இமைப்பொழுதும் நீங்காது, என் இதயத் துடிப்போடும் இரத்தச் சுழற்சியோடும் கலந்து விட்ட கண்ணின் மணிகளே!
காலைக் கிரணங்களின் வெளிச்ச ரேகைகள் கொட்டடி வளாகத்தில் பரவும்போதே மனம் பரவசத்தில் ஆழ்ந்தது.
இன்று மே மாதம் ஆறாம் தேதி. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உதித்த நாளல்லவா. 1994 மே திங்கள் ஆறாம் தேதியன்று உதயமாகி 23 வருடங்களைக் கடந்து இன்று 24 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த 23 ஆண்டுகளில் 2003 மே ஆறாம் நாள் தான் நான் வேலூர் மத்திய சிறையில் இருந்தேன். மற்ற 22 ஆண்டுகளின் கழகத் தொடக்க நாளில் கழகக் கொடியினை ஏற்றும் பணியில் ஈடுபட்டு வந்தேன். இரவில் பொதுக்கூட்டம் பேசினேன். இன்று நமது இயக்க நிர்வாகிகள், முன்னோடிகள், மாவட்டச் செயலாளர்கள், அமைப்புகளின் நிர்வாகிகள் கழகக் கொடியேற்று விழாவை இந்நேரம் நடத்திக்கொண்டிருப்பார்கள். இப்பொழுது காலை 9.30 மணி.
வறட்சியின் கோரப் பிடியில் தமிழகம்
தமிழகம் வறட்சியின் கோரப் பிடியில் சிக்கி பெரும் அவலத்தை அனுபவிக்கிறது. பல இடங்களில் குடிதண்ணீருக்கு வழியின்றி மக்கள் பரிதவிக்கின்றனர். ஆடு, மாடுகளுக்குத் தீவனம் இல்லை. மேய்ச்சல் நிலங்களும் இல்லை. குடிக்கத் தண்ணீரும் இல்லை. வீடுகளின் தொழுவங்களில் செல்லப்பிள்ளைகளாக வளர்க்கப்பட்ட மாடுகள் (பசுக்களும், எருதுகளும்) நிலைமை மிகப் பரிதாபம். வைக்கோல், நாற்றுதான் அவற்றுக்கு உணவு. வீடுகளில் எருதுகளுக்கு தவிடு, புண்ணாக்கு, பருத்திக் கொட்டையை ஆட்டுஉரல்களில் போட்டு நன்கு அரைத்து ஊரல் எனும் உணவாக அவை வயிறு நிரம்ப உண்பதைக் கண்டு விவசாயி தன் வயிறு நிறைந்தது போல மகிழ்ந்த நிலைமையெல்லாம் போய்விட்டது. தற்போது அதற்கெல்லாம் வழி இல்லை. மாடுகள் எலும்பும், தோலுமாக நலிந்து உயிருக்குப் போராடும் நிலைமை ஏற்பட்டு விட்டது.
குளங்கள், ஊரணிகளில் தண்ணீர் இல்லை. எல்லாம் வரண்டு கிடக்கின்றன. இந்த நிலைமை கோடை கடந்தும் நீடித்தால் கால்நடைகள் வாடி வதங்கி மடியும் துன்பம் நிகழும். பக்கத்து மாநிலங்கள் வஞ்சகம் செய்கின்றன. காவிரியின் குறுக்கே மேகதாட்டு, ராசிமணல் அணைகளைக் கர்நாடகம் கட்டிவிட்டால் மேட்டூருக்கு மழை காலத்திலும் தண்ணீர் வராது. செழித்து வளம் கண்ட தஞ்சைத் தரணி பஞ்சப் பிரதேசம் ஆவதை கற்பனை செய்யும்போதே மனம் வேதனையில் துடிக்கிறது. நம் எதிர்கால சந்ததிகளைக் காப்பாற்ற “மழைக் காலத்தில் ஆறுகளில், நதிகளில் வெள்ளம் போல் பாய்ந்து வரும் தண்ணீர் கடலில்போய் வீணாகி விடாமல், ஆங்காங்கு தடுப்பணைகள், குளம், குட்டைகள் அமைத்து தேக்கி வைக்க வேண்டும்.” மழைநீர் சேகரிப்பு நல்ல திட்டம். நிபுணர்களைக் கொண்டு திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.
ஏரிகள், கண்மாய்கள் முறையாகத் தூர் வாரப்பட வேண்டும். குளங்களை மூடியுள்ள சீமைக் கருவேல மரங்கள் முற்றாக அகற்றப்பட வேண்டும். நாட்டுக் கருவேல மரங்களால் கேடு கிடையாது. அவற்றை அழிக்கக் கூடாது. இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல், தன்னையும் குழப்பிக் கொண்டு, மற்றவர்களையும் குழப்புகிற ஆராய்ச்சியாளர்களை அலட்சியம் செய்வது தான் சரியாகும்.
நமது இயக்கம் நீராதாரங்களைக் காக்கப் போராடியது. சுற்றுச் சூழல் நச்சுமயமாகவிடாமல் போராடிக் கொண்டிருக்கிறது. சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியும், தமிழ்நாட்டைப் பாதுகாக்கும் பணிதான். தமிழ்நாடு தனது வளத்தை மட்டும் இழக்கவில்லை; பெருமைகளையும் இழந்து விட்டது. “புரையோடிப் போன ஊழலால்” சீர்கெட்டு அவமானத்தால் வெட்கித் தலைகுனியும் நிலை ஏற்பட்டுவிட்டது.
கடந்த வார ‘சங்கொலி’ இதழில் எனது மடலின் நிறைவு வாசகங்களாக “இரண்டு இந்திய இராணுவ வீரர்கள் பாகிஸ்தான் இராணுவத்தால் கொல்லப்பட்டு அவ்வீரர்களின் தலை துண்டிக்கப்பட்டு, உயிரற்ற சடலங்களாக சிதைக்கப்பட்ட கொடூரத்தைக் குறிப்பிட்டிருந்தேன்.
“யுத்தக்களங்களில் பகை நாட்டு வீரர்கள் சரணடைந்தாலோ அல்லது அவர்களை வெற்றி கொண்டாலோ அந்த வீரர்களை யுத்தக் கைதிகளாக மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்” என்று உலக நாடுகள் ஏற்றுக்கொண்ட ‘ஜெனிவா நெறிகள்’ வழிப்படுத்துகின்றன. ஆனால், உலகில் தற்போது அனைவரையும் அச்சுறுத்தும் விதத்தில் கொடூரமான காட்சிகள் அரங்கேறுகின்றன. தீவிரவாத அமைப்புகள் தங்களிடம் பிடிபட்டவர்களை கழுத்தை அறுத்து படுகொலை செய்வதை வீடியோ காட்சியாகப் பதிவு செய்து, கோரமான அச்சம்பவத்தை உலக மக்கள் கண்டு அலறும்படிச் செய்கிறார்கள்.
தமிழர்களின் வரலாறே போர்க்களங்கள்:-
போர்க்களங்களில் வெற்றி பெற்ற அரசர்கள், படைத் தலைவர்கள், வென்ற நாடுகளில் தங்கள் படை வீரர்கள் பாய்ந்து சென்று பொருட்களைக் கொள்ளையடிப்பதும், பெண்களைப் பாலியல் வன்முறையில் நாசப்படுத்துவதும் முன்னர் நிகழ்ந்தது உண்டு. ஆனால் சால்பரினோ யுத்தகளத்தில் குற்றுயிரும் குலையுயிருமாக வீரர்கள் துடிப்பதைக் கண்டு 1828 மே 8-ஆம் நாள் ஜீன் ஹென்றி டியூனாண்ட் எனும் மனிதாபிமானியால் செஞ்சிலுவைக் சங்கம் தொடங்கப்பட்டது. இரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து துடிதுடித்த வீரர்களுக்கு இரவு வேளையிலும் கையில் விளக்குடன் தேடித் தேடிச் சென்று முதலுதவி செய்த பிளாரன்சு நைட்டிங்கேல் “வானுலகம் அனுப்பிய தேவதை”யாகப் போற்றப்பட்டார்.
தொடக்க காலத்திலும், மத்திய காலத்திலும் நடைபெற்ற கோரமான யுத்தங்களில் நெஞ்சை நடுநடுங்க வைக்கும் கொடூரங்கள் நிகழ்ந்தன. தோற்ற படையினரைச் சிதைப்பது, அப்பகைவர் நாட்டுக்குள் புகுந்து பொருட்களைக் கொள்ளையடிப்பதுடன் நிற்காமல், அப்பாவி மக்களை கண்டந்துண்டமாக்கிப் போடுவது - பெண்களை வாரிச் சுருட்டி எடுத்து தங்கள் இச்சைக்குப் பலியாக்குவது, தூக்கிச் செல்வது என்பனவெல்லாம் வழக்கமான நடைமுறையாகிப் போயிருந்தன.
மங்கோலிய எழுச்சியில் செங்கிஸ்கானுக்குப் பின்னர் இமயமலையைக் கடந்து, டில்லி வரை வந்து வாள் முனையில் வெற்றி பெற்ற கொடியவன் தைமூர் மன்னன் கொல்லப்பட்டவர்களின் தலைகளைத் துண்டித்து மலைபோல் குவித்தான் என்கிறது சரித்திரம்.
தமிழர்களின் வரலாறே போர்க்களங்களின் வரலாறுதான் என்பதை பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையாரின் ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ விவரிக்கும். இடைவிடாது வாளும், அம்பும், ஈட்டியும் கொண்டு போரிட்டனர் தமிழர்கள். ஆனால், போர் முடிவுக்குப் பின்னர் தோற்றுப்போன நாடுகளில் பயிர் பச்சைகளை அழித்ததாகவோ, நிராயுதபாணியான பொதுமக்களைக் கொன்று குவித்ததாகவோ ஒரு சான்றும் எங்கும் இல்லை.
போர்க்களத்துக்குச் செல்வதைப் பெருமையாகக் கருதினார்; மார்பில் வேல் பாய்ந்து மடிவதைப் புகழ் எனக் கொண்டனர். தமிழக வீரத் தாய்மார்களின் மறக் குணத்தைப் போற்றும் மூன்று பாடல்கள்:-
புறநானூற்றின் 279 ஆம் பாடல். பாடியவர் ஒக்கூர் மாசாத்தியார்.
அந்த வீரத்தாய்க்கு ஒரே மகன். நடக்கின்ற யுத்தத்தில் இவளது தந்தை யானையை வீழ்த்தி அப்போரில் காயமுற்று மடிந்தான். இவளது வீரக் கணவன் செருக்களம் சென்றான். தன்நாட்டு ஆநிரைகளைப் பகைவர் கவர்ந்து சென்றுவிடாமல் காத்தான். பின்னர் உயிர் நீத்தான். இன்றும் போர் முரசு ஒலிக்கிறது. தன் குடும்பமும் அப்போரில் பங்கேற்க முனைந்தாள். ஒரே பிள்ளையான தன் சிறு வயது மகனின் தலைமுடிக்கு எண்ணெய் தடவி, உடையும் உடுத்தச் செய்து, கையில் ‘வேலை’ எடுத்துக் கொடுத்து “போர்முனை செல்க” என அனுப்புகிறாள். என்னே இவளது துணிச்சல்! நினைக்கவே நடுக்கமாக உள்ளதே! மூதின் மகள் அல்லவா?”
“கெடுக சிந்தை; கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை,
யானை எறிந்து, களத்து ஒழிந் தனனே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்,
பெருநிரை விலக்கி ஆண்டுப்பட் டனனே;
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி,
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்,
பாறுமயிர்க்குடுமி எண்ணெய் நீவி,
ஒருமகன் அல்லது இல்லோள்,
‘செருமுக நோக்கிச் செல்க’ என விடுமே!”
களம்புகுந்த தன்மைந்தன் புறமுதுகிட்டு ஓடிவிட்டான் என்ற செய்தி அவளது செவிகளில் செந்தீயாய் எரித்தது. இதுகுறித்த பாடல் புறம் 278. பாடியவர் காக்கைபாடினியார் நச்செள்ளையார்.
அத்தாயின் மேனி நரம்புகள் புடைத்துத் தோன்றுகின்றன. வற்றி உலர்ந்த தோள்கள், “உன் மகன் படைக்களத்தைவிட்டு புறமுதுகிட்டு ஓடினான்” என்று உண்மை அறியாதார் கூறிய செய்தியால் எரிமலையானாள். “அவனுக்குப் பாலூட்டி வளர்த்த என் முலையையே அறுத்து எறிவேன்” என்று வஞ்சினம் கூறி போர்க்களம் சென்றாள். சபதப்படி தன் மார்பை அறுத்தெறிய கையில் வாளுடன் பிணக்குவியலைத் தேடுகிறான். பிணங்களைப் புரட்டிப் பார்க்கிறாள். அப்போது அக்களத்தில் அங்கங்கள் சிதைந்து துண்டங்களாகக் கிடந்த தனது மகனின் உடலைக் கண்டாள். பத்து மாதம் சுமந்து அம்மகனை ஈன்றெடுத்த போது ஏற்பட்ட மகிழ்ச்சியை விடப் பெருமகிழ்வு கொண்டாள்.
நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படைஅழிந்து மாறினன் என்றுபலர் கூற
மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்
முலைஅறுத் திடுவென், யான்எனச் சினைஇக்
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூ உ
ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே. -புறம் 278
இதே கருத்தினை பூங்கணுத்திரையார் புறம் 277 ஆம் பாடலில் கூறுகிறார். அவள் வயது முதிர்ந்திருந்த தாய். மீன்களை உண்ணுகின்ற வெள்ளைக் கொக்கின் வெண்மையான சிறகுகளைப் போல் வெள்ளிய நரைத்த கூந்தலை உடையவள்.
அவளது வீரப் புதல்வன் போர்க்களத்தில் தன்னை எதிர்த்து வந்த யானையைக் கொன்று தானும் அப்போரில் காயமுற்று மடிந்தான் என்ற செய்தியறிந்தபோது அவனைப் பெற்ற போது ஏற்பட்ட உவகையைவிடப் பேருவகை கொண்டாள். அவள் விழிகளிலிருந்து நீர்த்துளிகள் சிந்தின. வெதிர மலையில் மூங்கில்காட்டில் மழை பெய்யும்போது அம்மூங்கில்களில் இருந்து கொட்டுகின்ற நீர்த்துளிகளைவிட அந்த வீராங்கனையின் கண்ணீர்த்துளிகள் அதிகமாக இருந்தன.
“மீன்உண் கொக்கின் தூவிஅன்ன
வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர்
நோன்கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே”
இந்தப் புறநானூற்றுப் பாடல்களை நினைக்கும்போது, அவற்றை எழுதும்போது என் மனக் கண்ணின் முன்னால் லாகூர் சிறைச்சாலை தெரிகிறது. தூக்குக்கயிற்றின் நிழலில் சிறைக் கொட்டடியில் இருக்கும் “பகத்சிங்” தெரிகிறார். மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னைய கடைசி நேர்காணலில் “பகத்சிங்கின்” வீரத்தாய் அவரது தலையைக் கோதியவாறு, “மகனே தூக்குமேடைக்குச் செல்லும்போதும் நீ கலங்க மாட்டாய் - எனக்குத் தெரியும் - அந்த மாவீரத்தை நிலைநாட்டி மரணத்தைத் தழுவுவாய்” எனக் கூறும்போதே அத்தாயின் கண்களிலிருந்து நீர்த்துளிகள் பகத்சிங் சிரசில் விழுந்தன.
புறநானூற்றுத் தாயே வீரத்தாய்:-
தனது சிறைக் குறிப்புகளில் ‘பகத்சிங்’ எழுதுகிறார், வீரத்தாய் என்பவர் யார் என்று தானே கேள்வி எழுப்பி, அவரே பதிலையும் தருகிறார். கிரேக்கத்து நகர நாடுகளில் ஒன்றான ஸ்பார்ட்டா - யுத்த களத்தில் பகை கொண்ட நாட்டுடன் மோதுகிற போரின் முடிவு என்ன ஆகுமோ? என்று ஸ்பார்ட்டா மக்கள் காத்திருக்கின்றனர். ஒரு வீரத்தாய் தனது ஐந்து புதல்வர்களையும் யுத்தகளத்துக்கு அனுப்பி வைத்தவள். அவளை நோக்கி ஓடி வருகிறான் ஒரு ஸ்பார்ட்டன். “உனக்கு செய்தி தெரியுமா?” எனக் கேட்கிறான். அவள் திகைக்கிறாள். “உன் வீரப்பிள்ளைகள் ஐந்து பேரும் போர்க்களத்தில் கொல்லப்பட்டனர்” என்கிறான். “அட முட்டாளே, அதனையா நான் அறிய விரும்புகிறேன். களத்தின் முடிவு என்னவாயிற்று?” என்று கேட்கிறாள். “ஸ்பார்ட்டா படை வென்றது” என்றான் அவன். “அதைச் சொல்லடா. இப்பொழுதே நான் தேவதைக்கு பூசை செய்யப் புறப்படுகிறேன் என்றாள். அவள்தான் வீரத்தாய்” என்று எழுதுகிறார் மாவீரன் பகத்சிங்.
என் மனதில் என்ன தோன்றுகிறது தெரியுமா? கிரேக்கர்களின் யுத்த களங்களோ, ஸ்பார்ட்டாவின் தெர்மாபிளே போர்க்களம் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதால் ஆங்கிலத்தில் அதனைப் படித்ததால், பகத்சிங் வீரத்தாய்க்கு இலக்கணம் காட்டுகிறார். நமது புறநானூற்றுப் பாடல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டு, அப்பாஞ்சால வீரன் படித்திருந்தால் “புறநானூற்றுத் தாயை” வீரத்தாய் என வர்ணித்திருப்பார். அண்மையில் தித்திக்கும் செய்தி கண்டேன்.
தமிழ் மொழியின் கருத்துச் செல்வம் மேம்பட மொழிபெயர்ப்பு அவசியம்:-
தம்பி அருணகிரி அவர்கள் சிறையில் என்னிடம் ஈழ எழுத்தாளர் திரு அ.முத்துலிங்கம் அவர்களின் ‘தமிழ்மொழிக்கு ஒரு நாடில்லை’ எனும் நூலைத் தந்தார். அந்த எழுத்தாளர் தனது நூலில், “சமர்ப்பணம்” என்று பின்வருமாறு எழுதியுள்ளார். “சங்கப் பாடல் ஒன்றை ஒரு நாள் தேடியபோது, அதன் அருமையான ஆங்கில மொழி பெயர்ப்பு தற்செயலாக இணையத்தில் கிடைத்தது. அதன் நேர்த்தியும், அழகும் என்னை பெரிதும் கவர்ந்தன. மொழிபெயர்த்தவர் வைதேகி ஹெர்பர்ட். இந்திய அமெரிக்கப் பெண்மணி. கடந்த ஆறு வருடங்களாக இவர் முழு நேரப் பணியாக சங்கப் பாடல்களை மொழி பெயர்த்து வருகிறார் என்பதை அறிந்தேன். ஒரு பல்கலைக் கழகம் செய்ய வேண்டிய வேலையை, 2000 வருடங்களாக ஒருவருக்குமே தோன்றாத இந்த மேன்மையான பணியைத் தனி ஒருவராக இவர் செய்துகொண்டிருக்கிறார் என்று அறிந்தபோது வியப்பு ஏற்பட்டது. இவருக்கு உறுதுணையாக இருப்பவர் முனைவர் இரா.ருக்மணி அவர்கள். இன்று எட்டுத்தொகை, பத்துப் பாட்டு ஆகிய 18 சங்க கால நூல்களில் 12 மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன. மீதியையும் விரைவில் மொழிபெயர்த்துவிட வேண்டும் என்பது இவருடைய சங்கல்பம். இருவரையும் நான் கண்களில் கண்டது கிடையாது. ஆனால், உழைப்பு என்னை பிரமிக்க வைக்கின்றன. இவர்கள் இருவருக்கும் இந்நூல் சமர்ப்பணம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலை நாட்டிலே பிறந்த அறிஞர் கிறித்துவ மதக் கருத்துக்களைப் பரப்ப முனைந்த ஜி.யு.போப் அவர்கள் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்; திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தமிழ் மொழியின் கருத்துச் செல்வம், மொழி மேன்மை உலகின் அனைத்து புராதன மொழிகளிலும் மேம்பட்டது.”
“இருண்ட கண்டமாக ஆப்பிரிக்கா பலரால் வெறுக்கப்பட்டபோது அங்கு சென்று தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை செய்த மனிதாபிமானி நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் சுவைட்சர். அவர், ‘கிழக்கின் தத்துவம்’ என்ற நூலில் திருக்குறளைப் பற்றிப் போற்றும் வரிகளில், “இதற்கு நிகரான அறநூல் உலகத்திலேயே கிடையாது. புத்தரின் மணிமொழிகளைவிட திருவள்ளுவரின் கருத்துக்கள் உயர்வானவை” எனப் பாராட்டுகிறார். அமெரிக்க நாட்டுக்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் சென்றிருந்தபோது, யேல் பல்கலைக் கழகம் அவருக்கு “சப் பெல்லோகிப்” விருது வழங்கி சிறப்பித்த காலத்தில் அப்பல்கலைக் கழக மாணவர்களிடம் திருக்குறள் வகுப்பு எடுத்தார். அதன் விழுமிய கோட்பாடுகளைச் சொன்னார்.
கண்ணின் மணிகளே! மீண்டும் புறநானூற்றுக்கே உங்களை அழைத்துச் செல்கிறேன். “எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்துவந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணாகாடி பகுதியில் அக்கிரமமாக பிரவேசித்து, நமது இராணுவத்தினரை அதிரடியாகத் தாக்கி நமது வீரர்கள் இருவரின் தலைகளைத் துண்டித்த கோரச் சம்பவம் மனிதாபிமானிகளின் மனதை நடுங்க வைத்ததைக் குறிப்பிட்டுவிட்டு போர்க்களங்களைப் பற்றிச் சொன்னேன் அல்லவா!”
தமிழர்கள் மறக்களத்திலும் அறம் மறந்ததில்லை; நிராயுதபாணிகளைத் தாக்கியதில்லை. பெண்டிரை, பிணியுற்றோரை, அறநூல் பகர்வோரைப் பாதுகாக்கவே முனைந்தனர் என்பதற்கு சாட்சியம்தான் புறநாநூற்றின் ஒன்பதாம் பாடல்.
பாடியவர் நெட்டிமையார். பாட்டுக்குரிய மன்னர் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. இவன் படையெடுத்துப் போர் தொடுக்கும் நாட்டில், வன்மை அற்ற மெலிந்தோரை, பாதுகாப்பான இடங்களில் போய் உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்கை செய்கிறான். மகாபாரத இதிகாசத்தில் “விராட பருவத்தில்” துரியோதனன் சகுனியின் யோசனையின்படி திரிகர்த்த தேசாதிபதி சுசர்மன் விராட நாட்டின் பசுக் கூட்டங்களை ஒட்டிக் கடத்துவான். போர் அப்படித்தான் மூள்கிறது. ‘ஆநிரை கவர்தல்’ என்பது போர் தொடுக்கும் காரணமும் ஆகிறது. ஆனால், இங்கே பாண்டிய வேந்தன் ஆவினங்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லுங்கள். அறம் கூறும் மறையோர், பெண்கள், நோய்வாய்ப்பட்டவர், புதல்வரைப் பெறாத பெற்றோர்கள் எல்லோரும் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள். என் வில்லிலிருந்து அம்புகள் சீறிப் பாயுமுன் விலகிச் சென்று உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இதோ பாடல்,
“ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம் அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்”
என்னே மனிதநேயப் பண்பு!
அதனால்தான் செந்நாப் போதார் திருவள்ளுவர் தனது அறத்துப்பாலை அன்புடைமை அதிகாரத்தில்,
“அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார்
மறத்திற்கும் அ~தே துணை”
எனும் குறளை வைத்தார்.
பொருட்பாலின் முதல் அதிகாரமான இறைமாட்சியின் அரசுப் பொறுப்பில் இருப்பவன் எத்தகையவனாக இருக்க வேண்டும் என்பதற்கு “தன்னைக் குற்றம் குறை சொல்வோரின் சொற்களை செவிகளில் நாரசாரமாய்ப் பாயும் கசப்பான சொற்களைப் பொறுத்துக்கொள்கிற பண்புடைய வேந்தனின் குடை நிழலே உலகைக் காக்கும்; அம்மக்களைக் காக்கும்” என்கிறார்.
“செவிகைப்பச் சொற் பொறுக்கும் பண்புடைவேந்தன்
கவிகைக் கீழ் தங்கும் உலகு” - குறள்
இதற்குச் சான்றாக ஒரு காட்சி, போர்க்களத்தில் ஏற்பட்ட கோபத்தின் காரணமாக திருக்கோவவிலூர் மன்னன் மலையமான் திருமுடிக்காரியை களத்திலே வீழ்த்திய பின்னும் வெகுளி குறையாமல் அம்மன்னனது பிள்ளைகளை, யானையின் கால்களால் இடறச் செய்யும் அறிவற்ற பண்பற்ற செயலைப் புரிய சோழ மன்னன் கிள்ளிவளவன் முனைந்தபோது, தமிழ்ப் புலவர் இதனைக் கேள்வியுற்று விரைந்து வருகிறார். அவர்தான் கோவூர் கிழார். “மன்னவனே! நீ யார் வழி வந்தவன்? தன்னை தஞ்சம் அடைந்த புறாவைக் காக்க தனது தசையை அரிந்து பருந்துக்குக் கொடுத்து புறாவின் துயர் போக்கியதுபோல், பிறரது துயர் களைந்த சோழ மரபிலே வந்தவன். இந்தப் பிள்ளைகள் யார்? கற்றோர் வறுமை அடையாதவாறு விளை பொருளைப் பகுத்து உண்ணும் குளிர்நிழல் வாழ்ந்த மரபு வந்தவர்கள். யானை வருகிறது. இப்பிள்ளைகள் அதுவரை அழுதுகொண்டிருந்த நிலை மாறி, அந்த வேழத்தைக் கண்டு வேடிக்கை பார்த்து அழுகையை மறந்துவிட்டனரே. தங்களைச் சுற்றிலும் வேற்று மனிதர்கள் நிற்பதைக் காண்பதால் வருத்தம் கொள்கின்றனர். நான் கூற வேண்டியதைக் கூறி விட்டேன். கேட்டாய். உன் விருப்பப்படி நடந்துகொள்” என்றார். மன்னன் கிள்ளிவளவன் தவறு உணர்ந்து அறம் காத்து பிள்ளைகளைக் காத்தான். இடித்துக் காட்டும் புலவரே அறம் கூறும் புலவர் ஆவார்.
புறம் பாடல் 46 இதோ:-
“நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை;
இவரே, புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித்
தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்!
களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த
புன்றலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி,
விருந்திற் புன்கண்நோ வுடையர்;
கெட்டனை யாயின், நீ வேட்டது செய்ம்மே”
நன்றி மறந்தோர்க்கு உய்வே கிடையாது:-
இதே மன்னன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் தன்னிடம் பரிசில் பெற்றுச் செல்லும் புலவர் ஆலத்தூர் கிழாரை பார்த்து “மீண்டும் என்னை நினைத்து இங்கு வருவீர்களா?” எனக் கேட்கிறான்.
அதற்கு அப்புலவர், “நன்றி மறந்தோர்க்கு உய்வே கிடையாது”. “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு” எனும் குறள் நெறிக் கருத்தையே பாடல் வரிகளாக தருகிறார். பசுவின் மடியினை அறுத்தவனுக்கும் மன்னிப்பு உண்டு. மங்கல மங்கையின் கருவினைச் சிதைத்த பாவிக்கும் கழுவாய் ஏற்படலாம், அறிவூட்டும் ஆசானையே பழித்துக் கொடுமை செய்தோர்க்கும் கழுவாய் கிட்டிடலாம். ஆனால் இந்த உலகமே புவி மண்டலமே தலைகீழாகப் புரண்டாலும் ஒருவர் செய்த உதவியை மறந்த நன்றி கொன்ற பாவிகளுக்கு உய்வே கிடையாது” என்றார்.
“ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கின் கழுவாயும் உள என
நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என
அறம் பாடின்றே ஆயிழை கணவ!” - புறம் 34
“நன்றி கொன்றோர் போன்ற பாவிகள் உலகிலேயே கிடையாது” என்கிறது தமிழர்களின் அறம் - புறநானூற்றுப் பாடல்களை எல்லாம் ஊன்றிப் பயிலும்போது - மறமும் அறமும் தமிழர்களின் விழிகள் என்பதை உணர முடியும்.
தொடருகிறது...
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment