Saturday, July 30, 2022

என்.எல்.சி. நிறுவன வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு! வைகோ கடும் MP கண்டனம்!

நெய்வேலியில் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இயங்கி வரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இந்தியாவில் உள்ள மற்ற பொதுத்துறை நிறுவனங்களை விட சிறப்பாக செயற்பட்டு ‘நவரத்னா’ தகுதியைப் பெற்று இருக்கின்றது. தமிழ்நாட்டிற்கும், தென்மாநிலங்களுக்கும் தேவையான மின்சாரத்தை என்.எல்.சி. நிறுவனம்தான் உற்பத்தி செய்து வழங்கி வருகின்றது.

என்.எல்.சி. நிறுவனத்தை உருவாக்கிட பெருந்தலைவர் காமராசர் அவர்கள், இப்பகுதி மக்களிடம் நிலக்கரி சுரங்கம் அமைக்க நிலங்களை வழங்குமாறு கேட்டபோது, முப்பதுக்கும் மேற்பட்ட ஊர் மக்கள் தங்கள் வாழ்விடங்களையும், நிலங்களையும் அளித்தனர்.
பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள், பொதுத்துறை நிறுவனங்களை இந்தியாவின் கோவில்கள் என்று வர்ணித்தார். அவரால் தொடங்கி வைக்கப்பட்ட என்.எல்.சி. நிறுவனத்தில் தங்கள் நிலத்தையும், குடியிருந்த வீடுகளையும் தாரை வார்த்து தந்த மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது.
அதுவும் முழுமையாக இல்லாமல், கடந்த சில ஆண்டுகளாக வெறும் ஒப்பந்த தொழிலாளர்களாக மட்டுமே பணி வாய்ப்பை என்.எல்.சி. நிறுவனம் அளித்து வருகிறது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையும் ஒப்பீட்டு அளவில் மிக குறைவானதுதான். இந்நாட்டுக்கு ஒளி வழங்கும் மின்சார உற்பத்திக்காக நெய்வேலி சுற்று வட்டார மக்கள் தங்கள் துயரங்களை பொருட்படுத்தாமல் சொத்துகளை அளித்தனர்.
தொழில் வளத்தில் பின்தங்கி உள்ள கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் நம்பிக்கைக் கீற்றாக விளங்கி வருகிறது.
இந்நிலையில்தான் என்.எல்.சி. நிறுவனத்தின் 51 விழுக்காடு பங்குகளை விற்பனை செய்து, தனியார் மயமாக்க 2002 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முடிவு செய்து அறிவிப்பையும் வெளியிட்டது.
நாடாளுமன்றத்தில் மார்ச் 19, 2002 அன்று சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து, என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்கக் கூடாது. தமிழர்கள் இதனை அனுமதிக்க மாட்டார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தேன். மறுநாள் மார்ச் 20, 2002 அன்று இரவு பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களை நேரில் சந்தித்து, என்.எல்.சி.யின் 51 சதவிகித பங்குகளை விற்கக் கூடாது என்று வலியுறுத்தினேன். என்.எல்.சி. அனைத்து தொழிற்சங்கங்களும் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவையும் பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் அளித்தேன். என்னுடைய கோரிக்கைக்கு செவிமடுத்த பிரதமர் வாஜ்பாய் அவர்கள், என்.எல்.சி. தனியார் மயமாகாது என்று வாக்குறுதி அளித்தார். 51 விழுக்காடு பங்கு விற்பனையும் ரத்து செய்யப்பட்டது.
என்.எல்.சி. பொதுத்துறையாக நீடிக்க வேண்டும் என்று நாம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் இந்நிறுவனத்தில் தமிழர்கள் வேலை வாய்ப்புகளை பெற வேண்டும். குறிப்பாக வீடு, நிலம் தந்தவர்கள், கடலூர் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் பணி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்குத்தான்.
ஆனால் இன்று என்.எல்.சி. நிறுவனம், வேலை வாய்ப்புகளில் நேரடியாக வட இந்தியர்களை புகுத்தும் அடாத செயலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.
என்.எல்.சி. நிறுவனத்தின் நிரந்தர பணி இடங்களில் 90 விழுக்காடு வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
இந்நிலையில்தான் தற்போது நூறு விழுக்காடு பணி இடங்களில் வட இந்திய இளைஞர்களை தேர்வு செய்து என்.எல்.சி. நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பட்டதாரி பொறியாளர்கள் 299 பேரை தேர்வு செய்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற் தகுதி தேர்வுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஒருவர் கூட தேர்வு செய்யப்படவில்லை.
தமிழ்நாட்டில் செயற்பட்டு வரும் என்.எல்.சி. பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற தமிழ் இளைஞர்கள் ஒருவருக்குக் கூட தகுதி இல்லை என்று ஒன்றிய பாஜக அரசு முடிவு செய்துவிட்டதா? இது தமிழ்நாட்டிற்கு செய்யப்பட்டுள்ள பச்சைத் துரோகம் ஆகாதா? வட மாநில இளைஞர்களை கொண்டு வந்து நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் திணிப்பது நல்லது அல்ல.
இத்தகையப் போக்கு தொழில் அமைதியை குலைத்துவிடும்; என்.எல்.சி. நிறுவனத்தில் படிப்படியாக வடமாநிலத்தவர் வேலை வாய்ப்பில் நிரம்பி வழியும் நிலையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டதாரி பொறியாளர்கள் 299 பேருக்கும் ஆகஸ்ட் 1 இல் நடைபெற உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும். புதியதாக அறிவிப்பு வெளியிட்டு தமிழ்நாட்டில் படித்த பட்டதாரி இளைஞர்கள் 90 விழுக்காடு என்.எல்.சி. நிறுவனத்தில் பணி வாய்ப்பு கிடைக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்.
என்.எல்.சி. நிறுவனம் போன்ற ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளில் தமிழர்களை புறக்கணிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்துகின்றேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
30.07.2022

Friday, July 29, 2022

பாம்பன் பேட்ரிக் இல்ல மண விழாவில் வைகோ MP வாழ்த்து!

இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் எம்.பேட்ரிக் - அகிலா பேட்ரிக் ( தலைவர் பாம்பன் ஊராட்சி மன்ற தலைவர்) இவர்களது மகன் P. மேஷாக் - M.ரெமோ லியோன் இவர்களது திருமணம் 29-07-2022 காலை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற திருமண வாழ்த்தரங்க நிகழ்வில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ MP அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

மதிமுக துணை பொதுச் செயலாளர் திமு.ராஜேந்திரன், தலைமை கழக செயலாளர் துரை வைகோ மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Thursday, July 28, 2022

வெளிநாட்டுப் பல்கலைக் கழக தமிழ் இருக்கைகளில் தமிழ்ப் பேராசிரியர்களை நியமனம் செய்க! வைகோ MP அறிக்கை!

இந்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான மன்றம் (Indian Council for Cultural Relations -ICCR) சார்பில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதம், இந்தி, தமிழ், வரலாறு, பொருளாதாரம், தத்துவம், பெங்காலி நாட்டுப்புற நடனம், உருது, புத்தமதம் மற்றும் இந்தியக் கல்வி என சுமார் 11 வகை பாடப் பிரிவுகளுக்கான இருக்ககைள் 1970 ஆம் ஆண்டு முதல் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

இவ்வாறு அமைந்துள்ள வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கான இருக்கைகள் நூற்றுக்கும் மேற்பட்டவை 2014 ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாகக் குறைந்து விட்டன. தற்போது 51 இருக்கைகள் மட்டுமே எஞ்சி உள்ளன. இதிலும் அதிகபட்சமாக இந்தி மொழியும், அடுத்த நிலையில் சமஸ்கிருதமும் இருக்கின்றன.
இந்தப் பட்டியலில், போலந்து நாட்டின் வார்ஸா பல்கலைக் கழகத்திலும், கிராக்கூப்யாகி எலோனியன் பல்கலைக் கழகத்திலும் தமிழுக்காக வெறும் இரண்டு இருக்கைகள் அமைந்துள்ளன. இவற்றுக்குக் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பேராசிரியர்கள் அமர்த்தப்படவில்லை. கடந்த 2015 இல் கேரளா பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் ஜெயகிருஷ்ணன் ஐசிசிஆர் மூலம் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவரையும் இந்திய அரசு போலந்துக்கு அனுப்பவில்லை.
தற்போது ஐசிசிஆர் சார்பில் வெளியிடப்பட்ட இருக்கைகளுக்கான விளம்பரத்தில், தமிழ் இடம் பெற்றுள்ளது. ஆனால் பேராசிரியர் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கும் ஐசிசிஆர் இணையதளத்தில் தமிழ் இடம்பெற வில்லை.
ஐசிசிஆர் மூலம் வெளிநாட்டு இருக்கைகளுக்கு தேர்வு செய்யப்படும் பேராசிரியர்களுக்கு ஊதியத்தை இந்திய அரசு வழங்கும். உணவு மற்றும் தங்கும் வசதிகளை தொடர்புடைய நாடுகளின் கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன.
இந்நிலையில், வார்ஸா பல்கலைக் கழகத்தில் 48 ஆண்டுகளாக இந்திய மொழிகளில் தமிழ் இருக்கை இடம் பெற்றுள்ளது. கிராக்கூப் யாகி எலோனியன் பல்கலைக் கழகத்தில் 2008 ஆம் ஆண்டு முதல் தமிழ் இருக்கை அமைந்திருக்கிறது. 2014 இல் ஒன்றிய பா.ஜ.க. அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின்னர், கடந்த எட்டு ஆண்டுகளாக தமிழ்த் துறையின் பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படவில்லை என்பது வேதனை அளிக்கிறது.
தற்போது இந்திய கலாச்சார உறவுகளுக்கான மன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பிலும் தமிழ்ப் பேராசிரியர்கள் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்படவில்லை.
தமிழ் மொழியின் மீதும், திருக்குறள் மீதும் ஆர்வமும் பற்றும் உடையவராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் தமிழ் இருக்கைகள் அமையவும், தமிழ்த் துறைப் பேராசிரியர்கள், ஆய்வு அறிஞர்களை நியமனம் செய்யவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
28.07.2022

Wednesday, July 27, 2022

சிறப்புத் திறன் கொண்ட குழந்தையை விமானத்தில் பயணிக்க மறுத்தது ஏன்? வைகோ கேள்விக்கு விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பதில்!

கேள்வி எண். : 809

(அ) சமீபத்தில் ஒரு உள்நாட்டு விமானத்தில் சிறப்புத் திறன் கொண்ட குழந்தை அனுமதிக்கப்படவில்லையா? அப்படியானால் அதன் விவரங்கள் என்ன?
(ஆ) குழந்தையை தவறாகக் கையாண்டதற்காக விமான நிறுவனம் தண்டிக்கப்பட்டுள்ளதா?
(இ) எதிர்காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளைத் தவிர்ப்பதற்காக சிவில் விமான போக்குவரத்து விதிகளில் ஏதேனும் திருத்தம் செய்யப்பட உள்ளதா?
(ஈ) அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பயணிப்பதைக் கருத்தில் கொண்டு, விமான நிலையப் பணியாளர்களுக்கும், விமானப் பணியாளர்களுக்கும் அத்தகைய சூழ்நிலைகளை சுமூகமான முறையில் கையாள்வதற்கான பயிற்சித் திட்டம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மத்திய அரசு தொடங்குமா?
(உ) அப்படியெனில், அதன் விவரங்கள் என்ன?
வைகோ அவர்களின் மேற்கண்ட கேள்விகளுக்கு, விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் அவர்கள் 25 ஜூலை 2022 அன்று அளித்துள்ள பதில்:
(அ) மற்றும் (ஆ): 07.05.2022 அன்று ராஞ்சி - ஹைதராபாத் விமானத்தில், தனது பெற்றோருடன் பயணிக்க வந்த சிறப்புத் திறன் கொண்ட குழந்தையை, ஒரு விமான நிறுவனம் பயணிக்க மறுத்த நிகழ்வு நடந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) அமைத்த உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், விமான நிறுவனத்தின் மீது ரூ. 5,00,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
(இ) முதல் (ஈ): விமான போக்குவரத்து விதிகள் (சிஏஆர்) பிரிவு 3 - விமானப் போக்குவரத்து, தொடர் M பகுதி IV இல், ஊனமுற்றோர் அல்லது குறைந்த நடமாட்டம் கொண்ட நபர்களின் போக்குவரத்திற்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் ஆணை வழங்கி உள்ளது.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வழங்கிய பயிற்சித் தொகுதியின்படி, பயணிகள் சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து விமான நிலையப் பணியாளர்கள், விமான நிறுவனங்கள், பாதுகாப்பு பணியாளர்கள், சுங்கம் மற்றும் குடிவரவுப் அமைப்புகளின் அனைத்து பணியாளர்களுக்கும் பயிற்சித் திட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் வழங்கி உள்ளது.
எதிர்காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நிகழாமல் இருக்க, 22 ஜுலை 2022 அன்று, சிவில் விமான போக்குவரத்து இயக்குநகரம் (DGCA), தொடர்புடைய விதிகளை திருத்தி அமைத்துள்ளது.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
27.07.2022

Tuesday, July 26, 2022

நீண்ட தூர ரயில்களில் குழந்தைகளுக்கு தனி படுக்கை வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதா? வைகோ கேள்விக்கு இரயில்வே துறை அமைச்சர் பதில்!

கேள்வி எண். 790

(அ) தொலைதூர ரயில்களில் குழந்தைகளுக்கான தனி இருக்கைகள், படுக்கைகளை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளதா?
(ஆ) அப்படியானால், அதன் விவரங்கள்;
(இ) இந்த வசதி, அனைத்து இரயில்வே மண்டலங்களில் உள்ள எல்லா இரயில்களிலும் அறிமுகப்படுத்தப்படுமா?
(ஈ) குழந்தை படுக்கை வசதி பயன்படுத்துவதற்கு ஏதேனும் கூடுதல் கட்டணம் விதிக்கப்படுமா? அல்லது இலவசமாக வழங்கப்படுமா?
இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் 22.07.2022 அன்று அளித்த பதில்:-
(அ) & (ஆ): தங்கள் குழந்தைகளுடன் பயணம் செய்யும் தாய்மார்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், சோதனை அடிப்படையில் ரயில் எண். 12229/ 12230 லக்னோ மெயிலின் பெட்டியில் இரண்டு கீழ் படுக்கைகளுடன் இரண்டு குழந்தைகள் படுக்கைகளும் இணைக்கப்பட்டுள்ளன.
(இ) (ஈ): தற்சமயம் சோதனை அடிப்படையில் ஒரு இரயில் பெட்டியில் மட்டும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
26.07.2022

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பிழப்புக்கான காரணம் என்ன? ஒன்றிய நிதி அமைச்சரிடம் வைகோ கேள்வி!

கேள்வி எண். 253

(அ) கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய ரூபாய் மற்றும் அமெரிக்க டாலர் பரிமாற்ற மதிப்பு மாத வாரியாக வேண்டும்.
(ஆ) அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் அதிக மதிப்பிழப்புக்கான காரணங்கள் யாவை?
(இ) இந்திய ரூபாயின் மதிப்பு இழப்பு, குறைந்த அந்நியச் செலாவணி கையிருப்பு மற்றும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை உள்ளிட்டவைதான், நாட்டின் மோசமான பொருளாதாரச் சூழலுக்குக் காரணமா?
(ஈ) அப்படியானால், நிலைமையை மேம்படுத்த எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளின் விவம் என்ன?
மேற்கண்டவாறு வைகோ அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி அவர்கள் 19.07.2022 அன்று அளித்த பதில்:
(அ) கடந்த மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு மாத இறுதியிலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்புகள் இணைப்பில் உள்ளன.
(ஆ) மற்றும் (ஈ) ரஷ்யா-உக்ரைன் மோதல், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலகளாவிய நெருக்கடியான நிதி நிலைமைகள், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும். பிரிட்டிஷ் பவுண்ட், ஜப்பானிய யென் மற்றும் யூரோ போன்ற நாணயங்கள் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயை விட பலவீனமடைந்துள்ளன. தற்போது, 2022 இல் இந்த நாணயங்களுக்கு எதிராக இந்திய ரூபாய் வலுவடைந்துள்ளது.
(உ) இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அன்னியச் செலாவணிச் சந்தையைத் தொடர்ந்து கண்காணித்து, அதிகப்படியான ஏற்ற இறக்கத்தின் சூழ்நிலைகளில் தலையிடுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்திய மாதங்களில் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதால், இந்திய ரூபாயை வைத்திருக்கும் வெளிநாட்டில் குடியிருக்கும் இந்தியர்களுக்கு இது ஊக்கத்தைத் தருகிறது.
மேலும், இந்திய ரிசர்வ் வங்கியால் எடுக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கைகளில் 1) நவம்பர் 4 வரை பண இருப்பு விகிதம் மற்றும் சட்டப்பூர்வ பணப் புகழக்க விகித பராமரிப்பில் இருந்து அதிகரிக்கும் வெளிநாட்டு நாணயம் (வங்கி) FCNR(B) மற்றும் குடியுரிமை இல்லாத வெளிநாட்டு (NRE) வங்கி வைப்புகளுக்கு 4 நவம்பர் 2022 வரை விலக்கு அளிக்கப்படும்.
2) புதிதாக வெளிநாட்டு நாணயம் குடியுரிமை இல்லாத (வங்கி) வைப்பு FCNR(B) மற்றும் குடியுரிமை இல்லாத வெளிநாட்டு வங்கி (NRE) வைப்புகளுக்கு தற்போதுள்ள வட்டி விகிதங்களில் இருந்து விலக்கு அளிப்பதன் மூலம், வெளிநாட்டு நாணய வைப்புகளை ஈர்க்கும் நோக்கில் ஒப்பிடக்கூடிய உள்நாட்டு ரூபாய் நீண்ட கால வைப்புத் தொகைக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களை விட அதிக வட்டி விகிதங்களை வழங்க 31 அக்டோபர் 2022 வரை அனுமதிக்கப்படுகிறது.
3) இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் விதமாக, கடன் கொடுப்பதில் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான ஒழுங்குமுறையில் திருத்தம் கொண்டுவரப்பட்டு உள்ளது.
4) டிசம்பர் 31, 2022 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்குகளில் வெளிப்புற வணிகக் கடன் வரம்பை (தானியங்கி வழியின் கீழ்) 1.5 பில்லியன் டாலராக உயர்த்துவது மற்றும் அனைத்து செலவு உச்சவரம்பு 100bps நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5) அங்கீகரிக்கப்பட்ட டீலர் வகை-1 (AD Cat-I) வங்கிகள் வெளிநாட்டு நாணயத்தில் கடன் வாங்குவதற்கு, வெளிநாட்டு நாணயத்தில் கடன் வாங்குவதைப் பயன்படுத்த அனுமதித்தல், வெளிப்புற வணிகக் கடன்களுக்கான எதிர்மறை பட்டியலுக்கு உட்பட்டு, பரந்த அளவிலான இறுதி பயன்பாட்டு நோக்கங்களுக்காக அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
26.07.2022

Sunday, July 24, 2022

தலைவர் வைகோ அவர்களுக்காக உயிர்த்தியாகம் செய்த தொண்டர்களின் இல்லம் தேடி வருகிறேன் - துரை வைகோ!

இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களுக்காக, தங்கள் தேகத்தை தீக்கிரையாக்கிய நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை காமராசபுரம் பாலன் ஆகியோரது உயிர்த்தியாகத்தால் உருவான இயக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.

28 ஆண்டுகள் உருண்டோடி விட்டது.
அதைப்போல, தலைவர் வைகோ அவர்கள் 'பொடா' எனும் கொடிய அடக்குமுறைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டபோது, அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்தநல்லூர் அறிவழகன் தீ குளித்து உயிர்த்தியாகம் செய்தார்.
தலைவர் வைகோ அவர்கள், தமிழ் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தன்னை வருத்திக் கொண்டு இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்தும் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தில் சிவகாசி ரவியும்,
தலைவர் வைகோ அவர்களை கேலி செய்து அபாண்டமான அவதூறுகளை சில வீணர்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பரப்பி வந்ததை தாங்கிக் கொள்ள இயலாமல் மனம் உடைந்து பெருமாள்பட்டி சரவண சுரேஷூம் தீ குளித்து இறந்தார்கள்.
ஒரு தலைவனின் மீது கொண்ட அதீத பற்றால், உணர்வால் அந்தத் தலைவனுக்காக தங்கள் உயிரையும் தருவதற்கு துணிந்த தொண்டர்கள் மறுமலர்ச்சி தி.மு.க.வில் இருக்கிறார்கள்.
தலைவனுக்காக தொண்டர்கள் தீ குளித்து தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டது மட்டுமல்ல; தலைவரின் குடும்பத்திலேயே ஒருவர் தீ குளித்து இறந்து போனதும் மறுமலர்ச்சி தி.மு.க.வில் மட்டும் தான் நிகழ்ந்தது.
மறுமலர்ச்சி தி.மு.க.வின் தொண்டர் ஒருவர் தீ குளித்து விட்டார் என்ற செய்தி ஒவ்வொரு முறையும் தலைவர் வைகோ அவர்களின் செவிகளுக்கு எட்டியபோது, அவர் அடைந்த துயரத்தை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அடக்க முடியாத கண்ணீரோடு அவர்களின் இறுதி நிகழ்வில் பங்கேற்றவர் நம் தலைவர். எத்தனை சோதனைகள் வந்தாலும் இப்படி ஒரு முடிவுக்கு எந்த தொண்டனும் சென்றுவிடக் கூடாது என்று கண்டிப்போடும், கவலையோடும் சொன்னவர் நம் தலைவர் வைகோ அவர்கள். அவர்களின் குடும்பங்களை எண்ணி கவலைப்படுபவர். ஆயிரம் மேடைகளில் அவர்களின் உயிர்த்தியாகத்தை தலைவர் நினைவுகூர்ந்திருப்பார். கட்சியால் இயன்ற நிதியை அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கி இருக்கிறார்.
நான் அரசியலுக்கு வந்தபிறகு, தலைவர் வைகோ அவர்களுக்காக, உயிர்த்தியாகம் செய்த தொண்டர்களின் குடும்பங்கள் பற்றி பல முறை சிந்தித்து இருக்கிறேன்.
அவர்களின் தற்போதைய நிலை எப்படி இருக்கிறது? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்பது குறித்து எண்ணிக் கொண்டே இருந்தேன்.
அந்தக் குடும்பங்களின் தற்போதைய உண்மை நிலை குறித்து அறிய, ஒரு நபரை அனுப்பி அவர்கள் குறித்து ஆய்வு செய்ய சொல்லி இருந்தேன். கிட்டத்தட்ட அனைத்துக் குடும்பங்கள் பற்றியும் அறிய நேர்ந்தது.
ஒருசில குடும்பங்களைத் தவிர, மற்றக் குடும்பங்களின் நிலை அறிந்து மனம் உடைந்து போனேன். மிகவும் வருந்தினேன்.
தலைவருக்காக உயிர்த்தியாகம் செய்த தொண்டர்களை மட்டுமல்ல. அவர்களின் குடும்பங்களையும் என்றைக்கும் நான் மறக்க மாட்டேன்.
அவர்களின் தியாகத்தை நன்றியோடு எண்ணிப் பார்க்கிறேன்.
நான் தமிழகம் வந்தபிறகு, அந்தக் குடும்பங்களை நேரில் சென்று சந்திக்க இருக்கிறேன். அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில், அந்தக் குடும்பங்களுக்கு நேரில் கண்டு
தரிசிக்கத் திட்டமிட்டு இருக்கிறேன்.
மறுமலர்ச்சி திமுக எனும் மாபெரும் விருட்சம் உருவாக விதையாகிப் போன தியாக தீபங்களின் குடும்பங்களுக்கு
இயன்ற உதவிகளை செய்யவும் எண்ணியிருக்கிறேன்.
பலரின் உயிர்த்தியாகத்தால் இந்த மண்ணில் மலர்ந்த இயக்கம் மறுமலர்ச்சி தி.மு.க.!
உயிர்த்தியாகம் செய்தவர்களையும், அவர்களின் குடும்பங்களையும் மறுமலர்ச்சி தி.மு.க என்றும் மறக்காது. கைவிடாது.
அவர்களின் இல்லம் தேடி விரைவில் வருகிறேன்..!
அன்புடன்
துரை வைகோ
தலைமைக் கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
24.07.2022

நீர் மற்றும் சுகாதாரத் துறை குறித்த வைகோவின் கேள்விகளுக்கு மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் பதில்!

கேள்வி எண்-105

நீர் மற்றும் சுகாதாரத் துறை குறித்து, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் வைகோ அவர்கள் கீழ்காணும் கேள்விகளை எழுத்து மூலமாக எழுப்பியிருந்தார். அதற்கு 18.07.2022 அன்று நடுவண் இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் அவர்கள் பதில் அளித்திருக்கிறார்.
(அ) நீர் ஆதாரத் திட்டம் மீதான தேசிய பயிலரங்கில், அதன் நீண்ட கால நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, நீர் வழங்கல் உள்கட்டமைப்பு மற்றும் சேவை வழங்கல் ஆகியவற்றின் மக்களின் உரிமையை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதா?
(ஆ) அப்படியானால், அதன் விவரங்கள் தேவை.
(இ) கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில், நீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது மட்டுமல்லாது, கிராமப் பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து ஒன்றியங்கள் மூலம் நீர் விநியோகத் திட்டம் செயல்படுத்தப்படுமா?
(ஈ) அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
நீர்வளத்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் பதில்:
(அ) முதல் (ஈ): நீர் ஆதாரத் திட்டம் (ஜல் ஜீவன் மிஷன்) தேவைக்கேற்ப விரிவாக்கப்பட்டு, வழிகாட்டு முறைப்படி மக்களைச் சென்றடையும் வகையில், நீர்வளங்கள் உள்கட்டமைப்பின் திட்டத்தைச் செயல்படுத்த, மேலாண்மை மற்றும் பராமரிப்புப் பணிகளில் மக்களின் பங்களிப்பை வலியுறுத்துகிறது.
தகவல் தொடர்புகள், ஆய்வுக் கூட்டங்கள், தேசிய/மாநில மாநாடுகள், பயிலரங்கங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் களப் பார்வைகள் போன்றவற்றின் மூலம் நீண்ட கால சேவை வழங்குவதற்கான உள்கட்டமைப்பில் மக்களின் உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
மேலும் இது மக்கள் இயக்கமாக உருவாக்க பெரிய அளவில் பொது மக்களை அணிதிரட்டுமாறு வலியுறுத்துகிறது. மேலும், உரிமை மற்றும் உணர்வைக் கொண்டுவர, பொதுமக்கள் பங்களிப்பு வேண்டும்.
இது மலை மற்றும் வனப்பகுதியில் வாழும் 50% க்கும் அதிகமான ஆதிதிராவிட கிராமங்களில் நீர் விநியோக உள்கட்டமைப்புக்கான மூலதனச் செலவு 5% ஆகும். பழங்குடியின மக்கள் வாழும் கிராமங்கள் மற்றும் மீதமுள்ள கிராமங்களில் 10%. திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டும்.
திட்டங்கள் நீண்ட காலம் நிலைத்து இருக்கவும், எதிர்பாராத செலவினங்களைச் சந்திக்கவும் சுழல் நிதியாக, கிராமப்புற உள்கட்டமைப்பு செலவில் 10% பொதுமக்கள் சேவைக்கு அளிக்கப்படும். பொதுமக்கள் வைப்புத் தொகை செய்யப்படும் பஞ்சாயத்துகளுக்கு ஊக்கத்தொகை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீர் ஆதாரத் திட்டச் செயல்பாட்டு வழிகாட்டுதல்களில் உள்ளபடி, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கிராம பஞ்சாயத்தின் துணைக் குழுவை அமைக்க வேண்டும். அதாவது கிராம நீர் மற்றும் சுகாதாரக் குழு (VWSC)/ நீர் ஆதாரக் குழு/ பயனீட்டாளர் குழு போன்றவை பங்கேற்பை உறுதிசெய்ய குறைந்தபட்சம் 50ரூ பெண் உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். கிராமங்களில் நீர் ஆதாரத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு வசதியாக, கிராம பஞ்சாயத்துக்கள், கிராம நீர் மற்றும் சுகாதாரக் குழுக்கள் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
நீர் ஆதாரத் திட்டம் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் கிராமப் பஞ்சாயத்து அல்லது அதன் துணைக் குழுவால் செயல்திட்டத்தை (VAP) தயாரிப்பதுடன், செயல்படுத்துதல் ஆதரவு முகமைகள் (ISAS), பொது சுகாதார பொறியியல் / ஊரக நீர் வழங்கல் துறை, மாவட்ட நீர் மற்றும் சுகாதார இயக்கம் (DWSM) ஆகியவற்றின் ஆதரவுடன் அடிப்படைக் கணக்கெடுப்பு, ஆதார வரைபடங்கள் மற்றும் கிராம மக்களின் தேவைகளை உணர்ந்தது, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், பல்வேறு கட்டங்களில் கிராம செயல் திட்டங்களை தயாரிப்பதற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பல்வேறு நிலைகளில் நடைபெற்ற மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடனான நீர் ஆதாரக் குழுவின் ஆய்வுக் கூட்டங்களின் போது, கிராம நீர் மற்றும் சுகாதாரக் குழு, நீர் ஆதாரக் குழு உருவாக்குவதில் ஏற்பட்ட முன்னேற்றம், கிராம செயல் திட்டங்களைத் தயாரித்தல் ஆகியவையும் இந்தத் துறையால் கண்காணிக்கப்படுகின்றன. 13.07.2022 அன்று மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் அறிவிக்கப்பட்ட 6,01,463 கிராமங்களில், 5,02,414 கிராமங்களில் கிராம பஞ்சாயத்து துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு 4,56,946 கிராம செயல்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
22.07.2022

Saturday, July 23, 2022

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தால் பாதிக்கப்பட்ட ரயில் சேவைகள் மீண்டும் செயல்படுத்தப் படுகின்றனவா? வைகோ கேள்விக்கு அமைச்சர் பதில்!

கேள்வி எண். 74

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட ரயில் சேவைகள் குறித்து 22.07.2022 அன்று மாநிலங்கள் அவையில் வைகோ எழுப்பிய கேள்விகள்:-
(அ) அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் மற்றும் போராட்டக்காரர்களால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதா?
(ஆ) அப்படியானால், அதன் விவரங்கள், மாநில வாரியாக வேண்டும்.
(இ) மேற்கண்ட போராட்டத்தின் காரணமாக எத்தனை ரயில்கள் ரத்து செய்யப்பட்டன? மற்றும் எந்த காலத்திற்கு ரத்து செய்யப்பட்டன?
(ஈ) ரயில்களை ரத்து செய்ததாலும், திருப்பி விட்டதாலும் ரயில்வேக்கு ஏற்பட்ட இழப்பு, பயணிக்கும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்பைத் தவிர; மற்றும்
(உ) அனைத்து ரயில் சேவைகளும் சீரமைக்கப்பட்டுவிட்டதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?
இரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் 22.07.2022 அன்று மாநிலங்கள் அவையில் அளித்த பதில்:-
(அ) முதல் (உ) வரை உள்ள கேள்விகளுக்கு பதில்: அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் காரணமாக 62 இடங்களில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. 15.06.2022 முதல் 23.06.2022 வரை மொத்தம் 2132 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அக்னிபத் அறிவிக்கப்பட்ட பிறகு நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக ரயில் சேவைகள் சீர்குலைந்ததால் பயணிகள் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான தனித் தரவு பராமரிக்கப்படவில்லை. இருப்பினும், 14.06.2022 முதல் 30.06.2022 வரையிலான காலகட்டத்தில், ரயில்கள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக தோராயமாக 102.96 கோடி திருப்பி வழங்கப்பட்டது. அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் ரயில்வே சொத்துக்கள் சேதம் / அழிவு காரணமாக 259.44 கோடி இழப்பு ஏற்பட்டது. அக்னிபத் போராட்டத்தின் காரணமாக ரத்து செய்யப்பட்ட அனைத்து ரயில் சேவைகளும் தற்போது இயங்குகின்றன.
இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
23.07.2022

உக்ரைன் போர் குறித்து விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இந்திய வாக்களித்ததா? வைகோ கேள்வி அமைச்சர் பதில்!

கேள்வி எண்.537

(அ) ரஷ்ய துருப்புக்கள், உக்ரைனில் செய்த கடுமையான உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் விசாரணை நடத்தும் தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களித்ததா?
(ஆ) இல்லையெனில், வாக்களிப்பதில் இருந்து விலகுவதற்கு இந்தியா தேர்ந்தெடுத்ததற்கு காரணங்கள் என்ன? சித்திரவதை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான அடக்குமுறை, நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்ட மரணதண்டனை போன்ற மனித உரிமை மீறல்களில் உண்மையைக் கண்டறிவதற்காக தீர்மானம் கொண்டுவரப்பட்டதா?
(இ) ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவும், பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தவும் தூதரக முயற்சிகள் மற்றும் உயர்மட்ட பேச்சுவார்த்தை மூலம் இந்தியா எடுத்த நடவடிக்கை என்ன?
மேற்கண்ட வைகோ அவர்களின் கேள்விகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் 21.07.2022 அன்று அளித்த பதில்:
(அ) ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 49 ஆவது அமர்வு, மார்ச் 2022 இல் நடைபெற்றது. அதில், ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையத்தை அவசரமாக நிறுவுவதற்கு வாக்கெடுப்பு மூலம் ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.
மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் மீறல்கள், தொடர்புடைய குற்றங்கள், துஷ்பிரயோகங்களின் உண்மைகள், சூழ்நிலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான மூல காரணங்கள் குறிப்பாக தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவந்து அதை உறுதிப் படுத்துதல் அடங்கிய தீர்மானம்.
(ஆ) & (இ) எங்கள் கொள்கையின் பார்வையிலும், இராஜதந்திர நடவடிக்கை மற்றும் அங்கு நிலவும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும் இந்தியா தீர்மானத்தில் வாக்களிக்கவில்லை.
உக்ரைனில் மோதல்கள் தொடங்கியதில் இருந்தே, உடனடியாக சண்டை நிறுத்தம், வன்முறையை நிறுத்தம் வேண்டும் என்றும் இந்தியா தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது. உக்ரைன் பிரதமர் மற்றும் ரஷ்யாவின் அதிபருடன் பலமுறை பேசி, இந்தியா தனது நிலைப்பாட்டை தெரிவித்து உள்ளது.
பேச்சுவார்த்தையின் மூலம் சமாதான பாதைக்குத் திரும்புமாறு இரு தரப்பினருக்கும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து இராஜதந்திர முயற்சிகளுக்கும் இந்தியா தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கும் இந்தியா மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது. இது தொடர்பாக, மாண்புமிகு வெளிவிவகார அமைச்சர் அவர்களால் மார்ச் 15, 2022 மற்றும் ஏப்ரல் 06, 2022 அன்று நாடாளுமன்றத்தில் முறையே இரண்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.
இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
23.07.2022

Thursday, July 21, 2022

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை குறித்து வைகோ MP கேள்விகள். அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதில்!

கேள்வி எண். 15

அ) நகர்ப்புறங்களில் உள்ள வேலையில்லாதவர்களுக்காக ராஜஸ்தானில் தொடங்கப்பட்ட இந்திரா காந்தி நகர்ப்புற வேலை உறுதித் திட்டம் பற்றி அரசாங்கம் அறிந்திருக்கிறதா?

ஆ) அப்படியானால், அத்தகைய 100 நாள் வேலை வழங்கும் திட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் பரிசீலிக்கிறதா?

இ) நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்ட நாட்கள் எவ்வளவு?

உ) அப்படியானால், அதன் விவரங்கள் தேவை.

ஈ) நகர்ப்புறங்களில் உள்ள கோடிக்கணக்கான ஏழை வேலையில்லாத மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்டுள்ள மாற்று வழி, அதன் விவரங்கள் என்ன?

என்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்திடம் நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, 18.07.2022 அன்று அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்கள் அளித்த பதில் வருமாறு:-

(அ): இந்திரா காந்தி நகர்ப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ், நகர்ப்புறங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு வருடத்தில் 100 நாட்கள் வேலை வழங்குவதற்காக ராஜஸ்தான் மாநில அரசு 2022-23  பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.

(ஆ) & (இ): நகர்ப்புறங்களில் திட்டம் இல்லை.

(ஈ): கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்திற்காக கிராமப்புற மற்றும் சிறிய நகர்ப்புறங்களில் இருந்து மக்கள் இடம்பெயர்வதன் மூலம் நகர்ப்புறத்தில் வறுமை அதிகரித்துள்ளது.

இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க இந்திய அரசு, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (DAY NULM), நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் வறுமை மற்றும் பாதிப்பைக் குறைக்க, அவர்கள் ஆதாயமான சுயவேலைவாய்ப்பு மற்றும் திறமையான கூலி வேலை வாய்ப்புகளை அணுகுவதன் மூலம், அவர்களின் வாழ்வாதாரத்தை நிலையான அடிப்படையில் மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படுகிறது.

கொரோனா காலத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்ட தங்கள் வணிகத்தை மீண்டும் தொடங்கும் வகையில், தெருவோர வியாபாரிகளுக்கு, நகர்ப்புறங்களில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறு கடன்களை எளிதாக்குவதற்காக, பிரதமர் தெரு வியாபாரிகளின் அத்மா நிர்பர் நிதி (PM SVANidhi) திட்டத்தை ஜூன் 01, 2020 முதல் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தெரு வியாபாரிகள் ரூ. 10,000 வரை மூலதனக் கடனைப் பெறலாம். முந்தைய தவணையைத் திருப்பிச் செலுத்தியவர்கள் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணைகளில் முறையே ரூ. 20,000 மற்றும் ரூ. 50,000 கடன்களைப் பெறலாம்.

மேலும், நகர்ப்புற மக்களின் பொருளாதார பற்றாக்குறையைப் போக்க, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - திட்டம் (PMAY-U) செயல்படுத்தப்படுகிறது; புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன் (AMRUT) திட்டம் மூலம் அடிப்படை சேவைகளை வழங்குவதற்கும் நகரங்களில் வசதிகளை உருவாக்குவதற்கும், குறிப்பாக ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்கள் அனைவருக்கும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.

ஸ்வச் பாரத் மிஷன் - குப்பை இல்லாத சுற்றுப்புறங்களுக்கான (SBM-U); தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் மூலம் (NUHM) நகர்ப்புற மக்களுக்கு சமமான மற்றும் தரமான ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்குவதற்காக குடிசைகள் மற்றும் பாதிக்கப்படக் கூடிய மக்கள் மீது சிறப்பு கவனம் செலுத்துகிறது;

வணிகம் சம்பந்தப்பட்ட படிப்புகளில் திறன் பயிற்சி அளிப்பதற்காக ஸ்கில் இந்தியா மிஷன்; சமக்ரா சிக்ஷா அபியான் (SSA) ஆகியவற்றின் மூலம் சமமான தரமான கல்வி ஆகியவற்றை உறுதி செய்கிறது.

இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

தலைமை நிலையம்

மறுமலர்ச்சி தி.மு.க.

சென்னை - 8

‘தாயகம்’

21.07.2022