Tuesday, May 9, 2017

நீட் நுழைவுத் தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு நேர்ந்த மனிதப் பண்பற்ற கொடுமைகள்! வைகோ கண்டனம்!

மருத்துவக் கல்விக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்துவதை தமிழகம் மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு மட்டும் நீட் தேர்வு நடத்த தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டது.


பனிரெண்டாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாலும், 69 விழுக்காடு இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதாலும் நீட் தேர்வு நடத்துவதிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற தமிழக அரசு உரிய கவனம் செலுத்தாததால் தமிழ்நாட்டு மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக எழுதும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவது இல்லை. தமிழ்நாட்டில், வெறும் இரண்டு விழுக்காடு மாணவர்கள் மட்டுமே சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயின்று வருகின்றனர். மிகப் பெரும்பான்மையான பள்ளிகளில் மாநில அரசின் சமச்சீர் கல்வி முறைதான் நடைமுறையில் இருக்கிறது. கிராமப்புற மாணவர்களும், பின்தங்கிய, பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவர்களும் மாநில பாடத்திட்டத்தில்தான் கல்வி பெற்று வருகின்றனர்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் படிதான் மருத்துவப் படிப்பிற்கு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை நடத்துகிறது.

மருத்துவப் படிப்புகளுக்கு பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதை தடை செய்துவிட்டு, நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்குவதால், சாதாரண எளிய சூழ்நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி எட்டாக் கனி என்பது மட்டுமல்ல, சமூக நீதிக் கோட்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயலாகும். 

எனவேதான் நீட் நுழைவுத் தேர்வு கூடாது என்று தமிழகம் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. ஆனால் மத்திய அரசு தமிழகத்தின் கோரிக்கையை அலட்சியம் செய்துவிட்டு, நீட் நுழைவுத் தேர்வு நடத்துவதிலேயே முனைப்பாக இருந்தது.

மே 7 ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வில் தமிழகத்தில் மட்டும் 85 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதியுள்ளனர்.

நீட் நுழைவுத் தேர்வு மையங்களில் தேர்வு எழுதவந்த மாணவர்களை அரசு அலுவலர்கள் நடத்திய முறை மாணவர்களுக்கு மன உளைச்சலையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தவறுக்கு இடம் கொடுக்காமல் நீட் நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியதற்காக தேர்வு மையங்களில் நடந்த கெடுபிடிகளும், அருவருக்கத்தக்க செயல்களும் வன்மையான கண்டனத்துக்கு உரியது ஆகும்.

மெட்டல் டிடக்டர் மூலம் சோதனையிடப்பட்ட பின்னரே மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். மாணவிகளின் தலைமுடியைக் கலைந்து சோதனை செய்ததுடன், சுடிதாரில் முழுக் கை இருந்தால் வெட்டி வீசியும், மாணவிகள் துப்பட்டா மேலாடை அணியவும் அனுமதிக்காமல் கெடுபிடி செய்துள்ளனர். அவர்கள் அணிந்திருந்த பொன் அணிகளையும் அகற்றி உள்ளனர். மாணவர்களின் முழுக் கை சட்டையை கத்திரிகொண்டு வெட்டி அலங்கோலப்படுத்தி இருக்கின்றனர். மாணவர்களின் பேண்ட் சட்டையில் இருந்த பெரிய பொத்தான்களையும், உலோகத்துடன் கூடிய இரும்புப் பட்டைகளையும் அவிழ்த்து எறிந்துள்ளனர்.

இவ்வளவு கொடூரக் கெடுபிடிகளையும் தாங்கிக் கொண்டு மாணவர்களால் எப்படி நிம்மதியாக தேர்வு எழுதியிருக்க முடியும்? இயற்பியல், வேதியியல் பாடக் கேள்விகள் கடுமையாக இருந்ததால் தமிழ் வழியில் தேர்வு எழுதிய கிராமப்புற மாணவர்கள் சரியாக தேர்வு எழுத முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

தேர்வு மையங்களில் குடிநீர் வசதிகூட செய்யப்படாமல் சிறிதும் மனிதப் பண்பற்ற முறையில் மாணவர்கள் நடத்தப்பட்டதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். 85 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதும்போது, போதுமான அடிப்படை வசதிகளைச் செய்வதற்குக்கூட அரசு கவனம் செலுத்தாதது கண்டிக்கத்தக்கது.

மாநில அரசுகளின் உரிமைகளை நசுக்கி அழிக்கும் வகையில், மத்திய அரசு கல்வித் துறையில் ஆதிக்கம் செலுத்துவதை இனியும் அனுமதிக்கக்கூடாது. கல்வித் துறையை மத்திய -மாநில அரசுகளின் பொதுப் பட்டியலில் இருந்து நீக்கி, மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் ஏகபோக கல்விக் கொள்கைகள் மாநிலங்களின் மீது திணிப்படுவதை தடுத்து நிறுத்த முடியும்.

புழல் சிறையில் தம்மை சந்திக்க வந்த வழக்கறிஞர் கோ.நன்மாறன் அவர்களிடம் வைகோ அவர்கள் கூறிய இந்தக் கருத்துக்கள் அறிக்கையாக வெளியிடப்படுகின்றது.


ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment