Sunday, July 24, 2022

தலைவர் வைகோ அவர்களுக்காக உயிர்த்தியாகம் செய்த தொண்டர்களின் இல்லம் தேடி வருகிறேன் - துரை வைகோ!

இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களுக்காக, தங்கள் தேகத்தை தீக்கிரையாக்கிய நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை காமராசபுரம் பாலன் ஆகியோரது உயிர்த்தியாகத்தால் உருவான இயக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.

28 ஆண்டுகள் உருண்டோடி விட்டது.
அதைப்போல, தலைவர் வைகோ அவர்கள் 'பொடா' எனும் கொடிய அடக்குமுறைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டபோது, அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்தநல்லூர் அறிவழகன் தீ குளித்து உயிர்த்தியாகம் செய்தார்.
தலைவர் வைகோ அவர்கள், தமிழ் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தன்னை வருத்திக் கொண்டு இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்தும் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தில் சிவகாசி ரவியும்,
தலைவர் வைகோ அவர்களை கேலி செய்து அபாண்டமான அவதூறுகளை சில வீணர்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பரப்பி வந்ததை தாங்கிக் கொள்ள இயலாமல் மனம் உடைந்து பெருமாள்பட்டி சரவண சுரேஷூம் தீ குளித்து இறந்தார்கள்.
ஒரு தலைவனின் மீது கொண்ட அதீத பற்றால், உணர்வால் அந்தத் தலைவனுக்காக தங்கள் உயிரையும் தருவதற்கு துணிந்த தொண்டர்கள் மறுமலர்ச்சி தி.மு.க.வில் இருக்கிறார்கள்.
தலைவனுக்காக தொண்டர்கள் தீ குளித்து தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டது மட்டுமல்ல; தலைவரின் குடும்பத்திலேயே ஒருவர் தீ குளித்து இறந்து போனதும் மறுமலர்ச்சி தி.மு.க.வில் மட்டும் தான் நிகழ்ந்தது.
மறுமலர்ச்சி தி.மு.க.வின் தொண்டர் ஒருவர் தீ குளித்து விட்டார் என்ற செய்தி ஒவ்வொரு முறையும் தலைவர் வைகோ அவர்களின் செவிகளுக்கு எட்டியபோது, அவர் அடைந்த துயரத்தை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அடக்க முடியாத கண்ணீரோடு அவர்களின் இறுதி நிகழ்வில் பங்கேற்றவர் நம் தலைவர். எத்தனை சோதனைகள் வந்தாலும் இப்படி ஒரு முடிவுக்கு எந்த தொண்டனும் சென்றுவிடக் கூடாது என்று கண்டிப்போடும், கவலையோடும் சொன்னவர் நம் தலைவர் வைகோ அவர்கள். அவர்களின் குடும்பங்களை எண்ணி கவலைப்படுபவர். ஆயிரம் மேடைகளில் அவர்களின் உயிர்த்தியாகத்தை தலைவர் நினைவுகூர்ந்திருப்பார். கட்சியால் இயன்ற நிதியை அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கி இருக்கிறார்.
நான் அரசியலுக்கு வந்தபிறகு, தலைவர் வைகோ அவர்களுக்காக, உயிர்த்தியாகம் செய்த தொண்டர்களின் குடும்பங்கள் பற்றி பல முறை சிந்தித்து இருக்கிறேன்.
அவர்களின் தற்போதைய நிலை எப்படி இருக்கிறது? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்பது குறித்து எண்ணிக் கொண்டே இருந்தேன்.
அந்தக் குடும்பங்களின் தற்போதைய உண்மை நிலை குறித்து அறிய, ஒரு நபரை அனுப்பி அவர்கள் குறித்து ஆய்வு செய்ய சொல்லி இருந்தேன். கிட்டத்தட்ட அனைத்துக் குடும்பங்கள் பற்றியும் அறிய நேர்ந்தது.
ஒருசில குடும்பங்களைத் தவிர, மற்றக் குடும்பங்களின் நிலை அறிந்து மனம் உடைந்து போனேன். மிகவும் வருந்தினேன்.
தலைவருக்காக உயிர்த்தியாகம் செய்த தொண்டர்களை மட்டுமல்ல. அவர்களின் குடும்பங்களையும் என்றைக்கும் நான் மறக்க மாட்டேன்.
அவர்களின் தியாகத்தை நன்றியோடு எண்ணிப் பார்க்கிறேன்.
நான் தமிழகம் வந்தபிறகு, அந்தக் குடும்பங்களை நேரில் சென்று சந்திக்க இருக்கிறேன். அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில், அந்தக் குடும்பங்களுக்கு நேரில் கண்டு
தரிசிக்கத் திட்டமிட்டு இருக்கிறேன்.
மறுமலர்ச்சி திமுக எனும் மாபெரும் விருட்சம் உருவாக விதையாகிப் போன தியாக தீபங்களின் குடும்பங்களுக்கு
இயன்ற உதவிகளை செய்யவும் எண்ணியிருக்கிறேன்.
பலரின் உயிர்த்தியாகத்தால் இந்த மண்ணில் மலர்ந்த இயக்கம் மறுமலர்ச்சி தி.மு.க.!
உயிர்த்தியாகம் செய்தவர்களையும், அவர்களின் குடும்பங்களையும் மறுமலர்ச்சி தி.மு.க என்றும் மறக்காது. கைவிடாது.
அவர்களின் இல்லம் தேடி விரைவில் வருகிறேன்..!
அன்புடன்
துரை வைகோ
தலைமைக் கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
24.07.2022

No comments:

Post a Comment