Monday, May 11, 2020

உலக செவிலியர்கள் நாள் வைகோ வாழ்த்து!

ஊதியத்திற்கு அப்பாற்பட்டு தாய்க்கு நிகரான பரிவையும், சகிப்புத் தன்மையும் கொண்டு மனிதநேயத்துடன் மகத்தான சேவை ஆற்றுபவர்கள் செவிலியர்கள். இராணுவம், காவல்துறை போன்று செவிலியர்களும் சீருடைப் பணியாளர்கள்தான்.

இங்கிலாந்தின் செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல், பிரான்சிஸ் தம்பதியர் இத்தாலி நாட்டின் புளோரன்ஸ் நகரில் பணியாற்றியபோது 12.5.1820 ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தைக்கு அந்நகரின் நினைவாகவும், தங்கள் குடும்பப் பெயரான நைட்டிங்கேலையும் இணைத்து ‘புளோரன்ஸ் நைட்டிங்கேல்’ என்று பெயர் வைத்து அழைத்தனர்.

“அன்பு செலுத்துங்கள். காலம் குறைவாகவே இருக்கிறது” என்ற வேத வாசகத்தால் ஈர்க்கப்பட்டார் புளோரன்ஸ் நைட்டிங்கேல். பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக, செவிலியர் பணியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். நவீன தாதியியல் முறையை உருவாக்கி, செவிலியர் பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினார்.

உலகத்தின் ஒளிச்சுடராய் விளங்கிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் சாதனைகளைச் செய்து சிகரங்களைத் தொடுவதற்குப் பதிலாக ஆதரவற்றவர்கள் மீது அன்பு செலுத்தி அவர்களின் இதயத்தில் இடம்பிடித்தார்.

1854 - 56 ஆம் ஆண்டுகளில் ரஷ்யப் பேரரசிற்கும், பிரான்ஸ் கூட்டணி நாடுகளுக்கும், இங்கிலாந்து ஓட்டோமான் பேரரசுக்கும் இடையே கிரிமியாவில் நடைபெற்ற போரில் காயம்பட்டு குற்றுயிரும், குலை உயிருமாகப் போராடிக் கொண்டிருந்த இராணுவ வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்க புளோரன்ஸ் நைட்டிங்கேல் தலைமையில் 38 பேர் கொண்ட குழு ஒன்று கிரிமியா போர்முனைக்கு அனுப்பப்பட்டனர்.

விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு கையில் இராந்தல் விளக்குடன் தேவதை ஒன்று தங்களைக் காக்க வந்துள்ளது என்று இராணுவ வீரர்கள் புகழ்ந்து பாராட்டினார்கள். ‘விளக்கேந்திய பெருமாட்டி’ என்று வர்ணித்தனர்.

புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பணியைப் பாராட்டி 1883 ஆம் ஆண்டு செஞ்சிலுவைச் சங்க விருது வழங்கியது. 1907 ஆம் ஆண்டு புளோரன்சின் 84-ஆவது பிறந்த நாள் பரிசாக பிரித்தானிய மன்னர் ஏழாம் எட்வர்ட்டின் ‘ஆர்டர் ஆ~ப் மெரிட்’ என்னும் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

13.08.1910 ஆம் ஆண்டு புளோரன்ஸ் நைட்டிங்கேல் தனது உலக வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொண்டார். அவர் மறைவிற்கு பின்பு அவரின் தன்னலமற்ற பணியை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் மே 12 ஆம் நாள் லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபே மாளிகையில் உள்ள விளக்குகளில் ஒளி ஏற்றி, செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாற்றப்பட்டு, மாளிகையின் உயர்ந்த பீடத்தில் வைக்கப்படும். இது ஒரு உன்னதமான உணர்வுப் பூர்வமான தருணமாகும்.

புளோரன்ஸ் நைட்டிங்கேல் வழியில், தற்போது கொரோனா கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை பரிவோடு கவனித்துத் தொடர்ந்து தொண்டாற்றி வரும் செவிலியர்களை மத்திய, மாநில அரசுகள் கௌரவிக்க வேண்டும்.

புனிதமான செவிலியர் சேவையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வரும் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த உலக செவிலியர்கள் தின நல்வாழ்த்துகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்ட்க் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 11-05-2020 தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment