Tuesday, February 13, 2024

மதிமுக நடத்திய தேர்தல் பயிலரங்கம்!

தலைநகர் சென்னையில் மதிமுக முதன்மை செயலாளர் துரைவைகோ தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக மாணவர் அணி, இளைஞர் அணி, இணையதள அணி, தொண்டர் அணி, பொறியாளர் அணி, ஆபத்து உதவிகள் அணி, வழக்கறிஞர்கள் சார்பில் தேர்தல் பயிலரங்கம் சென்னை சிராஜ் மஹாலில் இன்று 13-02-2024 மதியம் 2.30 மணி அளவில் உறுதிமொழியுடன் தொடங்கி இரவு 8 மணி வரை நடந்தது.

இதில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்ற நிர்வாகிகள் என 1500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Monday, February 12, 2024

ஆளுநர் ஆர்.என்.இரவியின் மரபு மீறிய நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உரியது! வைகோ MP அறிக்கை!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியபோது தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை முழுமையாக வாசிக்காமல் அதில் இடம்பெற்றிருந்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் உள்ளிட்ட பெயர்களை தவிர்த்தார்.


மேலும் திராவிட மாடல் ஆட்சி, சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், மதநல்லிணக்கம், பெண்ணுரிமை ஆகிய கொள்கைகள் இன்றைய அரசின் அடித்தளமாக அமைந்துள்ளன என்ற பத்தியை உரையில் இருந்து நீக்கிவிட்டு படித்தார். சட்டப்பேரவையில் நாட்டுப்பண் இசைக்கும்போதே அநாகரிகமாக அவையில் இருந்து எழுந்து வெளியேறினார். அதைப்போலவே இந்த ஆண்டு இன்றையக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியபோதும், சட்டப் பேரவையின் மரபுக்கு எதிராக தேசியக் கீதத்தை தொடக்கத்திலேயே இசைக்க வேண்டும் என்ற காரணம் கூறி ஆளுநர் உரையை வாசிக்காமல் முழுமையாக புறக்கணித்து வெளியேறியது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். சட்டப்பேரவை நிகழ்வு தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவடையும்போது நாட்டுப்பண் இசைக்கப்படுவதும்தான் தமிழக சட்டப்பேரவையின் நீண்டகால மரபு ஆகும். ஆனால் ஆளுநர் அதனை மாற்றக்கோரியது திட்டமிட்ட சதியாகும்.


பின்னர் ஆளுநர் உரையை சட்டப்பேரவைத் தலைவர் வாசித்து அவைக்குறிப்பேட்டில் இடம்பெற செய்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். ஆளுநர் ஆர்.என்.இரவி தொடர்ச்சியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அரசியல் சட்ட நெறிமுறைகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருவது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல.


வைகோ

 பொதுச்செயலாளர் 

மறுமலர்ச்சி தி.மு.க

தாயகம்’

சென்னை- 8    

12.02.2024  

தஞ்சாவூர் மண்டலம் - தேர்தல் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி..!

2024 - நாடாளுமன்ற தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் நேற்று (11.02.2024) நடைபெற்றது.

தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தஞ்சை மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு முதல்கட்ட நிதியினை வழங்கினர்.
கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஆடுதுறை இரா. முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கழகப் பொருளாளர் மு. செந்திலதிபன் கலந்து கொண்டு இயக்க வளர்ச்சிப் பணிகள் குறித்து கருத்துரை வழங்கினார்.
அரசியலில் நேர்மை..!
பொதுவாழ்வில் தூய்மை..!
லட்சியத்தில் உறுதி..!
என்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் அரசியல் பொதுவாழ்வில் 60 ஆண்டுகாலமாக ஓய்வின்றி செயல்பட்டு வரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், நமது இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களின் தன்னலமற்ற உழைப்பு, தமிழ்நாட்டின் நலனுக்காக மேற்கொண்ட வாழ்வாதார போராட்டங்கள் என மக்களுக்கான இயக்கமாக இருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றியும்,
தேர்தல் அரசியலில் வெற்றி மட்டுமே நமது இலக்கு...
அதற்காகன முன்னெடுப்புகள் குறித்தும் கருத்துரை வழங்கினேன்.
நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் தஞ்சாவூர் வடக்கு - வீ. தமிழ்செல்வன், தஞ்சாவூர் தெற்கு இரா.ஸ்டாலின், நாகபட்டினம் _ கீழ்வேளூர் வெ.ஶ்ரீதர், திருவாரூர் - பா.பாலச்சந்திரன், மயிலாடுதுறை - செ.சந்திரமோகன் (எ) கொளஞ்சி, மாநில இளைஞர் அணி செயலாளர் ப. த. ஆசைத்தம்மி், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் கோ. துரைசிங்கம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்வமுடன் வழங்கிய நிதியினை பெற்றுக்கொண்டேன்.
அன்புடன்
துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
12.02.2024.

Friday, February 9, 2024

மதுரைக் கோட்ட இரயில்வே காலியிடங்களை சென்னை தேர்வு வாரியம் மூலம் நடத்துக! ஒன்றிய அரசுக்கு வைகோ MP வலியுறுத்தல்!

மதுரைக் கோட்ட இரயில்வே காலியிடங்களை சென்னை தேர்வு வாரியம் மூலம் நடத்துக! ஒன்றிய அரசுக்கு வைகோ MP வலியுறுத்தல்!

பிப்ரவரி 2 ஆம் தேதி ஒன்றிய இரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் இரயில்வே தேர்வு வாரியங்கள் மூலம் 1.5 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப் படும் என்று தெரிவித்து, அதற்கான கால அட்டவணையை வெளியிட்டார்.
இதன்படி தெற்கு இரயில்வேயில் சுமார் 10000 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதில் மதுரைக் கோட்டத்தில் உள்ள 750 காலி பணியிடங்களும் அடங்கும்.
தெற்கு இரயில்வேயில், சென்னை, சேலம், திருச்சி, மதுரை, பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் என மொத்தம் ஆறு கோட்டங்கள் உள்ளன. தெற்கு இரயில்வேயில் சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் இரயில்வே தேர்வு வாரியங்கள் (Railway Recruitment Board) செயல் பட்டு வருகின்றது.
முன்பு சென்னை, திருச்சி, சேலம் மற்றும் மதுரைக் கோட்டக் காலியிடங்கள் சென்னை தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வந்தது.
பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் கோட்ட காலியிடங்கள் திருவனந்தபுரம் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வந்தது.
ஆனால் தற்பொழுது மதுரைக் கோட்டக் காலியிடங்கள் திருவனந்தபுரம் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளது.
இரயில்வே நிர்வாகத்தின் இந்த தவறான முடிவினால் தமிழக இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய 750 காலி பணியிடங்கள் கேரள மாநிலத்திற்கு செல்ல உள்ளது.
இதனால் கேரளத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழகத்தில் பணியமர்த்தப்படும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இது தமிழக இளைஞர்களுக்கு செய்யப்படும் அநீதியாகும்.
ஒன்றிய இரயில்வே அமைச்சருக்கு ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன்.
1990 காலகட்டளில் திரு ஜாபர் ஷெரீஃப் அவர்கள் ஒன்றிய இரயில்வே அமைச்சராக இருந்பொழுதுதான் மொழி வாரி மாநிலங்களின் அடிப்படையில் இரயில்வே தேர்வு வாரியங்கள் உருவாக்கப்பட்டது.
மேலும் சில உதாரணங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.
முன்பு கர்நாடக மாநிலம் ஹுப்பிலி கோட்டமானது செகந்திராபாத்தை தலைமை இடமாகக் கொண்ட தெற்கு மத்திய ரயில்வேயின் கீழ் இருந்தது. ஆனால் அந்தக் கோட்டத்தின் காலியிடங்கள் முன்பு தெற்கு இரயில்வேயில் இருந்த பெங்களூரு தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்பட்டு வந்தது.
அதேபோல ஆந்திராவைச் சேர்ந்த விசாகப்பட்டினம் கோட்டம் புவனேஸ்வரத்தை தலைமையிடமாகக் கொண்ட கிழக்கு கடற்கரை ரயில்வேயில் (East Coast Railway) கீழ் வருகிறது. புவனேஸ்வரத்தில் ஒரு இரயில்வே தேர்வு வாரியம் உள்ளது ஆனாலும் ஆந்திர இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக அங்கு ஏற்படும் காலியிடங்களை தெற்கு மத்திய ரயில்வேயில் உள்ள செகந்திராபாத் தேர்வு வாரியம் மூலமாகவே இன்றும் நிரப்பப்பட்டு வருகிறது. ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு ஒரு நீதி தமிழகத்திற்கு ஒரு நீதி என்று வகுத்து வைத்துள்ளது பெரும் கண்டனத்திற்கு உரியது. தமிழகத்தில் ஏற்படும் வேலை வாய்ப்பு கேரள இளைஞர்களுக்குச் செல்லும் விதமாக உள்ள தற்போதைய நடமுறையை மாற்றி, மதுரைக் கோட்ட காலியிடங்களை சென்னை தேர்வு வாரியம் மூலம் தான் நிரப்பப்பட வேண்டும். இதற்கான உத்தரவினை ஒன்றிய இரயில்வே அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க,
‘தாயகம்’
சென்னை - 8
09.02.2024

Tuesday, February 6, 2024

மோடி அரசின் மாநில உரிமைகளை நசுக்கும் போக்கினைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டம். மதிமுக வரவேற்கிறது - வைகோ MP அறிக்கை!

கேரளாவில் மக்கள் நல அரசான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசின் மீது ஒன்றிய அரசு தொடுத்து வரும் தாக்குதலைக் கண்டித்தும், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டைப் பாதுகாக்கும் வகையில் 08.02.2024 அன;று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடு முழுவதும் தர்ணா போராட்டத்தினை நடத்த உள்ளது.
தமிழ் நாட்டின் மாவட்ட தலைநகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப், புது தில்லி என பல மாநிலங்களிலும் பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை செயல்பட விடாமல் தடுத்து வைத்து, கூட்டாட்சித் தத்துவத்தைத் தொடர்ந்து சிதைத்து வரும் நிலையில், இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ள இப்போராட்டத்தை மறுமலர்ச்சி திமுக வரவேற்கிறது. பாராட்டுகிறது.
மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் நிர்வாகிகள் இப்போராட்டத்தினை ஆதரித்து உரையாற்றுவார்கள்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க,
‘தாயகம்’
சென்னை - 8
06.02.2024

Monday, February 5, 2024

மறுமலர்ச்சி தி.மு.க நடத்தும் இளையோர் தேர்தல் பயிலரங்கம்!

தமிழ்நாட்டு அரசியலில் இளைஞர்களை பண்படுத்தவும், நிகழ்கால அரசியலில் அவர்களை பங்குகொள்ள செய்யவும், தேர்தல் களத்தில் விழிப்புணர்வுடன் பணியாற்றவும் மறுமலர்ச்சி தி.மு.கழகம் சார்பில், 'இளையோர் தேர்தல் பயிலரங்கம்' எனும் புதுமையான சிறப்பு நிகழ்ச்சியை வருகின்ற 13.02.2024, செவ்வாய்க்கிழமையன்று பிற்பகல் 2 மணியளவில், சென்னை எழும்பூர் சிராஜ் மகாலில் நடத்தவுள்ளோம்.

இந்நிகழ்ச்சியை, கழக இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி, வழக்கறிஞர் அணி, பொறியாளர் அணி, ஆபத்து உதவிகள் அணி, இணையதள அணி உள்ளிட்ட கழகத்தின் இளையோர் படை பிரிவுகள் இணைந்து நடத்துகின்றார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் விரைந்து வர உள்ள நிலையில் கழகத்திற்கு இது மிக முக்கிய நிகழ்வாக அமையும். இரண்டாயிரம் இளைஞர்கள் இதில் பங்கேற்க இருக்கிறார்கள். மேற்கண்ட அணிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் புதிய இளைஞர்கள் பயிலரங்க நிகழ்வுக்கான சீருடையுடன் நிகழ்ச்சியில் கட்டாயம் பங்கேற்பதை அனைத்து மாவட்டக் கழகச் செயலாளர்களும் உறுதிசெய்வதோடு, நிகழ்ச்சி வெற்றிபெற ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்

துரை வைகோ 

முதன்மைச் செயலாளர்

மறுமலர்ச்சி திமுக

05.02.2024

தமிழகத்திற்கான பேரிடர் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும். நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தில் வைகோ MP கோரிக்கை!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. அவர்கள் இன்று 05.02.2024 நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் பூஜ்ய நேரத்தில் ஆற்றிய உரை வருமாறு:-

மிக்ஜம் புயல் பெருமழை வெள்ளத்தால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உயிர் இழப்பு மற்றும் ஏராளமான பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது.
இதே போன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் வரலாறு காணாத பெரும் கனமழை, வெள்ளம் காரணமாக தண்ணீர் தேங்கியதோடு, பொதுக் கட்டமைப்புகள் சிதைந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்தனர்.
பேரிடர் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டு நிதி உதவி வழங்குமாறு மாண்புமிகு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு டிசம்பர் 19 தேதி கடிதம் எழுதியிருந்தேன்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், சேதமடைந்த பொதுக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் ரூ.37,000 கோடியை விடுவிக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவினரோடு நானும் 13.01.2024 அன்று, மாண்புமிகு உள்துறை அமைச்சரை டெல்லியில் சந்தித்து, தமிழகத்தில் ஏற்பட்ட பேரிடரை, தேசிய பேரிடராக அறிவித்து, போதிய நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.
மாண்புமிகு உள்துறை அமைச்சர், அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்டு, உரிய நிதி விரைவில் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
ஆனால், உள்துறை அமைச்சகத்திடம் மத்திய குழு அறிக்கை அளித்தும் இதுவரை எதுவும் நடக்கவில்லை.
ஒன்றிய அரசு, தமிழக அரசிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது.
பேரிடர் பாதிப்பின் காரணமாக மக்கள் இன்னும் அவதிப்பட்டு வருவதாலும், புனரமைப்புப் பணிகளூக்காக நிவாரணம் எதிர்பார்த்துக் காத்திருப்பதாலும், தமிழக அரசு கோரியுள்ள பேரிடர் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க,
‘தாயகம்’
சென்னை - 8
05.02.2024

Saturday, February 3, 2024

அண்ணா நினைவு நாளில் மதிமுக அமைதி ஊர்வலம்!

பேரறிஞர் அண்ணா அவர்களின் 55 வது நினைவு நாள் 03-02-2024 ல் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், திருவல்லிக்கேணி D1 காவல் நிலையம் அருகில் இருந்து அமைதி ஊர்வலம் சென்று பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் கழக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ், பொருளாளர் மு செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணை பொதுச்செயலாளர்கள் மலை சத்யா, செஞ்சி ஏ கே மணி, தி மு ராஜேந்திரன், டாக்டர் ரொகையா, உயர்நிலைக் குழு உறுப்பினர் ஆவடி அந்தரிதாஸ், அ.கணேசமூர்த்தி எம்.பி., மு.பூமிநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட கழக செயலாளர்கள் சு ஜீவன், டி சி ராஜேந்திரன், கே கழககுமார், சைதை ப சுப்பிரமணி, நெமிலிச்சேரி பாபு, மாவை மகேந்திரன், சூரியகுமார், கருணாகரன், ஜெய்சங்கர், பார்த்திபன், ராமதாஸ், மார்நாடு அணிகளின் செயலாளர் ப த ஆசைதம்பி, பால சசிகுமார், ஆ பாஸ்கரசேதுபதி, சுமேஷ், மல்லிகா தயாளன், வி சேஷன், ஜே சிக்கந்தர், ஹேமநாதன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Thursday, February 1, 2024

பத்து ஆண்டு கால ஒன்றிய பாஜக ஆட்சியின் தோல்வியை பிரதிபலிக்கும் இடைக்கால பட்ஜெட் வைகோ MP அறிக்கை!

நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024 -25 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால வரவு- செலவு திட்ட அறிக்கையில் , பொருளாதார வளர்ச்சி 7.5 விழுக்காடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கொரோனா காலகட்டத்திற்கு பின்பு கடந்த நான்கு ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சி என்பது 7 விழுக்காடு அளவை தொடவில்லை.
நாட்டின் ஒட்டுமொத்த கடன் 14.13 லட்சம் கோடி ரூபாய் அளவில் இருக்கும்போது மேலும் பொது சந்தையில் 11.75 லட்சம் கோடி நிதி கடனாக திரட்டப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக பணவீக்க விகிதம் குறையவில்லை. 2023 நவம்பரில் சில்லறை பண வீக்கம் 5.55 விழுக்காடு ஆக இருந்தது டிசம்பர் மாதம் 5.69 விழுக்காடு அளவாக உயர்ந்திருக்கிறது. இதனால் விலைவாசி கடுமையாக அதிகரித்து வருகிறது.
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சி அடைந்தபோதிலும் பெட்ரோல் டீசல் மீதான வரிகளை இந்திய அரசு குறைக்கவில்லை. இதுவும் விலைவாசி ஏற்றத்திற்கு அடிப்படை காரணிகளில் ஒன்றாக இருக்கிறது.
ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் நலனில் அக்கறை கொண்டு நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டதாக நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக அரசின் வாக்குறுதி படி ஆண்டுக்கு ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டவில்லை!
2022-23 காலகட்டத்தில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 3.2 விழுக்காடு அளவாக இருந்தாலும், வேலை வாய்ப்பைப் பெறுவதில் நாடு முழுவதும் சமமற்ற தன்மையை நீடிக்கிறது.
உலகின் வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது என்று ஒன்றிய அரசு கூறினாலும், அதற்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை.
நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் வேளாண்மைத் துறையின் பங்கு குறைந்து வருகிறது. வேளாண் துறையின் உற்பத்தி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
விவசாயிகளின் வருவாய் மூன்று மடங்கு அதிகரிக்கப் படும் என்ற கடந்த கால அறிவிப்புகள் கானல் நீரானது என்பதே உண்மை ஆகும். 2014 ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போது, விவசாய விளைபொருட்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என்ற அறிவிப்பு நடைமுறைப் படுத்தப்படவில்லை.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டது மட்டுமின்றி, ஆதார் இணைப்பு இல்லை என்று 11 கோடி ஏழை மக்களை பயனாளிகள் பட்டியலிலிருந்து ஒன்றிய அரசு நீக்கி இருக்கிறது.
பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் ஏழை நடுத்தர மக்களுக்கு சென்றடையவில்லை. மாறாக கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் பலன் அடைந்திருக்கின்றன.
இந்த நிதிநிலை அறிக்கையிலும் கார்ப்பரேட் வரி 22 விழுக்காடாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
உற்பத்தி தொழில் துறை வளர்ச்சி பின்தங்கி இருக்கிறது.
வேளாண் துறைக்கு அடுத்து அதிக அளவில் வேலை வாய்ப்புகளை வழங்கும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒட்டுமொத்த உற்பத்தியில் 49 விழுக்காடு பங்களிப்பை வழங்குகின்றன.
ஆனால் அவை சந்திக்கும் நெருக்கடிகளை தீர்ப்பதற்கு ஒன்றிய பாஜக அரசு முன் வரவில்லை.
ஜிஎஸ்டி வரி வருவாயில் தமிழ்நாடு உள்ளிட்ட வளர்ச்சி பெற்ற மாநிலங்களுக்கு உரிய விகிதாச்சார நிதிப் பகிர்வு அளிக்கப்படாமல், மாநிலங்களுக்கு 75 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது, மாநில அரசுகளுக்கு நிதிச் சுமையை தான் ஏற்படுத்தும்.
பத்தாண்டுகளில் 19 எய்ம்ஸ் மருத்துவமனைகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று அறிவித்துள்ள நிதியமைச்சர், தமிழ்நாட்டில் மதுரையில் பிரதமர் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி மூச்சு விடவில்லை.
தமிழ்நாட்டின் இரயில்வே திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல், அவை கிடப்பில் போடப்பட்டுள்ளன.
40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளை போல தரம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பின் மூலம் ரயில்வே கட்டணங்கள் உயர்வதை மறைமுகமாக ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது. இதனால் ரயில் போக்குவரத்தை நம்பியுள்ள சாதாரண ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
புத்தாக்க ஆராய்ச்சி திட்டங்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் கோடி ஒதுக்கீடு, பெண்களின் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம், சூரிய ஒளி மின்சார கட்டமைப்பு அமைக்கும் குடியிருப்புகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் போன்ற அறிவிப்புகள் வரவேற்கதக்கவையாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக இடைக்கால நிதிநிலை அறிக்கை பத்தாண்டு கால பாஜக அரசின் தோல்வியை பிரதிபலிப்பதாகத்தான் இருக்கிறது.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க,
‘தாயகம்’
சென்னை - 8
01.02.2024