இராமேஸ்வரத்திலிருந்து மார்ச்சு 22 ஆம் தேதி 540 விசைப் படகில் மீன்படித் தொழிலுக்குச் சென்ற தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்து, சிங்களக் கடற்படையினர் விரட்டி உள்ளனர். இலங்கை ரோந்து கப்பலில் வந்த அவர்கள் துப்பாக்கியைக் காட்டி நமது மீனவர்களை மிரட்டி இருக்கின்றனர்.
கடந்த 22 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களிலிருந்து 255 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
மார்ச்சு 23 ஆம் தேதி அதிகாலை இந்திய கடல் பகுதியான நெடுந்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அத்துமீறி நுழைந்து நமது மீனவர்களை தாக்கி, விசைப்படகுகளை பறிமுதல் செய்திருக்கின்றனர்.
இரண்டு படகுகளுடன் 12 மீனவர்களை கைது செய்து, காங்கேசன் துறைமுக கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்காமல் ஒன்றிய அரசு வேடிக்கை பார்ப்பது கண்டனத்துக்கு உரியது.
இலங்கை சிறையில் உள்ள 28 மீனவர்களை விடுவிக்கவும், மீன்பிடி படகுகளை மீட்கவும் ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
24.03.2023
No comments:
Post a Comment