Monday, May 15, 2017

சிறை சென்றது ஏன்? வைகோ கடிதம்-4, மக்கள் ஆட்சிக்கு மகுடமே பொது வாக்கெடுப்பு! பாகம்-4!

மாநிலங்களவையில் அண்ணா:-

அந்த அடிப்படையில்தான் இன்றைக்கு என் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்திய நாட்டின் இறையாண்மைக்கு, ஒற்றுமை ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கின்ற வகையில் பேசுவதற்கு, பேச்சு உரிமைகளில் இடம் இல்லை. Reasonable restrictsions என்ற வரையறைக்குள் இது வந்து விடும். இதற்குக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்று திருத்தம் கொண்டு வந்தார்கள்.

இது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் விவாதம் வந்தது. கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. அப்போது, பேரறிஞர் அண்ணா மாநிலங்கள் அவை உறுப்பினர். 1963 ஜனவரி 25 ஆம் நாள் சபை கூடுகிறது. எந்த அன்னைத் தமிழ் மொழிக்காக, சரியாக ஓராண்டு கழித்து மலைக்கோட்டைத் திருநகராம் திருச்சிராப்பள்ளியில், கீழப்பழுவூர் சின்னச்சாமி, தணலின் நாக்குகளுக்குத் தன் உயிரைத் தாரை வார்த்துக் கொடுத்தானோ, அதே ஜனவரி 25 ஆம் நாளில்; 1963 ஆம் ஆண்டு, பேரறிஞர் அண்ணா மாநிலங்கள் அவையில் பேசுகிறார். அவையின் துணைத் தலைவரான சகோதரி மார்கரெட் ஆல்வா பேரவைத் தலைவர் நாற்காலியில் அமர்ந்து இருக்கின்றார்.

அறிவுக்கடல் அல்லவா அண்ணா? ஆகாயம் போன்ற அவரது சிந்தனை ஓட்டத்தை நான் அந்த உரையில் பார்க்கிறேன். அதில் முதல் வாக்கியத்தை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

அவர் உருவாக்கிய பாசறையில் இருந்து வந்தவன் நான். அதில் வார்ப்பிக்கப் பட்டவன். பேரறிஞர் அண்ணா அவர்களைக் காலம் விரைவாகக் கொத்திக் கொண்டு போனதால் ஏற்பட்ட துன்பங்களை எண்ணி, இன்று வரையிலும் கலங்கு கின்றவன்.

ஆக்கிரமிப்பாளனை அழைத்துப் பேசுகின்றீர்கள்: அமைதி வழியில் கேட்டால், புறக்கணிக்கின்றீர்களே?

அண்ணா பேசுகிறார், Madam Deputy Chairman; It is a painful pardaox that we are discussing today the amendment of the constitution, to give a legal weapon to the government v‹W brhšÈÉ£L, to pull down not an antagonist, but a protagonist for a cause எப்படிப்பட்ட காலகட்டத்தில், when we are meeting the Chinese aggressor, we are in the discussion table for a negotiation;

சீன ஆக்கிரமிப்பாளர்கள், இமயத்தின் பெரும் பகுதியைக் கைப்பற்றிக் கொண்ட வேளை. நம் படை வீரர்களைப் பலியாக்கியவர்கள், ஆக்கிரமிப்பாளர்களை அழைத்து, பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று இந்திய அரசு அழைத்து இருக்கின்ற நேரத்தில், அப்போதுதான் போர் நிறுத்தம் வந்த நேரத்தில், பேச வாருங்கள் என்று அழைத்து இருக்கின்றபொழுது, நீங்கள் ஒரு கருத்தைத் தடுப்பதற்காக, ஒரு கொள்கையைச் சொல்லுகின்றவனுடைய கருத்தைத் தடுப்பதற்காக, அரசியல் சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்து இங்கே விவாதிப்பது ஒரு வேதனையான, விசித்திரமாக இருக்கின்றது.

‘It is a painful paradox’’ என்று தொடங்கி, Protagonist என்ற சொல்லைப் பயன்படுத்தி அண்ணா கூறுகிறார்.

அவர் அந்தச் சொல்லை எப்படிப் பயன் படுத்தினார் என்பதை நான் எண்ணிப் பார்த்தேன். புரோட்டகானிஸ்ட் ‘Protagonist’ என்பது ஒரு கிரேக்கச் சொல்.

ஒரு காவியத்தில் அல்லது ஒரு கவிதை நாடகத்தில், மூன்று பாத்திரங்கள் இருப் பார்கள்.

ஒரு இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்லுகிறவன், புரோட்டகானிஸ்ட் (Protagonist).

அடுத்து வருவது டியூட்ராகானிஸ்ட். (Deutragonist).

அவன் உடந்தையாகவும் இருக்கலாம்; அல்லது விலகியும் செல்லலாம். (குழப்பவாதி; சந்தர்ப்பவாதி)

அடுத்தது, டிரைடகானிஸ்ட் (Deutragonist):-

அவன், துன்பங்களை, கேடுகளை விளைவிப்பவன்; இலட்சியவாதிக்கு எதிரான நிலை எடுப்பவன்.

இந்த மூவரும் சேர்ந்ததுதான் கிரேக்கத்தில் ஒரு காவியம், ஒரு இலக்கியம்!

அண்ணா அழகாக அந்தச் சொல்லைப் பயன்படுத்துகின்றார்.

நான் ஒரு கொள்கையை முன்னெடுத்துச் செல்லுகிறேன். கிரேக்கத்தின் காவியங்களில் ஒரு இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்லுகிறவன் ‘புரோட்டகானிஸ்ட்’ என்று சொல்லப்பட்டான்; அப்படிப்பட்ட கருத்தை நான் இங்கே முன் வைப்பதைத் தடுப்பதற்கு, ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து இருக்கின்றீர்களே?

சீன ஆக்கிரமிப்பாளனை அழைத்து, ஒரு மேசையில் அமர வைத்துப் பேச முற்பட்டு விட்ட இந்த அரசு, எங்களை ஏன் அழைத்துப் பேச முற்படவில்லை?

நான் திராவிட நாடு கேட்டேன். நாகர்களுக்குத் தனிநாடு கேட்ட பிஜோவைப் போல என்று, வரலாறு தெரியாதவர்கள் சொல்லுகின்றார்கள். நாங்கள் பிஜோவைப் பார்த்துக் கேட்கவில்லை.

நாங்கள் தனிநாடு கேட்கிறோம். எங்களை ஏன் அழைத்துப் பேசவில்லை? தேசிய ஒருமைப் பாட்டுக்குழு (National Integration Committee) ஒன்றை அமைத்து இருக்கின்றீர்கள். அதற்குத் தலைவராக யாரைப் போட்டு இருக்கின்றீர்கள்? ஒரு வலிமையான மனிதரை. தேசிய ஒருமைப்பாட்டில் உறுதியான, திறமையான ஒரு மனிதரை. அந்தக் கொள்கைக்காகவே இருக்கின்ற சர் சி.பி. இராமசாமி அய்யரை அல்லவா அதற்குத் தலைவராக அறிவித்து இருக்கின்றீர்கள்? அவர் யார்?

அவர்தான், 1947 ஆகஸ்ட் 15 அன்று, இந்தியா விடுதலை பெற்ற நாளில், திருவிதாங்கூர் திவானாக இருந்து கொண்டு, ‘இனி திருவிதாங்கூர் சமஸ்தானம் தனிநாடு’ என்று மன்னரைப் பிரகடனம் செய்ய வைத்து, பாகிஸ்தானோடு ஒப்பந்தம் செய்து கொண்டவர். இன்று, அவரைத் தான், இந்திய தேசிய ஒருமைப் பாட்டுக் குழுவுக்குத் தலைவராக நியமித்து இருக்கின்றீர்கள்.

நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று கருத்துகளைக் கேட்பதற்காக, ஒருமைப் பாட்டுக் குழுவினர் பயணித்தார்களே, எங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஏன் அழைத்துப் பேசவில்லை? எங்களை ஏன் சந்திக்கவில்லை? என்னை ஏன் சந்திக்கவில்லை? என்று நான் கேட்கவில்லை.

ஏனென்றால், நாங்கள் அரசாங்கத்தின் விருந்தாளிகளாக வேலூர் சிறைக்குள் இருந்தோம். சின்னச் சின்னக் கொட்டடிகளுக்கு உள்ளே அடைக்கப்பட்டு இருந்தோம்.

ஆனால், எங்கள் கட்சியின் அமைப்புச் செயலாளர் என்.வி.நடராசன் வெளியில் இருந்தாரே? எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரன் வெளியில் இருந்தாரே? எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாராம் வெளியில் இருந்தாரே? அவர்களை அழைத்துப் பேசி இருக்கலாமே?

சி.பி.இராமசாமி அய்யர் சிறைக்கு வந்து என்னைப் பார்க்கவில்லை என்று நான் கூற மாட்டேன். நான் மிகச் சாதாரணமானவன். அவர் பெரிய மனிதர். அவர் பிறரைச் சிறைக்கு உள்ளே அடைத்துத்தான் பழக்கப்பட்டவரே தவிர, சிறைக்கு உள்ளே போய்ப் பார்த்துப் பழக்கப்பட்டவர் அல்ல.

கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள ஏன் தயக்கம்? தமிழ்நாட்டில் 50 இலட்சம் வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் ஆட்சியில் இருக்கின்றது. நாங்கள் 35 இலட்சம் வாக்குகளைப் பெற்று இருக்கின்றோம். காலம் சீராகச் செல்லுமானால், அடுத்த தேர்தலுக்குப் பிறகு, எங்கள் திராவிட முன்னேற்றக் கழகம்தான் ஆட்சியில் இருக்கும்.

எங்கள் கருத்து தவறு என்றால் திருத்துங்கள். கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கே இடம் கிடையாதா? ஒரு கருத்தை நசுக்குவதற்காக இப்படி ஒரு சட்டமா? நாங்கள் சொல்லுகின்ற கருத்து தவறாக இருந்தால், எங்களைத் திருத்துங்கள். உங்களிடம் நல்ல ஆழமான, ஆணித்தரமான கருத்து இருந்தால், அதைக் கொண்டு, எங்கள் கருத்திலே ஒரு மாற்றத்தை ஏற்படுத்துங்கள். ஆனால், எங்களை வற்புறுத்தாதீர்கள். உங்கள் கருத்தை எங்கள் மீது திணிக்காதீர்கள்.

இப்படியெல்லாம் அருமையாக அவர் கருத்துகளை எடுத்து வைத்த வாதம், அரசியல் சட்டத்தின் 6 ஆவது திருத்தத்தின்போது நடந்தது.

அப்போதுதான், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிப்பதை ஏற்க முடியாது என்ற சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள்.

அதற்குப் பிறகுதான், 1967 இல், Ulnawful Activities Prevention Act சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். அது பின்னர் புதிய புதிய வடிவங்களை எடுக்கின்றது.

Maintenance of Internal Security Act -MISA என்றார்கள். Prevention of Terrorism Act-POTA என்று ஒரு வடிவத்தை எடுக்கிறது. அதே பிரிவுகளைக் கொண்டுதான் இன்றைக்கும் Ulnawful Activities Prevention Act சட்டம் இருக்கின்றது. அதன் அடிப்படையில்தான் ஒரு இயக்கம் தடை செய்யப்படுகின்றது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டு இருக்கின்றது.

அந்தத் தடை தவறானது என்று நான் தீர்ப்பு ஆயத்திலும், உயர்நீதி மன்றத்திலும் வாதாடுகின்ற பொழுது,

‘அவர்கள் கேட்கின்ற தமிழ் ஈழம், இந்திய ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் எவ்விதத்தில் கேடு விளைவிக்கின்றது? அது எப்படி ஆபத்தானது? அவர்கள் கேட்கின்ற தமிழ் ஈழத்தில், தமிழகத்தின் ஒரு அங்குல மண்ணைக் கூடக் கேட்கவில்லை. தந்தை செல்வாவோ, மாவீரர் திலகம் பிரபாகரனோ கேட்கவில்லை. ஆனால், தமிழகத்தையும் சேர்த்து அவர்கள் தமிழ் ஈழம் அமைக்கப் போவதாக, பொய்யாக, மத்திய அரசு வகுத்து இருக்கின்ற, அபாண்டங்கள் நிறைந்த வழக்குகள் மூலமாக, இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்து இருக்கின்றார்கள். அது செல்லாது; அதை நீக்க வேண்டும்’ என்று என் வாதங்களை எடுத்து வைத்து இருக்கின்றேன்.

வடக்கு எல்லைக்குச் செல்வோம்.

இப்போது, இந்தியாவின் நிலைமையைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். 1947 ஆகஸ்ட் 15 இந்தியா விடுதலை பெற்றது. பாகிஸ்தான் பகுதியில் இருந்து பழங்குடியினரும், பாகிஸ்தான் படையினரும் ஆயுதங்களோடு காஷ்மீருக்கு உள்ளே ஊடுருவி விட்டார்கள் என்று, காஷ்மீர் மன்னர் ஹரிசிங், நேருவுக்குத் தாக்கல் அனுப்புகின்றார். ‘எங்களைப் பாதுகாக்க வாருங்கள்; இந்தியப் படைகளை அனுப்புங்கள். இந்தியாவோடு காஷ்மீரை இணைப்பதற்கு நான் ஒப்புதல் தருகின்றேன்; அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுகிறேன் என்கிறார்.

அப்போது, இந்தியாவில் இருந்த சமஸ்தானங்கள் எல்லாம், இந்திய யூனியனோடு இணைந்து கொண்டு இருந்த காலம். அதுபோல, எங்கள் காஷ்மீரமும் இணையும் என்று, அக்டோபர் 26 ஆம் தேதி, காஷ்மீர் மன்னர் ஹரிசிங் தகவல் தருகின்றார்.

நேருவின் உறுதிமொழிகள்:-

அன்றைக்கே, இங்கிலாந்து பிரதமர் கிளமெண்ட் அட்லிக்கு, 1947 அக்டோபர் 26 ஆம் தேதியே, இந்தியப் பிரதமர் நேரு கடிதம் எழுதுகின்றார்.

‘காஷ்மீருக்கு உள்ளே நாங்கள் படையை அனுப்ப நேர்ந்தது. ஆனால், காஷ்மீர் மக்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். They have to decide their destiny.

இந்தியாவோடு இருப்பதா? விலகுவதா? தனிநாடாக ஆவதா? என்பது, காஷ்மீர் மக்களுடைய முடிவு. They have to give their consent.

அதை, பொது வாக்கெடுப்பின் மூலமாக நிறைவேற்றுவோம். We will decide it a by a plebiscite.

இவ்வாறு கடிதம் எழுதிய நேரு, நவம்பர் 2 ஆம் தேதி, அனைத்து இந்திய வானொலியில் உரை ஆற்றியபோதும், இதே கருத்தைச் சொல்லுகின்றார். ‘காஷ்மீரத்தின் எதிர்காலத்தை முடிவு செய்ய வேண்டிய கடமை, பொறுப்பு, காஷ்மீர் மக்களுக்குத்தான் உண்டு. அது, வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறும்’ என்று வானொலியில் அறிவித்து விட்டு, பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகானுக்கு, ‘நாங்கள், வாக்கெடுப்பில் காஷ்மீர் மக்கள் முடிவுக்கு விட்டு விடுவோம்’ என்று கடிதமும் அனுப்புகிறார். மறுநாள், நவம்பர் மாதம் 3 ஆம் தேதியும் வானொலியில் பேசுகிறார். அதனையே வலியுறுத்துகிறார்
.
1948 மார்ச் 5 அரசியல் நிர்ணய சபை (Constituent Assembly)யில் நேரு பேசு கின்றார்.

We have given a promise, not only to the union, but to the United Nations, to the whole world, that the fate of the Kashmir will be dcided by the people of Kashmir; That will be decided by a plebiscite.

நாம் ஒரு வாக்குக் கொடுத்து விட்டோம். We stood by it; we stand by it and we will stand by it.

இந்த வாக்குறுதியில் நாங்கள் உறுதியாக இருப்போம்’
என்கிறார்.

1951 இல், லண்டனுக்குப் போகின்றார். ஜனவரி 16. செய்தியாளர்களைச் சந்திக்கிறார். அவர்கள் கேட்கிறார்கள். அப்போது சொல்லுகின்றார்: ‘We have made a commitment for a plebiscite in Kashmir. காஷ்மீரில் ஒரு பொது வாக்கெடுப்பு நடக்கும். அதன்படி, அந்த மக்கள் முடிவு செய்வார்கள்.’

மீண்டும், 1952 மார்ச் 26, ஆகஸ்ட் 7 ஆகிய நாள்களில், இந்திய நாடாளுமன்றத்தில் உரை ஆற்றும்போதும், இதையே குறிப்பிடுகின்றார்.

‘நாம் வாக்குக் கொடுத்து விட்டோம். ஒருவேளை, காஷ்மீர் நம்மை விட்டு விலகிச் செல்வதாக முடிவு எடுத்தால், நம் இருதயங்கள் காயப்படலாம்; ஆனால், உலகத்துக்குக் கொடுத்த வாக்குறுதியை நாம் நிறைவேற்றித் தீர வேண்டும். என்கிறார். 1954 ஆம் ஆண்டு நாடாளு மன்றத்தில் பேசும்போதும், அதே கருத்தை மீண்டும் பேசி பதிவு செய்கின்றார்.

நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும்தான் இங்கே பதிவு செய்கின்றேன்.

பத்து ஆண்டுகள் கழிகின்றன. 1964. முகமது கரீம் சாக்ளா, மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி, இந்தியாவின் கல்வி அமைச்சராக, ஐ.நா. சபையில் பேசுகின்றார்.

1947 முதல் 1954 வரையிலும், பண்டித நேரு, உலகத்துக்கும், ஐ.நா. மன்றத்துக்கும், இந்திய நாடாளுமன்றத்துக்கும், அரசியல் நிர்ணய சபைக்கும் தெரிவித்த கருத்து, காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு.

எது பொது வாக்கெடுப்பு?

இப்போது, 64 இல் சாக்ளா பேசுகின்றார்.

பொது வாக்கெடுப்பா? காஷ்மீரில் தான் நாங்கள் மூன்று பொதுத் தேர்தல்களை நடத்தி விட்டோமே? அதுதான், பொது வாக்கெடுப்பு. அதைத் தவிர வேறு எதுவும் நடைமுறையில் சாத்தியம் இல்லை. பாகிஸ்தானில் பலூச் மக்கள் கேட்கின்றார்கள்; பக்டூனிஸ்தான் மக்கள் கேட்கின்றார்கள்; பட்டாணியர்கள் கேட்கின்றார்கள்; கிழக்கு பாகிஸ்தான் மக்கள் கேட்கின்றார்கள்; அங்கெல்லாம் நீங்கள் பொது வாக்கெடுப்பு நடத்துவீர்களா? என்று கேட்கின்றார்.

இப்படி இந்தியா தன் நிலையை மாற்றிக் கொண்டது.

சோவியத் ஒன்றியத்தின் அரசியல் சட்டத்தில் பிரிந்து போகும் உரிமை உண்டு; சீன அரசியல் சட்டத்தில் பிரிந்து போகும் உரிமை உண்டு; பின்னர் அகற்றப்பட்டது; பர்மா சட்டத்தில் உரிமை உண்டு; பின்னர் அகற்றப்பட்டது. இந்தியாவில், காஷ்மீரத்தில் பொது வாக்கெடுப்பு குறித்து மேற்கொள்ளப் பட்ட நிலைப்பாடு, பின்னர் மாற்றிக் கொள்ளப்பட்டது.

பொது வாக்கெடுப்பின் வகைகள்:-

ஒரு பொது வாக்கெடுப்பு என்பது எப்பொழுது வருகின்றது?

ஒரு தேசிய இன மக்கள், தங்களுடைய சுய நிர்ணய உரிமையை, தன்னாட்சி உரிமையை நிலைநாட்டிக் கொள்ள பொது வாக்கெடுப்பு வருகின்றது.

சுவிட்சர்லாந்து நாட்டில், ஒரு குறிப்பிட்ட மக்கள், இதுகுறித்து வாக்கெடுப்பு வேண்டும் என்று, அவர்கள் கையெழுத்து இட்டுக் கோரிக்கை வைத்தால் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்படும்.

பொது வாக்கெடுப்பு என்பது, இரண்டு விதமாக அமையலாம். ஒரு நாட்டின் எல்லைகளைத் தீர்மானிக்க; ஒரு நாடு, இன்னொரு நாட்டின் பகுதியாகச் சேருவதற்கு அல்லது பிரிந்து செல்லுவதற்கு; அல்லது, பன்னாட்டு ஒப்பந்தங்களை ஏற்க அல்லது மறுக்க. இது ஒருவிதமான பொது வாக்கெடுப்பு.

ஒரு நாட்டுக்கு உள்ளேயே பொது வாக்கெடுப்பு நடத்தலாம். (Domestic Referendum) ஓரு குறிப்பிட்ட பிரச்சினையை ஏற்க அல்லது மறுக்க; எடுத்துக் காட்டு, மதுவிலக்கு. மது வேண்டுமா? வேண்டாமா? என்று கூட ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தலாம்.

நோர்வேயின் தோற்றம்:-

இந்த அடிப்படையில், தேசிய இனங்கள், தங்கள் சுதந்திரத்தைத் தேடிக் கொள்ளத் தொடங்கியதன் விளைவாக, 1905 ஆகஸ்ட் 13 இல், அதுவரை ஒன்றாக இருந்த ஸ்வீடனில் இருந்து பிரிந்து செல்வதற்காக, நோர்வே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தியது. இத்தனைக்கும், நோர்வே மக்களை, சுவீடன்காரர்கள் ஆதிக்கம் செலுத்தவில்லை. நோர்வீஜியப் பெண்களுக்குப் பாலியல் கொடுமைகளை விளைவிக்கவில்லை. நோர்வீஜியர்களின் வழிபாட்டுத் தலங்களை, ஸ்வீடன்காரர்கள் அழிக்கவில்லை. இராணுவத்திலோ, அரசுப் பணிகளிலோ, நோர் வீஜியர்களுக்கு இடம் இல்லாமல் செய்ய வில்லை. இருவரும், சம அந்தஸ்து உள்ளவர்களாக இருந்தார்கள். சம உரிமை உள்ளவர்களாகவே இருந்தார்கள்.

ஆனாலும்கூட, நாங்கள் தனி இனம்; தனித்து வாழ்வோம் என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், 100 விழுக்காடு நோர்வீஜியர்களும், சுவீடனில் இருந்து பிரிந்து செல்வோம் என்று முடிவு எடுத்தார்கள்.

ஒரு சம்பவத்தை மட்டும் குறிப்பிடுகின்றேன். 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதே நோர்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவில், தெற்கு ஆசிய பிராந்திய அமைதி மாநாட்டில் நான் பேசினேன்.

உலகம் தமிழர்களை அநாதைகளாகக் கைவிட்ட வேளையில், ஆண்டன் பாலசிங்கம் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த நேரத்தில், மரணத்தின் வாசலில் இருந்த அவரை அழைத்துக் கொண்டு வந்து, பழுதுபட்ட இரு சிறு நீரகங்களையும் மாற்றி, மாற்றுச் சிறுநீரகங்களைப் பொருத்தி, அவரது உயிரைக் காப்பாற்றிக் கொடுத்த நோர்வே நாட்டுக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன் என்று நான் பேசினேன்.

இரண்டாவது நாள் அமர்வுக்கு, ஜெர்மானிய நாடாளுமன்ற உறுப்பினரான ஒரு சகோதரி தலைமை தாங்கினார்.அமர்வில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். அப்போது, எனக்கும், சிங்கள நாட்டில் இருந்து வந்த பௌத்த பிட்சுகளுக்கும் வாக்குவாதம் வந்தது. மோதல் ஒன்றும் இல்லை.

புத்த பிட்சு சொன்னார்: Eelam is a day dream. It is a mirage; ஈழம் பகல் கனவு; அது கானல் நீர் என்று சொன்னார்.

நான் உடனே எழுந்து சொன்னேன்:

Sometime back, an independent Norway was considered as a day dream. But, Independent Norway has become a reality. Likethat, a day will come; Tamil Eelam will usher as a separate nation.

நோர்வே என்ற தனி நாடு அமைவது ஒரு பகல் கனவு என்று, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் கருதினார்கள். ஆனால், அங்கே பொது வாக்கெடுப்பு நடந்தது. தனி நாடாக மலர்ந்து விட்டது. அதுபோல, தமிழ் ஈழமும் ஒரு தனி நாடாக அமையும் என்று நான் சொன்னேன்.இன்று, நோர்வே ஒரு தனி நாடாக மலர்ந்து விட்டது. இன்று நான் நோர்வேயில் இருந்து பேசுகிறேன் என்றேன்.

பிரிவுக்கு வாழ்த்துச் சொன்ன மன்னர்:-

1944 மே 22,23 ஆகிய நாள்களில், டென்மார்க் நாட்டின் பிடியில் இருந்து விடுபடுவதற்காக, ஐஸ்லாந்திலே பொது வாக்கெடுப்பு நடந்தது. 95 விழுக்காடு மக்கள் வாக்குப்பதிவில் பங்கு ஏற்றார்கள். அவர்களுள், 98 விழுக்காடு ஐஸ்லாந்து மக்கள், தங்கள் நாடு டென்மார்க் நாட்டின் பிடியில் இருந்து விடுபட்டு, தனி நாடாக ஆக வேண்டும் என்று ஆதரித்து வாக்கு அளித்தார்கள்.

இந்த முடிவை, டென்மார்க் நாட்டு மக்கள் ஏற்கவில்லை. வேதனை அடைந்தார்கள். காரணம் என்ன தெரியுமா? அப்போது டென்மார்க் நாடே நாஜி ஜெர்மனியின் பிடியில் இருந்தது. அங்கே ஸ்வஸ்திக் கொடி பறந்து கொண்டு இருந்தது. நாங்களே அடால்~ப் ஹிட்லரின் பிடிக்குள் சிக்கி இருக்கின்றோம். இந்த நேரத்திலா நீங்கள் வெளியேறுகின்றீர்கள்? இப்பொழுதா, எங்களை விட்டுப் பிரிந்து செல்லுகிறீர்கள்? நாஜிகளின் அடிமைப் பிடியில் இருக்கின்ற எங்களுக்கே இது துக்கமான நேரம் அல்லவா? என்று மனம் குமுறினார்கள்.

ஆனால், டென்மார்க் மன்னர் 10 ஆவது கிறிஸ்டியன்சன் என்ன செய்தார் தெரியுமா? “தனிநாடாகப் பிரிந்து செல்ல ஐஸ்லாந்து முடிவு எடுத்து விட்டது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அவர்களுக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அறிவித்தார். வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.

வரலாறு விசித்திரங்களைச் சந்திக்கின்றது. அதே டென்மார்க் நாட்டின் பிடியில் இருந்து, ~பரா என்ற ஒரு தீவு தனியாகப் பிரிந்து செல்ல முடிவு எடுத்து, அவர்களும் பொது வாக்கெடுப்பு நடத்துகின்றார்கள்.

சுதந்திரத் தமிழ் ஈழத்துக்காக இப்படி அடிவயிற்றில் இருந்து குரல் கொடுக்கின்றானே? இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா? என்று நினைப்பவர்களுக்காக, இந்த வாதத்தை வைக்கின்றேன். இந்த ~பரா தீவின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா? 11 ஆயிரத்து 146 பேர்தான். அங்கே பொது வாக்கெடுப்பு நடக்கிறது. 1946 ஆம் ஆண்டு மே மாதம். முடிவு என்ன தெரியுமா?

5656 பேர் தனியாகப் பிரிந்து செல்ல வேண்டும் என்று வாக்கு அளிக்கின்றார்கள். 5490 பேர், பிரிந்து செல்லக் கூடாது, டென்மார்க்கோடுதான் இருக்க வேண்டும் என்ற வாக்கு அளிக்கின்றார்கள். அதாவது, 49.75 விழுக்காட்டினர் டென்மார்க்கோடு இருக்க வேண்டும் என்கிறார்கள். 50.25 விழுக்காட்டினர், தனிநாடாக வேண்டும் என்கிறார்கள்.

இந்த முடிவையும் டென்மார்க் ஏற்றுக்கொள்ள நேர்ந்தது. இன்றைக்கு அந்த ~பரா தீவுகள் ஒரு தனி நாடாக ஆகி விட்டது.

இந்த நிகழ்வுகளை நீங்கள் வரிசைப் படுத்திப் பார்க்கின்றபோது, இந்த நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருந்த இந்தக் காலகட்டத்தில், சோவியத் மண்டலமும் உடைகின்றது.

ரஷ்யாவின் நிலைமை:-

சோவியத் ஒன்றியத்தில் இருக்கின்ற நாடுகள் விரும்பினால் தனியாகப் பிரிந்து செல்லலாம் என்று அரசியல் சட்டம் வகுத்த ரஷ்யா, பின்னர் அதை மறந்து, கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் தன் ஆதிக்கப்பிடிக்குள் கொண்டு வந்து ஒடுக்க முயன்றது. யூகோஸ்லாவியாவின் மார்ஷல் டிட்டோ அதை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்த்தார். அந்த வேளையில், ஹங்கேரி நாட்டில் ஒரு புரட்சிக் குரல் எழுந்தது. அவரும், கம்யூனிஸ்ட் அமைப்பில் இருந்து உருவான ஒரு தலைவர்தான். ஹங்கேரி நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வந்தவர்தான். அவரது பெயர் இம்ரினாகி. ‘எங்கள் ஹங்கேரி நாடு, சுயேச்சையாகத்தான் முடிவு எடுக்கும்; சோவியத் ரஷ்யாவின் கட்டளைகளை, இனிமேல் நாங்கள் ஏற்கமாட்டோம்’ என்று அவர் தன்மானக் கொடியை உயர்த்தியபோது, ரஷ்யாவின் டாங்குகள், ஹங்கேரிக்கு உள்ளே நுழைந்தன.

அப்பொழுது அவர் மக்களைத் திரட்டினார். ஒரு மாலை வேளையில், பனி பொழிந்து கொண்டு இருந்த மலைச்சரிவுகளில் மழையும் கொட்டிய பொழுது, அவர் பேசியதைக் கேட்பதற்காக, இலட்சக் கணக்கான மக்கள் திரண்டு வந்தார்கள்.

இம்ரினாகி பேசிய போது, மழை வலுத்தது. ஒவ்வொரு வரும் குடை கொண்டு வந்து இருந்தார்கள். எல்லோரும் குடைகளை விரித்துப் பிடித்துக்கொண்டார்கள். அதற்கு உள்ளே நின்றுகொண்டு, கொட்டிய மழையிலும் இம்ரினாகியின் பேச்சைக் கேட்டார்கள். அந்த மழையிலும், அவரது பேச்சு அனலைக் கொட்டியது. மக்கள் மனங்களில் வேள்வியை மூட்டியது. மக்கள் அணி திரண்டு எழுந்தார்கள். அது ‘குடைப்புரட்சி’ என்று வரலாறு வர்ணிக் கின்றது.

சோவியத்தின் படை அணிகள், ஹங்கேரிக்கு உள்ளே நுழைந்தன. ஹங்கேரி ஆட்சிப்பொறுப்பைக் கைப்பற்றிக் கொண்டார்கள். இம்ரினாகி கைது செய்யப்பட்டார். 1958 ஜூன் மாதம் 30 ஆம் தேதி, தூக்கில் இடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

31 ஆண்டுகளுக்குப் பிறகு, 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி, அதே நாளில், இம்ரினாகி புதைக்கப்பட்ட இடம் எங்கே என்று தேடிக் கண்டுபிடித்து, ஒரு சின்னஞ்சிறிய கல்லறையைத் தோண்டி, அந்தச் சவப்பெட்டியை எடுத்துக்கொண்டு வந்து, குதிரைகள் பூட்டிய தேரில் வைத்து, பூக்களால் அலங்கரித்து, இலட்சக்கணக்கானவர்கள் இம்ரினாகிக்கு வாழ்த்து முழக்கங்களை எழுப்ப, ஹங்கேரி வீதிகள் வழியாகக் கொண்டு சென்று, ஒரு எழிலார்ந்த கல்லறையை அமைத்து, அங்கே அடக்கம் செய்தார்கள்.

இது ஹங்கேரி நாட்டில்!

1968 இல், செக்கோஸ்லோவேகியா, சோவியத் ரஷ்யாவின் ஆதிக்கத்தை எதிர்த்தது. டூப்செக் (Dubcek) தலைமை தாங்கினார். அங்கும் சோவியத் படைகள் நுழைந்தன. புரட்சியை ஒடுக்கினார்கள். ஆனால், 1990 க்குப் பிறகு, நிலைமை மாறியது. 1990 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி, திருச்சி மலைக்கோட்டை நகரில், இராணுவ மைதானத்தில், பிற்பகல் 1.45 மணிக்கு, இலட்சக்கணக்கானவர்கள் திரண்டு இருந்த திராவிட முன்னேற்றக் கழக மாநாட்டில், உலகைக் குலுக்கிய புரட்சிகள் என்ற தலைப்பில் உரை ஆற்றுகின்றபொழுது, ஹங்கேரி குடைப் புரட்சியைச் சுட்டிக்காட்டிப் பேசினேன்.

‘சோவியத் ரஷ்யாவில், கிரெம்ளினுக்கு எதிரே குரல் கேட்கின்றது. தேசிய இனங்களின் விடுதலைக்குரல் கேட்கிறது. விண்வெளியில் ககாரினை நீந்த வைத்த சோவியத் ரஷ்யா, லைக்கா என்ற நாயை விண்வெளிக்கு அனுப்பி வைத்த சோவியத் ரஷ்யா, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் படை அணிகளுக்கு அச்சத்தைத் தருகின்ற சோவியத் ரஷ்யா, ஹிட்லரின் நாஜிப் படைகள் லெனின்கிராடு, ஸ்டாலின் கிராடை முற்றுகை இட்டபோது விரட்டி அடித்த சோவியத் ரஷ்யா, உலகப் போரின் போக்கை மாற்றிக் காட்டிய கார்ல் மார்க்ஸ் தந்த மூலதனக் கொள்கைகளின் அடிப்படையில், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டிய சோவியத் ரஷ்யா, பிற தேசிய இனங்களை ஒடுக்குகிறது; ஆனால், காலம் மாறும், நிலைமைகள் மாறும்; விடுதலைக் குரலை ஒடுக்க முடியாமல் போய்விடும்; சோவியத் தனித் தனி நாடுகளாக, துண்டுதுண்டாகப் போகின்ற காட்சியை வெகு சீக்கிரத்தில் காண்பீர்கள்’ என்றும் சொன்னேன்.

நான் ஒன்றும் ஆரூடக்காரன் அல்ல; முற்றும் உணர்ந்தவன் அல்ல; தொலை நோக்கோடு கண்டுபிடிக்கின்றவன் அல்ல; நான் வரலாறைப் படிப்பவன்; வரலாறைப் பார்ப்பவன்; வரலாறு பதிவு செய்த நிகழ்ச்சிகளைக் கண்டவன்; அதனால் சொன்னேன்.

அதுதான் நடந்தது, 91 டிசம்பரில். சோவியத் ஒன்றியத்தில் இருந்து குடியரசு கள் பிரிந்தன. 15 நாடுகள் மலர்ந்தன. ஜார்ஜியா தனி நாடு ஆயிற்று. அது ஒரு பொது வாக்கெடுப்பின் மூலமாகப் பிரிந்தது. 99 விழுக்காடு ஆதரவு.

ஸ்லோவேனியா, பொது வாக்கெடுப்பிலே தனி நாடு.

குரேஷியா, 91இல் பொது வாக்கெடுப்பில் தனி நாடு.

அலெக்சாண்டர் பிறந்த மாசிடோனியா, 91 இல் பொது வாக்கெடுப்பில் தனி நாடு.

92 இல் போஸ்னியா-ஹெர்சகோவினா, பொது வாக்கெடுப்பிலே தனி நாடு.

93 இல் ஆறு இலட்சம் மக்களை மட்டுமே கொண்ட எரித்ரியா பொது வாக்கெடுப்பில், 98 விழுக்காடு மக்கள் தனிநாடாக ஆவதற்கு ஆதரவு.

94 இல், ருமேனியாவின் பிடியில் இருந்து நாங்கள் தனி நாடாகப் பிரிந்து செல்கிறோம் என்று பொதுவாக்கெடுப்பில் அறிவித்தது மால்டோவா.
99 ஆகஸ்ட் 31 இல் கிழக்குத் தைமூரில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் ,78.5. விழுக்காடு மக்கள், இந்தோனேசியாவின் பிடியில் இருந்து விடுபட்டுத் தனிநாடாக ஆவதற்கு ஆதரவு. தனிநாடு ஆயிற்று.

2006 மாண்டிநீரோ தனிநாடு. பொது வாக்கெடுப்பில் நூல் இழையில்தான் வெற்றி. 55 விழுக்காடு தேவை என்றார்கள். 55.4 விழுக்காடு வாக்குகள் கிடைத்து, தனிநாடு ஆயிற்று.

2011. தெற்கு சூடான். பல இலட்சம் உயிர்கள் பலியிடப்பட்ட பிறகு, குருதி கொப்பளித்து ஓடியதற்குப் பிறகு, ஆயுதப் புரட்சி நடந்ததற்குப் பிறகு, பொருளாதார அடிப்படையில், தெற்கு சூடான் ஒரு தனி நாடாக இயங்க முடியாது; வடக்கு சூடானை அண்டித்தான் பிழைக்க வேண்டும்; இவர்கள் நில அடிப்படையில் தனி நாடாக ஆக முடியாது என்ற வாதங்களை எல்லாம் உடைத்து நொறுக்கி விட்டு, தெற்கு சூடான் தனிநாடு ஆகி விட்டது.

இன்றைக்கு என்ன நிலைமை?

இப்படி, 1936 க்கும் 60 க்கும் இடையில், கிட்டத்தட்ட 60 புதிய நாடுகள் மலர்ந்து இருக்கின்றன. தன்னாட்சி உரிமையைப் பெற்று இருக்கின்றன. 1950 ஜனவரி 1 முதல், 1959 டிசம்பர் 31 வரையில், பத்து ஆண்டுக் காலத்தில், ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாகப் பதிவு செய்த நாடுகளின் எண்ணிக்கை, தன்னாட்சி உரிமை பெற்ற நாடுகளின் எண்ணிக்கை 106.

இதில், 99 நாடுகள், மற்ற அனைத்து நாடுகளாலும், சுதந்திர நாடுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆறு நாடுகள் அத்தகைய அங்கீகாரத்தைப் பெறவில்லை. ஒரு நாடு, முதலில் மறுக்கப்பட்டு, பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அடுத்து அறுபதுகள். அடுத்த பத்து ஆண்டுகளில், 1960 ஜனவரி 1 முதல், 1969 டிசம்பர் 31 வரையிலும், 163 நாடுகள் ஐ.நா. சபையில் பதிவு பெற்றன. அதில் 155 நாடுகள், சுதந்திர நாடுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.

பிறகு, 1970 ஜனவரி 1 முதல், 1979 டிசம்பர் 31 வரையிலும், 184 நாடுகள், உறுப்பு நாடுகள் ஆயின. அவற்றுள், 169 நாடுகள், சுதந்திர நாடுகளாக ஏற்கப்பட்டன.
அடுத்து, 1980 ஜனவரி 1 முதல், 1989 டிசம்பர் 31 வரையிலும், உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 184 தான். அவற்றுள், 171 நாடுகள் சுதந்திர நாடுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.

தொடருகிறது...

ஓமன் மதிமுக இணையதள அணி

சிறை சென்றது ஏன்? வைகோ கடிதம்-4, மக்கள் ஆட்சிக்கு மகுடமே பொது வாக்கெடுப்பு! பாகம்-3!

தேசிய இனத்தின் அடையாளம்:-

இந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான், காலப்போக்கில், தங்களுக்குத் தாங்களே அரசுகளை அமைத்துக் கொள்வதற்கு, ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உரிமை உண்டு என்ற கோட்பாடு தோன்றியது.

ஒரு தேசிய இனம் என்பது என்ன?

வாழும் நிலம், பேசுகின்ற மொழி, பின்பற்று கின்ற பழக்க வழக்கங்கள், பண்பாடு, கடைப் பிடிக்கும் நாகரிகம், அதனால் ஏற்பட்ட குருதி உறவுகள், அவர்கள் அமைத்துக் கொண்ட அரசுகள், அந்தப் பகுதி மக்கள் ஒரு தேசிய இன மக்களாக அடையாளம் காணப்பட்டனர்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மாமேதை லெனின் அவர்கள், 1914 ஆம் ஆண்டு, தன்னாட்சி உரிமையை, சுய நிர்ணய உரிமையைப் பற்றிக் குறிப் பிட்டார்.

இந்தப் புவியில் வாழக்கூடிய பல்வேறு தேசிய இன மக்கள், தங்களுக்கான அரசுகளை அமைத்துக் கொண்டு, புதிய புதிய நாடுகள் நாளும் இந்த உலகப் பூந்தோட்டத்தில் மலர்ந்துகொண்டே இருக்கின்றன.

அந்த அடிப்படையில்தான் லெனின் சொன்னார்: “மக்கள் தங்களுக்குத் தாங்களே ஒரு அரசை அமைத்துக் கொள்வதுதான், சுய நிர்ணய உரிமை.”

இந்தத் திட்டவட்டமான கருத்தைத் தம் வாழ்நாள் நெடுகிலும் அவர் சமரசம் செய்து கொள்ளாமல் வலியுறுத்தி வந்தார். அதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. கருத்து மறுப்பு உரைகள் வந்தன. இது 2017. 114 ஆண்டுகளுக்கு முன்பு லெனின் கூறியது, இன்று அந்தச் சோவியத்து மண்ணிலேயே நிறைவேறிவிட்டது. தொலைநோக்கோடு அவர் அந்தக் கருத்தைச் சொன்னார்.

1918 ஆம் ஆண்டு, அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சன், பிப்ரவரி 11 ஆம் நாள், அவர் இன்னும் திட்டவட்டமாகச் சொன்னார்:

‘‘People are governed only by their consent.

மக்கள், தங்கள் விருப்பப்படிதான் அவர்களுடைய ஆட்சியை அமைத்துக் கொள்ளுகின்றார்கள்.

That is the right of self-determination. அதுதான் தன்னாட்சி உரிமை

It is not mere a a phrase;. இது வெறும் சொற்றொடர் அல்ல;

It is a compulsory imperative. இது, கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய ஒன்று’ என்று உட்ரோ வில்சன் அறிவித்தார்.

அடுத்து, League of Nations; உலக நாடுகள் மன்றம் வருகின்றது.

அடுத்து, ஐக்கிய நாடுகள் சபை அமை கின்றது. 1945 இல், இதைப்பற்றிய விவாதம் எழுகின்றது.

தன்னாட்சி உரிமை Their fundamental right to decide their own destiny ஒவ்வொரு தேசிய இன மக்களும், அவர் களது தலைவிதியை நிர்ணயித்துக் கொள்ளுதல்.

1948 ஆம் ஆண்டு, (Human Rights Declaration) செய்யப்பட்டது. அந்தப் பிரகடனத்தின் 15 ஆவது பிரிவு: All the people shall have the right of self-determination என்று குறிப்பிடுகின்றது. அனைத்து மக்களும் சுய நிர்ணய உரிமைக்கான உரிமை பெற வேண்டும்.

அதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்னால், 1941 இல், இரண்டாம் உலகப் பெரும் போர் நடைபெற்றுக் கொண்டு இருந்த பொழுது, அதில் அமெரிக்கா நேரடியாகத் தலையிடாத காலத்தில், எந்த பிரித்தானிய அரசின் ஆளுமையை உடைத்துக் கொண்டு அமெரிக்கா வெளியேறியதோ, சுய நிர்ணய உரிமையை ~பிலடெல் பியாவில் பிரகடனம் செய்ததோ, அதனுடைய குடியரசுத் தலைவர் ~பிராங்க்ளின் டி ரூஸ்வெல்டும், பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களும், திட்டவட்டமாக அவர்கள் அறிவித்த அட்லாண்டிக் பிரகடனத்தில் (Atlantic Charter) மூன்றாவது பிரகடனம் தன்னாட்சி உரிமை (Right of self-determination). அதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றனர்.

1941 இல் லெனின் இறந்துவிட்டார்.

ஐ.நா. மன்றத்தில் பொதுச்சபை தீர்மானம், 1514 ஆம் எண் தீர்மானம், தன்னாட்சி உரிமையைப் பிரகடனம் செய்கின்ற தீர்மானம்.

அதே தீர்மானம், 1966 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் நாள், 2200 ஆவது தீர்மானமாக முன்வைக்கப்பட்டது. ‘International Covenant on Civil and Political Rights.’

அதுபோலத்தான், சமூக, பொருளாதார அரசியல் உரிமைகளின் அனைத்து உலக ஒப்பந்தமாக, ‘International Covenant on Cultural Social Economic Rights.’ கலாச்சார, பொருளாதார, சமூக உரிமைகளாக, அறிவிக்கப்பட்ட ஒப்பந்தம். 1976 ஆம் ஆண்டு, மே மாதம் நடைமுறைப் படுத்தப்பட்டது.

அப்போது, அதில் பங்கு ஏற்றுக்கொண்ட நாடுகள் 167. இந்தியாவும், இலங்கையும் பங்கு ஏற்றன. ஆனால், அவற்றுள் 76 நாடுகள் மட்டுமே, அதில் கையெழுத்து இட்டன. அதில்தான், சுய நிர்ணய உரிமை பிரகடனம் செய்யப்பட்டது. எனவே, ஐ.நா. மன்றத்தின் அனைத்து உலக ஒப்பந்தத்தின்படி, அனைத்து மக்களுக்கும் தன்னாட்சி உரிமை உண்டு. ‘All the People have the right of self-determination.’

இந்த ஒப்பந்தத்தில், இந்தியாவும், இலங்கையும் கையொப்பம் இடவில்லை.

இந்த உரிமைகளை, தங்கள் சட்டப் புத்தகத்திலேயே கொண்டு வர எந்தெந்த நாடுகள் முன்வந்தன?

“மாகாளி கடைக்கண் வைத்தாள்; ஆகா வென்று எழுந்தது பார் யுகப்புரட்சி” என்றானே கவிஞன் பாரதி, அந்த போல்ஷ்விக் புரட்சி எழுந்ததற்குப் பிறகு, 1918 ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியத் தின் அரசியல் சட்டம் வகுக்கப்பட்டது. அதில், சோவியத் கூட்டு ஆட்சிக் குடியரசு, (Union of Soviet Socialist Republics) மொத்தம் 90 பிரிவுகள். அதில், 49 ஆவது பிரிவாக, Every State have the right to secede... பிரிந்து செல்லக்கூடிய உரிமை, ஒவ்வொரு மாநிலத்துக்கும் உண்டு.

இதற்கு ஏறத்தாழ 18 ஆண்டுகள் கழித்து, சோவியத் ஒன்றியத்தின் அரசியல் சட்டம் மறு வரையறை செய்யப்பட்டது. சில பிரிவுகள் நீக்கப்பட்டன. அப்படி, 1936 ஆம் ஆண்டு மறு வரையறை செய்யப்பட்ட புதிய அரசியல் சட்டத்தில், முந்தைய 49 ஆவது பிரிவு, இப்போது 17 ஆவது பிரிவாக இடம் பெற்றது. ஒவ்வொரு மாநிலமும் பிரிந்து செல்லக் கூடிய உரிமையை மீண்டும் உறுதிப்படுத்தியது.

லெனின் மறைவுக்குப் பிறகு, அவருடைய இறுதிச் சடங்கில் பங்கு ஏற்க வேண்டிய லியன் ட்ராட்ஸ்கி விளாடிவாஸ்டாக்கில் இருக்கின்றான். ‘நீ வருவதற்குள் இறுதிச் சடங்குகள் முடிந்து விடும்’ என்று தகவல் வருகின்றது. அவர் வெளிநாட்டு அமைச்சர். அவர் வருகையைத் திட்டமிட்டுத் தவிர்த்தார் ஸ்டாலின். ஆனால், இறுதிச் சடங்குகள் பின்னரே நடைபெற்றன. நிலைமைகள் மாறின. ஜோசப் ஸ்டாலின், சோவியத் ஒன்றியத்தின் அதிபர் ஆனார். சோவியத் ஒன்றியத்துக்கு உள்ளே, ஜார்ஜியாவும், உக்ரைனும் ஒடுக்கப்பட்டன. அந்த மாநிலங்களுடைய உரிமைகள் நசுக்கப்பட்டன.

இதயக் கதவுகளைத் தட்டுகிறேன்:-

எதிர்காலத்தில், இளைய தலைமுறையினர் என்றாவது ஒருநாள், மாணவர் சமுதாயம், இந்த இனத்தினுடைய குரலை அவர்கள் பரிசீலிக்கின்ற வேளையில், அடியேனின் கருத்தையும் அவர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்பதற்காக, அந்த உணர்வோடுதான் நான் எழுதிக்கொண்டு இருக்கின்றேன். அரசியல் எல்லைகளை எல்லாம் கடந்து, குமுறிக் கொண்டு இருக்கின்ற என்னுடைய இருதயத்தின் வேதனைகளை, என் நெஞ்சில் எழுகின்ற சில துயர ஓலங்களைப் பதிவு செய்கின்றேன்.

நமக்கு அருகிலே இருக்கின்றது பரந்து பட்ட நிலப்பரப்பைக் கொண்டு இருக்கின்ற செஞ்சீனம். இன்றைக்கு உலகச் சந்தையில் அனைவரையும் வீழ்த்தி முதல் இடத்துக்கு வரத் துடித்துக்கொண்டு இருக்கின்றது. அங்கே, எண்ணற்ற மொழி பேசுகின்ற மக்கள் வாழ்கின்றனர். எண்ணற்ற தேசிய இனங்கள் உள்ளன. அவை குவிந்து கிடந்த காரணத்தால், பாட்டாளித் தோழர்களை மாவோ ஒன்றாக அணி திரட்டிக் கொண்டு இருந்த காலத்தில், ஆயுதம் ஏந்திக் கொண்டு இருந்த நாள்களில், நடந்தே மக்களைச் சந்தித்துக்கொண்டு இருந்த வேளைகளில், கம்யூனிஸ்ட் கட்சி வலுப்பெற்றுக் கொண்டு இருந்த காலத்தில், அவரது தலைக்கு விலை வைக்கப்பட்டு இருந்த காலத்தில், கோமிண்டாங் கட்சி அரசின் கை ஓங்கி இருந்த காலத்தில், செஞ்சீனத்துக்காக அரசியல் சட்டத்தைக் கம்யூனிஸ்டுகள் வகுக்கின்ற வேளையில், “நாங்கள் அமைக்கின்ற அரசில், எந்த ஒரு இனமும், எந்த ஒரு மாநிலமும் பிரிந்து செல்லக்கூடிய உரிமையைக் கொடுப்போம்” என்று 1931 ஆம் ஆண்டு வரையறுத்து வெளியிட்டார்கள்.

மாவோவின் செம்படை வெற்றி பெற்று, 1949 இல், பீகிங் அரச மாளிகையில், செங்கொடியை உயர்த்தியது.

1982 ஆம் ஆண்டு, அதே சீன தேசம், அரசியல் சட்டத்தை மறு வரையறை செய்து, எந்த ஒரு மாநிலமும் எந்த ஒரு இனமும் பிரிந்து செல்லலாம் என்ற அந்தச் சட்டத்தை, அடியோடு நீக்கியது. இனி அதுபற்றிப் பேசவே கூடாது என்றது.

இதோ பக்கத்தில் இருக்கின்றது மியான்மர் (பர்மா). அங்கே ஆங் சான் கொல்லப்பட்டதற்குப் பிறகு, படைத் தலைவர்களின் பிடிக்குள் நாடு சிக்கியது. ஆங் சானின் அருமை மகள் சூகீ, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுக்கிடந்தார். அந்த பர்மாவில், 1947 இல் அமைக்கப்பட்ட அரசியல் சட்டத்தில், பர்மாவில் உள்ள எந்த மாநிலமும் தனியாகப் பிரிந்து செல்லுகின்ற உரிமை உண்டு என்று வகுத்தார்கள். ஆனால், 1974 இல், அந்த உரிமையை எவரும் கடைப்பிடிக்க அனுமதிக்காத பர்மிய இராணுவ ஆட்சி, அரசியல் சட்டத்தில் இருந்து அந்தப் பிரிவை அகற்றியது.

தேசத்துரோகக் குற்றச்சாட்டு:-

ஒரு நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் எதிராக எவரும் பேசினால், அது தேசத்துரோகம் என்று அவர்கள் மீது நடவடிக்கை பாயும் நிலையில், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 124 ஏ பிரிவு என்கிற ஆயுதம் பாயும் என்ற நிலையில், தேசத் துரோகக் குற்றச் சாட்டுக்கு ஆளாக நேரிடும் என்ற நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்கு அருகிலே இருக்கக்கூடிய, கல்விக்கும் இசைக்கும் பெருந்தொண்டு புரிந்த அண்ணாமலை அரசர் குடும்பத்தினர் அமைத்துத் தந்து இருக்கக்கூடிய அண்ணாமலை மன்றத்தில், ஈழத்தில் நடப்பது என்ன? என்று, பேசியதற்காக, என் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு பதிவு செய்து, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.

நான் கூண்டில் நிறுத்தப்பட்டேன். ஆனால், நான் கூறிய கருத்தை மறுக்கவில்லை. அப்படி நான் பேசவில்லை என்றோ, நான் பேசிய கருத்து தவறுதான் என்றோ, அதை நான் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்றோ கூறவே இல்லை. அனைத்தையும் ஒப்புக் கொண்டேன்.

இப்போது, குற்றம் சாட்டுகிறேன் என்ற இந்த வழக்கிலும் என் உரையில் எதையும் நான் மறுக்கப் போவது இல்லை.

இந்த 124 ஏ பிரிவு எப்போது வந்தது?

1806 ஆம் ஆண்டு உதித்தது. மெக்காலே தயாரித்துக் கொடுத்து, 1870 வரையிலே நடைமுறையில் இருந்த சட்டத்தில், இந்தத் தேசத்துரோகம், ‘sedition’ என்ற பிரிவு கிடையாது. பின்னர்தான் பிரித்தானிய அரசு 124 ஏ பிரிவை இணைத்தது.

அதற்குப் பிறகுதான், நாட்டுக்குத் துரோகம், தேசத்துரோகம் என்ற பிரிவு வருகின்றது.

வங்கக் கடல் அலைகளில் எங்கள் கரிகாலன் கலம் செலுத்தினான்; எங்கள் ராஜராஜன், புலிக்கொடி பறந்த கடற்படையை, கீழை நாடுகளுக்கு எல்லாம் கொண்டு சென்று வெற்றிக்கொடி நாட்டினான். பல தீவுகளை வென்றான். அங்கெல்லாம் எங்கள் கொடி, புலிக் கொடியாகப் பறந்தது. அந்த அலை கடலில், தமிழர்களின் நாவாய்கள், கிரேக்கத்துக்கும், ரோமாபுரிக்கும், எகிப்து, மெசபடோமியாவுக்கும் சென்று வந்த பண்டைய நாள்களை நினைவூட்டுகின்ற வகையில், அலைகடலை அடக்கி ஆள்வது பிரித்தானியம் ‘Britannia rules the waves; Britons never shall be slaves’ என்றதற்கு அறைகூவல் விடுகின்ற வகையில், இந்தியத் துணைக் கண்டத்தில், கரிகாலன் வழிவந்த நான் கலம் செலுத்துகிறேன் என்றார் ஒட்டப்பிடாரத்து வீர சிதம்பரம்.

அவருக்கு மரக்கலம் வாங்கிக் கொடுக்க, மும்பை நகரத்தில் உதவியாக இருந்து, அந்தக் கப்பல் அங்கிருந்து பயணிப்பதற்கு வழிவகுத்துக் கொடுத்தாரே லோகமான்ய பால கங்காதர திலகர், ‘சுயராஜ்யம் எனது பிறப்பு உரிமை’ என்று முழங்கினாரே, அவர் மீது, இந்த 124 ஏ பிரிவு பாய்ந்தது.

திலகருக்காக வாதாடிய ஜின்னா:-

திலகர் ஒரு தலைசிறந்த வழக்குரைஞர். அவருக்காக வாதாடியவர் முகமது அலி ஜின்னா. அந்த வழக்கில் திலகர் தண்டிக்கப்பட்டார். அதை எதிர்த்து மேல் முறையீடு செய்தார். லண்டன் பிரிவியு கவுன்சிலுக்குப் போனார். அங்கும் தண்டிக்கப்பட்டார். பர்மாவின் மாண்டலே சிறையில், ஆறு ஆண்டுகள் இருந்தார். அங்கேதான் இரண்டரை ஆண்டுகள் நேதாஜியும் இருந்தார். ஆறு ஆண்டுகள் அங்கே சித்திரவதை அனுபவித்து இருக்கின்றார் திலகர். அவர் எழுதிய ஒரு நூல்தான் ‘கீதா ரகசியம்.’ அது, அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், அந்த மாண்டலே சிறையில் பட்ட துன்பங்களைப் பற்றி இன்னொரு நூலில், அங்கே ஏற்பட்ட துன்பங்களை அவர் விவரித்து இருப்பதைப் படித்தால், நம் இருதயத்தில் குருதி கொட்டும். அதை நான் உணர்ந்து இருக்கின்றேன். அவர் மீது பாய்ந்தது இந்த 124 ஏ பிரிவு.

ஆனால், நாட்டைத் துண்டாட விரும்புகிறார்கள் என்றோ, இறையாண்மைக்கு ஆபத்து வருகிறது என்றோ, அந்த அடிப்படையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை. இதுதான் முக்கியம். இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் ஊறு விளைவிப்பது குற்றம் என்று சட்டப்படி அந்த நிலை எடுக்கப்பட வில்லை.

இந்தக் கட்டத்தில், 1950 ஆம் ஆண்டு, இந்திய அரசியல் சட்டம் அரங்கேறுகிறது. அதற்கான முன்வரைவிலே (Drafts), அடிப்படை உரிமைகள் 13 (2) என்ற பிரிவில், பொது அமைதி (Public order), அதற்குக் குந்தகம் விளைவித்தால், அது பேச்சு உரிமையைக் கட்டுப்படுத்தாது; அது பேச்சு உரிமை என்ற எல்லைக்குள் வராது என்ற காலம்.

மார்ச் மாதம். ரமேஷ் தாப்பர் என்பவர், மும்பையில் இருந்து நடத்துகின்ற ஒரு ஆங்கில ஏடு கிராஸ்ரோட்ஸ் (Crossroads). குறுக்குச்சாலை

எப்பக்கம் செல்வது? எந்தத் திசையில் செல்வது? என்று தெரியாமல், திக்குத் தெரியாமல் ஒரு இடத்தில் நின்று கொண்டு திகைத்து நிற்பதைத்தான் ஆங்கிலத்தில் ‘we are at crossroads’ என்பார்கள். அது ஒரு நாற்சந்தி.

அந்தத் தலைப்பில் ஒரு வார ஏடு வந்து கொண்டு இருந்தது. அப்போது, சென்னை மாகாண பொது அமைதி ஒழுங்கு பாதுகாப்பு என்ற சட்டத்தின் படி, (Madras Public Order Maintenance Act) இந்த ஏடு, சென்னை மாகாணத்துக்கு உள்ளே வரக்கூடாது என்று தடை செய்யப்பட்டது. ஆம், சென்னைதான் இதற்கு அடிப்படை.

அதே காலகட்டத்தில், டெல்லியில், பூரே பூஷண் என்பவருடைய பத்திரிகை, கிழக்குப் பஞ்சாப் சட்டத்தின் அடிப்படையில், டெல்லிக்கு உள்ளே நுழையக் கூடாது என்று தடை செய்யப்பட்டது.

சென்னை மாகாணத்தின் இந்தச் சட்டம், எழுத்து உரிமைக்குத் தடை விதிப்பதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்தது. தலைமை நீதிபதி கன்னா, புகழ் பெற்ற நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி, புகழ் மிக்க நீதிபதிகள் பசல் அலி, மகாஜன், முகர்ஜி உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அமர்விலே விசாரிக்கப் படுகின்றது.

பதஞ்சலி சாஸ்திரி எழுதுகிறார். அந்தக் கருத்தைத்தான், தலைமை நீதிபதி உட்பட பசல் அலி தவிர மற்றவர்கள் அனைவருமே ஏற்கின்றார்கள். அதன்படி,

“கருத்துகளைச் சொல்லுவதற்கு உரிமை உண்டு; பொது அமைதி என்று கூறி, கருத்துச் சொல்லுவதைக் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால் அரசு அமைப்புச் சட்டத்தை வகுக்கின்ற பொழுது, அதை உருவாக்கிக் கொடுத்த மாமேதை பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர், அவர் உட்பட எவரும், வரைவில் இருந்த 13 (2) பிரிவை ஏற்கவில்லை. பொது அமைதி என்பது இங்கே கிடையாது. இந்தப் பொது அமைதிக்கு, ஒழுங்குக்கு ஆபத்து நேரும் என்று கருதி, பேச்சு உரிமையை, கருத்து உரிமையைத் தடுக்க முடியாது. எனவே, இது அடிப்படை உரிமைகளின் (Fundamental Rights) கீழ் வரவில்லை” என்று அவர்கள் அறிவித்ததன் விளைவாக, சென்னை மாகாணத்தின் பத்திரிகைத் தடைச்சட்டம் செல்லாது என்று அவர்கள் தீர்ப்பு வழங்கி விட்டார்கள்.

ஆனால், நீதிபதி பசல் அலி மட்டும் அதற்கு மாறாக, பொது அமைதிக்கு ஒழுங்குக்கு ஊறுநேர்ந்தால், அது அடிப்படை உரிமை என்று அனுமதிக்கக் கூடாது; இது நாட்டுக்கு ஆபத்தை உண்டாக்கக்கூடியது என்று தீர்ப்பு எழுதினார்.

1951 இல் முதலாவது அரசியல் சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது. அதில் 19 ஆவது பிரிவு, அடிப்படை உரிமை; பேச்சு உரிமை, கருத்து உரிமை. அதன் 2 ஆவது உட்பிரிவில், பொது அமைதிக்கு ஊறு நேர்ந்தால், சட்டப்படி அது குற்றமாகத்தான் கருதப்படும் என்ற விதத்தில், முதலாவது அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார்கள்.

நாட்கள் சென்றன. ‘திராவிட நாடு’ என்ற தனிநாடு கோரிக்கை வலுத்தது. காரணம், அன்றைய சென்னை மாகாணத்துக்கு உள்ளே, கர்நாடகத்தின் பகுதிகள் இருந்தன; ஆந்திரத்தின் பகுதிகள் இருந்தன; கேரளத்தின் பகுதிகள் இருந்தன. உலகத்தின் தொன்மைத் தமிழ் மொழியின் உதிரத்தில் இருந்துதான், இந்த மொழிகள் உதித்து எழுந்தன. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை கூறியது மட்டும் அல்ல, மேற்கு நாடுகளின் அறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின்படி அது நிறுவப்பட்டது.

அந்த அடிப்படையில் தந்தை பெரியார் எழுப்பிய குரல், ‘தமிழ்நாடு தமிழருக்கே; தனித்தமிழ்நாடு’ என்ற குரலை, 1937 இல் வைத்து இருந்தாலும், இந்தத் திராவிட நாடு என்ற தனிநாட்டுக் கோரிக்கையை பின்னர் அவர்கள் வைத்த காலகட்டத்தில், இந்தக் குரலை எப்படி அடக்குவது என்று கருதிய தில்லி அரசு, 1961 ஆம் ஆண்டு, இந்தியக் குற்றச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது (Criminal Act Amemendment).

அதன்படி, தனிநாடு கோரிக்கையைத் தடுப்பதற்கு, பொது அமைதிக்கு ஒழுங்குக்குக் கேடு நேருகின்ற கருத்தைத் தடுப்பதற்கு, மாநிலங்கள் சட்டம் இயற்றிக் கொள்ளலாம் என்று கொண்டு வந்தார்கள். அத்தோடு அவர்கள் திருப்தி அடையவில்லை. 1963 பிறந்தது. அரசியல் சட்டத்துக்கு 6 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்தார்கள். இதில், அடிப்படை உரிமைகள் பிரிவான 19 ஆவது பிரிவின், 2,3,4 ஆகிய உட்பிரிவுகளில், Sovereignty and integrity என்ற சொற்களைச் சேர்த்தார்கள்.

தொடருகிறது...

ஓமன் மதிமுக இணையதள அணி

சிறை சென்றது ஏன்? வைகோ கடிதம்-4, மக்கள் ஆட்சிக்கு மகுடமே பொது வாக்கெடுப்பு! பாகம்-2!

ஜூனாகத் வாக்கெடுப்பு:-

இன்னொன்று ஜூனாகத் (Junagadh). அங்கே இந்துக்கள் 90 விழுக்காடு. ஆட்சி புரிந்தவரோ நவாஸ் முகம்மது மகபத்கான். 1947 ஆகஸ்டு 15 ஆம் நாளன்று, ‘தனது சமஸ்தானம் பாகிஸ்தானுடன் இணைந்துவிட்டது’ என்று பிரகடனம் செய்தார். ஜின்னாவின் ஆலோசனைப்படி நடந்துகொண்டார். படேல் படையெடுக்க முனைந்த போது நேரு தடுத்தார். மவுண்ட் பேட்டன் பிரபு ‘ஐ.நா.வுக்குப் பிரச்சினையைக் கொண்டு செல்வோம்’ என்றார்.

ஜூனாகத் நவாப் ஏற்கனவே 47ன் தொடக்கத்தில் ஜூல்பிகர் அலி பூட்டோவின் தந்தையான ஷா நவாஸ் பூட்டோவைத் தனது அரசின் திவானாக நியமித்து இருந்தார். 1948 பிப்ரவரி 20-ஆம் தேதி “பாகிஸ்தானுடனா? இந்தியாவுடனா?” என்ற பொது வாக்கெடுப்பு ஜூனாகத்தில் நடத்தப்பட்டது. மொத்தம் 2 இலட்சத்து 01 ஆயிரத்து 457 வாக்குகள். அதில் 1 இலட்சத்து 90 ஆயிரத்து 870 வாக்குகள் பதிவாகின. அதில் பாகிஸ்தானுடன் இணைய வெறும் 91 வாக்குகளே பதிவாயின. மற்ற அனைத்து வாக்குகளும் இந்தியாவுடன் இணைய ஆதரவு தெரிவித்தன. அதாவது 99.95 விழுக்காடு. அந்த சமஸ்தானம் இந்தியாவின் பகுதி ஆயிற்று.

காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது எப்படி?

இப்போது காஷ்மீரத்துக்கு வருவோம். அங்கே ஜம்மு-காஷ்மீரின் மன்னராக ஹரிசிங் ஆட்சி புரிந்தார். 47-இல் தனது சமஸ்தானம் ஒரு தனி நாடு என்று முதலில் அறிவித்தார். ஆனால் பாகிஸ்தானில் இருந்து சிப்பாய்களும் கலகக்காரர்களும் ஆயுதபாணிகளாகப் பெருமளவில் ஊடுருவிய நிலையில், பாகிஸ்தானின் பிடிக்குள் சிக்க நேரும் என்று அஞ்சிய மன்னர் ஹரிசிங், பண்டித நேருவின் உதவியை நாடினார்.

காஷ்மீரை இந்தியாவில் இணைக்க வேண்டும் என்ற ஆர்வம் சர்தார் வல்லபாய் படேலுக்குத் தொடக்கத்தில் இல்லை என்று குல்தீப் நய்யார் தனது சுயசரிதையில் ஆதாரபூர்வமாகக் கூறுகிறார்.

1947 செப்டம்பர் 27-இல் ஜவஹர்லால் நேரு வல்லபாய் படேலுக்கு எழுதிய கடிதத்தில், ‘இந்திய யூனியனுக்குள் காஷ்மீரை இணைக்க வேண்டும்; அதற்கு சேக் அப்துல்லாவின் ஒத்துழைப்பை நாட வேண்டும்’ என்று எழுதுகிறார்.

ஆனால், ‘காஷ்மீரை விட்டு வெளியேறு’ என்று மன்னர் ஆட்சிக்கு எதிராக ஜனநாயகப் போரை ஷேக் அப்துல்லா நடத்திக் கொண்டு இருந்தார். காயிதே ஆஜம் முகமது அலி ஜின்னாவும் ஷேக் அப்துல்லாவும், 1947-க்கு முன்னர் இருமுறை லாகூரில் சந்தித்தபோது தன்னுடன் கரம் கோர்க்குமாறு ஜின்னா வேண்டுகோள் விடுத்தபோது, “இந்தியத் துணைக்கண்டம் நெடுகிலும் கோடிக்கணக்கான முஸ்லீம்கள் ஆங்காங்கு வாழும் போது, ‘பாகிஸ்தான்’ என்று இஸ்லாமிய நாட்டை அமைப்பது விபரீதத்தில் முடியும்” என்றார் ஷேக் அப்துல்லா. இதே கருத்தைத்தான் மௌலானா அபுல்கலாம் ஆசாத்தும் உறுதிபடக் கூறினார்.

தற்போது மன்னர் ஹரிசிங் பதட்டத்தில் நடுங்குகிறார். நேருவின் யோசனைப்படி ஷேக் அப்துல்லாவுக்கு நேசக்கரம் நீட்டினார். ‘இந்திய யூனியனுடன் ஜம்மு-காஷ்மீரை இணைக்கிறேன்’ என்று 1947 செப்டம்பர் 30-இல் இணைப்புக் கடிதம் (Accession) தந்தார்.

1947 அக்டோபர் 20-இல் பாகிஸ்தான் இராணுவம் ‘பழங்குடியினர்’ போர்வையில் ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவி விட்டது என்பது உறுதியாயிற்று. அக்கால கட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஷேக் அப்துல்லா, 1947 செப்டம்பரில் விடுதலையாகி இருந்தார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பாளர்களை விரட்ட, மேஜர் ஜெனரல் திம்மையா டாங்கிகள் கொண்ட இந்தியப் படையை அனுப்பினார். போர் மூண்டது. இந்தியப் படையின் கை ஓங்கியது. நிலைமை மோசமானபோது 1947 நவம்பர் 26-ஆம் நாளன்று பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் டில்லிக்கு வந்து பண்டித நேருவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பாகிஸ்தான் ‘பழங்குடியினர்’ படையினர் யுத்தகளத்தில் இருந்து பின்வாங்கிச் செல்லுவது என்றும், இந்தியப் படையினரும் பின்வாங்கிக் கொள்வது என்றும் ஐ.நா. சபை ஒரு ‘கமிஷனை’ அமைத்து “பொது வாக்கெடுப்பு” நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மவுண்ட் பேட்டன் பிரபுவின் அறிவுரைப் படி இந்தியாதான் காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. சபைக்குக் கொண்டு சென்றது. ‘காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல்’ என்று புகார் செய்தது.

‘பொறியில் இந்தியா சிக்கிக் கொண்டது’ என்று இந்தியாவின் மற்ற தலைவர்கள் பின்னர் குறை கூறினர். ஐ.நா. மன்றத்தின் பாதுகாப்புச் சபையில் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஜபருல்லாகான் மிகச் சாதுரியமாக வாதங்களை முன் வைத்ததாலும் ‘மத்திய கிழக்கில்’ தனது ஆதிக்கத்தைத் தொடர்வதற்காகப் பிரிட்டன் சூழ்ச்சியாகக் காய்களை நகர்த்தியது. “காஷ்மீர் ஒரு பிரச்சினைக்கு உரிய பிரதேசம்” (Territory in dispute) என்றது. அமெரிக்க அரசு தொடக்கத்தில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோதும் பிரிட்டனின் கருத்துக்கு ஆதரவாகக் கையை உயர்த்தியது.

ஐ.நா. தீர்மானம்:-

1948 ஆகஸ்டு 13-ஆம் நாள் ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் கூறுகள்!

(1) போர் நிறுத்தம்

(2) காஷ்மீருக்குள் நுழைந்த பழங்குடியினரை பாகிஸ்தான் திரும்பப் பெற வேண்டும்;

துருப்புக்கள் சிவில் நிர்வாகத்தின்கீழ் செயல்பட வேண்டும்

(3) இந்தியா தனது துருப்புகளைப் பின் வாங்க வேண்டும்

(4) ஐ.நா. பார்வையாளர்கள் போர் நிறுத்தத்தைக் கண்காணிப்பர்

(5) பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரதமர் நேரு, தனது சகோதரியும் இந்தியாவின் ஐ.நா. தூதருமான விஜயலட்சுமி பண்டிட்டுக்கு ஆத்திரத்துடன் எழுதிய கடிதத்தில், “ஐ.நா. பாதுகாப்புச் சபை பாரபட்சமாக நடந்து கொண்டது; பிரிட்டனும் அமெரிக்காவும் மோசமாகச் செயல்பட்டன” என்று எழுதினார்.

1950-இல் காஷ்மீர் பிரச்சினையில் ஐ.நா. தலையிடுவதை நேரு நிராகரித்தார். பொது வாக்கெடுப்பைத் தானும் மவுண்ட் பேட்டன் பிரபுவும் சேர்ந்து ஏற்பாடு செய்யலாம் என்ற ஜின்னாவின் யோசனையும் நிராகரிக்கப்பட்டது. இந்தியாவில் அமெரிக்க தூதராக இருந்த செஸ்டர் பௌல்ஸ் “1953-க்கு முன்னர் பொது வாக்கெடுப்பு நடைபெற்று இருந்தால் காஷ்மீர் இந்தியாவுடன் இணையும் கருத்து வெற்றி பெற்று இருக்கும்” என்றார்.

காஷ்மீரின் இரண்டாவது பிரதமராக சேக் அப்துல்லா இருந்த காலத்தில் (2nd Prime Minister of Jammu and Kashmir 5 March 1948 – 9 August 1953) 1952 ஜூலையில் டில்லி ஒப்பந்தத்தை நேருவும் ஷேக் அப்துல்லாவும் ஏற்படுத்தினர். 1951-இல் ஜம்மு-காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை தேர்ந்து எடுக்கப்பட்டது. ஐம்மு-காஷ்மீர் இந்திய யூனியனின் பகுதிதான் எனப் பிரகடனம் செய்த ஷேக் அப்துல்லா, மிக அழுத்தமாக மத்திய அரசின் நிர்வாகம், பாதுகாப்பு, வெளிவிவகாரம், இரயில்வே உள்ளிட்ட தொடர்புகள் தவிர்த்து வேறு எதிலும் மத்திய அரசு மூக்கை நீட்டக் கூடாது என்றார்.

நேரு தனது அமைச்சர்களான ரபி அகமத் கித்வாய், அபுல் கலாம் ஆசாத்தை ஷேக் அப்துல்லாவுடன் பேச்சுவார்த்தைக்கு அனுப்பியும் பலன் இல்லை. “காஷ்மீர் இந்தியாவின் அடிமையாக இருக்க முடியாது” என்று முழங்கினார் காஷ் மீரத்துச் சிங்கம்.

அந்தச் சிங்கத்தின் கர்ஜனை டில்லிக்கு அதிர்ச்சி தந்தது. அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. 1953 ஆகஸ்டு 9-ஆம் தேதி ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டுத் தமிழகத்தில் கொடைக்கானலில் சிறை வைக்கப்பட்டார். 11 ஆண்டுகளுக்கு முன் 1942-இல் இதே ஆகஸ்டு 9-இல் தான் “வெள்ளையனே வெளியேறு”, “செய் அல்லது செத்து மடி” என மகாத்மா காந்தி பிரகடனம் செய்தது வரலாற்று விசித்திரம்.

காலம் வேகமாக மாற்றங்களைக் கொண்டு வந்தது.

ஷேக் அப்துல்லா 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி விடுதலை செய்யப் பட்டார்; 1975 ஆம் ஆண்டு காஷ்மீர் முதல்வர் ஆனார். (4th Chief Minister of Jammu and Kashmir 25 February 1975–26 March 1977) Governor’s Rule (Again In office 9 July 1977–8 September 1982)

காஷ்மீர் சிங்கத்துடன் சந்திப்பு:-

1980-இல் எனது நண்பர் டாக்டர் பரூக் அப்துல்லா (அப்போது ஸ்ரீநகர் தொகுதி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்) அவர்களின் விருந்தினராக ஸ்ரீநகரில் தங்கி இருந்தேன். அவர்களது சொந்த இல்லத்தில் மாபெரும் தலைவர் ஷேக் அப்துல்லாவைச் சந்திக்க அவரது அலுவலக அறைக்குள் நான் மட்டும் நுழைந்தவுடன், நெடிதுயர்ந்த அந்தக் கம்பீரமான தலைவர், “என் இளைய நண்பனே வருக” என இரு கரம் நீட்டியவாறு இருக்கையை விட்டு எழுந்து என்னை நோக்கி நடந்து வந்தபோது விதிர்விதிர்த்துப் போனேன். ஆனந்த உணர்ச்சி மேனியில் பாய்ந்தது. காஞ்சிபுரம் பட்டு வேட்டி, பட்டுத் துண்டை அவரது தோளில் போர்த்தினேன். 15 நிமிடம் எனக்காக ஒதுக்கப்பட்டு இருந்தது. மிக அன்பாக அளவளாவினார். ஏர் இந்தியா சேர்மன் காத்திருப்பதாக அவரது உதவியாளர் துண்டுச் சீட்டை நீட்டியபோது, “இருக்கட்டும். எங்கள் உரையாடல் முடியும்போது சொல்கிறேன்” எனக் கூறியபின் எனக்காக 40 நிமிடங்கள் செலவழித்ததை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.

“காங்கிரஸ் அகராதியில் நட்பு, நன்றி என்ற இரண்டு சொற்களுக்கும் இடம் கிடையாது” என்று அம்மாமனிதர் கூறியதையும் எப்படி மறப்பேன்?

நான் போர்த்திய பட்டாடைகளைக் களையாமலே என்னை அவரது இல்லத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றவர், மகன் டாக்டர் பரூக் அப்துல்லாவையும் வரவழைத்துப் புகைப்படம் எடுக்கச் சொன்னார். கலிங்கப்பட்டியில் எங்கள் இல்லத்தில் அந்தப்படம் இருக்கின்றது.

காலச்சுழலில் எத்தனையோ ஏற்ற இறக்கங்கள்!

காங்கிரஸ் கட்சியுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைக்க யோசித்தபோது டாக்டர் பரூக் அப்துல்லாவிடம் அவர் தந்தை கூறியதை நினைவூட்டினேன். ஆனால் சில அரசியல் அழுத்தங்களால் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தார். பின்னர் ஒருநாள் காலையில் முதல்வர் டாக்டர் பரூக் அப்துல்லா தேநீர் அருந்திக் கொண்டு இருந்தபோது அவரது ஆட்சி கலைக்கப்பட்ட செய்தியை அறிந்தார்.

பின்னர் ஒரு கட்டத்தில், பிரதமர் வாஜ்பாய் காலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேசிய மாநாட்டுக் கட்சி இடம் பெற்றது. ஏன்? நமது இயக்கம் காங்கிரசுடனும், பா.ஜ. கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லையா? தவிர்க்க இயலாத தீமைகளாக நம்மை வளைத்து விடுகின்றன. நம்மை அழிக்க தி.மு.க. தலைமை கங்கணம் கட்டிக் கருவி கொண்டு செயல்படுகிறதே? நல்லன்புடன் நாம் நெருங்கிச் சென்ற காலத்திலும் அவர்கள் மனதில் வக்கிரமும் உக்கிரமும் மறையவில்லையே?

காஷ்மீர் பற்றி எரிவதற்குப் பல காரணங்கள்!

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்ய இந்துத்துவ சக்திகளின் மூர்க்கம்; அதற்கு உடன்படும் பா.ஜ. கட்சி;

இந்தியப் பன்முகத் தன்மையைச் சிதைத்து ‘இந்து ராஷ்டிரம்’ அமைக்க ஆக்டோபஸ் கரங்களை விரிக்கும் இந்துத்துவ சக்திகள்;

‘பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவோம்; இஸ்லாமியர்களின் ஷரியத்தைச் சாய்ப்போம்’ என்ற ஓங்காரம்;

‘மாட்டுக் கறி சாப்பிட்டால் தண்டனை; மாடுகள், பசுக்கள் வதை என்றால் சிறை’

திருமணப் பிரச்சினையில் “ஷரியத்தில்” கை வைப்போம்:-

என்ற முழக்கங்கள்தான் காஷ்மீரத்து இளம் தலைமுறையினரின் நெஞ்சில் எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றுகிறது.

‘இந்தியர்களே! வெளியேறுங்கள்,’ என்ற குரலே ஸ்ரீநகரிலும் சுற்றுவட்டாரத்திலும் ஓங்கி ஒலிக்கிறது ஜம்முவின் சில பகுதிகள் தவிர. இந்நேரத்தில்தான் குளவிக் கூட்டைக் கலைத்துவிட்டார் பிரதமர் மோடி. அருணாசலப் பிரதேசத்திற்குச் சொந்தம் கொண்டாடும் சீன நாகத்தைச் சீண்டிப் பார்க்கும் விதத்தில் தலாய்லாமா அருணாசலப் பிரதேசம் வழியாக திபெத்துக்குச் சென்றதால், சீனம் சீறுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்து வழியாகவே ‘பொருளாதாரச் சாலை’ அமைக்கிறது சீனா. செஞ்சீனமும் ரஷ்யாவும் பாகிஸ்தானுடன் கரம் கோர்த்து விட்டன. தெற்கே இலங்கையில் சீனமும் பாகிஸ்தானும் பலமாகக் கால் ஊன்றி விட்டன. இதனைச் சமாளிப்பதற்காகவே பிரதமர் மோடி ரணில் விக்கிரம சிங்கேயுடன் பொருளாதார ஒப்பந்தம் போடுகிறார். சேட்டிலைட் உபகாரம் வேறு சார்க் நாடுகளுக்காம். கடந்த கூட்டத்தில் பாகிஸ் தான் பங்கேற்கவே இல்லை.

‘பொது வாக்கெடுப்பு’ என்றாலே இந்திய தேசியவாதிகளுக்குக் காய்ச்சல் வந்து விடுகிறது. ஐரோப்பாவின் பூந்தோட்டமான சுவிட்சர்லாந்தில் உண்மையான மக்கள் ஆட்சி “Referendum and Initiative” மக்கள் விரும்பினால் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

மக்கள் ஆட்சிக்கு மாண்பு சேர்ப்பதே பொது வாக்கெடுப்பு. ஆம்; ‘மக்கள் குரல் தானே மகேசன் குரல்’ என்றார் அண்ணா.

முத்துலிங்கத்தின் உணர்ச்சி:-

2017 மே திங்களுக்குரிய விகடன் தடம் மொழி செல்லும் வழி எனும் தமிழ் இலக்கியத்துக்குப் பெருமை சேர்க்கத் ‘தடத்’தில் பயணத்தைத் தொடங்கி உள்ளது. இதன் அடிப்படையில் “ஈழ இலக்கியம்; ரயில் புறப்பட்டு விட்டது” என்ற மேற்கோளுடன் ஈழ எழுத்தாளர், படைப்பாளி திரு. அ.முத்துலிங்கம் அவர்களின் செவ்வி இடம் பெற்றுள்ளது. ஆர்வத்துடன் படித்தேன். என் மனதை ஈர்த்த வரிகளைத் தருகிறேன்.

“கேள்வி : ஈழப் போரை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?

திரு. முத்துலிங்கம் : தமிழர்களுக்குப் போர் என்ன புதிதா? சங்க இலக்கியம் முழுக்கப் போரும் காதலும்தானே? காரவேலன் என்ற அரசன் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஒடிசாவில் யானைக்குகையில் செய்தி பொறித்து வைத்து இருக்கின்றான். தொடர்ந்து தன்னுடன் போர் தொடுத்து வந்த மன்னர்களை அவன் முறியடித்ததாக.

பல ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழர்கள் கண்டது போர்தான். மக்கள் தம் விடுதலைக்காகப் போரிடுவதும் காலம் காலமாக நடக்கின்றது. எரித்ரியா போரிட்டு எத்தியோப்பியாவில் இருந்து பிரிந்தது. தெற்கு சூடானும் போரிட்டு இன்று தனி நாடாக ஆகி இருக்கின்றது. பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் பிரிந்ததும் போரினால்தான். 1995-ஆம் ஆண்டு கனடாவில் கியூபெக் மாகாணம் வாக்கெடுப்பு நடத்தியது. தொடர்ந்து கனடாவின் அங்கமாக இருப்பது என்று மக்கள் தீர்மானித்தார்கள்.

இல்லாவிட்டால் இன்று கியூபெக் ஒரு தனி நாடாக இருந்திருக்கும். சில மாதங்களுக்கு முன் மக்கள் வாக்குப்படி ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிந்துபோனது எல்லோரும் அறிந்ததே. ஈழத்துப் போரை வாக்கெடுப்பின் மூலம் தடுத்து இருக்கலாம்; அது நடக்கவில்லை. போர் தொடங்கியது. ஆனால் பிரிவினை சாத்தியமாகவில்லை. (இந்திய அரசின் துரோகமும் ஏழு அணு ஆயுத வல்லரசுகள் சிங்கள அரசுக்குத் தந்த ஆயுத பலமும் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தது.) இறுதியில் அதர்மம் தலைதூக்கியதுதான் மிகவும் கொடுமையானது. ஈழத்துப் போரில் நடந்த அழிவுகளைக் கணக்கிடவே முடியாது”

இந்த பேட்டியைப் படித்தபோது படைப்பாளி முத்துலிங்கம், தன் இருதயத்தில் வடியும் இரத்தத்தை முழுமையாக வெளிப்படுத்தாமல் சில சொற்களில் வடித்து உள்ளார்.

“பொது வாக்கெடுப்பு தமிழ் ஈழத் தாயகத்தில் நடத்தப்பட வேண்டும் என்று, 2011 ல் பிரஸ்ஸல்ஸ் நகரில் எழுந்த முதல் குரல் வைகோவின் குரல்தான் என்பதே என் வாழ்வில் முக்கியமான தருணம். ஈழ வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும்.

அதனை எவ்விதத்திலும் செயல்படுத்தி விட்டால் இந்தப் பிறவிப் பேற்றினை அடைந்து விடுவேன்.

அது, இயற்கை அன்னையின் கைகளிலும், காலதேவன் தரும் அனுமதியிலும் அடங்கி இருக்கின்றது.

வரலாறு அங்கீகரித்த சுயநிர்ணய உரிமை:-

ஒவ்வொரு தேசிய இனமும் தனித்தனி அரசுகள் அமைத்துக் கொள்ளும் உரிமை உண்டு. அதுவே தன்னாட்சி உரிமை; சுய நிர்ணய உரிமை. இதுதான் உலக நியதி.

தொடக்க காலத்தில் மனிதன் காடுகளில் உலவியபோது, இயற்கையின் தாக்குதலுக்கு அஞ்சிக் குகைகளில் பதுங்கிய போது, விலங்குகளுடன் போரிட்டபோது, காலது கொண்டு மேலது தழுவி கையது கொண்டு மெய்யது போர்த்தித் தனித் தனியாக வாழ்ந்த போது, தன்னைப் போன்ற உருவங்கொண்டவர்களை மனிதர்களாகக் கண்டு கொண்டான்; தாக்க வருகின்ற விலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு கூட்டமாகச் சேர்ந்து கொண்டு அவற்றோடு போரிட்டபோது, அவர்களுக்கு இடையே உறவுகள் வளர்ந்து, தமது எண்ணங்களை வெளிப்படுத்த சைகை மூலமாக அவர்களுடைய உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டார்கள்; அந்தச் சத்தத்தின் மூலமாகச் சொற்களைப் பகிர்ந்து வாழ்ந்தார்கள்.

அப்போது, இன்னொரு பகுதியில் இருந்து வேறொரு கூட்டம் வந்தால், அவர்களை எதிர்த்துப் போரிடுவதற்குத் தங்களுக்குள் வலிமை உள்ள ஒருவனைத் தலைவனாக ஆக்கிக்கொண்டார்கள்; அப்படிக் கூட்டம் கூட்டமாக உருவாகி உருவாகி, வாழ்வதற்கு, வசிப்பதற்கு வீடுகள் கட்டிக் கொண்டார்கள்; பாதுகாப்பதற்கு ஆயுதங்களைத் தாங்குகின்ற படை வீரர்களை அமைத்துக் கொண்டார்கள்; படிப்படியாக வளர்ந்து அரசுகளாக உயர்ந்து, அந்த அரசுகளுக்குத் தலைவனாக மன்னன் ஒரு நிர்வாகத்தை அமைத்தான்.

மன்னன் மகன் மன்னனாக அவர்கள் அமைத்த அரசுகள் பிற அரசுகளோடு மோதுகின்ற காலங்கள் வளர்ந்து, படிப்படியாக, பல நூற்றாண்டுகளாக, மனிதகுல வரலாற்றில் புதிய அரசுகள் எழுந்தன. அந்த அரசுகள் மன்னர் ஆட்சிகளாக உருவாயின.

அந்தக் காலகட்டத்திலேயே மக்கள் தங்களுடைய தலைவனைத் தாங்க ளாகவே தேர்ந்து எடுத்துக் கொள்ளக் கூடிய, மக்கள் விரும்பும் கருத்தின்படிதான் ஒரு அரசன் அரசைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளக்கூடிய அரசு அமைத்து, யூப்ரடிஸ்-டைக்ரிஸ் நதிகளுக்கு இடையில் மிகப்புராதனமான நாகரிகம் சுமேரிய நாகரிகமாக மலர்ந்த மெசபடோமியாவில் உருவாயிற்று என்று நான் படித்து இருக்கின்றேன்.

பழந்தமிழர்களுக்கும், மெசபடோமியா வாழ் மக்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. எகிப்து, மெசபடோமியா, பழந் தமிழகம், சிந்து நதிக்கரை நாகரிகம் வரை யிலும் தொடர்புகள் உண்டு.

அதைப்போலவே கிரேக்கத்தின் நகர நாடுகள். அது ஸ்பார்ட்டா ஆகட்டும், ஏதென்ஸ் ஆகட்டும், மக்களாகக் கூடி, ஒரு தலைவனை, பிரதிநிதிகளைத் தேர்ந்து எடுத்துக் கொண்டு, அந்த நகர நாடுகளின் நிர்வாக சபைகளை அமைத்துக் கொண்டார்கள். மக்களாட்சி மலரத் தொடங்கியது.

தொடருகிறது...

ஓமன் மதிமுக இணையதள அணி

சிறை சென்றது ஏன்? வைகோ கடிதம்-4, மக்கள் ஆட்சிக்கு மகுடமே பொது வாக்கெடுப்பு! பாகம்-1!

இமைப்பொழுதும் நீங்காது என் இதயத் துடிப்போடும் இரத்தச் சுழற்சியோடும் கலந்து விட்ட கண்ணின் மணிகளே!

நேற்றுதான் நடந்தது போல இருக்கின்றது. காலம் இறக்கை கட்டிப் பறக்கிறது என்பார்களே... எல்லாம் மனதில் தோன்றும் எண்ணம்தான்!

23 ஆண்டுகள் நம்மைக் கடந்து விட்டனவா? அல்லது நாம் கடந்தோமா?

ஆம்; 1994 மே 5 ஆம் நாள் மாலையில் தொடங்கியது நீதி கேட்டு ஆர்த்து எழுந்த சகாக்களின் ஆலோசனைக் கூட்டம். தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் கலையரங்கில். பேரறிஞர் அண்ணா அவர்கள் நிறுவிய இயக்கத்தில் இருந்து கொடும் பழி சுமத்தப்பட்டு நானும் சகாக்களும் நீக்கப் பட்டபின் அடுத்த கட்டத்தை வகுக்கும் கூட்டம். நினைவில் வாழும் ஐயா தினகரன் கே.பி.கே. அவர்களும் வந்திருந்தார்கள்.

திராவிட இயக்கத்தின் இலட்சியப் பரிமாணமாக முகிழ்த்துவிட்ட நம் அமைப்புக்கு என்ன பெயர் சூட்டுவது? இயக்கத்தின் கொடியை எப்படி வடிவமைப்பது? பங்கேற்ற அனைவருமே பேசினார்கள். நீண்ட நெடிய கருத்துப் பரிமாற்றத்தின் விளைவாகச் சூட்டப்பட்ட பெயர்தான் ‘மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.’

1942 இல் காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் அமைத்த அமைப்பின் பெயர் ‘மறுமலர்ச்சி மன்றம்’. அவர் உருவாக்கிய இயக்கம் நீர்த்துப் போய், பாசி படிந்து தேக்கநிலை ஏற்பட்டுவிட்டதால் தேவை மறுமலர்ச்சி. ஐரோப்பிய நாடுகளில் மத்தியக் காலத்தில் சமயத்துறையில், ஓவியம், சிற்பம் உள்ளிட்ட கலைத்துறை களில் ஏற்பட்டதுதான் மறுமலர்ச்சி (Renaissance).

அறிஞர் அண்ணா அவர்களின் நெஞ்சம் கவர்ந்த அண்ணன் இரா.செழியன் அவர்கள் நமது விழுப்புரம் மாநாட்டுக்கு வருகை தந்து உரை ஆற்றியபோது, “என்ன பொருத்தமான தேவையான, பொருள் பொதிந்த பெயர் அமைந்துவிட்டது உங்கள் இயக்கத்துக்கு!” என்று சிலாகித்தார்.

அமைப்பின் பதாகை கறுப்பும் சிவப்பும் கொண்ட வண்ணம்தான். அதுவும் அண்ணாவின் எண்ணப்படியே வடிவமைத்தோம். “காலப்போக்கில் கழகக் கொடியில் சிவப்பு வண்ணம் அதிகமாகும்” என்ற அறிஞர் அண்ணாவின் கூற்றுப் படியே, சிவப்பு நடுவில் கறுப்பு பின்னர் சிவப்பு. நமது கழகக் கொடி பட்டொளி வீசிப் பறக்கும்போது அனைத்துக் கட்சிகளின் கொடிகளிலும் ஒரு தனிப் பொலிவோடு மிளிர்வதைக் காண்கின்றோம்.

மே -6 பிறந்தது.

“முதல் நாள் இரவு நெடுகிலும் நடந்த ஆலோசனையின் விளைவாகப் பொதுக்குழு கூடிற்று. நமது அரசியல் இயக்கத்தின் பெயரையும், கொடியையும் பிரகடனம் செய்தோம். கோலாகலமான ஆரவாரமும் கரவொலியும் அரங்கத்தில் அதிர்ந்தன.

அப்பப்பா! நினைக்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது! எத்தனை சோதனைகள்!

நம்மை அழிக்க முனைந்தோரின் தாக்குதல்கள், பழிக் குற்றச்சாட்டுகள், துரோகங்கள், தோல்விகள் அனைத்தையும் நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டோம். காட்டாற்று வெள்ளத்தை எதிர்த்து நீந்தினோம். அத்தனைச் சுழல்களையும் வெற்றிகரமாகக் கடந்தோம். இன்று திராவிட இயக்கத்தின் “இலட்சிய அடர்த்தியான பரிமாணமாக நாம் செம்மாந்து தலை நிமிர்ந்து கம்பீரமாகப் புன்னகைக்கின்றோம்.”

சென்னை புழல் மத்திய சிறையின் அ-2 தொகுப்பின் 18 ஆம் எண் கொட்டடியில் ஏப்ரல் 30 ஆம் நாள் இரவில் என் சிந்தனைகள் சிறகு விரிக்கின்றன. வெப்பம் அனலாகத் தகிக்கின்றது. “நெருப்பில் தானே படைக்கலன்களை வார்ப்பிக்க முடியும்?” என்னை நானே வார்ப்பித்துக் கொள்கிறேன். சோதனைகளை, மேனி படும் சிரமங்களை, போராட்டங்களை இனிமையாகக் கருதும் இயல்பு எனக்கு இயற்கையாக அமைந்தது.

அடுத்த சுற்று அரசியலுக்கு நான் ஆயத்தமாகிக் கொண்டு இருக்கிறேன். மக்கள் சக்தியைத் திரட்டும் வியூமாகத் தான் அடுத்து வரும் நம் நடவடிக்கைகள் அமையும்.

இரவிலும், பகலிலும் எந்த நேரமும் கழகத்தைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டு இருக்கின்றேன். காலம் வழங்கிய அருட்கொடையான கண்ணின்மணிகளான உங்களின் உழைப்பையும், தன்னலமற்ற அர்ப்பணிப்பையும் எண்ணிப் பெருமிதம் கொள்கின்றேன்.

நானும் நீங்களும் சாதிக்க முடியாததைத் தமிழக அரசியலில் வேறு யார் சாதிக்க முடியும்?

இந்த வார இதழ் ‘ஜூனியர் விகடனில்’ எனது பேட்டியை நன்கு உள்வாங்கி மிக அருமையாகத் தந்துள்ளார் திரு ப.திருமாவேலன் அவர்கள். கூடங்குளம் அணு உலைகளை எதிர்த்து இடிந்த கரையில் இந்திய வரலாறு காணாத அறப் போர்க்களம் அமைத்த திரு சுப.உதயகுமாரன் அவர்கள் தந்த இதயத்தை வருடும் பதிவினை ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழ் வெளியிட்டு இருந்தது.

நாளை பொழுது விடிந்தால் மே நாள். 1866 ஆம் ஆண்டு மே 4ஆம் நாள் சிகாகோ நகரத்தில் தொழிலாளர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாக ரத்தம் சிந்திய வைக்கோல் சந்தை சதுக்கத்தை ஈழவிடுதலை உணர்வாளர் சகோதரர் சிகாகோ விசுவநாதன் அவர்களுடன் நான் சென்று பார்த்ததும், “தூக்கிலிடப்பட்ட போராளித் தொழிலாளர்கள் ஜார்ஜ் எங்கெல், அடால்ப் பிஷர், ஆல்பர்ட் பார்சன்ஸ், அகஸ்ட் ஸ்பைஸ் (George Engel, Adolph Fischer, Albert Parsons, August Spies) கல்லறையைக் கண்டதும் நினைவுக்கு வருகின்றது.

அந்தக் கல்லறையில், The day will come, when our silence will be more powerful than the voice you are throttling today என்ற வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன.

ஒரு நாள் வரும்; அன்று எங்கள் மௌனம், இன்று நீங்கள் போடும் கூச்சலை விட வலிமையானதாக இருக்கும்.

கண்ணின் மணிகளே,

24 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்து விட்டோம். கழகக் கொடிக் கம்பங்களில் புது வண்ணம் தீட்டினீர்களா? நமது கொடியைப் புதுப்பொலிவுடன் உயர்த்தி னீர்களா? செய்து இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

இந்த மடல் தாங்கிய ‘சங்கொலி’ உங்களில் பலருக்கு மே -6 ஆம் நாளுக்குப் பின்னர் தான் கிடைக்கும். நாம் நமது இயக்கத்தைத் தொடங்குவதற்குச் சரியாக இருபது ஆண்டுகளுக்கு முன்னர் 1974ல் இதே மே மாதம் 5ஆம் நாளன்றுதான் நான் நெஞ்சால் பூசிக்கும் தேசியத் தலைவர் தமிழ் இனத்தின் புகழ் முகவரி பிரபாகரன் அவர்கள் ‘தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்’ இயக்கத்தை தொடங்கினார். அதுவரை ‘புதிய புலிகள்’ என்ற பெயரில் அவரது இயக்கம் திகழ்ந்தது.

நேற்று ஏப்ரல் 29 காலை நாளிதழ்களில் செய்தி, “சீமைக் கருவேல மரங்களை வெட்ட உயர்நீதிமன்றம் தடை”. என்னை மிகவும் காயப்படுத்தியது. உயர்நீதி மன்றத்தின் மாட்சிமை தங்கிய நீதிபதிகள் செல்வம் அவர்களும், பொன்.கலையரசன் அவர்களும் நன்கு ஆராய்ந்து, தமிழ்நாட்டின் சுற்றுச் சூழலை, நிலத்தடி நீரைக் காக்க வேலிக்காத்தானை அழிக்க அகற்ற வழங்கிய ஆணை பெருமளவில் செயல்படுத்தப்பட்டு, எண்ணற்ற வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் செயல்படுத்திய நிலையில், இப்படி ஒரு தடை வழக்குத் தொடுத்தவர் சொல்லி இருக்கின்ற காரணங்கள் ஏற்கத்தக்கவையே அல்ல.

நான் கிராமத்து விவசாயி. பெரும்பாலான நாட்கள் கிராம மக்களுடன் வாழ்பவன். வேலிக் கருவேலத்தை விறகுக்குப் பயன்படுத்திய காலம் எல்லாம் மலையேறி விட்டது. இப்பொழுது சமையல் எரிவாயு தான் பெரும்பாலும். அதுமட்டும் அல்ல, நூறு நாள் வேலைத் திட்டம் வந்த பின்னர், சீமைக் கருவேலம் பக்கம் எவரும் போவது இல்லை. நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது சீமைக் கருவேல மரம். நச்சுத்தன்மை வாய்ந்த இந்த மரங்களால் ஏற்பட்ட நாசம் சொல்லும் தரமன்று. கண்மாய்கள், ஏரிகள், குளங்களில் உள்ளே வண்டல் மண் இருக்கும், மாட்டு வண்டிகளில் அவற்றை அள்ளிக் கொண்டு வந்து குப்பைக் கிடங்குகள், வயல்களில் புன்செய் நிலங்களில் உரமாகக் கொட்டு வோம்.

ஆனால் தற்போது நிலைமை என்ன? குளங்கள், ஏரிகள் முழுக்க சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து நிறைந்து விட்டன. நீர்வரத்துக் கால்வாயில்கள் நெடுகிலும் சீமைக் கருவேல மரங்களே அடைத்துக் கொண்டு நிற்கின்றன. அதனால் கண்மாய்களில் நீர் தேங்குவது பெரிதும் குறைந்து விட்டது, அநேகமாக வற்றிவிட்டது.

குளங்களில் விவசாயிகள் மண் எடுத்துக் கொள்ளலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. குளம் முழுக்க சீமைக் கருவேல மரங்கள் மண்டிக்கிடப்பதால், மண் எடுக்கச் சாத்தியமே இல்லை. சீமைக் கருவேல மரங்களை அகற்றி, சாலை ஓரங்களில் மற்ற இடங்களில், வேறு மரக் கன்றுகளை நட வேண்டும். அந்தப் பணி அடுத்து நடைபெற வேண்டும்.

இதற்குத் தடை கேட்ட வழக்கறிஞர் “சீமைக் கருவேல மரம் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டுதான் இருக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். அதைத்தானே நாங்களும் கூறுகின்றோம்? எனவே, ஜேசிபி கொண்டு, தூருடன் வெட்டித் தோண்டி எடுக்க வேண்டும்.

அதன்பிறகு வளர்ந்தால், “இளைதாக முள்மரம் கொள்க” என்பது போல் நமது பிள்ளைகளே, மாணவர்களே, உடனுக்குடன் இரண்டு கைகளால் பிடுங்கி அகற்றி விடலாம். அத்தகைய விழிப்புணர்வை நாம் பிரச்சாரத்தின் மூலம் ஏற்படுத்த வேண்டும்.

அண்டை மாநிலங்களில் இருந்து இனி நாம் நமக்குரிய சட்டப்படியான உரிமை கொண்ட தண்ணீர் வர வழி இல்லை. இயற்கையும் வஞ்சிக்கின்றது. நிலத்தடி நீரைச் சீமைக்கருவேல மரங்கள்தான் உறிஞ்சுகின்றன.

இன்று தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்கள்தானே மிகுதியாக உள்ளன? மற்ற அனைத்து மரங்களையும் கூட்டிப் பார்த்தாலும்கூட 25 விழுக்காடு தேறாதே?

தமிழ்நாட்டை நினைத்தால் வேதனையாக இருக்கின்றது. நீதிமன்றத்தில் நீதி நிலைக்கின்றதா? இல்லையா? என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம்.

தோழர்களே, இந்தக் கோடை வெயில் காலத்தில் “மறுமலர்ச்சி தண்ணீர்ப் பந்தல்” அமைக்கின்ற பணிகளில் ஈடுபடுங்கள். அங்கே பானைகளில் நல்ல தண்ணீர் வைக்க வேண்டும். பல இடங்களில் இந்தத் தண்ணீர்ப் பந்தல்களைப் பார்ப்பதுண்டு - விளம்பரம் இருக்கும்; தண்ணீர் பானை அல்லது டிரம் இருக்கும். ஆனால் தண்ணீர் இருக்காது. அதைத் தருவதற்கும் அங்கே ஒருவர் கூட இருக்க மாட்டார். எனவே, பெயருக்கு அமைத்தால் மட்டும் போதாது. காலை முதல் மாலை வரை அங்கு தோழர்கள் இருக்க வேண்டும். நகர்ப்புறங்களில்தான் இது மிகவும் தேவை. இதுகுறித்து நமது கழக அவைத்தலைவர் அண்ணன் திருப்பூர் துரைசாமி, சட்டத்துறைச் செயலாளர் தேவதாஸ் ஆகியோரிடம் கூறியுள்ளேன்.

என்னுடைய வேண்டுகோள் வெளியான அடுத்த நாளிலேயே, நெல்லை மாவட்டப் பொறுப்பாளர் திருமலாபுரம் இராசேந்திரன் முயற்சியால், சங்கரன்கோவிலில் தண்ணீர்ப் பந்தல் அமைத்துச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்ற தகவலையும் அறிந்தேன்.

பற்றி எரியும் காஷ்மீர்:-

இந்தியத் துணைக்கண்டம் குறித்து செலிக் ஹாரிசன் எழுதிய “இந்தியா அபாயகரமான பத்தாண்டுகள் (India: The Dangerous Decades) என்ற நூலின் கருத்துகள்தான் இப்போது என் மனதில் எழுகின்றன. தற்போது அப்படிப்பட்ட அபாயகரமான சூழல் படர்ந்துள்ளது. இந்தியாவின் சுவிட்சர்லாந்து என இயற்கை மகுடம் சூட்டியுள்ள ஜம்மு காஷ்மீரத்து நிலைமை மிக நெருக்கடியான காலகட்டத்தை நெருங்கியுள்ளது.

ஸ்ரீநகர் நாடாளுமன்றத் தொகுதியில் 2017 ஏப்ரல் 9 ஆம் தேதி இடைத்தேர்தல். ஆனால் வாக்குப் பதிவு நாளில் 7.14 விழுக்காடு வாக்காளர்கள்தான் வாக்கு அளித்தனர். பல வாக்குச் சாவடிகள் வெறிச் சோடிக்கிடந்தன. எனது இனிய நண்பர் டாக்டர் பரூக் அப்துல்லா இத்தேர்தலில் வெற்றிபெற்றது எல்லையற்ற மகிழ்சசி ஊட்டியது என்றாலும், காஷ்மீர் பள்ளத்தாக்கு எரிமலைச் சீற்றத்திற்கான அறிகுறிகளைக் காட்டுகின்றதே?

அனந்த்நாக் நாடாளுமன்றத் தொகுதியில் ஏப்ரல் 12 நடப்பதாக இருந்த இடைத்தேர்தல் மே 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நிலைமை மேலும் விபரீதம் ஆனதால், இப்போது மறு தேதி குறிப்பிடாமல் தேர்தலை ரத்து செய்து விட்டனர்.

1996 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது ‘ஹூரியட் கான்பெரன்ஸ்’ அமைப்புத் தலைவர்கள் தேர்தலை புறக்கணிக்குமாறு கூறுவதை அன்று வாக்காளர்கள் ஏற்கவில்லை. 2002, 2008, 2014 சட்டமன்றத் தேர்தல்களில் சராசரி 50 விழுக்காடு வாக்குப்பதிவு ஆயிற்று. காஷ்மீர் பிரிவினை முழக்கமிடும் பிரிவினைவாதிகளும், தீவிரவாதிகளும் விடுத்த அறைகூவல் மட்டுமே இன்றைய நிலைக்குக் காரணம் அல்ல.

தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என அஞ்சிய காரணத்தால் வாக்குச் சாவடிகளுக்கு மக்கள் வரவில்லை என்று அதிகாரவர்க்கம் நியாயம் கற்பிக்க முனைகின்றது. ஆனால், காரணம் அது அல்ல. இந்திய அரசு மீதும் ஆளும் அமைப்பின் மீதும், காஷ்மீரத்து இளைய தலைமுறையின் இதயங்களில் வெறுப்பு எனும் நெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது.

2016 ஜூலையில் புர்கான் வானி படுகொலை அந்தத் தழல் மீது காற்றை வீசிற்று.

எனது நெருங்கிய நண்பரும், முன்னாள் நிதித்துறை, வெளியுறவுத்துறை அமைச்சருமான யஷ்வந்த் சின்கா அவர்கள் காஷ்மீரில் கனன்று கொண்டிருக்கும் கொதி நிலையைத் தணிப்பதற்கும், அதற்கான வழிமுறைகளைக் காண்பதற்கும் அரசியல் கட்சிகளைச் சாரா மனிதநேய உணர்வு கொண்ட நெறியாளர் குழுவினருடன் இரண்டு முறை ஸ்ரீநகருக்குச் சென்றார். ஹரியட் கான்பெரன்சு தலைவர்களை, தீவிரவாதத் தலைவர்களை, அனைத்துத் தரப்புப் பிரதிநிதிகளைச் சந்தித்து நெடிய ஆலோசனைகள் நடத்தினார். அந்தக் காலகட்டத்தில், புது டில்லியை அடுத்து நொய்டாவில் அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்துப் பல மணி நேரம் உரையாடினேன். ‘மத்திய அரசின் அணுகுமுறை மிகத் தவறாக உள்ளது. சிறப்புக் காவல்படை ராணுவ வீரர்களின் துப்பாக்கிகள் மூலமாகவே நிலைமையைக் கட்டுக்குள் அடக்கி வந்த போக்கு எதிர்மறை விளைவுகளைத் தந்துவிட்டது; விபரீத எல்லையைத் தாண்டக்கூடும்’ என்றார்.

முன்பெல்லாம் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் மோதல் என்றால் பொதுமக்கள், இளைஞர்கள் அந்த இடங்களை நெருங்கவே மாட்டார்கள். தற்போது காவல்படையினர், இராணுவத் துருப்புகளின் துப்பாக்கிகள் சீறும் இடங் களை நோக்கி இளைஞர்கள் மட்டும் அல்ல கல்லூரி மாணவர்களும் விரைகின்றனர்.

இந்தப் படத்தைப் பாருங்கள்.
அழகும் வனமும் வனப்பும் மிக்க காஷ்மீர் மாணவிகள் சிறப்புப் படையினர் மீது எவ்வளவு ஆவேசமாகக் கற்களை வீசு கின்றார்கள்.

மக்கள் ஜனநாயகக் கட்சி (Peoples Democratic Party)யும், பாரதிய ஜனதா கட்சியும் கூட்டுச் சேர்ந்து, தற்போது மெகபூபா அம்மையார் முதல்வராகப் பொறுப்பு வகிக்கின்றார். காஷ்மீர் மக்களின் அடிமனதில் இந்திய அரசு மீது காங்கிரஸ் கட்சி மீதும் அதைவிட பாரதிய ஜனதா கட்சி மீதும் கசப்பும், வெறுப்பும் ஆழமாக வேரோடியுள்ளது. சுயாட்சி, தனி நாடு (ஆசாதி) என்ற முழக்கம் பள்ளத்தாக்கு முழுமையும் ஓங்கி ஒலிக்கின்றது.

காஷ்மீர் பிரச்சினை இன்று நேற்று திடீரென்று வெடித்தது அல்ல. நாடு விடுதலை பெற்ற 47 ஆம் ஆண்டிலேயே பூதாகாரமாய் புறப்பட்டதுதான் ‘காஷ்மீர்’ விவகாரம்.

இந்தத் துணைக்கண்டத்தை இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரித் தானிய அரசு பாகப் பிரிவினை செய்தபோது, வைஸ்ராய் மெண்ட் பேட்டன்தான் முக்கிய முடிவுகளைச் செயல்படுத்தினார்.

பிரித்தானியர்களின் வருகைக்கு முன்பு, இன்றைய பிரதேசங்களை உள்ளடக்கிய இந்தியா என்ற ஒரு நாடு இருந்ததே கிடையாது. காங்கிரஸ் கட்சியின் தியாகத் தலைவர்களில் ஒருவரும், விடுதலைப் போரில் பல ஆண்டுகள் சிறைப்பட்ட வருமான நீலம் சஞ்சீவரெட்டி அவர்கள், 1978 ஆம் ஆண்டு ஆற்றிய குடியரசுத் தலைவர் உரையில் (மத்திய அரசு எழுதிக் கொடுக்கும் அறிக்கையைத்தான் வாசிப்பது வழக்கம்; அதனைத் தூக்கி எறிந்துவிட்டு அவரே எழுதிய உரை அது)

“அசோகர் காலத்திலும் இந்தியா ஒன்றாக இல்லை; அக்பர் காலத்திலும் ஒன்றாக இல்லை; பிரிட்டிஷ்காரனின் லத்திக் கம்பும், துப்பாக்கியும்தான் இந்தியாவை உருவாக்கிற்று” என்றார்.

இதனை நாடாளுமன்றத்தில் நான் மேற்கோள் காட்டிப் பேசி இருக்கின்றேன்.

‘காஷ்மீர்’ யாருடன் இணைவது? இந்தியாவுடனா? பாகிஸ்தானுடனா? அல்லது தனிநாடா? என்ற பிரச்சினையை அலசுவதற்கு முன்பு மற்ற சமஸ்தானங்களை ஆராய்வோம்.

மொத்தம் 564 சமஸ்தானங்கள். தனித் தனி ராஜ்யங்கள். தனி நாடு என்று ஹைதராபாத் நிஜாம் எழுப்பிய குரலும், ரசாக்கர்களின் துப்பாக்கிகளும் சர்தார் வல்லபாய் படேலின் போலீஸ் நடவடிக்கை முன் பஞ்சாய்ப் பறந்தது.

தொடருகிறது...

ஓமன் மதிமுக இணையதள அணி

மரபணு மாற்று கடுகு உற்பத்திக்கு அனுமதி அளிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்-வைகோ அறிக்கை!

இந்தியாவில் மரபணு மாற்று கடுகு பயிரிடுவதற்கு, மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு (Genetic Engineering Appraisal Committee - GEAC) மே 11 ஆம் தேதி அனுமதி அளித்து, மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை அனுப்பி உள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. மரபணு மாற்றப்பட்ட கடுகு விதை பரிசோதனைக்கு அனுமதி அளிக்கப்பட்டபோது, நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. மரபணு மாற்று கடுகு சாகுபடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு, 25 அக்டோபர் 2016 இல் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மரபணு மாற்று கடுகு வர்த்தக அனுமதிக்கு தடை விதித்தனர். அப்போது மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே மரபணு மாற்று கடுகு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் இன்றி மரபணு மாற்று கடுகு வர்த்தகப் பயன்பாட்டிற்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது?

டெல்லி பல்கலைக் கழகம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதையை உற்பத்தி செய்து, அதற்கு “தாரா மஸ்டர்ட் ஹைபிரிட் 11(DMH-11)” என பெயர் சூட்டியது. மரபணு மாற்றப்பட்ட பயிர் சாகுபடிக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு இருந்து வரும் நிலையில், இந்தியாவில் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. உணவுப் பயிரில்லாத மரபணு மாற்று பி.டி.பருத்தி பயிரிட அனுமதிக்கப்பட்ட பிறகு, பாரம்பரிய பருத்தி ரகங்கள் அழிந்தது மட்டுமின்றி, பன்னாட்டு நிறுவனமான மான்சாண்டோ, பி.டி.பருத்தி விதை சந்தையை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதிக விளைச்சலைக் கொடுக்கும், பூச்சிக்கொல்லி செலவுகள் இருக்காது. உற்பத்தி அதிகரிக்கும், லாபகரமாக இருக்கும் என்றெல்லாம் மான்சாண்டோ நிறுவனத்தின் கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி, பி.டி.பருத்தி சாகுபடி செய்து, நட்டம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான விவசாயிகள் உயிரை மாய்த்துககொண்டனர்.

மரபணு மாற்று பி.டி.கத்திரிக்காய் சாகுபடிக்கு 2010 இல் மத்திய அரசு அனுமதி அளித்தபோது, எழுந்த கடும் எதிர்ப்புகளால் பி.டி.கத்தரி ஆராய்ச்சிக்கு மத்திய அரசு தடை விதித்தது. தற்போது மரபணு மாற்று கடுகு உற்பத்திக்கு அனுமதி அளிப்பதன் மூலம் முதல் முறையாக உணவுப் பயிருக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க முடிவு செய்துள்ளன. இதன் பின்னர் இன்னும் நூற்றுக்கணக்கான மரபணு மாற்று உணவுப் பயிர்களுக்கு அனுமதி வழங்கும் ஆபத்து நேரிடும்.

டெல்லி பல்கலைக் கழகம் ஆய்வு செய்துள்ள மரபணு மாற்று கடுகில் பார்னேஸ், பார்ஸ்டார் மற்றும் பார் ஆகிய மரபு அணுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மரபணுக்களுக்கு ‘பேயர்’ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் காப்புரிமை பெற்று உள்ளன. பார்னேஸ் மரபணு, ஆண் மலட்டுத்தன்மையை உருவாக்கும் என்பதால் உலக வேளாண் அமைப்பு இதனை தடை செய்துள்ளது. மரபணு மாற்று கடுகு ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை உருவாக்கும் வேதிப்பொருட்களை கொண்டுள்ளது. கடுகில் செலுத்தப்பட்டுள்ள பார்னேஸ் மற்றும் பார்ஸ்டார் ஆகிய மரபணுக்களுக்கு மட்டும்தான் உயிரிப் பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டது. ஆனால் களைக்கொல்லி தாங்குதிறன் தரும் என்று கூறப்படுகின்ற ‘பார்’ மரபணு சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. மரபணு மாற்றுக் கடுகு பயிரிடப்பட்ட ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் உள்ள பகுதிகளில் தேனீக்கள் அழிந்து வருகின்றன. பேயர் நிறுவனத்தின் களைக்கொல்லி, பூச்சிக்கொல்லிகள்தான் இதற்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது. மரபணு மாற்றுப் பயிர்களால் உயிர்ச் சூழல் வெகுவாகப் பாதிக்கப்படும்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளனவா? என்று உண்மையான ஆய்வுகள் இதுவரை நடத்தப்படவில்லை. மரபணு விதைகளை உற்பத்தி செய்யும் ‘மன்சாண்டோ’ நிறுவனத்தின் ஆய்வகம் வழங்கும் ஆய்வு முடிவுகளை அப்படியே மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு ஏற்றுக்கொண்டுள்ளதை மறுக்க முடியாது. வேளாண்மைத் துறை என்பது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளபோது, மாநில உரிமைகளை நசுக்கும் வகையில் மத்திய அரசு முடிவுகளைத் திணிப்பதை ஏற்க முடியாது.

இந்தியாவின் மரபு வகை மண்ணுக்கு ஏற்ற உணவுப் பயிர்கள் உற்பத்தியை அழித்துவிட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்கு ஊக்கம் அளிக்கும் மரபணு மாற்று கடுகு உள்ளிட்ட எந்தவித உணவுப் பயிர்கள் உற்பத்திக்கும், வர்த்தக பயன்பாட்டுக்கும் மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது எனறு வலியுறுத்துகின்றேன்.

புழல் சிறையில் தம்மை சந்திக்க வந்த வழக்கறிஞர் கோ.நன்மாறன் அவர்களிடம் வைகோ அவர்கள் கூறிய இந்தக் கருத்துக்கள் அறிக்கையாக வெளியிடப்படுகின்றது.

ஓமன் மதிமுக இணையதள அணி