Saturday, August 12, 2023

பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல். வைகோ MP கண்டனம்!

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பள்ளி ஒன்றில், நான்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவன் சின்னத்துரை, அதே பள்ளியில் பயிலும் சக மாணவர்களால் வீடு புகுந்து அரிவாளால் வெட்டப்பட்டுள்ளார், தடுக்க வந்த அவரது தங்கை சந்திரா செல்வியும் தாக்குதலுக்கு ஆளாகி படுகாயம் அடைந்துள்ளார். இவர்கள் இருவரும், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்கிற தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

மாணவர்கள் முழுமையாக நலம்பெற சிறப்புக் கவனம் செலுத்தி சிகிச்சை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
ஒரே பள்ளியில் பயிலுகின்ற மாணவச் செல்வங்கள் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வோடு சக மாணவர்களிடம் அன்பு செலுத்தி சிறப்பாகக் கல்வி பயின்று, வாழ்வில் முன்னேற வேண்டும் என்கிற இலக்கினை மறந்து, தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு தடைக் கற்களாக இருக்கும் சாதி, மத நச்சு உணர்வுகளால் உந்தப்பட்டு, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வருந்தத்தக்கது. கண்டனத்திற்குரியது.
நெல்லை மாவட்ட காவல்துறை விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளான மாணவர்களைக் கைது செய்து உள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் முழுமையாக நலம்பெறவும், அவர்களை சிறந்த பள்ளியில் சேர்த்து உயர்கல்வி பெறுவதற்கான முழு வாய்ப்புகளை தாமே உருவாக்கித் தரவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தி உள்ளது ஆறுதல் அளிக்கிறது.
சாதி, மத உணர்வுகளால் உந்தப்பட்டு, பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் மாணவர்களை அந்தந்த மாவட்ட கல்வித்துறை கவனமாகக் கண்காணித்து சீர்திருத்திட தேவையான நடவடிக்கைகளை முதல் முன்னுரிமை கொடுத்து எடுத்திட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
12.08.2023

No comments:

Post a Comment