பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. ஓபெக் நாடுகளில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. கடந்த மே 1ஆம் தேதி நிலவரப்படி கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 26 டாலராக சரிந்து விட்டது. கச்சா எண்ணெயின் விலை குறைந்து வரும் நிலையில், நுகர்வோரான மக்களுக்கு அதன் பயன் கிடைக்காத வகையில் மத்திய அரசு கடந்த மார்ச் 14-ஆம் தேதி பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியது.
இதன் மூலம் மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ 22 .98 ம், டீசலுக்கு ரூ 18.83ம் கலால் வரியாக வசூலிக்கிறது. 2014இல் மோடி அரசு பதவியேற்றபோது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரி ரூபாய் 9.48 ஆகவும், ஒரு லிட்டர் டீசலுக்கு கலால் வரி ரூபாய் 3.56 ஆகவும் இருந்தது.
2014 இல் இருந்து பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போதெல்லாம் அதன் பயன் மக்களுக்கு போய் சேராமல் பாஜக அரசு கலால் வரியை தொடர்ந்து அதிகரிப்பதை வாடிக்கையாக்கி வருகிறது. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினரான நிலேஷ் ஷாவே, கச்சா எண்ணெய் விலை சரிவு பலனை நுகர்வோருக்கு வழங்காததால், மத்திய அரசு ரூபாய் 3.4 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளது என்று கூறியிருக்கிறார். இதுவரை பெட்ரோல் டீசல் கலால் வரியாக மட்டும் ரூபாய் 20 லட்சம் கோடி பா.ஜ.க. அரசால் வசூலிக்கப்பட்டு இருக்கிறது.
கொரோனா பேரிடர் மக்களின் இயல்பு வாழ்க்கையைச் சீரழித்து சிதைத்து உள்ள நேரத்தில் மத்திய அரசு போலவே தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு பெட்ரோல் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தி இருப்பது கண்டனத்துக்குரியது.
பெட்ரோலுக்கு மதிப்புக்கூட்டு வரி 28 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடு ஆகவும், டீசலுக்கு 20 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடு ஆகவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பெட்ரோல் விலை 3 ரூபாய் 25 பைசாவும், டீசல் விலை 2 ரூபாய் 50 பைசாவும் உயர்ந்துள்ளது. கொரோனா பேரிடர் மக்களை வாட்டி வதைக்கும் போது தமிழக அரசு பெட்ரோல் டீசல் மீதான வரியை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றுவது அக்கிரமம் ஆகும். தமிழக அரசு பெட்ரோல் டீசலுக்கு அறிவித்துள்ள மதிப்புக்கூட்டு வரி உயர்வை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 04-05-2020 தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment