மே 7 முதல், மதுக்கடைகளைத் திறக்க,தமிழ்நாடு அரசு முடிவு செய்து இருப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல், ஏழை எளிய மக்களின் அடிவயிற்றில் அடிப்பதாகும். எனவே, அந்த முடிவைக் கைவிட வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொள்கின்றேன்.
அயல்நாடுகளில் சிக்கி இருக்கின்ற இந்தியர்களை, மே 7 ஆம் நாள் முதல் திரும்ப அழைத்து வர, ஏற்பாடுகள் செய்து இருப்பதாக, இந்திய அரசு அறிவித்து இருப்பதை வரவேற்கின்றேன். அதேவேளையில், அவர்கள், கடந்த 40 நாள்களாக வருமான இழப்பிற்கு உள்ளாகி இருக்கின்றனர். தொழிலாளர்கள், சிறுவணிகர்களின் கையிருப்பு எல்லாம் கரைந்து விட்டது. எனவே, வான் ஊர்திக் கட்டணத்தைச் செலுத்த இயலா நிலையில் உள்ளனர். அவர்களுக்கு, பயணக் கட்டணத்தில், ஐம்பது விழுக்காடு குறைக்க வேண்டும்.
அத்துடன், விசா முடிந்து புதுப்பிக்க முடியாமல் வளைகுடா, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் சிக்கி இருப்பவர்களுக்கு, அந்த நாடுகள் தண்டம் எதுவும் பறிக்க இயலாத வகையில், மத்திய அரசு அந்த நாடுகளுடன் பேசித் தீர்வு காண வேண்டும். அவர்களுக்குப் பாதுகாப்பு ஏற்படுத்தித் தர வேண்டும்.
தமிழ்நாடு முழுமையும் அரசு மருத்துவமனைகளில், கொரோனாவைக் காரணம் காட்டி, குடல் வால் உள்ளிட்ட சிறுசிறு அறுவைகளைக் கூடச் செய்யாமல், கால தாதமதம் செய்து வருகின்றனர். இதனால், அந்த நோயாளிகள் வேதனைக்கு உள்ளாகி இருக்கின்றனர். எனவே, தமிழக அரசு, அனைத்து நோயாளிகளுக்கும் தகுந்த மருத்துவ உதவிகள், தாமதம் இன்றிக் கிடைத்திட ஆவன செய்ய வேண்டும்.
மார்ச் 17 அன்று, மாரடைப்பால் துபாயில் இயற்கை எய்திய துரைராஜ் உடல், பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, நேற்று இரவு வந்து சேர்ந்தது. அதற்காக, அயல்உறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டேன்.
மராட்டிய மாநிலத்தில் யவத்மால் மாவட்டத்தில் சிக்கி இருந்த, அருப்புக்கோட்டை, பாவூர்சத்திரம், தென்காசி தொழிலாளர்கள் 15 பேர் அங்கிருந்து 60 கிலோமீட்டர் நடந்து, உமர்கேட் என்ற இடத்தில் இருக்கின்றனர். அவர்களுக்குத் தேவையான உணவு, இருப்பிட வசதிகள் குறித்து, அந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜ்குமார் அவர்களுடன் அலைபேசியில் பேசினேன். அவர்களை ஊருக்குத் திருப்பி அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்து தருமாறு கேட்டுக் கொண்டேன். ஆவன செய்வதாகக் கூறி உள்ளார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 5-5-2020 தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment