மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது இலட்சக்கணக்கான விவசாயிகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
மக்கள் சக்தியே ஜனநாயகத்தில் மகேசன் சக்தியாகும் என்பதை விவசாயிகள் நிருபித்திருக்கிறார்கள்.
ஓராண்டு காலமாக இலட்சக்கணக்கான விவசாயிகள் போராடினார்களே, நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்தார்களே, கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளை இழந்தார்களே, பிரதமர் மோடி அவர்கள் போன உயிர்களை திரும்பக் கொண்டுவந்து சேர்ப்பாரா? உயிரிழந்த ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் மத்திய அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும்.
பயிர்களைக் கணக்கிட்டு, கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு விவசாயிகளுக்கு தரவேண்டும். வரப்போகின்ற தேர்தலில் தோற்றுப் போவோம் என்கிற பயத்தில் பிரதமர் இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
சர்வாதிகாரத்தின் முதுகெலும்பு விவசாயிகளால் நொறுக்கப்பட்டுள்ளது. போராடிய விவசாயிகளுக்கு இந்த நாடே தலைவணங்குகிறது.
விவசாயிகள் ஒற்றுமை ஓங்கட்டும்! அவர்களின் உரிமைக் குரல் ஓங்கட்டும்! அவர்களுக்குத் தலைவணங்கி நன்றியும், பாராட்டும் தெரிவிக்கிறேன்.
இனிமேல் இம்மாதிரி மக்கள் விரோத சட்டங்களை அதிகாரம் இருக்கின்ற வரையில் மத்திய அரசு கொண்டுவராது என்ற நிலையை விவசாயிகள் ஏற்படுத்திவிட்டார்கள்.
போராடிய விவசாயிகளுக்கு வாழ்த்தையும், மத்திய அரசுக்குக் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
19.11.2021
No comments:
Post a Comment