Monday, May 11, 2020

மதுக்கடை திறப்பை எதிர்த்து தமிழக அரசின் மனுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தலைவர் வைகோ MA.,BL., MPஅவர்கள் ரிட்மனுதாக்கல்!

தமிழகத்தில், மதுக்கடைகளை திறக்க உயர்நீதிமன்றம் தடைவிதித்தது! இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க அனுமதிகேட்டு விண்ணப்பித்துள்ளது!

இந்த நிலையில் தமிழகத்தில் பல குடும்பங்களை நாசமாக்கும் மதுக்கடைகளை திறக்க கூடாது என வலியுறுத்தி இன்று (11.05.2020) மதியம் 2 மணிக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோஅவர்களின் சார்பில் ரிட்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது!

தகவல்: கழக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மதுரை பா.சுப்பாராஜ் அவர்கள்!

விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீ உயிருடன் எரித்துக் கொலை; கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குக! வைகோ வலியுறுத்தல்!

விழுப்புரம் மாவட்டம் - திருவெண்ணெய் நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அதிமுகவின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் - முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் முன் பகை காரணமாக ஜெயபால் என்பவரின் மகளான பத்தாம் வகுப்புப் பள்ளி மாணவி ஜெயஸ்ரீ கை - கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் துணி வைத்து தீவைத்துக் கொளுத்திய கொடூரச் செயல் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

இக்கொடூரச் செயல் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். 

மகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 11-05-2020 தெரிவித்துள்ளார்.


வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் புகைப்பட மற்றும் ஒளிப்படத் தொழிலாளர்களுக்கு உதவிடுக! வைகோ வேண்டுகோள்!

கொரோனா கொள்ளை நோயால் அனைத்துத் துறைகளிலும் தொழில்கள் முடங்கி, இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் கட்டமாக மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் புகைப்படத் தொழிலை நம்பியுள்ள மூன்று இலட்சத்துக்கும் அதிகமான  தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

மிகச் சிறிய அளவில் கடை வைத்து வீடியோ மற்றும் புகைப்படம் சார்ந்த தொழில்களை செய்து வரும் இவர்களுக்கு ஒரு ஆண்டிற்கு அதிகபட்சம் நான்கு மாதங்கள் மட்டுமே திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நிழல்படம், ஒளிப்படம் எடுக்க வாய்ப்புகள் கிடைக்கும். பின்னர் மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு நிகழ்ச்சிகள் கிடைப்பதே அரிதாகும். ஒரு நிகழ்ச்சிக்கு வீடியோ மற்றும் நிழல்படம் எடுப்பதற்கும், தொழில்நுட்பப் பணிகளை முடித்துக் கொடுப்பதற்கும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நாட்கள் ஆகும். ஒரு சிறிய நிகழ்ச்சிக்கு 25 ஆயிரம் வாங்கும் இவர்கள், வீடியோ எடுக்கும் கலைஞருக்கு 2 ஆயிரம் ரூபாயும், நிழல்படம் எடுக்கும் இரண்டு பேருக்கு 4 ஆயிரம் ரூபாயும் ஊதியம் அளிக்கிறார்கள். ஆல்பம், வீடியோ எடிட்டிங், கேமரா வாடகை என்று ரூ.15 ஆயிரம் வரை செலவுகள் ஆகிவிடும். மீதமுள்ள தொகையை வைத்துத்தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்.

கொரோனா நோய் பரவலால் மண்டபங்கள், கோவில்கள் மூடப்பட்டதால் விசேட நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்ப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களாக நிழல்பட கலைஞர்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகி உள்ளனர்.

நிழல்பட கலைஞர்களுக்கு தனி நலவாரியம் இல்லாததால், கொரோனா பேரிடர் பாதித்துள்ள  இதுபோன்ற காலங்களில் அரசின் சார்பில் பிற தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலவாரிய உதவித் தொகை இவர்களுக்குக் கிடைப்பது இல்லை.

ஒவ்வொரு மனிதரின் வாழ்வையும் ஆவணப்படுத்தி, எதிர்கால தலைமுறைக்கு வழங்கும் கடமையைச் செய்து வரும் நிழல்பட கலைஞர்கள் தங்கள் வாழ்வில் ஒளி இழந்து தவிப்பதைக் கருத்தில் கொண்டு, இலட்சக்கணக்கான புகைப்படக் கலைஞர்களுக்கு தமிழக அரசு சிறப்பு உதவித்தொகை வழங்கி அக்குடும்பங்களைக் காப்பாற்ற முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 11-05-2020 தெரி

Sunday, May 10, 2020

சுற்றுச் சூழல் மதிப்பீட்டு அறிவிக்கை திருத்தங்கள். தமிழகத்தை அழிவுப் பள்ளத்தாக்கில் தள்ளிவிடும் ஆபத்து-வைகோ கண்டனம்!

இந்தியாவில் செயல்படுத்தப்படும் 50 கோடி ரூபாய்க்கு அதிகமான முதலீடுகள் கொண்ட பெருந்திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை (நுnஎசைடிnஅநவேயட ஐஅயீயஉவ ஹளளநளளஅநவே -நுஐஹ) கட்டாயமாகும். 1986 இல் நடைமுறைக்கு வந்த சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1994 ஜனவரி 27 இல் வெளியிடப்பட்ட குறிப்பாணையின்படி சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை சட்ட ரீதியாக கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

நடைமுறையில் உள்ள சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006 இல், சில திருத்தங்களைச் செய்து (எஸ்.ஓ.1119(இ)) 2020 மார்ச் 23 ஆம் தேதி, ஒரு வரைவு அறிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு தயார் செய்துள்ளது. அதனை ஏப்ரல் 11 ஆம் தேதி அரசு இதழிலும் வெளியிட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கையின் மீது அரசு இதழில் அறிவிக்கை  வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் மக்கள் கருத்து தெரிவிக்கலாம். மாநில அரசுகளும் கருத்துகளை அளிக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சகம் கூறி இருந்தது.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்தக் கால அவகாசத்தை 2020 ஜூன் 30 வரை மத்திய அரசு நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
“சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை விதிகள் -2020” என்று வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள திருத்தங்கள், வளர்ச்சியின் பெயரால் அழிவுப் பாதைக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் இருக்கின்றன. அவற்றில் மூன்று முக்கியத் திருத்தங்கள் மத்திய அரசுக்கு எதேச்சதிகாரமான அதிகாரங்களை அளிக்கின்றன.

முதலாவதாக சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை முன்வைக்காமலும், மக்களிடம் கருத்துக் கேட்காமலும் நடைமுறையில் செயல்பாட்டில் உள்ள புதிய திட்டங்கள், பழைய திட்டங்களின் விரிவாக்கங்கள் கட்டுமானப் பணிகள் இவற்றை எவ்வித தடையுமின்றி தொடரலாம். அரசுக்கு தண்டத்தொகை செலுத்தினால் போதும் அனுமதி கிடைத்துவிடும்.

இரண்டாவதாக 70 மீட்டர் வரையிலும் சாலைகளை அகலப்படுத்துதல், விரிவாக்கத் திட்டங்கள், நீராதாரக் கட்டமைப்புகள், பெரும் கட்டுமானத் திட்டங்கள் போன்ற 14 வகையான பணிகளுக்கும், சுற்றுச் சூழலுக்கு கேடு விளைப்பவை என்று கருதப்படக்கூடிய திட்டங்களுக்கும் இனி சுற்றுச் சூழல் மதிப்பீட்டு அறிக்கை (நுஐஹ) முன் வைக்கத் தேவை இல்லை. சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் முன் அனுமதி தேவை இல்லை.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தொழில் திட்டங்கள் பாதுகாப்புத்துறை திட்டங்கள் என்று மத்திய அரசு வகைப்படுத்தும் திட்டங்கள் எதுவாக இருப்பினும் சுற்றுச் சூழல் மதிப்பீட்டு அறிவிக்கை மற்றும் மக்கள் கருத்துக் கேட்பும் கட்டாயம் இல்லை.

மூன்றாவதாக சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி மண்டலங்கள், தோல் தொழில் மற்றும் கடலோரத் தொழில் மண்டலங்கள் போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் கட்டுமானத் திட்டங்கள் பற்றியும் விரிவாக்கப் பணிகளுக்கும் சுற்றுச் சூழல் அனுமதி தேவை இல்லை.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்த விதிகளின்படி, சுற்றுச் சூழலுக்குக் கேடு பயக்கும் திட்டங்கள் குறித்து சூழலியல்ஆர்வலர்கள், பொதுமக்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் என எவரும் புகார் கூறுவோ, கருத்துத் தெரிவிக்கவோ முடியாது.

மத்திய அரசு தேவைப்பட்டால் விசாரணைக்குழு அமைத்தால்தான் மக்கள் கருத்துகளைக் கூறலாம்.

கொரோனா கொள்ளை நோய் நாட்டு மக்களை அச்சுறுத்தி வரும் சூழலில், எதிர்காலம் இருண்டுவிடுமோ என்ற கவலை சூழ்ந்த வேளையில், மத்திய பா.ஜ.க. அரசு சுமார் 191 திடடங்களைச் செயல்படுத்த துடித்துக்கொண்டு இருக்கின்றது. ஊரடங்கு முடிவதற்குள்ளாக சில திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் அனுமதி பெறவேண்டும் என்று மத்திய அரசு சட்ட மீறலில் சர்வசாதாரணமாக இறங்கி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை விதிகள் திருத்தப்பட்டால், அவை தமிழகத்திற்குத்தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை, காவிரியில் மேகேதாட்டு அணை, தேனி நியூட்ரினோ ஆய்வகம், சேலம் - சென்னை 8 வழிச்சாலை மற்றும் காவிரிப் படுகை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் போன்றவற்றை செயல்படுத்தி, தமிழகத்தை அழிவுப் பள்ளத்தாக்கில் தள்ளுவதற்கு வழி வகுத்துவிடும்.

எனவே, சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை -2020 திருத்தங்களை மத்திய அரசு உடனே திருப்பப் பெற வேண்டும். இந்த வரைவு அறிக்கையை ஏற்கவே முடியாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 10-05-2020 தெரிவித்துள்ளார்.

Saturday, May 9, 2020

அம்பத்தூர் தொழிற்பேட்டையை இயக்க வேண்டும்-வைகோ அறிக்கை!

தமிழ்நாட்டில் பெருந்தொழில் நிறுவனங்களான ஹூண்டாய், அசோக் லேலண்ட்,ரெனால்ட் நிஸ்ஸான் மற்றும் அவர்களுடைய முதல்நிலை உதிரி பாகங்கள் ஆக்கும் தொழிற்கூடங்கள், பகுதி அளவில் இயங்குவதற்கு தமிழக அரசு இசைவு அளித்து இருக்கின்றது. அவர்களும் பணிகளைத் தொடங்கி விட்டார்கள். 

சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட தொழில் நிறுவனங்கள் தவிர, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பெரிய, சிறு குறு நடுத்தரத் தொழில நிறுவனங்களும் பணிகளைத் தொடங்கி விட்டனர். 

ஆனால், ஆசியாவின் மிகப்பெரிய அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை மாநகராட்சி எல்லைக்கு உள்ளே வருவதால், அங்கே உள்ள நிறுவனங்கள் தொழிலைத் தொடங்க முடியவில்லை. இவர்கள்தான், மேற்கண்ட பெருந்தொழில் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை ஆக்கித் தருகின்றார்கள். அவர்கள் இயங்க முடியவில்லை என்றால், பெருந்தொழில் நிறுவனங்கள் அவர்களுக்குக் கொடுத்து இருக்கின்ற உதிரி பாகங்கள் கொள்முதல் வேறு நிறுவனங்களுக்கு மாற்றி வருகின்றார்கள். மற்றவர்களும், மாற்றி விடக்கூடும். அதனால், அம்பத்தூர் தொழிற்பேட்டை நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்கொள்கின்றேன்க நேரிடும். ஏற்கனவே கடந்த 45 நாள்களாக தொழில் முடக்கத்தால், பெரும் இழப்புக்கு உள்ளாகி இருக்கின்றார்கள். 

அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை மாநகராட்சி எல்லைக்கு உள்ளே இருந்தாலும், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி ஆகும். குடியிருப்புகளும் கிடையாது. வடமாநிலத் தொழிலாளர்கள் தொழிற்கூடங்களிலேயே இருக்கின்றார்கள். 

அங்கே தொழில்களை இயக்குவதால், யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. கொரோனா பரவலைத் தடுக்க, சமூக விலகலைக் கடைப்பிடிக்கவும் ஆயத்தமாக இருக்கின்றார்கள். இது தொடர்பாக, அம்பத்தூர் தொழிற் முனைவோர்கள் தமிழக அரசை பலவாறு அணுகியும், இதுவரை அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. 

எனவே, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழில் நிறுவனங்கள், திங்கட்கிழமை முதல் இயங்குவதற்கு தமிழக அரசு அறிவிக்கை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

எனவே, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழில் நிறுவனங்கள், திங்கட்கிழமை முதல் இயங்குவதற்கு தமிழக அரசு அறிவிக்கை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 9-5-2020 தெரிவித்துள்ளார்.

Friday, May 8, 2020

ரயில் தண்டவாளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு! வைகோ இரங்கல்!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு தழுவிய ஊரடங்கு வரும் 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளதால், நூற்றுக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களில் சிக்கி  தவித்து வருகின்றனர்.  இந்நிலையில் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு சிராமிக் எனப்படும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 5 நாட்களில்,  83 சிறப்பு ரயில்கள் மூலம் சுமார் 80 ஆயிரம் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்  சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இருப்பினும், வெளிமாநில தொழிலாளிகள் சிலர் நடந்தே சொந்த ஊர் சென்ற வண்ணம் உள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்துக்கு நடந்து  சென்ற வெளி மாநில தொழிலாளர்கள் மகாராஷ்டிரா மாநிலம் - அவுரங்காபாத் கர்மத் அருகே தூக்கம் காரணாமாக தண்டவாளத்தில் தூங்கியுள்ளனர். இன்று காலை 6.30 மணியளவில் அந்தத் தண்டவாளத்தில் சென்ற காலி சரக்கு ரயில் தூங்கிக்  கொண்டிருந்த 17 பேர் மீது ஏறியதில் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் தருகிறது.

வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு பாதுகாப்பாகத் திரும்புவதற்கு மத்திய - மாநில அரசுகள் உரிய ஏற்பாடுகளை மேலும் கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்பதை இந்தக் கோரச் சம்பவம் உணர்த்துகிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு மத்திய அரசும், மகாராஷ்டிரா அரசும் நிதி உதவி அளிக்க வேண்டும்.

ஆந்திராவில் உள்ள தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் ஆலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவால், கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தைகள் உட்பட 11 அப்பாவி பொதுமக்கள் பலியாகி இருக்கிறார்கள். உயிர் பிழைக்க ஓடிய பொதுமக்கள் சாலையில் ஆங்காங்கே மயங்கி சுருண்டு விழுந்திருக்கிறார்கள். 200க்கும் மேற்பட்டோர் கடுமையான பாதிப்புகளுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், 1,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் தெரிய வருகிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆந்திர மாநில அரசு ஒரு கோடி ரூபாய் கருணைத் தொகை  அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

மனிதத் தவறால் ஏற்பட்ட இந்த விபத்தில் ஆடு, மாடுகளும், பறவைகளும் உயிர் தப்பவில்லை. கொரோனா பாதிப்புக்கு இடையே இந்தச் சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 உயிர்ப்பலியானோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 8-5-2020 ட்

Thursday, May 7, 2020

ஏழையில் வயிற்றில் அடிக்காதே வைகோ கர்ஜனை!


கறுப்புச் சின்னம் அறப்போரில் வைகோ!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வைகோ எம்பி அவர்கள், டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்கும் தமிழக அரசுக்கு எதிராக இன்று 7-5-2020, காலை பொழுதில், தனது அண்ணா நகர் இல்லத்தின் முன்பு கறுப்புச் சட்டை அணிந்து முழக்கங்கள் எழுப்பி அறப்போர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

உடன் வைகோ வீட்டிலுள்ளவர்கள், மற்றும் உதவியாளர்கள் இருந்தனர்.

Wednesday, May 6, 2020

மதிமுக 27 ஆம் தொடக்க விழாவில் பொதுச் செயலாளர் வைகோ எம்பி கொடியேற்றி வாழ்த்து!


மறுமலர்ச்சி தி.மு.க 27 ஆம் ஆண்டு தொடக்க விழா!

கழகப் பொதுச்செயலாளர் வைகோ தாயகத்தில் கொடி ஏற்றி வைத்தார்.

மறுமலர்ச்சி தி.மு.க 27 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, இன்று மே-6 ஆம் தேதி கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமைக் கழகம் தாயகத்தில் கழகக் கொடியை ஏற்றி வைத்தார்கள்.

கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, ஆட்சிமன்றக்குழுச் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், டி.சி.ராஜேந்திரன், கே.கழககுமார், சைதை ப.சுப்பிரமணி, சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத்புகாரி ஆகியோர் உடன் இருந்தனர்.

மே 7: கறுப்புச் சட்டை அணிவீர்; கண்டன முழக்கம் எழுப்புவீர்! வைகோ அறிக்கை!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று சமூகப் பரவலாகி, பெரும் ஆபத்தில் சிக்கி இருப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசின் நிர்வாகக் கோளாறும், பொறுப்பற்ற நடவடிக்கைகளும் காரணம் ஆகும்.

கடந்த மார்ச் 12 ஆம் தேதி கொரோனா வைரஸ் தாக்கம் பற்றி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து எச்சரிக்கை செய்தார். மீண்டும் மார்ச் 21 ஆம் தேதி கொரோன தொற்றுச் சோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பரிசோதனைக் கருவிகள், வென்டிலேட்டர்கள் கொள்முதலை அதிகரிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் எடுத்துரைத்தார். ஆனால் தமிழக அரசு எதிர்க்கட்சித் தலைவரின் எச்சரிக்கைகளை புறந்தள்ளியது மட்டுமின்றி, கொரோனா பேரிடரை பெரும் குழப்பத்துடனும் அலட்சியப் போக்குடனும் கையாண்டதால், இன்று மக்கள் அச்சத்தில் உறையும் நிலைமை உருவாகி இருக்கிறது.

மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கையும், அதன் பிறகு இரண்டாம் கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கையும் மக்கள் கடைப்பிடித்து வந்தபோது, திடீரென்று சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் 4 நாட்கள் முழுமையான ஊரடங்கு என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். எவ்வித முன்தயாரிப்புகள் இன்றி, தமிழக அரசு அறிவீனமான முறையில் இந்த அறிவிப்பை வெளியிட்டதால் மக்கள் பதற்றமடைந்து, ஏப்ரல் 25 ஆம் தேதி கடைகளில், சந்தைகளில் அணை உடைத்து வெள்ளம் பாய்ந்தது போல குவியத் தொடங்கினர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஊரடங்கில் வீடுகளுக்குள் முடங்கி இருந்த மக்களைத் தெருவுக்கு வரவழைத்ததன் விளைவு, கோயம்போடு என்பது தமிழ்நாட்டின் ‘வூகான்’ போல இன்று கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறுவதற்கு வழி கோலிவிட்டது. எடப்பாடி பழனிச்சாமி அரசின் படு மோசமான நிர்வாக நடவடிக்கைகளால் தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்றுப் பரவலாகி விட்டது.

இந்நிலையில், மேலும் தமிழ்நாட்டைப் படுகுழியில் தள்ளிவிடும் வகையில் மே 7 ஆம் தேதி முதல் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகளை திறப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு அனுமதி வழங்கி இருப்பது மேலும் மேலும் கொரோனா கொள்ளை நோய் காட்டுத் தீ போன்று பரவுவதற்குத்தான் வழி வகுக்கும். மதுக்கடையில் குவியும் குடிகாரர்களிடையே சமூக விலகல் கட்டுப்பாடு என்று எதுவும் காதில் விழப்போவது இல்லை. கொரோனா தொற்று அதிகரிப்பதையும் தடுக்கப்போவது இல்லை.

மக்களை பேராபத்தில் தள்ளி வரும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் பொறுப்பற்ற நிர்வாகச் சீரழிவைக் கண்டித்தும், டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கும் முடிவைக் கண்டித்தும் மே 7 ஆம் தேதி, காலை 10 மணிக்கு, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு 5 பேருக்கு மிகாமல் கூடி, கறுப்புச் சின்னம் அணிந்து எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக 15 நிமிடங்கள் கண்டன முழக்கம் எழுப்ப வேண்டும்.

கொரோனா கொள்ளை நோய் பேரிடரைக் கையாள்வதில் தோல்வி அடைந்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கட்சி, அரசியல் எல்லைகளைத் தாண்டி தமிழக மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் பொதுமக்களும், கழகக் கண்மணிகளும் வீடுகளின் வாயில்களில் நின்று கறுப்புச் சின்னம் அணிந்து, விண்ணதிர கண்டன முழக்கம் எழுப்பி இந்த அறப்போர் இயக்கத்தை வெற்றி அடையச் செய்வோம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 06-05-2020 தெரிவித்துள்ளார்.

Tuesday, May 5, 2020

மறுமலர்ச்சி திமுக 27 ஆம் ஆண்டு தொடக்க விழா. ஏதுமற்ற ஏழைகளுக்கு உதவிடும் அறப்பணி தொடரட்டும்! வைகோ அறிக்கை!


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மே 6-ஆம் தேதி 27 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் இன்னொரு படிநிலை வளர்ச்சியாக, தமிழக அரசியல் வானில் மறுமலர்ச்சி திமுக இலட்சிய சுடராக ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.

திராவிட இயக்கத்தின் முப்பெரும் தலைவர்களான டாக்டர் சி.நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோர் கட்டி நிர்மாணித்த இலட்சியக் கோட்டையை காக்கும் காவல் அரணாக தந்தை பெரியார், பேரறிஞர் பெருந்தகை அண்ணா வழியில் பீடுநடை போடுகிறது.

திராவிட இயக்கம் ஏந்திப் பிடித்த கொள்கைக் கோட்பாடுகளான சமூக நீதி தழைக்கவும், தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கவும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 27 ஆண்டுகளாக இடையறாது ஆதாயம் தேடாமல் அரசியல் களத்தில் தொண்டாற்றி வருகிறது.

தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காப்பாற்றவும், நதி நீர் உரிமைகள் பறிப்புக்கு எதிராகவும், சுற்றுச்சூழலைக் காக்கவும் சமரசமின்றி போராடி வருகிறது.

தமிழகத்தை சீரழித்து வரும் மதுபானக் கடைகளை நிரந்தரமாக மூடி, முழு மதுவிலக்கு இலக்கை அடைய தொடர்ந்து அறப் போர்க்களத்தில் நிற்கின்ற இயக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை நாடு அறியும்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் பிரகடனம் செய்த மாநில சுயாட்சி தத்துவம் நிலை பெறுவதற்கு தென்னகத்தில் வலுவாகக் குரல் எழுப்பும் இயக்கம் மறுமலர்ச்சி திமுக என்பதை வடபுலம் உணர்ந்திருக்கிறது.

திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை தகர்த்து, தமிழ் மொழி இன பண்பாட்டு மரபுகளைச் சிதைப்பதற்கு பரம வைரிகள் கங்கணம் கட்டி அலைகின்றனர்.

நாட்டின் பன்முகத்தன்மையைச் சீர்குலைத்து, ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே மொழி; ஒரே கலாச்சாரம் என்று அனைத்தையும் ஒற்றைக் குடையின் கீழ் கொண்டுவரத் துடிக்கும் சனாதன சக்திகளை இந்த மண்ணில் வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்து எறிய வேண்டிய வரலாற்றுக் கடமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு தோளோடு தோள் சேர்ந்து களத்தில் நிற்கிறது மறுமலர்ச்சி திமுக.

அதனைக் கருத்தில் கொண்டுதான் தொலைநோக்குப் பார்வையுடன் கழகம் அரசியல் முடிவுகளை மேற்கொண்டு வருகிறது. கெடல் எங்கே தமிழர் நலன் அங்கெல்லாம் தலையிட்டு கிளர்ச்சி செய்க என்னும் பாவேந்தர் பாரதிதாசன் கவிதை வரிகளை நெஞ்சிலே தாங்கி, பூமிப்பந்தில் வாழ்கிற தமிழர் நலன் பேணும் இயக்கமாக கழகம் திகழ்கிறது.

நமது தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள் இழந்த தாயகத்தை மீட்கவும், மாவீரர் திலகம் பிரபாகரன் இலட்சிய தாகமான தமிழீழம் மலரவும், உலக நாடுகள் ஏற்றுக் கொண்டிருக்கின்ற பொது வாக்கெடுப்பு ஐநா மன்றத்தின் அங்கீகாரத்தோடு வெற்றிகரமாக நடைபெறவும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் குரல் எழுப்பும்.

கொரோனா கொடிய பேரிடர் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ள நிலையில், வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் ஏதுமற்ற ஏழை எளிய மக்களுக்கு தமிழகம் முழுவதும் கழகக் கண்மணிகள் ஓடி ஓடி உதவிடும் செய்திகள் மகிழ்ச்சி தருகிறது. கழகம் 27 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நிலையில், மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற பேரறிஞர் அண்ணாவின் மணி வாசகத்தை இதயத்தில் தாங்கித் தொண்டாற்றுவோம்! கொரோனா கொள்ளை நோயிலிருந்து மீள மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உறுதி கொள்வோம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 5-5-2020 தெரிவித்துள்ளார்.

மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது. வான்ஊர்திக் கட்டணத்தை, பாதியாகக் குறைக்க வேண்டும் - வைகோ கோரிக்கை!

மே 7 முதல், மதுக்கடைகளைத் திறக்க,தமிழ்நாடு அரசு முடிவு செய்து இருப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல், ஏழை எளிய மக்களின் அடிவயிற்றில் அடிப்பதாகும்.  எனவே, அந்த முடிவைக் கைவிட வேண்டும் என தமிழக அரசைக்  கேட்டுக் கொள்கின்றேன். 

அயல்நாடுகளில் சிக்கி இருக்கின்ற இந்தியர்களை, மே 7 ஆம் நாள் முதல் திரும்ப அழைத்து வர, ஏற்பாடுகள் செய்து இருப்பதாக, இந்திய அரசு அறிவித்து இருப்பதை வரவேற்கின்றேன். அதேவேளையில், அவர்கள், கடந்த 40 நாள்களாக வருமான இழப்பிற்கு உள்ளாகி இருக்கின்றனர். தொழிலாளர்கள், சிறுவணிகர்களின் கையிருப்பு எல்லாம் கரைந்து விட்டது. எனவே, வான் ஊர்திக் கட்டணத்தைச் செலுத்த இயலா நிலையில் உள்ளனர். அவர்களுக்கு, பயணக் கட்டணத்தில், ஐம்பது விழுக்காடு குறைக்க வேண்டும். 

அத்துடன், விசா முடிந்து புதுப்பிக்க முடியாமல் வளைகுடா, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் சிக்கி இருப்பவர்களுக்கு, அந்த நாடுகள் தண்டம் எதுவும் பறிக்க இயலாத வகையில், மத்திய அரசு அந்த நாடுகளுடன் பேசித் தீர்வு காண வேண்டும். அவர்களுக்குப் பாதுகாப்பு ஏற்படுத்தித் தர வேண்டும்.

தமிழ்நாடு முழுமையும் அரசு மருத்துவமனைகளில், கொரோனாவைக் காரணம் காட்டி, குடல் வால் உள்ளிட்ட சிறுசிறு அறுவைகளைக் கூடச் செய்யாமல், கால தாதமதம் செய்து வருகின்றனர். இதனால், அந்த நோயாளிகள்  வேதனைக்கு உள்ளாகி இருக்கின்றனர். எனவே, தமிழக அரசு, அனைத்து நோயாளிகளுக்கும் தகுந்த மருத்துவ உதவிகள், தாமதம் இன்றிக் கிடைத்திட ஆவன செய்ய வேண்டும். 

மார்ச் 17 அன்று, மாரடைப்பால் துபாயில் இயற்கை எய்திய துரைராஜ் உடல், பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, நேற்று இரவு வந்து சேர்ந்தது. அதற்காக, அயல்உறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டேன். 

மராட்டிய மாநிலத்தில் யவத்மால் மாவட்டத்தில் சிக்கி இருந்த, அருப்புக்கோட்டை, பாவூர்சத்திரம், தென்காசி தொழிலாளர்கள் 15 பேர் அங்கிருந்து 60 கிலோமீட்டர் நடந்து, உமர்கேட் என்ற இடத்தில் இருக்கின்றனர். அவர்களுக்குத் தேவையான உணவு, இருப்பிட வசதிகள் குறித்து, அந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜ்குமார் அவர்களுடன் அலைபேசியில் பேசினேன். அவர்களை ஊருக்குத் திருப்பி அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்து தருமாறு கேட்டுக் கொண்டேன். ஆவன செய்வதாகக் கூறி உள்ளார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 5-5-2020 தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் தீவிரவாதிகள் தேடுதல் பணியில் தமிழக வீரர் சந்திரசேகர் வீர மரணம்-வைகோ இரங்கல்!

காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் உள்ள வங்கம் காசியாபாத்தில் வீடு ஒன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த, தென்காசி மாவட்டம் - செங்கோட்டையைச் சேர்ந்த மத்திய காவல்படை வீரர் சந்திரசேகர், தீவிரவாதிகளால் பின்னால் இருந்து சுடப்பட்டு நேற்று வீரமரணம் அடைந்த செய்தி அதிர்ச்சியைத் தருகிறது.

செங்கோட்டை மூன்றுவாய்க்கால் பகுதியில் காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணியாற்றி மறைந்த செல்லச்சாமி - சியாமளா தம்பதியினரின் 31 வயது மகனான சந்திரசேகரின் துணைவியார் ஜெனிபர் கிறிஸ்டி (வயது 27), இரண்டு வயது மகன் ஜான் பீட்டர் ஆகியோரின் எதிர்காலத்தை நினைக்கும்போது, தாங்க முடியாத வேதனை ஏற்படுகிறது.

நாட்டைப் பாதுகாக்கும் பணியில் உயிர்த் தியாகம் செய்துள்ள சந்திரசேகரனுக்கு வீரவணக்கம் செலுத்துவதோடு, அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மத்திய, மாநில அரசுகள் இக்குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு, அவரது துணைவியாருக்கு கருணை அடிப்படையில் தக்க வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும் என மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறேன் என‌ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 05-05-2020 தெரிவித்துள்ளார்.

Monday, May 4, 2020

பெட்ரோல் டீசல் வரி உயர்வை திரும்ப் பெறுக! வைகோ அறிக்கை!

பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. ஓபெக் நாடுகளில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. கடந்த மே 1ஆம் தேதி நிலவரப்படி கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 26 டாலராக சரிந்து விட்டது. கச்சா எண்ணெயின் விலை குறைந்து வரும் நிலையில், நுகர்வோரான மக்களுக்கு அதன் பயன் கிடைக்காத வகையில் மத்திய அரசு கடந்த மார்ச் 14-ஆம் தேதி பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியது.
இதன் மூலம் மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ 22 .98 ம், டீசலுக்கு ரூ 18.83ம் கலால் வரியாக வசூலிக்கிறது. 2014இல் மோடி அரசு பதவியேற்றபோது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரி ரூபாய் 9.48 ஆகவும், ஒரு லிட்டர் டீசலுக்கு கலால் வரி ரூபாய் 3.56 ஆகவும் இருந்தது.
2014 இல் இருந்து பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போதெல்லாம் அதன் பயன் மக்களுக்கு போய் சேராமல் பாஜக அரசு கலால் வரியை தொடர்ந்து அதிகரிப்பதை வாடிக்கையாக்கி வருகிறது. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினரான நிலேஷ் ஷாவே, கச்சா எண்ணெய் விலை சரிவு பலனை நுகர்வோருக்கு வழங்காததால், மத்திய அரசு ரூபாய் 3.4 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளது என்று கூறியிருக்கிறார். இதுவரை பெட்ரோல் டீசல் கலால் வரியாக மட்டும் ரூபாய் 20 லட்சம் கோடி பா.ஜ.க. அரசால் வசூலிக்கப்பட்டு இருக்கிறது.
கொரோனா பேரிடர் மக்களின் இயல்பு வாழ்க்கையைச் சீரழித்து சிதைத்து உள்ள நேரத்தில் மத்திய அரசு போலவே தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு பெட்ரோல் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தி இருப்பது கண்டனத்துக்குரியது.
பெட்ரோலுக்கு மதிப்புக்கூட்டு வரி 28 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடு ஆகவும், டீசலுக்கு 20 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடு ஆகவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பெட்ரோல் விலை 3 ரூபாய் 25 பைசாவும், டீசல் விலை 2 ரூபாய் 50 பைசாவும் உயர்ந்துள்ளது. கொரோனா பேரிடர் மக்களை வாட்டி வதைக்கும் போது தமிழக அரசு பெட்ரோல் டீசல் மீதான வரியை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றுவது அக்கிரமம் ஆகும். தமிழக அரசு பெட்ரோல் டீசலுக்கு அறிவித்துள்ள மதிப்புக்கூட்டு வரி உயர்வை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 04-05-2020 தெரிவித்துள்ளார்.

Sunday, May 3, 2020

மின்சார சட்ட திருத்த மசோதா - 2020ஐ திரும்பப் பெறுக! வைகோ அறிக்கை!

மத்திய அரசு ‘மின்சார சட்ட திருத்த மசோதா - 2020’ ஒன்றைக் கொண்டுவந்து, கடந்த ஏப்ரல் 17 அன்று மாநிலங்களின் கருத்தை அறிவதற்காக அனுப்பியுள்ளது.
இந்த மசோதாவில், மாநில மின்சார வாரியங்களை பிரித்து, வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. நாட்டின் மின் உற்பத்தியைத் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்தால், உற்பத்தி செய்த மின்சாரத்தை முழுக்க முழுக்க அவர்களே விநியோகிக்கும் உரிமையைப் பெற்றுவிடுவார்கள். மேலும், மின் நுகர்வோர்களிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். இதனால் மின்சாரக் கட்டணத்தைத் தீர்மானிக்கும் அதிகாரமும் தனியாருக்குச் சென்றுவிடும். தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை விநியோகம் செய்யும் நிறுவனமாக மாற்றப்படுவதால், சேவைத் துறை என்பது வர்த்தகமாக மாற்றப்படுவதுடன், மின் கட்டணமும் உயரும் ஆபத்து ஏற்படும்.
இந்த மசோதா நிறைவேற்றப்படுமானால், இது வரை தமிழகம் மற்றும் சில மாநிலங்களிலும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் இரத்து செய்யப்படும். மேலும், மிகவும் நலிவுற்ற ஏழைகள், தாழ்த்தப்பட்டோரின் குடிசைகள், கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரமும் ரத்தாகும் நிலை உருவாகும்.
கொரோனா ஊரடங்கில் நாட்டின் அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வஞ்சகமாக பா.ஜ.க. அரசு இந்த மின்சார சட்ட முன்வடிவைச் சட்டமாக்கத் துடிக்கிறது.
தமிழகத்தில் இலவச மின்சாரத்தைப் பெறுவதற்குப் போராடிய விவசாயப் பெருமக்கள் 64 உயிர்களை பலி கொடுத்துள்ளனர்.
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வராக இருந்த டாக்டர் கலைஞர் அவர்கள் இலவச மின்சாரத்தை அளித்து, இவை சமூக நீதி இணைப்புகள் என்று பெருமிதம் கொண்டார்.
இலவச மின்சாரம் வழங்கப்படுவதால், விவசாயிகள் நீர்வளங்களைப் பயன்படுத்தி, மக்களுக்குத் தேவையான உணவு தானியங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி செய்து, சந்தைககுக் கொண்டு வருகின்றனர். தொடர்ந்து நட்டம் ஏற்பட்டாலும், வேளாண்மைத் தொழிலில் விவசாயிகள் இன்னமும் நீடிப்பதற்கு இலவச மின்சாரமும் ஒரு காரணமாகும்.
இதனை இரத்து செய்வது மத்திய - மாநில அரசுகள் விவசாயிகளுக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும்.
ஏற்கனவே கடனிலும், வறுமையிலும் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் விவசாயிகள் மின் கட்டணத்தை எப்படிச் செலுத்துவார்கள்? அதைப் போல சமூகத்தில் நலிந்தவர்கள், தாழ்த்தப்பட்டோர் என அனைவரின் வீடுகளுக்கும் வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் இரத்து செய்யப்படுமானால், அக்குடும்பங்கள் இருளில் தள்ளப்படும் நிலைதான் ஏற்படும். மேலும், நெசவுத் தொழிலை நம்பி இருக்கும் கைத்தறி நெசவாளர்கள் கடும் தொழில் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், இலவச மின்சாரத்தையும் இரத்து செய்வது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும்.
தமிழக அரசு சார்பில், மின்சார சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற அறிவுறுத்த வேண்டும்.
மத்திய பா.ஜ.க. அரசு வேளாண்மை, கைத்தறி நெசவுத் தொழில்களை பாதுகாக்கும் வகையிலும், ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையிலும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 03-05-2020 தெரிவித்துள்ளார்.

Saturday, May 2, 2020

வைகோ கோரிக்கையை ஏற்றது, இராஜஸ்தான் அரசு!

இராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் தங்கி ஐஐடி நுழைவுத்தேர்வு, ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு மற்றும் தேசிய தகுதிகாண் தேர்வு (நீட்)க்கு மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த ஒரு மாதமாக ஊர் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தனர்.
சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 55 மாணவர்கள், அவர்களுடைய 23 பெற்றோர்கள், தமிழகம் திரும்ப உதவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இது தொடர்பாக, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், கோட்டா மாவட்ட ஆட்சியர் மற்றும் இதற்காகப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ள இராஜஸ்தான் மாநில அரசு அதிகாரி திரு சரவணகுமார் ஆகியோருடன் பேசி வேண்டுகோள் விடுத்தார்.
மேற்கு வங்கம், ஜார்கண்ட் மாநிலஅரசுகள் பேருந்துகளை அனுப்பி, தங்கள் மாணவர்களை அழைத்துக்கொண்டு சென்றதாகத் தெரிவித்தனர். வைகோ வேண்டுகோளை ஏற்று, இராஜஸ்தான் மாநில அரசே பேருந்து ஏற்பாடு செய்துள்ளது. மாணவர்கள் விரைவில் தமிழகம் திரும்புகின்றார்கள் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள செய்தியில் 02-05-2020 தெரிவித்துள்ளது.

முழு மதுவிலக்கை செயல்படுத்த இதுவே தக்க தருணம்; மதுக்கடைகளை நிரந்தரமாக மூடுக! வைகோ அறிக்கை!

கொரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கு மே 3 ஆம் தேதியிலிருந்து மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் நோய்த் தொற்று இல்லாத ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டல பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு இருக்கின்றது. அனைத்து மண்டலத்திலும் சில நிபந்தனைகளுடன் ‘மதுக் கடைகளை’ திறந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கின்றது.
ஊரடங்கு அமலில் இருக்கும்போது, மார்ச் 24 ஆம் தேதி முதல் இன்றுவரை ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மதுக்கடைகள் மூடப்பட்டதால், மதுவால் சீரழிந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. புது வசந்தத்தை அனுபவித்து வரும் அத்தகைய ஏழை, எளிய குடும்பங்களை மீண்டும் துயரப் படுகுழியில் தள்ளும் கொடிய செயலில் தமிழக அரசு இறங்கக் கூடாது.
தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டு இருப்பதால், பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் மகிழ்ச்சி அலைமோதுகிறதேயொழிய, எங்கும் எந்தவித வேண்டத்தகாத நிகழ்வுகளும் நடக்கவில்லை. சட்டம் ஒழுங்கு கெடவில்லை. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக் குற்றங்களும் குறைந்துள்ளன.
மதுக்கடைகளை நிரந்தரமாக மூடுவதற்கு இதுவே தக்க தருணம் என்பதை தமிழக அரசு முழுமையாக உணர வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் கடந்த நிதி ஆண்டில் அரசுக் கருவூலத்திற்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் வந்ததாக தமிழக நிதித்துறைச் செயலாளர் தெரிவித்து இருந்தார். மதுபான வருவாய் அதிகரித்து இருப்பதற்கு என்ன காரணம்? என்று தமிழக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது, இங்கு மது குடிப்போர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. நாங்கள் என்ன செய்ய முடியும்? என்று அமைச்சர் ஒருவர் பதில் அளித்தார்.
ஜெயலலிதா அவர்கள் 2016 ஆம் ஆண்டு மே மாதம் முதல்வர் பதவி ஏற்றவுடன், தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவித்து, 500 மதுக்கடைகளை முதல் கட்டமாக மூடி உத்தரவிட்டார்.
ஆனால், இன்று என்ன நிலைமை? எடப்பாடி பழனிச்சாமி அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக புதிதாக 2295 டாஸ்மாக் மதுக் கடைகள் திறந்ததால், தற்போது மதுபானக் கடைகளின் எண்ணிக்கை 5152 ஆக உயர்ந்து இருக்கிறது.
“டாஸ்மாக் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்; முழு மதுவிலக்கே; நமது இலக்கு” என்பதை வலியுறுத்தி, 2012 டிசம்பர் 12 ஆம் தேதி, கடல் அலைகள் தாலாட்டும் நெல்லை மாவட்டம் - உவரியிலிருந்து மதுரை மாநகர் வரை நடைப்பயணம் தொடங்கினேன். பின்பு காஞ்சி மாவட்டம் கோவளத்திருந்து, மறைமலைநகர் வரையிலும், கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து, ஈரோடு வரையிலும் மூன்று கட்டங்களாக சுமார் 3000 கிலோ மீட்டர் நடைப்பயணம் நடந்தபோது, இலட்சக்கணக்கான தாய்மார்களின் உள்ளக் குமுறலை நேரில் கண்டேன்.
அதன்பின்னர் கொந்தளித்துப் போன தாய்மார்கள் தன்னெழுச்சியாக வெகுண்டு எழுந்து டாஸ்மாக் மதுக்கடைகளை உடைத்து நொறுக்கும் வீரம் செறிந்த காட்சிகளை நாடே பார்த்தது.
தமிழக அரசு, இனி எக்காரணம் கொண்டும் மதுக்கடைகளைத் திறக்க அனுமதிக்கக் கூடாது, மது விற்பனை வருவாயை ஈடுகட்ட பல வழிகள் இருக்கின்றன. முதலில் ஜி.எஸ்.டி. வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கை முழுமையாகப் பெற்று, மத்திய அரசில் நமது உரிமையைத் தட்டிக் கேட்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
‘முழு மதுவிலக்கு’ என்பதைச் செயல்படுத்துவதற்கான பொன்னான இந்த வாய்ப்பை எடப்பாடி பழனிச்சாமி அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மக்கள் சீரழிந்தால் என்ன? எக்கேடு கெட்டல் என்ன? மது விற்பனை வருமானம்தான் முக்கியம் என்று கருதினால் தமிழகத்துத் தாய்மார்கள் மதுரையை எரித்த கண்ணகியைப் போல போர்க்கோலம் பூணுவார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ராஜஸ்தானில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை அழைத்துவர ஏற்பாடு செய்க! வைகோ வேண்டுகோள்!

இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் தங்கி ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு, ஜே.இ.இ. (முதன்மைத் தேர்வு) மற்றும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) பயிற்சி மையங்களில் சேர்ந்து மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக இரயில், விமானப் போக்குவரத்து இல்லாததால், மாணவர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் இருக்கிறார்கள். இதில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களும் உள்ளனர்.
சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 55 மாணவர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர் 23 பேர் என மொத்தம் 78 பேர் தமிழகம் திரும்புவதற்கு உதவிடுமாறு ராஜஸ்தான் மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். கோட்டா மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாட்டிற்காக நியமிக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு அதிகாரி சரவணகுமார் ஆகியோரிடமும் முறையிட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநில மாணவர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்தவுடன், சிறப்புப் பேருந்துகளை அனுப்பி 2500 மாணவர்களை கோட்டாவிலிருந்து அழைத்துவர, மேற்கு வங்க முதலமைச்சர் சகோதரி மம்தா பானர்ஜி உத்தரவிட்டு இருக்கிறார்.
அதைப் போன்று ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று, ஜார்கன்ட் மாணவர்கள் சொந்த ஊர் திரும்ப இரண்டு சிறப்பு இரயில்களை ஏற்பாடு செய்திருக்கிறார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் 78 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதையும், கோட்டா மாவட்ட நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
கோட்டா மண்டல ஆணையர் எல்.என்.சோனி கூறும்போது, கோட்டாவில் உள்ள தமிழக மாணவர்களை அழைத்துச் செல்ல இதுவரையில் தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்து இருப்பதையும் அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
எனவே தமிழக அரசு தமிழ்நாட்டு மாணவர்களை ராஜஸ்தானிலிருந்து சொந்த ஊர்களுக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 02-05-2020 தெரிவித்துள்ளார்.

Friday, May 1, 2020

கொடி உயர்த்திக் கொண்டாடுவோம்; விடியலின் வெற்றியைக் காண்போம்!

இமைப்பொழுதும் நீங்காது என் இதயத் துடிப்போடும் இரத்தச் சுழற்சியோடும் கலந்துவிட்ட கண்ணின்மணிகளே!
மே 6, 2020 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 27 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கால் நூற்றாண்டைக் கடந்த நமது மறுமலர்ச்சிப் பயணத்தைத் திரும்பி நோக்கினால் மலைப்பாக இருக்கின்றது. தியாகத் தணலில் பூத்த நெருப்பு மலர்தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
நம்மைவிட வலுவானவர்கள், பொருளாதார வலிமை, விளம்பர வெளிச்சம் இவை அனைத்தையும் பெற்று இருந்தவர்கள், நாடாளுமன்றம், சட்டமன்றம் என ஆட்சிமன்றங்களில் இடம்பெறும் பெருவாய்ப்பினைப் பெற்று இருந்தவர்கள் எல்லாம், ஒரு அரசியல் இயக்கம் தொடங்கி அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதை நாடு அறியும்.
அதிகாரத்தின் நிழலைக்கூட மிதிக்காமல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த இருபத்தி ஆறு ஆண்டுகளாக உயிர்த்தன்மையுடன் இயங்கிக் கொண்டே இருக்கின்றது. அதற்கு அடிப்படைக் காரணம், திராவிட இயக்கத்தின் ஆலுக்கு விழுதாக இந்த மண்ணில் எழுந்த கழகத்தை ஆணி வேராகத் தாங்கிப் பிடிக்கும் இலட்சக்கணக்கான கண்ணின் மணிகளான தொண்டர்களே நீங்கள்தான்.
இது தொண்டர்களால் விதை ஊன்றப்பட்ட இயக்கம்; கண்ணீரும், வியர்வையும் சொரிந்து, தொண்டர்களால் வளர்க்கப்பட்ட இயக்கம்; தொண்டர்களால் கட்டி எழுப்பப் பட்ட இயக்கம்.
என் ஊனிலும், உதிரத்திலும் கலந்து இருக்கின்ற பேரறிஞர் அண்ணா அவர்கள் ஊட்டிய குடும்பப் பாச உணர்ச்சிதான் இந்த மாபெரும் இயக்கத்தின் ஆதார சுருதியாக இருக்கின்றது.
வேலூர் சிறைச்சாலையில் பொடா கைதியாக 19 திங்கள் அடைபட்டு இருந்தபோது, சிறையிலிருந்து கண்ணின் மணிகளுக்கு நான் எழுதிய மடல்தான் என் சிந்தை அணு ஒவ்வொன்றிலும் இன்னும் நிறைந்து இருக்கிறது.
“நமது இயக்கம் பாசம் என்னும் ரத்தத்தாலும், உறுதி எனும் நரம்பினாலும் பின்னப்பட்டு இருக்கின்றது. இந்தக் கூட்டினை எந்த உற்பாதத்தாலும் சிதைக்க முடியாது. நமது மணி மாளிகைச் சுவரின் ஒவ்வொரு செங்கல்லிலும் உங்களின் உன்னதமான தியாகமும், உழைப்பும் கலந்து இருக்கிறது.
மறுமலர்ச்சி தி.மு.கழகம் உணர்ச்சியின் உயிர்த்துடிப்பு. அதன் உயிர் வரிகள் தொண்டர்கள்.”
சிறை மடலில் நான் குறிப்பிட்டிருந்த இந்த வரிகள் எக்காலத்திற்கும் பொருந்தும்.
தேர்தல் அரசியலில் அறுவடை செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டின் வரலாற்றில் மறுமலர்ச்சி தி.மு.கழகம் படைத்திருக்கின்ற சாதனைகள் சரித்திர ஏட்டில் பொறிக்கத்தக்கவை.
“செந்தமிழை செந்தமிழர் நாட்டைச் சிறை மீட்க
நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்தது என்று
குந்திக் குரல் எடுத்துக் கூவாய் கருங்குயிலே”

என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வீர வரிகளுக்கு இலக்கணமாக செந்தமிழர் நாட்டில் ‘வெந்தணலாக’ எழுந்ததுதான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
“கெடல் எங்கே தமிழர் நலம் அங்கெல்லாம்
தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!”

என்று ஆணையிட்ட பாவேந்தரின் கருத்துக்கு செயல் வடிவம் தந்தது மறுமலர்ச்சி தி.மு.க. அல்லவா?
பூமிப் பந்தில் வாழுகின்ற தமிழர்கள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும், நமக்காக ஒரு இயக்கம் நம் தாயகத்தில் வீறுகொண்டு இயங்குகிறது. அதுதான் மறுமலர்ச்சி தி.மு.க. என்று ஏற்றிப் போற்றும் பெருமையைப் பெற்று இருக்கிறோம்.
கடல் கடந்த நாடுகளில் வாழும் தமிழர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு முதலில் நீளுகின்ற கரங்கள் மறுமலர்ச்சி தி.மு.க.வின் கரங்கள் என்பதை உலக தமிழ்ச் சமுதாயம் அங்கீகரித்து இருக்கிறது.
தமிழர்களின் இன்னொரு தாயகமாம் தமிழீழ மண்ணில் தொப்புள் கொடி உறவுகளான தமிழ் மக்களின் விடுதலைப் போருக்கு கழகம்தான் தமிழகத்தில் களம் அமைத்து ஆதரவு தருவதில் சமரசமின்றி இன்னமும் உறுதியாக இருக்கின்றது. அடக்குமுறைச் சட்டங்கள் நம்மை சுற்றி வளைத்தபோதும், அரசியல் எதிரிகள் நமது தமிழீழத் தாகத்தையே மனதில் கொண்டு வீழ்த்த முற்பட்டபோதும், அவற்றுக்கெல்லாம் அஞ்சாமல், துணிந்து ஈழத்திற்காகக் குரல் எழுப்பி வருகின்றோம்.
மாவீரர் திலகம் பிரபாகரன் முப்பது ஆண்டு காலம் வழி நடத்திய ஈழ விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்டுவிட்டது என்று சிங்கள இனவெறியர் கூட்டம் ஆட்டம் போடுகிறது. இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவிக்கத் துணை நின்ற இந்தியா, இப்போதும் - எப்போதும் சிங்களத்தின் பக்கம்தான் நிற்கும் என்று குதிக்கின்றது.
உலக அரங்கத்தில் ‘தமிழீழத்தின் குரலை நசுக்கிவிட்டோம்’ என்று நினைத்துக் கொண்டு இருக்கின்ற சிங்கள அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். தமிழீழ விடுதலை வேட்கை வெற்றி பெறுவதற்காக அரசியல் லாப நட்டங்களைப் பாராமல் தொடர்ந்து குரல் எழுப்பும் கடமையை நாம்தான் மேற்கொண்டு வருகிறோம்.
தமிழீழத்தை மலரச் செய்ய பொது வாக்கெடுப்பு தேவை என்று முதன் முதலில் உலகிற்கு சொன்னது அடியேன், மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் மட்டுமே!
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும் என்று தொடர்ந்து நீதிமன்றங்களின் நெடியப் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டு இருப்பதும் கழகம்தான்.
தூக்குக் கயிற்றை முத்தமிட நாள் குறிக்கப்பட்ட மூன்று தமிழர் உயிரைக் காப்பதற்கு எனது உயிரணைய நண்பர், நினைவில் வாழும் புகழ்பெற்ற வழக்கறிஞர் ராம்ஜெத் மலானியை சென்னை உயர்நீதிமன்றத்திலும், பின்னர் உச்சநீதிமன்றத்திலும் வாதாடச் செய்து, மூன்று தமிழர் தூக்குக் கயிற்றை நிரந்தர மாக அறுத்து எறிந்தவர்கள் நாம் என்பதை வரலாற்றில் எவராலும் மறைத்துவிட முடியாது.
தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காப்ப தற்கு களம் பல கண்ட பெருமை கால் நூற்றாண்டு கால தமிழக வரலாற்றில் நம்மைவிட வேறு எந்த இயக்கத்திற்கும் இருக்க முடியாது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முனைப்புடன் நின்று போராடியதால்தான் முல்லைப் பெரியாறு அணை தகர்க்கப் பட்டுவிடாமல் காப்பாற்றப் பட்டது.
காவிரியில் நமது உரிமையை நிலைநாட்ட களம் காணுவதில் முன்னணியில் நின்றதும் கழகம்தான்.
சோழவள நாட்டின் நெற்களஞ்சியத்தைச் சூறையாடுவதற்கு மீத்தேனும், ஹைட்ரோ கார்பனும் எடுப்பதற்கு மத்திய அரசும், மத்திய அரசின் கைப்பாவையான அ.இ.அ.தி.மு.க. அரசும் திட்டங்களைச் செயல்படுத்த முயற்சித்தபோது, வேளாண் அறிஞர் நினைவில் வாழும் நம்மாழ்வார் அவர்கள் முதல் குரல் கொடுத்தார். அதனை வழிமொழிந்து மக்களை விழிப்படையச் செய்வதற்கு காவிரிப் படுகை தீரத்தில் முதன் முதலாக விழிப்புணர்வுப் பயணம் நடத்தியதும் கழகம்தான்.
காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரிப் படுகையில் நாசகார மீத்தேன், ஹைட்ரோ கார்பன் பாறைப் படிம எரிவாயுத் திட்டங்களைச் செயல் படுத்தக் கூடாது என்று ‘காவிரி பாதுகாப்பு இயக்கத்தை’ உருவாக்கி, அதற்கு நானே ஒருங்கிணைப்பாளராக இருந்து போராட்டங்களை முன் னெடுத்தோம். அரசியல் இயக்கங்கள், விவசாய சங்கங்கள், சமூக நல இயக்கங் கள் என்று 250க்கும் மேற்பட்ட இயக்கங்களை ஓரணியில் திரட்டி மாபெரும் மக்கள் திரள் போராட்டங் களை நடத்தினோம்.
வருமுன் காக்கும் முன்னோடி காவல் படையாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் களத்தில் வீறுகொண்டு நின்று மக்களை அணி திரட்டியதால்தான் இன்று காவிரி பாயும் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டிய நிர்பந்தம் உருவாயிற்று என்பது காலத்தின் கல்வெட்டாய் என்றும் நிலைக்கும்.
காவிரியின் குறுக்கே இராசி மணல், மேகே தாட்டுவில் கர்நாடகத்துக்காரன் அணை கட்டித் தண்ணீரைத் தடுக்க சதித் திட்டம் தீட்டி இருப்பதை 2014 டிசம்பர் முதல் வாரத்தில் முதன் முதலில் நாட்டுக்குச் சொன்னவர்கள் நாம். அதற்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே 2012 ஏப்ரல் 30 ஆம் நாள் கிருஷ்ணகிரியில் கர்நாடகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதும் கழகம்தான்.
நாகை, கடலூர் மாவட்டத்தில் 57,500 ஏக்கர் விளைநிலங்களைப் பறித்து பெட்ரோலிய இரசாயன முதலீட்டு மண்டலம் அமைக்க 2017 ஜூலை 19 இல் தமிழக அரசு குறிப்பாணை வெளியிட்டதிலிருந்து, எதிர்த்துக் குரல் கொடுத்து அரசை பணியச் செய்ததும் மறுமலர்ச்சி தி.மு.கழகம்தான்.
அமராவதி, பவானி, பெண்ணையாறு, பாலாறு உள்ளிட்ட நதிநீர் உரிமைகளுக்கு அண்டை மாநிலங்கள் பாதகம் விளைவித்த போதெல்லாம் மறுமலர்ச்சி தி.மு.க. போராட்டக் களம் சென்று கடமை ஆற்றி இருக்கின்றது.
தேனி மாவட்டத்தையும், முல்லைப் பெரியாறு அணையையும் காப்பதற்கு மத்திய அரசின் நியூட்ரினோ ஆய் வகத்திற்கு எதிராக நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் போராடி தடுத்து நிறுத்தியது மறுமலர்ச்சி தி.மு.கழகம் தான்.
தமிழ்நாட்டின் ‘மகாரத்னா’ நிறுவனமாக சுடர்விடும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இன்று பொதுத்துறை நிறுவனமாக நீடிக்கிறது என்றால், வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த போது, என்.எல்.சி. தனியார் மயம் ஆக விடாமல், தடுத்தது மறுமலர்ச்சி தி.மு.க. என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.
‘முழு மதுவிலக்கே நமது இலக்கு’ என்பதை மக்கள் மன்றத்தில் குறிப்பாக தமிழ்நாட்டு மாதர்குலத்தின் நெஞ்சில் பதிய வைத்து, மதுக்கடைகளுக்கு மூடு விழா நடத்த தன்னெழுச்சியான போராட்டங்கள் தமிழ்நாட்டில் வெடித்தது எனில் அதற்கான விதையை தூவியது மறுமலர்ச்சி தி.மு.க. அல்லவா?
உலகக் கோடீஸ்வர நிறுவனங்களில் ஒன்றாகிய வேதாந்தா குடும்பத்தை எதிர்த்து தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நாசுகார நச்சு ஆலை அமைவதைத் தடுத்து, எண்ணற்ற போராட்டங்களை நடத்தி, உயர்நீதிமன்றத்திலும் - தீர்ப் பாயத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நானே சென்று வாதாடினேன். இன்று வரையில் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு முக்கியக் காரணம் நமது போராட்டம் என்பதை நாடு அறியும்.
2018 மே 22 இல் துப்பாக்கிச் சூடு நடந்து 13 உயிர்கள் அண்ணா தி.மு.க. அரசின் காவல்துறையால் பறிக்கப்பட்டபோது அன்று இரவிலேயே தூத்துக்குடிக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைத்தையும் நேரில் சந்தித்து கண்ணீரைப் பகிர்ந்துகொண்டேன்.
இவ்வாறு தமிழ்நாட்டின் நலனுக்காக கடந்த 26 ஆண்டுகளில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தன்னை தியாகம் செய்து, எரியும் மெழுகுவர்த்தியாக ஆக்கிக் கொண்டிருக்கிறது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எனும் இந்த மணிமாளிகையை தாங்கிக் கொண்டிருக்கின்ற அடிக்கற்களாகத் திகழும் கண்ணின் மணிகளின் தியாகத் தால், தன்னலமற்ற மக்கள் தொண்டால் அரசியல் களத்தில் வீழ்த்த முடியாத சக்தியாக கழகம் உயர்ந்தோங்கி நிற்கின்றது.
திராவிட இயக்கத்தின் சமூக நீதி தழைக்கவும், தமிழ் இன, மொழி, அரசியல், பொருளாதார உரிமைகளைக் காக்கவும், திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியில் இன்னொரு கூறாக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா காட்டிய இலட்சியப் பாதையில் கழகம் தடம் மாறாமல் பயணிக்கிறது.
எனவேதான் நாட்டின் பன்முகத் தன்மையைச் சீர் குலைத்து வரும் இந்துத்துவ மதவாதக் கூட்டத்தின் கொட்டத்தை அடக்க, திராவிட இயக்க ஒற்றுமையைப் பேண வேண்டும் என்ற மகத்தான அரசியல் முடிவுடன், தொலைநோக்குப் பார்வையுடன் நாம் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கரம் கோர்த்தோம். அதில் உறுதியாகவும் இருக்கிறோம்.
மனிதகுலம் சந்தித்த பல பேரழிவுகளில் மிகவும் கொடிய கொரோனா தொற்று நோயால், உலகமே அச்சத்தில் உறைந்து கிடக்கின்றது. இரண்டு இலட்சம் மக்கள் மடிந்துவிட்டார்கள்.
மார்ச் 24 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, மே 3 வரையில் மட்டுமல்ல, அதற்கும் மேலாக இன்னும் சில நாட்கள் நீடிக்கும் நிலைமைதான் இருக்கின்றது.
கொரோனாவிலிருந்து தப்பிக்க தனித்து இருப்பதுதான் ஒரே வழி. சமூகப் பரவல் ஏற்படாமல் தடுக்கவும், அதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை.
கொரோனா ஊரடங்கால் இலட்சக் கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை பறிகொடுத்து நிர்க்கதியாக ஆகி இருக்கின்றார்கள். ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வோம்! மறுமலர்ச்சி தி.மு.க என்றால், செஞ்சிலுவைச் சங்கம் போன்று மக்கள் தொண்டாற்றுவோம் என்று முந்தைய மடலில் குறிப்பிட்டு இருந்தேன்.
சென்னை தொடங்கி, கன்னியாகுமரி வரையில் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் கொரோனா நேரத்தில் மக்களின் பசி போக்கவும், நிவாரணப் பொருட்களை வழங்கவும், ஊருக்கு ஊர் முனைப்புடன் நின்று தொண்டாற்றி வருவதை எண்ணி எண்ணி பெருமிதம் அடைகிறேன்.
கைப் பொருளை கழகத்தின் வளர்ச்சிக்கு செலவழித்து வரும் கழகக் கண்மணிகள் மக்களின் துயர் துடைப்பதிலும் தங்கள் வருவாயில் ஒரு பகுதியைச் செல வழிக்கிறார்களே! இப்படிப்பட்டத் தூய தொண்டர்களின் குடும்பங்கள்தானே கழகம் 26 ஆண்டுகள் இலட்சியப் பயணத்தில் பீடு நடை போடுவதற்குக் காரணமாக இருக்கின்றன. அத்தகைய தொண்டர்கள் மனம் மகிழ்ந்து கொண்டாடும் வகையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபுரி நோக்கி பயணிக்க வேண்டும் என்பதுதான் என் நெஞ்சில் அலைகளாக மோதிக் கொண்டு இருக்கின்றன.
பேரறிஞர் அண்ணா அவர்கள் 1961 இல் நடந்த தி.மு.கழகத்தின் 3ஆவது மாநாட்டு உரையில் குறிப்பிட்டதைத் தான் என் உள்ளத்தில் பதியம் போட்டு வைத்திருக்கின்றேன்.
“எனது குடும்பப் பெருமையையோ, பண வலிமையையோ நம்பி என்னை நீங்கள் தலைவராக்கவில்லை. உங்களுடைய ஆற்றலினால்தான் நான் இந்த வலிமையைப் பெற்று இருக்கின்றேன். இலட்சக்கணக்கான தம்பிமார்களும் தங்கள் இதயத்தை என்னிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். நீங்கள் காட்டும் நம்பிக்கைக்கும், மரியாதைக்கும் ஈடாக உடல் வளம் எனக்கு இருக்குமா? என்பதில் உறுதி இல்லை. ஆனால், உற்சாகம் பற்றிய ஐயம் குறுக்கிட வில்லை.”
பேரறிஞர் அண்ணாவின் மணி வாசகத்தையே திருவாசகமாக நானும் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
சோதனைப் புயல்களை எல்லாம் கடந்து கழகம் கரைசேர்ந்துவிட்டது. இனி “விடியலின் வெற்றியைக் காண்போம்” என்ற உறுதி எனக்கு இருக்கின்றது.
மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 27 ஆம் ஆண்டு தொடக்க விழாவைக் கொடி உயர்த்திக் கொண்டாடுவோம்!
கொரோனா கொள்ளை நோய் பீடித்துள்ள இந்த நேரத்தில், ஏழை எளிய மக்களுக்கு முடிந்த அளவு உதவிக்கரம் நீட்டுவோம்!
திராவிட இயக்க அரசியல் வானில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் துருவ நட்சத்திரமாக ஒளிர்ந்துகொண்டேதான் இருக்கும்.
கண்மணிகளே,
எழுச்சி சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்!

பாசமுடன்,
வைகோ
சங்கொலி, 08.05.2020

தாயகத்தில் மே தின விழா!

இன்று 01-05-2020 தாயகத்தில், இந்திய மே தின வரலாற்றில் வி.பி.சிங் அவர்களின் ஆட்சி காலத்தில், ஊதியத்துடன் கூடிய விடுமுறை பெற்று தந்த தலைவர் வைகோ எம்பி அவர்கள் தலைமையில் இயங்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி சார்பில் அதன் மாநில தலைவர் ஆவடி அந்திரிதாஸ் அவர்கள், மாநில துணை தலைவர் சு.ஜீவன், மாநில செயலாளரும், எம்.எல்.எப் செயலாளருமான க.ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி கொடியேற்றினார். 

இந்நிகழ்வில் தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கே.கழககுமார், தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சைதை.ப.சுப்பிரமணி, தென் சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் துரை.குணசேகர், வட சென்னை கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சுரேஷ் அப்பன்துரை, எழும்பூர் பகுதி செயலாளர் தென்றல் நிசார், வேளச்சேரி பகுதி செயலாளர் சு.செல்வப்பாண்டியன், அண்ணாநகர் பகுதி செயலாளர் இராம.அழகேசன், வெளியீட்டு அணி துணைச் செயலாளர் விக்டர் எபிநேசர், மாணவர் அணி துணை செயலாளர் முகவை இரா.சங்கர், தென்சென்னை மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.எஸ்.ஹரி, சித்திரை பாண்டியன், வட சென்னை கிழக்கு மாவட்ட தொண்டர் அணி ஜானகிராமன், ரிலுவான் கான் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

Thursday, April 30, 2020

சோதனைகளைக் கடந்து வெற்றியை ஈட்டட்டும் தொழிலாளர் வர்க்கம்! வைகோ மே நாள் வாழ்த்து!


முதலாளித்துவ தொழில்கள் வேகமாக வளர்ச்சி அடைந்த 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தொழிலாளர்கள் 14 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை பணிபுரிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். இத்தகைய உழைப்புச் சுரண்டலை எதிர்த்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் தொழிலாளர் அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தின. 1836 இல் இங்கிலாந்தில் தோன்றிய ‘சாசன இயக்கம்’ உலகின் பெருந்திரள் தொழிலாளர்கள் கொண்ட முதன்மையான அரசியல் இயக்கமாக வளர்ந்தது. சாசன இயக்கத்தின் முக்கியக் கோரிக்கையாக 10 மணி நேர வேலை முன்வைக்கப்பட்டது. 1842 ஆம் ஆண்டில் சாசன இயக்கம் சார்பில் அறைகூவல் விடுத்த பொது வேலை நிறுத்தம், அடக்குமுறை மூலம் தோல்வி கண்டது பிரிட்டனில்.


ஆனால், நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த தொழிலாளர் போராட்டம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவியது. 1850களில் காரல் மார்க்ஸ் சாசன இயக்கத்திற்கு வழிகாட்டியாக அமைந்தார்.

ஆஸ்திரேலியா தொழிலாளர் போராட்டத்தின் விளைவாக மெல்போர்ன் விக்டோரியாவில் கட்டிடத் தொழிலாளர்கள் 8 மணி நேரம் கோரிக்கையை முன்வைத்து உலகிலேயே முதன் முதலில் வெற்றி கண்டனர்.

சர்வதேச தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் வகையில் மார்க்ஸ்-ஏங்கல்ஸ் இணைந்து ‘முதல் அகிலம்’ எனப்படும் சர்வதேச தொழிலாளர் அமைப்பை 1864 இல் ஏற்படுத்தினர். உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளின் தொழிலாளர் பிரதிநிதிகள் கூடிய முதலாம் அகிலத்தின் மாநாடு 1850 களில் ஜெனிவாவில் நடந்தபோது, உரையாற்றிய காரல்மார்க்ஸ், 8 மணி நேரம் வேலை மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளுக்குக் குரல் எழுப்பினார்.

இதனால் ஊக்கம் பெற்ற அமெரிக்க தொழிலாளர் இயக்கங்கள் 1866 இல் ஒன்றிணைந்து, ‘அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பை’ உருவாக்கி, 8 மணி நேரம் வேலைக் கோரிக்கையை முன் வைத்தன.

1886 மே 1 இல் அமெரிக்காவில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு தொழிலாளர் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்தது. இந்த நிகழ்வுதான் மே தினம், ‘தொழிலாளர் தின’மாக ஆவதற்கு அடித்தளம் அமைத்தது.

1886 மே முதல் நாளில் அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கம் விடுத்த வேலை நிறுத்த அறைகூவலில் 4 இலட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றனர். தொழிலாளர் வர்க்கத்தின் ஆர்ப்பாட்டம், பேரணிகளால் அமெரிக்கா குலுங்கியது. 1886 மே 3 இல் தொழிலாளர்களின் பேரணியில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் பலியானார்கள்.

மறுநாள் மே 4 இல் சிகாகோ நகரில் ‘ஹே மார்க்கெட்’ திடலில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கூடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது காவல்துறை கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தித் தாக்கியது. தொழிலாளர்கள் ரத்தம் ‘ஹே மார்க்கெட்’ திடலை நனைத்தது.

தொழிலாளர் போராட்டத்தைத் தூண்டியதாக கைது செய்யப்பட்ட தொழிலாளர் தலைவர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங்கல், அடால்ப் பிஸ்சர் ஆகிய நால்வரும் 1887 நவம்பர் 11 இல் தூக்கிலிடப்பட்டனர்.

நவம்பர் 13, 1887 இல் நடந்த தொழிலாளர் வர்க்கத்தின் தலைவர்களின் இறுதி ஊர்வலத்தில் 5 இலட்சம் தொழிலாளர்கள் திரண்டனர்.

1889 ஜூலை 14 இல் பாரீஸ் நகரில் கூடிய சர்வதேச தொழிலாளர்களின் பிரதிநிதிகள் மாநாட்டில் 8 மணி நேர வேலை போரட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், 1890 மே முதல் நாளை ‘சர்வதேச தொழிலாளர் நாளாக’க் கொண்டாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

எட்டு மணி நேரம் வேலை என்ற கோரிக்கையை வென்றெடுப்பதற்காக இரத்தம் சிந்திய தொழிலாளர்களுக்கு, உயிரிழந்த தியாகிகளுக்கு மே நாளில் வீரவணக்கம் செலுத்துவோம்.

இந்தியாவில் தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக பறித்து வரும் பா.ஜ.க. அரசின் கொடுமையை எதிர்த்துப் போராடுவோம்!

கொரோனா கொடிய பேரிடரால் இந்தியாவில் 40 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என்று பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு தெரிவித்து இருக்கின்றது. வேலை வாய்ப்பை இழந்து வாடும் இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் துயரத்தைப் போக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

சோதனைகளைக் கடந்து, வெற்றிகளை ஈட்ட தொழிலாளர் வர்க்கத்திற்கு மே நாள் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 30-04-2020 தெரிவித்துள்ளார்,

கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதா? வைகோ கண்டனம்!

அரியானா மத்தியப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் ஆர்.சி.குஹாத் தலைமையில், பல்கலைக் கழக மானியக் குழு (யூ.ஜி.சி), கொரோனா பேரிடரால் தள்ளி வைக்கப்பட்டுள்ள தேர்வுகளைத் தொடங்குவது குறித்தும், அடுத்த கல்வி ஆண்டிற்கான பாடங்களைத் தொடங்குவது குறித்தும் ஆராய்ந்து தனது பரிந்துரைகளை அளித்துள்ளது.
இக்குழு அளித்திருக்கும் பரிந்துரைகளில், மருத்துவப் படிப்புக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) போன்று, கலை அறிவியல் படிப்புகளுக்கும் தேசிய மற்றும் மாநில அளவில் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்பதும் இடம்பெற்று இருக்கிறது.
இதே கருத்தை, கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் முன்வைத்தபோது, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தது. நானும் கண்டித்து அறிக்கை தந்தேன்.
கலை, அறிவியல் பட்டப் படிப்புகளில் சேரும் கிராமப்புற ஏழை, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை முடக்கிப் போடும் வகையில், நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்வது அநீதியாகும். இது கண்டனத்துக்கு உரியது.
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் பயிலும் வாய்ப்பற்ற பின்தங்கிய, பட்டியல் இனச் சமூக மாணவர்கள் மற்றும் அனைத்துச் சமூகங்களையும் சார்ந்த மாணவர்கள் கலை, அறிவியல் படிப்புகளைத்தான் நம்பி உள்ளனர். அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் நுழைவுத் தேர்வைப் புகுத்துவது சமூக நீதிக்கும் எதிரானது ஆகும்.
எனவே மத்திய பா.ஜ.க. அரசு, கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தச் செய்யப்பட்டு இருக்கும் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 30-04-2020 தெரிவித்துள்ளார்.

Wednesday, April 29, 2020

காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைக்கு ‘சமாதி’ எழுப்பும் பா.ஜ.க. அரசு! வைகோ கண்டனம்!

காவிரி ஆற்று நீர் பங்கீட்டு சிக்கல் குறித்து 17 ஆண்டுகளுக்கு மேலாக விசாரித்து வந்த காவிரி நடுவர் மன்றம், பிப்ரவரி 5, 2007 இல் வழங்கிய இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த மிகத் தெளிவான வழிகாட்டு விதிகளை வகுத்திருந்தது.
பக்ரா - பியாஸ் மேலாண்மை ஆணையத்தை முன்மாதிரியாகக் கொண்டு, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பில் உத்தரவிட்டது. 6 ஆண்டுகள் காலதாமதமாக 2013 பிப்ரவரி 19 இல் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டாலும் அதனைச் செயல்படுத்த முன்வரவில்லை.
காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யூ.யூ.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, பிப்ரவரி 16, 2018 இல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் பின்னர் 2018 மே மாதம் காவிரி மேலாண்மை ஆணையம் ஒன்றை மத்திய அரசு அமைத்தது.
மத்திய பா.ஜ.க. அரசு அமைத்துள்ள காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடகத்தின கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அணைகளிலிருந்து நீர் திறப்பு, நீர் இருப்பு மேலாண்மை ஆகியவற்றை மேற்கொள்ள உரிய அதிகாரம் அளிக்கப்படவில்லை. காவிரி நீரை பிரச்சினைக்குரிய மாநிலங்களுக்குகிடையே பகிர்ந்து அளிக்கும் அதிகாரமும் இல்லை என்பதை மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டபோதே நான் சுட்டிக்காட்டி இருந்தேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டிய கூட்டத்தில் தமிழக அரசு முன்வைத்த கோரிக்கைகளைச் செயல்படுத்த, மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட போதெல்லாம் கர்நாடக மாநிலம் மறுத்து வந்தது. நீர் திறப்பு பற்றிய மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம் கேள்விக்குள்ளானதைக் கண்கூடாகப் பார்த்தோம்.
காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உப்புச் சப்பற்ற காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக் குழு ஆகியவைகளை அமைத்த மத்திய அரசு, தற்போது காவிரியில் தமிழகத்தின் உரிமையை ஆழக் குழிதோண்டிப் புதைத்து சமாதி எழுப்பும் வேலையில் இறங்கி இருக்கிறது.
காவிரி ஆணையத்தின் 5ஆவது கூட்டம், மத்திய நீர்வள ஆணையத் தலைவர் ராஜேந்திரகுமார் தலைமையில், கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி டெல்லியில் நடந்தது. இதுவே காவிரி ஆணையத்தின் இறுதிக் கூட்டமாகக்கூட இருக்கலாம்.
ஏனெனில், மத்திய நீர்வளத்துறை அமைச்சகமான ஜல்சக்தித் துறை, காவிரி மேலாண்மை ஆணையத்தைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது. இதன் மூலம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அற்ப சொற்ப அதிகாரத்தையும் மத்திய பா.ஜ.க. அரசு பறித்துவிட்டது.
நதிநீர் பங்கீட்டுச் சிக்கல்களுக்குத் தீர்வு காண அமைக்கப்பட்ட அனைத்துத் தீர்ப்பாயங்களையும் இணைத்து ஒரே தீர்ப்பாயம் அமைப்பதற்கு முயற்சிக்கும் மத்திய அரசின் முதல் நடவடிக்கையாக காவிரி மேலாண்மை ஆணையம் ஒழித்துக்கட்டப்பட்டு இருக்கின்றது.
அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தவா சட்டம் 1956 மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் அனைத்தையும் அலட்சியம் செய்து வரும் மத்திய பா.ஜ.க. அரசின் ஏதேச்சாதிகாரப் போக்கு வன்மையான கண்டனத்துக்கு உரியது.
காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல்சக்தித் துறையில் இணைக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.
கொரோனா பேரிடர் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் துயரங்களை ஏற்படுத்தி வரும் இந்தச் சூழலில், தமிழ்நாட்டின் காவிரி உரிமையைப் பறிக்கும் பா.ஜ.க. அரசின் வஞ்சகத்திற்கு எதிராக பெரும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று சுட்டிக்காட்டுகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 29-04-2020 தெரிவித்துள்ளார்.

முடிதிருத்துநர்கள், சலவைத்தொழிலாளர்கள், அயல்நாடுகளில் சிக்கி இருப்போருக்கு உதவிகள் தேவை வைகோ அறிக்கை!

கடந்த ஒரு மாத கால முடக்கத்தால், ஏழை எளிய அடித்தட்டு மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாடி வதங்குகின்றனர்.
அதிலும் குறிப்பாக முடி திருத்துநர்கள், சலவைத் தொழிலாளர்கள், தலைச்சுமை வணிகர்கள், வேறு எந்தவிதமான வருமானத்திற்கும் வழி இல்லாமல் துயர நிலையில் இருக்கின்றனர். திருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் சுருங்கி விட்டதால், படக்கலைஞர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இவர்களுக்கு அரசு உதவிகள் கிடைக்கவில்லை. பகுதிநேர செய்தியாளர்கள் அமைப்புகளில் இல்லை என்பதால், செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள் அவர்களுக்கு இல்லை.
மும்பை வீதிகளில் தலைச்சுமை வணிகம் செய்துவந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் கொ-ரோனா தாக்கி இறந்து விட்டார்கள். அவர்களுடன் தங்கியிருந்த பலர், உரிய மருத்துவம், உணவு, தங்கும் இடம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மலேசியாவிலும், வளைகுடா நாடுகளிலும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிக்கித் தவிக்கின்றார்கள். ஒவ்வொரு வேளை உணவும் அவர்களுக்குப் போராட்டம்தான். அங்குள்ள தமிழர்களின் உதவியோடு நாட்களைக் கடத்துகின்றார்கள். நாடு திரும்ப வழி இல்லை. நாளை வான்ஊர்திகள் பறந்தாலும் பயணச்சீட்டு வாங்குவதற்கு அவர்களிடம் காசு இல்லை.
இது போல பல்வேறு நாடுகளில் துன்பத்தில் தவித்த கேரள மாநிலத்தவர் திரும்பி வருவதற்கு கேரள அரசு எப்படி ஏற்பாடு செய்திருக்கிறதோ, அதைப் பின்பற்றியாவது தமிழர்கள் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வருவதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 29-04-2020 தெரிவித்துள்ளார்.