Wednesday, August 9, 2023

தொல்லியல் கல்வெட்டு அறிஞர் ஈரோடு புலவர் செ.இராசு மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. வைகோ MP இரங்கல்!

தமிழகத்தின் தொல்லியல் துறையில் மகத்தான சாதனைகள் புரிந்த ஆய்வறிஞர் அன்புக்குரிய புலவர் செ.இராசு அவர்கள், கோவை மருத்துவ மனையில் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயறுற்றேன்.

ஈரோடு தமிழ் உலகிற்கு வழங்கிய கொடை ஆய்வு அறிஞர் புலவர் இராசு அவர்கள்.

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியிலும், பின்னர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றி ,தொல்லியல் கல்வெட்டு இயல் துறையில் சிகரம் தொட்டார்.

கொங்கு நாட்டு வரலாற்றில் சமண சமயம் எனும் பொருளில்  ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

இந்தியாவிலேயே முதல் இசைக் கல்வெட்டு என்று அறியப்படும், 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈரோடு மாவட்டம் அறச்சலூர் இசைக் கல்வெட்டை முதன் முதலில் வெளிப் படுத்தினார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமணல் பகுதியில் அகழ்வாய்வு செய்து, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ரோமானியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான வணிக உறவை கண்டறிந்து அறிவித்தார்.

கல்வெட்டு, செப்பேடு பட்டயம், தலவரலாறுகள்,  சங்க இலக்கியங்கள் என அவரது ஆய்வுகள் தமிழரின் தொன்மை வரலாற்றை அறியச் செய்தன.

அசைக்க முடியாத ஆதாரங்களுடன் கச்சத் தீவு தமிழருக்கு சொந்தம் என்பதை நிலைநாட்டினார்.

புலவர் செ.இராசு அவர்களின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும். அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
09.08.2023

No comments:

Post a Comment