Monday, August 14, 2023

நீட் தோல்வி தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது? வைகோ MP அறிக்கை!

சென்னை, குரோம்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் செல்வசேகர். இவரது மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19). 2021இல் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து, மருத்துவராகும் கனவுடன் நீட் தேர்வுக்காக பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற்று வந்துள்ளார் ஜெகதீஸ்வரன். இரண்டு முறை தேர்வு எழுதி தோல்வியை தழுவிய காரணத்தால் 12.08.2023 அன்று தற்கொலை செய்து கொண்டார்.

இந்தச் சூழலில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என ஜெகதீஸ்வரன் தந்தை செல்வசேகர் கருத்து தெரிவித்திருந்தார். 

நேற்று ஜெகதீஸ்வரனுக்கு இறுதிச் சடங்கு நடந்தது. நள்ளிரவு வரை உறவினர்களுடன் இருந்த செல்வசேகர்,  மகன் இறந்த மன உளைச்சல் காரணமாக இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஒன்றிய பாஜக அரசின் பிடிவாதமான எதேச்சதிகாரப் போக்கால் தமிழ்நாட்டில் ஒரே குடும்பத்தில் மாணவரும், தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்திருக்கிறது.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தபட்டதிலிருந்து 2017 இல் அரியலூர் அனிதாவில் தொடங்கி இதுவரை ஏறத்தாழ 20 மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் தமிழ் நாட்டில் நீட் தேர்வு தோல்வி காரணமாக தற்கொலைகள்  என்னும் கொடூரச்சாவுகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி எப்போது வைக்கப் போகிறோம்?

மறுபுறம் நீட் தேர்வு விலக்கு மசோதாவில் கையெழுத்து இட மாட்டேன் என்று இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட ஆளுநர் ஆர்.என். ரவி கொக்கரித்துள்ளார். இந்த அறிவிப்பு வந்த நாளில் குரோம்பேட்டை மாணவரும் அவருடைய தந்தையும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

கல்வித்துறையில் மாநில அரசின் உரிமைகளைப் பறித்து ஏக போக ஆதிக்கம் செலுத்தி வரும் ஒன்றிய அரசின் போக்கினால் இன்னும் எத்தனை மாணவர்களின் உயிர்களை இழக்க நேரிடுமோ? என்ற கவலை ஏற்பட்டு உள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட முன்வரைவுக்கு உடனடியாக ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க வலியுறுத்துகிறேன்.

நீட் தேர்வு எழுத முற்படும் மாணவர்கள் தோல்வி பயம் காரணமாக உயிரைப் போக்கிக் கொள்ளும் மனநிலைக்கு ஆளாகக் கூடாது. தற்கொலை என்பது தீர்வாகாது என்பதை மாணவச் செல்வங்கள் மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
14.08.2023

Sunday, August 13, 2023

‘NEET' விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என கொக்கரிக்கும்ஆளுநர் ஆர். என். ரவி வெளியேற்றப்பட வேண்டும். வைகோ MP அறிக்கை!

‘எண்ணித் துணிக' என்னும் தலைப்பில் ஆளுநர் ரவி நடத்தி வரும்  கலந்துரையாடலில்  ‘நீட்' தேர்வில் முதல் 100 இடங்களைப் பெற்ற தமிழக மாணவர்கள், தங்கள் பெற்றோர்களுடன்  நேற்று ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அப்போது சேலத்தைச் சேர்ந்த ஒரு மாணவியின்  தந்தை அம்மாசியப்பன் ராமசாமி என்பவர், ‘நீட் தேர்வில் தேர்ச்சி பெற, மாணவர்களின் பெற்றோர் அதிகம் செலவளிக்க வேண்டியுள்ளது. எனவே நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் அளிப்பீர்கள்? என்று கேள்வி கேட்டுள்ளார். மேலும் அவர் ‘நீட்' தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், அவரிடமிருந்து ஒலி பெருக்கிப்  பறிக்கப்பட்டதாகவும், அவரை மிரட்டும் தொனியில் ஆளுநர் பேசியதாகவும் கூறுப்படுகிறது.

பின்பு அந்த பெற்றோரின் கேள்விக்கு ஆளுநர் ரவி பதிலளிக்கும் போது, “நீட் தேர்வு ரத்துக்கு நான் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன். கல்வி பொதுப் பட்டியிலில் உள்ளது. ‘நீட்’ தேர்வு ரத்து மசோதா, குடியரசுத்தலைவரிடம் உள்ளது. அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய அதிகாரம் அவருக்கு மட்டுமே உள்ளது. அந்த அதிகாரம் எனக்கு இருந்தால், நீட் தேர்வு விலக்கு மசோதாவில் நான் கண்டிப்பாக கையெழுத்து இட மாட்டேன்” என்று ஆணவத்துடன் கொக்கரித்துள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால், சட்டமன்றத்தில் நிறைவேற்றபட்ட மசோதவை  கையெழுத்து இட்டு, குடியரசு தலைவருக்கு அனுப்புவதுதான் அரசியல் சட்ட அமைப்பின் படி ஆளுநருக்கு உள்ள அதிகாரம். அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி, தான்தோன்றித் தனமாக ஆளுநர் ஆர். என். ரவி பேசிவருவது கண்டனத்துக்குரியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக வெளியேற்றப் பட வேண்டும்.

ஏற்கனவே ஆளுநரை நீக்கக் கோரி தமிழ்நாட்டு மக்களிடம் கையெழுத்துப் பெறும் இயக்கத்தை மறுமலர்ச்சி தி.மு.க. நடத்தி வருகின்றது. ஆளுநரின் இந்த ஆணவப்பேச்சு அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்துகிறது.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
13.08.2023

Saturday, August 12, 2023

சட்டங்களின் பெயரை இந்தி, சமஸ்கிருத மொழியில் மாற்றுவதா? சோவியத் ரஷ்யா போல இந்தியா சிதறும். வைகோ MP அறிக்கை!

இந்தியாவில் நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவை ஆங்கிலேயர் காலத்திலிருந்து பின்பற்றப்பட்டாலும், இதில் பல மாற்றங்கள் இடை இடையே செய்யப்பட்டு உள்ளன.

இந்நிலையில், தற்போது மொத்தமாக இதன் பெயர், கூறுகளை மாற்றி திருத்த புதிய சட்ட முன்வரைவு ஒன்றை நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்துள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவை புதிய பெயர் கொண்ட சட்டங்கள் மூலம் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதீய நியாய சன்ஹிதா, குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, இந்திய சாட்சியச் சட்டத்திற்குப் பதிலாக பாரதீய சாக்ஷ்யா என அழைக்கப்படும் என்று இந்த சட்ட திருத்த முன்வரைவில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா என்ற பெயரையே மாற்றத் துடிக்கும் இந்துந்துவ சனாதனக் கூட்டம், இதற்கு முன்னோட்டமாக சட்டங்களில் உள்ள ‘இந்திய’ என்ற பெயரை ‘பாரதீய’ என்று மாற்ற முனைந்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ்.பின்னணியில் இயங்கி வரும் மோடி அரசு, செத்துப் போன சமஸ்கிருத மொழிக்கும், இந்தி மொழிக்கும் செல்வாக்குத் தேட முயற்சிப்பதும், நகரங்கள், ஊர்கள் பெயர்களை மாற்றி வருவதும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.
அதன் உச்சமாக சட்டங்களின் பெயரையும், ஏன் நாட்டின் பெயரையும் மாற்றிட துணிந்து விட்டது.
ஒன்றிய பாஜக அரசின் இந்நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது.
நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். இல்லையேல் சோவியத் யூனியன் நிலைமைதான் இந்தியாவிற்கும் ஏற்ப்படும்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
12.08.2023

பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல். வைகோ MP கண்டனம்!

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பள்ளி ஒன்றில், நான்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவன் சின்னத்துரை, அதே பள்ளியில் பயிலும் சக மாணவர்களால் வீடு புகுந்து அரிவாளால் வெட்டப்பட்டுள்ளார், தடுக்க வந்த அவரது தங்கை சந்திரா செல்வியும் தாக்குதலுக்கு ஆளாகி படுகாயம் அடைந்துள்ளார். இவர்கள் இருவரும், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்கிற தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

மாணவர்கள் முழுமையாக நலம்பெற சிறப்புக் கவனம் செலுத்தி சிகிச்சை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
ஒரே பள்ளியில் பயிலுகின்ற மாணவச் செல்வங்கள் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வோடு சக மாணவர்களிடம் அன்பு செலுத்தி சிறப்பாகக் கல்வி பயின்று, வாழ்வில் முன்னேற வேண்டும் என்கிற இலக்கினை மறந்து, தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு தடைக் கற்களாக இருக்கும் சாதி, மத நச்சு உணர்வுகளால் உந்தப்பட்டு, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வருந்தத்தக்கது. கண்டனத்திற்குரியது.
நெல்லை மாவட்ட காவல்துறை விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளான மாணவர்களைக் கைது செய்து உள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் முழுமையாக நலம்பெறவும், அவர்களை சிறந்த பள்ளியில் சேர்த்து உயர்கல்வி பெறுவதற்கான முழு வாய்ப்புகளை தாமே உருவாக்கித் தரவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தி உள்ளது ஆறுதல் அளிக்கிறது.
சாதி, மத உணர்வுகளால் உந்தப்பட்டு, பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் மாணவர்களை அந்தந்த மாவட்ட கல்வித்துறை கவனமாகக் கண்காணித்து சீர்திருத்திட தேவையான நடவடிக்கைகளை முதல் முன்னுரிமை கொடுத்து எடுத்திட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
12.08.2023

Friday, August 11, 2023

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட ஊதியத்தை மாற்றியமைக்க அரசு பரிசீலிக்கிறதா? என வைகோ எம்.பி. அவர்கள் எழுப்பிய கேள்விக்கு, இந்திய ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி 02.08.2023 அன்று அளித்த பதில்!

கேள்வி எண். 1545

(அ) அனைத்துத் துறைகளிலும் பணவீக்கம் மற்றும் ஊதிய உயர்வைக் கருத்தில் கொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தை மாற்றியமைப்பதை அரசாங்கம் பரிசீலிக்கிறதா?
(ஆ) அப்படியானால், அதன் விவரங்கள்;
(இ) அனைத்துத் தரப்புகளின் தொடர் கோரிக்கைகளின் பயனாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை நாட்களை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா?
(ஈ) அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?
ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பதில்:
(அ)மற்றும் (ஆ): மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005, பிரிவு 6 (1) இன் படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒவ்வொரு நிதியாண்டுக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதிய விகிதத்தை, விவசாயத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-AL) மாற்றத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஊதிய விகிதத்தின் அடிப்படையில் ஊரக வளர்ச்சி அமைச்சகம் அறிக்கை வழங்குகிறது.
சிம்லாவில் உள்ள தொழிலாளர் பணியகத்தால் அறிவிக்கப்பட்ட பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கான குறியீடு வேறுபட்டது. முந்தைய நிதியாண்டின் ஊதிய விகிதத்தை விட குறைவான ஊதிய விகிதம் இருக்கும் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் கணக்கிடப்பட்ட ஊதிய விகிதம் இருந்தால், அது முந்தைய நிதியாண்டு ஊதிய விகிதத்தை பராமரிப்பதன் மூலம் பாதுகாக்கப்படுகிறது.
ஊதிய விகிதம் ஒவ்வொரு நிதியாண்டிலும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. இருப்பினும் மாநில அரசுகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட ஊதிய விகிதத்திற்கு மேல் ஊதியத்தை வழங்கலாம்.
(இ) மற்றும் (ஈ): மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005, நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு குறைந்தபட்சம் நூறு நாட்களுக்கு வேலை வழங்குவதற்கான சட்டமாகும். வேலையைச் செய்ய முன்வந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிதியாண்டிலும் வேலை மற்றும் கூலிக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
இது தவிர, வறட்சி மற்றும் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களில் ஒரு நிதியாண்டில் கூடுதலாக 50 நாட்கள் வரை வேலை வாய்ப்பு வழங்கப்படும். சட்டத்தின் பிரிவு 3 (4) இன் படி, மாநில அரசுகள் தங்கள் சொந்த நிதியிலிருந்து உத்தரவாதம் அளிக்கப்பட்ட காலத்திற்கு மேல் கூடுதல் வேலை நாட்களை வழங்குவதற்கு வழிவகை செய்யலாம்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
}11.08.2023

Wednesday, August 9, 2023

தொல்லியல் கல்வெட்டு அறிஞர் ஈரோடு புலவர் செ.இராசு மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. வைகோ MP இரங்கல்!

தமிழகத்தின் தொல்லியல் துறையில் மகத்தான சாதனைகள் புரிந்த ஆய்வறிஞர் அன்புக்குரிய புலவர் செ.இராசு அவர்கள், கோவை மருத்துவ மனையில் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயறுற்றேன்.

ஈரோடு தமிழ் உலகிற்கு வழங்கிய கொடை ஆய்வு அறிஞர் புலவர் இராசு அவர்கள்.

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியிலும், பின்னர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றி ,தொல்லியல் கல்வெட்டு இயல் துறையில் சிகரம் தொட்டார்.

கொங்கு நாட்டு வரலாற்றில் சமண சமயம் எனும் பொருளில்  ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

இந்தியாவிலேயே முதல் இசைக் கல்வெட்டு என்று அறியப்படும், 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈரோடு மாவட்டம் அறச்சலூர் இசைக் கல்வெட்டை முதன் முதலில் வெளிப் படுத்தினார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமணல் பகுதியில் அகழ்வாய்வு செய்து, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ரோமானியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான வணிக உறவை கண்டறிந்து அறிவித்தார்.

கல்வெட்டு, செப்பேடு பட்டயம், தலவரலாறுகள்,  சங்க இலக்கியங்கள் என அவரது ஆய்வுகள் தமிழரின் தொன்மை வரலாற்றை அறியச் செய்தன.

அசைக்க முடியாத ஆதாரங்களுடன் கச்சத் தீவு தமிழருக்கு சொந்தம் என்பதை நிலைநாட்டினார்.

புலவர் செ.இராசு அவர்களின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும். அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
09.08.2023

Saturday, August 5, 2023

மீன்வளம் தொடர்பான கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தில், தற்போதைய பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கப்பட்டதா? என்று ஒன்றிய வெளிவிவகாரத்துறை அமைச்சரிடம் வைகோ எம்.பி எழுப்பிய கேள்விக்கு 27.07.2023 அன்று பதில் அளிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு!

கேள்வி எண்-859

(அ) அண்மைக்காலமாக இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களைத் தாக்கி, படகுகளை சேதப்படுத்தும் செயல்கள் அதிகரித்து வருகிறதா?
(ஆ) அப்படியானால், அதன் விவரங்கள்;
(இ) விடுவிக்கப்பட்ட மற்றும் இன்னும் காவலில் உள்ள மீனவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
(ஈ) நிலைமையைச் சமாளிக்க இந்தியா எடுத்த நடவடிக்கை என்ன?
(உ) மீனவர்களின் சேதமடைந்த படகுகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டதா? அப்படியானால், அதன் விவரங்கள் யாவை?
(ஊ) மீன்வளம் தொடர்பான கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தில், தற்போதைய பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கப்பட்டதா? பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் வழி காணப்பட்டதா?
(எ) அப்படியானால், அதன் விவரங்கள், இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன?
வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளீதரன் பதில்:
(அ முதல் ஈ வரை) சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் அவ்வப்போது கைது செய்யப்படுகின்றனர். இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவங்கள் குறித்தும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவது தொடர்பான செய்திகள் வரும்போதெல்லாம், அரசு தூதரகத்தின் மூலம் இலங்கை அரசிடம் அதுகுறித்து விசாரணை நடத்துகிறது. கிடைக்கப்பெற்ற தகவலின்படி, இந்த ஆண்டில் இதுவரை 2 தாக்குதல்கள் நடத்தப்பட்டு, 74 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
(உ முதல் எ வரை) இந்திய மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு இந்திய அரசாங்கம் அதிக முன்னுரிமை அளிக்கிறது. இலங்கை மீனவர்களுடனான பேச்சுவார்த்தையின் போது பிரதமர் உட்பட அரசாங்கம் உயர் மட்டத்தில் மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டு வருகிறது.
மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினையாகக் கருதுமாறு இலங்கை அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், எந்தச் சூழ்நிலையிலும் பலாத்காரத்தைப் பயன்படுத்தாமல் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து, மீன்பிடித்துறை தொடர்பான கூட்டு செயற்குழு கூட்டத்தின் வழக்கமான கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மீன்வளம் தொடர்பான கூட்டுக் குழுக் கூட்டம் அண்மையில் இரு தரப்புக்கும் இடையே 2022 இல் நடைபெற்றது. மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகள் தொடர்பான பிரச்சினைகள் உட்பட அனைத்து மீன்பிடி பிரச்சினைகளையும் கூட்டு செயற்குழுவில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
05.08.2023

Friday, August 4, 2023

‘இ ஷ்ரம்’ போர்ட்டலில் பதிவு செய்வதன் பலன் குறித்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதா? வைகோ MP கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!

கேள்வி எண். 896

‘இ ஷ்ரம்’ போர்ட்டலில் பதிவு செய்வதன் பலன் குறித்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என்று நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் வைகோ எம்.பி. அவர்கள் எழுப்பிய கேள்விக்கு 27.07.2023 அன்று இந்திய ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் அவர்கள் அளித்த பதில் வருமாறு:-
(அ) இ-ஷ்ரம் (eshram.gov.in) இணைய பக்கத்தில் 30 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது உண்மையா?
(ஆ) அப்படியானால், மாநில வாரியாக, குறிப்பாக தமிழ்நாட்டின் பதிவு விவரங்கள் என்ன?
(இ) தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் 2 லட்சம் விபத்துக் காப்பீடு, மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுமா?
(ஈ) அப்படியானால், அதன் விவரங்கள்.
(உ) அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ ஷ்ரம் இணைய பக்கத்தில் பதிவு செய்வதன் பலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஏதேனும் சிறப்பு முகாம்கள் அல்லது சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புக்கான இணை அமைச்சர் ராமேஸ்வர் டெலி பதில்
(அ) முதல் (உ): ஆதார் மூலம் சரிபார்க்கப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களின் விரிவான தேசிய தரவுத்தளத்தை உருவாக்குவதற்காக இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 26 ஆகஸ்ட் 2021 அன்று ‘இ ஷ்ரம்’ (eshram.gov.in) இணைய பக்கம் அறிமுகப்படுத்தியது. ‘இ ஷ்ரம்’ இணைய பக்கம், 30 தொழில் துறைகள் மற்றும் சுமார் 400 தொழில்களின் கீழ் பதிவு செய்ய அனுமதிக்கிறது.
ஜூலை 18, 2023 நிலவரப்படி, 28.96 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் ‘இ ஷ்ரம்’ இணைய பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 84 இலட்சத்து 74 ஆயிரத்து 48 அமைப்புச் சாரா தொழிலாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
விபத்துக் காப்பீட்டுத் தொகையை 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் திட்டம் எதுவும் தற்போது பரிசீலனையில் இல்லை.
விழிப்புணர்வுக்காகவும், அமைப்புசாரா தொழிலாளர்களை ‘இ ஷ்ரம்’ இணைய பக்கத்தில் பதிவு செய்வதைத் துரிதப்படுத்தவும் அமைச்சகம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பொது சேவை மையத்துடன் (CSC) ஒருங்கிணைத்து அவ்வப்போது அமைச்சகத்தால் பல பதிவு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இஷ்ராமில் பதிவு செய்ய தொழிலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக ஊடக தளங்களும் பயன்படுத்தப்படுகின்றன. மாநில சேவா கேந்திரா (SSKs) மற்றும் பொது சேவை மையங்களின் சேவைகள் மூலம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பதிவு செய்வதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. அலைபேசி செயலியிலும் (UMANG app) பதிவு இணைப்பு வசதி உள்ளது. இது தொழிலாளர்களிடையே பயன்பாட்டை அதிகரிக்கவும், அவர்களின் அலைபேசிகளின் வசதிக்கேற்ப பதிவு/புதுப்பிப்பு வசதியை வழங்க உள்ளது.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
04.08.2023