Wednesday, September 21, 2022

மறுமலர்ச்சி திமுக சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி மறைவு! நிகழ்ச்சிகள் அனைத்தும் இரத்து!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மைப் பிரிவுச் செயலாளரும், புகாரி ஹோட்டல் குழுமங்களின் உரிமையாளர்களில் ஒருவருமான முராத் புகாரி அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேள்விப்பட்டபோது, என் உடம்பெல்லாம் நடுங்கியது. கழகத்தின் ஆணிவேர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் அவர்.


ஒவ்வொரு ஆண்டும் இசுலாமியர்களின் இப்தார் நிகழ்ச்சியை எந்தக் கட்சியிலும் நடத்தாத அளவுக்கு, ஆயிரக்கணக்கான இசுலாமியர்கள் பங்கெடுக்கின்ற நிகழ்ச்சியாக நடத்தி வந்தார்.


ஒவ்வொரு மாவட்டச் செயலாளர் கூட்டத்தன்றும் நண்பகல் உணவைத் தயாரித்துக் கொண்டுவந்து தருவார்.


அழகான தோற்றம் கொண்டவர். மலர்ந்த முகத்தோடு, மாறாத புன்சிரிப்போடு அவர் உலவுகின்ற காட்சி என் கண்ணை விட்டும், நெஞ்சை விட்டும் அகலவில்லை.


நான் எத்தனையோ துக்கங்களைத் தாங்கி இருக்கிறேன். ஆனால் இது பேரிடி போல் என் தலையில் விழுந்துவிட்டது. எப்படி மறப்பேன் அந்த முகத்தை; அவர் பாசத்தை; அவர் காட்டிய எல்லையில்லாத அன்பை. இனி ஒருவரை அப்படிக் காண முடியாது நான்.


கழகத்தால் மூன்று நாட்கள் இந்தத் துக்கம் கடைபிடிக்கப்படும்.


ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படும். 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் ஒத்தி வைக்கப்படும்.


யாரால் எனக்கு ஆறுதல் சொல்ல முடியும். நான் நொறுங்கிப் போய்விட்டேன். பொங்கி வரும் கண்ணீரை என்னால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.


அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


கழகத் தோழர்கள் இந்த அறிவிப்பின்படி துக்கம் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’

சென்னை - 8

21.09.2022

No comments:

Post a Comment