Tuesday, May 16, 2017

சிறை சென்றது ஏன்? வைகோ கடிதம்-5, போர்க்களத்தில் பூத்த மனிதநேயம்! பாகிஸ்தான் நடத்திய மாபாதகம், பாகம்-2!

புறநானூற்று உணவு வகைகள்:-

பண்டைத் தமிழகத்து வளம், மருத நிலச் செழுமை, குறிஞ்சியில், முல்லையில் வேட்டையாடப்பட்ட விலங்குகள். நெய்தலில் கிடைத்த மீன்கள், ஆயமகளிர் தரும் தயிர்; அதில் கிடைக்கும் நெய், செந்நெல் அரிசி, வரகரிசி, தேன், பசும்பால் இவற்றையெல்லாம் விதவிதமாகச் சமைத்து விருந்து படைத்து உண்டு மகிழ்ந்த தமிழர்களின் வாழ்வுச் சிறப்பை எண்ணினால் ஏக்கப் பெருமூச்சே மேலிடுகிறது. புது நெல்லின் வெண் சோற்றுடன் வாளை மீனை வகையாகச் சமைத்து உண்கின்றனர். அயிரை மீன் குழம்பு வைத்து சோற்றுருண்டைகளைச் சுவைக்கின்றனர். முள்ளிப்பூ மாலை சூடிய பரதவ மகளிர் பனை நுங்கின் நீரும், கருப்பஞ்சாறும் இளநீருடன் கலந்து உண்டு, பின் கடல் நீரில் நீந்தி ஆடி மகிழ்வர். புன்செய் வரகு தானியத்தைப் பால் பெய்து சமைத்து, தேனுடன் கலந்து, கொழுத்த முயலின் சூடான இறைச்சியைச் சேர்த்து உண்பர். காட்டுவழி வேட்டையாடும் வேடன், மானின் தசையை வட்டிலிலே கொண்டு வந்து உழவர் வீட்டில் கொடுப்பான். ஆயமகளிர் பானையிலே தயிரைக் கொண்டு வந்து தருவர். வெண்ணிற அரிசி தரும் நெல்லைப் பெண்கள் கொண்டு வருவர். ஆயமகளுக்கும் வேட்டுவனுக்கும் நெல்லை முகந்து தருவர். அங்கு கூடும் விருந்தினருக்கும் படைவீரர்களுக்கும் அற்புதமான பிரியாணி தருகிறார்கள். நான் நண்பகல் 1 மணிக்கு எழுதுகிறேன். ‘சோறும் சாம்பாரும் ஒரு கூட்டும்’ காத்திருக்கின்றன. புறநானூற்று பாட்டைப் படிக்கும்போதே நாவில் எச்சில் ஊறுகிறது.

மெல்லிய அரிசியைப் பக்குவமாக பொங்கும்போதே இறைச்சித் துண்டுகளை அத்துடன் சேர்த்துப் பொங்குகின்றனர். அது எப்படி இருக்கிறது தெரியுமா? நமது மங்கல மங்கையர் மாலை தொடுக்கும்போது பூ மொட்டுக்களுக்கிடையே தளிர் இலைகளை ஆங்காங்கு வைத்து மாலையாகக் கட்டுவர். அதுபோல அரிசிச் சோற்றில் இறைச்சித் துண்டுகள் கலந்துள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் நம் முன்னோர் நாகரிகத்தில் எவ்வளவு உயர்ந்துள்ளனர். பச்சை மாமிசத்தையும் பச்சைக் காய்கறிகளையும் உலகின் பல பாகங்களில் மக்கள் உண்டு வாழ்ந்தபோது எவ்வளவு உன்னதமான வாழ்வை தமிழர்கள் நடத்தியுள்ளனர் என்பதை எண்ணும்போதே எவ்வளவு பெருமையாக உள்ளது.

“புலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்துகண் டன்ன
ஊன்சோற்ற மலை பான் கடும்பு அருத்தும்” - புறநானூறு 33

இவ்வளவு போதும். இனி நான் கூற வந்த பிரச்சினைக்கு வருவோம். யுத்தகளத்தில் படைக்கலன்கள் பாய்வதால் மரணமும் ஒரு தரப்புத் தோல்வியும், பிரிதொரு தரப்பு வெற்றியும் ஏற்படுவது உண்டு. நான் சமர்க்களங்களைப் பற்றி காவியங்களிலும், இதிகாசங்களிலும், வரலாற்று நூல்களிலும் மிகவும் விரும்பிப் படிப்பவன் மட்டும் அல்ல; அந்தக் களங்களிலேயே மானசீகமாக உலவுகின்றவன்.

செருக்களத்தில் கொல்லப்பட்ட பகைவனின் உடலைச் சிதைக்கும் கொடூரம் வரலாறு நெடுகிலும் நடந்தது உண்டு. ஆனால், மனிதநேயத்துடன் வீரத்துடன் பொருது வீழ்ந்த பகைவனின் நெஞ்சுரத்தை வியந்து அவனது உயிரற்ற சடலத்தை முறையாக கௌரவித்து அடக்கம் செய்விக்கும் மனிதநேயமும் உண்டு.

இலியட் காவியம்:-

மைசூர்ப்புலி என வரலாறு போற்றும் மாவீரன் திப்புசுல்தான் போர்க்களத்தில் கொல்லப்பட்ட ஆங்கிலேய வெள்ளைப் படையினருக்குக் கல்லறைகள் கட்டுவித்தான். என் மனம் கவர்ந்த வீர காவியமான கிரேக்கத்து ஹோமர் தீட்டிய ‘இலியட்’ இதுபோன்ற ஒரு அற்புதக் காட்சியைச் சித்தரிக்கிறது.

பழமையான நாகரிகங்களில் ஒன்றுதான் கிரேக்க நாகரிகம். கிரேக்க மகாகவிஞன் ஹோமரின் காலத்துக்கு முன்னதாகவே படிப்பறிவுள்ளவர்களாகக் கிரேக்கர்கள் வாழ்ந்தனர். அவர்களின் தெய்வ வழிபாடு இறை நம்பிக்கை அவர்களுக்குள் நிகழ்ந்த யுத்தங்களுள் மிகவும் போற்றப்படுவது டிராய் யுத்தம் (Trojan War). இது நிகழ்ந்த காலம் கி.மு. 1334 என்றும், ஹெரோடோடஸ் கருத்துப்படி கி.மு. 1250-ஆம் ஆண்டு என்றும் கூறப்படுகிறது. பகுத்தறிவுக்கு ஒவ்வாத தேவதைகள் பற்றிய செய்திகள் இருப்பினும் டிராய் யுத்தம் அவர்களின் வரலாற்று நிகழ்வாகவே கருதப்படுகிறது. ஆசியா மைனரின் வடமேற்கு முனையில் அமைந்து இருந்தது டிராய் நகரம். எதிரிகள் ஊடுருவ முடியாத பலத்த அரண்களைக் கொண்ட கோட்டை அரண்களின் உள் அமைப்புக்களிலிருந்து குறிதவறாமல் கூர்மையான பாணங்களை வில்லில் தொடுத்துத் தாக்கும் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்கள் டிராய் வீரர்கள் - டிரோஜன்கள். டிராய் மன்னனாக பிரியம் திகழ்ந்தான். அவனது புதல்வர்களில் பெருவீரன் ஹெக்டர். இளைய மகன் எழில்மிக்க பாரிஸ் என்பான். ஸ்பார்டா நகர நாட்டிற்கு விருந்தினர்களாக இளவரசர்கள் ஹெக்டரும் பாரிசும் செல்கின்றனர். ஸ்பார்டாவின் மன்னன் மெனியலாஸ். அவன் மனைவிதான் பேரழகி ஹெலன். மெனியலாசின் அண்ணன் அகமென்னான், மைகினாய் நாட்டு அரசன். மூர்க்கமானவன். கிரேக்க அரசர்களில் தானே தலைவன் என தம்பட்டம் அடிப்பவன். பேரழகி ஹெலன் மீது மையல் கொள்கிறான் பாரிஸ். அவளும் அவன் மீது காதல் கொள்கிறாள். இரகசியமாக ஹெலனைக் கொண்டுபோய் விடுகிறான் கடல் மார்க்கத்தில் டிராய் நகரத்துக்கு. ஹெக்டர் தடுத்தும் பாரிஸ் கேட்கவில்லை. ஹெலனை மீட்க வேண்டும் என அகமென்னன் கிரேக்க அரசர்களின் படைகளைத் திரட்டுகிறான். ஆயிரம் போர்க் கப்பல்கள் ‘டிராய்’ தீவு நகரை முற்றுகையிட்டு அழிக்கப் புறப்படுகின்றன.

It is the face that launched a thousand ships. ‘இந்த அழகு முகம்தானா ஆயிரம் போர்க் கப்பல்களை ஏவியது’ என்பர். இலியட் காவியம் 15603 வரிகளைக் கொண்ட கவிதைக் காவியம். 24 அத்தியாயங்களைக் கொண்டது.

இக்காவியத்தின் மையக் கதாநாயகன் ஈடில்லா பெருவீரன் அக்கிலஸ். அவனது வீரத்தாய் தெடிஸ் தன் மகன் குழந்தையாக இருந்தபோது ஸ்டிக்ஸ் ஜீவநதித் தண்ணீரில் அமிழ்த்தி எடுக்கிறாள். அந்த உயிர்த் தண்ணீர் அக்கிலஸ் உடல் மீது பட்ட இடங்களில் எந்த ஆயுதமும் உயிரைப் பறிக்காது. ஆனால் அக்கிலசின் ஒரு குதிங்கால் தாயின் கரத்தில் இருந்ததால் அமுதத் தண்ணீர் படவில்லை. அதுவே கடைசிப் போர்க்களத்தில் அக்கிலசின் குதிகாலில் அம்பு பாய்ந்து மடிந்ததற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

‘இலியட்’ காவியத்தின் 24 அத்தியாயங்களைப் படித்தேன். என்ன விசித்திரம் எனில் இதில் டிராய் மரக்குதிரை பற்றிய குறிப்பே இல்லை. ஹெக்டருக்கும் அக்கிலசுக்கும் நடக்கும் மெய்சிலிர்க்கச் செய்யும் துவந்த யுத்தம் - அதன் முடிவு - அத்துடன் இலியட் முற்றுப் பெறுகிறது. “அக்கிலஸ் மரணம் குறித்தும் டிராய் மரக் குதிரை பற்றியும்” ‘ஒடிஸ்ஸி’ (Odyssy) காவியத்தில்தான் குறிப்பிடப்படுகின்றன.

யுத்தகளத்திற்குச் செல்வோம். இந்தப் போரில் “அகமென்னனின்” ஆணவத் திமிரை எதிர்த்த அக்கிலஸ் பங்கேற்கவில்லை. பத்தாண்டுகள் டிராய் முற்றுகையும் போரும் நடக்கிறது. டிரோஜன்களின் கை ஓங்கியது. கிரேக்கர்களின் பெருவீரர்கள் ஹெக்டரால் வீழ்த்தப்பட்டனர். பெருவீரன் அஜாக்ஸ் உட்பட! அக்கிலசின் ஒன்றுவிட்ட தம்பி பெரிடோகிளஸ் பெரு வீரன். கிரேக்கர்கள் தோற்பதைச் சகிக்காத பெரிடோகிளஸ், “அக்கிலசின் தலைக்கவசத்தையும், மார்புக் கவசத்தையும் அணிந்து களம் புகுந்தபோது” அக்கிலஸ்தான் போரிடுகிறான் என எண்ணி ஹெக்டர் நேருக்கு நேர் வாள் வீசுகிறான். பெரிடோகிளஸ் கொல்லப்படுகிறான். இச்செய்தி அறிந்த கணத்தில் வெடிக்கும் எரிமலையானான் மாவீரன் அக்கிலஸ். தனது ரதத்தில் போர்க்களம் நுழைகிறான். டிராய் கோட்டை வாயிலில் துவந்த யுத்தம் நடக்கிறது ஹெக்டருக்கும் அக்கிலசுக்கும். ஹெக்டர் கொல்லப்பட்டான். அவனது கால்களில் கயிற்றைப் பிணைத்து தன் ரதத்தில் கட்டிக் கொண்டு டிராய் கோட்டையை சுற்றி வருகிறான். ஹெக்டர் சடலம் மண்ணில் இழுக்கப்பட்டுச் செல்கிறது. ட்ரோஜன்கள் தங்களுக்கு அழிவு சூழ்ந்து விட்டதை எண்ணிக் கதறுகின்றனர்.

1962 இல் நான் ‘Helen of Troy’ திரைப்படத்தை நெல்லை பார்வதி திரையரங்கில் பார்த்தேன். 2005 ஆம் ஆண்டில் ‘Troy’ திரைப்படத்தை சிகாகோ நகரத் திரையங்கில் பார்த்தேன். “பிராட்பிட்” இதில் அக்கிலசாக நடித்திருப்பார். அற்புதமான நடிப்பு கதாபாத்திரத்தை அப்படியே நம் கண்களில் நிறுத்தினார். “லாரன்ஸ் ஆப் அரேபியா” திரைப்படத்தில் கதாநாயகனாக அறுபதுகளில் நடித்து ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் பீட்டர் ஒடூல் - டிராய் மன்னன் ‘பிரியம்’ என்ற பாத்திரமாகவே மாறியிருப்பார். “காரணம் இல்லாமல் இலியட் காவியத்தை இங்கு நான் எழுதவில்லை. காரணத்தோடுதான் ‘இலியட்’ காவியத்தின் இறுதி அத்தியாயத்தின் நெஞ்சை உருக்கும் காட்சிக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். ஹோமரின் வாசகங்களையே இங்கு தருகிறேன்.

“இடம்” மாவீரன் அக்கிலசின் பாசறை.:-

- இரண்டு முக்கிய மெய்க்காப்பாளர்கள் நிற்க அக்கிலஸ் அமர்ந்துள்ளான்.

- நெடிதுயர்ந்த உருவம் ஒன்று யாரும் கவனிக்காத விதத்தில் அக்கிலசின் முன்னால் நின்று அவனது முழங்கால்களைப் பற்றியவாறு அக்கிலசின் வலிமை வாய்ந்த கரங்களில் முத்தமிடுகிறது.

அக்கிலஸ் ஆச்சரியத்தின் உச்சத்தில் உற்று நோக்குகிறான்.
“டிராய் மன்னன் பிரியம் பேசுகிறான்”

கிரேக்கக் கடவுள்களைப் போன்ற தோன்றமுள்ள அக்கிலசே - உன் தந்தையை நான் அறிவேன். எனது வயதுதான் அவருக்கு இருக்கும். அவரது வீர மகனான நீ, போர்க்கள வெற்றி விருதுகளோடு வருவது கண்டு ஆனந்தக் களிப்படைவார். எனது தலைவிதியே தீமையாகிவிட்டது. எனக்கு 50 புதல்வர்கள். ஒரே தாய்க்கு பத்தொன்பது ஆண் பிள்ளைகள். மற்றப் பிள்ளைகள் பிற தாய்களுக்கு பிறந்தவர்கள். பலரும் களத்தில் கொல்லப்பட்டனர். என் புதல்வர்களில் வீராதி வீரனாக ஹெக்டர், தன் தாய்நாட்டைக் காக்க உன்னுடன் போர் புரிந்தான். சில நாட்களுக்கு முன் உன் வீரக் கரங்களால் கொல்லப்பட்டான்.

என் மகனின் உயிர் பறித்த அக்கரங்களை நான் முத்தமிடுகிறேன். அக்கிலசின் காலடியில் அமர்ந்தான் மன்னன் பிரியம். கதறி அழுதான். அது கண்ட அக்கிலஸ் தன் தந்தையை நினைத்தும், தம்பி பெரிடோ கிளசையும் நினைத்து அழுதான். இருவரின் விம்மலும், புலம்பலும் பாசறையில் ஒலித்தன. அக்கிலஸ் தன் கரங்களை நீட்டி பின்னர் அரவணைத்தவாறு, மன்னனின் நரைத்த தலையையும், நரைத்த தாடியையும் நோக்கி இரக்கம் நிறைந்த குரலில் “ஓ! எவ்வளவு பெரிய துரதிஷ்டசாலி நீங்கள். உங்கள் உள்ளத்தில் தாங்கொணாத துக்கம். உங்களின் புதல்வர்களைக் கொன்றவன் நான். இந்தப் பாசறைக்கு நீங்கள் வந்தது அசாதாரணமான செயல். இந்த ஆசனத்தில் அமருங்கள். உங்கள் இதயம் துணிச்சலில் இரும்பை நிகர்த்தது. துக்கத்தைத் தாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் துயரம் மறைந்த மகனைத் திரும்பக் கொண்டுவரப் போவதில்லை. உங்களைத் தவிர வேறு எவராயினும் இளைஞனாயினும் என் அரண்களுக்குள்ளே நுழைந்திருக்கவே முடியாது. உங்கள் நெஞ்சுறுதி வியப்பிற்குரியது.

மன்னன் பிரியம் தழுதழுத்தக் குரலில் சொல்கிறான். “பெரு வீரனே! என் மகனது சடலம் மண்ணில் கிடக்கிறது. ஹெக்டரின் சடலத்தை கேட்டு வந்துள்ளேன். அவனை உரிய மரியாதையோடு அடக்கம் செய்ய வேண்டும்.” அக்கிலஸ், “உங்கள் மகன் ஹெக்டரை உங்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துவிட்டேன். அவனது மரணத்துக்குப் பின் உணவருந்தியிருக்க மாட்டீர்கள். உறங்கியிருக்க மாட்டீர்கள்” எனக் கூறியபடி “இருவரும் சேர்ந்து உணவு அருந்தினர். மன்னன் பிரியம் ஓய்வெடுக்க படுக்கை வசதி செய்யப்பட்டது” ஹெக்டரின் சடலத்தை நன்கு நீராட்டி, தைலமிட்டு ஒரு ‘ரதத்தில்’ பாதுகாப்பாக வைக்க அக்கிலஸ் ஏற்பாடு செய்தான். “உங்கள் தீரமகன் இறுதிச் சடங்குகளுக்கு எத்தனை நாட்கள் வேண்டும். அதுவரை யுத்தத்தை நிறுத்துகிறேன் என்றான் அக்கிலஸ்.

மன்னர் பிரியம் - “என் வீரப் புதல்வனின் ஈமச்சடங்குக்காக குன்றுகளில் இருந்து மரங்களை ட்ரோஜன்கள் கொண்டு வருவார்கள். ஒன்பது நாள் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டு பத்தாம் நாள் தகனம் செய்வோம். பதினோறாம் நாள் கல்லறையில் வைப்போம்” என்றார். இந்தப் பதினோறு நாட்களும் போர் தொடுக்க மாட்டோம் என்றான் அக்கிலஸ். வைகறைப் பொழுதில் பாதுகாப்பாக மன்னர் பிரியத்தையும், ஹெக்டரின் சடலத்துடன் அனுப்பி வைத்தான். டிராய் மக்கள் கண்ணீர் சிந்திக் கதறினார்கள். ஈமச்சடங்களுக்காக ‘மரங்களை’ வெட்டிக் கொணர்ந்தனர். பத்தாம் நாள் மரங்கள் அடுக்கப்பட்ட சிதையின் மேல் மாவீரன் ஹெக்டரின் சடலம் வைக்கப்பட்டது. நெருப்பு மூட்டப்பட்டது. பதினோறாம் நாள் ‘தீயாற்றல்’ நடந்தது. ஹெக்டரின் எலும்புகள் சேகரிக்கப்பட்டன. ஒரு தங்கப்பேழையில் எலும்புகளும், ஈமச்சாம்பலும் வைக்கப்பட்டன. பதினோறாம் நாள் காலை கதிரவனின் கிரணங்கள் புறப்பட்ட வேளையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட புதைகுழியில் ஹெக்டரின் எலும்புகளும், ஈமச்சாம்பலும் அடங்கிய தங்கப்பேழை வைக்கப்பட்டது. கடினமான பாறைகளை அக்குழிமேல் நெருக்கமாக வைத்து மூடினார்கள்” பகைவர் படைகளை சூறையாடிய பெரு வீரன் அடக்கமானான்.

இலியட் காவியம் இத்துடன் முடிவு பெறுகிறது. பெறும் பகைவன் ஆனாலும் கொல்லப்பட்ட பின் சடலத்துக்கு இறுதி மரியாதை, ஈமச்சடங்கு நடத்தும் மனித நேயம் 3500 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தது என்பதற்காகவே ‘ஹோமரின் இலியட்’டை உங்களிடம் வைத்தேன்.

கும்பகர்ணன் வதை படலம்:-

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் கவிதைகளில் மனம் பறிகொடுப்பவன் நான். அதை இதிகாசமாகவே பார்க்கிறேன். யுத்த காண்டத்தில் மயிர்க்கூச் செறியும் களக் காட்சிகள் ஏராளம். இந்திரசித்து வதை படலமும், இலங்கை வேந்தனின் இறுதி யுத்தமும், கும்பகர்ணன் வதை படலமும் என் நெஞ்சை விட்டு நீங்காதவை.

“நெறியில் உயர்ந்தவனும் ஈடு இணையற்ற பெரு வீரனுமாகிய கும்பகர்ணன் பாத்திரம் இக்காவியத்தில் என் மனதை முழுமையாக ஆக்கிரமிக்கும் பாத்திரம். போர்க்களம் வருகிறான் கும்பகர்ணன். அவனது ஒரு தோளில் இருந்து மறு தோளைப் பார்க்கவே பலகாலம் ஆகுமாம். இராமனது சைன்யத் தளகர்த்தர்கள் பலறும் கும்பர்கர்ணன் முன் தோற்று ஓடினர். அப்படித் தோற்று மூர்ச்சையடைந்த சுக்ரீவனைத் தூக்கிக் கொண்டு இலங்கைக்குள் கும்பகர்ணன் நுழையும் வேளையில் பெரும் போர் நிகழ்கிறது. மூர்ச்சை தெளிந்த சுக்ரீவன் கும்பகர்ணனின் மூக்கைக் கடித்துத் துண்டித்துவிட்டு நழுவித் தப்பிவிட்டான். தசரதன் மூத்த மகன் இராமனுக்கும் கும்பகர்ணனுக்கும் நேருக்கு நேர் யுத்தம். வீரம் கொந்தளிக்கும் போர். தனது முடிவு நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்தான் கும்பகர்ணன். இராமனிடம் வேண்டுகோள் வைக்கிறான். நான் மடியப்போகிறேன். ஆனால் “மூக்கில்லாத மூளியான முண்டம்” என தேவர்களும், முனிவர்களும் எள்ளி நகையாடுவர். ஏளனம் புரிவர் பலறும். எனவே உன் பாணத்தைச் செலுத்தி என் கழுத்தைத் துண்டித்து எனது நெடுந்தலையை கருங்கடலின் ஆழத்தில் உன் அம்பினால் செலுத்துவாய் என்றான் கும்பகர்ணன்.

“மூக்கிலா முகமென்று முனிவர்களும் அமரர்களும்
நோக்குவார் நோக்காமை, நுன் கணையால் என் கழுத்தை
நீக்குவாய்; நீக்கியபின், நெடுந்தலையைக் கருங்கடலுள்
போக்குவாய்”

என்றான் கும்பகர்ணன். அவ்விதமே இராமனும் தனது வாளியைச் செலுத்தி நெடுங்கடலுள் கும்பகர்ணன் தலை ஆழத்தில் புதையச் செய்தான். அது இதிகாசம்.

பாகிஸ்தான் ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனம்:-

இங்கே பாகிஸ்தான் ராணுவம் செய்தது கொடிய காட்டுமிராண்டித்தனம்.

“இந்திய ராணுவ வீரர்களை, கட்டுப்பாட்டு பிரதேச எல்லை கடந்து வந்து இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்று அவர்களின் தலைகளைத் துண்டித்தது மன்னிக்க இயலாத மாபாதகமாகும்.

உலகத் தொழிலாளர்களின் உரிமைக் கொண்டாட்ட தினமான மே 1 ஆம் நாளில் இந்தக் கோரச் செயலை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியுள்ளது. இது குறித்து இந்திய ராணுவ நடவடிக்கைகள் ஆணையர் நாயகம் லெப் ஜெனரல் ஏ.கே.பட் அவர்கள், (DGMO) பாகிஸ்தானில் அதே பொறுப்பில் உள்ள மேஜர் ஜெனரல் சசீர்சம்சட்டிடம் பலத்த கண்டனத்தைத் தெரிவித்தபோது தக்க ஆதாரமும், சாட்சியமும் இன்றி குற்றம் சாட்டக் கூடாது என்றதுடன், கட்டுப்பாட்டு எல்லை தாண்டி பாகிஸ்தான் ராணுவ முகாம்களை இந்தியா குறிவைத்தால் உரிய பதிலடி தரப்படும் என்றும் உறுமியிருக்கிறார்.

பாகிஸ்தான் நாடு உதயமான காலத்தில் இருந்து பல கட்டங்களில் ஜனநாயகம் பலியிடப்பட்டு ராணுவ சர்வாதிகாரம் அதிகார லகான்களை கைப்பற்றியது. ராணுவத் தளபதிகள், ஜெனரல் அயூப்கான், ஜெனரல் யாஹ்யா கான், ஜெனரல் ஜியாவுல்ஹக், ஜெனரல் பர்வீஸ் முசாரப் என ஜனநாயக அரசுகள் கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி கொடுங்கோலோச்சிய காலமே அதிகம். தற்போது கிடைக்கின்ற செய்திகள் கவலையளிக்கின்றன. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் ராணுவத்தினரை இழிவுபடுத்தி பேசியதாகவும், பொதுமக்களை ராணுவத்திற்கு எதிராக தூண்டி விட்டதாகவும் எதிர்க் கட்சியினர் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தற்போது பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் கைய்மர் ஜேவட் பஜ்வா ஒரு ஆபத்தான நபராக கவனத்துக்குரியவர் ஆகிறார். இதன் பின்புலத்தில் நடந்ததுதான் முக்கியமாகும்.

2017 ஏப்ரல் 26 ஆம் நாள் இந்தியாவின் தனியார்துறை ஜெட் விமானம் இஸ்லாமாபாத் விமான நிலையம் போய் இறங்கியது. காபூலில் இருந்து எந்த விசா கட்டுப்பாடுகள் இன்றி அங்கு போய்ச் சேர்ந்தவர் 40 கி.மீ தொலைவில் ஒரு அழகிய குன்றின் சரிவில் உள்ள மாளிகைக்கு போனார். அந்த இல்லம்தான் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீபின் இல்லம். அவரும் குரும்பத்தினரும் இந்த விருந்தினரை வரவேற்றனர். அவர்தான் தொழிலதிபர் சஜ்ஜன் ஜின்டால், பிரதமர் மோடியின் சமாதானத் தூதுவராகத்தான் நவாஸ் செரீப்பை சந்தித்தார். இந்த வருகை ராணுவத்தினருக்கோ, ராணுவ உளவுத்துறைக்கோ தெரிவிக்கப்படவில்லை. அதனால் ராணுவ உளவுத்துறை ஊடகங்களுக்கு செய்தியைக் கசியவிட்டது.

“பிரதமர் நவாஸ் செரீபில் மகள் மரியம் “ஜின்டால் நீண்ட காலமாக எங்கள் குடும்ப நண்பர். நட்பு நிமித்தமாக சந்தித்தார். இதில் அரசியல் இல்லை” என வலைதளங்களில் பதிவு செய்தார். ஆனால் பாகிஸ்தான் ராணுவத் தளபதி தனக்குத் தெரிந்துதான் நாட்டில் அணுவும் அசைய வேண்டும் என்று செயல்படுகிறார். இந்தியாவுக்கு எதிராக ராணுவத்தினரிடம் கத்தியைத் தீட்டுகிறார். ஏப்ரல் 30 ஆம் தேதி எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிற்கு அருகில் தன் ராணுவத்தினரிடம் கடுமையாக பதிலடி கொடுங்கள் என உத்தரவிட்டுள்ளார்.

எல்லை நடவடிக்கைப்படை (BORDER ACTION TEAM - BAT) ஒன்று பாகிஸ்தான் ராணுவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதிரடிப் பயிற்சி பெற்றவர்களைக் கொண்ட சிறப்புப்படை. எல்லைப் புறங்களில் சில நேரங்களில் தீவிரவாதிகளுடன் சேர்ந்தும் இவர்கள் ஊடுருவதும் உண்டு. தற்போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் வழக்குகளிலும் சிக்கியுள்ளார்.

கவலை தரும் ஜம்மு காஷ்மீர் நிலைமை:-

எல்லைப்புறத்தில் வெறுப்பு நெருப்பை பாகிஸ்தான் ராணுவத் தலைமை விசிறிக் கொண்டிருக்கும் வேளையில், ஜம்மு காஷ்மீர் நிலைமை மிகுந்த கவலையைத் தருகிறது. பாகிஸ்தான், சவுதி அரேபியாவில் இருந்து இயக்கப்படும் தொலைக்காட்சிகளின் செய்திகளையே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தினர் அதிகம் காண்கின்றனர். இந்தியா மீதான வெறுப்புப் பிரச்சாரம் தீவிரமாக ஊடுருவுகிறது. இச்செய்தி ஊடகங்களில், இம் மே மாதம் 6 ஆம் தேதி சனிக்கிழமை ஆயுதந்தாங்கிய தீவிரவாதிகள், ஸ்ரீநகர் ஜம்மு நெடுஞ்சாலையில் நடத்திய தாக்குதலில் மூன்று பொதுமக்களும், ஒரு காவலரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். எல்லைக் காப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் தீவிரவாதியான பயஸ் அகமது என்ற சீத்தா கொல்லப்பட்டான். இவன் தலைக்கு ஏற்கனவே இரண்டு லட்சம் ரூபாய் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தெற்கு காஷ்மீரத்தில் குல்காம் மாவட்டத்தில் கொய்மோ பகுதியில் தீவிரவாதி சீத்தாவின் சடலம் எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடந்தபோது பூரண ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் நால்வர், இயந்திரத் துப்பாக்கிகளால் ஆகாயத்தை நோக்கி வேட்டுகளை எழுப்பி இறுதி மரியாதை செய்துள்ளனர் பகிரங்கமாக. இது அலட்சியப்படுத்தக் கூடியதல்ல.

வளைகுடா நாடுகளை மட்டுமல்ல அண்மையிலுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கும் பதட்டம் ஏற்படுத்தி வருகிற படு தீவிரமான அமைப்புதான் ISIS. ஈராக், சிரியா, இஸ்லாமிய அரசு குறுகிய காலத்திற்குள் தலிபான்களைவிட, அல் கொய்தாவைவிட பயங்கர வலிமை உள்ளவர்களாக ஆயுதம் பலம் கொண்டவர்களாக சிரியாவின் அதிபர் அல்பசார் ஆசாத் அரசை அகற்ற போர் தொடுத்து வருகின்றனர். உக்கிரமமான யுத்தம் நடைபெற்று வருகிறது. ருஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சிரிய அதிபர் ஆசாத்துக்கு முழு ஆதரவு தந்து வருகிறார். அமெரிக்கக் கொள்கையும் இதே நேர்கோட்டில் சென்று கொண்டிருந்தது. திடுக்கிடும் திருப்பம் நேர்ந்தது. வெள்ளை மாளிகையின் போக்கில் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற நாளில் இருந்து அறிவுக்கு ஒவ்வாத அதிரடி அறிவிப்புகள், நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

வளைகுடா நாடுகளின் பரிதாபம்:-

வளைகுடா நாடுகளில் ஏமன் தேச நிலைமை மிகப் பரிதாபகரமானது. இரண்டு கோடியே எழுபது லட்சம் மக்கள் தொகையில் 90 லட்சம் மக்கள் பசி, பட்டினியால் மடியும் அவலம் அவர்களை வளைத்துள்ளது என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது. 33 லட்சம் பேர், குறிப்பாக சிறுவயதினர் குழந்தைகள் நல்ல சத்துள்ள உணவு இன்றி வாடி வதங்குவதாகவும் கூறுகிறது. இஸ்லாமிய ஸ்டேட் ISIS பிடியில், அல்லது அல்கொய்தா பிடியில் ஏமன் சிக்கக் கூடும் என்று கருதி சவுதி அரேபியாவில் இருந்து அமெரிக்கா தாக்குதல் நடத்துகிறது. ஏமனில் இருப்பதாக சந்தேகித்து அல்கொய்தா முக்கியத் தலைவரைக் கொல்ல அதிபர் டிரம்ப் ஆணைப்படி நடத்தப்பட்ட குண்டுவீச்சில், அந்த நபர் சிக்கவில்லை. அந்நாட்டிலேயே இஸ்லாமிய அப்பாவி ஏமன் மக்கள் 30 பேர் கொல்லப்பட்டனர். 8 வயது சிறுமி உட்பட - சிரியாவில் நிலைமை விசித்திரமான அபாயம். சிரியாவில் ‘இஸ்லாமிய அரசை’ எதிர்த்து போராடும் குர்தியர்களுக்கு அமெரிக்கா ஆயுத உதவியும் செய்கிறது.

சிரியாவில் தீவிரவாதிகள் பிடியில் உள்ள இட்லிப் மாவட்டத்தில் கான் சேக் ஹவுன் நகரில் ஏப்ரல் 2 ஆம் நாள் சிரியா அரசுப் போர் விமானம் குண்டு வீசியதாகவும். ரசாயனக் குண்டுகள் என்றும், அந்த அழிவில் குழந்தைகள் உட்பட எழுபது பேர் கொல்லப்பட்டதாகவும் செய்தி வெளியாயிற்று. அழிவுக் காட்சிகள் தத்ரூபமாக தொலைக்காட்சி ஊடகங்களில் அதிர்ச்சியூட்டின. வெள்ளை மாளிகையில் தொலைக்காட்சியில் இச்சம்பவத்தைக் கண்ட அதிபர் டிரம்ப் மகள் இவென்கா பயந்து பதறியதாகவும், “தந்தையே இதற்கு நடவடிக்கை எடுங்கள்” என்று கூறியதாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் அமெரிக்க ஏவுகணைகள் பாய்ந்ததாகவும் செய்திகள் உலகை உலுக்கின. சிரிய அதிபர் ஆசாத், “எங்கள் போர் விமானம் தீவிரவாதிகள் இருந்த கட்டடத்தின் மீது குண்டு வீசியதாகவும், தீவிரவாதிகள் சேகரித்து வைத்திருந்த ரசாயனக் குண்டுகள் வெடித்ததாகவும், ஐ.நா. இது குறித்து விசாரணை நடத்தட்டும் என்றார். ருஷ்ய அதிபர் புடினும் அதனையே வலியுறுத்தினார்.

இதே வேகத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை வேட்டையாடப் போடப்பட்ட உலகின் சக்தி வாய்ந்த குண்டு, “குண்டுகளுக்கு எல்லாம் தாய்” (Mother of Alla Bombs) என்று கொக்கரித்தார். ஆப்கன் அரசு இதனைக் கண்டனம் செய்துள்ளது. கத்தோலிக்க தலைமைப் பீடமான வாடிகனின் போப் ஆண்டவர் பிரான்சிஸ் “உயிர்களை அழிக்கும் குண்டுகளை” அன்பால் உயிர்விக்கும் அன்னை என்று அதிபர் விவரித்தது அக்கிரமம் என்றார்.

நீதி சாகாது:-

அப்பாவிகள் கொல்லப்பட்டால், சிறு பிள்ளைகள் சாக நேர்ந்தால் அதிர்ச்சியும், ஆத்திரமும் ஏற்படுவது இயற்கைதான். ஆனால் ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்கள் இதே மே மாதத்தில்தானே எட்டு ஆண்டுகளுக்கு முன் சிங்கள இராணுவத்தால், விமானப்படையால் கொன்று குவிக்கப்பட்டார்களே, சின்னஞ்சிறு பிஞ்சுகள், குழந்தைகள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டார்களே, உலக நாடுகளின் அதிபர்களுக்கு ஏன் அதிர்ச்சி ஏற்படவில்லை. மனம் பதறவில்லை. இப்படுகொலைக்குக் காரணம், இந்திய அரசுதான் என்று கூறினேன். கொலைகார ராஜபக்சே. “யுத்தத்தை இந்தியாவே நடத்தியது. அவர்களாகவே அனைத்து ஆயுதங்களும் தந்தனர்” என அண்மையில் கூறினான். இதைச் சொன்னதனால்தானே என் மீது திமுக அரசு தேசத் துரோகக் குற்றச்சாட்டுடன் வழக்குப் போட்டது.

2013 டிசம்பர் 12 இல் டில்லி பேருந்தில் ஒரு மருத்துக் கல்லூரி மாணவி நிர்பயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆறு கொடியவர்களால் கற்பு சூறையாடப்பட்டு, குரூரமான பாலியல் வன்முறையில் அந்த அபலைப் பெண் நாசமாக்கப்பட்டு, குற்றுயிரும் குலையுயிருமாக சாலையில் வீசி எறியப்பட்ட கொடுமை சிங்கப்பூருக்கு சிகிச்சைக்குக் கொண்டுசெல்லப்பட்டு உயிர் நீத்தார். சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிர் நீத்தான். குறித்த வழக்கில் மூன்று நீதிபதிகள், நீதியரசர் தீபக் மிஸ்ரா, நீதியரசி பானுமதி, நீதியரசர் அசோக்பூசன் கொடியோர் நால்வருக்கும் விசாரணை நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும், விதித்த மரண தண்டனையை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தனர். அக்சய் குமார் சிங், வினய் சர்மா, முகேஷ், பவன் நால்வர்தான் இக்கொடுமை செய்ததற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள். மொத்தம் ஆறு பேர் இக்கொடுமை புரிந்தோர்.

ஒருவன் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். ஒருவன் வயது காரணமாக சிறார் சிறையில் அடைக்கப்பட்டு வெளிவந்தான். நீதியரசி பானுமதி, அவர்கள் தனது தீர்ப்பில் நிர்பயாவுக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை மிகுந்த வேதனையுடன் பதிவு செய்துள்ளார். நிர்பயாவின் கர்ப்பகிரகமான தாய்மைக்கோவிலில் எத்தகைய கொடுமை நேர்ந்தது என்பதை அவர் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்!

என் மனதில் என்ன தோன்றியது தெரியுமா? ஈழத்து தமிழ்க்குல மகள் இசைப்பிரியாவை 16 சிங்கள ராணுவ மிருகங்கள் எப்படி கற்பழித்து நாசம் செய்து கொன்றனர் என்பதை சாட்சியமாகத் தந்த சேனல் 4 தொலைக்காட்சி, செய்தி வாசிப்பவர், சிங்கள ராணுவ மிருகங்கள் எப்படியெல்லாம் தாங்கள் கற்பழித்து நாசம் செய்தோம் என்று கூறியதை இங்கு வாசிக்க இயலவில்லை என்றார்.

நான் சில கொடூரக் காட்சிகளை இணையதள காட்சியாகப் பார்த்து இரத்தக் கண்ணீர் வடித்தேன். நெஞ்சம் நடுநடுங்கியது. ஈழத்தமிழ் இளைஞர்களும், இளம் பெண்களும் சித்திரவதை செய்யப்பட்டு நிர்வாணமாய் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கற்பழித்துக் கொல்லப்பட்ட ஈழத்தமிழ்ப் பெண்களின் சடலத்தின் கர்ப்பகிரத்தில் துப்பாக்கிகளை பேனட் கத்தியால் குரூர வெறியுடன் கெக்கலித்துக் கொண்டே சிங்கள மிருகமான சிப்பாய்கள் செய்த கொடுமையை, நான் காட்ட முயன்றபோது எனது நண்பர் முன்னாள் மத்திய அமைச்சர் யஸ்வந்த் சின்கா கண்களை மூடிக் கொண்டார்.

இந்தியாவின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதிகள் அகமதி அவர்கள், இலங்கையில் ஒரு ஆய்வுக்கு சென்றுவிட்டு, “சிங்கள அரசிடம் நீதி இல்லை” என்று அறிவித்துவிட்டுப் பாதியிலேயே திரும்பினார்.

உலகில் நீதியரசி பானுமதி அவர்கள் போன்ற மனித நேய நீதியரசர்கள் கவனத்துக்கு, ‘ஈழத்தமிழ் இனப்படுகொலையை சரியான சாட்சியங்களுடன் ஆவணங்களுடன் கொண்டு சென்றால் நீதி கிடைக்கும் நீதி சாகாது’ என்ற உறுதி பிறந்தது உள்ளத்தில்.

கணிப்பொறி இல்லாத காலத்தில், இணையதளம் இல்லாத காலத்தில் உலக நடப்புகளை தம்பிகளுக்கு தந்தார் அறிஞர் அண்ணா மடல்களாக. ஈழம் குறித்த நமது இலட்சியம் வெல்வதற்கும், நீதி கிடைப்பதற்கும், தேவையான எண்ணங்களை இளைய தலைமுறையினருக்கு ஊட்ட உலகச் செய்திகள் ஒன்றே பயன்படும் என்று எண்ணித்தான் அதனை மையப்புள்ளியாக வைத்து அகிலத்து செய்திகளை எழுதுகிறேன்.

பிரான்சு நாட்டு அதிபர் தேர்தல் குறித்தும், வடகொரிய அதிபரின் பயங்கரம் பற்றியும், தென்கொரியாவின் புதிய அதிபர் பற்றியும். சைப்ரஸ், துருக்கி பிரச்சனை பற்றியும் அடுத்து எழுதத் திட்டமிட்டுள்ளேன்.

நேர்காணலில் நான் சொல்லச் சொல்ல செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கோ.நன்மாறன் இம்மடலை எழுதிக்கொண்டார்.

எழுச்சி சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்!

பாசமுடன்,
வைகோ

ஓமன் மதிமுக இணையதள அணி

சிறை சென்றது ஏன்? வைகோ கடிதம்-5, போர்க்களத்தில் பூத்த மனிதநேயம்! பாகிஸ்தான் நடத்திய மாபாதகம், பாகம்-1!

இமைப்பொழுதும் நீங்காது, என் இதயத் துடிப்போடும் இரத்தச் சுழற்சியோடும் கலந்து விட்ட கண்ணின் மணிகளே!

காலைக் கிரணங்களின் வெளிச்ச ரேகைகள் கொட்டடி வளாகத்தில் பரவும்போதே மனம் பரவசத்தில் ஆழ்ந்தது.

இன்று மே மாதம் ஆறாம் தேதி. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உதித்த நாளல்லவா. 1994 மே திங்கள் ஆறாம் தேதியன்று உதயமாகி 23 வருடங்களைக் கடந்து இன்று 24 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த 23 ஆண்டுகளில் 2003 மே ஆறாம் நாள் தான் நான் வேலூர் மத்திய சிறையில் இருந்தேன். மற்ற 22 ஆண்டுகளின் கழகத் தொடக்க நாளில் கழகக் கொடியினை ஏற்றும் பணியில் ஈடுபட்டு வந்தேன். இரவில் பொதுக்கூட்டம் பேசினேன். இன்று நமது இயக்க நிர்வாகிகள், முன்னோடிகள், மாவட்டச் செயலாளர்கள், அமைப்புகளின் நிர்வாகிகள் கழகக் கொடியேற்று விழாவை இந்நேரம் நடத்திக்கொண்டிருப்பார்கள். இப்பொழுது காலை 9.30 மணி.

வறட்சியின் கோரப் பிடியில் தமிழகம்

தமிழகம் வறட்சியின் கோரப் பிடியில் சிக்கி பெரும் அவலத்தை அனுபவிக்கிறது. பல இடங்களில் குடிதண்ணீருக்கு வழியின்றி மக்கள் பரிதவிக்கின்றனர். ஆடு, மாடுகளுக்குத் தீவனம் இல்லை. மேய்ச்சல் நிலங்களும் இல்லை. குடிக்கத் தண்ணீரும் இல்லை. வீடுகளின் தொழுவங்களில் செல்லப்பிள்ளைகளாக வளர்க்கப்பட்ட மாடுகள் (பசுக்களும், எருதுகளும்) நிலைமை மிகப் பரிதாபம். வைக்கோல், நாற்றுதான் அவற்றுக்கு உணவு. வீடுகளில் எருதுகளுக்கு தவிடு, புண்ணாக்கு, பருத்திக் கொட்டையை ஆட்டுஉரல்களில் போட்டு நன்கு அரைத்து ஊரல் எனும் உணவாக அவை வயிறு நிரம்ப உண்பதைக் கண்டு விவசாயி தன் வயிறு நிறைந்தது போல மகிழ்ந்த நிலைமையெல்லாம் போய்விட்டது. தற்போது அதற்கெல்லாம் வழி இல்லை. மாடுகள் எலும்பும், தோலுமாக நலிந்து உயிருக்குப் போராடும் நிலைமை ஏற்பட்டு விட்டது.

குளங்கள், ஊரணிகளில் தண்ணீர் இல்லை. எல்லாம் வரண்டு கிடக்கின்றன. இந்த நிலைமை கோடை கடந்தும் நீடித்தால் கால்நடைகள் வாடி வதங்கி மடியும் துன்பம் நிகழும். பக்கத்து மாநிலங்கள் வஞ்சகம் செய்கின்றன. காவிரியின் குறுக்கே மேகதாட்டு, ராசிமணல் அணைகளைக் கர்நாடகம் கட்டிவிட்டால் மேட்டூருக்கு மழை காலத்திலும் தண்ணீர் வராது. செழித்து வளம் கண்ட தஞ்சைத் தரணி பஞ்சப் பிரதேசம் ஆவதை கற்பனை செய்யும்போதே மனம் வேதனையில் துடிக்கிறது. நம் எதிர்கால சந்ததிகளைக் காப்பாற்ற “மழைக் காலத்தில் ஆறுகளில், நதிகளில் வெள்ளம் போல் பாய்ந்து வரும் தண்ணீர் கடலில்போய் வீணாகி விடாமல், ஆங்காங்கு தடுப்பணைகள், குளம், குட்டைகள் அமைத்து தேக்கி வைக்க வேண்டும்.” மழைநீர் சேகரிப்பு நல்ல திட்டம். நிபுணர்களைக் கொண்டு திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.

ஏரிகள், கண்மாய்கள் முறையாகத் தூர் வாரப்பட வேண்டும். குளங்களை மூடியுள்ள சீமைக் கருவேல மரங்கள் முற்றாக அகற்றப்பட வேண்டும். நாட்டுக் கருவேல மரங்களால் கேடு கிடையாது. அவற்றை அழிக்கக் கூடாது. இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல், தன்னையும் குழப்பிக் கொண்டு, மற்றவர்களையும் குழப்புகிற ஆராய்ச்சியாளர்களை அலட்சியம் செய்வது தான் சரியாகும்.

நமது இயக்கம் நீராதாரங்களைக் காக்கப் போராடியது. சுற்றுச் சூழல் நச்சுமயமாகவிடாமல் போராடிக் கொண்டிருக்கிறது. சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியும், தமிழ்நாட்டைப் பாதுகாக்கும் பணிதான். தமிழ்நாடு தனது வளத்தை மட்டும் இழக்கவில்லை; பெருமைகளையும் இழந்து விட்டது. “புரையோடிப் போன ஊழலால்” சீர்கெட்டு அவமானத்தால் வெட்கித் தலைகுனியும் நிலை ஏற்பட்டுவிட்டது.

கடந்த வார ‘சங்கொலி’ இதழில் எனது மடலின் நிறைவு வாசகங்களாக “இரண்டு இந்திய இராணுவ வீரர்கள் பாகிஸ்தான் இராணுவத்தால் கொல்லப்பட்டு அவ்வீரர்களின் தலை துண்டிக்கப்பட்டு, உயிரற்ற சடலங்களாக சிதைக்கப்பட்ட கொடூரத்தைக் குறிப்பிட்டிருந்தேன்.

“யுத்தக்களங்களில் பகை நாட்டு வீரர்கள் சரணடைந்தாலோ அல்லது அவர்களை வெற்றி கொண்டாலோ அந்த வீரர்களை யுத்தக் கைதிகளாக மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்” என்று உலக நாடுகள் ஏற்றுக்கொண்ட ‘ஜெனிவா நெறிகள்’ வழிப்படுத்துகின்றன. ஆனால், உலகில் தற்போது அனைவரையும் அச்சுறுத்தும் விதத்தில் கொடூரமான காட்சிகள் அரங்கேறுகின்றன. தீவிரவாத அமைப்புகள் தங்களிடம் பிடிபட்டவர்களை கழுத்தை அறுத்து படுகொலை செய்வதை வீடியோ காட்சியாகப் பதிவு செய்து, கோரமான அச்சம்பவத்தை உலக மக்கள் கண்டு அலறும்படிச் செய்கிறார்கள்.

தமிழர்களின் வரலாறே போர்க்களங்கள்:-

போர்க்களங்களில் வெற்றி பெற்ற அரசர்கள், படைத் தலைவர்கள், வென்ற நாடுகளில் தங்கள் படை வீரர்கள் பாய்ந்து சென்று பொருட்களைக் கொள்ளையடிப்பதும், பெண்களைப் பாலியல் வன்முறையில் நாசப்படுத்துவதும் முன்னர் நிகழ்ந்தது உண்டு. ஆனால் சால்பரினோ யுத்தகளத்தில் குற்றுயிரும் குலையுயிருமாக வீரர்கள் துடிப்பதைக் கண்டு 1828 மே 8-ஆம் நாள் ஜீன் ஹென்றி டியூனாண்ட் எனும் மனிதாபிமானியால் செஞ்சிலுவைக் சங்கம் தொடங்கப்பட்டது. இரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து துடிதுடித்த வீரர்களுக்கு இரவு வேளையிலும் கையில் விளக்குடன் தேடித் தேடிச் சென்று முதலுதவி செய்த பிளாரன்சு நைட்டிங்கேல் “வானுலகம் அனுப்பிய தேவதை”யாகப் போற்றப்பட்டார்.

தொடக்க காலத்திலும், மத்திய காலத்திலும் நடைபெற்ற கோரமான யுத்தங்களில் நெஞ்சை நடுநடுங்க வைக்கும் கொடூரங்கள் நிகழ்ந்தன. தோற்ற படையினரைச் சிதைப்பது, அப்பகைவர் நாட்டுக்குள் புகுந்து பொருட்களைக் கொள்ளையடிப்பதுடன் நிற்காமல், அப்பாவி மக்களை கண்டந்துண்டமாக்கிப் போடுவது - பெண்களை வாரிச் சுருட்டி எடுத்து தங்கள் இச்சைக்குப் பலியாக்குவது, தூக்கிச் செல்வது என்பனவெல்லாம் வழக்கமான நடைமுறையாகிப் போயிருந்தன.

மங்கோலிய எழுச்சியில் செங்கிஸ்கானுக்குப் பின்னர் இமயமலையைக் கடந்து, டில்லி வரை வந்து வாள் முனையில் வெற்றி பெற்ற கொடியவன் தைமூர் மன்னன் கொல்லப்பட்டவர்களின் தலைகளைத் துண்டித்து மலைபோல் குவித்தான் என்கிறது சரித்திரம்.

தமிழர்களின் வரலாறே போர்க்களங்களின் வரலாறுதான் என்பதை பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையாரின் ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ விவரிக்கும். இடைவிடாது வாளும், அம்பும், ஈட்டியும் கொண்டு போரிட்டனர் தமிழர்கள். ஆனால், போர் முடிவுக்குப் பின்னர் தோற்றுப்போன நாடுகளில் பயிர் பச்சைகளை அழித்ததாகவோ, நிராயுதபாணியான பொதுமக்களைக் கொன்று குவித்ததாகவோ ஒரு சான்றும் எங்கும் இல்லை.

போர்க்களத்துக்குச் செல்வதைப் பெருமையாகக் கருதினார்; மார்பில் வேல் பாய்ந்து மடிவதைப் புகழ் எனக் கொண்டனர். தமிழக வீரத் தாய்மார்களின் மறக் குணத்தைப் போற்றும் மூன்று பாடல்கள்:-

புறநானூற்றின் 279 ஆம் பாடல். பாடியவர் ஒக்கூர் மாசாத்தியார்.

அந்த வீரத்தாய்க்கு ஒரே மகன். நடக்கின்ற யுத்தத்தில் இவளது தந்தை யானையை வீழ்த்தி அப்போரில் காயமுற்று மடிந்தான். இவளது வீரக் கணவன் செருக்களம் சென்றான். தன்நாட்டு ஆநிரைகளைப் பகைவர் கவர்ந்து சென்றுவிடாமல் காத்தான். பின்னர் உயிர் நீத்தான். இன்றும் போர் முரசு ஒலிக்கிறது. தன் குடும்பமும் அப்போரில் பங்கேற்க முனைந்தாள். ஒரே பிள்ளையான தன் சிறு வயது மகனின் தலைமுடிக்கு எண்ணெய் தடவி, உடையும் உடுத்தச் செய்து, கையில் ‘வேலை’ எடுத்துக் கொடுத்து “போர்முனை செல்க” என அனுப்புகிறாள். என்னே இவளது துணிச்சல்! நினைக்கவே நடுக்கமாக உள்ளதே! மூதின் மகள் அல்லவா?”

“கெடுக சிந்தை; கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை,
யானை எறிந்து, களத்து ஒழிந் தனனே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்,
பெருநிரை விலக்கி ஆண்டுப்பட் டனனே;
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி,
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்,
பாறுமயிர்க்குடுமி எண்ணெய் நீவி,
ஒருமகன் அல்லது இல்லோள்,
‘செருமுக நோக்கிச் செல்க’ என விடுமே!”

களம்புகுந்த தன்மைந்தன் புறமுதுகிட்டு ஓடிவிட்டான் என்ற செய்தி அவளது செவிகளில் செந்தீயாய் எரித்தது. இதுகுறித்த பாடல் புறம் 278. பாடியவர் காக்கைபாடினியார் நச்செள்ளையார்.

அத்தாயின் மேனி நரம்புகள் புடைத்துத் தோன்றுகின்றன. வற்றி உலர்ந்த தோள்கள், “உன் மகன் படைக்களத்தைவிட்டு புறமுதுகிட்டு ஓடினான்” என்று உண்மை அறியாதார் கூறிய செய்தியால் எரிமலையானாள். “அவனுக்குப் பாலூட்டி வளர்த்த என் முலையையே அறுத்து எறிவேன்” என்று வஞ்சினம் கூறி போர்க்களம் சென்றாள். சபதப்படி தன் மார்பை அறுத்தெறிய கையில் வாளுடன் பிணக்குவியலைத் தேடுகிறான். பிணங்களைப் புரட்டிப் பார்க்கிறாள். அப்போது அக்களத்தில் அங்கங்கள் சிதைந்து துண்டங்களாகக் கிடந்த தனது மகனின் உடலைக் கண்டாள். பத்து மாதம் சுமந்து அம்மகனை ஈன்றெடுத்த போது ஏற்பட்ட மகிழ்ச்சியை விடப் பெருமகிழ்வு கொண்டாள்.

நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படைஅழிந்து மாறினன் என்றுபலர் கூற
மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்
முலைஅறுத் திடுவென், யான்எனச் சினைஇக்
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூ உ
ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே. -புறம் 278

இதே கருத்தினை பூங்கணுத்திரையார் புறம் 277 ஆம் பாடலில் கூறுகிறார். அவள் வயது முதிர்ந்திருந்த தாய். மீன்களை உண்ணுகின்ற வெள்ளைக் கொக்கின் வெண்மையான சிறகுகளைப் போல் வெள்ளிய நரைத்த கூந்தலை உடையவள்.

அவளது வீரப் புதல்வன் போர்க்களத்தில் தன்னை எதிர்த்து வந்த யானையைக் கொன்று தானும் அப்போரில் காயமுற்று மடிந்தான் என்ற செய்தியறிந்தபோது அவனைப் பெற்ற போது ஏற்பட்ட உவகையைவிடப் பேருவகை கொண்டாள். அவள் விழிகளிலிருந்து நீர்த்துளிகள் சிந்தின. வெதிர மலையில் மூங்கில்காட்டில் மழை பெய்யும்போது அம்மூங்கில்களில் இருந்து கொட்டுகின்ற நீர்த்துளிகளைவிட அந்த வீராங்கனையின் கண்ணீர்த்துளிகள் அதிகமாக இருந்தன.

“மீன்உண் கொக்கின் தூவிஅன்ன
வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர்
நோன்கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே”

இந்தப் புறநானூற்றுப் பாடல்களை நினைக்கும்போது, அவற்றை எழுதும்போது என் மனக் கண்ணின் முன்னால் லாகூர் சிறைச்சாலை தெரிகிறது. தூக்குக்கயிற்றின் நிழலில் சிறைக் கொட்டடியில் இருக்கும் “பகத்சிங்” தெரிகிறார். மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னைய கடைசி நேர்காணலில் “பகத்சிங்கின்” வீரத்தாய் அவரது தலையைக் கோதியவாறு, “மகனே தூக்குமேடைக்குச் செல்லும்போதும் நீ கலங்க மாட்டாய் - எனக்குத் தெரியும் - அந்த மாவீரத்தை நிலைநாட்டி மரணத்தைத் தழுவுவாய்” எனக் கூறும்போதே அத்தாயின் கண்களிலிருந்து நீர்த்துளிகள் பகத்சிங் சிரசில் விழுந்தன.

புறநானூற்றுத் தாயே வீரத்தாய்:-

தனது சிறைக் குறிப்புகளில் ‘பகத்சிங்’ எழுதுகிறார், வீரத்தாய் என்பவர் யார் என்று தானே கேள்வி எழுப்பி, அவரே பதிலையும் தருகிறார். கிரேக்கத்து நகர நாடுகளில் ஒன்றான ஸ்பார்ட்டா - யுத்த களத்தில் பகை கொண்ட நாட்டுடன் மோதுகிற போரின் முடிவு என்ன ஆகுமோ? என்று ஸ்பார்ட்டா மக்கள் காத்திருக்கின்றனர். ஒரு வீரத்தாய் தனது ஐந்து புதல்வர்களையும் யுத்தகளத்துக்கு அனுப்பி வைத்தவள். அவளை நோக்கி ஓடி வருகிறான் ஒரு ஸ்பார்ட்டன். “உனக்கு செய்தி தெரியுமா?” எனக் கேட்கிறான். அவள் திகைக்கிறாள். “உன் வீரப்பிள்ளைகள் ஐந்து பேரும் போர்க்களத்தில் கொல்லப்பட்டனர்” என்கிறான். “அட முட்டாளே, அதனையா நான் அறிய விரும்புகிறேன். களத்தின் முடிவு என்னவாயிற்று?” என்று கேட்கிறாள். “ஸ்பார்ட்டா படை வென்றது” என்றான் அவன். “அதைச் சொல்லடா. இப்பொழுதே நான் தேவதைக்கு பூசை செய்யப் புறப்படுகிறேன் என்றாள். அவள்தான் வீரத்தாய்” என்று எழுதுகிறார் மாவீரன் பகத்சிங்.

என் மனதில் என்ன தோன்றுகிறது தெரியுமா? கிரேக்கர்களின் யுத்த களங்களோ, ஸ்பார்ட்டாவின் தெர்மாபிளே போர்க்களம் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதால் ஆங்கிலத்தில் அதனைப் படித்ததால், பகத்சிங் வீரத்தாய்க்கு இலக்கணம் காட்டுகிறார். நமது புறநானூற்றுப் பாடல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டு, அப்பாஞ்சால வீரன் படித்திருந்தால் “புறநானூற்றுத் தாயை” வீரத்தாய் என வர்ணித்திருப்பார். அண்மையில் தித்திக்கும் செய்தி கண்டேன்.

தமிழ் மொழியின் கருத்துச் செல்வம் மேம்பட மொழிபெயர்ப்பு அவசியம்:-

தம்பி அருணகிரி அவர்கள் சிறையில் என்னிடம் ஈழ எழுத்தாளர் திரு அ.முத்துலிங்கம் அவர்களின் ‘தமிழ்மொழிக்கு ஒரு நாடில்லை’ எனும் நூலைத் தந்தார். அந்த எழுத்தாளர் தனது நூலில், “சமர்ப்பணம்” என்று பின்வருமாறு எழுதியுள்ளார். “சங்கப் பாடல் ஒன்றை ஒரு நாள் தேடியபோது, அதன் அருமையான ஆங்கில மொழி பெயர்ப்பு தற்செயலாக இணையத்தில் கிடைத்தது. அதன் நேர்த்தியும், அழகும் என்னை பெரிதும் கவர்ந்தன. மொழிபெயர்த்தவர் வைதேகி ஹெர்பர்ட். இந்திய அமெரிக்கப் பெண்மணி. கடந்த ஆறு வருடங்களாக இவர் முழு நேரப் பணியாக சங்கப் பாடல்களை மொழி பெயர்த்து வருகிறார் என்பதை அறிந்தேன். ஒரு பல்கலைக் கழகம் செய்ய வேண்டிய வேலையை, 2000 வருடங்களாக ஒருவருக்குமே தோன்றாத இந்த மேன்மையான பணியைத் தனி ஒருவராக இவர் செய்துகொண்டிருக்கிறார் என்று அறிந்தபோது வியப்பு ஏற்பட்டது. இவருக்கு உறுதுணையாக இருப்பவர் முனைவர் இரா.ருக்மணி அவர்கள். இன்று எட்டுத்தொகை, பத்துப் பாட்டு ஆகிய 18 சங்க கால நூல்களில் 12 மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன. மீதியையும் விரைவில் மொழிபெயர்த்துவிட வேண்டும் என்பது இவருடைய சங்கல்பம். இருவரையும் நான் கண்களில் கண்டது கிடையாது. ஆனால், உழைப்பு என்னை பிரமிக்க வைக்கின்றன. இவர்கள் இருவருக்கும் இந்நூல் சமர்ப்பணம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலை நாட்டிலே பிறந்த அறிஞர் கிறித்துவ மதக் கருத்துக்களைப் பரப்ப முனைந்த ஜி.யு.போப் அவர்கள் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்; திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தமிழ் மொழியின் கருத்துச் செல்வம், மொழி மேன்மை உலகின் அனைத்து புராதன மொழிகளிலும் மேம்பட்டது.”

“இருண்ட கண்டமாக ஆப்பிரிக்கா பலரால் வெறுக்கப்பட்டபோது அங்கு சென்று தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை செய்த மனிதாபிமானி நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் சுவைட்சர். அவர், ‘கிழக்கின் தத்துவம்’ என்ற நூலில் திருக்குறளைப் பற்றிப் போற்றும் வரிகளில், “இதற்கு நிகரான அறநூல் உலகத்திலேயே கிடையாது. புத்தரின் மணிமொழிகளைவிட திருவள்ளுவரின் கருத்துக்கள் உயர்வானவை” எனப் பாராட்டுகிறார். அமெரிக்க நாட்டுக்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் சென்றிருந்தபோது, யேல் பல்கலைக் கழகம் அவருக்கு “சப் பெல்லோகிப்” விருது வழங்கி சிறப்பித்த காலத்தில் அப்பல்கலைக் கழக மாணவர்களிடம் திருக்குறள் வகுப்பு எடுத்தார். அதன் விழுமிய கோட்பாடுகளைச் சொன்னார்.

கண்ணின் மணிகளே! மீண்டும் புறநானூற்றுக்கே உங்களை அழைத்துச் செல்கிறேன். “எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்துவந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணாகாடி பகுதியில் அக்கிரமமாக பிரவேசித்து, நமது இராணுவத்தினரை அதிரடியாகத் தாக்கி நமது வீரர்கள் இருவரின் தலைகளைத் துண்டித்த கோரச் சம்பவம் மனிதாபிமானிகளின் மனதை நடுங்க வைத்ததைக் குறிப்பிட்டுவிட்டு போர்க்களங்களைப் பற்றிச் சொன்னேன் அல்லவா!”

தமிழர்கள் மறக்களத்திலும் அறம் மறந்ததில்லை; நிராயுதபாணிகளைத் தாக்கியதில்லை. பெண்டிரை, பிணியுற்றோரை, அறநூல் பகர்வோரைப் பாதுகாக்கவே முனைந்தனர் என்பதற்கு சாட்சியம்தான் புறநாநூற்றின் ஒன்பதாம் பாடல்.

பாடியவர் நெட்டிமையார். பாட்டுக்குரிய மன்னர் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. இவன் படையெடுத்துப் போர் தொடுக்கும் நாட்டில், வன்மை அற்ற மெலிந்தோரை, பாதுகாப்பான இடங்களில் போய் உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்கை செய்கிறான். மகாபாரத இதிகாசத்தில் “விராட பருவத்தில்” துரியோதனன் சகுனியின் யோசனையின்படி திரிகர்த்த தேசாதிபதி சுசர்மன் விராட நாட்டின் பசுக் கூட்டங்களை ஒட்டிக் கடத்துவான். போர் அப்படித்தான் மூள்கிறது. ‘ஆநிரை கவர்தல்’ என்பது போர் தொடுக்கும் காரணமும் ஆகிறது. ஆனால், இங்கே பாண்டிய வேந்தன் ஆவினங்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லுங்கள். அறம் கூறும் மறையோர், பெண்கள், நோய்வாய்ப்பட்டவர், புதல்வரைப் பெறாத பெற்றோர்கள் எல்லோரும் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள். என் வில்லிலிருந்து அம்புகள் சீறிப் பாயுமுன் விலகிச் சென்று உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இதோ பாடல்,

“ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம் அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்”
என்னே மனிதநேயப் பண்பு!

அதனால்தான் செந்நாப் போதார் திருவள்ளுவர் தனது அறத்துப்பாலை அன்புடைமை அதிகாரத்தில்,

“அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார்
மறத்திற்கும் அ~தே துணை”

எனும் குறளை வைத்தார்.

பொருட்பாலின் முதல் அதிகாரமான இறைமாட்சியின் அரசுப் பொறுப்பில் இருப்பவன் எத்தகையவனாக இருக்க வேண்டும் என்பதற்கு “தன்னைக் குற்றம் குறை சொல்வோரின் சொற்களை செவிகளில் நாரசாரமாய்ப் பாயும் கசப்பான சொற்களைப் பொறுத்துக்கொள்கிற பண்புடைய வேந்தனின் குடை நிழலே உலகைக் காக்கும்; அம்மக்களைக் காக்கும்” என்கிறார்.

“செவிகைப்பச் சொற் பொறுக்கும் பண்புடைவேந்தன்
கவிகைக் கீழ் தங்கும் உலகு” - குறள்

இதற்குச் சான்றாக ஒரு காட்சி, போர்க்களத்தில் ஏற்பட்ட கோபத்தின் காரணமாக திருக்கோவவிலூர் மன்னன் மலையமான் திருமுடிக்காரியை களத்திலே வீழ்த்திய பின்னும் வெகுளி குறையாமல் அம்மன்னனது பிள்ளைகளை, யானையின் கால்களால் இடறச் செய்யும் அறிவற்ற பண்பற்ற செயலைப் புரிய சோழ மன்னன் கிள்ளிவளவன் முனைந்தபோது, தமிழ்ப் புலவர் இதனைக் கேள்வியுற்று விரைந்து வருகிறார். அவர்தான் கோவூர் கிழார். “மன்னவனே! நீ யார் வழி வந்தவன்? தன்னை தஞ்சம் அடைந்த புறாவைக் காக்க தனது தசையை அரிந்து பருந்துக்குக் கொடுத்து புறாவின் துயர் போக்கியதுபோல், பிறரது துயர் களைந்த சோழ மரபிலே வந்தவன். இந்தப் பிள்ளைகள் யார்? கற்றோர் வறுமை அடையாதவாறு விளை பொருளைப் பகுத்து உண்ணும் குளிர்நிழல் வாழ்ந்த மரபு வந்தவர்கள். யானை வருகிறது. இப்பிள்ளைகள் அதுவரை அழுதுகொண்டிருந்த நிலை மாறி, அந்த வேழத்தைக் கண்டு வேடிக்கை பார்த்து அழுகையை மறந்துவிட்டனரே. தங்களைச் சுற்றிலும் வேற்று மனிதர்கள் நிற்பதைக் காண்பதால் வருத்தம் கொள்கின்றனர். நான் கூற வேண்டியதைக் கூறி விட்டேன். கேட்டாய். உன் விருப்பப்படி நடந்துகொள்” என்றார். மன்னன் கிள்ளிவளவன் தவறு உணர்ந்து அறம் காத்து பிள்ளைகளைக் காத்தான். இடித்துக் காட்டும் புலவரே அறம் கூறும் புலவர் ஆவார்.

புறம் பாடல் 46 இதோ:-

“நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை;
இவரே, புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித்
தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்!
களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த
புன்றலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி,
விருந்திற் புன்கண்நோ வுடையர்;
கெட்டனை யாயின், நீ வேட்டது செய்ம்மே”

நன்றி மறந்தோர்க்கு உய்வே கிடையாது:-

இதே மன்னன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் தன்னிடம் பரிசில் பெற்றுச் செல்லும் புலவர் ஆலத்தூர் கிழாரை பார்த்து “மீண்டும் என்னை நினைத்து இங்கு வருவீர்களா?” எனக் கேட்கிறான்.

அதற்கு அப்புலவர், “நன்றி மறந்தோர்க்கு உய்வே கிடையாது”. “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு” எனும் குறள் நெறிக் கருத்தையே பாடல் வரிகளாக தருகிறார். பசுவின் மடியினை அறுத்தவனுக்கும் மன்னிப்பு உண்டு. மங்கல மங்கையின் கருவினைச் சிதைத்த பாவிக்கும் கழுவாய் ஏற்படலாம், அறிவூட்டும் ஆசானையே பழித்துக் கொடுமை செய்தோர்க்கும் கழுவாய் கிட்டிடலாம். ஆனால் இந்த உலகமே புவி மண்டலமே தலைகீழாகப் புரண்டாலும் ஒருவர் செய்த உதவியை மறந்த நன்றி கொன்ற பாவிகளுக்கு உய்வே கிடையாது” என்றார்.

“ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கின் கழுவாயும் உள என
நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என
அறம் பாடின்றே ஆயிழை கணவ!” - புறம் 34

“நன்றி கொன்றோர் போன்ற பாவிகள் உலகிலேயே கிடையாது” என்கிறது தமிழர்களின் அறம் - புறநானூற்றுப் பாடல்களை எல்லாம் ஊன்றிப் பயிலும்போது - மறமும் அறமும் தமிழர்களின் விழிகள் என்பதை உணர முடியும்.

தொடருகிறது...

ஓமன் மதிமுக இணையதள அணி

போக்குவரத்துறை தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முதல்வர் தலையிட வேண்டும்-வைகோ அறிக்கை!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் கhலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய ஊதிய ஒப்பந்தம், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கhன பணப் பயன்கள், ஓய்வூதியம், போக்குவரத்துக் கழகங்களின் அனைத்து பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகhண வரவு-செலவு வித்தியாசங்களை சரி செய்ய வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை ரூ.4500 கோடியை உரிய கணக்கில் சேர்க்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நிலுவைத் தொகை ரூ.1700 கோடி, பணியில் உள்ள தொழிலாளர்கள் நிலுவைத் தொகை ரூ.300 கோடியை உடனே வழங்க வேண்டும் போன்ற முக்கியமான 7 கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். தொழிலாளர் நலத்துறை தனி ஆணையர் முன்னிலையில், போக்குவரத்துத்துறை நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டதால், தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

அரசு போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில், தனியார் பேருந்துகளை இயக்குவோம் என்று அறைகூவல் விடுப்பதும், அனுபவமில்லாத தற்கhலிக ஊழியர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்குவதும் சரியான அணுகுமுறை இல்லை என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.

கோடை விடுமுறை கhலத்தில் மக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்பதால், அரசுப் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முன்வரவேண்டும்.

ஒரு இலட்சத்து 43 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றும் மிக முக்கியமான போக்குவரத்துத் துறையில், கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் தொழிலாளர்களுடன் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தமிழக முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

புழல் சிறையில் தம்மை சந்திக்க வந்த வழக்கறிஞர் கோ.நன்மாறன் அவர்களிடம் வைகோ அவர்கள் கூறிய இந்தக் கருத்துக்கள் அறிக்கையாக வெளியிடப்படுகின்றது.

ஓமன் மதிமுக இணையதள அணி

Monday, May 15, 2017

போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம்: விரைவில் தீர்வு காண்க!

நீண்ட நாள் கோரிக்கையான ஊதிய உயர்வு, தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணம், நின்றுவிட்ட தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வூதியப் பணத்தை வழங்குவது ஆகிய கோரிக்கைகள் குறித்துத் தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூகமான உடன்பாடு ஏற்படாததால், அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்தத்தைத் துவக்கி உள்ளனர்.

இதன் காரணமாக பொதுமக்கள், நோயாளிகள் மற்றும் கல்லூரியில் சேர வேண்டிய மாணவ - மாணவிகள், ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு, மிகுந்த சிரமத்திற்கு ஆட்பட்டுள்ளனர்.

எனவே, தமிழக முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசி, விரைவில் சுமூகமான தீர்வு காண வேண்டுமென, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் வலியுறுத்துகின்றேன் என மதிமுக அவை தலைவரும், மறுமலர்ச்சி தொளிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளருமான திருப்பூர் சு.துரைசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

சிறை சென்றது ஏன்? வைகோ கடிதம்-4, மக்கள் ஆட்சிக்கு மகுடமே பொது வாக்கெடுப்பு! பாகம்-7!

கொலைகாரனே எழுதும் தீர்ப்பு:-

இன்றைக்கு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் நாம் கேட்பது, சிங்கள அரசு அறிவித்த, பித்தலாட்ட மாய்மால எல்எல்ஆர்சி கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணையம் (Lessons Learned and Reconciliation Committee-LLRC) அது ஒரு அயோக்கியத்தனமான, வஞ்சகமான, உலகத்தை ஏமாற்றுகின்ற ஒரு ஆணையம். அவனைப் பற்றி, அவனே எழுதுவதா?

நான் இந்திய மக்களைக் குற்றம் சொல்லவில்லை. சோனியாகாந்தி தலைமையில் இயங்குகின்ற காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுக்குத் தலைமை தாங்கியவர் மன்மோகன்சிங், அந்த அரசில் பங்கு வகித்த தி.மு.க., ஈழத்தமிழர்கள் படுகொலையில் குற்றவாளிகள். அங்கே நடந்தது, போர்க்குற்றம் அல்ல. திட்டமிட்ட இனப்படுகொலை. தமிழ் இனத்தை அழிக்க வேண்டும் என்றுதான், நமது அகநானூறு, புறநானூறு, சங்கத் தமிழ் நூல்களைக் கொண்ட, 98,000 நூல்களைக் கொண்ட யாழ்ப்பாணம் நூலகத்தை, 1981 இல் தீ வைத்து எரித்தான். வெலிக்கடைச் சிறையில், 58 தமிழர்களைக் கண்டதுண்டமாக வெட்டிப் போட்டான். குட்டிமணியின் கண்களைத் தோண்டி எடுத்துக் காலில் போட்டு நசுக்கினான். நம் குழந்தைகளை, கொதிக்கும் நெருப்பில் தாரில் தூக்கி வீசினான். 1958 ஆம் ஆண்டு முதல், அங்கே நடந்தவை சாட்சியங்கள்.

இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என்று, இந்திரா காந்தி அம்மையாரே சொன்னாரே?

எனவே, போர்க்குற்றம் என்று சில மேதாவிகள் குழப்புகின்றார்கள். இது முள்ளிவாய்க்காலில் மட்டும் நடந்தது அல்ல. இந்த இனப்படுகொலையை நடத்தியவனைக் கூண்டில் நிறுத்துவோம். எவனும் தப்ப முடியாது. சிரபெரெனிகாவில் ஆறு முஸ்லிம்களைக் கொன்றவன், 40 ஆண்டுகளுக்குப் பிறகு, கைது செய்யப்பட்டுக் கூண்டில் நிறுத்தப்பட்டான்; 55 ஆண்டுகள் அவனுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஹங்கேரியில் சாண்ட்ரா பிட்ரோ என்பவனுக்கு அப்போது 91 வயது. 1942 ஜனவரி 23 இல், ஆறு பேர்களைச் சுட்டுக் கொன்றான். அவனால் நடக்க முடியவில்லை. என்றாலும், குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப் பட்டான்.

அப்படியானால், எங்கள் தங்கை இசைப் பிரியாவை நாசம் செய்தார்களே, பாலியல் வன்கொடுமை செய்து கொன்றார்களே? அதை, ஐ.நா. அறிக்கையிலேயே குறிப்பிட்டு இருக்கின்றார்கள். எட்டுத் தமிழ் இளைஞர்களை அம்மணமாக்கி, கைகள், கண்களைக் கட்டி இழுத்து வந்து, உச்சந் தலையில் சுட்டுக் கொன்றார்களே, அது உண்மையான காட்சி, என்று தடயவியல் அறிஞர்களே உறுதிப்படுத்தி விட்டார்கள். இவை எல்லாம் அசைக்க முடியாத சாட்சியங்கள்.

அனைத்து உலகக் குற்றவாளிக் கூண்டிலே ராஜபக்சேயைக் கொண்டு வந்து நிறுத்துவோம். இந்தக் கோரிக்கையை, இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். குற்றவாளியைக் கூண்டில் நிறுத்தித் தண்டிப்பது ஒரு கோரிக்கை. இன்னொரு கோரிக்கை, சிங்களக் குடியேற்றங்களை அகற்ற வேண்டும்; சிங்களக் காவலர்கள், இராணுவம் அகற்றப்பட வேண்டும்; அவர்களால் பிடித்துச் செல்லப்பட்ட எங்கள் பாலகுமார் எங்கே? எங்கள் பேபி, இளங்குமரன் எங்கே? எங்கள் யோகி எங்கே? எங்கள் புதுவை இரத்தின துரை எங்கே? உயிரோடு இருக்கின்றார்களா? கொன்று விட்டீர்களா? இல்லை, அவர்களை எங்கேனும் அடைத்து வைத்து இருந்தால் விடுவிக்க வேண்டும்.

உலகத்தின் கதவுகளைத் தட்டுகின்றோம். அதற்காகத்தான், இத்தனை நாடுகளின் வரலாறை எழுதினேன். சிங்கள இராணுவம், காவல்துறை, தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேற்றிய பிறகு, அங்கே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

2011 ஜூன் 1 ஆம் தேதி, பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றக் கட்டடத்தில் நான் உரை ஆற்றுகின்ற பொழுது, எனக்குப் பதினைந்து நிமிடங்கள் ஒதுக்கி இருந்தார்கள். நான், 18 நிமிடங்கள் பேசி இருக்கின்றேன். விடுதலைப்புலிகள் ஏதேனும் ஒரு சிங்களப் பெண்ணுக்குப் பாலியல் கொடுமைகள் செய்ததாக ஒரு குற்றச் சாட்டு உண்டா? அப்படி ஒரு குற்றச்சாட்டைச் சொன்னால், அப்படி ஒரு தவறு நடந்து இருந்தால், நான் ஈழத்தைப் பற்றிப் பேசுவதை விட்டுவிடுகிறேன் என்று சொன்னேன்.

சிங்கள இராணுவத்தையும், காவல் துறையையும் தமிழர் பகுதிகளில் இருந்து வெளியேற்ற வேண்டும். அனைத்து உலக நாடுகளின் பார்வையாளர்கள் முன்னிலையில், ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அந்த வாக்கெடுப்பில், உலகின் பல நாடுகளில் பரவிக்கிடக்கின்ற ஈழத்தமிழர்கள், அந்தந்த நாடுகளிலேயே அவர்கள் வாக்கு அளிக்க வேண்டும். இதற்கான, வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கோரினேன்.

அதே உணர்வோடுதான், நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவுக்கு ராஜபக்சேயை அழைத்து வந்ததால், டில்லியில் நானும் என் சகாக்களும் கருப்புக் கொடி காடடிக் கைது செய்யப்பட்டோம்.

என் வாழ்க்கையில், ஒன்றிரண்டு காரியங்கள், என் மனதுக்கு நிறைவு தருகின்றது. உலக அரங்கில், இத்தகைய கோரிக்கையை முதன் முதலாக முன் வைத்தவன் அடியேன் என்ற தகுதியோடு புழல் மத்தியச் சிறையில் என் எண்ணங்கள் சிறகு விரிகின்றன. இந்தக் கோரிக்கை சரியானது என்று, ஈழத் தமிழர்கள் ஏற்றுக் கொண்டு உள்ளனர். அந்த இலக்கை நோக்கித்தான் செல்லுகின்றோம்.

முருகதாசன் உயில்:-

2009 பிப்ரவரி 12 ஆம் தேதி. முருகதாசன் என்ற 27 வயது இளைஞன், திருமணம் செய்து கொள்ளாமல், வாழ்க்கை இன்பங்களை நுகராமல், முத்துக்குமாரைப் போல், ஈழத் தமிழர்களுக்காக மடிந்த தியாகிகளைப் போல், லண்டனில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தவன், அங்கிருந்து புறப்பட்டு, ஜெனீவாவுக்குச் சென்று, ஐ.நா. மன்றத்தின் கட்டடத்துக்கு எதிரே நின்றுகொண்டு,

‘என் தமிழ்ச் சமூகம் கடமை ஆற்றவில்லை, கைவிட்டுவிட்டது ஈழத்தமிழர்களை. என் உறவுகள் செத்துக் கிடக்கின்றார்கள். அங்கே இருந்து என் உறவுகள் தொலை பேசியில் சொல்லுகிறார்கள், பக்கத்தில் பிணங்கள் கிடக்கின்றன, எங்கும் பிண நாற்றம் வீசுகின்றது, தினமும் செத்து மடிந்து கொண்டு இருக்கின்றார்கள், இதற்குப் பிறகாவது இந்த உலகம் கண் விழிக்குமா? எங்கள் மக்களைக் காப்பாற்றுமா? இதற்காக, நான் தீக்குளித்து மடிகிறேன்’ என்று முருகதாசன் மரண சாசனத்தை எழுதி வைத்துவிட்டு, நான் கடமையைச் செய்கிறேன், தமிழ்ச்சமுதாயம் கடமையில் தவறி விட்டது என்று எழுதி வைத்து விட்டுப் போனான்.

அடுத்தது என்ன?

மனித உரிமைகள் கவுன்சிலில் 47 உறுப்பு நாடுகள் உள்ளன. நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள், அங்கே 2009 ஆம் ஆண்டு, சிங்களவனுக்குப் பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். முள்ளி வாய்க்காலில் இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றவனுக்குப் பாராட்டுத் தீர்மானம். அதை நிறை வேற்றுவதற்கு வரிந்து கட்டிக் கொண்டு போராடியது, இந்தியா, கியூபா, சீனா. இப்பொழுதும், இந்தியா துரோகம் இழைக்கிறது.

முன்பு சிங்களவனுக்கு ஆதரவாக நடந்ததற்குப் பதிலாக, அவன் பரிந்துரைகளையாவது நிறைவேற்றட்டும் என்கிறார்கள். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எங்கள் கோரிக்கை, இனக்கொலை செய்தது குறித்த விசாரணை நடக்க வேண்டும். மனித உரிமைகள் கவுன்சில் அந்த முடிவுக்கு வர வேண்டும். அது நடக்கின்ற காலம் வரும். அதற்கு, இளைஞர்களை அழைக்கின்றேன்.

இந்த மடல் இளைஞர் கூட்டத்துக்காக, மாணவச் செல்வங்களுக்காக. உங்கள் ஆயுதச்சாலையில் ஒரு அம்புறாத்தூளியில் இதை நீங்கள் ஒரு ஆயுதமாக ஆக்கிக் கொள்ளுவதற்காக. நம் பக்கம் நியாயம் இருக்கின்றது. நம் குரலில் சத்தியம் இருக்கிறது. நம் கோரிக்கையின் நீதியை, இனி உலகத்தில் எவரும் மறுக்க முடியாது. சுதந்திரத் தமிழ் ஈழம் என்று உணர்ச்சிவயப்பட்டுச் சொல்லவில்லை. சிங்களவனுக்கு அடிமையாக ஏன் வாழ வேண்டும்?

இன்றைக்கு நாம் கடமை தவறினாலும், நாளைய வருங்கால இளைஞர்கள், இந்தத் தமிழகத்தின் சின்னஞ்சிறு பிள்ளைகள் வளருகின்றபோது, மான உணர்ச்சி உள்ளவர்களாக, கடந்த காலத்தை மறக்காதவர்களாக, அவர்கள் நீதியை நிலைநாட்டுவார்கள்.

எத்தனைக் குழந்தைகள், எத்தனைத் தாய்மார்கள், எத்தனை உறவுகள்? அவர்கள் எழுப்பிய மரண ஓலம். காற்றோடு கலந்து, கடல் அலைகளைக் கடந்து, நம் நெஞ்சத்தைத் தாக்க வில்லையா? இளைய சமுதாயம் எண்ணிப் பார்க்கட்டும்.

சுய நிர்ணய உரிமையும், பொது வாக்கெடுப்பும், ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல. இத்தனை தேசங்கள் மலர்ந்து இருக்கின்றன என்று சொன்னேன். அந்தப் பட்டியலில், சுதந்திரத் தமிழ் ஈழம் ஒரு புதிய நாடாகப் பரிணமிக்கும் நாள் வரும். அந்த நாளையும் என் கண்களாலேயே பார்த்துவிட மனம் ஏங்குகிறது!

இந்தக் கடிதத்தை எழுதி முடித்து, அச்சுக்கு அனுப்ப இருந்தபோதுதான் அதிர்ச்சி தரும் செய்தி வந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணாகாட் பகுதியில், பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது மட்டும் அல்லாமல், கொல்லப்பட்ட இரண்டு இந்திய வீரர்களின் தலையைத் துண்டித்துக் கோர வெறியாட்டம் நடத்தியது என்பதே அந்தச் செய்தி. யுத்தகளங்களில் கூட இதுபோன்ற குரூரத்துக்கு இடம் இல்லை. இந்திய அரசு தனது பலத்த கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. அடுத்த மடலில் இதுகுறித்து எழுதுகிறேன்.

எழுச்சி சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்!
பாசமுடன்,
வைகோ

ஓமன் மதிமுக இணையதள அணி 

சிறை சென்றது ஏன்? வைகோ கடிதம்-4, மக்கள் ஆட்சிக்கு மகுடமே பொது வாக்கெடுப்பு! பாகம்-6!

ஈழத்தின் நியாயம்:-

நான் உலகத்தின் மனசாட்சியின் கதவுகளைத் தட்டுகின்றேன். எங்கள் இனம் அழிக்கப்படுகின்றபோது, எங்கள் இனம் கரு அறுக்கப்படுகின்றபோது, எங்கள் குழந்தைகள் கொல்லப்பட்டதற்குப்பிறகு, இலட்சக்கணக்கானவர்கள் பட்டினி போட்டுக் கொல்லப்பட்டதற்குப் பிறகு, மருத்துவமனைகள் மீது குண்டுகளை வீசிக் கொல்லப்பட்டதற்குப் பிறகு, மருந்துகள் இன்றிச் செத்ததற்குப்பிறகு, ஏழு வல்லரசுகளின் ஆயுத உதவிகளைக் கொண்டு, எவராலும் வெல்ல முடியாத விடுதலைப்புலிகளின் படையைப் போரில் பின்னடையச் செய்வதற்கு ஒரு வல்லரசாகிய இந்தியா ஆயுதம் கொடுத்து உதவியதற்குப் பிறகு, தமிழர் தாயகத்தில் சிங்களவன் குடியேற்றம் நடக்கின்ற போது, எங்கள் கோவில்களில் அவன் சிங்கள பௌத்த விகாரைகளைக் கட்டுகின்றபோது, எங்கள் பெயர்களை அழிக்கின்றபோது, எங்கள் கல்லறைகளை இடித்து விட்டு, சிங்களப் படை முகாம்களை அமைக்கின்றபோது, எங்கள் மொழியை அழித்து விட்டு, அவன் மொழியில் எழுதுகிறபோது, இனி எப்படிச் சேர்ந்து வாழ முடியும்?

எங்கள் பாட்டனுக்குப் பாட்டனுக்குப் பாட்டனுக்குப் பாட்டன், வேலும் வாளும் தாங்கி, மரக்கலங்களில் சென்று வாழ்ந்த அந்தக் காலத்துக்குப் பிறகு, தமிழனின் வீரத்தை நிலை நாட்டியவர்களின் வழித் தோன்றல்களாகிய நாங்கள் முழங்குகிறோம் தனி ஈழமே தீர்வு என்று.

இன்றைக்கு அகிலத்தின் குரல் கேட்கின்றபோது, 2 இலட்சத்து 52 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட நியூ கேலடோனியா என்ற ஒரு பசிபிக் பெருங்கடல் தீவு ஒன்று, பிரெஞ்சு ஆதிக்கத்துக்கு உள்ளே இன்றைக்கும் இருக்கின்றது. அங்கே பொது வாக்கெடுப்பு நடக்கப் போகின்றது. ஐ.நா. அறிவித்து இருக்கின்றது. 2019 க்குள், அவர்கள் சுதந்திர நாடாக இருப்பதற்காகப் பொது வாக் கெடுப்பு நடக்கப் போகின்றது.

அடுத்து போகெய்ன்வில்லா என்று ஒரு சிறு நாடு. பூக்களைத் தூவுகின்ற மரத்தின் பெயர். அது, பபுவா நியூ கினியா (Papuva New Guinea) ஆதிக்கத்துக்குள் இருக்கின்றது. மொத்த மக்கள் தொகை 1 இலட்சத்து 50 ஆயிரம் பேர். அங்கே பொது வாக்கெடுப்பு நடக்கப்போகின்றது.

1975 இல், தந்தை செல்வா அவர்கள்,

‘எங்களுக்கு இங்கே உரிமைகள் மறுக்கப்படுகின்றன; எனவே, எங்கள் மக்கள் இனி உங்களோடு சேர்ந்து இருக்க முடியாது; எங்களை நசுக்குகின்றீர்கள்; நாங்கள் ரோமானிய அடிமைகள் அல்ல; நாங்கள் சுதந்திரமாக வாழ விரும்புகிறோம்; அதற்காக, நான் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பை விட்டு விலகுகிறேன். சிங்களவர்களுக்கு நான் சவால் விடுகின்றேன்: அதே காங்கேசன்துறை தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலில் நான் மீண்டும் போட்டி இடுவேன். சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் என்பதையே என் மூல முழக்கமாக வைத்துப் போட்டி இடுகிறேன். மக்கள் அதை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் எனக்கு வாக்கு அளிக்கட்டும். இல்லை, என் கருத்து தவறு என்றால், மக்கள் என்னைத் தோற்கடிக்கட்டும்’ என்றார்.

ஆனால், இரண்டு ஆண்டுகள் அங்கே தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டது சிங்கள அரசு. கடைசியில், வேறு வழி இன்றித் தேர்தலை நடத்தியது. 78 விழுக்காடு மக்கள், தந்தை செல்வாவை ஆதரித்து வாக்கு அளித்தனர். ‘சுதந்திரத் தமிழ் ஈழக் கோரிக்கையை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்’ என்று அவர் அறிவித்தார். நாடாளுமன்றம் சென்றார். 14 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான அறிவிப்பை வெளியிட்டு விட்டு, நாடாளுமன்றத்தை விட்டு வெளியே வந்தார்.

வட்டுக்கோட்டை பிரகடனம்:-

அனைத்துத் தமிழ் அமைப்புகளின் கூட்டத்தை 1976 இல் வட்டுக்கோட்டையில் பண்ணாகம் என்ற இடத்தில் கூட்டினார். மே 14 ஆம் நாள். அங்கே ஒரு தீர்மானத்தை நிறை வேற்றினார். அதுதான், புகழ் பெற்ற வட்டுக்கோட்டை பிரகடனம் ஆகும்.

அந்தத் தீர்மானத்தைத் தொடங்கிய முதல் சொல்லில் இருந்து கடைசிச் சொல் வரை, ஒரு நிறுத்தற்குறி கூடக் கிடையாது; ஒரு முற்றுப்புள்ளி கிடையாது. தமிழர்கள் எவ்வளவு கூர்த்த மதி படைத்தவர்கள், அறிவு ஆற்றல் நிறைந்தவர்கள் என்பதை அந்தத் தீர்மானம் எடுத்துக் காட்டும். அற்புதமாக வடித்து இருக்கின்றார்கள். சுதந்திரமான இறையாண்மை உள்ள, மதச்சார்பு அற்ற, தமிழ் ஈழ சமதர்மக் குடியரசு; அதுவே எங்கள் இலக்கு என்று பிரகடனம் செய்து இருக்கின்றார்கள்.

இனி, இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்லட்டும் என்று அறிவித்தார் தந்தை செல்வா.

ஈழத்தில் பொது வாக்கெடுப்பு முடிந்து விட்டது:-

இதற்குப்பிறகு, 77 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கின்றது. தந்தை செல்வா வழிகாட்டிய பாதையில், சுதந்திரத் தமிழ் ஈழம் என்ற கொள்கையை முன்வைத்துத் தமிழர் கூட்டணி தேர்தலைச் சந்தித்தது. 19 இடங்களில் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றனர். 90 விழுக்காடு தமிழ் மக்கள் இந்தக் கூட்டணியை ஆதரித்து வாக்கு அளித்தார்கள். இதுதான், பொது வாக்கெடுப்பு.

காஷ்மீரில் மூன்று சட்டமன்றத் தேர்தல்கள் வழியாக நாங்கள் நடத்தி விட்டோம்; அதுதான் பொது வாக்கெடுப்பு, என்று இந்தியப் பிரதிநிதி முகமது கரீம் சாக்ளா, ஐ.நா. சபையில் சொன்னார் அல்லவா? தேர்தலே பொது வாக்கெடுப்புதான் என்றார் அல்லவா? அதுபோல, 1977 ஆம் ஆண்டு, இலங்கை நாடாளுமன்றத் தேர்தலே ஒரு பொது வாக்கெடுப்புதான். 95 விழுக்காடு தமிழ் மக்கள், நாங்கள் ஒரு சுதந்திர நாட்டை அமைத்து வாழ விரும்புகிறோம் என்பதைப் பதிவு செய்ததே, ஒரு பொது வாக்கெடுப்புதான்.

அடுத்து, 1983 ஆம் ஆண்டு, அங்கே உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் பங்கு ஏற்க வேண்டாம் என்று, விடுதலைப்புலிகள் கோரிக்கை விடுத்தனர். 99 விழுக்காடு தமிழ் மக்கள் வாக்கு அளிக்க வில்லை. அதுவும் ஒரு பொது வாக்கெடுப்புதான்.

84 இல் (2004) இல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் தலைமையை ஏற்றுக் கொண்டோம் என்று அறிவித்த தமிழர் கட்சிகள், 23 தொகுதிகளில் போட்டியிட்டு, 22 இடங்களில் வெற்றி பெற்றன. 95 விழுக்காடு தமிழ் மக்கள் ஆதரித்தனர். அதுவும் பொது வாக்கெடுப்புதான்.

2005 ஆம் ஆண்டு, குடியரசுத் தலைவர் தேர்தல். இந்தத் தேர்தலில் வாக்கு அளிக்க வேண்டாம் என்று விடுதலைப் புலிகள் கேட்டுக் கொண்டனர். 95 விழுக்காடு தமிழ் மக்கள் வாக்கு அளிக்கவில்லை. இராணுவ அடக்குமுறையால், 1.23 விழுக்காடு மக்கள் யாழ்ப்பாணத்தில் வாக்கு அளிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். அதுவும் பொது வாக்கெடுப்புதான்.

இத்தனை பொது வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டுவிட்டன. இன்றைக்கு, தமிழர் பகுதிகளில் சிங்களர்களைக் கொண்டு வந்து குடி அமர்த்துகின்றார்கள். மானத்தோடு சுதந்திரமாக வாழ்வதற்காகத் தான் தமிழர்கள் ஆயுதம் ஏந்தினார்கள், இரத்தம் சிந்தினார்கள். எனவே, தமிழ் ஈழம் அமைப்பதற்காகப் பொது வாக்கெடுப்பு நடத்துங்கள் என்று ஐ.நா. வின் கதவுகளைத் தட்டுகின்றோம்.

யாராவது, ஈழத்தில் போர் முடிந்து விட்டது என்றோ, தமிழ் ஈழக்கோரிக்கை ஒடுங்கி விட்டது என்றோ நினைத்தால், அவர்கள் வரலாறைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள். ஈழத்தமிழர்கள் செய்த உயிர்த்தியாகம், சிந்திய செங்குருதி அவர்களது கோரிக்கையை வெற்றி பெறச் செய்யும்.

தமிழகம்தான் காரணம்:-

ஈழத்தில் இவ்வளவு துயரங்களுக்கும் யார் காரணம் தெரியுமா? இந்தத் தமிழகம்தான் காரணம். மேற்கு நாடுகளைச் சேர்ந்தவர்களோடு பேசுகின்றபோது, அவர்கள் என்னிடம் கேட்கின்ற கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை; வெட்கித் தலைகுனிய வைக்கின்றன. உலகத்தில் மனித உரிமைகள் அழிக்கப்பட்டால், எல்லா இன மக்களும் சேர்ந்து அவர்களை ஆதரிக்கின்றார்களே, நீங்கள் ஏழு கோடிப் பேர் தமிழ்நாட்டில் வாழுகின்றீர்களே? இன அடிப்படையில், இரத்த உறவுகள் கொண்டவர்கள்தானே? நீங்கள் ஏழு கோடிப் பேர் இங்கே இருந்தும், அங்கே இவ்வளவு படுகொலைகள் எப்படி நடக்க முடிந்தது? அவர்களைப் பாதுகாக்க வேண்டியது நீங்கள்தானே? என்று அவர்கள் கேட்கின்றார்கள்.

ஒருவேளை, இந்த ஏழு கோடிப் பேர் இல்லை என்றால், அவர்களுக்கு உலகத்தின் பல நாடுகளின் ஆதரவு கிடைத்து, தமிழ் ஈழம் என்றோ மலர்ந்து இருக்கும். இந்த ஏழு கோடிப் பேர் வாழுகின்ற இந்தியாவைக் கடந்து, அனைத்து உலக நாடுகள் இந்தப் பிரச்சினையில் தலையிடாது; நீங்கள் ஏழு கோடிப் பேர் இந்தியாவில் இருப்பதால், உங்களுக்கு இல்லாத அக்கறை நமக்கு எதற்கு என்ற எண்ணத்தை, இந்தியா ஏற்படுத்துகின்றது.

இலங்கையில் இருக்கக்கூடிய தமிழர்கள் பிரச்சினைகளை, நாங்கள் பேசித் தீர்த்துக் கொள்வோம். நாங்கள் சிங்கள அரசுக்கு ஆலோசனைகளைச் சொல்லுவோம். நாங்கள் இதுவரை எப்படித் தமிழர்களைக் கொல்லுவது என்று ஆலோசனைகள் கொடுத்து, திட்டங்களை வகுத்துக் கொடுத்து, தளபதிகளை அனுப்பி, படைகளை அனுப்பி, தளவாடங்கள் கொடுத்து நாங்கள் கொன்றோம். இனி என்ன செய்வது? என்று நாங்கள் பார்த்துக் கொள்வோம். நீங்கள் ஏன் மூக்கை நீட்டுகின்றீர்கள்? என்று சொல்லுவதற்காகத்தான் என்று கொடியவன் ராஜபக்சேயை, புத்த கயாவுக்கும், திருப்பதிக்கும் அழைத்துக் கொண்டு வந்தார்கள்.

எதற்காக அழைத்து வருகின்றார்கள்?

இராஜபக்சேயை அழைத்து வந்தது நியாயம் தானா? சாஞ்சி அறப்போர்க் களத்தின்போது, இலட்சக்கணக்கான எங்கள் தமிழ் மக்களைக் கொன்றவனை, இங்கே அழைத்து வருவது நியாயம் தானா? என்று, வட இந்தியச் செய்தியாளர்கள், தொலைக்காட்சி ஊடகங்களின் வாயிலாக நான் கேட்டேன்.

கொலைகாரனை புத்த கயாவுக்கு அழைத்து வருகின்றீர்களே, அவன் காலடிபட்டால், புத்தரின் எலும்புகள் கூட நடுங்குமே? தமிழர்களின் குருதி படிந்த கரங்களோடு வருகின்றானே? அவனை அழைத்து வருவது நியாயம்தானா? கேள்வி கேட்பார் இல்லையா? நாங்கள் அநாதைகளா? நாங்கள் இந்தியக் குடிமக்கள்தானா? 500 க்கும் மேற்பட்ட எங்கள் தமிழக மீனவர்களைக் கொன்று விட்டானே, நாங்கள் இந்தியக் குடிமக்கள்தானா?

2000 இந்துக் கோவில்களை உடைத்து நொறுக்கியவன், திருகோணமலை சிவன் கோவில் தேரை, அழகாக வடித்த தச்சர்களின் மணிக்கரங்களை வெட்டிக் கொன்றவன், முருகன் கோவிலுக்குப் பக்கத்தில் பௌத்த விகாரைகளை எழுப்புகிறவன், துர்க்கை, காளி கோவில்களை உடைத்தானே, திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் அவனுக்கு என்ன வேலை?அவனை இங்கே அழைத்து வருவது நியாயம் தானா? எதற்காக அழைத்து வந்தார்கள்?

தொடருகிறது...

ஓமன் மதிமுக இணையதள அணி

சிறை சென்றது ஏன்? வைகோ கடிதம்-4, மக்கள் ஆட்சிக்கு மகுடமே பொது வாக்கெடுப்பு! பாகம்-5!

சிறை சென்றது ஏன்? வைகோ கடிதம்-4, மக்கள் ஆட்சிக்கு மகுடமே பொது வாக்கெடுப்பு! பாகம்-5!

தமிழனுக்கு ஒரு நாடு இல்லையே?

இந்தக் கட்டத்தில்தான், 1984 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் நடைபெற்ற ஈழத்தமிழர்கள் ஆதரவு மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற நான், ஐ.நா.மன்றத்தை முதன்முதலாகப் பார்த்தேன்.

நியூயார்க் நகரத்தில் அமைந்து இருக்கின்ற ஐ.நா. மன்றக் கட்டடத்தை முழுமையாகச் சுற்றிப் பார்த்தேன். அங்கே வரிசையாக அமைக்கப்பட்டு இருக்கின்ற கொடிக்கம்பங்களில், 171 நாடுகளின் கொடிகள் பறக்கின்றன. இந்தத் தரணியில், தமிழன் இல்லாத நாடு இல்லை. ஆனால், அன்றைக்கு 8 கோடி பேர்களாக இருந்த தமிழர்களுக்கு என்று, இந்த உலகில் ஒரு தனி நாடு இல்லை என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தி, நியூயார்க் நகரில் இருந்து டெட்ராய்ட் நகருக்குச் சென்ற நான் அங்கிருந்து, தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 690 நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களை அவர்கள் இன்னமும் பாதுகாத்து வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஏக்கப் பெருமூச்சோடு, கவலை நிறைந்த கனத்த இதயத்தோடு, ஏக்க விழிகளோடு, இந்த ஐ.நா. மன்றக் கட்டடத்துக்கு முன்னால் நடக்கின்றபோது, இத்தனை நாடுகளின் கொடிகளை நான் பார்க்கின்றேன்; ஆனால், இந்த உலகத்துக்கே நாகரிகத்தை, பண்பாட்டை, அரசை, நெறியை, மானத்தைக் கற்றுக் கொடுத்த, உலக நாடுகளில் எல்லாம் வணிகம் செய்த, வீரத்தால் சிறந்த, இன்றைக்கு உலகத்தின் ஒரு பகுதியில் நாதி அற்றுச் செத்துக் கொண்டு இருக்கின்ற தமிழர்களுக்கு ஒரு தனி நாடு இல்லையே? என்று நான் கவலைப்பட்டேன்.

அடுத்து, 1990 ஜனவரி 1 முதல், 1999 டிசம்பர் 31 வரை. ஐ.நா. உறுப்பு நாடுகள், 204 ஆகி விட்டன. அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை, 175 ஐத் தாண்டி விட்டது.

அடுத்து, புத்தாயிரம் பிறந்து விட்டது. 2000 மலர்ந்துவிட்டது. 2009 டிசம்பர் 31 வரையிலும், 213 நாடுகளுள், ஏறத்தாழ 193 நாடுகள் இறையாண்மை பெற்ற தனி நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டு விட்டன.

இரண்டு நாடுகளுக்கு வாக்கு அளிக்கும் உரிமை இல்லை. வந்து அமரலாம்; வாதங்களைப் பாக்கலாம். Observer Status. ஒன்று, பாலஸ்தீனம்; மற்றொன்று, வாடிகன் நகரம். இன்னமும், 11 நாடுகள், ஐ.நா. மன்றத்தில் சுதந்திர நாடுகளாக உரிமை பெறுவதற்கு முயற்சித்துக் கொண்டு இருக்கின்றன. வடக்கு சைப்ரஸ். துருக்கியின் பிடியில் இருந்து விடுபடத் துடிக்கின்றது. கொசோவாவின் விடுதலை இன்னமும் அங்கீகரிக்கப்படவில்லை.

சோமாலியா லாண்ட், தைவான், தெற்கு ஒசேட்டியா ஆகியவை அந்த வரிசையில் வருகின்றன. ஜார்ஜியாவில் இருந்து, சின்னஞ்சிறு பகுதியான தெற்கு ஒசேட்டியா, நாங்கள் சுதந்திரமாக வாழ வேண்டும்; தனி நாடாக ஆக வேண்டும் என்று போராடுகிறது. 2011 மக்கள்தொகைக் கணக்கின்படி, அங்கே மொத்த மக்கள் தொகையே, 55 ஆயிரம் பேர்கள்தாம். 1990 ஆம் ஆண்டிலேயே, இவர்கள் ஒரு பொது வாக்கெடுப்பை நடத்துகின்றார்கள்.

ஜார்ஜியா, ரஷ்யாவை விட்டு வெளியேறுகின்றது. அந்த ஜார்ஜியாவில் இருந்து இவர்கள் தனிநாடு ஆக வேண்டும் என்கிறார்கள். என்ன காரணம்? ‘நாங்கள் தனி இனம். எங்களுக்கு என்று தனி இன வரலாறு இருக்கின்றது. ஜார்ஜியாவின் ஆதிக்கத்தின்கீழ் இருக்க நாங்கள் விரும்பவில்லை’ என்கிறார்கள். அதற்காக ஆயுதப் புரட்சி நடத்தினார்கள். கவனிக்க வேண்டும்.

இந்தக் கட்டத்தில், ரஷ்யா, தெற்கு ஒசேட்டியாவுக்கு ஆதரவாக நிற்கின்றது. போர் நிறுத்தம் வருகின்றது. 92 இல் அவர்கள் வாக்கெடுப்பு நடத்துகின்றார்கள். அதை உலக நாடுகள் ஏற்கவில்லை. இப்போது, 2008 நவம்பர் 12 இல், அதே தெற்கு ஒசேட்டியாவில் ஒரு பொது வாக்கெடுப்பு நடந்தது. பார்வையாளர்களாக 34 பேர். ஜெர்மனி, ஆஸ்திரியா, போலந்து, ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

95 விழுக்காடு வாக்காளர்கள் வாக்கு அளித்து, அவர்களுள் 99 விழுக் காட்டினர், தனிநாடாக ஆவதற்கு ஆதரவு அளித்தனர். இந்தப் பொது வாக்கெடுப்பை ரஷ்யா முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்றுக் கொண்டது.

வெனிசூலா ஏற்றுக்கொண்டது; நிகரகுவா ஏற்றுக் கொண்டது. நேட்டோ நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் எதிர்க்கின்றன. பிரச்சினை அந்த அளவிலேயே இருக்கின்றது. இன்னமும், 11 நாடுகள், ஐ.நா. அங்கீகாரத்தைப் பெறக் காத்துக்கொண்டு இருக்கின்றன. 55000 மக்கள் தொகையைக் கொண்ட தெற்கு ஒசேட்டியாவும், அந்தப் பட்டியலில் இருக்கின்றது.

தோழர்களே, அயர்லாந்து நாட்டில் புரட்சி எழுந்தது. யேமன் டிவேலரா போரிட்டதும், நாடாளுமன்றத்துக்கு உள்ளே சென்றதும், இரண்டாவது முறை மன்னர் பெயரால் விசுவாசப்பிரமாணம் எடுத்துக் கொண்டதும், அவர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டதும், உடனே வெளியேறியது. பின்னர் அது தனி நாடாக மலர்ந்தது. அது ஒரு பக்கம்.

நம்பிக்கை கொள்வோம்:-

நான் இதையெல்லாம் எழுதுவதற்குக் காரணம் உண்டு. நம்பிக்கை இழக்கக் கூடாது. பிரபாகரன் ஆயுதம் ஏந்தியதைச் சிலர் விமர்சிக்கின்றார்களே, நான் சொல்லுகிறேன்; இத்தாலியின் பிடியில் இருந்து எத்தியோப்பியா விடுதலை பெற்றது. அதில் இருந்து ஆறு இலட்சம் மக்களை மட்டுமே கொண்ட எரித்ரியாவுக்கு, முதலில், சுயாட்சி அதிகாரம் தருகிறோம் என்று சொல்லி ஏமாற்றினார்கள். எரித்ரியாவில் ஆயுதப் போராட்டம்தான் நடைபெற்றது. எரித்ரியர்களை நசுக்குவதற்கு, சோவியத் ரஷ்யா, எத்தியோப்பியாவுக்கு ஆயுதம் கொடுத்தது. 1,20,000 எத்தியோப்பிய இராணுவத்தினர், எரித்ரிய விடுதலைப் படையை நசுக்க முயன்றார்கள். அதனால், எரித்ரிய விடுதலைப்படை பின்வாங்கியது. சில தோல்விகள் ஏற்பட்டன. ஆனால், 1984 ஆம் ஆண்டு அவர்கள் திரும்பத் தாக்கி, அசரியா என்ற இடத்தில், 40 விமானங்களைத் தவிடுபொடியாக ஆக்கினார்கள். அதைப்போலத்தான், கொழும்பு விமான நிலையத்தில் நின்றுகொண்டு இருந்த விமானங்களை, பிரபாகரனின் படை தாக்கி அழித்தது.

93 ஏப்ரலில் எரித்ரியாவில் பொது வாக்கெடுப்பு. தனி நாடாக அங்கீகரித்து விட்டது. உலகம் அதை ஏற்றுக் கொண்டது; ஐ.நா. இடம் அளித்தது.

இத்தனை நாடுகள் பிரிந்து இருக்கின்றதே, நான் கேட்கிறேன்; ஸ்லோ வேனியாவிலே பாலியல் கொடுமைகள் நடந்தனவா? குரேஷியாவில் இனப்படு கொலை நடந்ததா? மால்டோவாவில் இனப் படுகொலை நடந்ததா? நோர்வே, ஐஸ்லாந்துக்கு என்ன குறை? எதுவும் நடக்கவில்லையே? ‘நாங்கள் தனி இனம்; எனவே, நாங்கள் பிரிந்து போகிறோம்’ என்று போய்விட்டார்களே? புதிய புதிய நாடுகள் மலர்ந்து கொண்டே இருக்கின்றனவே?

அவற்றையெல்லாம் விட ஆயிரம் மடங்கு நியாயமான காரணங்கள் தமிழ் ஈழத்துக்கு இருக்கின்றன. இலட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டார்களே?

கிழக்குத் தைமூரைப் பற்றிச் சொன்னேன். இந்தோனேசிய நாடு, முதலில் போர்ச்சுகல் நாட்டின் ஆதிக்கத்துக்கு உள்ளே இருந்தது. பின்னர் விடுதலை பெற்றது. இந்தோனேசியாவின் ஆயிரக்கணக்கான தீவுகளுக்கு உள்ளே ஒரு தீவுதான் கிழக்குத் தைமூர். அது தனிநாடாக விரும்பியது. இளைஞர்கள் ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். அப்போது, முன்பு இந்தோனேசியாவை ஆண்ட போர்ச் சுகல் சொன்னது; அவர்கள் கேட்பது நியாயம். உங்களோடு இருக்க அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் தனிநாடாக ஆகட்டும் என்று, இந்தோனேசியாவோடு, போர்ச்சுகல் ஒப்பந்தம் போடவில்லையா? அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் பொது வாக்கெடுப்பு நடந்தது; கிழக்குத் தைமூர் தனி நாடாக ஆனது.

இங்கிலாந்துதான் பொறுப்பு:-

இதைத்தான், 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள், நான் நெஞ்சார நேசிக்கின்ற பிரபாகரன் பிறந்த நாளில், லண்டன் மாநகரில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் இருக்கின்ற ஒரு அரங்கத்தில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து இருந்த அந்தக் கூட்டத்தில் சொன்னேன்.

ஈழத்தமிழர்கள் ஒரு தனி தேசிய இனம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, தனி அரசு அமைத்து வாழ்ந்தவர்கள். அந்தத் தீவுக்கு ஒல்லாந்தர்கள் வருவதற்கு முன்பு, போர்த்துகீசியர்கள் வருவதற்கு முன்பு, நீங்கள் அங்கே கால் பதிப்பதற்கு முன்பு, அவர்கள் தனி அரசு அமைத்து ஆட்சி நடத்தி வந்தார்கள். ஆனால், நீங்கள், உங்கள் நிர்வாக வசதிக்காக, தமிழர்கள், சிங்களர்கள் என இரண்டு தனித்தனித் தேசிய இனங்களையும், உங்கள் அதிகார நுகத்தடிக்கு உள்ளே, ஒரே அமைப்பாகக் கொண்டு வந்து விட்டீர்கள்.

1948 ஆம் ஆண்டு, பிப்ரவரி 4 ஆம் நாள், இலங்கைத் தீவுக்கு விடுதலை அளித்து விட்டு வெளியேறினீர்கள். ஆனால், எங்கள் மக்களைக் காவு கொடுத்து விட்டீர்கள். சிங்களவனின் அடிமைப் பிடிக்கு உள்ளே சிக்க வைத்து விட்டீர்கள். அவன், எங்கள் தமிழர்களின் மொழி உரிமையை மறுத்தான். சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்றான். இந்திய வழித்தோன்றல்களான பத்து இலட்சம் தமிழர்களின் குடி உரிமையைப் பறித்தான். அவர்கள் 100, 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து சென்றவர்களின் வழித்தோன்றல்கள்.

ஆனால், அந்த மண்ணிலேயே பிறந்தவர்கள். தங்கள் இரத்தத்தை, வியர்வையைக் கொட்டி, இலங்கையை வளப்படுத்தியவர்கள். அவர்களுடைய குடி உரிமையைப் பறித்தார்கள். சம உரிமை என ஈழத் தமிழர்கள் நியாயம் கேட்டார்கள். இராணுவத்தைக் கொண்டு அவர்களை நசுக்கினார்கள். கோவில்கள், வழிபாட்டுத் தலங்களை இடித்தார்கள். தமிழர்களின் மொழியை ஒடுக்கினார்கள். சம உரிமை உள்ளவர்களாக ஈழத்தமிழர்கள் அங்கே வாழ முடியவில்லை. நீதி கேட்டவர்களுக்கு, இராணுவம் துப்பாக்கித் தோட்டாக்களையே பரிசாகக் கொடுத்தது. தமிழர்களின் குழந்தைகள் கொல்லப்பட்டனர். தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்தார்கள். அவர்களையும் கொன்று குவித்தார்கள். இதற்கெல்லாம் காரணம் நீங்கள்தான் என்று, அவர்களிடமே சொன்னேன்.

மன்னிக்க வேண்டும் இப்படிச் சொல்லுவதற்காக, உங்களால்தான் ஏற்பட்டது இந்த நிலைமை. நீங்கள்தான் சிங்களவனிடம் ஈழத்தமிழர்களை அடிமைகளாக ஆக்கிவிட்டுப் போய்விட்டீர்கள்.

கிழக்குத் தைமூர் பிரச்சினையில் போர்ச்சுகல் நாட்டுக்குப் பொறுப்பு இருந்ததைப் போல, ஈழத்தமிழர்களைப் பொறுத்த மட்டில், உங்களுக்குப் பொறுப்பு இருக்கின்றது. எனவே, தமிழ் ஈழம் அமைவதற்கு, நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள். தமிழர்களின் தாயகப் பகுதிகளில் இருந்து சிங்களவர்களை வெளியேறச் சொல்லுங்கள் என்றேன்.

ஸ்காட்லாந்து பொது வாக்கெடுப்பு:-

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேறியது. கேட்டால், வியப்பு அடைவீர்கள். ஆம்; ஸ்காட்லாந்து, தனியாகப் பிரிந்து செல்லுவதற்கு, பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு, பிரித்தானிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. 2014 இல் அந்தப் பொது வாக்கெடுப்பு நடந்தது.

மொத்தம் பதிவான வாக்குகள் 36,19,915

பிரிந்து செல்ல ஆதரவு - 16,17,989 - (44.70 விழுக்காடு)

பிரிந்து செல்ல எதிர்ப்பு - 20,01,926 (55.30 விழுக்காடு)

இத்தனைக்கும், ஸ்காட்லாந்து மக்கள் என்ன பிரித்தானியர்களால் அடிமைப் படுத்தப்பட்டு இருக்கின்றார்களா? அன்றைக்கு வில்லியம் வாலஸ் வாளை உருவிய காலம் வேறு. ராபர்ட் புரூஸ் படையெடுத்துத் தோல்வி கண்டு, சிலந்தி வலையின் மூலமாகப் பாடம் பெற்று, மீண்டும் படை திரட்டி, ஏழாவது முறை வென்று, ஸ்காட்லாந்து தனி அரசை நிறுவிய காலம் வேறு. ஆனால், இன்றைக்கு ஸ்காட்லாந்து மக்கள் தனி நாடாளுமன்றம் அமைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

முடியரசு ஒன்றியம் (United Kingdom) என்ற அமைப்புக்கு உள்ளே, இங்கிலாந்து மக்களோடு சம உரிமை பெற்றவர்களாக வாழ்கின்றார்கள். அவர்களுக்கு எதற்குத் தனி நாடு?

தமிழர்களுக்கு ஏன் தனிநாடு வேண்டும்? என்று கேட்கின்ற நண்பர்களுக்குச் சொல்லுகின்றேன். ஸ்காட்லாந்து மக்களுக்கு எந்தத் துன்பமும் இல்லை. விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்ற ஆண்டி முர்ரே ஒரு ஸ்காட்லாந்துக்காரர். அவரது வெற்றியை இங்கிலாந்தும் கொண்டாடியதே!

நான் ஒரு முறை லண்டனில் இருந்து விமானத்தில் சென்று கொண்டு இருந்த போது, என் பக்கத்து இருக்கையில் அமர்ந்து இருந்தவரோடு பேசிக்கொண்டு இருந்தேன். ‘நீங்கள் பிரிட்டிஷ்காரரா?’ என்று கேட்டேன். அதைக் கேட்டவுடன், அவருக்கு எவ்வளவு கோபம் என்று நினைக்கின்றீர்கள்? நான் கேட்டு முடிப்பதற்கு உள்ளாகவே, கன்னத்தில் அடித்தாற் போல அவர் சொன்னார்: I am not a British. I am a Scottish. நான் ஒன்றும் இங்கிலாந்துக்காரன் இல்லை, நான் ஒரு ஸ்காட்லாந்துக்காரன் என்று. அதைக் கேட்டு நான் அதிர்ந்து விட்டேன்.

ஸ்காட்லாந்து பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகவில்லை; அவர்களுடைய குழந்தைகள் கொல்லப்படவில்லை. ஆனால், அவர்கள், தனிநாடாக பிரிந்துசெல்லப் பொது வாக்கெடுப்பு.

மீண்டும் ஒரு பொது வாக்கெடுப்பு ஸ்காட்லாந்தில் நடக்கும் என்று ஸ்காட்லாந்து தலைவர் நிக்கோலோ ஸ்டர்ஜியான் அறிவித்து விட்டார். இம்முறை ஸ்காட்லாந்து தனி நாடாகும்.

தொடருகிறது...

ஓமன்மதிமுக இணையதள அணி