எங்கே போய் முடியுமோ?
திபெத்தியர்களின் மதகுரு தலாய்லாமாவை மதிக்கின்றேன். ஆனால், 1959 மார்ச் மாதம் அவரைத் திபெத்தில் இருந்து பாதுகாப்பாக இந்திய இராணுவ வீரர்கள் அழைத்து வந்ததால் ஏற்பட்ட கோபமும், சீனாவின் 1962 தாக்குதலுக்கு ஒரு காரணம் ஆயிற்று.
தற்போது சீன அரசு கடுமையான எதிர்ப்பைக் காட்டியபோதும் அருணாசலப் பிரதேசத்துக்குத் தலாய்லாமா செல்வதற்கு இந்திய அரசு ஏற்பாடு செய்தது. அருணாசலப் பிரதேசம் இந்திய நாட்டின் அங்கம்தான். ஆனால் செஞ்சீனம் அக்கிரமமாக அங்கே உரிமை கொண்டாடுகின்றது. தலாய்லாமா சென்று திரும்பிய பின், “அருணாசலப் பிரதேசத்தை தெற்கு திபெத்” என்று சீனா கூறியதுடன், அங்குள்ள இந்திய நாட்டின் நகரங்களுக்கு சீனப் பெயர்களைச் சூட்டி உள்ளது.
வடமேற்குப் பகுதியில் “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா கால் பதிக்கின்றது. காஷ்மீரின் கிழக்குப் பகுதியில் நம்மிடம் இருந்து கைப்பற்றிய இடத்தில் அக்சாய்சின் பகுதியில் அங்கே வலுவாக அமர்ந்ததுடன், காரகோரம் சாலையை ஆசாத் காஷ்மீரில் நீட்டிக்கின்றது. பாகிஸ்தான் -சீனா நட்புறவு எங்கே போய் முடியும் என்று கணக்கிட முடியாது.
இலங்கையில் இரண்டு நாடுகளுமே தடம் பதித்துவிட்டன. தெற்கே இந்தியாவுக்கு என்றுமே சிங்கள அரசு நட்பாக இருக்காது என்பதைச் சரியாகக் கணித்துத்தான், அன்றைய பிரதமர் இந்திராகாந்தி தமிழ் ஈழ ஆயுதப் போராளிகளுக்கு ஆதரவு தந்தார். ‘தனி ஈழம்’ அமைந்தால் இந்தியாவின் பூகோள அரசியல் நலன்களுக்குப் பாதுகாப்பாகவே அமையும். தமிழர்கள் தொப்புள்கொடி உறவுகள் அல்லவா? ஈழத்தமிழர்களைப் பூண்டோட அழிக்க முயன்ற சிங்கள அரசுக்கு இந்தியா துணைபோனது மட்டும் அன்றி, இனக்கொலை கூட்டுக் குற்றவாளியாகி இருக்கின்றது.
வடகொரிய சர்வாதிகாரத் தலைமையின் அணுஆயுத மிரட்டல் எதில் போய் முடியும்? இவற்றையெல்லாம் குறித்து உலக நாடுகளில் ஏற்பட்டு வரும் சூழலைப் பற்றி அடுத்த கடிதத்தில் விரிவாக எழுதலாம் என எண்ணுகிறேன்.
வழிகாட்டும் கலிங்கப்பட்டி
‘கலிங்கப்பட்டி ஊராட்சி மது ஒழிப்பில் தமிழ்நாட்டுக்கே வழிகாட்டியாயிற்று’ என்று குறிப்பிட்டேன் அல்லவா?
ஒரு மாநில அரசின் முடிவை எதிர்த்து ஒரு உள்ளாட்சியின் தீர்மானம் வெற்றி பெறுமா? என்பதுதான் முக்கியமான கேள்வி.
இந்திய அரசியல் சட்டத்தின் நான்காம் பகுதியில் அரசின் கொள்கையை ஆணைப் படுத்தும் நெறிகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் பலமுறை கருத்துகள் நீதிபதிகளால் வரையறுக்கப்பட்டுள்ளது.
நெருக்கடி நிலை காலத்தில் “அடிப்படை உரிமைகளைவிட அரசுக் கொள்கைகளை ஆணைப்படுத்தும் நெறிகளுக்கு அதிகாரம்” என்று கூட அரசுத் தரப்பு கூறியதோடு, 42 ஆவது அரசியல் சட்ட திருத்தத்தையும் நிறைவேற்றியது. பின்னர் ஜனதா ஆட்சியில் 42 ஆவது திருத்த விதிகள் ரத்தாயின.
அரசியல் சட்டப் பிரிவு 47 மதுவை ஒழிப்பது அரசின் கடமை எனச் சொல்கின்றது.
கலிங்கப்பட்டி ஊராட்சியில் அனைத்து சமூக மக்களும் வாழ்ந்து வருகின்றார்கள். ஒற்றுமை நிலவுகின்றது. இந்நிலையில், கலிங்கப்பட்டியில் அரசு மதுபானக் கடை அமைக்கத் திட்டமிட்டதை அறிந்ததால், ஊராட்சிமன்றத் தலைவர் திரு வை.ரவிச்சந்திரன் அவர்கள், “கலிங்கப்பட்டி ஊராட்சியில் மதுபானக் கடை அரசு அமைக்கக் கூடாது” என்று 2002 ஆம் ஆண்டு மன்றக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
இதனைப் புறக்கணித்துவிட்டு, 2003 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் நாளன்று மதுவிற்பனைக் கடையைத் தமிழக அரசு அமைத்தது. கூட்டுறவு பால் பண்ணை கட்டடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அதனை அகற்ற வேண்டும் என்று மீண்டும் கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதியன்று அதே மாநில அரசு நெடுஞ்சாலையின் அடுத்த தனியார் கட்டடத்தில் டாஸ்மாக் கடை மாற்றப்பட்டது. இந்த டாஸ்மாக் கடை வழியாகத்தான் கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாணவ -மாணவி கள் செல்ல வேண்டும்.
நெஞ்சில் ஒரு முள்:-
‘தமிழகம் எங்கும் நடந்தே சென்று டாஸ்மாக் கடைகளை அகற்றச் சொல்கின்றோம். ஆனால், நமது சொந்த ஊரிலேயே அகற்றவில்லையே? என்ற எண்ணம் என் இதயத்தில் முள்ளாக உறுத்திக் கொண்டே இருந்தது.
2014 ஆம் ஆண்டு ஒரு நாள் பிற்பகல் 3 மணிக்கு அந்த வழியாக காரில் சென்று கொண்டு இருந்தேன். சீருடை அணிந்த பள்ளி மாணவன் டாஸ்மாக் கடையில் மதுப்புட்டி வாங்கியது கண்ணில் பட்டது. சற்றுதூரம் சென்றுவிட்ட காரை நிறுத்திவிட்டு, டாஸ்மாக் கடைக்கு விரைந்தேன். அதற்குள் அந்த மாணவன் சைக்கிளில் ஏறிப் பறந்து விட்டான்.
டாஸ்மாக் ஊழியர்களிடம், மாணவன் எதற்காக இங்கு வந்தான்? எனக் கேட்டேன். ‘சில்லறை மாற்ற வந்தான்’ என்றனர்.
ஏன் பொய் சொல்கிறீர்கள்? மாணவர்களுக்கு நீங்கள் மது பாட்டில் விற்றால் நடப்பது வேறு என எச்சரித்துவிட்டு மனச் சுமையுடன் வீடு சென்றேன். கவலையாகவே இருந்தது.
மாணவர்கள் முன்னேற்றத்திற்காக...
கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஆண்டுதோறும் பல உதவிகள் செய்கிறேன். உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளி ஆக்கினேன். இறுதி வகுப்புத் தேர்வு மையமாக திருவேங்கடம் அரசு மேல்நிலைப் பள்ளி இருந்தது. விதிவிலக்குப் பெற்று கலிங்கப்பட்டி பள்ளியையும் தேர்வு மையம் ஆக்கினேன். பத்தாம் வகுப்புக்கும் இங்கேயே தேர்வு மையம் ஏற்படக் காரணம் ஆனேன். மாணவர்கள் அமர்வதற்கு மேசை நாற்காலிகள் இல்லை. என் சொந்த ஏற்பாட்டில் செய்து கொடுத்தேன். நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்களாக இருந்த என் நண்பர்களின் நிதி பெற்று, சுற்றுச் சுவர், புதிய வகுப்பறைக் கட்டடங்கள், கலை மண்டபம், அமைத்துக் கொடுத்தேன். பள்ளி வளாகத்துக்குள் வேப்பமரக் கன்றுகள் ஊன்றி இன்று நிழல்தரும் மரங்களாக ஆகிவிட்டன.
ஊராட்சித் தலைவர் தம்பி ரவியின் மூலம் நபார்டு நிறுவன மேலதிகாரிகளை அணுகி ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய கட்டடங்கள், ரசாயன ஆய்வுக் கூடம் அமைக்கக் காரணம் ஆனேன்.
ஆண்டுதோறும் பள்ளி ஆண்டு விழாவை தலைமை ஆசிரியர், ஆசிரியப் பெருமக்களும் சிறப்பாக நடத்துகின்றனர். தவறாமல் கலந்துகொள்கின்றேன். பள்ளி நாட்களில் 100 விழுக்காடு தவறாது பள்ளிக்கு வந்த மாணவ - மாணவியர்கள் அனைவருக்கும் பரிசுகள், ஒவ்வொரு வகுப்பிலும் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு அதிக விலை மதிப்புள்ள பரிசுகள், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றோர் அனைவருக்கும் தக்க பரிசுகள் என் சொந்தப் பணத்தில் தருகின்றேன். இறுதித் தேர்வில், மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளுள் இரண்டு ஆண்டுகளாக முதல் இடம், இரண்டாவது இடம் பெற்றது எங்கள் ஊர்ப் பள்ளி.
மாணவிகளுக்குப் பயிற்சி பெற ஏழு தையல் எந்திரங்கள் ஏற்பாடு செய்து கொடுத்தேன். அரசுப் பள்ளியிலேயே முதன் முதலாகக் (கம்ப்யூட்டர்) கணினி, நகல் எடுக்கும் பொறி (Xeros Machine) ஏற்படுத்திக் கொடுத்தேன்.
ஆண்டு விழாவில் கலை நிகழ்ச்சிகள் அவ்வளவு அற்புதமாக இருக்கும். அரசியல் துளியும் இன்றி உரையாற்றுவேன். இந்தப் பள்ளி மாணவ மாணவிகள் ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்வதில் எனக்கு நிம்மதி. அதைக் கெடுக்கின்ற வகையில் அமைந்த பிசாசுக் கடையான டாஸ்மாக்கை அகற்றத் தருணம் பார்த்துக் கொண்டு இருந்தேன். 2015 தை பொங்கல் விழாவில் ஆண்டு தோறும் நான் ஏற்பாடு செய்து நடத்தும் திருவள்ளுவர் கழக விழாவில் ஊர் மக்கள் டாஸ்மாக் கடை அகற்றுவது குறித்து ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று பேசினேன். கலிங்கப்பட்டி திருவள்ளுவர் கழகத்துக்கு அறுபதுகளில் நான் செயலாளர். தற்போது தலைவர்.
டாஸ்மாக் விவகாரம் என்ன?
சரி, டாஸ்மாக் விவகாரத்துக்கு வருவோம். 2015 ஜூலை 30 ஆம் நாள் இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் மாமனிதர் அப்துல்கலாம் அவர்களின் இறுதிச் சடங்குகள் ராமேஸ்வரத்தில் நடந்த போது, அங்கு வந்திருந்த காந்தியவாதி சசிப்பெருமாள் அவர்கள் மறுநாள் காலை குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக் கடையில் அலைபேசி கோபுரத்தின் உச்சியில் ஏறி நின்றுகொண்டு டாஸ்மாக் கடையை அகற்ற அறப்போர் நடத்தியதில் சாகடிக்கப் பட்டார் என்பதை ஏடுகள், ஊடகங்களுக்கு மருத்துவமனையின் பிண அறை வாசலில் நின்று குற்றம் சாட்டினேன். அன்று இரவே சென்னைக்கு வந்து விட்டேன்.
ஆகஸ்டு ஒன்றாம் நாள் காலையில் திருவள்ளூர் மாவட்டக் கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றேன். நண்பகல் 12 மணி அளவில் ஆகஸ்டு 4 ஆம் நாள் சசிபெருமாள் உயிர் நீத்ததைக் கருதி தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சியினர் ஒப்புதலுடன் அறிக்கை வெளியிட்டேன்.
பகல் 2 மணி அளவில் எனக்கு அதிர்ச்சி தரும் தகவல் கிடைத்தது. ஆகஸ்டு 1ஆம் தேதி காலை 8 மணி முதல் எனது அன்புத் தாயார் மாரியம்மாள் அவர்கள் கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிராமத்துத் தாய்மார்கள் பொது மக்களுடன் உண்ணாநிலை அறப்போர் நடத்துகின்றார் என்ற செய்தி தான் அது.
முன்பு போல் வேகமாக நடக்க முடியாததால், நாற்காலியில் அமர்ந்து கொண்டு, அதை மற்றவர்கள் தூக்கிக் கொண்டு செல்ல, அறப்போர்க் களத்துக்குத் தலைமை தாங்கியுள்ளார்.
அதைக் கேட்டு என் கவலை அதிகமாயிற்று. நான் நெஞ்சில் பூஜிக்கும் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் இளைய புதல்வன் இளந்தளிர் பாலச்சந்திரன் சிங்கள இராணுவத்தினரால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நம் நெஞ்சை உலுக்கியது. இப் படுகொலையைக் கண்டித்து நாம் அறப்போர் தொடுத்தோம். விடுதலைப் புலிகள் என்னை மரணத்தின் பிடியில் இருந்து காப்பாற்றியதை எண்ணியெண்ணி, காயப்பட்ட புலிகளை எங்கள் வீட்டில் பராமரித்து உணவு வழங்கியவர் அல்லவா என் தாயார்?
பொடா கைதியாக நான் வேலூர் சிறையில் இருந்தபோது, கலிங்கப்பட்டியில் என் வீட்டைக் காவல்துறையினர் சோதனையிட்டனர். என் இல்லத்தின் நடுக்கூடத்தில் இருந்த தலைவர் பிரபாகரன் படத்தைக் காவலர்கள் அகற்றியபோது “அதுவும் என் பிள்ளைதான்; அப்படத்தை அகற்றாதீர்கள்” என வாதிட்ட வீராங்கனை ஆயிற்றே என் அன்னை மாரியம்மாள்!
எனவே எனக்கோ, தம்பி ரவிக்கோ தெரிவிக்காமல் ஊர் மக்களை, குறிப்பாக தாய்மார்களைத் திரட்டி பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து உண்ணா நிலை அறப்போராட்டத்தை கலிங்கப் பட்டியில் நடத்தினார்கள். அன்று காலை 8 மணிக்கு அமர்ந்தவர், முன்னிரவு 7 மணி வரை அறப்போர் நடத்தினாராம்.
மனக்கலக்கம்:-
உண்ணாநிலை அறப்போரில் பங்கேற்றவர்கள் தண்ணீர் அருந்தலாம். ஆனால் நான் உண்ணாநிலை அறப்போரில் துளிநீரும் பருக மாட்டேன். இதனைத் தெரிந்த என் அன்புத் தாயாரும், “ஒரு சொட்டு தண்ணீர் குடிக்க மாட்டார்கள். அதன் விளைவு விபரீதம் ஆகியது. தனது 94 வயதில், சர்க்கரை நோயும், இரத்த அழுத்தமும் இருக்கும் நிலையில் இந்தப் போராட்டம் நடத்தியதால் அவர் உடல் நலிந்தது. சென்னைக்கு அழைத்து வந்தேன். மூன்றாம் நாள் இரவு 11 மணி அளவில் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய நான் என் அன்னையின் அறையை எட்டிப் பார்த்தேன். பேச முடியாமல் என்னை சைகையால் அழைத்தார்கள். தனது முடிவு நேரம் நெருங்கி விட்டது என எண்ணினார் போலும். இலேசாக வாந்தி எடுத்தார்கள். என் அங்க மெல்லாம் பதறி நானும் என் துணைவியாரும் காரில் தூக்கிக் கொண்டு போய் பின் இருக்கையில் படுக்க வைத்து அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்தோம். மருத்துவர்கள் தக்க சிகிச்சை தந்ததால் மரணத்தின் பிடியிலிருந்து தப்பிவிட்டார். இரண்டாம் நாளே குதூகலமாய் பேசினார். மருத்துவப் பெண்களிடம் பரிவுடன் பேசினார். “இனிமேல் இத்தகைய விஷப் பரீட்சையில் உங்கள் அன்னை ஈடுபடக் கூடாது. உண்ணாவிரதம் இருக்கக் கூடாது,” என்று மருத்துவர்கள் கண்டிப்பாகச் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. ஆறு ஆண்டுகள் கழிந்துவிட்டன. இப்படி ஒரு ஆபத்தைத் தேடிக் கொண்டாரே என்ற கவலையில் நான் கலிங்கப்பட்டி போய் சேரும்போது இரவு 9 மணி ஆகிவிட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். என் அன்னையிடம் நான் கோபிக்கவில்லை. ஆறுதலாகப் பேசி வீட்டிற்கு அழைத்துச் சென்றோம்.
கலிங்கப்பட்டிப் போர்க்களம்:-
ஆகஸ்ட் 2 விடிந்தது, கலவர நாளாக!
காலை 9 மணிக்கு கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. முந்நூறுக்கும் அதிகமாக போலீசார் குவிக்கப்பட்டனர். ஊர் மக்கள் ஆவேசத்துடன் என் இல்ல முற்றத்தில் திரண்டனர். ‘கடையை மூடா விட்டால் நமக்கு மரியாதையே இல்லை’ எனக் குமுறினார்கள். நான் அனைத்தையும் தீர்க்கமாக யோசனை செய்தேன்.
கடையை மூட முயலும்போது காவல்துறை தாக்குதல் நடத்தும்; நமது வாலிபர்கள் எதிர்கொள்வர்; பின்வாங்கி ஓடவும் முடியாது; உயிர்ச் சேதம் ஏற்படலாம். ஆனால் இக்கடையை மூடாவிட்டால், “கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்தைப் பிளந்து வைகுந்தத்தைக் காட்டுவானாம் - சொந்த ஊரிலேயே டாஸ்மாக் கடையை மூட முடியவில்லை. தமிழ்நாட்டுக்கே போதிக்கின்றானாம்!” என்று நம்மை வெறுப்பவர்கள் ஏளனம் செய்வது பற்றிக் கவலை இல்லை; என் மனசாட்சிக்கே அமைதி இருக்காதே?
நண்பகலில் கழக மாவட்டச் செயலாளர்களையும், தொண்டர் படையினரையும் கலிங்கப்பட்டி வாலிபர்களையும் அழைத்து என் திட்டத்தைச் சொன்னேன். ‘வயது முதிர்ந்தோரைத் தவிர்த்து விட வேண்டும். தாய்மார்கள், பிள்ளைகளை முன்னால் நிறுத்தக் கூடாது. பிரச்சார வாகனத்தின் மீது நின்று ஒலி பெருக்கியில் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். பின்னர் நான் முன்னால் செல்ல, இளைஞர்கள் என்னுடன் வாருங்கள். டாஸ்மாக் கடையை முற்றுகை இடுவோம்’ என்று திட்டமிட்டோம்.
பிற்பகல் 3 மணிக்கு என் தாயாரின் காலில் விழுந்து ஆசிபெற்றபோது பதட்டத்துடன், “பெரும் கலகம் வருமே அப்பா? எனக்குக் கவலையாக இருக்கின்றது!” என்றார்கள்.
“நீங்கள் அங்கு வர முயற்சிக்க வேண்டாம். தம்பி ரவி வீட்டிலேயே இருக்கட்டும். நான் மட்டும் செல்கிறேன். வருவது வரட்டும்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டேன்.
ஆயிரக்கணக்கில் திரண்டனர். பிரச்சார வேன் மீது நின்றவாறு, “காவல்துறை நண்பர்களே! நீங்கள் எங்கள் எதிரிகள் அல்ல. உங்கள் குடும்பத்தினருக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் சேர்த்துத்தான் போராடுகிறோம்” என்று இருபது நிமிடங்கள் உருக்கமாக உரை ஆற்றி னேன்.
இதற்குள், டாஸ்மாக் கடையின் இரும்பு ஷட்டரை இழுத்து மூடிப் பெரிய பெரிய பூட்டுகளைப் போட்டுப் பூட்டி விட்டார்கள் என்பது நெருங்கியபோதுதான் தெரிந்தது. வேனை விட்டு இறங்கினேன்.
‘டாஸ்மாக் கடையை அகற்று! மதுவிலக்கே எங்கள் இலக்கு! போராட்டம், இது போராட்டம்! தமிழக மக்களைக் காக்கும் போராட்டம்! மாணவரைக் காக்கும் போராட்டம்! தாய்மார்களைக் காக்கும் போராட்டம்! அஞ்ச மாட்டோம்; அஞ்ச மாட்டோம்! அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டோம்!”
என இடிமுழக்கங்களை எழுப்பியவாறு டாஸ்மாக் கடையை நெருங்கினோம். காவலர்கள் அரண் அமைத்து நின்றனர். அவர்களை நெருங்கியபோது லத்திக் கம்புகளைச் சுழற்றினார்கள். எங்கள் மீது தாக்குதல். என் மீது அடி விழக்கூடாது என்று இளைஞர்கள் என்னைச் சுற்றிலும் நின்று தங்கள் கைகளால் என்னை மறைத்துக்கொண்டு, விழுந்த அடிகளை அவர்கள் தாங்கிக் கொண்டனர். இதில் தான் நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம் கை ஒடிந்தது. “வீட்டிலேயே இரு” என்று ஆணையிட்டு வந்தேனல்லவா என் தம்பி ரவியை. அவன் எப்படி வீட்டில் இருப்பான்? எனக்கு முன்னே அங்கிருந்தான். அவனுக்குத் தான் தோளிலும் தலையிலும் அடி.
தொலைவில் இருந்த தாய்மார்கள் நான் அடிபட்டு விட்டேன் என்று எண்ணிப் பலத்த கூக்குரல் எழுப்பினார்கள். நமது வீர வாலிபர்கள் போலீசின் லத்திக் கம்புகளைச் சட்டை செய்யவில்லை. குண்டுகள் பாய்ந்து இருந்தாலும் பின் வாங்கியிருக்க மாட்டார்கள். டாஸ்மாக் கடை பூட்டுகளைப் பெரிய கல்லைப் போட்டு நிமிட நேரத்தில் உடைத்தார்கள். வீரர்களின் வீர ஆவேசம் கண்டு போலீசார் பின்வாங்கினார்கள். மகளிர் காவலர்களைப் பத்திரமாக அனுப்பி வைக்கச் செய்தேன். டாஸ்மாக் கடையுள் நுழைந்தனர். ஆயிரக்கணக்கான மது பாட்டில்களைச் சாலையில் போட்டு உடைத்தார்கள். மது வெள்ளமாக ஓடிற்று. எல்லாம் பத்து நிமிடத்தில் முடிந்து விட்டது.
காவல்துறை தடிகளைச் சுழற்றும் முன்பே கழகக் கண்மணி கணபதிபட்டி ராமலிங்கம் அலைபேசி கோபுரத்தின் உச்சியில் போய் நின்று கொண்டு கீழே குதிப்பேன் என்றான். காவல்துறையின் ஒரு பகுதியினர் கோபுரத்தை நோக்கி ஓடினர். அதேநேரம் இங்கே லத்தி சார்ஜ். “தம்பி, கீழே இறங்குகிறாயா இல்லையா?” என பலத்த சப்தம் போட்டேன். கீழே வந்தான். இப்போது அவன் பெயரே ‘டவர் ராமலிங்கம்’ என்றாகி விட்டது.
காவல்துறையினர் 300 அடி தூரத்தில் நின்றனர். அறப்போராட்டக்காரர்களைச் சாலையில் அமரச் சொல்லி, மீண்டும் பிரச்சார வேனின் மீது ஏறி ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டு இருக்கும் போதே நீலச்சட்டை அணிந்து இருந்த ஓர் இளைஞன் காவல்துறையை நோக்கிக் கல் வீசுவதைக் கண்டு, “அடே, அதை நிறுத்து. தோழர்களே! நீலச்சட்டைக்காரனைப் பிடித்து என்னிடம் இழுத்து வாருங்கள்” என்றேன். அவன் ஓடியே போய்விட்டான். அமைதி நிலவியது. திடீரென்று போலீசார் துப்பாக்கிகளை ஏந்தியவாறு எங்களை நோக்கி வந்தார்கள். வரும்போதே கண்ணீர்புகைக் குண்டுகளை என்னை நோக்கி வீசினார்கள்.
நான் பிரச்சார வேனின் மீது ஏறி தனியாக நிற்கின்றேன். ஒரு காவல்துறை அதிகாரி என்னை சுட்டிக்காட்டி, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசச் சொல்கின்றார். பாய்ந்து பாய்ந்து வந்து என்னை நோக்கியே வீசுகிறார்கள்.
காவல் துறையின் திட்டம் என்ன?
நான் அஞ்சவில்லை. பிரச்சார வேனுக்குள் இறங்கி பதுங்கிக் கொள்ளவில்லை. வீசப்பட்ட குண்டுகளில் இரண்டு குண்டுகள் வேனுக்கு முன்னால் நின்ற என் தம்பி ரவிச்சந்திரன் தொடையிலும் ஆடுசதையிலும் விழுந்த காயத் தழும்புகள் இப்போதும் இருக்கின்றன. அடுத்து நடந்ததுதான் போலீஸ் மேலிடத்தின் அராஜகக் கட்டளையின் அரங்கேற்றம். வானத்தைப் பார்த்து மூன்று முறை சுட்டார்கள்.
நான் சபாநாயகர் செல்லப்பாண்டியன் அவர்களிடம், அண்ணாச்சி இரத்தினவேல் பாண்டியனிடம் ஜூனியர் வக்கீலாக இருந்தவன் அல்லவா? போலீஸ் நடைமுறை எனக்கு அத்துப்படி. “நாங்கள் லத்திசார்ஜ் செய்தோம்; கூட்டம் கலையவில்லை. கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினோம்; ஆர்ப்பாட்டக்காரர்கள் ஓடவில்லை. ஆகாயத்தைப் பார்த்து மூன்று முறை எச்சரிக்கை வேட்டு எழுப்பினோம்; போராட்டக்காரர்கள் பின்வாங்க வில்லை. சட்டம் ஒழுங்கைக் காக்க வேறுவழியின்றி துப்பாக்கிப் பிரயோகம் செய்தோம்; அதனால் உயிர்ச் சேதம் தவிர்க்க இயலாதது ஆயிற்று என்று சொல்லி விடுவார்கள்.
ஆகவே நம்மை துப்பாக்கியால் சுடத் தயாராகி விட்டார்கள். இனி சுடுவார்கள் என உணர்ந்தேன். என் உறுதி கூடிற்று. ஆவேசமானேன்.
வன்னிக்காட்டின் ஒரு பகுதியில் பேசாலை அருகில், சாலைத் தொடுவாய் கடற்கரை மணலில் என்னை நோக்கி இந்திய இராணுவத்தின் குண்டுகள் பாய்ந்ததும், ஒருகணம் என் மனைவி பிள்ளைகளை மனக்கண்ணில் நிறுத்தியதும், வேதனை, வலி இன்றி நொடியில் என் உயிர் போய்விட வேண்டும் என்று என் மனம் ஏங்கித் துடித்ததும், விடுதலைப்புலிகள் என் உயிர்காத்து காட்டுக்குள் அழைத்துச் சென்றதும் நினைவுக்கு வந்தது.
அன்புச் சகோதரர் வீரபாண்டியன் கடந்த இரண்டு ஆண்டுகளாக “தமிழ் ஈழப் போரில் உங்கள் பங்களிப்பை நூலாக்க வேண்டும். உண்மைகள் உலகுக்குத் தெரிய வேண்டும். எழுதுங்கள்,” என்று வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார்.
எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக் குள்ளும் இருக்கின்றது. அதற்கு உரிய வேளை வரும்; எழுதுவேன். கலிங்கப்பட்டி ஆகஸ்ட் 2 அறப்போர்க்களத்தை இச் சிறைவாசக் கடிதங்களில் சரியாகப் பதிவு செய்துவிட வேண்டும் என்றுதான் விரிவாக எழுதுகின்றேன்.
‘துப்பாக்கிகள் சீறட்டும்; நீ சரியான ஆண் மகன் என்றால் சுடு’ என்று சட்டைப் பொத்தான்களை அகற்றி மார்பைக் காட்டினேன்.
பாய்ந்து சென்ற இரண்டு காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர் துப்பாக்கிப் பிரயோகத்தை. அப்போது காவல் துறை DIG (தற்போது IG) முருகன் அவர்கள்தான்.
இந்த நேரத்தில் நெல்லை காவல்துறை கண்காணிப்பாளர் விக்கிரமன் அதிரடிப் படையுடன் ஆவேசமாக எனது பிரச்சார வேனை நோக்கி வந்தார். கூட்டத்தைக் கலைந்து செல்லுமாறு மிரட்டினார்.
“ஐயாவுக்கு ராபர்ட் கிளைவ் என்று நினைப்பு. இந்த ஜம்பம் எல்லாம் எங்களிடம் பலிக்காது. போலீசைப் பின்வாங்கச் சொல். என்னைச் சுட்டுக் கொல்ல முயன்றதே காவல்துறை?” என்று கூறினேன்.
இந்த நேரம் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திரு. திருமாவளவன் வந்தார்; என்னைச் சமாதானப்படுத்த முயன்றார். “திருமா! இதெல்லாம் உங்களுக்குத் தெரியாது. என் பாணியில் சமாளிப்பேன். நீங்கள் என் வீட்டுக்குப் போய் என் அன்னையைப் பாருங்கள்,” என்று அனுப்பி வைத்தேன். டிஐஜி முருகன் என்னிடம் வந்தார். “காவல்துறையை முதலில் வெளியேற்றி விடுகிறோம்; ஊர் மக்களைப் போகச் சொல்லுங்கள்” என்றார். அதன்படியே நடந்தது.
தொடரும்...
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment