Saturday, March 13, 2021

புதூர் ஒன்றியக் கழகச் செயலாளர் எரிமலை வரதன் மறைவு! வைகோ MP இரங்கல்!

தூத்துக்குடி வடக்கு மாவட்டம், புதூர் ஒன்றியக் கழகச் செயலாளர் எரிமலை வரதன் அவர்கள் சற்றுமுன் மறைந்தார் என்கிற துயரச் செய்தி கேட்டு பெரிதும் துடி துடித்துப்போனேன்.

கடந்த வாரம்கூட என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கழகச் செய்திகள் குறித்தும், என் உடல்நலன் குறித்தும், சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் மிகுந்த ஆர்வத்தோடு பேசியதை என்னால் மறக்க இயலவில்லை.

கழக மேடைகளில் கனல் கக்க உணர்ச்சிமயமாக உரையாற்றி, கேட்போரை தன்வயப்படுத்தும் ஆற்றல் மிக்க சொற்பொழிவாளர் இவர் என்பதால், எரிமலை வரதன் என்று அனைவராலும் பாராட்டப் பட்டவர் இவர்.

கழகப் பணியாற்றுவதில் மட்டும் இல்லாமல், தோழர்களுக்கான பல்வேறு உதவிகளை செய்வதிலும், அரசு அலுவலகங்கள் மூலம் பரிந்துரைகளைப் பெற்று உதவி செய்வதிலும் சிறந்த அணுகுமுறையை கொண்டிருந்த அவர், அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு, சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்தார்.

பொதுமக்களையும், தோழர்களையும் பெருமளவில் திரட்டி, பிரம்மாண்டமான கூட்டங்களை ஏற்பாடு செய்வதிலும், கழகத்திற்காக தேனீயாக பறந்து ஓடி பெருமளவு நிதி திரட்டுவதிலும் அவருக்கு இணையாக மற்றொருவரை குறிப்பிட இயலாத அளவுக்கு கடமையாற்றிய ஓர் இலட்சியத் தோழரை நாம் இழந்து தவிக்கிறோம்.

அவரை இழந்த துயரில் மூழ்கியுள்ள அவரின் குடும்பத்தாருக்கும், கழகத் தோழர்களுக்கும் மறுமலர்ச்சி தி.மு.கழக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
13.03.2021

No comments:

Post a Comment