மராட்டிய மாநிலம் பீமாகோரேகான் வன்முறை தொடர்பாக பொய் வழக்கு புனையப்பட்டு, மும்பை பைகுல்லா சிறையில் ஓராண்டுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், பேராசிரியை சோமா சென் ஆகிய இரு பெண் சமூகச் செயற்பாட்டாளர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிபதி சையத் தலைமையிலான குழு மத்திய அரசுக்கும், மராட்டிய மாநில அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பான கோரிக்கை மனுவில் உச்சநீதிதிமன்ற முன்னாள் நீதிபதி பி.பி.சாவந்த், வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர், பேராசிரியர் அமித் பாதுரி, பொருளாதார நிபுணரும் பேராசிரியையுமான ஜெயதி கோஷ், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் இந்திh ஜெயசிங், காலின் கன்சால்வேஸ், சமூகச் செயற்பாட்டாளர்கள் அருணாராய், தீஸ்தா செதல்வாட், பியூசில் பொதுச்செயலாளர் சுரேஷ், மனித உரிமைப் போராளி டாக்டர் பினாயக் சென் மற்றும் சபனா ஆஷ்மி உள்ளிட்ட 656 முக்கிய ஆளுமைகள் கையொப்பமிட்டுள்ளனர்.
2018 ஜனவரி 1 இல் பீமாகோரேகானில் எல்கார் பரிசத் நடத்திய மராட்டிய பேஷ்வாக்குகளுக்கு எதிராக ஆங்கிலேய மகர் படைப்பிரிவு நடத்திய போரின் 200 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டங்களில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்குக் காரணமானவர்கள் என்று வழக்குப் பதிவு செய்து வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், பேராசிரியை சோமாசென், கவிஞர் வரவரராவ், வெர்ணன் கன்சால்வேஸ், வழக்கறிஞர் அருண் பெரைரா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டனர்.
மவோயிஸ்டுகளுடன் சேர்ந்து பிரதமருக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியதாக சமூகச் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் மீது அப்போது மராட்டியத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. அரசு குற்றம் சாட்டியது.
இந்தப் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் சமூகச் செயற்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், பேராசிரியை சோமாசென் ஆகியோர் மும்பை பைகுல்லா சிறையில் கடும் சித்ரவாதைகளைச் சந்தித்து வருகின்றனர். பல்வேறு உடல் நோய்களுடன் போராடி வரும் இவர்கள் அடைக்கப்பட்டுள்ள பைகுல்லா சிறையில் கொரோனா நோய்த் தொற்று, பரவி இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். எனவேதான் இடைக்கால பிணை அளித்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பீமா கோரேகான் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள பேராசிரியரும் சமூகச் செயற்பாட்டாளருமான ஆனந்த் தெல்தும்டே, வழக்கறிஞர் கௌதம் நவ்லகா இருவரும் தேசியப் புலனாய்வு முகமை விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மாவோயிஸ்டுகளுடன் தொடர்புபடுத்தி, மாற்றுத் திறனாளியான பேராசிரியர் சாய்பாபா ஆறு ஆண்டுகளாக ஈவு இரக்கமின்றி சிறையில் அடைக்கப்பட்டு துன்பங்களை அனுபவித்து வருகிறார்.
இந்துத்துவ கருத்தியலை எதிர்த்து வரும் சிந்தனையாளர்கள், வழக்கறிஞர்கள், ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்களுக்காகப் போராடி வரும் மனித உரிமைப் போராளிகள், சமூகச் செயற்பாட்டாளர்களை தேசிய புலனாய்வு முகமை (NIA) பொய் வழக்குப் புனைந்து நகர்ப்புற நக்சல்கள் என்று முத்திரை குத்தி, மிரட்டி அச்சுறுத்தி பணிய வைக்கும் அக்கிரமத்தில் இறங்கி உள்ளது. பா.ஜ.க. அரசின் இத்தகையப் பாசிசத்திற்கு எதிராக இந்தியாவில் அறிவுத்துறையினர் கொந்தளித்து வருகின்றனர்.
பெண்கள் என்றும் பாராமல் சுதா பரத்வாஜ், சோமாசென் போன்றோரை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதை ஏற்கவே முடியாது. கொரோனா பேரிடர் நாட்டையே உலுக்கி வரும் நிலையில், மாற்றுக் கருத்துடையவர்கள் மீது அடக்கு முறையை ஏவிவிட்டு சித்ரவதை செய்வதை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும். வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், பேராசிரியை சோமா சென் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 27-05-2020 தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment