Saturday, July 16, 2022

சீமைக் கருவேல மரங்களை அகற்ற அரசாணை! வைகோ MP வரவேற்பு!

சீமைக் கருவேல மரங்கள் காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சுவதுடன், உயிர்க் காற்றையும் உறிஞ்சிக் கொண்டு கரிக்காற்றை வெளியிடுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் கெடுகிறது. இதன் வேர்கள் மண்ணுக்குள் ஆழமாக ஊடுருவி நிலத்தடி நீரை மொத்தமாக உறிஞ்சிக் கொள்ளும். சீமைக் கருவேல மரங்களால் மண்ணில் நச்சுத்தன்மை அதிகரித்து, அதன் அருகில் உள்ள நிலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் பயிர் சாகுபடி செய்யும் தன்மையை அந்த நிலங்கள் இழக்கின்றன.

மனித வாழ்க்கைக்கும், கால்நடைகளுக்கும், விவசாய நிலங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் முற்றாக கேடு விளைவிக்கும் தன்மை கொண்ட சீமைக் கருவேல மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நான் ரிட் மனு தாக்கல் செய்தேன்.

இந்த வழக்கு நீதியரசர்கள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோரை கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நானே நேர் நின்று சீமைக் கருவேல மரங்களினால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைத்து வாதாடினேன்.

இந்த வழக்கில் நீதியரசர்கள் 2017, ஜனவரி 10 ஆம் தேதி அளித்த உத்தரவில், நீதிமன்றத்தின் எல்லைக்கு உட்பட்ட 13 மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சீமைக் கருவேல மரங்களை அகற்றுகின்றப் பணியை விரைவாகச் செய்து முடிக்க வேண்டும் என்றும், மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட நீதிபதிகளின் மேற்பார்வையில் இப்பணி நடக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

மீண்டும் இவ்வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 2017, பிப்ரவரி 26 ஆம் நாள் நீதியரசர்கள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் நடந்தபோது, சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெறவில்லை. சாலையோரங்களில் உள்ள பகுதிகளில் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன. ஊருக்குள் உள்ள நிலங்களில் கருவேல மரங்கள் அப்படியேதான் உள்ளன என்று நான் எடுத்துரைத்தேன்.

இதை அடுத்து நீதிபதிகள், “தமிழகம் 75 விழுக்காடு கருவேல மரங்களால் சூழப்பட்டுள்ளது. இதில் 10 விழுக்காட்டுக்கும் குறைவாகவே மட்டுமே கருவேல மரங்கள் அகற்றப்பட்டு உள்ளன.

ஒரு சில மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கருவேல மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் உள்ளனர். இது அவர்களின் பொறுப்பேற்ற தன்மையைக் காட்டுகிறது “ என்று குறிப்பிட்டனர்.

மேலும் கருவேல மரங்களின் தீமைகளைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் சீமைக் கருவேலத்துக்கு தடை விதிப்பது மற்றும் அபராத உட்பிரிவுகளுடன் சேர்ந்த புதிய சட்டத்தை தமிழக அரசு இரண்டு மாதங்களில் இயற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

ஆனால் கடந்த அஇஅதிமுக ஆட்சியில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டன.

சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வருகின்றது.

இந்த வழக்கு ஏப்ரல் 4, 2022 அன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மாநிலம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வரைவுக் கொள்கை தயாரிக்கப்பட்டு, பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன. வரைவுக் கொள்கையை இறுதி செய்து அறிவிக்க 8 வார காலம் அவகாசம் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழக வனத்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் “தமிழ்நாட்டில் 700 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கான முன்னோடி திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்துக்காக ரூ 5.35 கோடி நிதி ஒதுக்க நிதித்துறை சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 200 ஹெக்டேர் பரப்பிலான சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்படும்.

சீமைக் கருவேல மரங்களை பத்து ஆண்டுகளில் படிப்படியாக, முழுமையாக அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதற்கு அடுத்த 5 ஆண்டுகளில் சீமைக் கருவேல மரங்கள் மீண்டும் வளராமல் கண்கானிக்கும் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

மீண்டும் இந்த வழக்கு நேற்று (ஜூலை 14) சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்க்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு சார்பில், சீமைக் கருவேலம் உள்ளிட்ட அன்னிய மரங்களை அகற்றி சுற்றுச்சூழலை மீட்டெடுப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்து அரசாணை பிறப்பித்துள்ளது என்று கூறி ஜூலை 13 ஆம் தேதியிட்ட அரசாணையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை முற்றாக அகற்ற கொள்கை முடிவை மேற்கொண்டு அதற்கான அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதை வரவேற்கிறேன்.
தமிழகத்தைப் பற்றி படர்ந்து நாசமாக்கி வரும் சீமைக் கருவேல மரங்கள் முழுதாக ஒழிக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கொண்ட சட்டப் போராட்டங்கள் வெற்றி அடைந்து இருக்கின்றது. தமிழ்நாட்டின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் மதிமுக என்றும் பாடுபடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச்செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
15.07.2022

No comments:

Post a Comment