இமைப்பொழுதும் நீங்காது என் இதயத் துடிப்போடும் இரத்தச் சுழற்சியோடும் கலந்து விட்ட கண்ணின் மணிகளே!
நேற்றுதான் நடந்தது போல இருக்கின்றது. காலம் இறக்கை கட்டிப் பறக்கிறது என்பார்களே... எல்லாம் மனதில் தோன்றும் எண்ணம்தான்!
23 ஆண்டுகள் நம்மைக் கடந்து விட்டனவா? அல்லது நாம் கடந்தோமா?
ஆம்; 1994 மே 5 ஆம் நாள் மாலையில் தொடங்கியது நீதி கேட்டு ஆர்த்து எழுந்த சகாக்களின் ஆலோசனைக் கூட்டம். தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் கலையரங்கில். பேரறிஞர் அண்ணா அவர்கள் நிறுவிய இயக்கத்தில் இருந்து கொடும் பழி சுமத்தப்பட்டு நானும் சகாக்களும் நீக்கப் பட்டபின் அடுத்த கட்டத்தை வகுக்கும் கூட்டம். நினைவில் வாழும் ஐயா தினகரன் கே.பி.கே. அவர்களும் வந்திருந்தார்கள்.
திராவிட இயக்கத்தின் இலட்சியப் பரிமாணமாக முகிழ்த்துவிட்ட நம் அமைப்புக்கு என்ன பெயர் சூட்டுவது? இயக்கத்தின் கொடியை எப்படி வடிவமைப்பது? பங்கேற்ற அனைவருமே பேசினார்கள். நீண்ட நெடிய கருத்துப் பரிமாற்றத்தின் விளைவாகச் சூட்டப்பட்ட பெயர்தான் ‘மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.’
1942 இல் காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் அமைத்த அமைப்பின் பெயர் ‘மறுமலர்ச்சி மன்றம்’. அவர் உருவாக்கிய இயக்கம் நீர்த்துப் போய், பாசி படிந்து தேக்கநிலை ஏற்பட்டுவிட்டதால் தேவை மறுமலர்ச்சி. ஐரோப்பிய நாடுகளில் மத்தியக் காலத்தில் சமயத்துறையில், ஓவியம், சிற்பம் உள்ளிட்ட கலைத்துறை களில் ஏற்பட்டதுதான் மறுமலர்ச்சி (Renaissance).
அறிஞர் அண்ணா அவர்களின் நெஞ்சம் கவர்ந்த அண்ணன் இரா.செழியன் அவர்கள் நமது விழுப்புரம் மாநாட்டுக்கு வருகை தந்து உரை ஆற்றியபோது, “என்ன பொருத்தமான தேவையான, பொருள் பொதிந்த பெயர் அமைந்துவிட்டது உங்கள் இயக்கத்துக்கு!” என்று சிலாகித்தார்.
அமைப்பின் பதாகை கறுப்பும் சிவப்பும் கொண்ட வண்ணம்தான். அதுவும் அண்ணாவின் எண்ணப்படியே வடிவமைத்தோம். “காலப்போக்கில் கழகக் கொடியில் சிவப்பு வண்ணம் அதிகமாகும்” என்ற அறிஞர் அண்ணாவின் கூற்றுப் படியே, சிவப்பு நடுவில் கறுப்பு பின்னர் சிவப்பு. நமது கழகக் கொடி பட்டொளி வீசிப் பறக்கும்போது அனைத்துக் கட்சிகளின் கொடிகளிலும் ஒரு தனிப் பொலிவோடு மிளிர்வதைக் காண்கின்றோம்.
மே -6 பிறந்தது.
“முதல் நாள் இரவு நெடுகிலும் நடந்த ஆலோசனையின் விளைவாகப் பொதுக்குழு கூடிற்று. நமது அரசியல் இயக்கத்தின் பெயரையும், கொடியையும் பிரகடனம் செய்தோம். கோலாகலமான ஆரவாரமும் கரவொலியும் அரங்கத்தில் அதிர்ந்தன.
அப்பப்பா! நினைக்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது! எத்தனை சோதனைகள்!
நம்மை அழிக்க முனைந்தோரின் தாக்குதல்கள், பழிக் குற்றச்சாட்டுகள், துரோகங்கள், தோல்விகள் அனைத்தையும் நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டோம். காட்டாற்று வெள்ளத்தை எதிர்த்து நீந்தினோம். அத்தனைச் சுழல்களையும் வெற்றிகரமாகக் கடந்தோம். இன்று திராவிட இயக்கத்தின் “இலட்சிய அடர்த்தியான பரிமாணமாக நாம் செம்மாந்து தலை நிமிர்ந்து கம்பீரமாகப் புன்னகைக்கின்றோம்.”
சென்னை புழல் மத்திய சிறையின் அ-2 தொகுப்பின் 18 ஆம் எண் கொட்டடியில் ஏப்ரல் 30 ஆம் நாள் இரவில் என் சிந்தனைகள் சிறகு விரிக்கின்றன. வெப்பம் அனலாகத் தகிக்கின்றது. “நெருப்பில் தானே படைக்கலன்களை வார்ப்பிக்க முடியும்?” என்னை நானே வார்ப்பித்துக் கொள்கிறேன். சோதனைகளை, மேனி படும் சிரமங்களை, போராட்டங்களை இனிமையாகக் கருதும் இயல்பு எனக்கு இயற்கையாக அமைந்தது.
அடுத்த சுற்று அரசியலுக்கு நான் ஆயத்தமாகிக் கொண்டு இருக்கிறேன். மக்கள் சக்தியைத் திரட்டும் வியூமாகத் தான் அடுத்து வரும் நம் நடவடிக்கைகள் அமையும்.
இரவிலும், பகலிலும் எந்த நேரமும் கழகத்தைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டு இருக்கின்றேன். காலம் வழங்கிய அருட்கொடையான கண்ணின்மணிகளான உங்களின் உழைப்பையும், தன்னலமற்ற அர்ப்பணிப்பையும் எண்ணிப் பெருமிதம் கொள்கின்றேன்.
நானும் நீங்களும் சாதிக்க முடியாததைத் தமிழக அரசியலில் வேறு யார் சாதிக்க முடியும்?
இந்த வார இதழ் ‘ஜூனியர் விகடனில்’ எனது பேட்டியை நன்கு உள்வாங்கி மிக அருமையாகத் தந்துள்ளார் திரு ப.திருமாவேலன் அவர்கள். கூடங்குளம் அணு உலைகளை எதிர்த்து இடிந்த கரையில் இந்திய வரலாறு காணாத அறப் போர்க்களம் அமைத்த திரு சுப.உதயகுமாரன் அவர்கள் தந்த இதயத்தை வருடும் பதிவினை ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழ் வெளியிட்டு இருந்தது.
நாளை பொழுது விடிந்தால் மே நாள். 1866 ஆம் ஆண்டு மே 4ஆம் நாள் சிகாகோ நகரத்தில் தொழிலாளர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாக ரத்தம் சிந்திய வைக்கோல் சந்தை சதுக்கத்தை ஈழவிடுதலை உணர்வாளர் சகோதரர் சிகாகோ விசுவநாதன் அவர்களுடன் நான் சென்று பார்த்ததும், “தூக்கிலிடப்பட்ட போராளித் தொழிலாளர்கள் ஜார்ஜ் எங்கெல், அடால்ப் பிஷர், ஆல்பர்ட் பார்சன்ஸ், அகஸ்ட் ஸ்பைஸ் (George Engel, Adolph Fischer, Albert Parsons, August Spies) கல்லறையைக் கண்டதும் நினைவுக்கு வருகின்றது.
அந்தக் கல்லறையில், The day will come, when our silence will be more powerful than the voice you are throttling today என்ற வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன.
ஒரு நாள் வரும்; அன்று எங்கள் மௌனம், இன்று நீங்கள் போடும் கூச்சலை விட வலிமையானதாக இருக்கும்.
கண்ணின் மணிகளே,
24 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்து விட்டோம். கழகக் கொடிக் கம்பங்களில் புது வண்ணம் தீட்டினீர்களா? நமது கொடியைப் புதுப்பொலிவுடன் உயர்த்தி னீர்களா? செய்து இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.
இந்த மடல் தாங்கிய ‘சங்கொலி’ உங்களில் பலருக்கு மே -6 ஆம் நாளுக்குப் பின்னர் தான் கிடைக்கும். நாம் நமது இயக்கத்தைத் தொடங்குவதற்குச் சரியாக இருபது ஆண்டுகளுக்கு முன்னர் 1974ல் இதே மே மாதம் 5ஆம் நாளன்றுதான் நான் நெஞ்சால் பூசிக்கும் தேசியத் தலைவர் தமிழ் இனத்தின் புகழ் முகவரி பிரபாகரன் அவர்கள் ‘தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்’ இயக்கத்தை தொடங்கினார். அதுவரை ‘புதிய புலிகள்’ என்ற பெயரில் அவரது இயக்கம் திகழ்ந்தது.
நேற்று ஏப்ரல் 29 காலை நாளிதழ்களில் செய்தி, “சீமைக் கருவேல மரங்களை வெட்ட உயர்நீதிமன்றம் தடை”. என்னை மிகவும் காயப்படுத்தியது. உயர்நீதி மன்றத்தின் மாட்சிமை தங்கிய நீதிபதிகள் செல்வம் அவர்களும், பொன்.கலையரசன் அவர்களும் நன்கு ஆராய்ந்து, தமிழ்நாட்டின் சுற்றுச் சூழலை, நிலத்தடி நீரைக் காக்க வேலிக்காத்தானை அழிக்க அகற்ற வழங்கிய ஆணை பெருமளவில் செயல்படுத்தப்பட்டு, எண்ணற்ற வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் செயல்படுத்திய நிலையில், இப்படி ஒரு தடை வழக்குத் தொடுத்தவர் சொல்லி இருக்கின்ற காரணங்கள் ஏற்கத்தக்கவையே அல்ல.
நான் கிராமத்து விவசாயி. பெரும்பாலான நாட்கள் கிராம மக்களுடன் வாழ்பவன். வேலிக் கருவேலத்தை விறகுக்குப் பயன்படுத்திய காலம் எல்லாம் மலையேறி விட்டது. இப்பொழுது சமையல் எரிவாயு தான் பெரும்பாலும். அதுமட்டும் அல்ல, நூறு நாள் வேலைத் திட்டம் வந்த பின்னர், சீமைக் கருவேலம் பக்கம் எவரும் போவது இல்லை. நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது சீமைக் கருவேல மரம். நச்சுத்தன்மை வாய்ந்த இந்த மரங்களால் ஏற்பட்ட நாசம் சொல்லும் தரமன்று. கண்மாய்கள், ஏரிகள், குளங்களில் உள்ளே வண்டல் மண் இருக்கும், மாட்டு வண்டிகளில் அவற்றை அள்ளிக் கொண்டு வந்து குப்பைக் கிடங்குகள், வயல்களில் புன்செய் நிலங்களில் உரமாகக் கொட்டு வோம்.
ஆனால் தற்போது நிலைமை என்ன? குளங்கள், ஏரிகள் முழுக்க சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து நிறைந்து விட்டன. நீர்வரத்துக் கால்வாயில்கள் நெடுகிலும் சீமைக் கருவேல மரங்களே அடைத்துக் கொண்டு நிற்கின்றன. அதனால் கண்மாய்களில் நீர் தேங்குவது பெரிதும் குறைந்து விட்டது, அநேகமாக வற்றிவிட்டது.
குளங்களில் விவசாயிகள் மண் எடுத்துக் கொள்ளலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. குளம் முழுக்க சீமைக் கருவேல மரங்கள் மண்டிக்கிடப்பதால், மண் எடுக்கச் சாத்தியமே இல்லை. சீமைக் கருவேல மரங்களை அகற்றி, சாலை ஓரங்களில் மற்ற இடங்களில், வேறு மரக் கன்றுகளை நட வேண்டும். அந்தப் பணி அடுத்து நடைபெற வேண்டும்.
இதற்குத் தடை கேட்ட வழக்கறிஞர் “சீமைக் கருவேல மரம் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டுதான் இருக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். அதைத்தானே நாங்களும் கூறுகின்றோம்? எனவே, ஜேசிபி கொண்டு, தூருடன் வெட்டித் தோண்டி எடுக்க வேண்டும்.
அதன்பிறகு வளர்ந்தால், “இளைதாக முள்மரம் கொள்க” என்பது போல் நமது பிள்ளைகளே, மாணவர்களே, உடனுக்குடன் இரண்டு கைகளால் பிடுங்கி அகற்றி விடலாம். அத்தகைய விழிப்புணர்வை நாம் பிரச்சாரத்தின் மூலம் ஏற்படுத்த வேண்டும்.
அண்டை மாநிலங்களில் இருந்து இனி நாம் நமக்குரிய சட்டப்படியான உரிமை கொண்ட தண்ணீர் வர வழி இல்லை. இயற்கையும் வஞ்சிக்கின்றது. நிலத்தடி நீரைச் சீமைக்கருவேல மரங்கள்தான் உறிஞ்சுகின்றன.
இன்று தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்கள்தானே மிகுதியாக உள்ளன? மற்ற அனைத்து மரங்களையும் கூட்டிப் பார்த்தாலும்கூட 25 விழுக்காடு தேறாதே?
தமிழ்நாட்டை நினைத்தால் வேதனையாக இருக்கின்றது. நீதிமன்றத்தில் நீதி நிலைக்கின்றதா? இல்லையா? என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம்.
தோழர்களே, இந்தக் கோடை வெயில் காலத்தில் “மறுமலர்ச்சி தண்ணீர்ப் பந்தல்” அமைக்கின்ற பணிகளில் ஈடுபடுங்கள். அங்கே பானைகளில் நல்ல தண்ணீர் வைக்க வேண்டும். பல இடங்களில் இந்தத் தண்ணீர்ப் பந்தல்களைப் பார்ப்பதுண்டு - விளம்பரம் இருக்கும்; தண்ணீர் பானை அல்லது டிரம் இருக்கும். ஆனால் தண்ணீர் இருக்காது. அதைத் தருவதற்கும் அங்கே ஒருவர் கூட இருக்க மாட்டார். எனவே, பெயருக்கு அமைத்தால் மட்டும் போதாது. காலை முதல் மாலை வரை அங்கு தோழர்கள் இருக்க வேண்டும். நகர்ப்புறங்களில்தான் இது மிகவும் தேவை. இதுகுறித்து நமது கழக அவைத்தலைவர் அண்ணன் திருப்பூர் துரைசாமி, சட்டத்துறைச் செயலாளர் தேவதாஸ் ஆகியோரிடம் கூறியுள்ளேன்.
என்னுடைய வேண்டுகோள் வெளியான அடுத்த நாளிலேயே, நெல்லை மாவட்டப் பொறுப்பாளர் திருமலாபுரம் இராசேந்திரன் முயற்சியால், சங்கரன்கோவிலில் தண்ணீர்ப் பந்தல் அமைத்துச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்ற தகவலையும் அறிந்தேன்.
பற்றி எரியும் காஷ்மீர்:-
இந்தியத் துணைக்கண்டம் குறித்து செலிக் ஹாரிசன் எழுதிய “இந்தியா அபாயகரமான பத்தாண்டுகள் (India: The Dangerous Decades) என்ற நூலின் கருத்துகள்தான் இப்போது என் மனதில் எழுகின்றன. தற்போது அப்படிப்பட்ட அபாயகரமான சூழல் படர்ந்துள்ளது. இந்தியாவின் சுவிட்சர்லாந்து என இயற்கை மகுடம் சூட்டியுள்ள ஜம்மு காஷ்மீரத்து நிலைமை மிக நெருக்கடியான காலகட்டத்தை நெருங்கியுள்ளது.
ஸ்ரீநகர் நாடாளுமன்றத் தொகுதியில் 2017 ஏப்ரல் 9 ஆம் தேதி இடைத்தேர்தல். ஆனால் வாக்குப் பதிவு நாளில் 7.14 விழுக்காடு வாக்காளர்கள்தான் வாக்கு அளித்தனர். பல வாக்குச் சாவடிகள் வெறிச் சோடிக்கிடந்தன. எனது இனிய நண்பர் டாக்டர் பரூக் அப்துல்லா இத்தேர்தலில் வெற்றிபெற்றது எல்லையற்ற மகிழ்சசி ஊட்டியது என்றாலும், காஷ்மீர் பள்ளத்தாக்கு எரிமலைச் சீற்றத்திற்கான அறிகுறிகளைக் காட்டுகின்றதே?
அனந்த்நாக் நாடாளுமன்றத் தொகுதியில் ஏப்ரல் 12 நடப்பதாக இருந்த இடைத்தேர்தல் மே 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நிலைமை மேலும் விபரீதம் ஆனதால், இப்போது மறு தேதி குறிப்பிடாமல் தேர்தலை ரத்து செய்து விட்டனர்.
1996 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது ‘ஹூரியட் கான்பெரன்ஸ்’ அமைப்புத் தலைவர்கள் தேர்தலை புறக்கணிக்குமாறு கூறுவதை அன்று வாக்காளர்கள் ஏற்கவில்லை. 2002, 2008, 2014 சட்டமன்றத் தேர்தல்களில் சராசரி 50 விழுக்காடு வாக்குப்பதிவு ஆயிற்று. காஷ்மீர் பிரிவினை முழக்கமிடும் பிரிவினைவாதிகளும், தீவிரவாதிகளும் விடுத்த அறைகூவல் மட்டுமே இன்றைய நிலைக்குக் காரணம் அல்ல.
தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என அஞ்சிய காரணத்தால் வாக்குச் சாவடிகளுக்கு மக்கள் வரவில்லை என்று அதிகாரவர்க்கம் நியாயம் கற்பிக்க முனைகின்றது. ஆனால், காரணம் அது அல்ல. இந்திய அரசு மீதும் ஆளும் அமைப்பின் மீதும், காஷ்மீரத்து இளைய தலைமுறையின் இதயங்களில் வெறுப்பு எனும் நெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது.
2016 ஜூலையில் புர்கான் வானி படுகொலை அந்தத் தழல் மீது காற்றை வீசிற்று.
எனது நெருங்கிய நண்பரும், முன்னாள் நிதித்துறை, வெளியுறவுத்துறை அமைச்சருமான யஷ்வந்த் சின்கா அவர்கள் காஷ்மீரில் கனன்று கொண்டிருக்கும் கொதி நிலையைத் தணிப்பதற்கும், அதற்கான வழிமுறைகளைக் காண்பதற்கும் அரசியல் கட்சிகளைச் சாரா மனிதநேய உணர்வு கொண்ட நெறியாளர் குழுவினருடன் இரண்டு முறை ஸ்ரீநகருக்குச் சென்றார். ஹரியட் கான்பெரன்சு தலைவர்களை, தீவிரவாதத் தலைவர்களை, அனைத்துத் தரப்புப் பிரதிநிதிகளைச் சந்தித்து நெடிய ஆலோசனைகள் நடத்தினார். அந்தக் காலகட்டத்தில், புது டில்லியை அடுத்து நொய்டாவில் அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்துப் பல மணி நேரம் உரையாடினேன். ‘மத்திய அரசின் அணுகுமுறை மிகத் தவறாக உள்ளது. சிறப்புக் காவல்படை ராணுவ வீரர்களின் துப்பாக்கிகள் மூலமாகவே நிலைமையைக் கட்டுக்குள் அடக்கி வந்த போக்கு எதிர்மறை விளைவுகளைத் தந்துவிட்டது; விபரீத எல்லையைத் தாண்டக்கூடும்’ என்றார்.
முன்பெல்லாம் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் மோதல் என்றால் பொதுமக்கள், இளைஞர்கள் அந்த இடங்களை நெருங்கவே மாட்டார்கள். தற்போது காவல்படையினர், இராணுவத் துருப்புகளின் துப்பாக்கிகள் சீறும் இடங் களை நோக்கி இளைஞர்கள் மட்டும் அல்ல கல்லூரி மாணவர்களும் விரைகின்றனர்.
அழகும் வனமும் வனப்பும் மிக்க காஷ்மீர் மாணவிகள் சிறப்புப் படையினர் மீது எவ்வளவு ஆவேசமாகக் கற்களை வீசு கின்றார்கள்.
மக்கள் ஜனநாயகக் கட்சி (Peoples Democratic Party)யும், பாரதிய ஜனதா கட்சியும் கூட்டுச் சேர்ந்து, தற்போது மெகபூபா அம்மையார் முதல்வராகப் பொறுப்பு வகிக்கின்றார். காஷ்மீர் மக்களின் அடிமனதில் இந்திய அரசு மீது காங்கிரஸ் கட்சி மீதும் அதைவிட பாரதிய ஜனதா கட்சி மீதும் கசப்பும், வெறுப்பும் ஆழமாக வேரோடியுள்ளது. சுயாட்சி, தனி நாடு (ஆசாதி) என்ற முழக்கம் பள்ளத்தாக்கு முழுமையும் ஓங்கி ஒலிக்கின்றது.
காஷ்மீர் பிரச்சினை இன்று நேற்று திடீரென்று வெடித்தது அல்ல. நாடு விடுதலை பெற்ற 47 ஆம் ஆண்டிலேயே பூதாகாரமாய் புறப்பட்டதுதான் ‘காஷ்மீர்’ விவகாரம்.
இந்தத் துணைக்கண்டத்தை இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரித் தானிய அரசு பாகப் பிரிவினை செய்தபோது, வைஸ்ராய் மெண்ட் பேட்டன்தான் முக்கிய முடிவுகளைச் செயல்படுத்தினார்.
பிரித்தானியர்களின் வருகைக்கு முன்பு, இன்றைய பிரதேசங்களை உள்ளடக்கிய இந்தியா என்ற ஒரு நாடு இருந்ததே கிடையாது. காங்கிரஸ் கட்சியின் தியாகத் தலைவர்களில் ஒருவரும், விடுதலைப் போரில் பல ஆண்டுகள் சிறைப்பட்ட வருமான நீலம் சஞ்சீவரெட்டி அவர்கள், 1978 ஆம் ஆண்டு ஆற்றிய குடியரசுத் தலைவர் உரையில் (மத்திய அரசு எழுதிக் கொடுக்கும் அறிக்கையைத்தான் வாசிப்பது வழக்கம்; அதனைத் தூக்கி எறிந்துவிட்டு அவரே எழுதிய உரை அது)
“அசோகர் காலத்திலும் இந்தியா ஒன்றாக இல்லை; அக்பர் காலத்திலும் ஒன்றாக இல்லை; பிரிட்டிஷ்காரனின் லத்திக் கம்பும், துப்பாக்கியும்தான் இந்தியாவை உருவாக்கிற்று” என்றார்.
இதனை நாடாளுமன்றத்தில் நான் மேற்கோள் காட்டிப் பேசி இருக்கின்றேன்.
‘காஷ்மீர்’ யாருடன் இணைவது? இந்தியாவுடனா? பாகிஸ்தானுடனா? அல்லது தனிநாடா? என்ற பிரச்சினையை அலசுவதற்கு முன்பு மற்ற சமஸ்தானங்களை ஆராய்வோம்.
மொத்தம் 564 சமஸ்தானங்கள். தனித் தனி ராஜ்யங்கள். தனி நாடு என்று ஹைதராபாத் நிஜாம் எழுப்பிய குரலும், ரசாக்கர்களின் துப்பாக்கிகளும் சர்தார் வல்லபாய் படேலின் போலீஸ் நடவடிக்கை முன் பஞ்சாய்ப் பறந்தது.
தொடருகிறது...
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment