எட்டாண்டுகளுக்கு முன்னர் 2009 மே மாதத்தில் சிங்கள பேரினவாத அரசு லட்சக்கணக்கான தமிழர்களை, பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், காயப்பட்ட நோயாளிகள், முதிர் வயதினர் அனைவரையும் ராணுவத்தை ஏவி உலகம் தடை செய்த குண்டுகளையும், கனரக பீரங்கி குண்டுகளையும் வீசி கோரமான இனப்படுகொலை நடத்தியது. எண்ணற்ற தமிழ்ப் பெண்கள் கற்பு சூறையாடப்பட்டு, கொல்லப்பட்டனர். இந்த இனப்படுகொலைக்கு அனைத்துலக அரங்கில் நீதி கிடைக்கவில்லை. நாதியற்றுப் போனவர்களாக தமிழர்கள் துடிதுடித்து மாண்டனர். தமிழர்கள் படுகொலையைத் தடுக்க வீரத் தியாகி முத்துக்குமார் உள்ளிட்ட 19 பேர் மரணத் தீயை அணைத்து பலியானார்கள்.
ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்ட நம் தொப்பூள் கொடி உறவுத் தமிழர்களுக்காக ஆண்டுதோறும் மே மாதம் மூன்றாவது வாரம் ஞாயிற்றுக்கிழமை, மே 17 இயக்கத்தினர் சென்னை - மெரினா கடற்கரையில் மனதை உருக்கும் வகையில் நினைவேந்தல் புகழஞ்சலி வீரவணக்க நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியும், அவரது சகாக்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்த நிகழ்ச்சியை “நீதிபெற” உறுதி எடுக்கும் நிகழ்வாக நடத்தி வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள், இளைஞர்கள், சகோதரிகள், உணர்வாளர்கள் அந்தி சாயும் வேளையில் கரங்களில் மெழுகுவர்த்திச் சுடர்களை ஏந்துவர். அச்சுடர்கள் தமிழர்களின் கண்ணீர்த் துளிகள். சட்டம் ஒழுங்குக்கு சிறு இடையூறும் ஏற்படாத வகையில் இந்த கண்ணீர் அஞ்சலி நிகழ்வு நடைபெறுகிறது. கடந்த ஆண்டுகளில் நான் இந்த நிகழ்ச்சியில் தவறாது பங்கேற்றுள்ளேன்.
இவ்வாண்டு வரும் மே 21 ஆம் நாள் மாலை 5 மணிக்கு மெரினா கடற்கரையில், கண்ணகி சிலைக்கும் காந்தியார் சிலைக்கும் இடையில் உள்ள இடத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். உணர்வுபூர்வமான அரசியல் நோக்கமற்ற புகழஞ்சலி வீரவணக்க நிகழ்ச்சிக்கு சென்னை மாநகரக் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என வேண்டுகிறேன்
மறுமலர்ச்சி திரவிட முன்னேற்றக் கழக கண்மணிகள் கழகக் கொடிகளைத் தவிர்த்து, துணைப்பொதுச்செயலாளர் சகோதரர் மல்லை சத்யா அவர்கள் தலைமைலும், ஈழத்தமிழ் உணர்வாளர்களும் மே 21 மாலை நிகழ்ச்சியில் பெருமளவில் பங்கேற்க அன்புடன் வேண்டுகிறேன்.
No comments:
Post a Comment