Monday, May 29, 2023

மாமல்லபுரம் அண்ணா நகரில் வாழ்ந்து வரும் மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்குக. தமிழக அரசுக்கு வைகோ MP வேண்டுகோள்!

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்ட வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 30.05.2023 தொடங்கி, 09.06,2023 வரை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம் - மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு எண் 9 மற்றும் 14 ஆகியவற்றை உள்ளடக்கிய அண்ணா நகர் புல எண் 160/2 கிராம நத்தத்தில் நீண்ட நாட்களாக குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, என்னுடைய வழிகாட்டுதலின் படி, மாமல்லபுரம் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவரும், மதிமுக துணை பொதுச் செயலாளருமான மல்லை சத்யா அவர்கள் கடந்த 2021 டிசம்பர் 10 ஆம் தேதி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அருமைச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை, தலைமைச் செயலகத்தில் சந்தித்து, கோரிக்கை வைத்தார்.
அதன் மீதான விரைவு நடவடிக்கையாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நில அலகு நிமு 1 (1) பிரிவு அரசுத் துணைச் செயலாளர் தக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி 2021 டிசம்பர் 27 அன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு 2022 பிப்ரவரி 3ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
மறுமலர்ச்சி தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்கள் அந்தக் கடித நகலை மாண்புமிகு தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் அவர்களுடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து 17.03.2022 அன்று நேரில் வழங்கியும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.
எனவே 04.12.2022 அன்று மாமல்லபுரம் சென்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து பட்டா வேண்டி மீண்டும் மனு வழங்கியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, தக்க நடவடிக்கை எடுத்து, அதன் விவரத்தை மனுதாரருக்கும் தெரிவிக்குமாறு மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரின் சிறப்பு உதவியாளர் மூலமாக 30.12.2022 அன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அந்தக் கடித நகலையும் மாண்புமிகு ஊரக தொழில் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் அவர்கள் முன்னிலையில் 09.05.2023 அன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கடாமல் இருப்பது வருத்தத்திற்குரியது.
சுதந்திரம் அடைந்து ஆண்டுகள் 75 உருண்டோடிக் கொண்டிருக்கும் நிலையிலும், கிராம நத்தத்தில் நீண்ட நாட்களாக குடியிருந்து வரும் மக்கள் பட்டா வேண்டி போராட வேண்டிய நிலையில்தான் நாடு இருக்கிறது
மக்களுக்காக திராவிட மாடல் ஆட்சி நடத்தும் தளபதி ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு, மாமல்லபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை இந்த வருவாய் தீர்வாயத்தில் நிவர்த்தி செய்து பட்டா வழங்க வேண்டுகின்றேன்.
இதில் மத்திய தொல்லியல் துறை ஆட்சேபனை இருந்தால், முத்தரப்பு கள ஆய்வு செய்து, மக்களின் கருத்தை அறிந்து, தேவைப்படின் நிபந்தனைகளுடன் பட்டா வழங்கி உதவிட தமிழ் நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
29.05.2023

Sunday, May 28, 2023

சென்னை ஸ்டான்லி உள்ளிட்ட மூன்று மருத்துக்கல்லூரிகள் அங்கீகாரம் இரத்து! வைகோ MP கண்டனம்!

தேசிய மருத்துவ ஆணையம், தமிழ்நாட்டின் பழமை வாய்ந்த சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் திருச்சி, தர்மபுரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடிவு செய்திருப்பது அதிர்ச்சி தருகிறது.

ஒன்றிய பா.ஜ.க அரசின் இந்நடவடிக்கையால் இந்த மூன்று கல்லூரிகளில் நடப்பு ஆண்டில்  மருத்துக்கல்விக்கான 500 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை தடை படும் நிலைமை உருவாகி இருக்கிறது.

சென்னை ஸ்டான்லி,  திருச்சி, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும மாணவர்களின் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோ- மெட்ரிக் வருகைப் பதிவு, சிசிடிவி கேமராக்கள் போன்றவை முறையாக இல்லாததும், பராமரிக்கப்படாததும் அங்கீகாரத்தை ரத்து செய்ததற்குக் காரணம் என தேசிய மருத்துவ ஆணையம் கூறுவதை ஏற்று கொள்ள முடியாது.

மேற்கண்ட மருத்துவக்கல்லூரி நிர்வாகங்கள் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து, அங்கீகாரத்தை இரத்து செய்தது வன்மையான கண்டனத்துக்கு உரியது.

மிகச் சதாரணமான காரணங்களைக் கூறி தமிழ்நாட்டில் சிறப்பாக இயங்கி வரும் மூன்று மருத்துவக் கல்லூரிகளை முடக்க ஒன்றிய பா.ஜ.க அரசு முனைந்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகும். இதனை நியாயப்படுத்தவே முடியாது.

எனவே ஒன்றிய அரசு, சென்னை ஸ்டான்லி, திருச்சி,தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி அங்கீகாரத்தை இரத்து செய்யும் முடிவை கைவிட வேணடும் என்று வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
28.05.2023

பற்றி எரியும் மணிப்பூர் மாநிலம்; அமைதியை நிலை நாட்ட ஒன்றிய அரசு விரைந்து செயல்பட வேண்டும்! வைகோ MP வேண்டுகோள்!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இட ஒதுக்கீடு சம்மந்தமான நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக மலை பழங்குடியினர் மற்றும் பழங்குடி அல்லாதவர்களுக்கு இடையே வன்முறை வெடித்திருக்கிறது. பத்தாயிரம் இராணுவ வீரர்களைக் குவித்தும் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நூற்றுக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து, பொது அமைதி கெட்டு கடந்த 22 நாட்களாக சின்னஞ் சிறிய மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது..

ரஷ்யா உக்ரைன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாட்டாண்மை செய்யும் பிரதமர் மோடி அவர்கள், மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட முயற்சி எடுக்காம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது கவலை அளிக்கிறது.

அசாம் சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் சென்று அமைதியை உருவாக்க முயற்சிக்காதது ஏன்?

உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டிருந்த மணிப்பூர், சில ஆண்டுகளுக்கு முன்பு அமைதி வழிக்குத் திரும்பி, வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. தற்போது மீண்டும் அமைதி சீர்குலைக்கப்பட்டு, இணையதளம் முடக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவந்து, அம்மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
27.05.2023

கிருஷ்ணா, கோதாவரி படுகை எண்ணெய் - இயற்கை எரிவாயு நிறுவனங்களின் அலுவலகத்தை ராஜமுந்திரிக்கு மாற்றும் முயற்சியைக் கைவிடுக! வைகோ MP அறிக்கை!

கிருஷ்ணா, கோதாவரி மற்றும் காவிரி படுகை  எண்ணெய் - இயற்கை எரிவாயு நிறுவனங்களின் தலைமை அலுவலகம், மையப்பகுதியான சென்னை எழும்பூர் தாலமுத்து - நடராஜன் மாளிகையில் இயங்கி வருகிறது.

இந்த அலுவலகத்தின் ஒரு பகுதியான கிருஷ்ணா, கோதாவரி படுகை பிரிவு அலுவலகம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு மாற்றும் முயற்சியினை மேற்கொண்டபோது, அப்போதைய பெட்ரோலியத் துறை அமைச்சர் மணிசங்கர் ஐயர் அவர்கள் மூலமாக அதை தடுத்து நிறுத்தினேன்.

இந்நிலையில் தற்போது எந்த முகாந்திரமும் இல்லாமல் மீண்டும் கிருஷ்ணா, கோதாவரி படுகைப் பிரிவு அலுவலகத்தை எந்தவிதமான வலுவான காரணமும் இன்றி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு மாற்ற முயற்சிப்பதாக தெரிய வருகிறது. அதனை உடனடியாகக் கைவிட வேண்டும்.

அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் கொண்ட இந்த அலுவலகத்தின் கிருஷ்ணா, கோதாவரி படுகை பிரிவில் தமிழக இளைஞர்கள் பலர் அதிகாரிகளாக பணியாற்றுகிறார்கள். இந்த அலுவலகம் மாற்றப்பட்டால், எண்ணற்ற இளைஞர்களின் வேலை வாய்ப்பு கேள்விக்குறியாகும். தற்போதைய கணினி யுகத்தில் இந்த மாற்றம் தேவையற்றது.

எனவே, ராஜமுந்திரிக்கு மாற்றும் இந்த முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
26.05.2023

Sunday, May 21, 2023

மே17 இயக்கம் நடத்திய ஈழத்தமிழர் நினைவேந்தலில் வைகோ MP பங்கேற்பு!

சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் 2009 ஆம் ஆண்டு சிங்கள பேரினவாத அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக "மே 17 இயக்கம்" சார்பாக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் இன்று 21-05-23 ஒருங்கிணைத்த 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்வில் ஈழத் தமிழர்களின் பாதுகவலர், தமிழினக் காவலர் அன்புத் தலைவர்
வைகோ MP அவர்கள் பங்கேற்று சுடர் ஏந்தி மலர் அஞ்சலி செலுத்தினார். இதில் மே17 இயக்கத்தினர், மதிமுகவினர், மற்றும் தமிழின உணர்வாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு இனப்படுகொலைக்கு எதிராக முழக்கமிட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

தலைமைக் கழக அறிவிப்பு. மறுமலர்ச்சி தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்தல்!

ஜூன் 1 : சென்னையில் வேட்புமனுதாக்கல்!

கீழ்க்காணும் பொறுப்புகளுக்கான தேர்தல் 14.06.2023 சென்னை - அண்ணா நகர், 3-ஆவது அவென்யூ - புதிய ஆவடி சாலை சந்திப்பில் உள்ள விஜய்ஸ்ரீ மகாலில் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் நடைபெறும்.
இதனை முன்னிட்டு, 2023 ஜூன் 1 ஆம் நாள் வேட்புமனு பெறும் நிகழ்ச்சி சென்னை தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெற இருக்கிறது.
தலைமைக் கழக நிர்வாகிகள்
தலைமைக் கழக நிர்வாகிகளான அவைத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர்கள் ஐவர் (ஒருவர் மகளிர்) ஆகிய பொறுப்புகளுக்கான ஒவ்வொரு வேட்பு மனுவும் பொதுக்குழு தகுதி பெற்ற இருபத்தைந்து (25) பேர் முன்மொழிந்தும், இருபத்தைந்து (25) பேர் வழிமொழிந்தும் இருக்க வேண்டும்.
ஆட்சிமன்றக்குழு, தணிக்கைக்குழு
ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களாக ஏழு (7) பேரும், தணிக்கைக்குழு உறுப்பினர்களாக ஆறு பேரும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதற்கான ஒவ்வொரு வேட்பு மனுவும் பொதுக்குழு தகுதி பெற்ற பத்து (10) பேர் முன்மொழிந்தும், பத்து (10) பேர் வழிமொழிந்தும் இருக்க வேண்டும்.
பொதுக்குழு தகுதி
தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக் குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள். தகுதி பெற்ற ஒன்றிய, நகர, பகுதிக் கழகச் செயலாளர்கள்.
வேட்பு மனு தாக்கல் நாள் - இடம்
01.06.2023 வியாழக்கிழமை காலை 10 மணி முதல் 12 பகல் மணி வரை.
தலைமைக் கழக அலுவலகம், தாயகம், எழும்பூர், சென்னை - 600 008
27.05.2023 சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை கழக அமைப்புச் செயலாளர் இரா.பிரியகுமார் (98402 17200) மற்றும் கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் (94430 49151) ஆகியோரிடம் உரிய கட்டணத்தைச் செலுத்தி வேட்பு மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
தேர்தல் ஆணையாளர்களாக கழக அமைப்புச் செயலாளர் இரா.பிரியகுமார்,
கொள்கைவிளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன்,
தேர்தல் பணிச் செயலாளர் இரா.அந்திரிதாஸ் ஆகியோர் செயல்படுவார்கள்.
வேட்பு மனு திரும்பப் பெறுதல்
03.06.2023 சனிக்கிழமை மாலை 3 மணி வரை.
கட்டணம்
தலைமைக் கழக நிர்வாகிகள் வேட்புமனு விண்ணப்பப் படிவம் - ரூ. 250/-
வேட்பாளர் கட்டணம் - ரூ. 25,000/-
ஆட்சிமன்றக் குழு உறுப்பினர், தணிக்கைக் குழு உறுப்பினர் வேட்புமனு விண்ணப்பப் படிவம் - ரூ. 100/-
வேட்பாளர் கட்டணம் - ரூ. 12,000/-
வேட்பாளர்கள் கட்டணம் வங்கி வரைவோலை (General Secretary, MDMK,) அல்லது வங்கி (Canara Bank: SB A/C No. 0416101011012; IFSC Code- CNRB0000416) மூலமாகவோ செலுத்த வேண்டும்
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
21.05.2023

Friday, May 19, 2023

முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழர் படுகொலை நினைவேந்தல் கூட்டம்!

சிங்கள அரசால், இராணுவத்தால் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். 2008 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியிலும், 2009 ஆம் ஆண்டு தொடக்கத்திலும் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதை ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையே உறுதிப்படுத்தியது.


ஈழத்தமிழர் படுகொலையைத் தடுப்பதற்காக தமிழ்நாட்டில் முத்துக்குமார் உள்ளிட்ட 19 பேர் தீக்குளித்து மாண்டனர். மே -17 இயக்கம் ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு மே 21 ஆம் தேதி மாலை 4 மணிக்கு பெசன்ட் நகர் கடற்கரையில் 14 ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


இதில் நானும் பங்கேற்கிறேன். ஈழத்தமிழ் உணர்வாளர்களும், மறுமலர்ச்சி தி.மு.க. தோழர்களும் கலந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க

‘தாயகம்’

சென்னை - 8

19.05.2023

Thursday, May 18, 2023

தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபுக்கு கிடைத்த வெற்றி. வைகோ MP அறிக்கை!

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள சட்டத்திற்கு எதிராக, விலங்குகள் நல அமைப்புகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 


உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில், நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்தது.


இந்த வழக்கின் விசாரணையின் போது, “ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படுகிறது என்றும், காளைகளை வற்புறுத்தி போட்டிகளில் பங்கேற்க வைக்கின்றனர்” என்றும் விலங்குகள் நல அமைப்புகளால் வாதிடப்பட்டது. இதையடுத்து, “ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வு. பாரம்பரியம், இறை வழிபாடு அம்சங்களுடன் தொடர்புடையது. இது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்ததால், விலங்குகள் நல அமைப்புகளின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தமிழக அரசு வாதிட்டது.


அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி கே.என்.ஜோசப் தலைமையிலான அமர்வு வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது. அதன்படி ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க மறுத்துள்ள உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டு தொடர்பாக, ‘தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்பதை ஏற்றுக்கொள்கிறோம்’ என்று கூறி உள்ளது.


ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய ஒருமித்த தீர்ப்பில், “ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க வரவேற்கத்தக்க தீர்ப்பு ஆகும். இதன் மூலம் தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபு நிலைநாட்டப்பட்டு இருக்கிறது.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க

‘தாயகம்’

சென்னை - 8

18.05.2023

Wednesday, May 17, 2023

தாயகத்தில் வைகோ MP தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

தமிழீழத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிகட்ட போரில் உயிர் நீத்தவர்களுக்கான நினைவேந்தல் கூட்டம் இன்று 17-05-2023 புதன்கிழமை மாலை 5:30 மணியளவில் மதிமுக தலைமைக் கழகம் தாயகத்தில் நடந்தது.

தமிழினக் காவலர் தலைவர் திரு வைகோ எம்பி அவர்களின் தலைமையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில், தமிழ் ஈழம் மலர உறுதி ஏற்றனர்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக, தோழர் தியாகு, திரு.புகழேந்தி தங்கராஜ், தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கழக முன்னோடிகள், கண்மணிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கள்ளச்சாரய உயிர் பலிகள் இனி நிகழவே கூடாது. வைகோ MP அறிக்கை!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்து எக்கியார் குப்பத்தில் கடந்த 13ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 14 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.


இதேபோல செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த பெருங்கரணை, பேரம்பாக்கம் கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்த எட்டு பேர் உயிரிழந்தனர்.


முழு மது விலக்கு வேண்டும் என்று நாம் கோரி வரும் நிலையில், இன்னொரு பக்கத்தில் இது போன்ற கள்ளச்சாரய விற்பனை அமோகமாக நடப்பதும், அதனால் உயிர் பலிகள் ஆவதும் மிகுந்த வேதனை அளிக்கிறது. 


அரசு விற்பனை செய்யும் மதுவைப் போன்றே கள்ளச்சாராயப் புட்டிகள் புழக்கத்தில் இருப்பதும், அதனைக் கண்டறிந்து தடுக்க வேண்டிய காவல்துறையினரின் அலட்சியத்தாலும் இது போன்ற உயிர் இழப்புகள் நேர்கின்றன.


கள்ளச்சாரயம் விற்பனை செய்வோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அதனை தடுக்கத் தவறிய காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும்.


கள்ளச்சாரயம் அருந்தி, மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருவோரை முதலமைச்சர் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, தக்க சிகிச்சை மேற்கொள்ள ஆணையிட்டு உள்ளது ஆறுதல் தருகிறது.


இனி இது போன்ற துயர நிகழ்வுகளுக்கு இடம் இல்லாத நிலையை அரசு உருவாக்க வேண்டும்.


அரசு மதுபான விற்பனைக் கடைகளை படிப்படியாகக் குறைத்து, முழு மது விலக்கை செயல்படுத்த வேண்டும் என்பதுதான் மதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையாகும்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க

‘தாயகம்’

சென்னை - 8

17.05.2023

Saturday, May 13, 2023

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவு; மக்கள் சக்தி வென்றது! வைகோ அறிக்கை!

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பாஜக வெல்ல முடியாத அரசியல் சக்தி என்ற மாயத் தோற்றத்தை உடைத்து எறிந்து இருக்கின்றது.


2018 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், கர்நாடக மக்கள் பாஜகவை வீழ்த்தினார்கள். மதசார்பற்ற ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது. 


ஆனால், பாஜக குதிரைப் பேரம் நடத்தி, சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ஆளுநர் துணையோடு குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது.


கர்நாடகத்தை காவிமயமாக்கும் நடவடிக்கையில் இறங்கிய ஆர்.எஸ்.எஸ்  -இந்துத்துவ  சக்திகள், சிறுபான்மை இஸ்லாமியர், கிறிஸ்தவ மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டன. இஸ்லாமிய மக்களின் பண்பாட்டு உரிமைகளைப் பறித்தன.


இந்துவத்துவ சோதனைச் சாலையாக மாற்றப்பட்ட கர்நாடகாவில்,, முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை பாஜக அரசு ரத்து செய்தது.


பாஜகவின் ஏதேச்சாதிகார, மதவெறி அரசியலுக்கு கர்நாடக மக்கள் தக்கப் பாடம் புகட்டி இருக்கிறார்கள்.


இந்தியாவில் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் இந்துவத்துவக் கும்பலை தேர்தல் களத்தில் வீழ்த்த முடியும் என்பதை கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெள்ளிடை மலையாக நிருபித்து இருக்கிறது.


பாசிசத்தை வேரறுக்க கர்நாடகாவில் மக்கள் சக்தி வெகுண்டு எழுந்தது போல, 2024 நாடாளுமன்றத்தேர்தலிலும் இந்தியா முழுவதும்  நடக்கும்.


கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப்போகும் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க

சென்னை - 8

‘தாயகம்’

13.05.2023

மதசார்பின்மை வென்றது! மத அரசியல் தோற்றது! ஜனநாயகம் வென்றது! பாசிசம் தோற்றது! துரை வைகோ அறிக்கை!

நடைபெற்று முடிந்த கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டு இருக்கிறது. நாடு முழுவதும் மத அரசியலை முன்னிறுத்தி மக்களை பிளவுபடுத்த நினைக்கும் ஆளும் பாஜக அரசுக்கு கர்நாடகா மாநிலத்தில் கடும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டது.


கர்நாடகா மாநிலத்தில் பாஜகவின் மிக மோசமான ஆட்சிக்கு மக்கள் முற்றுப் புள்ளி வைத்துள்ளார்கள். குறிப்பாக, கர்நாடகாவில் ஓபிசி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் முஸ்லீம்களுக்கான 4 விழுக்காடு இட ஒதுக்கீட்டை சமீபத்தில் பாஜக அரசு ரத்து செய்து, பெரும்பான்மை சமூகங்களான வொக்கலிகாக்கள் மற்றும் லிங்காயத்து பிரிவினர்களுக்கு அந்த ஒதுக்கீட்டை தலா 2 விழுக்காடாக பிரித்து கொடுத்தது. அந்த சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு தருவதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால், பெரும்பான்மை சமூகங்களுக்கு இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை பிடுங்கி கொடுப்பதன்மூலம், வாக்கு வங்கி அரசியலை தக்க வைக்கவும், ஊழல் அரசை தொடரவும் முயற்சி செய்த பாஜக அரசின் நடவடிக்கையை தான் நாம் கண்டிக்கிறோம்.


தேர்தல் பிரச்சாரத்தின்போது, சாதி மத ரீதியாக சமூகத்தை பிளவுபடுத்தும் பஜ்ரங்தள் அமைப்பை தடைசெய்வோம் என காங்கிஸ் அறிவித்தது. இதை கையில் எடுத்துக் கொண்டு காங்கிரஸ் இந்துக்களுக்கு எதிரான கட்சி என பாஜக பிரச்சாரம் செய்தது.


ஆனாலும் பாஜகவின் போலி பிரச்சாரம் எடுபடவில்லை. கர்நாடகாவில் பாஜக அரசை 40% கமிசன் அரசு என்று தான் எல்லோரும் அழைத்தார்கள். இந்தியாவிலேயே மிக மிக ஊழல் மலிந்த அரசாக கர்நாடகாவில் பாஜகவின் ஆட்சி இருந்து வந்தது. சர்வதேச அளவில் கர்நாடகா பாஜக அரசின் ஊழல் பேசப்பட்டது.


கர்நாடகா மாநிலத்தில் அதிகளவு கமிசன் கேட்டதால் அங்கே இரண்டு ஒப்பந்தக்காரர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். அதன் எதிரொலியாக அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது.


ஆனால், தமிழ்நாட்டில் உள்ள பாஜக தலைமை இங்கு சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக தமிழக அரசை தொடர்ந்து குற்றம் சாட்டியது.


தமிழ்நாட்டில் குற்றங்கள் நடைபெறுவது கண்டறியப்பட்டால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விடுகிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் தான் லஞ்சம் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளது. அதற்கு நம் அண்டை மாநிலமான கர்நாடகா தான் சிறந்த உதாரணம் என, நானே பல இடங்களில் பேசியுள்ளேன்.


ஒன்றிய அரசின் பலம், கர்நாடகாவில் ஆளும் கட்சி என்ற நிலை, ஆட்சி அதிகாரம் பண பலம் இவை அனைத்தும் இருந்தும் பாஜகவிற்கு கர்நாடகா மக்கள் நல்ல பாடத்தை புகட்டியுள்ளார்கள்.


ஒற்றுமையை வலியுறுத்தி நாடுமுழுவதும் நடைபயணம் மேற்கொண்ட சகோதரர் ராகுல்காந்தி அவர்களின் பயணத்திற்கு கிடைத்த வெற்றி இது.


2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கர்நாடகா தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கிறது.


ராகுல் காந்தியின் அத்தியாயம் கர்நாடகத்தில் இருந்து தொடங்குகிறது..!


அவருக்கு என் வாழ்த்துகள்!


அன்புடன்,

துரை வைகோ

தலைமைக் கழகச் செயலாளர்

மறுமலர்ச்சி திமுக

13.05.2023

Friday, May 12, 2023

உலக செவிலியர் நாள். வைகோ MP வாழ்த்து!

சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு, தாய்க்கு நிகரான அன்பும் பரிவும் கொண்டு, பொறுமையுடன் ஆற்றும் அரும்பணிதான் செவிலியர் பணி ஆகும்.


1820 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் நாள், இங்கிலாந்தில், செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில்   புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார். இறை அருளால் தனக்கு இடப்பட்ட ஆணையாக, செவிலியர் பணியில் தன்னை ஒப்படைத்துக் கொண்டார். இப்பணியில் வழிகாட்டு நெறிகளை உருவாக்கி, அறத்தொண்டில் ஆர்வம் கொண்டவர்களை ஒருங்கிணைத்து, செவிலியர் பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினார்.  


போர்க்களங்களில் காயங்கள் அடைந்து, இரவு நேரங்களில் வலி தாங்க முடியாமல் வீரர்கள் அலறித் துடித்துக் கொண்டு இருந்தார்கள். கையில் லாந்தர் விளக்கை எடுத்துக்கொண்டு, அவர்களைத் தேடி ஆறுதல் கூறி. தேவையான மருந்துகளை வழங்கி, கவலையைப் போக்கி விரைந்து நலம் பெறச் செய்தார்.  தங்களைக் காக்க, விண்ணுலகில் இருந்து மண் உலகிற்கு கையில் விளக்குடன் தேவதை வந்திருக்கின்றார் என்று வீரர்கள் மகிழ்ந்தார்கள்.


புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களுக்கு நன்றி கூறும் விதமாக, அவர் பிறந்த மே 12-ஆம் நாள், லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபே மாளிகையில் விளக்குக்கு ஒளி ஏற்றி, செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கை மாற்றப்பட்டு, மாளிகையின் உயர்ந்த பீடத்தில் வைக்கப்படுகின்றது. ஒருவரிலிருந்து மற்றொருவருக்கு தமது அறிவையும், அனுபவத்தையும், மனிதநேயத்தையும் தோள் மாற்றம் செய்வதன் அடையாளம் இது ஆகும். 


நோயாளிகளைக் காப்பாற்ற மருந்து  இருந்தால் மட்டும் போதாது. நோயின் தன்மை அறிந்து, நோயாளிகளைத் தேற்றும் தாய் உள்ளம் வேண்டும். எனவே செவிலியர்கள் தாய்க்கு நிகரானவர்கள். தற்போது ஆண் செவிலியர்களும் இப்பணியில் இருக்கிறார்கள்.


தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடிப்படையில், அனைத்துத் தரப்பினருக்கும் சிறந்த முறையில் மருத்துவம் கிடைத்திட, உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய நர்சிங் கவுன்சில் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், தேவையான செவிலியர் பணி இடங்களை நிரப்பிட தமிழக அரசு முன்வர வேண்டும்.


புனிதமான சேவையில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  செவிலியர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க

‘தாயகம்’

சென்னை - 8

12.05.2023

Thursday, May 11, 2023

சி.ஆர்.பி.எஃப் ஆள் சேர்ப்பு: எழுத்துத்தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு. வைகோ MP கண்டனம்!

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சி.ஆர்.பி.எஃப் ( Central Reserve Police Force- CRPF) துணை ஆய்வாளர்(Central Reserve Police Force- CRPF) மற்றும் தலைமைக் காவலர்(  Head Constable) பணியிடங்களைத் தேர்வு செய்ய மே எட்டாம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

அதில் ஜூலை மாதம் இணைய வழி எழுத்து தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.


ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் தான் தேர்வு நடக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.


சி.ஆர்.பி.எஃப் எனப்படும் துணை இராணுவப் படையில் ஆட்களை சேர்க்க நடைபெறும் எழுத்து தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில்  மட்டும்தான் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது கண்டனத்துக்கு உரியது.


அனைத்து மாநிலங்களிலிருந்தும் துணை இராணுவப் படையில் வீரர்கள் சேரும் வகையில், தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் எழுத்துத்தேர்வை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க

‘தாயகம்’

சென்னை - 8

11.05.2023

திருச்சியில் SF Mahal (திருமண மண்டபம்) திறந்து வைத்தார் வைகோ MP!

மதிமுக மகளிர் அணி செயலாளர் டாக்டர் ரொஹையா அவர்கள், தந்தை தாய் பெயரில் SF Mahal என திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் திருமண மண்டபம் கட்டியமைத்துள்ளார்.

மறைந்த தந்தையார் ஷேக் முகமது - தாயார் பாத்திமா பீவி அவர்களது பெயரில் நிறுவப்பட்டு உள்ள திருமண மண்டபத்தை திறந்து வைத்து தலைவர் வைகோ மற்றும் தலைமை கழக செயலாளர் துரை வைகோ, பாராளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் புதூர் பூமிநாதன், சின்னப்பா, டாக்டர் சதன் திருமலைக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் உரையாற்றினார்கள்.

ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் கண்மணிகள் கலந்துகொண்டு திறப்பு விழாவை சிறப்பித்தனர்.