Tuesday, March 15, 2022

இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பு ஈடு பெற்றுத் தருக! நாடாளுமன்ற மாநிலங்கள் அவையின் சுழிய நேரத்தில் இன்று (15.03.2022) வைகோ MP கோரிக்கை!

1980 களின் தொடக்கம் முதல் இன்று வரையிலும், கடந்த 40 ஆண்டுகளாக, இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்களைத் தாக்கி வருகின்றது. 800 க்கும் மேற்பட்ட மீனவர்களைச் சுட்டுக்கொன்று விட்டனர்; ஆயிரக்கணக்கான மீனவர்களைக் கடுமையாகத் தாக்கிக் கை, கால்களை முறித்து விட்டனர்; மீன்பிடிப் படகுகளை உடைத்து நொறுக்கினர்; வலைகளை அறுத்து எறிந்தனர். கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு, எந்தவிதமான இழப்பு ஈடும் வழங்கவில்லை. அண்மைக்காலமாக, அவர்கள் மீன்பிடிப் படகுகளைப் பறித்துக்கொண்டு போய் ஏலம் விடுகின்றனர்.

கடந்த பிப்ரவரி 12 ஆம் நாள், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படை 12 மீனவர்களைச் சிறைப்பிடித்தது; இரண்டு படகுகளைப் பறிமுதல் செய்தனர். அதற்கு முன்பு, பிப்ரவரி 8 ஆம் நாள், 11 மீனவர்களைச் சிறைப்பிடித்தனர் மூன்று படகுகளைப் பறிமுதல் செய்தனர்; பிப்ரவரி 1 ஆம் நாள், 21 பேரைப் பிடித்துச் சென்றனர்.
பாக் நீரிணையில், இதுபோன்று எத்தனையோ முறை, இலங்கைக் கடற்படை துப்பாக்கியால் சுடுவதும், படகுகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக நிகழ்கின்றது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, கேரளக் கடலோரம் மீன்பிடித்துக் கொண்டு இருந்த இரண்டு மீனவர்கள் மீது, இத்தாலியக் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டனர்; படகுகளைத் தகர்த்து விட்டனர். இத்தாலிய வீரர்கள் இருவரை, கேரளக் காவல்துறை சிறைப்பிடித்தது; நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அவர்கள் பல மாதங்கள் சிறையில் இருந்தனர். கடைசியில், இறந்த இரண்டு மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு கோடி ரூபாய், படகுக்கு 2 கோடி ரூபாய் என பத்துக் கோடி ரூபாய் இழப்பு ஈடு தந்தபிறகு, அவர்கள் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
2011 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில், இந்திய அணி, இலங்கை அணியைத் தோற்கடித்து கோப்பையை வென்றதால் ஆத்திரம் அடைந்த இலங்கைக் கடற்படையினர், வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை அருகே ஹெலிகாப்டரில் வந்து, மீன்பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் மீது குண்டுகளை வீசியதில், ஆறு மீனவர்களின் உடல்கள் சிதறி சின்னாபின்னமாகிப் போனது. அப்போது நான் அங்கே சென்று, உயிர் இழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன்.
இலங்கைக் கடற்படை இதுவரை 800 தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்று இருக்கின்றது; ஆனால் அவர்களது குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவில்லை. எனவே, இலங்கைக் கடற்படை சுட்டுக்கொன்ற மீனவர்களின் குடும்பங்களுக்கு, உரிய இழப்பு ஈடு வழங்க வேண்டும் என்றும், உடைத்து நொறுக்கிய படகுகளுக்கும் இழப்பு ஈடு தர வேண்டும் என்றும்; இலங்கை அரசிடம் இருந்து இந்திய அரசு அதைப் பெற்றுத் தர வேண்டும் எனவும் நான் வலியறுத்துகின்றேன். அத்துடன், இலங்கைக் கடற்படை வீரர்கள், இந்திய நீதிமன்றக் குற்றக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்; தற்போது அந்த நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள மீனவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
15.03.2022

வைகோ MP விடுத்த கோரிக்கைகளுக்கு ஒன்றிய அமைச்சர்கள் விளக்கம்!

1. வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் அளித்து இருக்கின்ற விளக்கம்

அன்புள்ள திரு வைகோ அவர்களுக்கு,
16.12.2021 அன்று தாங்கள் எழுதிய கோரிக்கை விண்ணப்பம் கிடைக்கப் பெற்றேன். இந்திய உணவுக் கழத்திற்குச் சொந்தமான, சத்தியமங்கலம் இணைப்புச் சாலையில் இருந்து, கோவை கணபதியில் உள்ள அவர்களுடைய கிட்டங்கிக்குச் செல்கின்ற சாலையை, முறையான பராமரிப்பு மேற்கொள்வதற்காக, கோவை மாநகர் ஆட்சி மன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டு இருக்கின்றீர்கள்.
இதுகுறித்து ஆய்வு செய்தேன். 1.5 கிலோமீட்டர் நீளம், 100 அடி அகலம் உள்ள அந்தச் சாலையின் மொத்த நிலப்பரப்பு 11.30 ஏக்கர் ஆகும். அதன் வழியாக, கோவை பீளமேட்டில் உள்ள அவர்களுடைய கிட்டங்கி மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனமும் இணைக்கப்பட்டு இருக்கின்றது. அந்த நிலத்திற்கான சொத்து வரியை, இந்திய உணவுக் கழகம், கோவை மாநகர் ஆட்சி மன்றத்திற்குச் செலுத்தி வருகின்றது.
அந்த இடத்தின் உரிமையை விட்டுத் தர இயலாது என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும்கூட, கோவை மாவட்ட இந்திய உணவுக் கழகத்தின் மண்டல மேலாளர், கோவை மாநகர் ஆட்சி மன்றத்துடன் இதுகுறித்துப் பேச வேண்டும் என்றும், அந்தச் சாலையைப் பராமரிக்கவும், கழிவு நீர்க் குழாய்கள் அமைப்பதற்கும், தெரு விளக்குகள் நிறுவிடவும், கோவை மாநகர் ஆட்சி மன்றம் தீர்மானம் நிறைவேற்றி இருந்தால், அதைக் கேட்டுப் பெறவும், வழிகாட்டி இருக்கின்றோம். அதற்காக, அந்த இடத்தைக் கையகப்படுத்துவதாக இருந்தால், அதற்கு உரிய இழப்பு ஈட்டை, இந்திய உணவுக் கழகத்திற்குத் தர வேண்டு
இவ்வாறு, அமைச்சர் பியுஷ் கோயல், விளக்கம் அளித்து இருக்கின்றார்.
2. தொடரித்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கம்
அன்புள்ள திரு வைகோ,
12.08.2021 அன்று தாங்கள் எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றேன். தமிழ்நாட்டின் தூத்துக்குடி துறைமுகத்தை, கேரளத்தின் கொச்சி துறைமுகத்துடன் இணைப்பதற்காக, புதுக்கோட்டை, வல்லநாடு, திருநெல்வேலி, ஆலங்குளம், பாவூர்சத்திரம், செங்கோட்டை வழியாக புதிய தொடரித் தடம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இருக்கின்றீர்கள்.
இதுகுறித்து ஆய்வு செய்தேன். தூத்துக்குடி, கொச்சி துறைமுகங்கள், திருநெல்வேலி, செங்கோட்டை, கொல்லம் வழியாக, ஏற்கனவே இணைக்கப்பட்டு உள்ளது. திருநெல்வேலி, செங்கோட்டைக்கு இடையே, ஏற்கனவே தொடரித் தடம் உள்ளது. மேலும், திருநெல்வேலி, நாகர்கோவில் வழித்தடம், இரட்டைத் தடமாக ஆக்குகின்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகள் நிறைவு பெற்றால், பொருட்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து மேலும் விரைவு பெறும்.
இவ்வாறு, அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், விளக்கம் அளித்து இருக்கின்றார்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
15.03.2022

பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், தனியார்மயம் ஆகாது. வைகோ MP, சண்முகம் கேள்விக்கு, பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அளித்த உறுதிமொழி!

கேள்வி எண் 1339

கீழ்காணும் கேள்விகளுக்கு, பாதுகாப்புத் துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
1. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation-DRDO) பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இருக்கின்றதா?
2, அவ்வாறு இருப்பின், கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் விவரம் தருக.
3. அந்த ஆராய்ச்சிகளின் விளைவாக மேம்படுத்தப்பட்ட புதிய தொழில் நுட்பங்கள் என்ன?
4. இந்த ஆராய்ச்சி நிறுவனத்தை, தனியாரிடம் கொடுக்கும் திட்டம் உள்ளதா?
5. அவ்வாறு இருப்பின், அதற்கான காரணங்கள் என்ன?
பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் அளித்த விளக்கம்
1. பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம், பல்வேறு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
2. ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஆராய்ச்சிகள் குறித்த விவரம், அட்டவணையில் தரப்பட்டுள்ளது. (Annexure A)
அவற்றுள் குறிப்பிடத்தக்கவை...
1. ஏவுகணை அமைப்புகள்
2. வான்வழி முன் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு
3. தாக்குதல் வான் ஊர்திகள்
4. பீரங்கி போல மூடப்பட்ட தாக்குதல் ஊர்திகள்
5. உடனடித் தேவைப் பாலங்கள் அமைத்தல் மற்றும் பதுங்கு குழிகள் வெட்டுதல்.
6. வெடிமருந்துகள்
7. பீரங்கித் துப்பாக்கிகள் மற்றும் ஏவுகணைகள்
8. சிறிய தாக்குதல் கருவிகள் மற்றும் வெடிமருந்துகள்.
9. மேம்பட்ட கண்ணி வெடிகள் மற்றும் நீரில் மூழ்கிய பொருட்களை, ஒலி அலைகள் கொண்டு அறியும் முறை.
10. மின் போர்க்கருவிகள்
11. நீண்ட தொலைவு கண்காணிப்புக் கருவி (ரேடார்)
12. செயற்கை நுண்அறிவுத் திறன் அடிப்படையிலான கருவிகள்
13. கண்ணிவெடிகள் மற்றும் சோனார் கருவிகள்
14. தானியங்கி முறைகள்
15. மின்னணு போர் முறைமைகள்
கேள்வி எண் 3 க்கு விளக்கம்
டிஆர்டிஓ நிறுவனம் ஆக்கிய புதிய தொழில்நுட்ப முறைமைகள் குறித்த விளக்கம், இணைப்பு B யில் தரப்பட்டுள்ளது.
4. டிஆர்டிஓ நிறுவனம், தனியார் மயம் ஆகாது.
5. பொருந்தாது.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
15.03.2022

Monday, March 14, 2022

தமிழ்நாடு வன உயிரின நலவாரியக் குழுவை விரைந்து அமைத்திடுக! வைகோ MP வேண்டுகோள்!

தமிழகத்தில் வனம் சார்ந்த பகுதிகளில் நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைத் தலைவராகக் கொண்ட தமிழ்நாடு வன உயிரின நலக்குழுவின் தடையின்மைச் சான்று அவசியமாகும்.

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர், கடையம் ஒன்றியப் பகுதிகளுக்கு வேளாண்மை மற்றும் குடிநீர் ஆதாரத்திற்காக அப்பகுதி மக்களால் பன்னெடுங்காலமாக வலியுறுத்தி வந்த இராமநதி-ஜம்புநதி இணைப்புக் கால்வாய்த் திட்டம், திமுக அரசின் விரைவான செயல்பாட்டின் காரணமாக நிலம் கையகப்படுத்துதல் நிலையை அடைந்துள்ளது.
மேலும் இத்திட்டத்தில் நிலம் கையப்படுத்துதல் பணிகளுக்காக அரசுப் பணியாளர்கள் நியமனமும், அவர்களுக்கான ஊதியம் வழங்குவதற்கான ஆணை மற்றும் ஓராண்டு திட்டத்திற்கான கால நீட்டிப்பும் வழங்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அரசு மீதான நன்மதிப்பை உயர்த்தி உள்ளது.
இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்திட மேலே குறிப்பிட்டவாறு வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை விதிகள் படி, வன உயிரின நலக்குழுவின் தடையின்மைச் சான்று அவசியமாகிறது. வனம் சார்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அனைத்துத் திட்டங்களுக்கும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது.
எனவே, வன உயிரின நலக் குழுவிற்கு, வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை விதிகளின் படி தேவையான தகுதியான உறுப்பினர்களை நியமித்து, இராமநதி-ஜம்புநதி இணைப்புக் கால்வாய்த் திட்டம் உள்ளிட்ட அரசுத் திட்டங்களுக்கு தடையின்மைச் சான்று வழங்கிட வேண்டுகிறேன்.
இதுகுறித்து மாண்புகுமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அன்பான கவனத்திற்கு 10.03.2022 அன்று கடிதம் அனுப்பியுள்ளேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
14.03.2022

Sunday, March 13, 2022

பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ரவியை நீக்க வேண்டும் வைகோ அறிக்கை

தென் மண்டல பல்கலைக்கழகங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் பங்கேற்ற, கோவை மாநாட்டில் உரை ஆற்றிய ஆளுநர் ரவி, தமது அதிகார வரம்பை மீறி, அரசியல் கருத்துகளைப் பேசி இருப்பது கண்டனத்திற்கு உரியது.

கூட்டு ஆட்சி பற்றிப் பேசுபவர்கள், ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்; இந்தியா என்பது வேறுபட்ட மக்களின் உடன்படிக்கையால் அமைந்தது அல்ல; இந்தியா என்ற நாடு, 1947 ஆம் ஆண்டு பிறந்தது அல்ல என்று அவர் பேசி இருக்கின்றார்.
அதாவது, ஆர்எஸ்எஸ் சங் பரிவார் கூட்டம் என்ன பேசி வருகின்றதோ, தில்லி முதலாளிகள் என்ன சொல்கின்றார்களோ, அதே கருத்தைத்தான் ஆளுநர் ரவி, அந்த மாநாட்டில் முன்வைத்து இருக்கின்றார்.
அப்படியானால், 1947 க்கு முன்பு, இந்தியா என்ற நாடு, எங்கே இருந்தது? என்பதை அவர் விளக்க வேண்டும்.
200 ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பு வரையிலும், இந்தியாவில் 565 சிற்றரசுகள்தான் இருந்தன என்பது வரலாறு. அதற்கு முன்பும், மொகலாயர்கள் ஆட்சிக் காலத்திலும் கூட, தமிழ்நாடு ஒருபோதும், வட இந்திய அரசர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது இல்லை.
1947 வரையிலுமான ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்திலும் கூட, இப்போதைய இந்தியா என்ற அமைப்பு கிடையாது. தெற்கு இந்தியாவில், ஆந்திராவின் பெரும்பகுதிகளை உள்ளடக்கிய ஹைதராபாத் நிஜாம் அரசு ஒரு தனி நாடுதான்; கர்நாடகத்தின் பெரும்பகுதிகளை உள்ளடக்கிய மைசூரு சமஸ்தானம் ஒரு தனிநாடுதான்; கேரளத்தின் பெரும்பகுதிகளை உள்ளடக்கிய திருவாங்கூர் சமஸ்தானம் ஒரு தனிநாடுதான். தமிழ்நாட்டில் புதுக்கோட்டை சமஸ்தானம், 1947 வரையிலும் ஒரு தனி நாடுதான்.
வெள்ளைக்காரனின் துப்பாக்கியும், லத்திக் கம்புகளும்தான் இந்தியா என்ற நாட்டை உருவாக்கியது என்று, இந்தியக் குடிஅரசின் முன்னாள் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள் பேசி இருக்கின்றார்கள். அந்த வரலாறு, ஆளுநர் ரவிக்குத் தெரியவில்லை.
இந்தியா என்பது ஒரு நாடு அல்ல; பல்வேறுபட்ட பண்பாடுகள், பழக்கவழக்கங்களைக் கொண்ட, பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு துணைக்கண்டம்தான். இந்திய அரசு அமைப்புச் சட்டம் கூட, Union of India யூனியன் ஆஃப் இந்தியா, அதாவது இந்திய ஒன்றியம் என்றுதான் கூறுகின்றது.
அரசு அமைப்புச் சட்ட நாடாளுமன்றத்தில், நீண்ட நெடிய கருத்துப் பரிமாற்றங்களின் முடிவில் அரசு அமைப்புச் சட்டத்தை வரைந்த அறிஞர்கள்தான், இந்தச் சொல்லைத் தேர்ந்து எடுத்து எழுதி இருக்கின்றார்கள். அதுவும், ஆளுநருக்குத் தெரியவில்லை.
அந்த மாநாட்டில், காணொளி உரை ஆற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின், அருமையான விளக்கம் அளித்து இருக்கின்றார்.
புதிய கல்விக்கொள்கை என்பது, பிற்போக்குவாதம்; ஒன்றிய அரசு தனது பழமைவாதக் கருத்துகளை, பாடத்திட்டத்தின் வழியாக, மாணவர்களிடம் திணிக்க முயற்சிப்பது கவலை அளிக்கின்றது;
மாணவர்கள் இடையே, அறிவியல் மனப்பான்மையை, பல்கலைக்கழகங்கள் வளர்க்க வேண்டும்; மாநில அரசுகளின் கல்விக்கொள்கையின்படிதான் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் என்பது மக்களின் விருப்பம்; அதைத் துணைவேந்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே பட்டம் வழங்குவது மட்டும் பல்கலைக்கழகங்களின் கடமை அல்ல; அதன்பிறகு, அந்தத் தகுதிக்கு உரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதும், பல்கலைக்கழகங்கள் பொறுப்பு ஆகும். எனவே, அத்தகைய திறன்சார்ந்த கல்வி மற்றும் பயிற்சிகளை, பல்கலைக்கழகங்கள் கற்பிக்க வேண்டும்;
இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு, நிலையான தீர்வு என்பது, முன்பு மாநிலங்களின் அதிகாரத்தில் இருந்து பறித்துக்கொண்ட கல்வியை, மீண்டும் மாநில அரசுகளுக்கே வழங்க வேண்டும் என அவர் பேசி இருக்கின்றார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள், 1960 களில் மாநிலங்கள் அவையில் ஆற்றிய உரைகளில், இந்தியா என்பது ஒரு துணைக்கண்டம் என்ற கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி இருக்கின்றார். நான் மாநிலங்கள் அவையில் ஆற்றிய உரைகளிலும், அந்தக் கருத்தையே வலியுறுத்திப் பேசி வருகின்றேன்.
இந்தியா என்பது ஒரு நாடு அல்ல; இது ஒரு துணைக்கண்டம். பல்வேறு பழக்கவழக்கங்கள், பண்பாடுகளைக் கொண்ட, பல்வேறு தேசிய இனங்கள் ஒருங்கிணைந்த ஒன்றியம். எனவே, United States of America என்பது போல, இந்த நாட்டை, United States of India என்றுதான் அழைக்க வேண்டும் என, நாடாளுமன்றத்தில் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்து பேசி இருக்கின்றேன். அதை ஒரு புத்தகமாகவும் வெளியிட்டு இருக்கின்றேன்.
மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுகளின் செயல்பாடுகளுக்கு, முட்டுக்கட்டை போடுகின்ற வேலையைத்தான் ஆளுநர்கள் தொடர்ந்து செய்து வருகின்றார்கள். தமிழ்நாட்டின் முந்தைய ஆளுநர் தற்போதைய பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மேற்கு வங்கத்தின் தற்போதைய ஆளுநர் ஜெக்தீப் தங்கர் ஆகியோர், அரசு அமைப்புச் சட்டத்தைத் தொடர்ந்து மீறி வருகின்றனர். மேற்கு வங்க அரசை, முதல்வரை நாள்தோறும் கடுமையாக வசைபாடி, சுட்டுரைகள் எழுதி வருகின்றார் ஜெகதீப் தங்கர். 7 பேர் விடுதலை குறித்த பிரச்சினையில், தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை, தமிழக ஆளுநர் ரவி திருப்பி அனுப்பி, ஏழரைக் கோடித் தமிழர்களை அவமதித்து இருக்கின்றார்.
எனவே, அவர், ஆளுநர் பொறுப்பில் நீடிக்க அடிப்படை ஏதும் இல்லை.
பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்க, மராட்டிய அரசு தீர்மானித்து இருக்கின்றது. அதேபோல, தமிழ்நாட்டின் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து, ஆளுநர் ரவியை நீக்க வேண்டும் என, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகின்றேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
13.03.2022

Wednesday, March 9, 2022

பேரறிவாளன் பிணை விடுதலை ஆறுதல் தருகிறது! வைகோ MP கருத்து!

பேரறிவாளன் எந்தத் தவறும் செய்யாதவர். ராஜீவ்காந்தி படுகொலைக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. எந்தக் குற்றமும் செய்யாமல், முப்பதாண்டுகள் இளமை வாழ்க்கையை சிறையில் கழிக்க வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டது. தொடக்க காலத்தில் அவர் சிறையில் சித்ரவதை செய்யப்பட்டார். அவ்வளவு கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு இருந்தார்.

பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்பதுதான் அவர் மீதான அதிகபட்சக் குற்றச்சாட்டு. கடைசியில் உண்மை வெளிவந்தும் பயன் ஒன்றும் இல்லை. இழந்த முப்பதாண்டுகளைத் திரும்பப் பெற முடியுமா? இழந்த முப்பதாண்டுகளைப் பெறுவதற்கு பேரறிவாளனுக்கு வாய்ப்பு உண்டா? இல்லையே? நீதி சாகடிக்கப்பட்டு நீண்டகாலம் ஆயிற்று.
இப்பொழுது அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது.
இந்தப் பிணை விடுதலை அவரது தாய், தந்தை உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் ஆறுதலாக இருக்கும்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
09.03.2022

தலைமைக் கழக அறிவிப்பு - துணைப் பொதுச்செயலாளர்கள், தலைமைக் கழகச் செயலாளர் மற்றும் தணிக்கைக் குழு உறுப்பினர் தேர்தல்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகிகளில் காலியாக உள்ள கீழ்க்காணும் பொறுப்புகளுக்கான தேர்தல் கழகத்தின் 28 ஆவது பொதுக்குழுவில் நடைபெற இருக்கிறது.
துணைப் பொதுச்செயலாளர்கள்- 2 பேர்
மற்றும்
தலைமைக் கழகச் செயலாளர்- 1
தணிக்கைக் குழு உறுப்பினர்- 1
மேற்கண்ட பொறுப்புகளுக்கான தேர்தல் மார்ச் 23, 2022 அன்று சென்னை, அண்ணா நகர், 3ஆவது அவென்யூ -நியூ ஆவடி ரோடு சந்திப்பில் உள்ள விஜய் ஸ்ரீமகாலில் நடைபெற உள்ள 28 ஆவது பொதுக்குழுவில் நடைபெறும்.
தேர்தல் நடைமுறை
துணைப் பொதுச்செயலாளர் இருவர், தலைமைக் கழகச் செயலாளர் ஒருவர், தணிக்கைக் குழு உறுப்பினர் ஒருவர் ஆகிய பொறுப்புகளுக்கான வேட்புமனு விண்ணப்ப படிவம் தாயகத்தில் 20.03.2022 அன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை வழங்கப்படும்.
வேட்புமனு முன்மொழிதல் / வழிமொழிதல்
1. துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு:
கழக பொதுக்குழு உறுப்பினர் தகுதி பெற்றுள்ள 25 பேர் முன்மொழிய வேண்டும். 25 பேர் வழிமொழிய வேண்டும்.
2. தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்பு:
பொதுக்குழு உறுப்பினர் தகுதிபெற்றுள்ள 25 பேர் முன்மொழிய வேண்டும். 25 பேர் வழிமொழிய வேண்டும்.
3. தணிக்கைக் குழு உறுப்பினர் பொறுப்பு:
பொதுக்குழு உறுப்பினர் தகுதி பெற்றுள்ள 10 பேர் முன்மொழிய வேண்டும். 10 பேர் வழிமொழிய வேண்டும்.
வேட்புமனு கட்டணம்
துணைப் பொதுச்செயலாளர் - ரூ. 25 ஆயிரம்
தலைமைக் கழகச் செயலாளர் - ரூ. 25 ஆயிரம்
தணிக்கைக் குழு உறுப்பினர் - ரூ. 10 ஆயிரம்
தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
09.03.2022
தலைமைக் கழக அறிவிப்பு
துணைப் பொதுச்செயலாளர், தலைமைக் கழகச் செயலாளர், தணிக்கைக் குழு உறுப்பினர்
பொறுப்புகளுக்கான தேர்தல் அட்டவணை
வேட்புமனு தாக்கல் - 21.03.2022
காலை 10 மணி முதல் 12 மணி வரை , தாயகம்
வேட்புமனு பரிசீலனை - மதியம் 1 மணி முதல் 2 மணி வரை
வேட்பாளர் பட்டியல் வெளியீடு - மாலை 3 மணி
போட்டியிருந்தால் தேர்தல் - 23.03.2022 கழகத்தின் 28 ஆவது பொதுக்குழுவில் நடைபெறும்
மறுமலர்ச்சி தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர், தலைமைக் கழகச் செயலாளர், தணிக்கைக் குழு உறுப்பினர் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையராக கழக அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரியகுமார் அவர்கள் செயல்படுவார்.
தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
09.03.2022

தலைமைக் கழக அறிவிப்பு - மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுக்குழு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 28 ஆவது பொதுக்குழு 23.03.2022 புதன்கிழமை காலை 10 மணிக்கு சென்னை, அண்ணா நகர், 3ஆவது அவென்யூ -நியூ ஆவடி ரோடு சந்திப்பில் உள்ள விஜய் ஸ்ரீமகாலில், கழக அவைத் தலைவர் திரு திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
09.03.2022

மறுமலர்ச்சி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று 09.03.2022 புதன்கிழமை காலை, சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெற்றது. அதுபோது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு::
தீர்மானம் எண். 1
பிப்ரவரி 19, 2022 அன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி போட்டியிட்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளில் மாபெரும் வெற்றி பெற்றது. 21 மாநகராட்சிகள் 132 நகராட்சிகள் மற்றும் 435 பேரூராட்சிகளில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பொறுப்புகளையும் திமுக கூட்டணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் எட்டுமாத கால ஆட்சிக்கு தமிழக மக்கள் வழங்கி உள்ள அங்கீகாரம்தான் உள்ளாட்சித் தேர்தல் வெற்றியாகும்.
திமுக தலைமையிலான முற்போக்குக் கூட்டணிக்குப் பேராதரவு வழங்கி, வெற்றிபெறச் செய்த தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு மறுமலர்ச்சி திமுக நன்றி தெரிவிக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்று பொறுப்புகளை ஏற்றுள்ள மறுமலர்ச்சி திமுக, திமுக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளுக்கு இக்கூட்டம் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் எண். 2
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மறுமலர்ச்சி திமுக போட்டியிட்ட இடங்களில் வாகை சூடவும், மாநகராட்சி துணைமேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் பொறுப்புகளை கழகத் தோழர்கள் ஏற்று மக்கள் பணியாற்றிட வியூகம் அமைத்த கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் வழிகாட்டுதலின்படி, சிறப்பாகச் செயலாற்றிய மறுமலர்ச்சி திமுக தலைமைக் கழகச் செயலாளர் திரு துரை வைகோ அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மறுமலர்ச்சி தி.மு.க. போட்டியிட்ட இடங்களில் பெருவாரியான வெற்றியை ஈட்டுவதற்கு பாடுபட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு இக்கூட்டம் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் எண். 3
காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 இல் அளித்த இறுதித் தீர்ப்பு மற்றும் 16.02.2018 இல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆகியவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல், காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக மாநில அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.
மேகேதாட்டு அணை கட்டுவதற்கான கருத்துரு கர்நாடகத்தில் 2013 இல் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, உருவான நேரத்திலேயே மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் 2013 செப்டம்பர் மாதம் ஒகேனக்கலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கண்டன அறப்போராட்டத்தை நடத்தியது.
மேகேதாட்டு அணை கட்டுவதற்கு ரூபாய் 9 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தைச் செயல்படுத்த முனைந்திருக்கும் கர்நாடகா, அதற்காக ஒன்றிய பா.ஜ,க, அரசின் அனுமதியைப் பெற தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்நிலையில், கடந்த மார்ச் 4 ஆம் தேதி, கர்நாடக சட்டமன்றத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தைத் தாக்கல் செய்த முதல்வர் பசவராஜ் பொம்மை, மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு ரூபாய் ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார்.
மேகேதாட்டுவில் அணை கட்டப்பட்டால் காவிரியில் சொட்டுநீர்கூட வராது. காவிரிப்படுகை மாவட்டங்கள் பாலைவனம் ஆகும். எனவே, எக்காரணம் கொண்டும் கர்நாடக மாநிலத்தின் மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு அனுமதி அளிக்கக்கூடாது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் சார்பில் தாக்கல் செய்துள்ள வழக்கை துரிதப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மதிமுக வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண். 4
மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு - நீட் நடத்துவதிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் செப்டம்பர் 13, 2021 இல் “தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்டப் படிப்பு சேர்க்கைக்கான சட்ட முன்வரைவு-2021” நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.இரவி அவர்கள் இதனை 4 மாத காலமாக எந்த முடிவும் எடுக்காமல், பிப்ரவரி 1ஆம் தேதி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டார்.
இதனையடுத்து பிப்ரவரி 8, 2022 அன்று தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மீண்டும் நீட் விலக்கு சட்ட முன் வரைவை நிறைவேற்றி, ஆளுநரின் பரிந்துரைக்கு அனுப்பி இருக்கிறார். மக்களாட்சிக் கோட்பாடுகளுக்கு உரிய மதிப்பு அளித்து, மீண்டும் காலம் தாழ்த்தாமல் ஆளுநர் இச்சட்ட முன்வரைவைக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிட வேண்டும்.
மருத்துவக் கல்வியில் உண்மையான சமூகநீதி நிலைபெறவும், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மதிமுக உறுதுணையாகச் செயல்படும் என்று இக்கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் எண். 5
கூடங்குளம் அணுஉலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று மக்கள் போராடி வரும் நிலையில், அணுஉலை இயங்கும் வளாகத்தினுள்ளேயே அபாயகரமான அணுஉலைக் கழிவுகளைச் சேமித்து வைக்கும் கட்டமைப்புகளை உருவாக்க. (Away From Reactor-AFR, Spent Fuel Storage Facility-SFSF) தேசிய அணுமின் கழகம் 2021 டிசம்பரில் ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியது.
இதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், கூடங்குளத்தில் அணுஉலைக் கழிவுகளை முதலில் சில ஆண்டுகள் அணுஉலை வளாகத்தில் உள்ள தொட்டியில் பாதுகாக்கப்பட்டு, பிறகு மறு சுழற்சி மையத்திற்கு எடுத்துப்போகும் வரை அருகில் உள்ள மையத்தில் (AFR) சேமிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அணுக் கழிவுகளை சேமிக்க ஆழ்நில அணுக்கழிவு மையம் (Deep Geological Repository-DGR) தற்போது தேவைப்படவில்லை என்றும் கூறி உள்ளார். ஒன்றிய அரசின் இந்த நிலைப்பாடு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது ஆகும். ஏனெனில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அணுக்கழிவுகளைப் பாதுகாக்கும் பெட்டகத்தை 2022 ஏப்ரல் மாதத்திற்குள் அமைக்க வேண்டும் என்று 2018 ஆகஸ்ட் 24 இல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தற்போது ஒன்றிய அரசு கூடங்குளத்தில் அணுஉலை வளாகத்தினுள் அணுக்கழிவு மையத்தை அமைத்து, அதில் கூடங்குளம் மட்டுமின்றி, இந்தியாவில் செயல்படும் 22 அணு உலைகளின் கழிவுகளையும் கொண்டுவந்து குவிப்பதற்கான அபாயகரமான திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய பா.ஜ.க. அரசு முனைந்து இருப்பது கண்டனத்திற்குரியது.
ஒன்றிய பா.ஜ.க. அரசின் இத்தகைய முயற்சிகள் நெல்லை மாவட்டத்திற்கே பேராபத்தை விளைவித்துவிடும். எனவே இதனைத் தடுத்து நிறுத்துவதுடன், கூடங்குளத்தில் 3ஆவது மற்றும் 4ஆவது அலகு அணுமின் உலைகள் அமைத்திட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அனுமதியையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் எண். 6
காவிரிப் படுகை மாவட்டங்களில் குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கடந்த குறுவைப் பருவத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் சுமார் 26 இலட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 13 உள் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் 66 திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டது.
கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் பெய்த தொடர்மழை காரணமாக திறந்தவெளிக் கிடங்குகளிலிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. மேலும் கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் இதே நிலைதான் உள்ளது.
இணையம் வழியாக பதிவு செய்து விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்துக் கிடக்கின்றனர். தொடர் மழையினால் திறந்தவெளி அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அடுக்கி வைத்துள்ள நெல் மூட்டைகள் நனைந்து, முளைத்து விடுகின்றன. திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களுக்குப் போதிய அளவில் தார்பாய்கள் வழங்கவில்லை என்று விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண்பதுடன், நெல் கொள்முதலின் போது ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல், நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் வைத்துள்ள கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண். 7
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். எனவே கழக உறுப்பினர்கள் சேர்ப்புப் பணியை வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி, ஜூன் 30, 2022 க்குள் முடிக்க வேண்டும்.
புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் பழைய உறுப்பினர்கள் புதுப்பித்தல் பணியை முடித்த பிறகு கழகத்தின் அமைப்புத் தேர்தலை நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி திமுக
சென்னை – 8
‘தாயகம்’

09.03.2022  

Tuesday, March 8, 2022

மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், உலக மகளிர் நாள் விழா!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், உலக மகளிர் நாள் விழா, மகளிர் அணி மாநிலச் செயலாளர் மருத்துவர் ரொஹையா அவர்கள் தலைமையில், 08.03.2022 செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

Sunday, March 6, 2022

மேகேதாட்டு அணை; கர்நாடக மாநிலத்தின் முயற்சியை முறியடிப்போம்!வைகோ MP அறிக்கை!

கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, மார்ச் 4 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்த 2022-23 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கையில், மேகேதாட்டு அணை கட்டுவதற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் தடுப்பு அமைத்து 67.16 டி.எம்.சி. நீரை சேமிக்கவும், பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்குப் பயன்படுத்தவும், 400 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட நீர் மின் நிலையம் அமைக்கவும் ரூ. 9 ஆயிரம் கோடி மதிப்பிலானத் திட்டத்தைத் தயாரித்துள்ள கர்நாடக அரசு, தற்போது நிதிநிலை அறிக்கையில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
மேகேதாட்டில் அணை கட்டினால், தமிழ்நாட்டிற்கு காவிரியில் சொட்டு நீர் கூட வரத்து இருக்காது. காவிரி பாசனப் பகுதிகளில் வேளாண்மைத் தொழில் முற்றிலும் அழிந்துவிடும் என்பதால், 2013 ஆம் ஆண்டிலிருந்தே தமிழ்நாடு தன் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது.
ஆனால் கர்நாடக பா.ஜ.க. அரசு, ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஆதரவுடன் அணையைக் கட்டிவிட துடித்துக்கொண்டு இருக்கிறது.
காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 இல் வழங்கிய இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றம் 16.02.2018 இல் அளித்தத் தீர்ப்பு ஆகியவற்றை துச்சமென தூக்கி எறிந்துவிட்டு, மேகேதாட்டு அணையைக் கட்டி முடிக்க கர்நாடக அரசு துணிந்ததற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசின் நயவஞ்சகப் போக்குதான் காரணம் ஆகும்.
கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு, மேகேதாட்டு அணைப் பிரச்சினையில் தமிழகத்திற்குத் தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது.
ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம், மேகேதாட்டு அணை திட்டம் குறித்து விவாதிக்கவோ, முடிவு எடுக்கவோ அதிகாரம் பெற்ற அமைப்பு அல்ல.
முன்னர் ஒன்றிய அரசின் நீர்வளத்துறைச் செயலாளராக இருந்து பணி ஓய்வு பெற்ற சௌமித்ரகுமார் ஹல்தர், தற்போது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக உள்ளார். இவர் நீர்வளத்துறைச் செயலாளராக இருந்தபோதுதான் மேகேதாட்டு அணை தொடங்க விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசிடம் பெற்று, அதை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார்.
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறும் போதெல்லாம், மேகேதாட்டு அணைத் திட்டத்தை கூட்டத்தின் விவாதப்பொருளாக நிகழ்ச்சி நிரலில் கொண்டுவந்துள்ளார்.
கடந்த 2020 நவம்பரில் ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத், கர்நாடக மாநில அரசின் நீர்த் திட்டங்களுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு தரும் என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு 2021 ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு, மேகேதாட்டு அணை கட்டுவதற்கு கட்டுமானப் பொருட்கள் அங்கு குவிக்கப்பட்டு வருவதாக ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டது.
முதல்வர் பொறுப்பு ஏற்றவுடன், முதன் முறையாக டெல்லி சென்ற மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், ஜூன் 16, 2021 இல் பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்தபோது, “மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது” என்று நேரில் வலியுறுத்தினார்.
பின்னர் ஜூலை 12, 2021 இல் முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு, எந்தக் காரணம் கொண்டும் மேகேதாட்டு அணைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜூலை 16, 2021 இல் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு டெல்லி சென்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தைச் சந்தித்து, தமிழகத்தின் எதிர்ப்பை எடுத்துக் கூறியது.
ஒன்றிய பா.ஜ.க. அரசு, கர்நாடக மாநிலத்திற்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வருவதால், மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசு தற்போது ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருப்பதாக அறிவித்து இருக்கிறது. ஒன்றிய பா.ஜ.க. அரச இதில் திட்டவட்டமான அறிவிப்பை வெளியிட வேண்டும். கர்நாடக மாநிலத்தின் முயற்சியை முறியடித்திட தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
06.03.2022

Thursday, March 3, 2022

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள்!

மாநகராட்சி துணை மேயர்
திருவள்ளுர் மாவட்டம் - ஆவடி - எஸ் சூரியகுமார் 

நகராட்சி தலைவர்
செங்கல்பட்டு மாவட்டம்  - மாங்காடு - சுமதி முருகன் 

நகராட்சி துணைத் தலைவர்
1.இராமநாதபுரம் மாவட்டம்  - பரமக்குடி - கே.ஏ.எம்.குணா (எ) குணசேகரன் 
2.தூத்துக்குடி மாவட்டம்  - கோவில்பட்டி - ஆர்.எஸ்.இரமேஷ் 
3.கரூர் மாவட்டம்  - குளித்தலை - கே.கணேசன்

பேரூராட்சி தலைவர்
1.தென்காசி மாவட்டம் -திருவேங்கடம்   - த. பாலமுருகன்
2.தஞ்சாவூர் மாவட்டம்  - ஆடுதுறை - இரா. சரவணன் 
3.ஈரோடு மாவட்டம்  - சென்னசமுத்திரம் - கு. பத்மா 

பேரூராட்சி துணைத் தலைவர்
1.திண்டுக்கல் மாவட்டம் - பாளையம் - வி.லதா 
2.ஈரோடு மாவட்டம்  - அவல்பூந்துறை - லோ.சோமசுந்தரம் 
3.ஈரோடு மாவட்டம்  - அரச்சலூர் -  ச.துளசிமணி

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
03.03.2022

புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துக! தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள்!

தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் சீருடைப் பணியாளர்கள் முதலான அரசு பணியாளர்களுக்கு 01.04.2003 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, இத்திட்டத்தில் சுமார் ஆறு இலட்சம் அரசு ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியம், பணிக்கொடை, மருத்துவக் காப்பீடு முதலான எந்தவிதப் பலன்களும் இல்லாததால், இதனை இரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நிறைவேற்ற வேண்டுமென 19 ஆண்டுகளாக, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராடி வருகிறார்கள்.

இதனை வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிற அரசு ஊழியர்கள், 25.03.2022 அன்று தமிழ்நாடு முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து, கையெழுத்துப் படிவங்களை வழங்கி, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கோரிக்கை வைக்க உள்ளார்கள்.

மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது. கேரளா, ஆந்திரா, டில்லி ஆகிய அரசுகள் இது குறித்து வல்லுநர் குழுவின் பரிந்துரைகளைப் பெற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

2016, 2021 சட்டமன்றத் தேர்தல்களின்போதும், 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதும் தி.மு.கழகம் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளிலும் இந்த கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

எனவே புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை முற்றாக இரத்து செய்துவிட்டு, ஏற்கனவே நடைமுறையில் இருந்த பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அரசு ஊழியர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்குமாறு மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
03.03.2022