கொரோனா பேரிடர் மக்களை வாட்டி வதைத்து வரும் சூழலில், நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 20 இலட்சம் கோடிக்கு சுயசார்பு பொருளாதாரத் திட்டம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்கள் நேற்று, முதல் கட்டமாக சில பொருளாதாரத் திட்டங்களை அறிவித்துள்ளார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நெருக்கடியிலிருந்து மீள உதவும் வகையில் ரூ. 3 இலட்சம் கோடிக்கு உத்தரவாதமில்லாத கடன் வழங்கப்படும். இந்நிறுவனங்களின் கடன் சுமையை குறைக்கும் வகையில் துணைக் கடன் வழங்க ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழிலை விரிவுபடுத்த ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.
ஆனால் பாதிப்புக்கு உள்ளான தொழில் முனைவோர், வேலை இழந்த தொழிலாளர்களுக்கு பயன் கிடைப்பதற்கு நீண்ட காலமாகும் என்பதுதான் எதார்த்தமான நிலையாகும்.
கடந்த மார்ச் மாதம் 1.7 இலட்சம் கோடி பொருளாதார சலுகைத் திட்டங்களை அரசு அறிவித்தது. அதன்படி, பயன் பெற்றோர் குறித்த புள்ளிவிவரங்களை நிதி அமைச்சர் வெளியிடுவாரா? ஏனெனில் ஒன்றரை மாதங்களாக வங்கிப் பரிவர்த்தனைகள் முடங்கிக் கிடக்கின்றபோது தொழில், வணிக நிறுவனங்களுக்கு எந்த வங்கிகளும் கடன் அளிக்க முன்வரவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.
நிதி அமைச்சர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக பணப்பயன் கிடைக்க எந்த அறிவிப்பும் செய்யாதது ஏமாற்றம் தருகிறது.
ஏனெனில் ஐ.நா.வின் நிறுவனமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ஐடுடீ) மேற்கொண்ட ஆய்வின்படி, இந்தியாவில் 45 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரங்களை இழந்து விட்டது தெரியவந்துள்ளது. இதில் கோடிக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் உள்ளனர். வேலைவாய்ப்பை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு நேரடியாக நிதி உதவி வழங்கும் திட்டம் இருந்தால்தான் உடனடி பயன் கிடைக்கும்.
இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy) என்ற நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில், ஊரடங்கு காரணமாக தொழில் துறைகளில் 20 வயது முதல் 39 வயது வரைக்கும் உள்ள 6 கோடி தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மத்திய அரசின் செயல்திட்டத்தில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதமான அறிவிப்புகள் எதுவும் இல்லை.
இந்தியா ரேட்டிங்ஸ் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கம் குறித்த ஆய்வு முடிவில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட முக்கியமான 21 மாநிலங்கள் ரூ.97,100 கோடி வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளன என்று தெரிய வந்துள்ளது.
கொரோனா கொள்ளை நோய் பாதிப்பில் இருக்கும் மக்களுக்கு நேரடியாக உதவிக்கரம் நீட்ட வேண்டிய கடமையும், பொறுப்பும் உள்ள மாநில அரசுகள் நிதி நெருக்கடியில் கை பிசைந்து நிற்கின்றன. ஆனால் மத்திய அரசு, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் நிதிச் சுமையைக் குறைக்க சிறு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை என்பதை மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்புகள் காட்டுகின்றன.
வேளாண் தொழில் மேம்பாட்டிற்கு உரிய பொருளாதாரத் திட்டங்களை அடுத்தடுத்த அறிவிப்புகளில் நிதி அமைச்சர் வெளியிட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். விவசாயிகளின் அனைத்து வேளாண் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை (MSP) கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மாணவர்களின் கல்விக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 14-05-2020 தெர்வித்துள்ளார்.
No comments:
Post a Comment