Sunday, November 19, 2023

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும். துரை வைகோ வேண்டுகோள்!

எல்லைத் தாண்டி மீன் பிடிக்கச் சென்றதாக கூறி, பாம்பன் மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டு தற்போது அவர்கள் விடுவிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும், அவர்களுடைய படகுகள், மீன்பிடி வலைகள், திசைகாட்டும் கருவிகள் உள்ளிட்ட உடைமைகள் பறிக்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இலங்கை கடற்படையினர் மட்டுமல்லாது கடற்கொள்ளையர்கள் என்ற பெயரில் அந்த நாட்டு குண்டர்களாலும் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றார்கள்.
கடந்த நாற்பது வருடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். தமிழக மீனவர்களின் பலநூறு கோடி ரூபாய் மதிப்பிலான படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டும், அழிக்கப்பட்டும் இருக்கின்றன.
கொரோனா கொடுந்தொற்று காலத்தில் அதிகம் பாதிப்புக்கு உள்ளான சமூகங்களில் மீனவர் சமூகமும் ஒன்று. இயற்கை பேரிடரின் போதும், மீன்பிடி தடைக் காலங்களின் போதும் அவர்களால் கடலுக்குள் செல்ல முடியாது. பல்வேறு சூழல்களை கடந்து மீன்பிடிப்பதற்காக கடலுக்கு செல்லும் போது, இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தால் தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை முற்றிலும் இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் மூழ்கிய போது தமிழக அரசு பலகோடி ரூபாய் மதிப்பிலான உணவு, மருந்து பொருட்களை அனுப்பி உதவியது. அங்குள்ள தமிழர்கள் மட்டுமல்லாது சிங்களவர்களுக்கும் மனிதாபிமான அடிப்படையில் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு உதவியிருக்கிறது. இந்திய அரசு இதுவரை 32,000 கோடி ரூபாய் இலங்கைக்கு கடனுதவி வழங்கியிருக்கிறது. மேலும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவி செய்வதற்கும், உலக வங்கி கடன் வழங்குவதற்கும் இந்தியா சான்றிதழ் வழங்கியிருக்கிறது.
ஆனால், இலங்கை கடற்படை எந்தவித மனிதாபிமானமும் இன்றி தொடர்ந்து தமிழக மீனவர்களை கொன்று குவித்தும், கைது செய்தும், அச்சுறுத்தியும் வருவது வாடிக்கையாகி விட்டது. ஒன்றிய அரசு இதுவரை இப்பிரச்சினையில் தலையிட்டு நிரந்தர தீர்வு காண்பதற்கு முயற்சிக்கவில்லை.
தமிழக மீனவர்களின் நலன்களை பாதுகாப்பது ஒன்றிய அரசின் கடமை.
பேச்சு வார்த்தை பலனளிக்கவில்லை என்றால், இந்திய கடற்பகுதியில் எல்லைத் தாண்டி வரும் இலங்கை கடற்படையினரையும், கடற்கொள்ளையர்களையும் இந்திய அரசு பாரபட்சமின்றி சுட்டு வீழ்த்த வேண்டும். அப்போது தான் இந்தியாவின் மீது இலங்கை அரசுக்கு பயம் வரும்.
தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கும், கைது நடவடிக்கைகளுக்கும் உள்ளாவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும். தமிழர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்டவும், கட்சத்தீவை மீட்கவும் ஒன்றிய அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
'தாயகம்'
சென்னை - 08

Saturday, November 18, 2023

தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றிய பத்து சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். வைகோ MP அறிக்கை!

தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் “மாநில அரசால் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதப்படுத்தும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளைச் சட்ட விரோதம் என அறிவிக்க உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நவம்பர், 10 ஆம் தேதி, இந்த வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அவர்கள், “ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம். ஒருவேளை அது நிதி மசோதாவாக இல்லாமல் இருந்தால் முடிவை நிறுத்தி வைக்கலாம் அல்லது அதில் திருத்தம் மேற்கொள்ள பரிந்துரைத்து அரசுக்கு திருப்பி அனுப்பலாம் அல்லது சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கலாம். ஆனால், எதுவுமே செய்யாமல் காலவரையின்றி மசோதாக்களை கிடப்பில் போட முடியாது” என்றார்.
இதனையடுத்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அந்த நோட்டீஸில், “மக்களின் உரிமைகளைச் சிதைக்கும் வகையில் ஆளுநர் செயல்படுகிறார்” என்ற தமிழக அரசின் மனுவுக்கு பதிலளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நவம்பர் 20 ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது. “மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் அல்லது அவருக்குப் பதிலாக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்” என்றுஉச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200 இன் படி, மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதல் கோரி அனுப்பப்படும் கோப்புகள் மீது அவர் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் முடிவு எடுக்க வேண்டும்
ஆனால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2020 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன் வடிவுகளைக் கூட பரிசீலிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டிருந்தார்.
அதுமட்டுமின்றி, கடந்த ஏப்ரல் மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், “தமிழ்நாடு அரசு அனுப்பிய சட்ட முன் வடிவுகளை நிறுத்தி வைத்தாலே நிராகரிப்பதாக பொருள்” என்று அகந்தையோடு தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 12 சட்ட முன் வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, உச்சநீதிமன்றம் கடுமையான கருத்தை தெரிவித்த உடன் அவசர அவசரமாக 10 சட்ட முன் வடிவுகளையும் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பி இருக்கிறார்.
உடனடியாக தமிழ்நாடு அரசு இன்று நவம்பர் 18 ஆம் தேதி சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தைக் கூட்டி, சட்டப்பேரவை விதி 143 ன் படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனி தீர்மானம் கொண்டு வந்து 10 சட்ட முன் வடிவுகளையும் மீண்டும் நிறைவேற்றி இருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள சட்ட முன்வடிவுகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 200 வது பிரிவின் படி, ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
18.11.2023

Wednesday, November 15, 2023

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா மறைவு - வைகோ MP இரங்கல்!

இந்திய விடுதலை போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், சாதிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டம், விவசாயிகள், தொழிலாளர்கள் நலனுக்கான போராட்டம் என வாழ்நாள் முழுவதும் போராட்டக் களத்தில் நின்று போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா அவர்கள் இன்று மறைந்தார் என்ற செய்தி கேட்டு ஆறாத் துயரம் அடைந்தேன்.

நேற்று முன்தினம் (13.11.2023) மருத்துவமனையில் அவரை சந்தித்து தோழர்களிடமும், குடும்பத்தினர்களிடமும் நலன் விசாரித்தபோது, எப்படியும் அவர் பிழைத்துக் கொள்வார்.
நீண்ட காலம் நம்மோடு வாழ்வார் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன்.
ஆனால் எதிர்பாராத வகையில் அவர் நம்மை விட்டு பிரிந்துவிட்டார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாணவராக அவர் விளங்கியபோது, ஆதிக்க இந்தியை எதிர்த்து களமாடினார்.
தொடர்ந்து மதுரையில் உருவான மாணவர் சங்கத்தின் செயலாளராக பொறுப்பேற்று மொழிக்காகவும், நாட்டுக்காகவும் தொடர்ந்து போராடினார்.
1941 ஆம் ஆண்டில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆதரவாக அமெரிக்கன் கல்லூரியில் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டார்.
இதன் காரணமாக அவரது படிப்பு தொடர முடியாமல் போனது.
கம்யூனிஸ்ட் கட்சியில் தொடக்க காலம் முதலே தொண்டாற்றிய சங்கரய்யா அவர்கள் கட்சி தடை செய்யப்பட்டபோது இரண்டு ஆண்டு காலம் தலைமறைவு வாழ்க்கையில் ஈடுபட்டு கட்சிப் பணியாற்றினார்.
எட்டு ஆண்டு காலம் தன் பொதுவாழ்க்கையில் சிறையில் அடக்குமுறைக்கு ஆளாகி தியாகச் சரித்திரம் படைத்தவர் சங்கரய்யா.
1964 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது கட்சியின் மாநிலக் குழுவில் இடம்பெற்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான தீக்கதிர் நாளிதழின் ஆசிரியராகவும் சங்கரய்யா பணியாற்றினார்.
1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுரை தெற்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு கட்சியின் சட்டமன்றத் துணைத் தலைவராகவும் சங்கரய்யா பணியாற்றினார்.
அதே ஆண்டில் திருவாரூரில் நடைபெற்ற விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் சங்கத்தின் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
1977, 1980 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களிலும் மதுரை கிழக்கு தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டு கட்சியின் சட்டமன்றக்குழு தலைவராக பணியாற்றினார்.
1986 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12 ஆவது மாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடலூரில் 1995 ஆம் ஆண்டில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் தமிழ் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கரய்யா அவர்கள் மறுமலர்ச்சி தி.மு.கழகத்துடன் இணைந்து பல நிகழ்ச்சிகளிலும், போராட்டங்களிலும் கலந்து கொண்டார்.
2021 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ என்ற விருதை தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி பெருமைப்படுத்தியபோது, விருதுடன் சேர்த்து வழங்கிய பத்து லட்சம் ரூபாய் நிதியினை முதல்வரின் கோவிட் நிவாரண நிதிக்கு வழங்கினார் சங்கரய்யா.
இதனைப்போலவே 1972 ஆம் ஆண்டில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான நிதியை அரசு வழங்கியபோது, ‘நாட்டு விடுதலைக்காக நாங்கள் போராடினோம். பென்சன் தொகைக்காக அல்ல’ என்று குறிப்பிட்டு அதனையும் அரசுக்கே திருப்பி வழங்கினார்.
இத்தகைய பல்வேறு சிறப்புக்களின் கொள்கலனாக திகழ்ந்த பெருமைக்குரிய இலட்சியப் போராளியான தோழர் என்.சங்கரய்யா அவர்களின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பாகும்.
ஜனநாயகம் காக்கவும், மதச்சார்பின்மை மதநல்லிணக்கம் பேணவும், தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்கவும் களத்தில் நிற்கும் அனைவருக்கும் நாடு முழுக்க உள்ள தோழர்களுக்கும் போராளித் தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்களின் பிரிவு அளவு கடந்த துயரத்தை அளிக்கிறது.
அவரது பிரிவால் துயரம் அடைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும், சங்கரய்யா அவர்களின் குடும்பத்தினருக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
தாயகம்
15-11-2023.

Wednesday, November 8, 2023

உசிலம்பட்டி - திருமங்கலம் பகுதி விவசாயிகள் நலனுக்காக*வைகை அணை நீரைத் திறந்து விடுக - வைகோ MP அறிக்கை!

உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதியில் போதிய மழை இல்லாததால், அந்தப் பகுதி மக்கள் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

வைகை அணையிலிருந்து திறக்கப்படும் திருமங்கலம் பிரதான கால்வாய் மற்றும் 58 கிராமக் கால்வாய் தண்ணீரால் நூற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்கள், 160 குளங்கள், 200க்கும் மேற்பட்ட ஊரணிகள் நிரம்பும். இதன் மூலம் 28 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் தேவையான குடிதண்ணீர் கிடைக்கும்.

தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் மழையாலும், முல்லைப் பெரியாறு அணை நீராலும் வைகை அணை நிரம்பி உள்ளது.

எனவே, திருமங்கலம், உசிலம்பட்டி பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வைகை அணையிலிருந்து 58 கிராமக் கால்வாய் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாய்களில் தண்ணீரை திறந்துவிடுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8

Tuesday, November 7, 2023

இராமநாதபுரம், அரியலூர் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மேற்கொள்ள ஒன்றிய அரசு முயற்சி! வைகோ MP கண்டனம்!

தமிழ்நாடு அரசு கடந்த 2020ஆம் ஆண்டே காவிரிப் படுகை மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றியுள்ளது. இந்தச் சட்டத்தால் புதிதாக அனுமதி பெற்று எந்த ஹைட்ரோகார்பன் கிணறுகளையும் அமைக்க முடியாது. ஆனால், ஏற்கனவே அனுமதி பெறப்பட்ட கிணறுகள் தொடர்ந்து இயங்குவதை இச்சட்டம் கட்டுப்படுத்தாது.

ஒன்றிய அரசின் புதிய எண்ணெய் எடுப்பு கொள்கையாகிய, ஹெல்ப் (Hydrocarbon Exploration and Licensing Policy - HELP)

அடிப்படையில், மூன்றாவது சுற்று திறந்த வெளி ஏலம்(OALP) மூலம் ஒன்றிய அரசின் ஓ.என்.ஜி.சி (ONGC) நிறுவனம், ராமநாதபுரம் மாவட்டத்தில் 1403.41 சதுர கிலோமீட்டர் பகுதியில் (இதில் தரைபகுதி – 1259.44 மற்றும் ஆழமற்ற கடல் பகுதியில் 143.97 ச.கிமீ.) ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி பெற்றிருந்தது.

தற்போது அந்தப் பகுதியில் 2000 முதல் 3000 மீட்டர் ஆழத்தில் 20 சோதனை கிணறுகளைத் தோண்ட ஓ.என்.ஜி.சி திட்டமிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை மற்றும் கடலாடி வட்டம் மற்றும் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை வட்டம் போன்ற பகுதிகளில் புதிதாக கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி அனுமதி கோரியுள்ளது.

தற்போது அந்தப் பகுதியில் 2000 முதல் 3000 மீட்டர் ஆழத்தில் 20 சோதனை கிணறுகளைத் தோண்ட ஓ.என்.ஜி.சி திட்டமிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகள் அமைக்க சுற்றுசூழல் அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி நிறுவனம் கடந்த 31.10.2023 அன்று விண்ணப்பித்துள்ளது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையில், 2020ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகளுக்கு ஒன்றிய அரசின் அனுமதி அவசியமில்லை.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு, சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம், பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அவசியமில்லை என்றும் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தற்போது விண்ணப்பித்துள்ளது.

மேலும் அரியலூர் மாவட்டத்திலும் 10 ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதிகோரி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தில் அனுமதி கோரி உள்ளது.

ஹைட்ரோகார்பன் கிணறுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான நிபுணர் குழுவும் அரசிடம் அறிக்கை அளித்துள்ளது.

இந்த நிலையில் புதிய கிணறுகளை தமிழ்நாட்டில் அமைப்பதற்கு ஒ.என்.ஜி.சி. முயல்வது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

தமிழ்நாடு அரசு, ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரிப்பதுடன், இராமநாதபுரம் மாவட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒன்றிய அரசு மேற்கொள்ள முயற்சிப்பதை அனுமதிக்கக் கூடாது.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8

Monday, November 6, 2023

அன்னை மாரியம்மாளுக்கு புகழஞ்சலி!

நூறு வயதை நெருங்கிய தள்ளாத நிலையிலும் மதுவுக்கு எதிராக கலிங்கப்பட்டி ஊர் பொதுமக்களை திரட்டி உண்ணா நோன்பிருந்த அன்னை மாரியம்மாள் வையாபுரி அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாளில் இன்று 6-11-2023 காலை 9.30 மணிக்கு சென்னை அண்ணா நகர் இல்லத்தில் தலைவர் வைகோ அவர்களும், துரை வைகோ அவர்களும் மலர் தூவி, வணங்கி புகழ் அஞ்சலி செலுத்தினார்.

வைகோ MP யை சந்தித்த உதயநிதி. NEET விலக்கு கையெழுத்து பெற்றார்!

திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் NEET விலக்கு வேண்டி 50 நாளில் 50 இலட்சம் கையெழுத்து வாங்கும் நிகழ்வாக இன்று 06-11-2023 அன்று மதிமுக கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களிடம் கையெழுத்து பெற்றார்.

உடன் கழக முதன்மை செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

மதுவிலக்கு போராளி அன்னை மாரியம்மாள் பற்றி தலைவர்கள்!

மது விலக்கு போராளி அன்னை மாரியம்மாள் 8 ஆம் ஆண்டு புகழஞ்சலி!

தமிழ்நாடு முழுவதும் 2015 ஆம் ஆண்டு மதுவிலக்கு போராட்டம் தீவரமடைய முதல் தீப்பொறியை கலிங்கபட்டியில் பற்ற வைத்தவரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ அவர்களை பெற்றெடுத்த தாயாகிய அன்னை மாரியம்மாள் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாள் குமரி மாவட்ட மதிமுக அலுவலகத்தில் நாகர்கோவில் மாநகர கழகத்தில் சார்பில் 6-11-2023 மாலை அனுசரிக்க பட்டது.

இதில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வெற்றிவேல் அவர்களும் மாநகர செயலாளர் மரியாதைக்குரிய ஜெரோம் ஜெயக்குமார அவர்களும், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பேராசிரியை ராணி செல்வின் அவர்களும், அகாஸ்தீஸ்வரம் ஒன்றிய கழக செயலாளர் பெரியவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அன்னைக்கு நினைவஞ்சலி செலுத்தினர்..


Monday, August 14, 2023

நீட் தோல்வி தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது? வைகோ MP அறிக்கை!

சென்னை, குரோம்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் செல்வசேகர். இவரது மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19). 2021இல் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து, மருத்துவராகும் கனவுடன் நீட் தேர்வுக்காக பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற்று வந்துள்ளார் ஜெகதீஸ்வரன். இரண்டு முறை தேர்வு எழுதி தோல்வியை தழுவிய காரணத்தால் 12.08.2023 அன்று தற்கொலை செய்து கொண்டார்.

இந்தச் சூழலில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என ஜெகதீஸ்வரன் தந்தை செல்வசேகர் கருத்து தெரிவித்திருந்தார். 

நேற்று ஜெகதீஸ்வரனுக்கு இறுதிச் சடங்கு நடந்தது. நள்ளிரவு வரை உறவினர்களுடன் இருந்த செல்வசேகர்,  மகன் இறந்த மன உளைச்சல் காரணமாக இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஒன்றிய பாஜக அரசின் பிடிவாதமான எதேச்சதிகாரப் போக்கால் தமிழ்நாட்டில் ஒரே குடும்பத்தில் மாணவரும், தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்திருக்கிறது.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தபட்டதிலிருந்து 2017 இல் அரியலூர் அனிதாவில் தொடங்கி இதுவரை ஏறத்தாழ 20 மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் தமிழ் நாட்டில் நீட் தேர்வு தோல்வி காரணமாக தற்கொலைகள்  என்னும் கொடூரச்சாவுகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி எப்போது வைக்கப் போகிறோம்?

மறுபுறம் நீட் தேர்வு விலக்கு மசோதாவில் கையெழுத்து இட மாட்டேன் என்று இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட ஆளுநர் ஆர்.என். ரவி கொக்கரித்துள்ளார். இந்த அறிவிப்பு வந்த நாளில் குரோம்பேட்டை மாணவரும் அவருடைய தந்தையும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

கல்வித்துறையில் மாநில அரசின் உரிமைகளைப் பறித்து ஏக போக ஆதிக்கம் செலுத்தி வரும் ஒன்றிய அரசின் போக்கினால் இன்னும் எத்தனை மாணவர்களின் உயிர்களை இழக்க நேரிடுமோ? என்ற கவலை ஏற்பட்டு உள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட முன்வரைவுக்கு உடனடியாக ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க வலியுறுத்துகிறேன்.

நீட் தேர்வு எழுத முற்படும் மாணவர்கள் தோல்வி பயம் காரணமாக உயிரைப் போக்கிக் கொள்ளும் மனநிலைக்கு ஆளாகக் கூடாது. தற்கொலை என்பது தீர்வாகாது என்பதை மாணவச் செல்வங்கள் மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
14.08.2023

Sunday, August 13, 2023

‘NEET' விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என கொக்கரிக்கும்ஆளுநர் ஆர். என். ரவி வெளியேற்றப்பட வேண்டும். வைகோ MP அறிக்கை!

‘எண்ணித் துணிக' என்னும் தலைப்பில் ஆளுநர் ரவி நடத்தி வரும்  கலந்துரையாடலில்  ‘நீட்' தேர்வில் முதல் 100 இடங்களைப் பெற்ற தமிழக மாணவர்கள், தங்கள் பெற்றோர்களுடன்  நேற்று ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அப்போது சேலத்தைச் சேர்ந்த ஒரு மாணவியின்  தந்தை அம்மாசியப்பன் ராமசாமி என்பவர், ‘நீட் தேர்வில் தேர்ச்சி பெற, மாணவர்களின் பெற்றோர் அதிகம் செலவளிக்க வேண்டியுள்ளது. எனவே நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் அளிப்பீர்கள்? என்று கேள்வி கேட்டுள்ளார். மேலும் அவர் ‘நீட்' தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், அவரிடமிருந்து ஒலி பெருக்கிப்  பறிக்கப்பட்டதாகவும், அவரை மிரட்டும் தொனியில் ஆளுநர் பேசியதாகவும் கூறுப்படுகிறது.

பின்பு அந்த பெற்றோரின் கேள்விக்கு ஆளுநர் ரவி பதிலளிக்கும் போது, “நீட் தேர்வு ரத்துக்கு நான் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன். கல்வி பொதுப் பட்டியிலில் உள்ளது. ‘நீட்’ தேர்வு ரத்து மசோதா, குடியரசுத்தலைவரிடம் உள்ளது. அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய அதிகாரம் அவருக்கு மட்டுமே உள்ளது. அந்த அதிகாரம் எனக்கு இருந்தால், நீட் தேர்வு விலக்கு மசோதாவில் நான் கண்டிப்பாக கையெழுத்து இட மாட்டேன்” என்று ஆணவத்துடன் கொக்கரித்துள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால், சட்டமன்றத்தில் நிறைவேற்றபட்ட மசோதவை  கையெழுத்து இட்டு, குடியரசு தலைவருக்கு அனுப்புவதுதான் அரசியல் சட்ட அமைப்பின் படி ஆளுநருக்கு உள்ள அதிகாரம். அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி, தான்தோன்றித் தனமாக ஆளுநர் ஆர். என். ரவி பேசிவருவது கண்டனத்துக்குரியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக வெளியேற்றப் பட வேண்டும்.

ஏற்கனவே ஆளுநரை நீக்கக் கோரி தமிழ்நாட்டு மக்களிடம் கையெழுத்துப் பெறும் இயக்கத்தை மறுமலர்ச்சி தி.மு.க. நடத்தி வருகின்றது. ஆளுநரின் இந்த ஆணவப்பேச்சு அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்துகிறது.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
13.08.2023

Saturday, August 12, 2023

சட்டங்களின் பெயரை இந்தி, சமஸ்கிருத மொழியில் மாற்றுவதா? சோவியத் ரஷ்யா போல இந்தியா சிதறும். வைகோ MP அறிக்கை!

இந்தியாவில் நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவை ஆங்கிலேயர் காலத்திலிருந்து பின்பற்றப்பட்டாலும், இதில் பல மாற்றங்கள் இடை இடையே செய்யப்பட்டு உள்ளன.

இந்நிலையில், தற்போது மொத்தமாக இதன் பெயர், கூறுகளை மாற்றி திருத்த புதிய சட்ட முன்வரைவு ஒன்றை நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்துள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவை புதிய பெயர் கொண்ட சட்டங்கள் மூலம் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதீய நியாய சன்ஹிதா, குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, இந்திய சாட்சியச் சட்டத்திற்குப் பதிலாக பாரதீய சாக்ஷ்யா என அழைக்கப்படும் என்று இந்த சட்ட திருத்த முன்வரைவில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா என்ற பெயரையே மாற்றத் துடிக்கும் இந்துந்துவ சனாதனக் கூட்டம், இதற்கு முன்னோட்டமாக சட்டங்களில் உள்ள ‘இந்திய’ என்ற பெயரை ‘பாரதீய’ என்று மாற்ற முனைந்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ்.பின்னணியில் இயங்கி வரும் மோடி அரசு, செத்துப் போன சமஸ்கிருத மொழிக்கும், இந்தி மொழிக்கும் செல்வாக்குத் தேட முயற்சிப்பதும், நகரங்கள், ஊர்கள் பெயர்களை மாற்றி வருவதும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.
அதன் உச்சமாக சட்டங்களின் பெயரையும், ஏன் நாட்டின் பெயரையும் மாற்றிட துணிந்து விட்டது.
ஒன்றிய பாஜக அரசின் இந்நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது.
நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். இல்லையேல் சோவியத் யூனியன் நிலைமைதான் இந்தியாவிற்கும் ஏற்ப்படும்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
12.08.2023

பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல். வைகோ MP கண்டனம்!

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பள்ளி ஒன்றில், நான்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவன் சின்னத்துரை, அதே பள்ளியில் பயிலும் சக மாணவர்களால் வீடு புகுந்து அரிவாளால் வெட்டப்பட்டுள்ளார், தடுக்க வந்த அவரது தங்கை சந்திரா செல்வியும் தாக்குதலுக்கு ஆளாகி படுகாயம் அடைந்துள்ளார். இவர்கள் இருவரும், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்கிற தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

மாணவர்கள் முழுமையாக நலம்பெற சிறப்புக் கவனம் செலுத்தி சிகிச்சை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
ஒரே பள்ளியில் பயிலுகின்ற மாணவச் செல்வங்கள் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வோடு சக மாணவர்களிடம் அன்பு செலுத்தி சிறப்பாகக் கல்வி பயின்று, வாழ்வில் முன்னேற வேண்டும் என்கிற இலக்கினை மறந்து, தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு தடைக் கற்களாக இருக்கும் சாதி, மத நச்சு உணர்வுகளால் உந்தப்பட்டு, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வருந்தத்தக்கது. கண்டனத்திற்குரியது.
நெல்லை மாவட்ட காவல்துறை விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளான மாணவர்களைக் கைது செய்து உள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் முழுமையாக நலம்பெறவும், அவர்களை சிறந்த பள்ளியில் சேர்த்து உயர்கல்வி பெறுவதற்கான முழு வாய்ப்புகளை தாமே உருவாக்கித் தரவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தி உள்ளது ஆறுதல் அளிக்கிறது.
சாதி, மத உணர்வுகளால் உந்தப்பட்டு, பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் மாணவர்களை அந்தந்த மாவட்ட கல்வித்துறை கவனமாகக் கண்காணித்து சீர்திருத்திட தேவையான நடவடிக்கைகளை முதல் முன்னுரிமை கொடுத்து எடுத்திட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
12.08.2023

Friday, August 11, 2023

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட ஊதியத்தை மாற்றியமைக்க அரசு பரிசீலிக்கிறதா? என வைகோ எம்.பி. அவர்கள் எழுப்பிய கேள்விக்கு, இந்திய ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி 02.08.2023 அன்று அளித்த பதில்!

கேள்வி எண். 1545

(அ) அனைத்துத் துறைகளிலும் பணவீக்கம் மற்றும் ஊதிய உயர்வைக் கருத்தில் கொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தை மாற்றியமைப்பதை அரசாங்கம் பரிசீலிக்கிறதா?
(ஆ) அப்படியானால், அதன் விவரங்கள்;
(இ) அனைத்துத் தரப்புகளின் தொடர் கோரிக்கைகளின் பயனாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை நாட்களை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா?
(ஈ) அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?
ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பதில்:
(அ)மற்றும் (ஆ): மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005, பிரிவு 6 (1) இன் படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒவ்வொரு நிதியாண்டுக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதிய விகிதத்தை, விவசாயத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-AL) மாற்றத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஊதிய விகிதத்தின் அடிப்படையில் ஊரக வளர்ச்சி அமைச்சகம் அறிக்கை வழங்குகிறது.
சிம்லாவில் உள்ள தொழிலாளர் பணியகத்தால் அறிவிக்கப்பட்ட பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கான குறியீடு வேறுபட்டது. முந்தைய நிதியாண்டின் ஊதிய விகிதத்தை விட குறைவான ஊதிய விகிதம் இருக்கும் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் கணக்கிடப்பட்ட ஊதிய விகிதம் இருந்தால், அது முந்தைய நிதியாண்டு ஊதிய விகிதத்தை பராமரிப்பதன் மூலம் பாதுகாக்கப்படுகிறது.
ஊதிய விகிதம் ஒவ்வொரு நிதியாண்டிலும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. இருப்பினும் மாநில அரசுகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட ஊதிய விகிதத்திற்கு மேல் ஊதியத்தை வழங்கலாம்.
(இ) மற்றும் (ஈ): மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005, நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு குறைந்தபட்சம் நூறு நாட்களுக்கு வேலை வழங்குவதற்கான சட்டமாகும். வேலையைச் செய்ய முன்வந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிதியாண்டிலும் வேலை மற்றும் கூலிக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
இது தவிர, வறட்சி மற்றும் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களில் ஒரு நிதியாண்டில் கூடுதலாக 50 நாட்கள் வரை வேலை வாய்ப்பு வழங்கப்படும். சட்டத்தின் பிரிவு 3 (4) இன் படி, மாநில அரசுகள் தங்கள் சொந்த நிதியிலிருந்து உத்தரவாதம் அளிக்கப்பட்ட காலத்திற்கு மேல் கூடுதல் வேலை நாட்களை வழங்குவதற்கு வழிவகை செய்யலாம்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
}11.08.2023