மனம் ஏனோ பாறையாய்க் கனக்கின்றது. இந்த மே மாதத்தில்தான், எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இலட்சக்கணக்கான நமது தொப்புள்கொடி ரத்த உறவுகள், ஈவு இரக்கம் இன்றி இலங்கைத் தீவில் கொல்லப்பட்டனர்.
நான் காவியங்களிலும், இதிகாசங்களிலும் யுத்த களங்களைப் படித்து மனம் லயித்தவன். வீர இலக்கியங்களில் தோய்ந்தவன். அதே போர்க்களத்தில், வன்னிக்காட்டில், மூன்று வார காலம் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுடன் தங்கி இருந்தவன்; யானை இறவு கள வெற்றி நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் நடத்திய வீரச் சமர்களைக் கேட்டு மெய்சிலிர்த்தவன். உலகின் எந்த நாட்டு உதவியும் இன்றி, புலிகளே ஆயுதங்களை வடித்தனர்.
தரைப்படை, கடற்படை, விமானப் படையை உருவாக்கிய சாகசம் உலகில் வேறு எங்கும் நடைபெற்றது இல்லை. அந்தப் பெருமைக்குரிய கள நாயகன் அன்றோ தலைவர் பிரபாகரன் அவர்கள்!
சிங்களவர்களால் புலிகளை வெல்ல முடியவில்லை. இந்தியாவின், காங்கிரஸ் தலைமை தாங்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மிக நவீன ஆயுதங்களை சிங்கள ராஜபக்சே அரசுக்கு வாரி வழங்கியது. புலிகளின் அரண்கள் உள்ள பகுதிகளை விண்ணில் இருந்து படம் பிடித்துக் காட்டிக் கொடுத்தது. இந்தியா தந்த கருவிகளுடன் சிங்களப் போர் விமானங்கள் அந்த இலக்குகளின் மீது குண்டுமழை பொழிந்தது. ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அனைத்தும் தவிடுபொடியாகின. 300 மீட்டர் சுற்றளவுக்குப் புழுதிக் காடாகியது. சில குண்டுகள் தரைக்கு மேல் சிறிது தொலைவிலேயே வெடித்தன; சில குண்டுகள் பூமிக்குள் ஆழப் பாய்ந்து வெடித்தன. அப்படித்தான் புலிகளின் பாதுகாப்பு நிலவறைகள் அழிக்கப்பட்டன. அத்தகைய ஒரு தாக்குதலில்தான், 2008 நவம்பர் 2 ஆம் நாள், புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார். ரசாயனக் குண்டுகள் வீசப்பட்டன. அதன் துகள்கள் பட்ட உடலின் பாகங்கள் உடனே அழுகிப் போய் அவர்கள் மடிந்தார்கள். இறுதி வரை களமாடிக் காயமுற்று மீண்டு வந்த புலிகள் என்னிடம், நெஞ்சை உலுக்கும் பல செய்திகளைக் கூறக் கேட்டபோது, என் இதயமே உறைந்தது. குழந்தைகள், பெண்கள், கருவுற்ற தாய்மார்கள், வயது முதிர்ந்தோரைக் கொன்று குவித்தனர். இறந்து போனவர்களின் சடலங்களைப் புல்டோசர் கொண்டு மண்ணோடு மண்ணாக்கினர்.
தடயங்களை அழிப்பதற்காக அப்பகுதி களில் இரசாயன மருந்துகளைக் கொட்டி னார்கள். அந்தக் கொலைவெறிச் சிங்கள நாடுதான், புத்த பூர்ணிமா கொண்டாடியது மூன்று நாட்கள். அன்பு, கருணை, இரக்கம் ஆகிய உயர்ந்த பண்புகளை உலகுக்குத் தந்த கௌதம புத்தர் பிறந்த நாள், ஞானம் பெற்ற நாள், உயர் நீத்த நாள் ஆகிய மூன்றையும் இணைத்து, விசாக விழாவாகச் சிங்கள அரசு கொண்டாடியது.
உலகின் பல நாடுகளில் இருந்து பௌத் தர்கள் வந்தனர். இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடிதான் சிறப்பு விருந்தினர். ஈவு இரக்கத்தின் சவக்கிடங்கின் மீது நடந்த விழா. புத்தரின் பல்லும், ஈமச்சாம்பலும் சபித்து இருக்கும் அந்தச் சிங்களக் கொடியோரை.
இந்திய வழித்தோன்றல் தமிழர்கள் கூட்டத்தில் பிரதமர் உரை ஆற்றினார். ‘நீங்களும் நானும் ஒன்று. நீங்கள் தேயிலைத் தோட்டத்தில் உழைக்கின்றவர்கள்; நான் தேநீர் விற்றவன்’ என்றாராம். ஒரே கர ஒலியாம். எத்தனை ஆயிரம் தமிழர்கள் ரத்தமும் வியர்வையும் கொட்டினர்; பாம்புக்கும் நட்டுவாக்கலிக்கும், கொடிய மிருகங்களுக்கும் பலியானார்கள்?
சிங்களர்கள் மிக்க தந்திரசாலிகள். யார் ஆட்சிக்கு வந்தால் என்ன? ராஜபக்சேயானால் என்ன, மைத்திரிபால சிறிசேனா என்ன, ரணில் என்ன, அனைவருமே தமிழ் ஈழ மக்களின் தேசிய இனக் குரல் வளையை நெரிக்கும் வெறியில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல.
பகல் நிகழ்ச்சிகள், மாலை நிகழ்ச்சிகள் முடிந்து, இரவு பத்து மணி அளவில், முன்னாள் அதிபர், கொலைபாதகன் மகிந்த ராஜபக்சேவைப் பிரதமர் மோடி சந்தித்தாராம்.
இன்று நாள் முழுவதும் தொடர் நிகழ்ச்சிகளால் மிகவும் களைத்துப் போயிருப்பீர்களே? என்று மிகுந்த கரிசனத்துடன் அந்த மனித மிருகம் கேட்டதாம்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ஆமாம்; மிகுந்த களைப்புடன் வந்தேன்; உங்கள் முக தரிசனம் கண்டவுடன், என் களைப்பு எல்லாம் பஞ்சாய்ப் பறந்து விட்டது என்று பலமாகச் சிரித்துக்கொண்டே சொன்னதும், அவன் கெக்கலி கொட்டிச் சிரித்தானாம். ஆம்; ராஜபக்சே முகத்தில் அபூர்வ தரிசனத்தைப் பெற்றார் போலும் மோடி.
தமிழனுக்கு நாதியே இல்லை என்று நொந்து பயன் இல்லை. தன் சொந்த இனத்தின் துரோகத்தால்தானே இந்த அழிவு, வீழ்ச்சி? மறந்து விட மாட்டோம். மானத் தமிழர்கள், இந்தத் துரோகத்தை மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். மாவீரர்களின் இரத்தத் துளிகள் நினைவூட்டிக் கொண்டே இருக்கும். கோரமாகக் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்கள் எழுப்பிய ஓலக்குரலின் ஒலி, இந்தக் காற்று மண்டலத்தில் உலவிக் கொண்டேதான் இருக்கின்றது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் தம்பிக்குக் கடிதங்களில் என் கவனத்தைச் செலுத்தினேன். கணிப்பொறி, வலை தளம், முகநூல் ஏன் இன்றைய தொலைக் காட்சிகள் எதுவும் இல்லாத அந்த நாள்களில், உலகச் செய்திகளைத் தம்பிமார்களுக்குக் கடிதங்கள் மூலம் கற்பித்தாரே காஞ்சித்தலைவன்!
அவர் கனவுகள் எல்லாம், தமிழர்களின் எதிர்காலத்தைக் குறித்துத் தீட்டிய திட்டங்கள் எல்லாம், என்னவாயின இன்று? அறிவு இயக்கத்தின் இன்றைய நிலை என்ன?
எத்தனை எழுத்தாளர்கள், சொற்பொழிவாளர்கள், கலை உலக நட்சத்திரங்கள், எத்தனை இலட்சம் தியாகத் தொண் டர்கள்? அனைத்தும் வீண்தானா?
அப்படித்தான் கொக்கரிக்கின்றார்கள் திராவிட இயக்க வைரிகள். திராவிட இயக்கத்தின் சரித்திரம் முடிந்து விட்டது என முகாரி பாடுகின்றார்கள்.
ஆனால், அவர்களின் வக்கரித்த எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.
ஈழத்தமிழர் இனப்படுகொலைக்குக் காரணமான கொடியோரை, அனைத்துலக நீதிமன்றத்தின் குற்றக் கூண்டில் நிறுத்த வேண்டும்; அதற்கு ஆயிரமாயிரம் சாட்சியங்கள் உள்ளனவே?
திருமுருகன் காந்தி:-
ஜெனீவாவில் மனித உரிமைக் கவுன்சிலின் 27 ஆவது ஆண்டுக் கூட்டம், 2017 மார்ச் திங்களில் நடைபெற்றது. இக்கூட்டங்களில், கடந்த மூன்று ஆண்டுகளாகப் பங்கேற்று, ஈழத்தமிழர் இனப்படுகொலை குறித்து நீதி கேட்டுத் தக்க உரைகளை ஆங்கிலத்தில் நிகழ்த்தி வருகின்றார் மே 17 இயக்கத்தின் ஒருங் கிணைப்பாளர் பேரன்பிற்குரிய இளவல் திருமுருகன் காந்தி அவர்கள். இவரைப் பற்றி நான் அவசியம் பதிவு செய்தாக வேண்டும்.
இவர் கடந்த எட்டு ஆண்டுகளாக என் கவனத்தில் ஆழப்பதிந்தவர். தன் முனைப்பு (Ego) என்பது துளியும் இல்லை இந்த இளைஞரிடம். ஆழ்ந்து எதனையும் அலசி ஆராய்ந்து கருத்துகளை வழங்கும் திறன் உள்ளது. ஆங்கிலத்திலும், தமிழிலும் வாதிடும் வல்லமை இருக்கின்றது. மே 17 இயக்கத்தை முன்னெடுக்கும் இவர், தன்னை முன்னிறுத்திக்கொள்ள மாட்டார். எளிமையும், நேர்மையும் உள்ளது. எள் அளவும் தன்னை விளம்பரப் படுத்திக்கொள்ள மாட்டார். ஆண்டுதோறும் மே மூன்றாம் வாரத்தில், ஞாயிற்றுக் கிழமை மாலையில் மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் மெழுகுச் சுடர்களை ஏந்தி முள்ளி வாய்க்கால் படுகொலையை நினைவூட்டி வீர வணக்கம் செலுத்துவர். ஒருமுறை, மத்திய அமைச்சர் எனது நண்பர் ராம் விலாஸ் பஸ்வான் அவர்களை அழைத்து வந்தேன். தமிழ் இனப் படுகொலைக்குப் பன்னாட்டு நீதி விசாரணை வேண்டும் என்றும், தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு வேண்டும் என்றும் அவர் அங்கு உரை ஆற்றியதும் நினைவுக்கு வருகின்றது.
இந்த ஆண்டு மே 21 மாலை ஐந்து மணிக்கு, மெரினா கடற்கரையில், காந்தியார் சிலைக்கும், கண்ணகி சிலைக்கும் இடையில் கூடுவர்; அமைதியான நிகழ்ச்சி. என்னை அங்கு வந்து உரை ஆற்றுமாறு அவர் கூறியபோது, தம்பி, நீங்கள் உரை ஆற்றுங்கள்; இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்லுங்கள்; நான் பின்னால் இருந்து ஊக்கமும் உதவியும் தருகிறேன் என்று சொன்னேன்.
கடற்கரையில் இந்த நிகழ்ச்சியை நடத்திடக் காவல்துறை ஒப்புதல் அளிக்க வேண்டும். நமது கண்மணிகளுக்குச் சொல்லுவேன்: தவறாது அங்கே செல்லுங்கள். கடமை ஆற்றுங்கள். கழகக் கொடிகள் வேண்டாம். துணைப் பொதுச் செயலாளர் ஆருயிர் இளவல் மல்லை சத்யா அவர்களும், மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்பார்கள். தோழர்களே, அணி திரண்டு செல்லுங்கள்.
மீண்டும் ஜெனீவாவுக்கு வருகிறேன்.
இந்த ஆண்டு, தம்பி திருமுருகன் காந்தி அவர்கள் பயனுள்ள உரைகளை நிகழ்த்தி உள்ளார். ஏடுகள், ஊடகங்களில் அது பற்றி ஒரு சொல் கிடையாது. தானாக வலிந்து என் செய்தியைப் போடுங்கள் எனக் கேட்கவும் மாட்டார். மிகவும் வித்தியாசமான இளைஞர்.
அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் நடந்த தீர்ப்பு ஆயத்தின் தொடர்பாக அடுத்த தீர்ப்பு ஆயம், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்... ஜெர்மனியில் பிரெமன் நகரில் ஈழத்தில் நடந்தது குறித்து விசாரணை நடத்தியது. அதில் தம்பி திருமுருகன் காந்தி ஆற்றிய உரை பாராட்டுக்கு உரியது. அதன் விளைவாகவே, ஈழத்தமிழர் இனப்படுகொலை குறித்து அனைத்துலக விசாரணை வேண்டும் என்று பிரெமன் தீர்ப்பு ஆயம் அறிவித்தது. அங்கிருந்து அவரிடம் இருந்தே விளக்கமும், செய்தியும் பெற்று அறிக்கை தந்தேன்; ஏடுகள் வெளியிட்டன.
இம்முறை, ஜெனீவாவில் மனித உரிமைக் கவுன்சிலில் நடந்தது என்ன? அந்த அமைப்பில் என்.ஜி.ஓ., தொண்டு நிறுவனங்களாகப் பதிவு செய்யப்பட்ட அமைப்புகளுக்கும் உரை ஆற்ற அனுமதி உண்டு. இரண்டு அல்லது இரண்டரை நிமிடங்கள்தான். அப்படி உரை ஆற்றியவர்களின் உரை இங்கு ஏடுகளில் வெளியானது. மனித உரிமைக் கவுன்சிலின் பிரதானம் கூட்ட அரங்கில் பேசாமல், அந்த அரங்குக்கு வெளியே சிறுசிறு பொது அரங்குகளில் பேசுவோர் உண்டு. அதனையும், மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் பேசியதாகப் பிறர் கருதுவதும் உண்டு.
வெளிநாடுகளில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஈழத்தமிழருக்கான உண்மையான இயக்கத்தின் சார்பில், இந்த மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் தம்பி திருமுருகன் காந்தி ஏழுமுறை உரை ஆற்றி இருக்கின்றார். ஒவ்வொரு முறையும் இரண்டு நிமிடங்கள் என மொத்தம் 14 நிமிடங்கள் உரை. இங்கு எவருக்காவது தெரியுமா? தெரியாது.
தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள அவர் முனையாவிட்டால் என்ன?
தமிழ்ச் சமூகத்திற்குத் தெரிவிக்க வேண்டியது எனது கடமை அல்லவா?
எனக்குப் பிறகு வரப்போகும் வளரும் தலைமுறையைப் பற்றிக் கவலையோடு சிந்திக்கின்றேன். மார்ச் 14, 15, 20, 21, 23 ஆகிய நாள்களில், அவர் தந்த இரண்டு உரைகளைத்தான் அவர் பதிவு செய்ய முடிந்தது. ஏழாவது உரையைப் பதிவு செய்யவிடாமல் தடுத்து விட்டார்கள். அந்த ஆறு ஆங்கில உரைகளையும் இந்த இதழ் சங்கொலியிலேயே தமிழில் மொழி ஆக்கம் செய்து வெளியிடத் தம்பி அருணகிரிக்குச் செய்தி அனுப்பி உள்ளேன்.
வரலாற்றில், அசல்கள், உண்மைகள் பதிவு செய்யப்பட வேண்டும்.
பேரறிஞர் அண்ணாவின் உலகப் பார்வை:-
பேரறிஞர் அண்ணா அவர்கள், ஆகாயம் போல் பரந்த அவரது பாச நெஞ்சம், தமிழ்க்குலம் தலைநிமிர, தனது கடந்தகாலப் பெருமைகளை மீட்டெடுக்க முனையும்போதே உலக நடப்புகளைச் சொல்லிக் கொண்டே வந்தார் என்றேன் அல்லவா?
அவர்தம் எழுதுகோல், உலகில் நிகழும் மாற்றங்களை அழகு தமிழில் சித்தரித்துக் காட்டின.
பேரறிஞர் அண்ணா அவர்கள் பச்சையப்பன் கல்லூரியில் பயிலும்போது, Moscow Mob Parade என்ற தலைப்பில் எழுதிய ஆங்கிலக் கட்டுரை, கார்ல் மார்க்சின் உபரி மதிப்புக் கோட்பாட்டை உள்வாங்கி விளக்கப்பட்ட அற்புதமான கட்டுரை ஆகும்.
அகிலம் நோக்கிய அவரது கடிதங்களின் பட்டியல் இதோ:
வெள்ளை மாளிகையில் சிவப்புக் கொடி (திராவிட நாடு, 6.5.1945)
ரஷ்யா சிரிக்கிறது (திராவிட நாடு, 17.11.1946)
பிலிப்பைன்ஸ் விடுதலை (திராவிட நாடு, 7.7.1946)
லெனின் (திராவிட நாடு, 3.2.1946)
லாரன்சுகள் பல ரகம் ( திராவிட நாடு 9.3.1947)
துகில் உறிந்த துச்சாதனி - பாபிலோன் புராணம் ( திராவிட நாடு, 23.11.1947)
ஸ்டாலின்கிராடு (திராவிட நாடு, 1947)
நிக்கோலஸ் தீர்ப்பு - ஜான் பீவரலி நிக்கோலஸ் (திராவிட நாடு, 1945 மார்ச், 4, 11,25, ஏப்ரல் 1)
திராவிட நாடு ஏட்டில் அண்ணா எழுதிய கடிதங்கள்
தம்பிக்குக் கடிதங்கள் தொகுதி 1
தலைப்பு: புதிய உற்சாகம். துணைத் தலைப்பு மாஸ்டர் தாராசிங்கும், பஞ்சாப்பும். (22.3.1955)
கடிதம் 3. தலைப்பு: மத்தாப்பூ. துணைத் தலைப்பு. டிட்டோவுக்கு வரவேற்பு. (22.5.1955).
கடிதம் 4: ஆவடியும் காவடியும்.
பாண்டூங் மாநாடு. ( 5.6.1955)
கடிதம் 10: அங்கே பவளம்; இங்கே படம். பம்பாயில் பிரஹத் பாரதீய சமாஜம். வெளிநாடுகளில் திராவிடர் நிலை. (17.7.1955)
கடிதம் 21: உலாவும் ஊழலும்.
ஈஜிப்ட் நாட்டுப் போர்க்கருவி விற்பனை முறையில் ஏமாற்றுதல். (2.10.1955)
கடிதம் 23: அத்தர் வியாபாரம். லெனின் கிராடு முன்னும் பின்னும்- பல்கலைக்கழகத்தில் இராதாகிருஷ்ணன் கருத்துரை (16.10.1955)
கடிதம் 26 குன்றெல்லாம் கேட்கிறது. நாக நாட்டு விடுதலைக் குரல்,திராவிட நாட்டுப் பிரிவினை ( 13.11.1955)
கடிதம் 28: தங்கத்திரை
ரஷ்யாவின் சிறப்பு. சோவியத் தலைவர்கள் வருகை. (4.12.1955.)
கடிதம் 32: பாவி பொல்லாதவன்
வாசிங்டன் கதை - இராமாச்சாரி கதை- தட்சணப்பிரதேசமும், தமிழ்நாடும், டில்லியின் ஆதிக்கம், (1.1.1956)
கடிதம் 33: அகலிகையும், ஆச்சாரியாரும். ஆச்சாரியாரின் தட்சணப் பிரதேசமும், பாகிஸ்தான் பிரிவினையும். (8.1.1956)
தொகுதி 2
கடிதம் 48. அரிமா நோக்கு
தூய்மையும் தூற்றலும் - சுதந்திரம் பெற்ற நாடுகள் (29.4.1956)
கடிதம் 49: திருமணம்.
சைப்ரஸ் விடுதலைக் கிளர்ச்சியும், தி.மு.க.வின் விழாவும் ( 6.5.1956)
கடிதம் 50. அறச்சாலை
காட்கில்லின் மராட்டியர் வளர்ச்சி (13.5.1956)
கடிதம் 55 மின்னல்வேக மேதா விலாசம்
ஐந்தாண்டுத் திட்டமும், பஞ்சமும், இலங்கையில் தமிழருக்குக் கொடுமை (24.6.1956)
கடிதம் 56: டமாஸ்கஸ் முதல் நேரு பண்டிதரின் சுற்றுலா.
மராட்டிய மாது கைது. டமாஸ்கசில் விருந்து. நாகநாடு பிரச்சினை. (1.7.1956)
கடிதம் 58. உழைப்பே செல்வம்
சீனாவில் நடிகையின் அரசியல் வேலை. (5.7.1956)
தொகுதி 3
கடிதம் 75: மூவர் முரசு
இத்தாலி நாட்டில் ஒரு கொடிய நிகழ்ச்சி. (11.11.1956)
கடிதம் 89 விழாவும் விளக்கமும்
சைப்ரஸ் கிளர்ச்சியும், விடுதலை விழாவும். நாகநாடு பிரச்சினை. (28.4.1957)
கடிதம் 99 ஆடம்பரம் ஆண்டியப்பன்
அமெரிக்கப் பால்பவுடர் கள்ள மார்க்கெட்டில் (24.4.1960)
கடிதம் 101 தல யாத்திரை
ஆப்பிரிக்க மங்கோலிகா டாக்டர் பண்டா, மடகாஸ்கர் விடுதலை. (8.5.1960)
தொகுதி 4
கடிதம் 104: தீவில் தங்கியவர் வதை
உளவு வேலை - பாரிஸ் மாநாடு - அமெரிக்காவும், ரஷ்யாவும் (12.5.1960)
கடிதம் 110 குருதி கலந்த மண்
நாகர் கிளர்ச்சி, மொழிக்கிளர்ச்சிகள், அஸ்ஸாம், வங்க மொழிகள், இந்தி பேசாத மக்கள் நிலை. (10.7.1960)
கடிதம் 111 சட்டம் வழக்குமன்றத்தில்...தொழிலாளர் வேலை நிறுத்த வழக்கு. ஆப்பிரிக்காவில் சட்டம் (17.7. 1960)
கடிதம் 112: ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
தேர்தலும் அரசியல் கட்சியும் - பிராங்கோவும் சட்டமும். கியூபாவின் காஸ்ட்ரோ- இந்திக்கு வங்காளிகள் எதிர்ப்பு. (24.7.1960).
கடிதம் 119: ஞோஞா
மலேய மொழி உணர்வு, இந்தி வெறி, அசாமிய மொழி உணர்ச்சி, தமிழின் தனி இயல்பு
கடிதம் 128: மேனி சிலிர்க்குது
மேயர் தேர்தல், நாகர் கிளர்ச்சி, (18.12.1960)
கடிதம் 130: இல்லறம் இன்பப் பூங்கா
(திராவிட நாடு பொங்கல் மலர், 14.1.1961) உதுமானிய சாம்ராஜ்யத்தின் உடைபாடு
கடிதம் 131: கண்ணொளி போதும்
உலக நிகழ்ச்சிகள் (12.2.1961)
தொகுதி 5
கடிதம் 143: அம்பும் ஏணியும்
சோவியத் நாட்டில் மேயர். திராவிட நாட்டு விடுதலை. (11.6.1961)
கடிதம் 147: குன்றின் மேலிட்ட விளக்கு
இருபதாவது ஆண்டு மலர் (6.8. 1961) சிங்களத்தில் சித்திரவதை
தொகுதி 6
கடிதம் 150: பட்டப்பகலில் (2)
நினைவு மாறுதல் - இட்லரின் போர்முறை (10.9.1961)
கடிதம் 151: அறுவடையும் அணிவகுப்பும் (2)
ரிச்சர்டும் ஜெருசல ஊர்வலமும். ஐம்பதின்மர் சட்டமன்ற நுழைவு.
இந்தித் திணிப்பு (18.3.1962)
காஞ்சி இதழில்
வெளிவந்த கடிதங்கள்
தொகுதி 7
கடிதம் 156: பொற்காலம் காண...
குப்பை கூளம் பற்றி ஜான் மேஸ்பீல்டின் கவிதை
தொகுதி 8
கடிதம் 210: இதயம் வென்றிட (3)
ஆபிரகாம் லிங்கனுடைய தோல்வி - வெற்றிப்பட்டியல் (9.5.1965)
கடிதம் 212: சொக்கப்பனிடம் பட்ட கடன் அமெரிக்கக் கடனும், ரஷ்யக் கடனும் (23.5.1965)
கடிதம் 214: கங்கா தீர்த்தம் (2)
அமெரிக்க முதலாளிகளை மேத்தா அழைக்கிறார்- ஜான் ஹார்ட்டின் எழுச்சிக் கவிதை (6.5.1965)
கடிதம் 215: கனடா பயணம் - 1
இலால்பகதூரின் கனடா பயணம். கனடாவின் வரலாறு. கனடாவில் கியூபெக் மாநிலப் பிரச்சினை (13.5.1965)
கடிதம் 216: கனடா பயணம் 2
கனடாவின் இரு ஆட்சிமொழிகள். கனடா, ஆங்கிலம், பிரெஞ்சு மொழி பேசுவோரின் சொந்த நாடு. கியூபெக் மக்கள் கேட்பது சலுகை அல்ல; உரிமை. (20.6.1965)
கடிதம் 222: எங்குச் சென்றாலும்
மலேசியாச் செலவு - ஓய்வு நேரம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதம்- புண்ணியப் பயணங்கள் (8.8.1965)
கடிதம் 225: கடமையாற்றிட...
பாகிஸ்தானுடன் போர் - அனைத்துக் கட்சிகளும் அரசுக்கு ஒத்துழைப்பு - நாடு பிடிக்கும் நப்பாசை நமக்கு இல்லை - தாக்குதலைத் துவங்கியது பாகிஸ்தானே - உலக நாளேடுகளின் கண்டிப்பு - வல்லரசுகளின் விபரீதப் போக்கு.
கடிதம் 228: பற்று, வெறி ஆகிவிடக் கூடாது (பற்று 2)
நாட்டுக்குப் பூபாகம் உண்டு. மதத்துக்குப் பூபாகம் இல்லை. மதச்சார்பற்ற நாடுகளும், மதச்சார்புள்ள நாடுகளும் பற்றே. பற்றை அழித்திடப் பயன்படுத்துதல் கூடாது.
பற்றுகளின் வகை பெருகப்பெருகப் பற்றாளரின் தொகை குறையும்.
தான் வாழ, சமூகம் வாழப் பற்றுக் கொள்வது. (காஞ்சி 10.10.1965)
தொகுதி 9
கடிதம் 234: கிழக்கு வெளுத்திடும் வேளை அறிவொளி பரவப் பழமைப் பனி கலையும். கொள்ளையடித்த பணத்தில் கொண்டாட்டம். ஆண்டவன் அவராக விரும்பும்போதே வர வேண்டும். கடவுள் கொள்கையிலே மறுமலர்ச்சி. யூத இனம் இன்று பழி போக்கப் பெற்ற இனம். (21.11.1965)
கடிதம் 240: அகமும் புறமும்
(காஞ்சி பொங்கல் மலர்) உழவர் நாட்டில் அமெரிக்க உணவுப் பொருள். புள்ளிமானுக்கு வேங்கையா தோழன்?
கடிதம் 241: வெள்ளை மாளிகையில் கருப்பு மனிதர். டாம் மாமா விடுதியின் கருத்துக்கள். டிரம் முரசு எனும் நீக்ரோவின் கதை. நீக்ரோக்களின் உயர்வுக்கு எடுத்துக் காட்டு. புக்கர் டி வாஷிங்டன் - இர்விங் வாலஸ் எழுதிய ‘மனிதன்’ ஏடு கூறும் கதை (6.2.1966)
கடிதம் 242: வெள்ளை மாளிகையில் 2,3,4,5
வெள்ளையர் கொதிப்பு. முற்போக்காளரும் இருந்தனர். மேல்மட்டத்தார் போக்கு. கருப்பர்கள் மனிதர்களா? கருப்பர் கண்களிலே ஒளி (13.1.1966)
நீக்ரோ என்றால் என்ன பொருள்? மாணவர்கள் சமூகத்தின் ஈட்டிமுனைகள்.
வீழ்ந்தவர்கள், வீழ்ந்தவர்களா? விடுதலை இன்றேல் வீர மரணம்.
டர்னரைட் இயக்கம். அபாண்டப் பழி. வழக்கு என்னும் ஒரு நாடகம். ஒதுக்கிடும் குப்பைமேடு. கருப்பு முஸ்லிம் இயக்கம். ஒரு நீக்ரோவின் உள்ளக்கிடக்கை. வெள்ளை மாளிகை என்னும் பெயர். ஆதிக்கத்தின் உரிமைப் போர் - ஒரு தொடர்கதை - மால்கோமின் ஆள் - வெறுப்புக் கோட்பாடு - டில்மனின் பொறுப் புணர்ச்சி. புயல் வெடித்தது. (6.3.1966)
கடிதம் 246: கானா நிகழ்ச்சி ஒரு எச்சரிக்கை
கானாவை விடுவித்தவரே கவிழ்க்கப்பட்டார். காரணம், எல்லாம் நானே எனும் நினைப்பு. ஒரே கட்சி ஆட்சியால் வந்த வினை. வெள்ளையரை விரட்டிக் கருப்பரே வெள்ளையரானதன் விளைவு. (காஞ்சி)
கடிதம் 247: வெள்ளை மாளிகையில்...கார்வி கருப்பு நட்சத்திரம். நம்பிக்கை நட்சத்திரம். வெள்ளை மாளிகையில் சதிக்குள் சதி. பண்பு நிறைந்த காதலர்கள். சாகசக்காரி சாலி வாட்சன். சாலி தலைகுனிந்தாள் - அருங்குணக்குன்று டில்மன். (காஞ்சி)
கடிதம் 259: வந்திடு... ஒளி தந்திடு கட்சிமாறிகளின் நா வணிகம்- கவலை கொள்ளல் வீண். ஜென்கின்ஸ் காதுப் போர் தரும் படிப்பினை. வதந்திகளுக்கு மதிப்பு அளிப்பது நேரக்கேடு. மறுப்பது அறிவுக்கேடு. (12.6.1966).
தொகுதி 10
கடிதம் 261: கண்ணீர்
சுகர்ணோ, புட்டோ, நிக்ரூமா கண்ணில் கசிவு ஏன்?
கனல் கக்குபவன் ஓர்நாள் கண்ணீர் சிந்துவான்-
ஆணவம் மிகுந்தது அழிவு நேர்ந்தது - செருக்குடன் சிரித்தவர்கள் கண்ணீர் சிந்துகின்றார்கள். ஆணவக்காரரின் அழுகைகள் புகட்டும் பாடம் (26.6.1966)
கடிதம் 266: இட்லர் கூடச் சோசலிசம் பேசினான்
ஒரே படம் - இருவேறு பதில்கள்- ஜெர்மனி தேசிய சமதர்மத்தில் தைசன்கள் - இட்லர் பாணியில் பேசுகிறார்கள் இவர்கள்- கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவனா கோபுரம் ஏறி வைகுந்தத்துக்கு வழி காட்டப் போகிறான்? (7.8.1966)
கடிதம் 277: நரி பரியான கதை:-
அமெரிக்க ஆதிக்கத்தை ஆதி நாளிலேயே கண்டித்தவன்- ஆலும் வேலும் பிளக்கப் பயன்படும் கோடாரி, வாழைக்குப் பயன்படுவது இல்லை- கிளிப் பொந்துக்குள் கருநாகம் புகுந்துவிட்டது. (23.10.1966)
அறிஞர் அண்ணா அவர்களை இயற்கை மேலும் 20 ஆண்டுகள் வாழ அனுமதித்து இருந்தால், திராவிட இயக்கம் உலகம் கவனிக்கும் இயக்கமாகத் திகழ்ந்து இருக்கும். தமிழ் ஈழம் மலர்ந்து இருக்கும். ஊழலின் தீய கரங்கள் நுழைய முடியாமல் பொசுக்கப்பட்டு இருக்கும். காலத்தின் தீர்ப்பைக், கடந்து போனதை எண்ணிக் கவலைப்படுவது நம்மைக் கூர் தீட்டத்தான்.
இப்போது இரவு மணி 11. இரவு 9 மணிக்கெல்லாம் மற்றக் கொட்டடியில் இருப்பவர்கள் உறங்கி விடுவார்கள். கார் ஹார்ன் சத்தமோ, வேறு எந்த ஓசையுமோ இல்லை. அவ்வப்போது ஜெயில் வார்டரின் பூட்ஸ் சத்தம் மட்டும் இலேசாகக் கேட்கும். மற்றப்படி, காற்று வீசினால் மரங்களும், கிளைகளும், இலைகளும் அசையும் சன்னமான ஒலி மெதுவாகக் கேட்கும். கண்மணிகளுக்காகக் கண் விழித்து எழுதுவது மனதுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றது!
தொடருகிறது...
ஓமன் மதிமுக இணையதள அணி
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment