Friday, September 2, 2022

பேரழிவுக்கு எதிரான பேரியக்கத் தலைவர் லெனின் மறைவு. வைகோ MP இரங்கல்!

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களால் தொடங்கப்பட்ட ‘பேரழிவுக்கு எதிரான பேரியக்கம்’ எனும் அமைப்பை, அவரது மறைவுக்குப் பின்னர் தலைமைப் பொறுப்பு ஏற்று வழிநடத்திய க.கா.ரா. லெனின் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

தமிழ்நாட்டின் இயற்கை வளங்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் திட்டங்களை எதிர்த்து தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்தது பேரழிவுக்கு எதிரான பேரியக்கம்.

காவிரிப் படுகையில் மீத்தேன். ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்யக் கோரியும் கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிராகவும், சேலம் எட்டு வழி பசுமைச் சாலை திட்டத்தைக் கைவிடக் கோரியும் லெனின் அவர்கள் தலைமையிலான பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் விவசாயிகளையும், பொது மக்களையும் திரட்டி போராடியது.

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து அதற்கு நான் தடை ஆணை பெற்றபோது அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான விழிப்புணர்வு நடைப்பயணத்தை மதுரையிலிருந்து கம்பம் வரை நான் தொடங்கியபோதும், தேனி மாவட்டத்தில் கிராமம் கிராமமாக பரப்புரைப் பயணம் நடத்தியபோதும் என்னோடு பங்கேற்றவர் லெனின் அவர்கள். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் லெனின் அவர்கள் கலந்து கொண்டு களத்திற்கு வந்தார்.

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக காவிரிப் படுகை மாவட்டங்களில் 2014-ஆம் ஆண்டு நான் மக்கள் சக்தியை திரட்ட விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டபோது பேரழிவுக்கு எதிரான பேரியக்கத்தின் சார்பில் லெனின் அவர்களும் பேராதரவு தந்தார்.

லெனின் நடத்திய போராட்டங்கள், பேரணி, உண்ணாவிரத அறப்போராட்டம், பொதுக் கூட்டங்கள் அனைத்திற்கும் என்னையும் அழைத்து பங்கேற்கச் செய்தார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மரக்காணம் தொடங்கி இராமேஸ்வரம் வரை சுமார் 600 கி.மீ. தொலைவுக்கு மனித சங்கிலிப் போராட்டத்தை ஜூன் 23, 2019 அன்று அனைத்துக் கட்சிகள், விவசாய சங்கங்கள், பொது மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து அதனை வெற்றிகரமாக செயல்படுத்தியதும் லெனின் தலைமையிலான பேரழிவுக்கு எதிரான பேரியக்கம்தான்.

காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுவதற்கும் நம்மாழ்வார் உருவாக்கிய பேரியக்கம்தான் அடித்தளமிட்டது.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் வலதுகரமாக விளங்கிய லெனின் அவர்கள், பொதுவுடமைக் கொள்கையில் உறுதியாக நின்றவர். தமிழர் நலனுக்காக போராட்டக் களத்தில் நின்ற உயர்ந்த இலட்சியவாதி அவர். அவர் ஓர் இயற்கை மருத்துவரும் ஆவார்.

லெனின் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு, அவரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும். பேரழிவுக்கு எதிரான பேரியக்கத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். லெனின் அவர்கள் எந்த இலட்சியங்களுக்காகப் போராடினாரோ அவற்றைத் தொடர்ந்து நிறைவேற்றுவதுதான் நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி ஆகும்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
02.09.2022

No comments:

Post a Comment