Monday, March 8, 2021

அப்துல் கலாம் அண்ணன் மறைவுக்கு வைகோ இரங்கல்!

இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர், மேதகு அப்துல் கலாம் அவர்களின் அண்ணன், முகமது முத்து மீரா லெப்பை மரைக்காயர் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன்.

இராமேஸ்வரத்தில் எளிமையான விவசாயி; இஸ்லாமிய மார்க்க நெறிப்படி கண்ணியமான வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்;  உடன்பிறந்த ஒரே தம்பியை, அன்புடன் அரவணைத்து, அறிவியல் படிக்க வைத்து, அணு விசை ஆய்வு அறிஞராக உயர்வு பெறுவதற்கு, அடித்தளமாகத் திகழ்ந்தவர் பெருமகன்  முத்து மீரா லெப்பை மரைக்காயர் அவர்கள் ஆவார்.

தம்பி இந்தியக் குடியரசின்  தலைவராக உயர்ந்த போதும், வசதியான மாளிகை வாழ்க்கையை விரும்பாமல், பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு விட்டு உடனே  ஊர் திரும்பினார். அவர் அப்துல் கலாமுக்கு மட்டும் அண்ணன் அல்ல; ராமேஸ்வரம் தீவின் அத்தனைக் குடும்பத்திற்கும் ஒரு மூத்த உறுப்பினர். எல்லோரையும் அரவணைத்துச் செல்வார்.

எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், அப்துல் கலாம் அவர்கள், தம் அண்ணனிடம் ஆலோசனை கேட்டுத்தான் செய்வார்.

அப்துல் கலாம் அவர்கள் இயற்கை எய்திய போது முத்து மீரா மரைக்காயர் அவர்களைச் சந்தித்து இருக்கின்றேன். பண்பாளர், 104 வயது வரை நிறைவாழ்வு வாழ்ந்த பெருமகன், கண்ணியத்திற்குரிய முத்து மீரா மரைக்காயர் அவருடைய மறைவிற்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
08.03.2021

No comments:

Post a Comment