Sunday, May 7, 2017

சிறை சென்றது ஏன்? வைகோ கடிதம்-3, தமிழ்நாட்டுக்கு வழிகாட்டும் கலிங்கப்பட்டி ஊராட்சி, பாகம்-1!

இமைப்பொழுதும் நீங்காது, என் இதயத் துடிப்போடும், இரத்தச் சுழற்சியோடும், கலந்து விட்ட கண்ணின் மணிகளே!

தமிழகமெங்கும் தாய்மார்கள் போர்க்கோலம் பூண்டு விட்டார்கள்; டாஸ்மாக் கடைகளை அகற்ற ஆவேசத்துடன் போராடுகின்றனர். சில இடங்களில் நம் வீர மங்கையர் டாஸ்மாக் கடைக்கதவுகளை உடைத்து, மதுப்புட்டிகளை சாலையில் உடைத்து நொறுக்குகின்ற காட்சிகளை ஏடுகளில் படங்களாகப் பார்க்கின்றேன். நெடுஞ்சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டு இருந்த சாராயக்கடைகளை அகற்றிட உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பினால், வேறு இடங்களைத் தேடி அமைக்க அரசு முனைகின்றது. மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை அமைக்க அதிகாரிகள் முனையும்போதே தாய்மார்களும், மாணவர்களும் திரண்டு எழுந்து முற்றுகையிட்டுத் துரத்துகின்ற காட்சிகள் தமிழகம் எங்கும் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன. மாணவர்களும் களம் புகுந்துவிட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் படூரில் மதுக்கடையை அகற்றக்கோரி 7 வயது சிறுவன் ஆகாஷ், “குடியை விடு; படிக்க விடு” என்ற பதாகையை தாங்கியவாறு 2 கிலோ மீட்டர் நடந்து சென்றதோடு, சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய செய்தி என் நம்பிக்கையைக் கூட்டுகிறது.

எவ்வளவு பெருமையாக இருக்கிறது நமக்கு! பெருமிதத்தால் நெஞ்சம் பூரிக்கிறது; புளகாங்கிதம் கொள்கின்றது!

இதை தானே சொன்னேன் 2015 ஆகஸ்டு இரண்டாம் நாள் கலிங்கப்பட்டியில் வெடித்த அறப்போர்க்களத்தில்....

“தாய்மார்களே, புறநானூற்று வீராங்கனைகளே புறப்படுங்கள்! டாஸ்மாக் கடை களை முற்றுகையிடுங்கள்! மாணவர்களே, உடைத்து நொறுக்குங்கள் மதுபாட்டில்களை” என்று முழங்கினேன்.

ஏடுகள் என் போர்ப் பிரகடனத்தை வெளியிட்டன. ஏன்? சில ஏடுகள், தொலைக்காட்சி ஊடகங்கள் என்னைக் கடுமையாக விமர்சித்தன. கலவரத்தைத் தூண்டுகிறார் என்றன.

ஆம்; தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க தாய்மார்களும், மாணவர்களும்தான் கிளர்ந்து எழ வேண்டும் என்றேன். என் மீதும் என் தம்பி வை.ரவிச்சந்திரன் மீதும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட 53 பேர் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவாயிற்று.

திடீரென்று ஒரு நாள் இப்படி அறைகூவல் விடுக்கவில்லை.

2004 இல் 1200 கி.மீ., தொலைவு, 2012 இறுதியிலும் 2013 தொடக்கத்திலும் கோடை வெயிலிலும் 1300 கி.மீ., தொலைவு வெயிலிலும், மழையிலும் தொண்டர் படை, இளைஞர் அணி, மாணவர் அணியினருடன் சேர்ந்து, “மதுவை” ஒழிப்பது ஒன்றே தமிழகத்தைக் காப்பாற்றும் எனக் கால்கடுக்க நடந்தேனே!

வழி நெடுகிலும் பல்லாயிரக்கணக்கான தாய்மார்கள், குறிப்பாக ஏழைத் தாய்மார்கள் என்னை வரவேற்று,

“ஐயா, உங்களுக்குப் புண்ணியமாகப் போகும், இந்த டாஸ்மாக் கடைகளை மூடுங்கய்யா. சாராயக்கடைகளை விரட்டுங்கய்யா. எங்கள் பிள்ளைகளும் குடிச்சுக் கெட்டுப்போகுது. புருசன் குடிச்சிட்டு வந்து அடிக்கிறான். சம்பாத்தியம் எல்லாம் டாஸ்மாக் கடைக்குத்தான் போகுது. எங்க பொம்பளப் புள்ளைங்க பத்திரமா எங்கேயும் போயிட்டு வர முடியலைங்கய்யா, வீட்டிலே கூட பாதுகாப்பா இளம்பெண்கள் இருக்க முடியலையா என்று கதறி அழுதனரே! பல இடங்களில் சின்னஞ்சிறு பெண் பிள்ளைகளை, சிறுமிகளை மது அருந்திய மிருகங்கள் நாசமாக்கிக் கொலை செய்யும் செய்திகள் நம் நெஞ்சையே நடுங்கச் செய்தனவே..

13 ஆண்டுகள் இடைவிடாது போராடி வந்துள்ளோம்.

மது ஒழிப்பு மாரத்தான்:-

மாணவர்கள் மத்தியில் மது ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த, “மாணவர் மாரத்தான் ஓட்டப் பந்தயங்களை நமது இளைஞர் அணிச் செயலாளர் ஆருயிர் இளவல் பொறியாளர் ஈஸ்வரன் திட்ட மிட்டு நடத்தியபோது அதில் பங்கு கொண்டேன்.

கோவை மாநகரில் 24,000 மாணவ, மாணவிகளும், திருச்சி மாநகரில் 42,000 மாணவ, மாணவிகளும், தலைநகர் சென்னையில் 59,500 மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். முறைப்படி பள்ளிகள், கல்லூரிகளில் விண்ணப்பங்கள் கொடுத்ததால் அவர்கள் திரண்டு வந்து பங்கேற்றனர்.

இவையெல்லாம் தமிழகத்தில் நம் இயக்கத்தைத் தவிர வேறு எவரும் செய்யாதவை!

மதுக்கடைகள் மூடப்படும்போது என் வீரத்தாய் மாரியம்மாள் நினைவுதான் என் இதயத்தில் எழுகின்றது. இந்த அறப் போரில் ஈடுபட்டதால் உடல் நலிந்து அறுபதாம் நாள் உயிர் நீத்த வீராங்கனையன்றோ என்னைப் பெற்ற அன்னை!

கலிங்கப்பட்டி அறப்போர் குறித்து ஊராட்சி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு அதன் தீர்ப்பு, எதிர்த்த தமிழக அரசின் மூக்கை உடைத்த உச்ச நீதிமன்றம். இந்த விபரங்களை எல்லாம் இம்மடலின் பிற்பகுதியில் எழுதுகிறேன்.

தமிழகத்தின் ஆபத்து உதவிகள்:-

தமிழக நலன்களுக்கு ஆபத்து நேர்வதை முன் கூட்டியே சரியாகக் கணித்து எச்சரிக்கை மணி அடிக்கும் இயக்கம் மறுமலர்ச்சி தி.மு.கழகம்தான்!

அபாய அறிவிப்புக் கொடுப்பதும், மக்களிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்வது நாம்தான்!

கிளர்ச்சியில் ஈடுபடுவதும் நாம்தான்!

தமிழ்நாட்டின் ஆபத்து உதவிகளே நாம்தானே!

தமிழகத்தின் நிலத்தடி நீர்வளத்தை அடியோடு நாசமாக்கி மண்ணை மலடாக்கி விவசாயத்தைச் சீர்குலைக்கும் வேலிக்காத்தான் எனப்படும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி, 2015 ஆம் ஆண்டு நான் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்ததும், அதன் விளைவாக மாட்சிமைதங்கிய நீதியரசர் செல்வம் அவர்களும், நீதியரசர் பொன்.கலையரசன் அவர்களும் நீதித்துறை வரலாற்றில் பொன்னேடு படைத்த தீர்ப்பைத் தந்ததும், இன்று தமிழகமெங்கும் “சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் முழு வீச்சில் நடப்பதும், செயல்படாத துறைகள், மத்திய அரசின் இரயில்வே துறை உட்பட நீதிமன்றக் கூண்டில் ஏறி விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதும், நமது கழகத் தோழர்கள் அனைத்து இடங்களிலும் இந்த தூய நற்பணியில் முழு முனைப்பாக ஈடுபட்டு இருப்பதும், நம் இயக்கத்துக்குப் பெரும் புகழை ஈட்டியுள்ளது.

சீமைக் கருவேல மரங்களை அகற்ற நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததும், அதேபோன்று யூக்கலிப்டஸ் மரங்களை அகற்ற முனைந்து இருப்பதும் திடீரென்று ஏற்பட்ட ஞானோதயமும் அல்ல; அரசியல் லாபம் கருதிக் களம் காணும் நோக்கமும் அல்ல என்பதற்குச் சரியான ஆதாரத்தைத் தருகின்றேன்.

வேடசந்தூர் தீர்மானங்கள்:-

12 ஆண்டுகளுக்கு முன்னரே 2005 ஆம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் பிப்ரவரி 5, 6 தேதிகளில் நாம் நடத்திய விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மறுமலர்ச்சி மாநாட்டை நினைவூட்டுகிறேன்.

இம்மாநாட்டில்தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் ஒரு மணி நேரம் முழங்கினார். இம்மாநாட்டில்தான் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ் முன்சி பங்கேற்று “வைகோ நாடாளுமன்றத்துக்கு இந்தக் கட்டத்தில் வந்திருந்தால் தென்னக நதிகள் இணைப்பு செயல்படுத்தப்பட்டு இருக்கும்” என்று பேசியபோது கரவொலி விண்முட்ட எழுந்தது. இம்மாநாட்டின் ஐம்பது தீர்மானங்களில், இருபத்தி மூன்றாவது தீர்மானம்தான் சீமைக் கருவேலம், யூக்கலிப்டஸ் மரங்களை அகற்ற வேண்டும் என்ற தீர்மானம்.

அந்தத் தீர்மான வரிகள் :-

“வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட சீமைக் கருவேல விதைகள் ஆங்காங்கு விதைக்கப்பட்டன. காலப் போக்கில் அதன் விதைகள் நாடெங்கும் பரவி சீமைக் கருவேல மரங்கள் இல்லாத இடமே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சீமைக் கருவேலம் தன்மையை ஆய்வு செய்த நிபுணர்கள் நிலத்தடி நீரை அதிகமாக உட்கொள்ளும் தன்மை கொண்டது என்றும் கூறியுள்ளனர். அரசுக்கு சொந்த மான பொதுப்பணித்துறைக் குளங்களில் சீமைக் கருவேலம் வளர அனுமதிக்கக் கூடாது என்று அறிவித்தும் அது நடை முறைப்படுத்தப்படவில்லை. எனவே நிலத்தடி நீரின் அவசியம் கருதியும், வருங்காலத்தில் விவசாயம் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்கவும் தமிழக அரசு சீமைக் கருவேல மரங்களை வேருடன் அகற்றிட உரிய நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது”

அடுத்த தீர்மானம்:-

“யூக்கலிப்டஸ் மரம் குளிர்ச்சியான மலைப் பகுதிகளில் மட்டுமே வளர்க்கக் கூடிய மரம் ஆகும். நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சக் கூடியது. அந்த மரத்தைச் சமவெளிப் பகுதிகளிலும் வளர்த்ததால் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சி விட்டது. இதனால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு விட்டது. எனவே யூக்கலிப்டஸ் கன்றுகளை நடவு செய்திட விவசாயிகளை ஊக்கப்படுத்தக் கூடாது என்று விவசாயத்துறை அதிகாரிகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது.”

தமிழக நலன்களைக் காப்பதில் விவசாயிகளின் கண்ணீரைத் துடைப்பதில் நம்மைப் போல் செயல்பட்ட இயக்கம் தமிழ் நாட்டில் வேறு ஒன்றும் கிடையாது. பென்னிகுயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையைக் காக்கப் பத்து ஆண்டுகள் இடைவிடாது போராடினோம். உண்ணாநிலை அறப்போர், நடைப்பயணம், முற்றுகைப் போராட்டம் ஒன்றா? இரண்டா? தியாகத் திருவிளக்கு, முல்லைப் பெரியாறைக் காக்க மரணத் தீயைத் தழுவி மறைந்த தீரன் ஜெயப் பிரகாசு நாராயணன் எனக்குக் கொடுத்த பாராட்டுப் பட்டயத்தைவிடவா இன்னொன்று வேண்டும்?

ஸ்டெர்லைட் எதிர்ப்பு:-

“தூத்துக்குடி மாநகரின் சுற்று வட்டாரத்தில் 40 கிலோமீட்டர் பரப்பில், பொது மக்களுக்குப் புற்றுநோய் வரக் காரணமாவதும், விவசாயத்தை அடியோடு நிர்மூலமாக்குவதும், மீனவர் வாழ்வைப் பாழாக்குவதுமாகிய “நாசகார ஸ்டெர் லைட் நச்சு ஆலையை அகற்ற இருபத்தொரு ஆண்டுகளாகப் போராடி வருகின்றோம். தொடக்கத்தில் எதிர்ப்புக் காட்டிய பல கட்சிகளின் ‘வாய்’ கட்டப்பட்டன. எதைக் கொண்டு என்று நான் கூற வேண்டியது இல்லை. உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த சில கட்சிகள் கோர்ட் பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை.

உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தீர்ப்பைப் பெற்றேன். என் வாழ்க்கையில் நான் சாதித்த சாதனை என மனதில் பெருமிதமும் கொண்டேன்.

உலகக் கோடீஸ்வரர்களுள் ஒருவரான ஸ்டெர்லைட் அதிபர் அனில் அகர்வால் இன்று இந்தியாவில் பல பெரும் நிறுவனங்களைக் கபளீகரம் செய்து விட்டார். ஒரிஸ்ஸா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் பழங்குடி மக்களின் வாழ்வுக்கு வேட்டு வைப்பதும் இவர்தான். உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

தொடர்ந்து நான்கு ஆண்டுகள் நானும் வழக்கறிஞர் தேவதாசும் 37 வாய்தாகளுக்குச் சென்றோம். நான் இரண்டரை மணி நேரம் எடுத்து உரைத்த நிறைவு வாதங்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெரிதாகப் பாராட்டினர். ஆனால் தீர்ப்பு அகர்வாலுக்குத்தான் சாதகம் ஆயிற்று.

இதில் அதிமுக - திமுக இரண்டு கட்சிகளுமே ஸ்டெர்லைட்டுக்குத் துணையாய் நின்றன. கடைசியில் உச்சநீதிமன்றத்திலும் தீர்ப்பு வைகோவுக்குச் சாதகமாக வரப்போகிறது என்ற தகவலின் பேரில், முதல் நாள் ஸ்டெர்லைட்டை மூட அதிமுக அரசு ஆணையிட்டு பின்னர் ஆலை அதிபரின் சக்திக்குத் தீர்ப்பு ஆயமும் தலை வணங்கியது. தற்போது அதன் மீது உச்சநீதிமன்றத்தில் நாம் தாக்கல் செய்த ரிட் மனு நிலுவையில் உள்ளது.

நியூட்ரினோ எதிர்ப்பு:-

தேனி மாவட்டத்தில் தேவாரம் அருகே, அம்பரப்பர் மலையில் ‘இந்திய நியூட்ரினோ ஆய்வகம்’ அமைக்க மத்திய அரசு 1500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து கட்டடங்களை எல்லாம் எழுப்பி விட்டது.

எப்படி மீத்தேன் திட்டம் தமிழ்நாட்டிற்குள் நுழையப்போகிறது என்று அறிந்தவுடன், முதல் அபாய அறிவிப்புச் செய்தேனோ, அதே போன்றுதான் நியூட்ரினோ’ திட்டம் வரக்கூடும் என்பதை அறிந்த மறுநாளே அதனால் ஏற்படப் போகும் பேரபாயத்தை அறிக்கையாகத் தந்தேன்.

இந்த INO எனும் நியூட்ரினோ ஆய்வகம் உலகிலேயே மிகப்பெரிய ஆய்வகம் ஆகும். உலகெங்கும் உள்ள அறிவியலாளர்கள் இதை வரவேற்கின்றனர். ஜப்பானில் இருப்பதை விட, அமெரிக்காவில் உள்ளதைவிட இங்கு அமையப்போகும் ஆய்வகம் பிரம்மாண்டமானது. இதனை ஆதரித்து தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சார்ந்த சிலர் குறிப்பாக பேராரிசியர்கள் வரிந்து கட்டிக்கொண்டு வக்காலத்து வாங்கினர்.

பேராசிரியை இந்துமதி என்பவர், “நியூக்ளியர் ஆயுதத்திற்கும் நியூட்ரினோவுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களின் பிதற்றல்” என்று பரிகாசமும் செய்தார்.

நேற்று ஏப்ரல் 21 ஆம் தேதி இரவில் என் கொட்டடிக்கு எதிரே வராந்தாவில் உள்ள தொலைக்காட்சியில் (பொதிகை சேனல் மட்டும் ஒளிபரப்பாகும்) 45 நிமிடம் நியூட்ரினோ ஆதரவுப் பிரச்சாரம். இயற்பியல் மேதைகள் தங்கள் பிரலாபத்தைக் கொட்டினர். நிறுவனத்தின் முக்கியப் பதவியில் உள்ள மண்டேல், ‘நியூட்ரினோ நாட்டுக்கே வரப் பிரசாதம்’ என்றார்.

எனக்குப் பொறுக்கவில்லை. மனம் ரணம் ஆனது. மிகக் கடுமையான கெட்டித் தன்மையுள்ள பாறை மலையில்தான் இதனை அமைக்க முடியும். உலகிலேயே கெட்டியான பாறை உள்ள மலை மேற்குத் தொடர்ச்சி மலைதான். அப்படியானால் கர்நாடகத்திலோ, மராட்டியத்திலோ, குஜராத்திலோ ‘INO’ அமைக்கலாமே? மேற்குத் தொடர்ச்சிமலை அங்கெல்லாம் இருக்கின்றதே? அனைத்து அழிவுகளையும் தமிழன் தலையில்தான் கொட்ட வேண்டுமா? இதுகுறித்துப் பலநாள்கள் படித்து, கொச்சிக்குச் சென்று, இதே துறையில் பணியாற்றிய அறிவியல் நிபுணரிடம் பல விபரங்கள் அறிந்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதியரசர் தமிழ்வாணன், நீதியரசி வேலுமணி அமர்வில் மூன்று மணி நேரம் வாதங்களை முன்வைத்து நான் தடை ஆணை பெற்றேன். இன்னமும் அந்தத் தடை ஆணை உள்ளது.

1500 கோடி ரூபாய் அபாயகரமான மத்திய அரசுத் திட்டத்தை இந்த எளியவன் நிறுத்தி வைத்துள்ளேன்.

மலை போல பலம் வாய்ந்த கோலியாத்தைக் கவண் கல்லால் அடித்து வீழ்த்தினான் டேவிட் என்கிறது விவிலியம்; அதுபோல முழு வெற்றி பெறத் துடிக்கின்றேன்.

இந்த ‘INO’ திட்டத்தைக் கேரளத்தின் மூத்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான தோழர் அச்சுதானந்தன் முழு மூச்சாக எதிர்க்கின்றார். 2015 பிப்ரவரி 7 ஆம் நாள் நான் கொச்சிக்குச் சென்று அவரைச் சந்தித்து ‘INO’ குறித்து விளக்க அறிக்கை தந்தேன். கடுமையாக எதிர்ப்போம். வர விடக் கூடாது என்றார்.

இந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி திருவனந்தபுரம் சென்று இன்றைய கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் அவர்களைச் சந்தித்து, “செண்பகவல்லி தடுப்பு அணை சீரமைப்புக்கு அனுமதி கோரி மனு கொடுத்ததோடு, ‘INO’ ஆபத்தையும் விளக்கி அதனைத் தடுக்கக் கோரிக்கை கடிதமும் தந்தேன்.

தற்போது சிறையில் இருந்தாலும், மத்திய அரசு கேரள வனத்துறையின் இசைவினைப் பெற முயற்சி செய்வதைச் சுட்டிக்காட்டி அனுமதி கொடுக்கக் கூடாது என்று வேண்டி இருவருக்கும் கடிதங்கள் அனுப்பி உள்ளேன்.

கூடங்குளம் அணு உலையை அகற்ற....

கூடங்குளம் அணுஉலை அமைக்க ராஜீவ் காந்தி அரசு முடிவெடுத்து, அன்றைய சோவியத் அதிபர் கோர்பசேவ் இந்தியா வந்தபோது அவருடன் ஒப்பந்தம் போட்டது.

அப்போது இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி, “கோர்பசேவை வானளாவப் புகழ்ந்து விட்டு, சோவியத் ரஷ்யாவுடன் இந்திய அரசு அணுஉலை அமைக்க ஒப்பந்தம் போடுகிறது என்பதை, எந்த இடம் எனக் குறிப்பிடாமல் பூடகமாக நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

1988 நவம்பர் 21 ஆம் நாள் மாநிலங்கள் அவையில் பேசினேன்:

“கூடங்குளத்தில் அணு உலை அமைக்கத் திட்டமிட்டுள்ளீர்கள். அங்குள்ள மீனவ மக்களும் நாங்களும் எதிர்க்கின்றோம்” என்று நான் கடுமையாகச் சாடினேன்.

அதற்கு ராஜீவ்காந்தி, “அனல்மின் நிலையத்தில் இருந்தும் கூடத்தான் கதிர்வீச்சு ஏற்படும். அது போலத்தான்” என்று உளறினார்.

“உலகிலேயே நமது பிரதமரைப் போன்ற விஞ்ஞானியை இதுவரை நான் கேள்விப்பட்டது இல்லை” என்று நான் கூறவும், அவையில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கிடைப்பதைத் தடுக்கின்றார்கள் என்று அணுஉலை எதிர்ப்பாளர்களைக் கடுமையாக விமர்சிப்போர் உண்டு. என்னிடம் நேரடியாகவே சொன்னவர்களும் உண்டு.

பேரழிவு ஏற்பட்டால் தெற்குச் சீமை அழிந்து போகுமே?

இப்போது அச்சமூட்டும் செய்தி ஒன்று வந்துள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள அணு உலைகளின் மீது சைபர் தாக்குதல் நடைபெறுவதற்கும், தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு அணுஉலைகள் ஆளாவதற்கும் வாய்ப்புள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் கேள்விக்கு பதில் தந்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ‘உண்மைதான்’ என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் அணுசக்தி அச்சுறுத்தல் குறித்து உலக அளவில் ஆய்வு செய்யும் நிறுவனமும் இத்தகவலை உறுதிப் படுத்தி உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், வழக்கம் போல இந்தியா இதைப் போன்ற தாக்குதல்களை எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.

இணையவழித் தாக்குதல்கள் என்பவை இங்கே சர்வசாதாரணமாக நடைபெறுகின்றது. அணுஉலைகள் மீது இணைய வழித் தாக்குதல் என்பது மிகவும் ஆபத்தானவை.

இந்தியத் துணைக்கண்டத்துக்கு வடக்கில் இருந்து போர்க்காலத்தில் ஆபத்து வரக்கூடும் என்று கருதித்தான், தெற்கே விஜயநாராயணத்தில் கடற்படைத் தளம் அமைத்தார்கள். இப்போது தெற்கில் இருந்துதான் பேரபாயம் ஏற்படும். செஞ்சீனம் மிக வலுவாக இலங்கையில் கால் ஊன்றிவிட்டது. கொழும்பு நகரை விடப் பெருநகரம் ஒன்றை சீனா அங்கே உருவாக்குகின்றது. ஹம்பன் தோட்டா துறைமுகத்திலும் சீனாவே ஆளுமை செய்யும். அண்டை நாடுகள் உறவைப் பொறுத்தமட்டில் குளவிக் கூட்டைக் கலைப்பது போல் இந்திய அரசு செயல்படுகின்றது.



(சங்கொலி, 05.05.2017)

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment