தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டருக்குள் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தும் வகையில் தமிழகத்தில் 3321 மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் தமிழ்நாடு அரசு கருவூலத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், அந்தந்த பகுதிகளில் மாற்று இடங்களை தேர்வு செய்து, மூடப்பட்ட மதுக்கடைகளுக்கு திறப்பதற்கு அரசு அதிகாரிகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
டாஸ்மாக் மதுக்கடை வியாபாரத்தை எப்படியாவது தொடர்ந்து நடத்தியாக வேண்டும் என்று தமிழக அரசு, மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட மற்றும் கிராமச் சாலைகளில் மாற்றுவதற்கான அரசாணையைப் பிறப்பித்தது, இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என்று தடை விதித்தது. இந்நிலையில்தான் மாற்று இடங்களில் மதுக்கடைகளைத் திறக்க எதிர்ப்புகள் கடுமையாகி, போராட்டங்கள் வெடித்துள்ளன.
பொதுமக்களின் தன்னெழுச்சியானப் போராட்டங்களை அலட்சியப்படுத்தியும், காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவியும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிரான அறப்போராட்டங்களை நசுக்கி விடலாம் என்று தமிழக அரசு கருதுகிறது. ஆனால், பொதுமக்களும் பெண்களும் மதுக்கடைகளை முற்றுகையிட்டு, திறக்கப்பட்ட கடைகளை சூறையாடி வருகின்ற செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
சென்னை திருமுல்லைவாயிலில் டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பொதுமக்களில் 21 பேரை கைது செய்து சிறையில் பூட்டினர். அவர்கள் பிணை மனுக்கள் கீழமை நீதிமன்றம் ஏற்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த மாண்புமிகு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடியவர்களை ஏன் சிறையில் அடைக்க வேண்டும்? டாஸ்மாக் கடை விளம்பர தட்டிகளை கிழித்தது பெரும் குற்றமா? என்று கேள்வி எழுப்பினர். போராட்டக்காரர்கள் 21 பேரையும் விடுதலை செய்து, அவர்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
சென்னை உயர்நீதிமன்றம் மே 5 ஆம் தேதி அளித்த உத்தரவைப் பற்றிக் கவலைப்படாமல், டாஸ்மாக் நிறுவனம் தமிழகத்தில் பல மாவட்டங்களில் புதிதாக கடைகளைத் திறப்பதற்கு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த மதுக்கடைகள் பள்ளிக்கூடங்கள், ஆரம்ப சுகாதார நிலையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், வங்கிகள் ஆகியவற்றின் அருகில் அமைவதால் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்று ஊராட்சி மன்றங்களின் கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஊராட்சி மன்றத் தீர்மானங்களை மதிக்காமல், மாவட்ட நிர்வாகம் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்க நடவடிக்கை எடுத்து வருவதால் அதற்குத் தடை விதிக்கக் கோரி கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் கடந்த மே 8 ஆம் தேதி வரவேற்கத்தக்க தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
“குடியிருப்புப் பகுதிகளுக்குள் மதுபானக் கடைகளைத் திறக்க தமிழக அரசுக்கு தடை விதிக்கப்படுகிறது. தங்களது கிராமத்திற்குள் மதுபானக் கடை திறக்கக்கூடாது என்று கிராம சபைகளில் தீர்மானம் இயற்றினால், நகரம், கிராமம் ஆகிய பகுதிகளில் மதுபானக் கடைகளைத் திறக்கக்கூடாது. டாஸ்மாக் மதுபானக் கடைகளை தங்களது பகுதிகளில் திறக்கக்கூடாது என்று ஜனநாயக முறையில், அமைதி வழியில் போராட்டம் நடத்தும் மக்களை காவல்துறை கைது செய்யவோ, அவர்கள் மீது தடியடி உள்ளிட்ட எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது” என்று அடுக்கடுக்கான உத்தரவுகளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.
கடந்த 2015 ஆகஸ்ட் 4 இல் கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றம் டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டும் என்று நிறைவேற்றிய சிறப்புத் தீர்மானம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதியரசர்கள் திரு.நாகமுத்து, திரு முரளிதரன் ஆகியோர் 2016 நவம்பர் 16 இல் தீர்ப்பளித்தனர். கலிங்கப்பட்டி மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சஞ்சய்கிஷன் கௌல் ஆகியோர் அமர்வு இந்த ஆண்டு பிப்ரவரி 27 அன்று தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்காமலேயே தள்ளுபடி செய்தது. இந்திய அரசியல் சட்டத்தின் 136ஆவது பிரிவின் கீழ் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்பில் தலையிட முடியாது என்று திட்டவட்டமாக தீர்ப்பு அளித்திருக்கிறது.
பொதுமக்களின் நலனுக்காக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளை செயல்படுத்தாமல், அவற்றை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்கு உரியது. தமிழக மக்கள் குறிப்பாக, பெண்களின் போராட்டத்தைக் கருத்தில்கொள்ளாமல் எப்படியாவது மதுக்கடைகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று தமிழக அரசு செயல்பட்டால், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிரான மாபெரும் போராட்டம் வெடிக்கும். தமிழகத்தில் மதுக்கடைகளை நிர்மூலமாக்கும் வரையில் போராட்டங்கள் ஓயாத பேரலையாக பரவும் என்று எச்சரிக்கிறேன்.
புழல் சிறையில் தம்மை சந்திக்க வந்த வழக்கறிஞர் கோ.நன்மாறன் அவர்களிடம் வைகோ அவர்கள் கூறிய இந்தக் கருத்துக்கள் அறிக்கையாக வெளியிடப்படுகின்றது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment