Monday, October 24, 2016

மருதுபாண்டியர் சிலைக்கு வைகோ மாலை மரியாதை!

சிவகங்கை, திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் 212 ஆம் ஆண்டு நினைவுத் தினத்தையொட்டி (24.10.2016) காலை 12:30 மணிக்கு, மருதுபாண்டியர்களின் மணிமண்டபத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் தலைவர் வைகோ அவர்கள் புகழஞ்சலி செலுத்தினார்.

உடன் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Sunday, October 23, 2016

மருதுபாண்டியர்களுக்கு வைகோ புகழஞ்சலி செலுத்துகிறார்!

மருதுபாண்டியர்களின் 212 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாளை 24.10.2016 திங்கட்கிழமை பகல் 12.30 மணிக்கு, சிவகங்கை - திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர்களின் மணிமண்டபத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் புகழஞ்சலி செலுத்துகிறார்.

கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி


உலகக் கோப்பை கபடிப் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு வைகோ வாழ்த்து!

உலகக் கோப்பை கபடித் தொடரில் எட்டாவது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளது மிகவும் பாராட்டத்தக்கது ஆகும். கபடி விளையாட்டை உலகிற்குத் தந்த இந்தியா உலகக் கோப்பையில் இதுவரை தோற்றதில்லை என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் ‘சடுகுடு’ எனும் பெயரில் நடந்துவந்த இந்தக் ‘கபடி’ விளையாட்டை பெருமளவில் ஊக்குவித்தவர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்கள்தான் என்பதை நினைவுகூர்கிறேன்.

கபடிப் போட்டியில் உலகக் கோப்பையை வென்று நாட்டிற்கு பெருமையைத் தேடித் தந்த இந்தியக் கபடி அணி வீரர்களுக்கும், இந்திய அணியில் விளையாடிய தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வீரர் சேரலாதனுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Saturday, October 22, 2016

இந்திய கபடி அணிக்கு ஓமன் மதிமுக இணையதள அணி வாழ்த்து! வாழ்வாதாரத்திற்கும் நடுவன் அரசு ஏற்ப்பாடு செய்ய வலியுறுத்தல்!

உலக கோப்பை கபடி போட்டி இந்தியாவில் குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய கபடி அணி தொடர்ந்து 3 ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றி ஹாட்ரிக் அடித்து சாதனை படைத்துள்ளது. இதில் முன்னணி இந்திய வீரர் 14 புள்ளிகள் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு எடுத்துச் சென்றார்.

அரையிறுதி போட்டியில் தாய்லாந்துடன் விளையாடி அணி தாய்லாந்து அணியை அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்க்கடித்து, இறுதி சுற்றுக்கி தேர்வாகியிருந்த ஈரானுடன் மோத முடிவானது.

இன்று நடந்த போட்டியில் ஈரான் முதலில் ஆதிக்கம் செலுத்தினாலும், இந்தியா 38-29 என்ற புள்ளி கணக்கில் ஈரானை தோற்க்கடித்து வெற்றிக்கொடியை நிலைநாட்டியது.

தொடர்ந்து வெற்றிக்கொடியை நிலைநாட்ட அரும்பாடு பட்ட வீரர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அதற்கு உறுதுணையாக இருந்து வீரர்களின் உடல் நலனிலும், ஊக்கமும் அளித்த பயிற்ச்சியாளருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

வெற்றி கோப்பையை கைப்பற்றிய கபடி வீரர்களுக்கு இந்திய நடுவண் அரசு அதிக பரிசு தொகையை அறிவித்து அவர்களது வாழ்வாதாரத்திற்காக மரியாதையான அரசு வேலையையும் வழங்கிட ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் வலியுறுத்துகிறேன்.

வீரர்களை உற்சாகப்படுத்தும் பட்சத்தில், வீரர்கள் இன்னும் வேகமாக தங்கள் திறமைகளை நிரூபிக்க, இப்படிபட்ட ஊக்க பரிசுகள் வழிவகை செய்யும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்
ஓமன் மதிமுக இணையதள அணி

மதிமுக முன்னணி நிர்வாகிகள் கூட்டம்! தேர்தலை மநகூ புறக்கணிப்பு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின், மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம், இன்று காலை 10:30 மணிமுதல் நடைபெறுகிறது.

கழகத்தின் அவைத்தலைவர் திரு.திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமை தாங்க பரபரப்புகளுக்கு மத்தியில் மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் துவங்கிற்று.

அப்போது கழக நிர்வாகிகள் மறைவிற்கும், சிவகாசி பட்டாசு விபத்தில் இறந்தவர்களுக்கும் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

நிகழ்வுகள் முடிந்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய வைகோ அவர்கள், எந்த காரணத்திற்காக இரண்டு தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதோ மீண்டும் அதே சூழல் தான் உருவாகும். இரு கட்சிகளும் வேட்பாளர்களை மாற்றமின்றி அறிவித்திருப்பது இதை மேலும் உறுதி செய்கிறது. எனவே வரவிருக்கின்ற 3 தொகுதி இடைதேர்தலையும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தீர கலந்தாய்வு செய்து புறக்கணிப்பது என முடிவு செய்திருக்கிறோம் என அறிவித்தார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

வைகோவிடம் வாழ்நாள் அட்டை பெற்ற ஓமன் மதிமுக உறுப்பினர்!

மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று 22-10-2016 மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த நிகழ்வு முடிந்ததும், விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்த ஓமன் மதிமுக இணையதள அணியின் உறுப்பினர் மாஹீன் அவர்கள் இன்று தாயகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களிடம் தனது மதிமுக வாழ்நாள் உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொண்டார்.

குமரி மாவட்ட குளச்சல் நகர இளைஞரணி செயலாளராகவும் திறம்பட செயலாற்றிய மாஹீன் அவர்கள், பொதுக் கூட்டங்களையும் நடத்தி கழக பெருமைகளை உலகிற்கு பறைசாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் பணி மென்மேலும் சிறக்க ஓமன் மதிமுக இணையதள அணி செஞ்சார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துதலையும் தெரிவித்துக்கொள்கிறது.

ஓமன் மதிமுக இணையதள அணி

யாழ்ப்பாண மாணவர்கள் சுட்டுக்கொலைக்கு வைகோ கண்டனம்!

தமிழ் ஈழத்தில் யாழ்ப்பாண மாணவர்கள் இருவர் சிங்களக் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி இதயத்தில் ஈட்டியைப் பாய்ச்சுகிறது!

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பயின்று வந்த தமிழ் மாணவர்கள் பவுன்ராஜ் சுலக்சன், நடராசா கஜன் இருவரும் இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, யாழ்ப்பாணச் சோதனைச் சாவடியில் சிங்களக் காவலர்கள் தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்கள்.

யாழ்ப்பாண மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்த யாழ்ப்பாண தமிழ் மக்கள் நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதை அறிந்து, ஆறுதல் கூறவந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜாவை முற்றுகையிட்டு, நீங்கள் ஆதரிக்கும் சிங்கள சிறிசேனா அரசின் காவல்துறை தமிழ் மாணவர்களை சுட்டுக்கொன்று இருக்கிறது என்று மக்கள் கொந்தளித்துள்ளனர்.

ஈழத்தில் சிங்கள இனவெறி இன்னும் தணியவில்லை; தமிழ் மக்களின் இரத்தம் சிந்தப்படுகிறது என்பதற்கு இந்தக் கொடூரச் சம்பவம் எடுத்துக்காட்டாகும். சிங்கள சிறிபால சேனா அரசு உலகத்தை ஏமாற்ற அமைதி வேடம் போட்டுக்கொண்டே தமிழ் மக்களை சிங்கள இராணுவம் மற்றும் காவல்துறை மூலம் ஒடுக்கும் வகையில் அரச பயங்கரவாதத்தை ஏவிவிடுவது கடும் கண்டனத்துக்குரியதாகும்.

தமிழ் மாணவர்கள் படுகொலையைக் கண்டித்து நாளை (23.10.2016) யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் நடத்த இருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.க. ஆதரவு தெரிவிக்கிறது. உலகெங்கும் வாழும் தமிழர்களும், ஈழத்தில் தமிழர்கள் மீதான அடக்குமுறையை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர். இந்திய அரசு சிங்கள இனவாத அரசுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்ட தீர்மானங்கள்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று 22.10.2016 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமை நிலையம், தாயகத்தில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானம்-1:

தமிழகத்தில் சிங்கள இனவெறி அரசின் தமிழ் இன அழிப்புப் போர் உச்சத்தில் இருந்தபோது, 2008 அக்டோபர் 21 இல், சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ‘ஈழத்தில் நடப்பது என்ன?’ என்ற தலைப்பில் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்சசியில் நிறைவுப் பேருரை ஆற்றிய கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், “ஈழத்தில் இராசபக்சே அரசு தமிழர்களைக் கொன்று குவிப்பதற்கு இந்திய அரசுதான் இராணுவத் தளவாடங்களையும், ரேடார் உள்ளிட்ட தகவல் தொடர்புச் சாதனங்களையும் இலங்கை சிங்கள அரசுக்கு வழங்கி வருகிறது என்பதை எடுத்து உரைத்தார்.

தமிழ் இனப் படுகொலைக்கு இந்திய அரசு துணை போவது மட்டும் அன்றி, ஈழத் தமிழர்கள் மீதான போரை முன்னின்று நடத்துகிறது என்று குற்றம் சாட்டினார். காங்கிரஸ் கூட்டணி அரசின் இதே நிலை தொடருமானால் எங்கள் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களைக் காப்பாற்றத் தமிழ்நாட்டில் இருந்து இளைஞர்கள் ஈழத்திற்குச் சென்று ஆயுதம் தாங்கிப் போரிடுவார்கள். முன் வரிசையில் நானே ஈழப் போர்க்களத்தில் நிற்பேன்” என்று பிரகடனம் செய்தார்.

காங்கிரஸ் கூட்டணி அரசில் மத்திய அமைச்சர்களாக தி.மு.க.வினர் டெல்லியில் பதவி சுகம் அனுபவித்துக் கொண்டு இருந்தபோதுதான் ஈழத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழகத்தில் கலைஞர் கருணாநிதிதான் முதல் அமைச்சராக இருந்தார். ஈழத்தில் தமிழ் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையை நிறைவேற்றாமல் இந்திய அரசுக்குத் துணைபோன கருணாநிதி அரசு, ஈழத்தில் நடைபெற்ற கொடூரமானப் போரை தாய்த் தமிழர்களிடம் எடுத்து உரைத்தற்காக கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மீது தேசத்துரோகச் சட்டம் 124ஏ பிரிவின் கீழ் வழக்குத் தொடர்ந்தது.

நீதிமன்றத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக நடந்த இவ்வழக்கில் 112 விசாரணை அமர்வுகளில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆஜரானார்கள். கருத்து அரங்கில் பேசிய எதையும் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நீதிமன்றத்தில் மறுத்துப் பேசவில்லை.

இந்திய அரசு ஈழத்தமிழர்கள் படுகொலைக்குத் துணைபோனது என்பதை நீதிமன்றத்தில் அழுத்தம் திருத்தமாக மீண்டும் பதிவு செய்தார். சென்னை 3ஆவது கூடுதல் அமர்வு நிதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று 2016 அக்டோபர் 20 அன்று பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி பொடா வழக்கில் பேச்சு உரிமையை நிலைநாட்டியது போன்று கருணாநிதி அரசு தொடர்ந்த தேசத்துரோகக் குற்றச்சாட்டு வழக்கில் வெற்றி பெற்ற கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு இக்கூட்டம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

தீர்மானம்-2:

காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் தமிழக அரசு தொடர்ந்த வழககை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாண்புமிகு தீபக் மிஸ்ரா, யூ.யூ.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, செப்டம்பர் 20 மற்றும் 30 ஆம் தேதிகளில் தமிழகத்திற்கு 6 ஆயிரம் கன அடி நீரை கர்நாடகம் காவிரியில் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் சுட்டிக்காட்டியவாறு, காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4ஆம் தேதிக்குள் மத்திய அரசு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டனி ஜெனரல் முகுல் ரோகத்கி ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மத்திய அரசு தயாராக இருக்கிறது’ என்று தெரிவித்தார். ஆனால், திடீரென்று அக்டோபர் 3 ஆம் தேதி, மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது; நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்துதான் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியும். மத்திய அரசுதான் இறுதி முடிவு எடுக்க முடியும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையிலும், கர்நாடக மாநிலத்திற்குத் துணை போகும் விதத்திலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததின் மூலம் தமிழ்நாட்டுக்குப் பச்சைத் துரோகம் இழைத்துள்ள நரேந்திர மோடி அரசுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

தீர்மானம்-3:

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், “அரசியல் சட்டப் பிரிவு 262 இன்படி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்குதான் உண்டு. உச்ச நீதிமன்றம் அதில் ஆணையிட முடியாது என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது நடுவர் மன்றத்தின் பரிந்துரையே தவிர, ஆணையல்ல” என்றும் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு முன் வைத்துள்ள வாதம் தவறானது ஆகும். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின் பகுதி 8 (பக்கம் 224, தொகுதி 5) இல் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது காவிரி நீர் தகராறு தீர்ப்பு ஆயத்தின் இறுதி முடிவுகள் மற்றும் ஆணைகள் ஆகியவற்றைச் செயல்படுத்துவதற்கும் (மாநிலங்களை) அவற்றுக்கு உட்படுத்துவதற்கும் காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரில் மாநிலங்களுக்கு இடையேயான மன்றம் ஒன்றை நிறுவியாக வேண்டும். இந்த வாரியம் இந்திய அரசின் நீர்வளத்துறைக் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என்று கூறுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றுதான் நடுவர் மன்றம் ஆணையிடுகிறதே தவிர, வாரியம் அமைக்கலாம் என்று பரிந்துரைக்கவில்லை.

நர்மதா நதி நீர்ப் பிரச்சினையில், ‘நர்மதா கட்டுப்பாட்டு ஆணையம்’ அமைக்கப்பட்டபோதும், கிருஷ்ணா நதிநீர்ப் பிரச்சினையில் ‘கிருஷ்ணா மேலாண்மை வாரியம்’ அமைக்கப்பட்டபோதும், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படவில்லை. எனவே, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றத் தேவையில்லை என்று மறுமலர்ச்சி தி.மு.க. சுட்டிக்காட்டுகிறது.

எனவே,மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்காமல், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம்-4:

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் அக்டோபர் 4 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களிலும் நீர் இருப்பு, பயிர் பாதிப்பு, நீர்த் தேவை ஆகியவற்றை ஆராய உயர்நிலைத் தொழில்நுட்பக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. கர்நாடக மாநில அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, மேற்கண்ட குழுவை அமைக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் பரிந்துரைத்தது.

மத்திய நீர்வள ஆணையைத் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையில் அமைக்கப்பட்ட மத்திய உயர்நிலைத் தொழில்நுட்பக் குழு, கர்நாடகம், தமிழ்நாடு இரு மாநிலங்களிலும் ஆய்வு செய்து தனது அறிக்கையை 17 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இந்த அறிக்கையில், கர்நாடகக் காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள 48 வட்டங்களில், 42 வட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் கர்நாடக விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 12 இலட்சம் ஏக்கர் சாகுபடி மற்றும் குடிநீர் பயன்பாட்டுக்கு 160 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது என்று ஒப்புக்கொண்டுள்ள காவிரி உயர்நிலைத் தொழில்நுட்பக் குழு, தமிழ்நாட்டில் விவசாயம் பாதிப்பு வறட்சி ஆகியவற்றை மேலோட்டமாகக் கூறிவிட்டு, சொட்டுநீர்ப் பாசனம் உள்ளிட்ட மாற்று முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்து இருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

காவிரி உயர்நிலைத் தொழில்நுட்பக்குழு மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப அறிக்கை தயாரித்து அளித்துள்ளதோ என்ற ஐயப்பாடு எழுகின்றது. காவிரி நீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கைகளைப் பிரதிபலிக்காமல், முழுக்கமுழுக்கக் கர்நாடக மாநிலம் மற்றும் மத்திய அரசுக்கு ஆதரவாக தயாரிக்கப்பட்டுள்ள காவிரி உயர்நிலை தொழில்நுட்பக்குழு அறிக்கையை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்காடி தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கின்றது.

தீர்மானம்-5:

தமிழ்நாட்டில் 2 கோடியே 3 இலட்சத்து 64 ஆயிரத்து 386 குடும்ப அட்டைதாரர்கள் பங்கீட்டுக் கடைகளின் மூலம் உணவுப் பொருட்களைப் பெற்று வருகின்றனர். இதில் பொது வழங்கல் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 91 இலட்சத்து 53 ஆயிரத்து 352 குடும்ப அட்டைகளுக்கு இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகின்றது.

மத்தியத் தொகுப்பில் இருந்து தமிழக அரசு அரிசியை விலை கொடுத்து வாங்கும் போது, பரம ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு கிலோ அரிசி ரூ.3 க்கும், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கான அரிசி கிலோ ரூ. 5.65க்கும், வறுமைக்கோட்டுக்கு மேல் வாழும் மக்களுக்கான அரிசி கிலோ ரூ.8.30க்கும் தமிழக அரசு வாங்குகிறது.

இதில் வறுமைக் கோட்டுக்கு மேல் வாழும் மக்களுக்கான அரிசியின் விலையை ரூ. 8.30 லிருந்து ரூ.22.54 என மூன்று மடங்காக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வின் காரணமாகத் தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.2134.50 கோடி கூடுதலாகச் செலவு செய்ய நேரிடும். தமிழக அரசு, தற்போது பொது வழங்கல் திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.5300 கோடி ரூபாய் மானியமாக செலவழித்து வருகின்றது.

இந்நிலையில், மத்திய அரசு அரிசி விலையை மூன்று மடங்கு உயர்த்தியதால், தமிழ்நாட்டில் பொது வழங்கல் திட்டத்தைச் செயல்படுத்த முடியாத நெருக்கடி உருவாகும். எனவே, அரிசி விலையை மூன்று மடங்கு உயர்த்தி இருப்பதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம்-6:

தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகள் விருப்பப்படி தாறுமாறாகக் அதிக கட்டணங்களை உயர்த்தி, பொதுமக்களை துயரத்தில் ஆழ்த்தி வருவதற்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை கண்டனம் தெரிவித்து இருக்கின்றது. தமிழக அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்தி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தி, ஆம்னி பேருந்துகள் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம்-7:

கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழையின்போது சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வரலாறு காணாத பாதிப்புக்கு உள்ளாயின.

அக்டோபர் இறுதியில் பருவ மழை தொடங்க இருப்பதால், இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தக்க வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கின்றது.

தீர்மானம்-8:

நாட்டின் பட்டாசு உற்பத்தியில், 90 சதவீதம் தமிழகத்தில் நடக்கிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 750க்கும் மேற்பட்ட உரிமம் பெற்ற தொழிற் சாலைகள் உள்ளன. இவற்றால், நேரடியாக, இரண்டு லட்சம் பேரும், மறைமுகமாக, மூன்று லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஆண்டுக்கு, 4,000 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடக்கிறது.

விளையாட்டு பொம்மைகள் என்ற பெயரில், சீன பட்டாசுகள் இறக்குமதியால், பட்டாசு வர்த்தகம் சரிந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, பட்டாசு ஆலைகள் மற்றும் கிடங்குகளில், பாதுகாப்பு நடைமுறைகள் இல்லாததால், வெடி விபத்துகளும், அதனால், உயிர் இழப்புகளும் தொடர் நிகழ்வுகளாக உள்ளன.

விருதுநகர், விழுப்புரம், கோவை மாவட்டங்களில் அண்மையில் நடந்த பட்டாசு விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

சில தொழிற்சாலைகள் விதிமுறைகளை பின்பற்றாமல், அளவுக்கு அதிகமாக வெடி மருந்துகளை தேக்கி வைப்பதாலும், பணியாளர்களின் பணிச்சுமை அதிகரிப்பாலும் விபத்துகள் நடக்கின்றன.

மத்திய - மாநில அரசு துறைகள், மக்களின் உயிருடன் விளையாடாமல்,உரிய ஆய்வுகளை நடத்தி, தொடர் உயிர் இழப்புகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும், உயிரிழந்தவர்களுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 இலட்ச ரூபாய் நட்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம்-9:

கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த கொள்முதல் விலையான டன்னுக்கு ரூபாய் 2650 வழங்காமல், சர்க்கரை ஆலைகள் 2350 ரூபாய் மட்டுமே வழங்கி வருகின்றன. கடந்த மூன்றாண்டு காலமாக விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகை 1800 கோடி ரூபாயை சர்க்கரை ஆலைகள் தர மறுக்கின்றன.

இதனால் கரும்பு விவசாயிகள் தமிழகம் முழுவதும் அறப்போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு உடனடியாக விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துவதுடன், நடப்பு கரும்புப் பருவத்திற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூபாய் நான்காயிரமாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது என மதிமுக தலைமை அலுவலகமான தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமன் மதிமுக இணையதள அணி

Friday, October 21, 2016

குமரி கட்டளை தளபதி தலமையில் சென்னைக்கு!

புலிப்படை தலைவனை காண குமரி மாவட்டத்திலிருந்து மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வெற்றிவேல், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பொறுப்பாளர் வழக்கறிஞர் டிமிட்டிலால், ஓமன் இணையதள அணி உறுப்பினர் மாஹீன் ஆகியோர் சென்னை பயணம்.

நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தாயகத்தில்...

உங்கள் பயணம் சிறக்கட்டும். நல்ல முடிவுகள் வரட்டும். தமிழகம் செழிக்கட்டும், தமிழர்கள் வளரட்டும், தமிழ் புகழ் ஓங்கட்டும்...

தமிழன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களுடன் மக்கள் நலக் கூட்டு இயக்கத் தலைவர்கள் சந்திப்பு! மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட ஏற்பாடு செய்யக் கோரிக்கை!

இன்று (21.10.2016) நண்பகல் 1.30 மணிக்கு, தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில்,மக்கள் நலக் கூட்டு இயக்கத்தின் சார்பில்,மறுமலர்ச்சி தி,மு,க பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி. இராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் டி.கே. ரெங்கராஜன் (சிபிஎம்), டி, இராஜா (சிபிஐ) ஆகியோர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து, காவிரி நதிநீர்ப் பிரச்சினை குறித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அப்போது குடியரசுத் தலைவரிடம் வைகோ கூறியதாவது:-

“காவிரி நதிநீர் ஒப்பந்தம் 1924 ல் ஏற்பட்டது. எழுபதுகளில் கர்நாடக அரசு தமிழகத்தை வஞ்சித்தது. இரண்டு மாநில அரசுகளும் இருபதுக்கும் மேற்பட்ட பேசியும், தமிழ்நாட்டுக்கு உரிய நியாயம் கிடைக்காததால், பிரச்சினை உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது.

உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் 1990 ஜூன் மாதம் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதன் இறுதித் தீர்ப்பு2007 பிப்ரவரி 5 ஆம் தேதி வழங்கப்பட்டது. ஆனால், ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், 2013 பிப்ரவரி 20 ஆம் தேதிதான் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசு இதழில் வெளியிடப்பட்டது.

அதன்படி, காவிரி நீர் மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைத்து இருக்க வேண்டும். ஆனால் இதுவரை அமைக்கவில்லை.

காவிரி நதி நீரை நம்பி இருக்கின்ற தமிழகத்தில் 20 இலட்சம் ஏக்கர் பாசனத்தை, கர்நாடகத்தின் அடாவடிப் போக்கால் இழந்தோம். இந்த ஆண்டு மட்டும் இதனால் 8000 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விடும்படி உத்தரவிட்டது என்று வைகோ கூறியபோது,

குடியரசுத் தலைவர், ‘கர்நாடக அரசு தண்ணீரைத் திறந்து விட்டதா?’ என்று கேட்டார்.

பலமுறை உச்சநீதிமன்றம் கூறியபோதும் ‘திறக்க முடியாது’ கர்நாடக முதல் அமைச்ச்ர சித்தராமையாக கூறிவிட்டார் என்று வைகோ கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கச் சொல்லி உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தபோது முதலில் ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, அதன் பின்பு முடியாது என்று உச்சநீதிமன்றத்திலேயே மறுத்து விட்டது. இது மிகப்பெரிய அநீதி ஆகும்.

ஆசியாவின் நெற்களஞ்சியமாக இருந்த தஞ்சைத் தரணி, பிச்சைப் பாத்திரம் ஏந்த வேண்டிய நிலைமைக்கு ஆளாகிக் கொண்டு இருக்கின்றது. ஹெல்சிங்கி விதிகளின்படி, கடைமடைப் பாசனப் பகுதிக்குச் சட்டப்படியான உரிமைகள் இருக்கின்றன.

தமிழ்நாட்டுக்கு மற்றொரு ஆபத்தாக, காவிரிக்குக் குறுக்கே மேகேதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் கர்நாடக அரசு இரண்டு புதிய அணைகளைக் கட்ட இருக்கின்றது. இதனை மத்திய அரசு மறைமுகமாக ஊக்குவிக்கின்றது. அதனால் நிதி ஒதுக்கீடு செய்து அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகளில் கர்நாடக அரசு ஈடுபட்டு இருக்கின்றது.

அப்படிப் புதிய அணைகள் கட்டினால், எதிர்காலத்தில் சொட்டுத் தண்ணீர் கூடத் தமிழகத்துக்கு வராது. தமிழ்நாடு பாலைவனம் ஆகும்.

மற்றொரு அதிர்ச்சி என்னவென்றால், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கைவிட்ட அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற இன்றைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், ஒரு மாநிலத்தில் உள்ள அணைக்கட்டுகள் நீர்த்தேக்கங்கள் குறித்து முடிவு எடுக்கின்ற முழு அதிகாரமும் அந்தந்த மாநில அரசுகளுக்கே வழங்கப்படும். இதனால் தமிழகம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்; அதனால் இந்திய ஒருமைப்பாட்டுக்கே ஆபத்து நேரும் என்பதைக் கவலையோடு மேதகு குடியரசுத் தலைவர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம் என்று வைகோ குறிப்பிட்டார்.

‘காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு அரசியல் சட்ட அடிப்படையில் ஏதேனும் தடங்கல் இருக்கின்றதா?’ என்று டி.கே. ரெங்கராஜன் அவர்கள் கேட்டபோது, ‘அப்படி இல்லை’ என்கின்ற விதத்தில் குடியரசுத் தலைவர் தலை அசைத்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும், தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் குடியரசுத் தலைவர் தக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று, ஜி. இராமகிருஷ்ணன், டி.இராஜா, முத்தரசன், தொல். திருமா வளவன், ரவிக்குமார் ஆகியோரும் வலியுறுத்தியதை, குடியரசுத் தலைவர் அனுதாபத்தோடு கேட்டார்.

‘இப்பிரச்சினை குறித்த கோப்புகளை வரவழைத்துக் கவனிக்கிறேன்’ என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

இந்தச் சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது.

குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள், ‘குடியரசுத் தலைவருடனான சந்திப்பு மனநிறைவு அளித்தது’ என்று கூறினார்கள் என மதிமுக தலைமை அலுவலகமான தாயகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமன் மதிமுக இணையதள அணி

வைகோ விடுதலைக்கு குளச்சல் நகர மதிமுக பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், திமுக அரசு தொடுத்த தேசத் துரோக வழக்கிலிருந்து நேற்று 20-1016 விடுதலை ஆனதையொட்டி, நேற்று மாலை குளச்சல் நகர மதிமுக சார்பில், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கப்பட்டது. 

இதில் குளச்சல் நகர மதிமுகவினர் மற்றும் ஓமன் இணையதள அணி மாஹின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி