இலங்கை தோட்டத் தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகம் தொண்டைமான் அவர்கள், மாரடைப்பால் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன்.
இலங்கையின் மலையகத்தில் கொத்தடிமைகளாக அடக்கி ஆளப்பட்ட தோட்டத் தொழிலாளர்களான தமிழர்களின் குரலாக ஒலித்தவர் பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டைமான். அவர்களுடைய மேம்பாட்டிற்காகவே தனி இயக்கம் கண்டார். அப்போது,கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்சங்கத்தை உருவாக்கினார். இயற்கைப் பேரிடர்களின் போதும், நோய் நொடித் தாக்குதல்களில் இருந்தும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காகப் பாடுபட்டார். தோட்டப்புறங்களில் புதிய சாலைகள் அமைத்து, தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக தம் வாழ்நாள் முழுமையும் தொண்டு ஆற்றினார்.
தோட்டப்புறங்களில் வாழ்கின்ற தமிழர்களுக்கு இடையே சாதி, மதப் பாகுபாடுகள் வளராமல் ஒருங்கிணைத்தவர். ஈழத்தமிழர்களுக்குக் கூடுதல் உரிமைகள் வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டு இருந்தார். தந்தை செல்வா அவர்களுடன் கூட்டணி அமைத்தார்.
அவருடன் நீண்டகாலத் தொடர்புகள் உண்டு. பல நிகழ்ச்சிகளில் அவருடன் பங்கேற்று உரையாடி இருக்கின்றேன். அவருடைய மூதாதையர்கள், சிவகங்கை மாவட்டம் திருப்பதூர் அருகே பட்டமங்கலம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அரசியலில் அவருக்கு உறுதுணையாக இயங்கியவர் அவரது பேரன் ஆறுமுகம் தொண்டைமான்.
அவரது மறைவுக்குப் பின்னர், தோட்டத் தொழிலாளர் காங்கிரசின் தலைவராகப் பொறுப்பை ஏற்றுத் திறம்பட இயங்கினார். இலங்கை அரசில் அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கின்றார். எனினும், ஈழத்தமிழர்களின் நல்வாழ்விற்கு ஆதரவான கருத்துகளையே கொண்டு இருந்தார்.
சென்னைக்கு வரும்போதெல்லாம், தாயகத்திற்கும், என் வீட்டுக்கும் பலமுறை வந்து சந்தித்து இருக்கின்றார். 55 வயதில், இயற்கை அவரைப் பறித்துக் கொண்டது அதிர்ச்சி அளிக்கின்றது.
அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக் கொள்கின்றேன். உற்றார், உறவினர்கள், தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 27-05-2020 தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment