தமிழர்களை இரத்த வேட்டையாடிய கோத்தபயாக்கள் எங்கே? அடைக்கலம் தேடி ஒவ்வொரு நாட்டின் கதவையும் தட்டிக்கொண்டு இருக்கிறார்கள். வினை விதைத்தவர்கள் வினையை அறுவடை செய்கிறார்கள்.
இலங்கை நிலைமை குறித்து, 19.07.2022 அன்று மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இந்திய அரசு ஏற்பாடு செய்தமைக்கு வாழ்த்துகிறேன்.
இப்படிப்பட்ட கூட்டங்களை ஒன்றிய அரசு இதுவரை நடத்தியது இல்லை. கோத்தபய ராஜபக்சேவை அதிபர் பொறுப்பிலிருந்து விரட்ட வேண்டும் என்று கலகக் கொடி உயர்த்திப் போராடியதற்கு ஜூலை 9 ஆம் தேதி இந்திய அரசு ஆதரித்து அறிக்கை கொடுத்தது சரியான நிலைப்பாடாகும்.
இலங்கை மக்கள், நபர்களை மாற்றினால் போதும் என்று போராடவில்லை. அரசியல் சட்டத்தையே மாற்ற வேண்டும் என்று போராடுகிறார்கள்.
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை ஆளாகிறது. கொரோனா வந்தது; சுற்றுலா காணாமல் போனது; ஜவுளி உற்பத்தி ஏற்றுமதி வீழ்ந்தது; உரங்களுக்கு அரசு தடை கொண்டு வந்தது; தேயிலை உற்பத்தி வீழ்ச்சி அடைந்தது. இதற்கெல்லாம் கொரோனா காரணம் அல்ல; மூல காரணம் வேறு ஒன்றாகும்.
இலங்கைத் தீவு இரண்டு தேசங்களைக் கொண்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர்கள் தனி அரசு அமைத்து ஆண்டு வந்தார்கள். போர்ச்சுக்கீசியர்களும், டச்சுக்காரர்களும் பின்னர் பிரித்தானியர்களும் அந்தத் தீவைக் கைப்பற்றினார்கள். பிரித்தானியர்கள் வெளியேறும்போது சிங்களவர்கள் நுகத்தடியில் தமிழர்களை அடிமையாக்கி விட்டார்கள். தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டார்கள். மொழி உரிமையை இழந்தார்கள். வேலை வாய்ப்பில் மறுக்கப்பட்டார்கள். தந்தை செல்வா தலைமையில் சம உரிமை கேட்டு காந்திய வழியில் ஈழத்தமிழர்கள் அறப்போராட்டம் நடத்தினார்கள். அதற்குச் சிங்கள அரசு கொடுத்த விடை லத்திக் கம்புகளும், துப்பாக்கிக் குண்டுகளும்தான்.
தங்கள் சக்திக்கு மீறி இராணுவத்துக்கு சிங்கள அரசு செலவு செய்ததுதான் இன்றைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் ஆகும். சக்திக்கு மீறி இராணுவத்துக்கு இவர்கள் எதற்காக செலவு செய்ய வேண்டும்? எந்த நாடு படையெடுத்து வருகிறது? ஒருவரும் இல்லை.
தமிழர்களை நசுக்குவதற்காக இராணுவத்தை வலுப்படுத்தினார்கள். பல நாடுகளிலிருந்து ஆயுதங்களைப் பெற்றார்கள். ஈழத் தமிழர்கள் குடியிருப்பு முழுவதும் இராணுவ மயம்தான். சிங்கள இராணுவம் இனப்படுகொலை செய்தது. தமிழர் பகுதிகளில் இராணுவத்தைக் குவித்து வைத்திருக்கிறது. ஒவ்வொரு தமிழர் வீட்டுக்கு முன்பும் சிங்களச் சிப்பாய் துப்பாக்கியுடன் நிற்கிறான்.
இராணுவம் அங்கிருந்து வெளியேற வேண்டும். வடக்கு - கிழக்கு மாகாணங்கள் ஒன்றாகச் சேர்க்கப்பட வேண்டும். தமிழர்களுக்கு சுயநிர்ணயம் வேண்டும். இவை எல்லாம் செய்தால்தான் இலங்கையில் அமைதி காண முடியும்.
இவ்வாறு வைகோ MP அவர்கள் உரையாற்றினார்கள்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.
சென்னை - 8
‘தாயகம்’
20.07.2022
No comments:
Post a Comment