‘எண்ணித் துணிக' என்னும் தலைப்பில் ஆளுநர் ரவி நடத்தி வரும் கலந்துரையாடலில் ‘நீட்' தேர்வில் முதல் 100 இடங்களைப் பெற்ற தமிழக மாணவர்கள், தங்கள் பெற்றோர்களுடன் நேற்று ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்போது சேலத்தைச் சேர்ந்த ஒரு மாணவியின் தந்தை அம்மாசியப்பன் ராமசாமி என்பவர், ‘நீட் தேர்வில் தேர்ச்சி பெற, மாணவர்களின் பெற்றோர் அதிகம் செலவளிக்க வேண்டியுள்ளது. எனவே நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் அளிப்பீர்கள்? என்று கேள்வி கேட்டுள்ளார். மேலும் அவர் ‘நீட்' தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், அவரிடமிருந்து ஒலி பெருக்கிப் பறிக்கப்பட்டதாகவும், அவரை மிரட்டும் தொனியில் ஆளுநர் பேசியதாகவும் கூறுப்படுகிறது.
பின்பு அந்த பெற்றோரின் கேள்விக்கு ஆளுநர் ரவி பதிலளிக்கும் போது, “நீட் தேர்வு ரத்துக்கு நான் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன். கல்வி பொதுப் பட்டியிலில் உள்ளது. ‘நீட்’ தேர்வு ரத்து மசோதா, குடியரசுத்தலைவரிடம் உள்ளது. அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய அதிகாரம் அவருக்கு மட்டுமே உள்ளது. அந்த அதிகாரம் எனக்கு இருந்தால், நீட் தேர்வு விலக்கு மசோதாவில் நான் கண்டிப்பாக கையெழுத்து இட மாட்டேன்” என்று ஆணவத்துடன் கொக்கரித்துள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால், சட்டமன்றத்தில் நிறைவேற்றபட்ட மசோதவை கையெழுத்து இட்டு, குடியரசு தலைவருக்கு அனுப்புவதுதான் அரசியல் சட்ட அமைப்பின் படி ஆளுநருக்கு உள்ள அதிகாரம். அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி, தான்தோன்றித் தனமாக ஆளுநர் ஆர். என். ரவி பேசிவருவது கண்டனத்துக்குரியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக வெளியேற்றப் பட வேண்டும்.
ஏற்கனவே ஆளுநரை நீக்கக் கோரி தமிழ்நாட்டு மக்களிடம் கையெழுத்துப் பெறும் இயக்கத்தை மறுமலர்ச்சி தி.மு.க. நடத்தி வருகின்றது. ஆளுநரின் இந்த ஆணவப்பேச்சு அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்துகிறது.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
13.08.2023
No comments:
Post a Comment