கொரோனா ஊரடங்கு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த முடியாமல் போன நிலையில், கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி, வெளியிட்ட அறிக்கையில், “பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு தள்ளிப் போனதால், தேர்வு எழுதத் துடித்துக்கொண்டிருந்த இலட்சக்கணக்கான மாணவச் செல்வங்கள் துவண்டு விட்டனர். துள்ளி விளையாட வேண்டிய இளம் பிஞ்சுகள் ஊரடங்கு நேரத்தில் மன உளைச்சலுக்கு உள்ளாகி முடங்கிக் கிடக்கின்றனர். மாணவர்களின் பெற்றோரும் தவியாய்த் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வித் திறனை அடுத்தடுத்த 11 ஆம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. எனவே தமிழக அரசு இந்தக் கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்து, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தேன்.
எனது அறிக்கையைச் சுட்டிக்காட்டி, 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா? என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “முதல்வரிடம் கலந்து முடிவு எடுப்போம்” என்று பதில் அளித்தார். இதனிடையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்தார்.
தற்போது, ஜூன் 1ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
கொரோனா கொள்ளை நோயைக் கட்டுப்படுத்த மே 17 ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு நீடிக்கப்படும் என்று பிரதமர் நேற்று தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில், இயல்பு நிலை திரும்ப இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ என்று தெரியாத சூழலில், 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்த வேண்டிய தேவை என்ன?
இந்தக் கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்துசெய்துவிட்டு, அனைத்து மாணவச் செல்வங்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 13-05-2020 தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment