Tuesday, November 2, 2021

நவம்பர் 1: மொழிவாரி மாநிலம் அமைந்த நாள் ஜூலை 18: ‘தமிழ்நாடு’ மலர்ந்த நாள். தமிழ்நாட்டுப் பெரு விழாவாகக் கொண்டாடுவோம்! வைகோ அறிக்கை!

விடுதலைக்குப் பின்னர் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது குறித்து ஆராய்வதற்கு, 1948 ஜூன் 17 ஆம் நாள் என்.கே.தார் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம், நாட்டின் ஒற்றுமைக்குக் கேடு விளைவிக்கும் என்று கூறி,  மொழி வழி மாநிலப் பிரிப்பு தேவை இல்லை எனப் பரிந்துரை செய்தது.

தார் ஆணையத்தின் பரிந்துரை அறிக்கையை ஏற்கக் கூடாது என்று போராட்டங்கள் எழுந்தவுடன், நேரு அரசு ஜே.வி.பி. குழுவை (ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீதாராமையா) அமைத்தது. இக்குழுவின் பரிந்துரையும், மொழிவாரி மாநிலப் பிரிவினைக்கு எதிராகவே இருந்தது. ஆனால் ஆந்திர மாநிலப் பிரிவினைக்கு ஆதரவாகக் கருத்துக் கூறியது.

ஏனெனில், ஆந்திர மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்நது போராட்டங்களில் ஈடுபட்டனர். அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, 1952 அக்டோபர் மாதம், பொட்டி ஸ்ரீராமுலு சென்னையில் உண்ணாவிரத அறப்போராட்டத்தைத் தொடங்கினார். 58 நாட்கள் உண்ணா நோன்பு மேற்கொண்டு 1952, டிசம்பர் 16 இல் அவர் உயிர்த் தியாகம் செய்தார். இதன் எதிரொலியாக ஆந்திரா எங்கும் உருவான கனல், பண்டித நேரு அரசை ஆந்திரா எனும் தெலுங்கு மாநிலத்தை 1953 அக்டோபர் 1 ஆம் நாள் அமைப்பதற்கு அடித்தளம் ஆயிற்று.

ஆந்திரா மாநிலத்தைப் போல மொழிவாரி மாநிலக் கோரிக்கைகளை பல்வேறு தேசிய இன மக்களும் எழுப்பியதைத் தொடர்ந்து, 1954 இல் பீகாரைச் சேர்ந்த பசல் அலி தலைமையில் மாநில மறுசீரமைப்புக் குழு அமைக்கப்பட்டது. இதில் கே.எம்.பணிக்கர், ஹிருதயநாத் குன்ஸ்ரூ ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.

பசல் அலி குழு தனது அறிக்கையை, 1955, செப்டம்பர் 30 இல் இந்திய அரசிடம் அளித்தது. அதற்குப் பிறகு நாடாளுமன்றத்தில் மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1956 நவம்பர் 1 ஆம் நாள் முதன்முதலில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.

சென்னை மாகாணத்தில் இருந்து தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழி பேசும் மக்கள் அந்தந்த மொழி பேசும் பகுதிகளுடன் இணைக்கப்பட்டனர். சென்னை மாநிலம் தமிழ்மொழி பேசும் மக்களின் தாயகமாக உருவாக்கப்பட்டது.

மாநில மறுசீரமைப்பின் போது, தமிழ் மொழி பேசுபவர்கள் அதிகம் வாழும் பகுதியான சித்தூர், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளை ஆந்திராவிடம் நாம் இழந்தோம்.

தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமங்காடு, பாலக்காடு போன்ற பகுதிகளை கேரளாவிடம் இழந்தோம். ‘வெண் கல் ஊர் என்பது மருவி வெங்கலூர்’ என அழைக்கப்பட்ட இன்றைய பெங்களூரு, கோலார் தங்க வயல் போன்ற, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற பகுதிகளை கர்நாடகத்திடம் தமிழ்நாடு இழந்து விட்டது.

மொழிவாரி மாநிலங்கள் அமைவதற்கு முன்பு, சென்னை மாகாணம், கர்நாடகம், கேரளா ஆகிய மூன்றையும் இணைத்து ‘தட்சிணப் பிரதேசம்’ அமைக்கும் திட்டத்தை நேரு அரசு முன் வைத்தபோது, தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார். அப்போதைய முதல்வர் பெருந்தலைவர் காமராசர் அவர்கள், பெரியாரின் கருத்தை ஆதரித்து பிரதமர் நேரு அவர்களிடம் ‘தட்சிணப் பிரதேசம்’ அமையக் கூடாது என்று வலியுறுத்தினார்.

தென் தமிழகத்தின் தமிழர்கள் வாழும் கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீசுவரம் உள்ளிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் பகுதிகள் கேரள மாநிலத்துடன் சேர்ந்துவிடாமல் தடுப்பதற்கு மாபெரும் மக்கள் திரள் போராட்டங்கள் எழுச்சியுடன் நடத்தப்பட்டன. அப்போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். மார்ஷல் நேசமணி, எஸ். சாம் நத்தானியல், பி.எஸ்.மணி, காந்தி ராமன், ஆர்.கே.ராம் உள்ளிட்ட தலைவர்கள் போராடி வெற்றி கண்டனர்.

வடக்கே திருத்தணி தமிழகத்தோடு இணைவதற்கும், தலைநகர் சென்னையைக் காப்பதற்கும் வடக்கு எல்லைப் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்தவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் தெற்கு எல்லைப் போராட்டத்திற்கும், வடக்கு எல்லைப் போராட்டத்திற்கும் ஆதரவு நல்கினார்.  இந்த எல்லைப் போராட்டங்களில் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் பங்கேற்றுச் சிறை ஏகினர் என்பதும் மறுக்க முடியாத வரலாறு.

எனவே நவம்பர் 1, மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாளையும் கொண்டாட வேண்டும்; அந்த நாளில், எல்லைப் போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி பெற்ற தலைவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.

சென்னை மாநிலம் என்ற பெயரை, ‘தமிழ்நாடு’ என மாற்றிட, 1967 ஜூலை 18 ஆம் நாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அந்த ஜூலை 18 ஆம் நாளை, ‘தமிழ்நாடு நாள்’ அன்று கொண்டாடுவதற்கு தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்கத்தக்கது; பொருத்தமானது. 

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க 
‘தாயகம்’
சென்னை - 8
31.10.2021

No comments:

Post a Comment