கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து கப்பல் மூலமாக கனடாவுக்கு அழைத்துச் செல்கிறோம் என்று சிங்கள இந்திய ஏஜென்ட்கள் பல லட்சக்கணக்கான ரூபாயைப் பெற்றுக் கொண்டு, 38 ஈழத் தமிழர்களை இலங்கையில் இருந்து படகில் ஏற்றி வந்து, கர்நாடக மாநிலம் மங்களூரில் ஏமாற்றி விட்டு விட்டு சென்று விட்டனர்
அதற்கு பின்னர் 10.06.2021அன்று இவர்களை கர்நாடக காவல்துறை கைது செய்து, மங்களூர் சிறையில் அடைத்தனர். வெளிநாட்டவர்கள் என்பதால் தேசிய புலனாய்வு பிரிவு விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்க சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தேசிய புலனாய்வுப் பிரிவு இவர்களை விசாரணை செய்து, இவர்கள் குற்றவாளிகள் அல்ல, ஏமாற்றப்பட்டவர்கள். எனவே இவர்களை விடுதலை செய்யலாம் என்று 8.9.2021 அன்று அறிக்கை தாக்கல் செய்தது.
அதற்கு பின்னர் அவர்கள் பெங்களூர் பரப்பன அக்கரகார சிறையில் கொண்டு வந்து சட்ட விரோதமாக அடைத்து வைக்கப் பட்டுள்ளனர்.
மீண்டும் இதுகுறித்து தேசிய புலனாய்வு பிரிவு 30.10.2021 அன்று மறு உத்தரவு பிரபித்ததைத் தொடர்ந்து, நீதிமன்றம் இவர்களை உடனடியாக விடுதலை செய்யலாம் என்று அறிவித்தது.
இதன்பின்னும் தங்களை விடுவிக்காததைக் கண்டித்து இவர்கள் அறவழியில் போராடியதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் திரு மஞ்சுநாத் அவர்கள் இவர்களில் 10 பேரை மட்டும் நீலமங்கலம் சிறப்பு முகாமுக்கு மாற்றம் செய்து உள்ளார்கள். அங்கேயும் சுகாதாரம் இல்லாமல் 10+10 அளவுள்ள சிறிய அறைக்குள் மற்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர். மீதமுள்ள 28 பேரும் பரப்பன அக்ரகார சிறையிலேயே சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இவர்கள் மீது எந்த வழக்கும் இல்லை.
எனவே, பெங்களூர் பரப்பன அக்கரகார சிறையில் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப் பட்டுள்ள தமிழர்களை ஒன்றிய அரசு உடனடியாக விடுதலை செய்து, இலங்கை தூதரகம் மூலம் அவர்கள் தாய் நாடு திரும்ப ஆவன செய்திட வேண்டுகிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
23.09.2022
No comments:
Post a Comment