நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர், நாளை தொடங்குகின்றது. அதனை ஒட்டி, குடியரசுத் துணைத்தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்கள் அவைத் தலைவருமான வெங்கையா நாயுடு அவர்கள், இன்று (28.11.2021) மாலை 5 மணி அளவில், மாநிலங்கள் அவை அனைத்துக் கட்சித் தலைவர்களுக்குத் தமது இல்லத்தில் விருந்து அளித்தார். மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., அவர்கள் பங்கேற்றார்.
அப்போது அவர் முன்வைத்த கோரிக்கை:-
கடந்த 74 ஆண்டுகளாக, தனியொரு உறுப்பினர் தாக்கல் செய்கின்ற சட்ட முன்வரைவுகள் (Private Member Bill) மற்றும் தீர்மானங்கள் மீதான கருத்துப் பரிமாற்றங்கள், மாநிலங்கள் அவையில், வெள்ளிக்கிழமை பிற்பகலில்தான் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள், சனி, ஞாயிறு விடுமுறை நாள்களில், தங்கள் தொகுதிகளுக்குச் சென்று, நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றார்கள். அதற்காக, அவர்கள் வெள்ளிக்கிழமை மாலையில் வான் ஊர்தியைப் பிடித்து ஊருக்குப் போகின்றார்கள். எனவே, வெள்ளிக்கிழமை காலையில் அவைக்கு வந்து விட்டு, பிற்பகலில் சென்று விடுகின்றார்கள். அந்த நேரத்தில், இத்தகைய சட்டமுன்வரைவுகளின் மீதான விவாதம் பயன் அற்றதாக இருக்கின்றது. அனைத்து உறுப்பினர்களும் பங்கு ஏற்கின்ற வாய்ப்புகள் இல்லை.
எனவே, அந்த நடைமுறையை மாற்ற வேண்டும். இனி, புதன்கிழமை பிற்பகலில், தனி உறுப்பினர் சட்ட முன்வரைவுகள், தீர்மானங்களை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க,
சென்னை - 8
‘தாயகம்’
28.11.2021
No comments:
Post a Comment