா ஆகிய தலைவர்களின் உருவச் சிலைகள் மட்டுமல்ல, வான்புகழ் வள்ளுவம் தந்த திருவள்ளுவர் சிலைகளும்கூட இந்த ஆட்சியில் அவமரியாதை செய்யப்படுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. தேர்தல் நெருங்கும் இந்த நேரத்திலும்கூட இத்தகைய கேவலமான செயல்கள் அரங்கேறுகிறது என்றால், தமிழக காவல்துறை பொறுப்பின்றி மெத்தனமாக கிடக்கிறது என்பதைத்தான் இது சுட்டிக்காட்டுகிறது.
காவல்துறை அதிகாரிகள் தமிழர் தலைவர்களின் சிலைகள் கேவலப்படுத்தப் படும்போதெல்லாம் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, அந்த அக்கிரமச் செயலை நீர்த்துப் போகச் செய்வது என்பதும் வாடிக்கையாகி விட்டது.
மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக நம் சமுதாயம் அமைவதற்கு வாழ்நாள் முழுக்க கண் துஞ்சாமல் போராடியவர் தந்தை பெரியார். எதிர்ப்புகள் சூழ்ந்தபோதெல்லாம் அதனை முறியடித்து, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஆதிக்க சக்திகளிடமிருந்து தாய்ப் பறவையாக பாதுகாத்திட்டவர் தந்தை பெரியார்.
அவர் மறைந்து அரை நூற்றாண்டு காலம் நெருங்குகிற இந்த வேளையிலும் அவருடைய உருவச் சிலை குறி வைத்து தாக்கப்படுவதும், தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தண்டிக்கப் படாததும் இந்த ஆட்சியில் தொடர் கதையாக தொடர்ந்து வருகிறது. இந்த அக்கிரமச் செயலை மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கடுமையாக கண்டிக்கிறேன்.
இந்தப் பிரச்சினையிலாவது குற்றவாளிகளைக் கைது செய்து, கூண்டில் ஏற்றி, தண்டிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் வற்புறுத்துகிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
01.03.2021

No comments:

Post a Comment