அன்று இரவு அவர்களுக்கு அதிர்ச்சி:-
இரவு பத்து மணி இருக்கும். முந்நூறு காவலர்கள் என் ஊருக்கு இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள பிள்ளையார்குளம் காளியம்மன் கோவில் வளாகத்தில் தங்கி இருக்கின்றனர் என்று தெரியவந்தது. நான் பத்தரை மணிக்குக் கொடி கட்டிய என் காரில் பிள்ளையார்குளம் காளியம்மன் கோவில் வளாகத்திற்குள் சென்று இறங்கினேன்.
படுத்திருந்த காவலர்கள், உட்கார்ந்து இருந்த காவலர்கள், காவல்துறை அதிகாரிகள் பதற்றத்துடன் எழுந்தார்கள். “எங்க ஊரில் தங்கி இருக்கின்றீர்களே! சாப்பிட்டீர்களா? வசதியாய் இருக்கா? வேறு ஏதாவது வேணுமா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டேன். பிரமித்துப் போனார்கள்.
ஒவ்வொருவரும் நான் இந்த ஊர், அந்த ஊர், இன்னாருக்குச் சொந்தம், வேண்டியவன் என்று கூறினார்கள். “நல்லா ஓய்வு எடுங்கள்,” என்று கூறிவிட்டு வீடு திரும்பினேன்.
இதுதான் என் இயல்பு!
முழு அடைப்புப் போராட்டம்:-
2015 ஆகஸ்டு 4-ஆம் தேதி தமிழகத்தில் நாம் நடத்திய முழு அடைப்புப் போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் அண்ணன் வெள்ளையன் அவர்கள் ஆதரவு கொடுத்தார். முதல்நாள் ஆகஸ்டு 3-ஆம் நாள் அண்ணன் நல்லகண்ணு அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து என் அன்னையிடம் பரிவுடன் பேசினார்கள். “பெரிய வீட்டுத் தாயி; போர்க்குணம் இரத்தத்திலேயே இருக்கிறது,” என்று பாராட்டி விட்டுச் சென்றார்கள். சரியாக தொன்னூற்றி ஆறாம் நாள் நவம்பர் 6-ஆம் தேதி என் வீரத்தாய் மாரியம்மாள் இந்த உலகை விட்டு மறைந்தார்கள். நான் மருத்துவமனைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் உயிர் பிரிந்ததாம். தேர்தல் அரசியலில் நான் தோற்றதில் மனதிற்குள் வேதனைப்பட்டு இருப்பார்கள். அவர்கள் கண் மூடுவதற்குள் நமது இயக்க வெற்றியை அவர்கள் பார்க்க வேண்டும் என்று எவ்வளவோ ஆசைப்பட்டேன். அது நிறைவேறவில்லை.
மறக்க முடியுமா?
வீரமும் துணிச்சலும் கொண்டவர் என் அன்னை. 2008-ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு உழவர் சந்தையில் நடந்தபோது, கொட்டும் மழையிலும் குடையைத் தவிர்த்து விட்டு அமர்ந்து இருந்தார்கள். 2000-இல் ஈரோட்டில் நடந்த நமது தமிழக எழுச்சி மாநாட்டில் மேடைக்கு முன் முதல் வரிசையில் என் தாயார் மாரியம்மாள் அமர்ந்து இருந்ததை அறிந்த காஷ்மீர் முதல்வர் டாக்டர் பரூக் அப்துல்லா அவர்களும், மத்திய இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசு அவர்களும் தடுப்பு வேலிகளைத் தாண்டிச் சென்று அவர்களைப் பணிந்து வணங்கியதும், 2005-இல் செப்டம்பர் 3-இல் ‘சிறையில் விரிந்த மடல்கள்’ ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்ட அன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் என் அன்னையைத் தேடிச் சென்று வணங்கியதும், சகோதரி ஜெயலலிதா 2006-இல் என் வீட்டில் என் அன்னையைப் பார்த்துவிட்டு, “என்னைப் பெற்ற தாயைச் சந்தித்ததுபோல் உணர்ந்தேன்” என்று கூறியதும், 2000 ஜனவரி 1-ஆம் நாள் புத்தாயிரம் மலர்ந்த நாளில் காலை 7.30 மணிக்கு அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்து என் அன்னையின் நலம் விசாரித்து வாழ்த்து சொன்னதும் மறக்கக் கூடியவைகளா?
சரி! மீண்டும் கலிங்கப்பட்டி ஊராட்சிக்கு வருவோம்.
அற்புத மனிதர் அஜ்மல்கான்:-
முழு அடைப்புப் போராட்டம் நடந்த அதே 2015 ஆகஸ்டு 4-ஆம் தேதி கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றக் கூட்டம் தலைவர் வை.ரவிச்சந்திரன் தலைமையில் கூடி “டாஸ்மாக் கடை எண். 10862 அகற்றப்பட வேண்டும்” என்று ஒருமனதான தீர்மானத்தை நிறைவேற்றியது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ரிட் மனு எண். 14059/2015 தாக்கல் செய்தார் ஊராட்சித் தலைவர் திரு. வை.ரவிச்சந்திரன். தலைசிறந்த வழக்கறிஞர் (உயர் நீதிமன்ற நீதிபதியாக முன்னரே பதவி ஏற்றிருக்க வேண்டியவர்) உயர்திரு அஜ்மல்கான் அவர்கள் வழக்கை நடத்தினார்கள்.
நியூட்ரினோ வழக்கைத் தயார் செய்து தந்தபோதும், செண்பகவல்லி தடுப்பு அணைக்காக என் தம்பி சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்காடியபோதும், கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை அகற்றுவதற்காக உயர் நீதிமன்றத்தில் இடைவிடாது வழக்காடி வெற்றியைத் தேடித் தந்த போதும் தட்டச்சுச் செலவுக்குக் கூட ஒரு ரூபாய் கட்டணம் பெற்றுக் கொள்ளாத அற்புத மனிதநேயர் வழக்கறிஞர் அஜ்மல்கான் அவர்கள்.
இத்தகையோரின் நட்பை நான் தேடிக் கொண்டதுதானே எனது பொதுவாழ்வுச் சம்பாத்தியம்!
மாவட்ட ஆட்சியரின் ஏமாற்று வேலை:-
2015 ஆகஸ்டு 13-ஆம் நாள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுதாகரன், நீதிபதி வேலுமணி ஆகிய இருவர் அடங்கிய அமர்வு, “கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கான வாய்ப்பைப் பரிசீலிக்குமாறு நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆணை பிறப்பித்தது.
இந்த ஆணையின் நகல் ஊராட்சித் தலைவருக்கு ஆகஸ்டு 25-இல்தான் கிடைத்தது. ஆனால், நீதிமன்ற ஆணையைத் தெரிந்து கொண்ட நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் ‘ஆகஸ்டு 22-ஆம் தேதியே விசாரித்து விட்டதாகவும் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் பிரிவு 202 (1) (உ) படி கலிங்கப் பட்டி ஊராட்சித் தீர்மானத்தை ரத்து செய்து விட்டதாகவும்’ ஆணை பிறப் பித்தார்.
அரசியல் சட்டம் 226-ஆம் பிரிவின்கீழ் மாவட்ட ஆட்சித் தலைவரின் ஆணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ரிட் மனு தாக்கல் செய்தார் என் தம்பி ஊராட்சித் தலைவர். ரிட் மனு எண். 20063/2015. கழக வழக்கறிஞர் தம்பி சுப்பாராஜ் பெரிதும் உதவியாக இயங்கினார்.
நீதியரசர் திரு. நாகமுத்து, நீதியரசர் முரளீதரன் அமர்வில், முன்னைய தீர்ப்பு களை மேற்கோள்காட்டி வழக்கறிஞர் அஜ்மல்கான் மிகச் சிறப்பான வாதங்களை முன்வைத்தார். அரசியல் சட்டம் தந்துள்ள அடிப்படை உரிமைகளுள் ஒன்றான பிரிவு 21-இன்படி மனித உயிருக்கும் உரிமைக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டியது அரசின் கடமை என்பதை ஆணித்தரமாகச் சொன்னார்.
அரசு வழக்கறிஞர் தனது வாதத்தில்,
“மனுதாரர் ரவிச்சந்திரனின் சகோதரர் வைகோ அரசியல் நோக்கத்துக்காகப் போராட்டம் நடத்தினார். ஏராளமானவர்களைத் திரட்டி வந்து கலவரம் செய்தார். ஏழு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் நொறுக்கப்பட்டன. ரௌடித்தனம் செய்தனர். போலீஸ்காரர்களைத் தாக்கினார்கள். அவர்கள் மீது கரிவலம் வந்த நல்லூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ள இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடையை மூடினால் மற்ற இடங்களிலும் இந்த நிலை ஏற்பட்டால் அரசாங்கத்துக்கு வருமானம் போய்விடும்.”
எனக் குறிப்பிட்டார். நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் தனது பிரமாண வாக்குமூலத்தில் “மனுதாரர் அவர் சகோதரர் வைகோவின் தாயாரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார்,” என்று குறிப்பிட்டு இருந்தார்.
தீர்ப்பு என்ன?
நீதியரசர் மாண்புமிகு நாகமுத்து அவர்களும் நீதியரசர் மாண்புமிகு முரளீதரன் அவர்களும் தந்த தீர்ப்பு புதிய வரலாறு படைத்து விட்டது. உள்ளாட்சி அமைப்புக்கு மணிமகுடம் கூட்டி விட்டது. தீர்ப்பின் சாராம்சம் பின்வருமாறு:
“மனுதாரர் மீதான கிரிமினல் வழக்கு விசாரணையில் இருப்பதால் எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை. ஆனால், மனுதாரர் சார்பில் வழக்கு உரைத்த வழக்குரைஞரின் வாதங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. ஊராட்சி மன்றம், ஊராட்சி மக்களின் உணர்வுகளை எண்ணங்களைப் எதிரொலிக்கும் அமைப்பு ஆகும். மக்களின் சிரமங்களை, துன்பங்களைக் கருதியே ஊராட்சி மன்றம் டாஸ்மாக் கடையை அகற்ற தீர்மானம் போட்டுள்ளது.
இந்த நீதிமன்றம் 2015 ஆகஸ்டு 13-இல் தந்த ஆணையின்படி கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கான வாய்ப்பைப் பரிசீலிக்குமாறுதான் கூறியது. ஊராட்சி மன்றம் தீர்மானம் போட அதிகாரம் இருக்கின்றதா? தீர்மானம் செல்லுமா? என்று கருத்துக் கேட்க வில்லை. ஆனால் நீதிமன்றம் கேட்ட கருத்தின் எல்லையை மீறி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆணை பிறப்பித்து உள்ளார். உள்ளாட்சித் தீர்மானத்தை கலெக்டர் ரத்து செய்தது செல்லாது.
பஞ்சாயத்துச் சட்ட விதிகளின் படி மாவட்ட ஆட்சித் தலைவர் தீர்மானத்தை ரத்து செய்வதாகக் கூறுவது அந்த விதி களுக்கு உட்படாதது.
உள்ளாட்சி சட்ட விதி 202 (1)(சி) இது பற்றி என்ன கூறுகின்றது? சம்பந்தப்பட்ட ஊராட்சித் தீர்மானம் உயிர் ஆபத்துகளை ஏற்படுத்துமானால், மக்கள் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுமானால் பெரும் கலகம் வரக் காரணமாக இருக்குமானால், உள்ளாட்சித் தீர்மானத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்து செய்யலாம். ஆனால், கலிங்கப்பட்டி ஊராட்சித் தீர்மானத்தின்படி அம்மாதிரி மக்கள் உயிருக்கு ஆபத்தோ கலகமோ ஏற்பட வாய்ப்பே இல்லை என்பதால், ஊராட்சித் தீர்மானத்தை ஆட்சித் தலைவர் ரத்து செய்தது செல்லாது.”
2015 ஆகஸ்டு இரண்டாம் தேதியில் இருந்தே கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடை திறக்கப்படாமல் மூடப்பட்டே இருக்கிறது. எனவே, கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடை எண் 10862 நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்று 2016 நவம்பர் 16 ஆம் நாளில் இந்த நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கின்றது.”
நீதியரசர்களுக்கு நானும் என் தம்பியும் கலிங்கப்பட்டி ஊராட்சி மக்களும் தலைவணங்கி நன்றி தெரிவிக்கின்றோம்.
தமிழ்நாடு அரசு தீர்ப்பைப் புரிந்து கொண்டு இருக்கும்; உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மாட்டார்கள் என்று எண்ணினேன். அதனால்தான் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் தாக்கல் செய்ய வில்லை.
உச்சநீதிமன்றம் ஒதுக்கித் தள்ளியது:-
ஆனால், தமிழ்நாடு அரசு இரகசியமான வேலையில் ஈடுபட்டது. கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. பிரபலமான சீனியர் வழக்கறிஞர் நாகேஷ் திரிவேதி அவர்கள் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் பாலாஜி, முத்துவேல், பழனி, குமார் ஆஜரானார்கள். எங்கே? உச்சநீதிமன்றத்தில். யாருடைய அமர்வில்? உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் ஜே.எஸ்.கேகர், நீதியரசர் டி.ஒய்.சந்திரசூட், நீதியரசர் சஞ்சய் கிசன் கௌல் (சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர்) அமர்வில். எந்தத் தேதியில் 2017 பிப்ரவரி 27 ஆம் தேதியன்று.
தமிழக அரசின் மேல்முறையீடு எண் 6054/2017.
சென்னை உயர்நீதிமன்றம் தன் அதிகார எல்லையை மீறி அரசாங்க அதிகாரத்தைக் கட்டுப்படுத்த முனைந்துள்ளது. டாஸ்மாக் கடையை மூடியதுபோல பல அமைப்புகளும் முயன்றால் அரசாங்கம் வருமானம் இழக்கும் என்பது உள்ளிட்ட பல வாதங்களை முன்வைத்த மேல் முறையீடு அது.
என்ன நடந்தது தெரியுமா?
தமிழ்நாட்டு அரசின் மூக்கை உடைத்தது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு.
ஆம்; விசாரணைக்கே எடுத்துக் கொள்ளாமல் அறிமுக நிலையிலேயே மனுவை டிஸ்மிஸ் செய்து தூக்கி எறிந்தது.
ஆகா? என்ன மகத்தான சாதனை! எனக்கு என்ன மகிழ்ச்சி தெரியுமா?
சாதித்து விட்டோம்:-
மதுரையில் தம்பி கௌரிசங்கர் இல்லத்தில் உணவு அருந்திவிட்டு, சற்று நேரம் தூங்கி ஓய்வு எடுக்கலாம் எனப் படுக்கையில் சாய்ந்தேன். என் அலைபேசி ஒலித்தது. மறுமுனையில் அவைத் தலைவர் அண்ணன் திருப்பூர் துரைசாமி அவர்களின் குதூகலம் தொனிக்கும் குரல், “கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை திறப்பதற்காகத் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டதாம்! தொலைக்காட்சியில் பிளாஸ் நியூஸ் ஓடுகிறது” என்றார்.
நான் ஆகாயத்தில் ஆனந்த அலைகளில் மிதந்தேன். ‘மிக இனிப்பான செய்தி சொன்னீர்கள் அண்ணா’ என்றேன்.
வாழ்க்கையில் பெரிதாக சாதித்து விட்டோம் நாங்கள். இல்லை எல்லாப் புகழும் பெருமையும் வீரத்தாய் மாரியம்மாள் அவர்களுக்கே!
அவர்தானே 2015 ஆகஸ்ட் 1 ஆம் நாள் அறப்போர்க்களம் அமைத்தார்; உண்ணாமல், நீர் பருகாமல், போராடினார்; அதனால் தானே மறுநாள் கலகம் ஏற்பட்டது; அந்தப் போராட்டத்தால்தானே உடல் நலம் பாழ்பட்டு உயிர் நீத்தார்; இல்லையேல் இன்னும் ஐந்தாண்டுகளாவது உயிரோடு இருந்திருப்பாரே?
கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்பட்டு விட்டது.
வீரத்தாய்க்கு வெண்கலச் சிலை:-
என் அன்புத் தாயார் மாரியம்மாள் மறைந்த பின் சென்னையில் அண்ணாச்சி ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் இல்லம் சென்றேன். ‘தம்பீ உன் தாய் ஒரு வீரத்தாய். கலிங்கப்பட்டியில் உள்ள மக்கள் அவருக்கு வெண்கலச் சிலை எழுப்ப வேண்டும்’ என்றார்.
இந்த செய்தியை நெல்லை மாவட்ட பொறுப்பாளர் தம்பி தி.மு.இராசேந்திரன் கவனத்துக்கும் கொண்டு போகச் சொன்னார்.
மது ஒழிப்பு வெற்றிப் பேரணி 21.03.2017 அன்று கலிங்கப்பட்டியில் நடந்தபோது, தம்பி திரு.ராஜேந்திரன் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் “வீரத்தாய்க்கு விழா எடுப்போம்; வெண்கலச் சிலை எழுப்புவோம்” என்று அறிவித்தார்.
கோடை வெயிலின் தாக்கம் தமிழர்களை வாட்டி வதைக்கின்றது. மக்கள் படும் அவதியைப் போக்க நம்மால் இயன்றதைச் செய்வோம்!
மறுமலர்ச்சி மோர், நீர் பந்தல் ஆங்காங்கு அமைத்து பகல் முழுக்க அதனைப் பராமரிக்கக் கண்மணிகள் தங்கள் நேரத்தை முழுமையாக ஒதுக்கிப் பணிகள் செய்ய வேண்டும்.
கடிதம் மிக நீண்டுவிட்டது. ஆற அமர சிந்தித்து எழுதுவதற்குச் சிறைக்குள் தானே நேரம் வாய்க்கின்றது?
எழுச்சி சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்!
பாசமுடன்,
வைகோ
சங்கொலி, 05.05.2017
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment