Monday, May 15, 2017

சிறை சென்றது ஏன்? வைகோ கடிதம்-4, மக்கள் ஆட்சிக்கு மகுடமே பொது வாக்கெடுப்பு! பாகம்-2!

ஜூனாகத் வாக்கெடுப்பு:-

இன்னொன்று ஜூனாகத் (Junagadh). அங்கே இந்துக்கள் 90 விழுக்காடு. ஆட்சி புரிந்தவரோ நவாஸ் முகம்மது மகபத்கான். 1947 ஆகஸ்டு 15 ஆம் நாளன்று, ‘தனது சமஸ்தானம் பாகிஸ்தானுடன் இணைந்துவிட்டது’ என்று பிரகடனம் செய்தார். ஜின்னாவின் ஆலோசனைப்படி நடந்துகொண்டார். படேல் படையெடுக்க முனைந்த போது நேரு தடுத்தார். மவுண்ட் பேட்டன் பிரபு ‘ஐ.நா.வுக்குப் பிரச்சினையைக் கொண்டு செல்வோம்’ என்றார்.

ஜூனாகத் நவாப் ஏற்கனவே 47ன் தொடக்கத்தில் ஜூல்பிகர் அலி பூட்டோவின் தந்தையான ஷா நவாஸ் பூட்டோவைத் தனது அரசின் திவானாக நியமித்து இருந்தார். 1948 பிப்ரவரி 20-ஆம் தேதி “பாகிஸ்தானுடனா? இந்தியாவுடனா?” என்ற பொது வாக்கெடுப்பு ஜூனாகத்தில் நடத்தப்பட்டது. மொத்தம் 2 இலட்சத்து 01 ஆயிரத்து 457 வாக்குகள். அதில் 1 இலட்சத்து 90 ஆயிரத்து 870 வாக்குகள் பதிவாகின. அதில் பாகிஸ்தானுடன் இணைய வெறும் 91 வாக்குகளே பதிவாயின. மற்ற அனைத்து வாக்குகளும் இந்தியாவுடன் இணைய ஆதரவு தெரிவித்தன. அதாவது 99.95 விழுக்காடு. அந்த சமஸ்தானம் இந்தியாவின் பகுதி ஆயிற்று.

காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது எப்படி?

இப்போது காஷ்மீரத்துக்கு வருவோம். அங்கே ஜம்மு-காஷ்மீரின் மன்னராக ஹரிசிங் ஆட்சி புரிந்தார். 47-இல் தனது சமஸ்தானம் ஒரு தனி நாடு என்று முதலில் அறிவித்தார். ஆனால் பாகிஸ்தானில் இருந்து சிப்பாய்களும் கலகக்காரர்களும் ஆயுதபாணிகளாகப் பெருமளவில் ஊடுருவிய நிலையில், பாகிஸ்தானின் பிடிக்குள் சிக்க நேரும் என்று அஞ்சிய மன்னர் ஹரிசிங், பண்டித நேருவின் உதவியை நாடினார்.

காஷ்மீரை இந்தியாவில் இணைக்க வேண்டும் என்ற ஆர்வம் சர்தார் வல்லபாய் படேலுக்குத் தொடக்கத்தில் இல்லை என்று குல்தீப் நய்யார் தனது சுயசரிதையில் ஆதாரபூர்வமாகக் கூறுகிறார்.

1947 செப்டம்பர் 27-இல் ஜவஹர்லால் நேரு வல்லபாய் படேலுக்கு எழுதிய கடிதத்தில், ‘இந்திய யூனியனுக்குள் காஷ்மீரை இணைக்க வேண்டும்; அதற்கு சேக் அப்துல்லாவின் ஒத்துழைப்பை நாட வேண்டும்’ என்று எழுதுகிறார்.

ஆனால், ‘காஷ்மீரை விட்டு வெளியேறு’ என்று மன்னர் ஆட்சிக்கு எதிராக ஜனநாயகப் போரை ஷேக் அப்துல்லா நடத்திக் கொண்டு இருந்தார். காயிதே ஆஜம் முகமது அலி ஜின்னாவும் ஷேக் அப்துல்லாவும், 1947-க்கு முன்னர் இருமுறை லாகூரில் சந்தித்தபோது தன்னுடன் கரம் கோர்க்குமாறு ஜின்னா வேண்டுகோள் விடுத்தபோது, “இந்தியத் துணைக்கண்டம் நெடுகிலும் கோடிக்கணக்கான முஸ்லீம்கள் ஆங்காங்கு வாழும் போது, ‘பாகிஸ்தான்’ என்று இஸ்லாமிய நாட்டை அமைப்பது விபரீதத்தில் முடியும்” என்றார் ஷேக் அப்துல்லா. இதே கருத்தைத்தான் மௌலானா அபுல்கலாம் ஆசாத்தும் உறுதிபடக் கூறினார்.

தற்போது மன்னர் ஹரிசிங் பதட்டத்தில் நடுங்குகிறார். நேருவின் யோசனைப்படி ஷேக் அப்துல்லாவுக்கு நேசக்கரம் நீட்டினார். ‘இந்திய யூனியனுடன் ஜம்மு-காஷ்மீரை இணைக்கிறேன்’ என்று 1947 செப்டம்பர் 30-இல் இணைப்புக் கடிதம் (Accession) தந்தார்.

1947 அக்டோபர் 20-இல் பாகிஸ்தான் இராணுவம் ‘பழங்குடியினர்’ போர்வையில் ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவி விட்டது என்பது உறுதியாயிற்று. அக்கால கட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஷேக் அப்துல்லா, 1947 செப்டம்பரில் விடுதலையாகி இருந்தார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பாளர்களை விரட்ட, மேஜர் ஜெனரல் திம்மையா டாங்கிகள் கொண்ட இந்தியப் படையை அனுப்பினார். போர் மூண்டது. இந்தியப் படையின் கை ஓங்கியது. நிலைமை மோசமானபோது 1947 நவம்பர் 26-ஆம் நாளன்று பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் டில்லிக்கு வந்து பண்டித நேருவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பாகிஸ்தான் ‘பழங்குடியினர்’ படையினர் யுத்தகளத்தில் இருந்து பின்வாங்கிச் செல்லுவது என்றும், இந்தியப் படையினரும் பின்வாங்கிக் கொள்வது என்றும் ஐ.நா. சபை ஒரு ‘கமிஷனை’ அமைத்து “பொது வாக்கெடுப்பு” நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மவுண்ட் பேட்டன் பிரபுவின் அறிவுரைப் படி இந்தியாதான் காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. சபைக்குக் கொண்டு சென்றது. ‘காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல்’ என்று புகார் செய்தது.

‘பொறியில் இந்தியா சிக்கிக் கொண்டது’ என்று இந்தியாவின் மற்ற தலைவர்கள் பின்னர் குறை கூறினர். ஐ.நா. மன்றத்தின் பாதுகாப்புச் சபையில் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஜபருல்லாகான் மிகச் சாதுரியமாக வாதங்களை முன் வைத்ததாலும் ‘மத்திய கிழக்கில்’ தனது ஆதிக்கத்தைத் தொடர்வதற்காகப் பிரிட்டன் சூழ்ச்சியாகக் காய்களை நகர்த்தியது. “காஷ்மீர் ஒரு பிரச்சினைக்கு உரிய பிரதேசம்” (Territory in dispute) என்றது. அமெரிக்க அரசு தொடக்கத்தில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோதும் பிரிட்டனின் கருத்துக்கு ஆதரவாகக் கையை உயர்த்தியது.

ஐ.நா. தீர்மானம்:-

1948 ஆகஸ்டு 13-ஆம் நாள் ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் கூறுகள்!

(1) போர் நிறுத்தம்

(2) காஷ்மீருக்குள் நுழைந்த பழங்குடியினரை பாகிஸ்தான் திரும்பப் பெற வேண்டும்;

துருப்புக்கள் சிவில் நிர்வாகத்தின்கீழ் செயல்பட வேண்டும்

(3) இந்தியா தனது துருப்புகளைப் பின் வாங்க வேண்டும்

(4) ஐ.நா. பார்வையாளர்கள் போர் நிறுத்தத்தைக் கண்காணிப்பர்

(5) பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரதமர் நேரு, தனது சகோதரியும் இந்தியாவின் ஐ.நா. தூதருமான விஜயலட்சுமி பண்டிட்டுக்கு ஆத்திரத்துடன் எழுதிய கடிதத்தில், “ஐ.நா. பாதுகாப்புச் சபை பாரபட்சமாக நடந்து கொண்டது; பிரிட்டனும் அமெரிக்காவும் மோசமாகச் செயல்பட்டன” என்று எழுதினார்.

1950-இல் காஷ்மீர் பிரச்சினையில் ஐ.நா. தலையிடுவதை நேரு நிராகரித்தார். பொது வாக்கெடுப்பைத் தானும் மவுண்ட் பேட்டன் பிரபுவும் சேர்ந்து ஏற்பாடு செய்யலாம் என்ற ஜின்னாவின் யோசனையும் நிராகரிக்கப்பட்டது. இந்தியாவில் அமெரிக்க தூதராக இருந்த செஸ்டர் பௌல்ஸ் “1953-க்கு முன்னர் பொது வாக்கெடுப்பு நடைபெற்று இருந்தால் காஷ்மீர் இந்தியாவுடன் இணையும் கருத்து வெற்றி பெற்று இருக்கும்” என்றார்.

காஷ்மீரின் இரண்டாவது பிரதமராக சேக் அப்துல்லா இருந்த காலத்தில் (2nd Prime Minister of Jammu and Kashmir 5 March 1948 – 9 August 1953) 1952 ஜூலையில் டில்லி ஒப்பந்தத்தை நேருவும் ஷேக் அப்துல்லாவும் ஏற்படுத்தினர். 1951-இல் ஜம்மு-காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை தேர்ந்து எடுக்கப்பட்டது. ஐம்மு-காஷ்மீர் இந்திய யூனியனின் பகுதிதான் எனப் பிரகடனம் செய்த ஷேக் அப்துல்லா, மிக அழுத்தமாக மத்திய அரசின் நிர்வாகம், பாதுகாப்பு, வெளிவிவகாரம், இரயில்வே உள்ளிட்ட தொடர்புகள் தவிர்த்து வேறு எதிலும் மத்திய அரசு மூக்கை நீட்டக் கூடாது என்றார்.

நேரு தனது அமைச்சர்களான ரபி அகமத் கித்வாய், அபுல் கலாம் ஆசாத்தை ஷேக் அப்துல்லாவுடன் பேச்சுவார்த்தைக்கு அனுப்பியும் பலன் இல்லை. “காஷ்மீர் இந்தியாவின் அடிமையாக இருக்க முடியாது” என்று முழங்கினார் காஷ் மீரத்துச் சிங்கம்.

அந்தச் சிங்கத்தின் கர்ஜனை டில்லிக்கு அதிர்ச்சி தந்தது. அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. 1953 ஆகஸ்டு 9-ஆம் தேதி ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டுத் தமிழகத்தில் கொடைக்கானலில் சிறை வைக்கப்பட்டார். 11 ஆண்டுகளுக்கு முன் 1942-இல் இதே ஆகஸ்டு 9-இல் தான் “வெள்ளையனே வெளியேறு”, “செய் அல்லது செத்து மடி” என மகாத்மா காந்தி பிரகடனம் செய்தது வரலாற்று விசித்திரம்.

காலம் வேகமாக மாற்றங்களைக் கொண்டு வந்தது.

ஷேக் அப்துல்லா 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி விடுதலை செய்யப் பட்டார்; 1975 ஆம் ஆண்டு காஷ்மீர் முதல்வர் ஆனார். (4th Chief Minister of Jammu and Kashmir 25 February 1975–26 March 1977) Governor’s Rule (Again In office 9 July 1977–8 September 1982)

காஷ்மீர் சிங்கத்துடன் சந்திப்பு:-

1980-இல் எனது நண்பர் டாக்டர் பரூக் அப்துல்லா (அப்போது ஸ்ரீநகர் தொகுதி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்) அவர்களின் விருந்தினராக ஸ்ரீநகரில் தங்கி இருந்தேன். அவர்களது சொந்த இல்லத்தில் மாபெரும் தலைவர் ஷேக் அப்துல்லாவைச் சந்திக்க அவரது அலுவலக அறைக்குள் நான் மட்டும் நுழைந்தவுடன், நெடிதுயர்ந்த அந்தக் கம்பீரமான தலைவர், “என் இளைய நண்பனே வருக” என இரு கரம் நீட்டியவாறு இருக்கையை விட்டு எழுந்து என்னை நோக்கி நடந்து வந்தபோது விதிர்விதிர்த்துப் போனேன். ஆனந்த உணர்ச்சி மேனியில் பாய்ந்தது. காஞ்சிபுரம் பட்டு வேட்டி, பட்டுத் துண்டை அவரது தோளில் போர்த்தினேன். 15 நிமிடம் எனக்காக ஒதுக்கப்பட்டு இருந்தது. மிக அன்பாக அளவளாவினார். ஏர் இந்தியா சேர்மன் காத்திருப்பதாக அவரது உதவியாளர் துண்டுச் சீட்டை நீட்டியபோது, “இருக்கட்டும். எங்கள் உரையாடல் முடியும்போது சொல்கிறேன்” எனக் கூறியபின் எனக்காக 40 நிமிடங்கள் செலவழித்ததை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.

“காங்கிரஸ் அகராதியில் நட்பு, நன்றி என்ற இரண்டு சொற்களுக்கும் இடம் கிடையாது” என்று அம்மாமனிதர் கூறியதையும் எப்படி மறப்பேன்?

நான் போர்த்திய பட்டாடைகளைக் களையாமலே என்னை அவரது இல்லத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றவர், மகன் டாக்டர் பரூக் அப்துல்லாவையும் வரவழைத்துப் புகைப்படம் எடுக்கச் சொன்னார். கலிங்கப்பட்டியில் எங்கள் இல்லத்தில் அந்தப்படம் இருக்கின்றது.

காலச்சுழலில் எத்தனையோ ஏற்ற இறக்கங்கள்!

காங்கிரஸ் கட்சியுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைக்க யோசித்தபோது டாக்டர் பரூக் அப்துல்லாவிடம் அவர் தந்தை கூறியதை நினைவூட்டினேன். ஆனால் சில அரசியல் அழுத்தங்களால் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தார். பின்னர் ஒருநாள் காலையில் முதல்வர் டாக்டர் பரூக் அப்துல்லா தேநீர் அருந்திக் கொண்டு இருந்தபோது அவரது ஆட்சி கலைக்கப்பட்ட செய்தியை அறிந்தார்.

பின்னர் ஒரு கட்டத்தில், பிரதமர் வாஜ்பாய் காலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேசிய மாநாட்டுக் கட்சி இடம் பெற்றது. ஏன்? நமது இயக்கம் காங்கிரசுடனும், பா.ஜ. கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லையா? தவிர்க்க இயலாத தீமைகளாக நம்மை வளைத்து விடுகின்றன. நம்மை அழிக்க தி.மு.க. தலைமை கங்கணம் கட்டிக் கருவி கொண்டு செயல்படுகிறதே? நல்லன்புடன் நாம் நெருங்கிச் சென்ற காலத்திலும் அவர்கள் மனதில் வக்கிரமும் உக்கிரமும் மறையவில்லையே?

காஷ்மீர் பற்றி எரிவதற்குப் பல காரணங்கள்!

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்ய இந்துத்துவ சக்திகளின் மூர்க்கம்; அதற்கு உடன்படும் பா.ஜ. கட்சி;

இந்தியப் பன்முகத் தன்மையைச் சிதைத்து ‘இந்து ராஷ்டிரம்’ அமைக்க ஆக்டோபஸ் கரங்களை விரிக்கும் இந்துத்துவ சக்திகள்;

‘பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவோம்; இஸ்லாமியர்களின் ஷரியத்தைச் சாய்ப்போம்’ என்ற ஓங்காரம்;

‘மாட்டுக் கறி சாப்பிட்டால் தண்டனை; மாடுகள், பசுக்கள் வதை என்றால் சிறை’

திருமணப் பிரச்சினையில் “ஷரியத்தில்” கை வைப்போம்:-

என்ற முழக்கங்கள்தான் காஷ்மீரத்து இளம் தலைமுறையினரின் நெஞ்சில் எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றுகிறது.

‘இந்தியர்களே! வெளியேறுங்கள்,’ என்ற குரலே ஸ்ரீநகரிலும் சுற்றுவட்டாரத்திலும் ஓங்கி ஒலிக்கிறது ஜம்முவின் சில பகுதிகள் தவிர. இந்நேரத்தில்தான் குளவிக் கூட்டைக் கலைத்துவிட்டார் பிரதமர் மோடி. அருணாசலப் பிரதேசத்திற்குச் சொந்தம் கொண்டாடும் சீன நாகத்தைச் சீண்டிப் பார்க்கும் விதத்தில் தலாய்லாமா அருணாசலப் பிரதேசம் வழியாக திபெத்துக்குச் சென்றதால், சீனம் சீறுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்து வழியாகவே ‘பொருளாதாரச் சாலை’ அமைக்கிறது சீனா. செஞ்சீனமும் ரஷ்யாவும் பாகிஸ்தானுடன் கரம் கோர்த்து விட்டன. தெற்கே இலங்கையில் சீனமும் பாகிஸ்தானும் பலமாகக் கால் ஊன்றி விட்டன. இதனைச் சமாளிப்பதற்காகவே பிரதமர் மோடி ரணில் விக்கிரம சிங்கேயுடன் பொருளாதார ஒப்பந்தம் போடுகிறார். சேட்டிலைட் உபகாரம் வேறு சார்க் நாடுகளுக்காம். கடந்த கூட்டத்தில் பாகிஸ் தான் பங்கேற்கவே இல்லை.

‘பொது வாக்கெடுப்பு’ என்றாலே இந்திய தேசியவாதிகளுக்குக் காய்ச்சல் வந்து விடுகிறது. ஐரோப்பாவின் பூந்தோட்டமான சுவிட்சர்லாந்தில் உண்மையான மக்கள் ஆட்சி “Referendum and Initiative” மக்கள் விரும்பினால் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

மக்கள் ஆட்சிக்கு மாண்பு சேர்ப்பதே பொது வாக்கெடுப்பு. ஆம்; ‘மக்கள் குரல் தானே மகேசன் குரல்’ என்றார் அண்ணா.

முத்துலிங்கத்தின் உணர்ச்சி:-

2017 மே திங்களுக்குரிய விகடன் தடம் மொழி செல்லும் வழி எனும் தமிழ் இலக்கியத்துக்குப் பெருமை சேர்க்கத் ‘தடத்’தில் பயணத்தைத் தொடங்கி உள்ளது. இதன் அடிப்படையில் “ஈழ இலக்கியம்; ரயில் புறப்பட்டு விட்டது” என்ற மேற்கோளுடன் ஈழ எழுத்தாளர், படைப்பாளி திரு. அ.முத்துலிங்கம் அவர்களின் செவ்வி இடம் பெற்றுள்ளது. ஆர்வத்துடன் படித்தேன். என் மனதை ஈர்த்த வரிகளைத் தருகிறேன்.

“கேள்வி : ஈழப் போரை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?

திரு. முத்துலிங்கம் : தமிழர்களுக்குப் போர் என்ன புதிதா? சங்க இலக்கியம் முழுக்கப் போரும் காதலும்தானே? காரவேலன் என்ற அரசன் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஒடிசாவில் யானைக்குகையில் செய்தி பொறித்து வைத்து இருக்கின்றான். தொடர்ந்து தன்னுடன் போர் தொடுத்து வந்த மன்னர்களை அவன் முறியடித்ததாக.

பல ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழர்கள் கண்டது போர்தான். மக்கள் தம் விடுதலைக்காகப் போரிடுவதும் காலம் காலமாக நடக்கின்றது. எரித்ரியா போரிட்டு எத்தியோப்பியாவில் இருந்து பிரிந்தது. தெற்கு சூடானும் போரிட்டு இன்று தனி நாடாக ஆகி இருக்கின்றது. பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் பிரிந்ததும் போரினால்தான். 1995-ஆம் ஆண்டு கனடாவில் கியூபெக் மாகாணம் வாக்கெடுப்பு நடத்தியது. தொடர்ந்து கனடாவின் அங்கமாக இருப்பது என்று மக்கள் தீர்மானித்தார்கள்.

இல்லாவிட்டால் இன்று கியூபெக் ஒரு தனி நாடாக இருந்திருக்கும். சில மாதங்களுக்கு முன் மக்கள் வாக்குப்படி ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிந்துபோனது எல்லோரும் அறிந்ததே. ஈழத்துப் போரை வாக்கெடுப்பின் மூலம் தடுத்து இருக்கலாம்; அது நடக்கவில்லை. போர் தொடங்கியது. ஆனால் பிரிவினை சாத்தியமாகவில்லை. (இந்திய அரசின் துரோகமும் ஏழு அணு ஆயுத வல்லரசுகள் சிங்கள அரசுக்குத் தந்த ஆயுத பலமும் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தது.) இறுதியில் அதர்மம் தலைதூக்கியதுதான் மிகவும் கொடுமையானது. ஈழத்துப் போரில் நடந்த அழிவுகளைக் கணக்கிடவே முடியாது”

இந்த பேட்டியைப் படித்தபோது படைப்பாளி முத்துலிங்கம், தன் இருதயத்தில் வடியும் இரத்தத்தை முழுமையாக வெளிப்படுத்தாமல் சில சொற்களில் வடித்து உள்ளார்.

“பொது வாக்கெடுப்பு தமிழ் ஈழத் தாயகத்தில் நடத்தப்பட வேண்டும் என்று, 2011 ல் பிரஸ்ஸல்ஸ் நகரில் எழுந்த முதல் குரல் வைகோவின் குரல்தான் என்பதே என் வாழ்வில் முக்கியமான தருணம். ஈழ வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும்.

அதனை எவ்விதத்திலும் செயல்படுத்தி விட்டால் இந்தப் பிறவிப் பேற்றினை அடைந்து விடுவேன்.

அது, இயற்கை அன்னையின் கைகளிலும், காலதேவன் தரும் அனுமதியிலும் அடங்கி இருக்கின்றது.

வரலாறு அங்கீகரித்த சுயநிர்ணய உரிமை:-

ஒவ்வொரு தேசிய இனமும் தனித்தனி அரசுகள் அமைத்துக் கொள்ளும் உரிமை உண்டு. அதுவே தன்னாட்சி உரிமை; சுய நிர்ணய உரிமை. இதுதான் உலக நியதி.

தொடக்க காலத்தில் மனிதன் காடுகளில் உலவியபோது, இயற்கையின் தாக்குதலுக்கு அஞ்சிக் குகைகளில் பதுங்கிய போது, விலங்குகளுடன் போரிட்டபோது, காலது கொண்டு மேலது தழுவி கையது கொண்டு மெய்யது போர்த்தித் தனித் தனியாக வாழ்ந்த போது, தன்னைப் போன்ற உருவங்கொண்டவர்களை மனிதர்களாகக் கண்டு கொண்டான்; தாக்க வருகின்ற விலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு கூட்டமாகச் சேர்ந்து கொண்டு அவற்றோடு போரிட்டபோது, அவர்களுக்கு இடையே உறவுகள் வளர்ந்து, தமது எண்ணங்களை வெளிப்படுத்த சைகை மூலமாக அவர்களுடைய உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டார்கள்; அந்தச் சத்தத்தின் மூலமாகச் சொற்களைப் பகிர்ந்து வாழ்ந்தார்கள்.

அப்போது, இன்னொரு பகுதியில் இருந்து வேறொரு கூட்டம் வந்தால், அவர்களை எதிர்த்துப் போரிடுவதற்குத் தங்களுக்குள் வலிமை உள்ள ஒருவனைத் தலைவனாக ஆக்கிக்கொண்டார்கள்; அப்படிக் கூட்டம் கூட்டமாக உருவாகி உருவாகி, வாழ்வதற்கு, வசிப்பதற்கு வீடுகள் கட்டிக் கொண்டார்கள்; பாதுகாப்பதற்கு ஆயுதங்களைத் தாங்குகின்ற படை வீரர்களை அமைத்துக் கொண்டார்கள்; படிப்படியாக வளர்ந்து அரசுகளாக உயர்ந்து, அந்த அரசுகளுக்குத் தலைவனாக மன்னன் ஒரு நிர்வாகத்தை அமைத்தான்.

மன்னன் மகன் மன்னனாக அவர்கள் அமைத்த அரசுகள் பிற அரசுகளோடு மோதுகின்ற காலங்கள் வளர்ந்து, படிப்படியாக, பல நூற்றாண்டுகளாக, மனிதகுல வரலாற்றில் புதிய அரசுகள் எழுந்தன. அந்த அரசுகள் மன்னர் ஆட்சிகளாக உருவாயின.

அந்தக் காலகட்டத்திலேயே மக்கள் தங்களுடைய தலைவனைத் தாங்க ளாகவே தேர்ந்து எடுத்துக் கொள்ளக் கூடிய, மக்கள் விரும்பும் கருத்தின்படிதான் ஒரு அரசன் அரசைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளக்கூடிய அரசு அமைத்து, யூப்ரடிஸ்-டைக்ரிஸ் நதிகளுக்கு இடையில் மிகப்புராதனமான நாகரிகம் சுமேரிய நாகரிகமாக மலர்ந்த மெசபடோமியாவில் உருவாயிற்று என்று நான் படித்து இருக்கின்றேன்.

பழந்தமிழர்களுக்கும், மெசபடோமியா வாழ் மக்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. எகிப்து, மெசபடோமியா, பழந் தமிழகம், சிந்து நதிக்கரை நாகரிகம் வரை யிலும் தொடர்புகள் உண்டு.

அதைப்போலவே கிரேக்கத்தின் நகர நாடுகள். அது ஸ்பார்ட்டா ஆகட்டும், ஏதென்ஸ் ஆகட்டும், மக்களாகக் கூடி, ஒரு தலைவனை, பிரதிநிதிகளைத் தேர்ந்து எடுத்துக் கொண்டு, அந்த நகர நாடுகளின் நிர்வாக சபைகளை அமைத்துக் கொண்டார்கள். மக்களாட்சி மலரத் தொடங்கியது.

தொடருகிறது...

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment