Wednesday, July 12, 2023

மதிமுக நிர்வாக குழு தீர்மானங்கள்!

தீர்மானம்: 1. பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்தநாள் விழாவை திறந்த வெளிமாநாடாக செப்டம்பர்-15,2023 அன்று மதுரை மாநகரில் சிறப்பாகக் கொண்டாடுவது என்று கழக நிர்வாகக்குழுத் தீர்மானிக்கிறது.

தீர்மானம்: 2. அரசியலமைப்பு சட்டத்தின் 154 ,163 ,164 ஆகிய பிரிவுகளின் கீழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட தனக்கு அதிகாரம் இருப்பதாக ஆளுநர் ஆர். என். ரவி கருதிக் கொண்டிருக்கிறார்.
ஆளுநர் குறிப்பிட்டு இருக்கிற சட்டப்பிரிவுகளின் கீழ் வானளாவிய அதிகாரம் எதுவும் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை.
அரசியல் சட்டப் பிரிவு 154 இன் படி மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தாலும் , 154(2- ஆ)பிரிவு, மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் அதன் சட்டம் இயற்றும் அதிகார அமைப்பான மாநில சட்டமன்றத்திற்கு உட்பட்டு தான் இருக்கும் என்று தெளிவாக கூறுகிறது.
அதைப்போல சட்டப்பிரிவு 163, ஆளுநர் தமது பணிகளை நிறைவேற்றும் போது ஒரு சில விதிவிலக்குகள் தவிர அனைத்திலும் அமைச்சரவையின் உதவியுடனும் ஆலோசனையுடன்தான் செயல்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறது.
அரசியலமைப்பு சட்ட நெறிமுறைகளையும் மரபுகளையும் தொடர்ந்து மீறிவரும் ஆர். என்.ரவி, தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார்.
தமிழ்நாட்டில் அரசியல் குழப்பம் விளைவிக்க முனைந்து வரும் தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இதனை வலியுறுத்தியே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் குடியரசு தலைவருக்கு ஆளுநரை திரும்ப பெற கையெழுத்து இயக்கத்தை ஜூன் 20 ஆம் தேதி தொடங்கி மக்கள் இயக்கமாக நடத்தி வருகிறது.
ஆளுநருக்கு எதிரான கையெழுத்து இயக்கத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் பேராதரவை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு கோடிக்கு மேலான கையெழுத்துக்களைப் பெற்று, அவற்றை குடியரசு தலைவரிடம் ஒப்படைக்கும் கடமையை மறுமலர்ச்சி திமுக சார்பில் நிறைவேற்ற கையெழுத்து இயக்கத்தை விரைவு படுத்த கழக நிர்வாக குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்: 3. கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா ஜூலை-7 ஆம் தேதி சட்டமன்றத்தில் வரவு- செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்த போது, “மேகதாது அணை கட்ட ஒன்றிய அரசிடம் தேவையான ஒப்புதல் பெற துரித நடவடிக்கை எடுக்கப்படும். முதல் திட்ட அறிக்கை, சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற ஒன்றிய அரசிடம் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அணைக்கு நிலம் கையகப்படுத்துவதே அரசின் முதன்மை பணி என்றும் கூறியுள்ளார். மேலும் மேகதாது அணைக்கு நிலம் கொடுக்கும் மக்களுக்கு மாற்று இடத்தில் நிலம் வழங்கப்படும்” என்றும் அறிவித்துள்ளார்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றம்,16.02.2018 இல் வழங்கிய தீர்ப்பிலும் காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு கர்நாடக மாநிலத்திற்கு எந்த உரிமையும் இல்லை. தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெறாமல் எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக்கூடாது என்று தெளிவுபடுத்தப் பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டிற்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறக்கப்பட வேண்டும். ஆனால், 2.83 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கான 6.357 டிஎம்சி தண்ணீரை இன்னும் கர்நாடகா தரவேண்டியுள்ளது.
காவிரியிலிருந்து ஜூலையில் 31.24 டிஎம்சியும், ஆகஸ்டில் 45.95 டிஎம்சியும் கர்நாடகா தர வேண்டும். ஜூன், ஜூலை மாதங்களுக்கான தண்ணீரை பெற்றுத்தந்தால் மட்டுமே குறுவை சாகுபடி செய்யமுடியும் என்று காவிரிப் படுகை விவசாயிகள் கவலையுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் மேகேதாட்டு அணை கட்டப்படுமானால், காவிரிப் படுகைப் பகுதிகள் பாலைவனம் ஆகி விடும்.எனவே ஒன்றிய அரசு மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு எந்தவிதமான அனுமதியும் வழங்கக் கூடாது.
தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை விரைவுப் படுத்தி, கர்நாடகா மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று மதிமுக நிர்வாகக் குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 4. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்' தேர்வு மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கான தகுதித் தேர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ‘நெக்ஸ்ட்'(National Exit Test- NExT) தேர்வு நடத்த, தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டுள்ளது.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ மாணவர்களுக்கான ‘நெக்ஸ்ட்' தேர்வு இந்த கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெக்ஸ்ட் தேர்வில் தேர்வு பெற்றால்தான் பயிற்சி மருத்துவர் பணியை செய்ய முடியும் என்றும் இரு தேர்வுகளாக மே மற்றும் நவம்பர் மாதங்களில் தேர்வுகள் நடக்கும் எனவும் வரும் ஜூலை 28 ஆம் தேதி நாடு முழுவதும் மாதிரி தேர்வு நடைபெற உள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு மாணவர்கள், ‘நெக்ஸ்ட் 1' தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னரே, பயிற்சி மருத்துவராகப் பணியாற்ற முடியும். அதேபோல ‘நெக்ஸ்ட் 2' தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான், முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர முடியும். வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கும், இந்த தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கல்வியில் நீட் தேர்வு மூலம் மாநில உரிமையைப் பறித்ததுபோல், தற்போது ‘நெக்ஸ்ட்’ (NExT) என்ற தேர்வு மூலமும், அனைத்து இடங்களுக்குமான ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை மூலமும் மாநில உரிமையைப் பறிப்பதற்கான முயற்சிகளை ஒன்றிய பா.ஜ.க அரசு தொடங்கியுள்ளது கண்டனத்துக்கு உரியதாகும்.
தற்போது நெக்ஸ்ட் தேர்வை அறிமுகப்படுத்துவது என்பது கிராமப்புற மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், பள்ளிக்கல்வி அடிப்படையில் நடத்தப்படும் தேர்வு முறை, மாநில அரசின்கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தும்.
மருத்துவ படிப்புகளுக்கான காலத்தை அதிகரிக்கச் செய்து மருத்துவ மாணவர்களை மன உளைச்சலுக்குத் தள்ளும் நெக்ஸ்ட், மருத்துவ தகுதித் தேர்வு நடத்தும் முடிவை தேசிய மருத்துவ ஆணையம் கைவிட வேண்டும் என்று கழக நிர்வாகக் குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 5. தமிழகத்தில் 1.5 லட்சம் விவசாயக் குடும்பங்கள் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். சர்க்கரை துறையை சார்ந்த தொழில் மூலம் நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் பயன் அடைகின்றனர்.
2005-06 அரவை பருவத்தில் 232 லட்சம் மெட்ரிக் டன்னுக்கு மேல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது படிப்படியாக குறைந்து 2021- 22 அரவைப் பருவத்தில் 128 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.
தமிழக விவசாயிகள் வறட்சி,புயல், வெள்ளம், பூச்சி நோய் போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பை சந்தித்து வருகிறார்கள்.
இதில் குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக விவசாயிகள் புதுவகையான பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் கரும்பு பயிரில் கடுமையான மகசூல் இழப்பினை சந்தித்து வருகிறார்கள்.
இதற்கு விஞ்ஞான ரீதியான கட்டுப்பாடு முறைகளும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு மூலம் நிவாரணமும் வழங்க வேண்டும்.
தமிழக அரசால் வழங்கப்படும் கரும்பு பயிர் காப்பீடு திட்டம் மூலம் அனைத்து மாவட்ட விவசாயிகளும் பயன் பெறும் வகையில் வேளாண்மை துறையில் திருத்தம் செய்ய வேண்டும்.
நமது மாநிலத்தில் சர்க்கரை தேவை 15 லட்சம் மெட்ரிக் டன்கள். ஆனால் 10 லட்சம் மெட்ரிக் டன்கள் சர்க்கரை மட்டுமே தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஒன்றிய அரசு அண்மையில் கரும்புக்கான அடிப்படை ஆதார விலையை 10.25 சர்க்கரை கட்டுமானத்திற்கு குவின்டால் ஒன்றுக்கு ரூபாய் 10 உயர்த்தி டன் ஒன்றுக்கு ரூபாய் 3150 என விலை அறிவித்திருக்கிறது.
ஆனால் தமிழ்நாட்டில் சர்க்கரை கட்டுமானம் என்பது 9.5 மற்றும் அதற்கு குறைவாகவே உள்ளது.
கடந்த 2021 22 அரவைப் பருவத்தில் ஒன்றிய அரசு அறிவித்த 3050 ரூபாய் விலையில் தமிழக விவசாயிகளுக்கு 9.5 சர்க்கரை கட்டுமானத்திற்கு கிடைத்த தொகை 2821. 25 ரூபாய் மட்டுமே. மாநில அரசாங்கம் கடந்த ஆண்டு 195 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியது.
(2821.25+195=3016.25) ஆனால் தற்போது ஒன்றிய அரசு ஒரு குவின்டால் கரும்பிற்கு 10 ரூபாய் மட்டும் உயர்த்தி அறிவித்திருக்கிறது.
இது கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருக்கும் விவசாயிகளுக்கு வேண்டுமானால் பயனுள்ளதாக இருக்கலாம். காரணம் கர்நாடகா மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சர்க்கரை கட்டுமானம் என்பது மத்திய அரசாங்கம் அறிவித்திருக்கும் 10.25 க்கு அதிகமாக வருகிறது.
ஒன்றிய அரசு அறிவித்துள்ள குவின்டால் ஒன்றுக்கு 10 ரூபாய் என்பதனை உயர்த்தி, 50 ரூபாயாக வழங்குவதற்கும் குறைந்தபட்ச கட்டுமானம் 9.5 என்பதனை மாற்றி அமைக்கவும் வேண்டும்.
தமிழ்நாட்டில் சர்க்கரை கட்டுமானம் 9.5 தான் தொடர்ந்து கடந்த பத்து ஆண்டுகளாக கிடைக்கிறது. இந்த பாதிப்புக்கு விவசாயிகள் எந்த வகையிலும் காரணம் இல்லை. இயற்கையின் இடர்பாடுகள் மற்றும் பருவநிலை மாற்றம் தான் காரணம்.
இதனால் ஒன்றிய அரசு அறிவிக்கும் விலை தமிழக விவசாயிகளுக்கு கிடைக்காமல் தமிழக கரும்பு விவசாயிகள் கரும்பு பயிரிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி மாற்றுப் பயிர் சாகுபடிக்கு மாறி வரும் நிலை உருவாகி வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
மேலும் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 42 சர்க்கரை ஆலைகளில் தற்போது 29 மட்டுமே இயங்கி வருகின்றன.
போதுமான கரும்பு உற்பத்தி இல்லாமையால் பல ஆலைகள் நலிவடைந்து மூடும் சூழ்நிலையில் உள்ளது.
கடந்த ஆண்டுகளில் வழங்கிய ஊக்கத்தொகை 195 ரூபாய் என்பதனை உயர்த்தி, 500 ரூபாயாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை மதிமுக வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 6. கடந்த 2018 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21ஆவது சட்ட ஆணையம் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், நாட்டில் பொது சிவில் சட்டம் அவசியம் இல்லை. தற்போதைய சூழலில் அது விரும்பத்தக்கதும் அல்ல என்று தெரிவித்தது.
185 பக்கங்கள் கொண்ட அந்த ஆலோசனை அறிக்கையில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் நாட்டில் நிலவும் பன்முகத்தன்மைக்கு மதச்சார்பின்மை முரண்பட முடியாது. நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மை என்பதை பொது சிவில் சட்டம் மூலம் சமரசம் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் அது தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஆகிவிடும் என்று தெரிவித்திருந்தது.
இருப்பினும் திருமணம், விவாகரத்து தொடர்பான சட்டங்கள் சிலவற்றை பொதுவானதாக பல்வேறு மதங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், 22ஆவது சட்ட ஆணையம் ஜூன்-14 ,2023 அன்று வெளியிட்ட அறிவிப்பில், பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகள் கருத்துகள் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் பொது சிவில் சட்டம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிரதமர் மோடி ஜூன்-27 ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் பாஜக வாக்குச்சாவடி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றினார்.
“ஒரே குடும்பத்துக்கு இரண்டு வெவ்வேறு விதமான சட்டத்திட்டங்கள் எப்படிப் பொருந்தும். அதேபோல் ஒரு தேசம் இரண்டுவிதமான சட்டங்களைக் கொண்டு இயங்க முடியாது” என்று பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தி பேசி உள்ளார்.
உச்சநீதிமன்றமும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த கூறியுள்ள நிலையில், பொது சிவில் சட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் மோடி.
நாட்டின் பன்முகத் தன்மையை சீர்குலைத்து வரும் ஒன்றிய பாஜக அரசு, பொது சிவில் சட்டத்தை செயற்படுத்த துடிப்பது கடும் கண்டனத்திற்கு உரியது ஆகும். இந்த முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.
தீர்மானம்: 7. மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த கல்வி உதவித் தொகையினை 2022-2023 ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசு திடீரென ரத்து செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து வழங்கிட வேண்டும்.
29-11-2022 நாளிட்ட ஒன்றிய சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் கடிதத்தில், கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி, ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயத் தொடக்கக் கல்வி (1 முதல் 8 ஆம் வகுப்பு வரை) வழங்குவதை அரசாங்கம் கட்டாயமாக்குகிறது என்று தெரிவித்துள்ளதால், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல், பழங்குடியினர் விவகார அமைச்சகங்களின் முடிவின்படி, தற்போது 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெறத் தகுதியுடையவராகிறார்கள்.
ஒன்றிய அரசின் இந்த நிலைப்பாடு, ஏழை சிறுபான்மையின வகுப்பைச் சார்ந்த குழந்தைகளிடையே தொடக்கக் கல்வியை ஊக்கப்படுத்துவதற்கு எதிராக அமைவதோடு, 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுவது உள்ளிட்ட அனைத்தையும் பாதிக்கும்.
எனவே, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த, மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகை திட்டத்தினைக் கைவிடும் முடிவை ஒன்றிய அரசு நிறுத்திவைத்து, உடனடியாக அத்திட்டத்தினை மீண்டும் கொண்டு வரவேண்டும் என மதிமுக வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 8. சென்னை தலைமைச் செயலகத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மாவட்ட நிலை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, “டாஸ்மாக் பாட்டில்களால் பல பிரச்சினைகள் உள்ளன. கண்ட இடங்களிலும் அவை வீசப்பட்டு விடுகின்றன. எனவே மது பாட்டிலுக்கு பதிலாக ‘டெட்ரா பாக்கெட்' வரவேண்டும் என்று பல தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
குறுகிய இடத்தில் அவற்றை வைக்கலாம். அவற்றை கையாள்வது எளிது. அதோடு உடைந்து நஷ்டம் ஏற்படுவது இருக்காது. எனவே அதனடிப்படையில் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. டெட்ரா பேக் மூலம் விற்பனை செய்து, அதை மறு சுழற்சியாக மீண்டும் பயன்படுத்தலாம்.
அதுபோல கடை திறக்கும் காலநேரம் பற்றி ஆய்வு செய்தபோது, காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை கட்டிட வேலை போன்ற கடுமையான உடலுழைப்பு வேலைக்கு செல்பவர்கள் மது கிடைக்காமல் சிரமம் அடைகிறார்கள் என்று கண்டறிந்தோம். அவர்களுக்காக என்ன ஏற்பாட்டை செய்யலாம்? என்பதில் இன்னும் முடிவெடுக்கவில்லை.” என்று தெரிவித்து இருக்கிறார்.
தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப் படுத்த படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கோரி வரும் நிலையில், நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படும் மதுக்கடைகளை முன்கூட்டியே திறக்க முயல்வது ஏற்கத்தக்கது அல்ல. அம்முயற்சியை கைவிட வேண்டும் என்று இக்கூட்டம் வலியிறுத்துகிறது.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
12.06.2023

Tuesday, July 11, 2023

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 266 ஜெயந்தி. வைகோ MP மாலை அணிவித்து புகழ் வணக்கம்!

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 266 ஜெயந்தி நாளை முன்னிட்டு, சென்னை, எழும்பூர், காந்தி இர்வின் சாலையில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்.

துணைப் பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன், மாவட்டச் செயலாளர்கள் வடசென்னை கிழக்கு சு.ஜீவன், தென்சென்னை மேற்கு சைதை ப.சுப்பிரமணி, வடசென்னை மேற்கு டி.சி.இராசேந்திரன், செங்கல்பட்டு வடக்கு மா.வை.மகேந்திரன், தூத்துக்குடி தெற்கு புதுக்கோட்டை செல்வம், தீர்மானக்குழுச் செயலாளர் கவிஞர் மணிவேந்தன், மகளிர் அணி மாநிலச் செயலாளர் மல்லிகா தயாளன், சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் ஜெ,சிக்கந்தர், தேர்தல் பணிச் செயலாளர் வி.சேஷன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
11.07.2023

Monday, July 10, 2023

தமிழ்நாட்டு மீனவர்கள் கைது. வைகோ MP கண்டனம்!

இராமேசுவரம் துறைமுக பகுதியிலிருந்து நேற்றுமுன்தினம் ஜூலை 8 ஆம் தேதி 461 விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய கடல் பகுதியில்தான் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

இராமேசுவரத்திலிருந்து கிரீன்ஸ் மற்றும் பாலா ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளும் கடலுக்குச் சென்றிருந்தன.

இந்தப் படகுகளில் கிறிஸ்து (வயது 40), ஆரோக்கிய ராஜ் (52), ஜெர்மஸ் (33), ஆரோக்கியம் (38), ரமேஷ் (28), ஜெகன் (40), பிரபு (36), பிரியன் ரோஸ் (44), ஜார்ஜ் (30), அந்தோணி (45), பிரதீபன் (35), ஈசாக் (35), ஜான் (30), ஜனகர் உள்ளிட்ட 15 மீனவர்கள் இருந்தனர்.

அந்த 15 பேரையும் எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் சென்று மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் கைது செய்திருப்பதும், அவர்கள் சென்ற 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்திருப்பதும் கண்டனத்துக்கு உரியது.

கைது செய்யப்பட்ட 15 பேரும் காங்கேசன் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட உள்ளதாக செய்திகள் வருகின்றன.

கடந்த ஜூன் மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 22 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இனிமேல், எல்லைதாண்டி வந்து மீன்பிடிக்கக்கூடாது, அவ்வாறு மீண்டும் கைதானால் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் மீனவர்களை  விடுதலை செய்யப்பட்டனர்.

தற்போது மீண்டும் நமது மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக பொய்யான குற்றம் சாட்டி சிங்களக் கடற்படை கைது செய்து உள்ளதால், நீதிமன்றத்தின் மூலம் சிறைத்தண்டனை அளிக்க இலங்கை அரசு குறியாக இருக்கும்.

எனவே, ஒன்றிய அரசு உடனே தலையிட்டு  தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
10.07.2023

மறுமலர்ச்சி தி.மு.க. நிர்வாகக் குழுக் கூட்டம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகக் குழுக் கூட்டம், கழக அவைத்தலைவர் திரு ஆடிட்டர் அ.அர்ஜூனராஜ் அவர்கள் தலைமையில் 12.07.2023 புதன்கிழமை காலை 10 மணிக்கு சென்னை தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெறும்.

அதுபோது நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
04.07.2023

Saturday, July 8, 2023

மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தை முறியடிக்க வேண்டும். வைகோ அறிக்கை!

கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா நேற்று ஜூலை-7 ஆம் தேதி சட்டமன்றத்தில் வரவு- செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது அவர், “மேகேதாட்டு அணை கட்ட ஒன்றிய அரசிடம் தேவையான ஒப்புதல் பெற துரித நடவடிக்கை எடுக்கப்படும். முதல் திட்ட அறிக்கை, சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற ஒன்றிய  அரசிடம் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அணைக்கு நிலம் கையகப்படுத்துவதே அரசின் முதன்மைப் பணி என்றும் கூறியுள்ளார். மேலும் மேகதாது அணைக்கு நிலம் கொடுக்கும் மக்களுக்கு மாற்று இடத்தில் நிலம் வழங்கப்படும்” என்றும்  முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றம்,16.02.2018 இல் வழங்கிய தீர்ப்பிலும், காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு கர்நாடக மாநிலத்திற்கு எந்த உரிமையும் இல்லை. தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெறாமல் எந்தக் கட்டுமானமும் மேற்கொள்ளக்கூடாது என்று தெளிவுபடுத்தப் பட்டிருக்கிறது.

2007, பிப்ரவரி 5 ஆம் தேதி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் 192 டி.எம்.சி தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த 192 டிஎம்சி தண்ணீரை மாத வாரியாக எவ்வளவு பிரித்தளிக்க வேண்டும் என்றும் நடுவர் மன்றம் வரையறுத்தது. ஜூன் மாதத்தில் 10 டிஎம்சி, ஜூலையில் 34 டிஎம்சி, ஆகஸ்ட்டில் 50 டிஎம்சி, செப்டம்பரில் 40 டிஎம்சி, அக்டோபரில் 22 டிஎம்சி, நவம்பரில் 15 டிஎம்சி, டிசம்பரில் 8 டிஎம்சி, ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் தலா 2.5 டிஎம்சி என நீர்ப் பங்கீடு வரையறுக்கப்பட்டது.

ஆனால் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 16, 2018 இல் அளித்த தீர்ப்பில்,  கர்நாடகா, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை 177.25 டிஎம்சி ஆக குறைத்து உத்தரவிட்டுள்ளது.

நடுவர் மன்றம் வழிகாட்டுதல் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம், தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நீரை காவிரியில் திறந்துவிட கர்நாடக மாநிலத்திற்கு உத்தரவிட முடியாத கையறு நிலையில்தான் இயங்கி வருகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறக்கப்பட வேண்டும். ஆனால், 2.83 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கான 6.357 டிஎம்சி தண்ணீரை இன்னும் கர்நாடகா தரவேண்டியுள்ளது.

காவிரியிலிருந்து ஜூலையில் 31.24 டிஎம்சியும், ஆகஸ்டில் 45.95 டிஎம்சியும் கர்நாடகா தர வேண்டும். ஜூன், ஜூலை மாதங்களுக்கான தண்ணீரை பெற்றுத்தந்தால் மட்டுமே குறுவை சாகுபடி செய்யமுடியும் என்று காவிரிப் படுகை விவசாயிகள் கவலையுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் மேகேதாட்டு அணை கட்டப்படுமானால், காவிரிப் படுகைப்  பகுதிகள் பாலைவனம் ஆகி விடும். எனவே ஒன்றிய அரசு மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு எந்தவிதமான அனுமதியும் வழங்கக் கூடாது.

தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை விரைவுப் படுத்தி, கர்நாடகா மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
சென்னை - 8
‘தாயகம்’
08.07.2023

Friday, July 7, 2023

மருத்துவப் படிப்புகளுக்கு நெக்ஸ்ட் தேர்வு: மாநில உரிமைப் பறிப்பு; மாணவர்களுக்கு மன உளைச்சல்! வைகோ MP கண்டனம்!

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' தேர்வு மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கான தகுதித் தேர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ‘ நெக்ஸ்ட்' (National Exit Test- NExT) தேர்வு நடத்த, தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ மாணவர்களுக்கான ‘நெக்ஸ்ட்' தேர்வு இந்தக் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெக்ஸ்ட் தேர்வில் தேர்வு பெற்றால்தான் பயிற்சி மருத்துவர் பணியை செய்ய முடியும் என்றும், மே மற்றும் நவம்பர் மாதங்களில் இரு தேர்வுகளாக நடக்கும் எனவும், வரும்  ஜூலை 28 ஆம் தேதி நாடு முழுவதும் மாதிரி தேர்வு நடைபெற உள்ளதாகவும் தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு மாணவர்கள், ‘நெக்ஸ்ட் 1' தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னரே, பயிற்சி மருத்துவராகப்  பணியாற்ற முடியும். அதேபோல ‘நெக்ஸ்ட் 2' தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான், முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர முடியும். வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கும், இந்தத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கல்வியில் நீட் தேர்வு மூலம் மாநில உரிமையைப் பறித்ததுபோல், தற்போது ‘நெக்ஸ்ட்’ (NExT) என்ற தேர்வு மூலமும், அனைத்து இடங்களுக்குமான ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை மூலமும் மாநில உரிமையைப் பறிப்பதற்கான முயற்சிகளை ஒன்றிய பா.ஜ.க அரசு தொடங்கியுள்ளது கண்டனத்துக்கு உரியதாகும்.

ஏற்கெனவே, மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வானது தமிழகத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில் தற்போது நெக்ஸ்ட் தேர்வை அறிமுகப்படுத்துவது என்பது கிராமப்புற மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், பள்ளிக்கல்வி அடிப்படையில் நடத்தப்படும் தேர்வு முறை, மாநில அரசின்கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தும்.

மருத்துவப் படிப்புகளுக்கான காலத்தை அதிகரிக்கச் செய்து, மருத்துவ மாணவர்களை மன உளைச்சலுக்குத் தள்ளும் நெக்ஸ்ட், மருத்துவ தகுதித் தேர்வு நடத்தும் முடிவை தேசிய மருத்துவ ஆணையம் கைவிட வேண்டும்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
07.07.2023

Thursday, July 6, 2023

கரும்பு கொள்முதல் ஆதார விலை மற்றும் ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்குக! ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு வைகோ MP வலியுறுத்தல்!

தமிழகத்தில் 1.5 லட்சம்  விவசாயக் குடும்பங்கள் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். சர்க்கரை துறையைச் சார்ந்த தொழில் மூலம் நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் பயன் அடைகின்றனர்.

2005-06  அரவைப் பருவத்தில் 232 லட்சம் மெட்ரிக் டன்னுக்கு மேல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது படிப்படியாக குறைந்து 2021- 22 அரவைப் பருவத்தில் 128 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகள் வறட்சி, புயல், வெள்ளம், பூச்சி நோய் போன்ற பல்வேறு இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பைச் சந்தித்து வருகிறார்கள். 

இதில் குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக விவசாயிகள் புதுவகையான பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் கரும்பு பயிரில் கடுமையான மகசூல் இழப்பினைச் சந்தித்து வருகிறார்கள்.

இதற்கு விஞ்ஞான ரீதியான கட்டுப்பாடு முறைகளும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு மூலம் நிவாரணமும் வழங்க வேண்டும்.

தமிழக அரசால் வழங்கப்படும் கரும்பு பயிர் காப்பீடு  திட்டம் மூலம் அனைத்து மாவட்ட விவசாயிகளும் பயன் பெறும் வகையில் வேளாண்மை துறையியின் காப்பீட்டுத் திட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.

நமது மாநிலத்தில் சர்க்கரை தேவை 15 லட்சம் மெட்ரிக் டன்கள். ஆனால் 10 லட்சம் மெட்ரிக் டன்கள் சர்க்கரை மட்டுமே தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஒன்றிய அரசு அண்மையில் கரும்புக்கான அடிப்படை ஆதார விலையை 10.25 சர்க்கரை கட்டுமானத்திற்கு குவின்டால் ஒன்றுக்கு  ரூபாய் 10 உயர்த்தி,  டன் ஒன்றுக்கு  ரூபாய் 3150 என விலை அறிவித்திருக்கிறது.

ஆனால்  தமிழ்நாட்டில்  சர்க்கரை கட்டுமானம் என்பது 9.5 மற்றும் அதற்கு குறைவாகவே உள்ளது.

கடந்த 2021-22 அரவைப் பருவத்தில் ஒன்றிய அரசு அறிவித்த 3050 ரூபாய் விலையில் தமிழக விவசாயிகளுக்கு 9.5 சர்க்கரை கட்டுமானத்திற்கு கிடைத்த தொகை 2821. 25 ரூபாய்  மட்டுமே. மாநில அரசாங்கம் கடந்த ஆண்டு 195 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியது.

(2821.25+195=3016.25) ஆனால் தற்போது ஒன்றிய அரசு ஒரு குவின்டால் கரும்பிற்கு 10 ரூபாய் மட்டும் உயர்த்தி அறிவித்திருக்கிறது.

இது கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருக்கும் விவசாயிகளுக்கு வேண்டுமானால் பயனுள்ளதாக இருக்கலாம். காரணம் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சர்க்கரை கட்டுமானம் என்பது மத்திய அரசாங்கம் அறிவித்திருக்கும் 10.25 க்கு அதிகமாக வருகிறது.

ஒன்றிய அரசு அறிவித்துள்ள குவின்டால் ஒன்றுக்கு 10 ரூபாய் என்பதனை உயர்த்தி 50 ரூபாயாக வழங்குவதற்கும் குறைந்தபட்ச கட்டுமானம் 9.5 என்பதனை மாற்றி அமைக்கவும் ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டில் சர்க்கரை கட்டுமானம் 9.5 தான் தொடர்ந்து கடந்த பத்து ஆண்டுகளாக கிடைக்கிறது. இந்தப் பாதிப்புக்கு விவசாயிகள் எந்த வகையிலும் காரணம் இல்லை. இயற்கையின் இடர்பாடுகள் மற்றும் பருவநிலை மாற்றம் தான் காரணம்.

இதனால் ஒன்றிய அரசு அறிவிக்கும் விலை தமிழக விவசாயிகளுக்கு கிடைக்காமல், தமிழக கரும்பு விவசாயிகள் கரும்பு பயிரிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி மாற்றுப் பயிர் சாகுபடிக்கு மாறி வரும் நிலை உருவாகி வருகிறது.

இதனை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும்  தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 42 சர்க்கரை ஆலைகளில் தற்போது 29  மட்டுமே இயங்கி வருகின்றன.

போதுமான கரும்பு உற்பத்தி இல்லாமையால் பல ஆலைகள் நலிவடைந்து மூடும் சூழ்நிலையில் உள்ளது.

கடந்த ஆண்டுகளில் வழங்கிய ஊக்கத்தொகை 195 ரூபாய் என்பதனை உயர்த்தி 500 ரூபாயாக அறிவிக்க  வேண்டும் என தமிழ்நாடு அரசையும் கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
06.07.2023

Wednesday, July 5, 2023

மறுசுழற்சி ஜவுளி நிறுவனங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுக! வைகோ MP அறிக்கை!

கழிவுப் பஞ்சில் இருந்து நூல் உற்பத்தி செய்யும் பணி, ஓபன் எண்ட் (ஓஇ) நூற்பாலைகளில் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் 600 ஓஇ நூற்பாலைகள் செயல்படுகின்றன. இவற்றில் 300 நூற்பாலைகள் வண்ண நூல் தயாரிப்பிலும், 300 ஓஇ நூற்பாலைகள் கிரே நூல் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றன.

மின் கட்டணம் மற்றும் கழிவுப்பஞ்சு விலை உயர்வால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல், 300 ஓஇ நூற்பாலைகள் இன்று முதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளன.

“மின் கட்டணம் மற்றும் கழிவுப்பஞ்சு விலை உயர்வால் ஓஇ நூற்பாலைகளில் வரலாறு காணாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களாக 50 சதவீத நூற்பாலைகள் மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில், மின்கட்டண உயர்வால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் இன்று முதல் உற்பத்தி நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 300 கிரே நூல் தயாரிக்கும் ஓபன் எண்ட் நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தத்தைத் தொடங்கி உள்ளன. சில தினங்களில் மீதமுள்ள 300 வண்ண நூல் உற்பத்தி செய்யும் ஓஇ நூற்பாலைகளும் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளன” என்று மறுசுழற்சி ஜவுளி நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று ஒரு கிலோ பஞ்சு விலை ரூ.154-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், கழிவுப் பஞ்சு விலை ஒரு கிலோ ரூ.112-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது ஏற்புடையதல்ல.

ஒரு கிலோ கழிவுப் பஞ்சு ரூ.75-க்கு கிடைத்தால் தான் ஓஇ நூற்பாலைகளுக்கு பயனளிக்கும். இன்றைய சூழலில் ஒரு கிலோ நூல் உற்பத்திக்கு ரூ.20 நஷ்டத்தை ஓஇ நூற்பாலை தொழில்துறையினர் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

தமிழகத்தில் ஏற்கெனவே கடந்த 6 மாதங்களாக 50 சதவீத ஓஇ நூற்பாலைகள் மட்டுமே செயல்பட்டு வரும் நிலையில், இயங்காத நூற்பாலைகளுக்கும் நிலை கட்டணமாக மின்வாரியத்துக்கு மாதந்தோறும் ஆயிரக்கணக்கில் செலுத்த வேண்டியுள்ளது. உச்சபட்ச நேர மின்பயன்பாடு கணக்கீடுக்கு மீட்டர் இல்லாத நிலையில் அதற்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நெருக்கடியை எதிர்கொள்ள முடியாததால் இன்று முதல் 300 ஓஇ நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது. மின்கட்டணத்தை தமிழக அரசும், கழிவுப்பஞ்சு விலையை நூற்பாலை நிர்வாகத்தினரும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே பிரச்சினைக்கு தீர்வாகும் என்றும் மறுசுழற்சி ஜவுளி நிறுவன கூட்டமைப்பினர் அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், மங்கலம்,காரணம்பேட்டை, உடுமலை,வெள்ளக்கோவில் உள்ளிட்டப் பகுதிகளில் மறு சுழற்சி நூற்பு ஆலைகள் மூடப்பட்டு இருப்பதால் 1500 டன் நூல் உற்பத்தி பாதிப்பதுடன், ஐந்தாயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலையும் உருவாகி உள்ளது. எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக மறுசுழற்சி ஜவுளி நிறுவனங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
05.07.2023

Tuesday, July 4, 2023

ஒழுங்கு நடவடிக்கை. தலைமைக் கழக அறிவிப்பு

ஒழுங்கு நடவடிக்கை. தலைமைக் கழக அறிவிப்பு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் இ.மார்கோனி அவர்கள் கழகக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படுவதால், மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
03.07.2023

தேசிய இனங்களின் மொழிகளைசிறுமைப் படுத்துவதா? வைகோ MP கண்டனம்!

தேசிய இனங்களின் மொழிகளை
சிறுமைப் படுத்துவதா? வைகோ MP கண்டனம்!

டெல்லியில் நடந்த இந்தி ஆலோசனைக்குழு கூட்டத்தில்,  ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்று பேசும் போது,  

“நமது தேசிய மொழியின் முதன்மையைப் புரிந்துகொள்வது முக்கியம். ஏனெனில் இது நமது உணர்வுகளை வெளிப்படுத்த உதவுகிறது. மேலும் நமது ஒற்றுமைக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஒரு பாலத்தை வழங்குகிறது. மாநில மொழிகளை நாம் பேசுவதற்கு பயன்படுத்தலாம்.

ஆனால் இந்தியை தேசிய மொழியாக மதிக்க வேண்டும். நாம் அனைவரும் நமது தேசியத் தன்மையை வடிவமைக்க உதவும் ஒரு மொழியாக இந்தியைப் பயன்படுத்துவோம். ஒன்றிய சுகாதாரத்துறையில் உள்ள அதிகாரப்பூர்வ பணிகளில் இந்தி பயன்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், அலுவல் மொழியான இந்தியைப் பரப்புவதற்கும், ஆண்டுத் திட்டத்தில் உள்ள இலக்குகளை நிறைவேற்றுவதற்கும், உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழித் துறையால் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உறுதியுடன் உள்ளது.

நமது தேசிய மற்றும் கலாச்சார ஒற்றுமையின் அடையாளமாக இந்தியை சுகாதார அமைச்சகம் அங்கீகரிக்கிறது.”  என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் தேசிய மொழிகள் தான். அவற்றை மக்கள் பேசுவதற்கான மொழிகள் மட்டுமே என்று ஒன்றிய அமைச்சர் சிறுமைப்  படுத்துவது கண்டனத்துக்குரியது.

ஒன்றிய பாஜக அரசு இந்தி மொழியை மட்டும் தேசிய மொழி என்று அங்கீகரிப்பதும், இந்தி மொழியைத் திணிப்பதும் நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரானதாகும்.

இந்தியாவின் கலாச்சார ஒருமைப்பாடு என்பது பல்வேறு தேசிய இனங்களின் மொழி உரிமை ,இன உரிமை, பண்பாட்டு உரிமையை ஏற்று மதித்து பாதுகாப்பதில் தான் அடங்கியிருக்கிறது என்பதை பாஜக அரசு உணர வேண்டும்.

அதை விடுத்து ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு என்று இந்து ராஷ்ட்ர செயல் திட்டத்தை பாஜக அரசு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் வேலையாகும்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
04.07.2023

மேகேதாட்டு, பெண்ணையாற்று அணைகள் கட்ட கர்நாடகம் முனைந்திருப்பது அநீதி! வைகோ MP கண்டனம்?

மேகேதாட்டு, பெண்ணையாற்று அணைகள் கட்ட கர்நாடகம் முனைந்திருப்பது அநீதி! வைகோ MP கண்டனம்?

கர்நாடக மாநில துணை முதல்வரும், நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் டெல்லியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத்தைச் சந்தித்து மேகதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

மேலும், இதுகுறித்து அவர் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரிடம் அளித்துள்ள கடிதத்தில், கர்நாடக அரசின் நீர்ப் பாசனத் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், நதிநீர்ப் பங்கீடு பிரச்சினைக்கு புதிதாக ஒரு தீர்ப்பாயத்தை ஏற்படுத்தும் முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வந்துள்ளன.

நேற்று ஜூன் 30 ஆம் தேதி டில்லியில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவகுமார், தமிழகத்துடனான பெண்ணையாறு நதிநீர்ப் பங்கீடுப் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க கர்நாடகா விரும்புகிறது; அதற்கு நடுவர் மன்றம் அமைக்கக் கூடாது என்று  ஒன்றிய அரசை தாம்  வலியுறுத்தியதாக கூறி உள்ளார்.

ஜூலை 5-ஆம் தேதிக்குள் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தகராறு தீர்ப்பாயத்தை அமைக்க மத்திய நீர் வளத்துறை  அமைச்சகம் முடிவெடுத்துள்ள நிலையில்,

“பெண்ணையாறு நதி நீர்ப் பங்கீடு பிரச்சனைக்கு தீர்ப்பாயம் அமைக்க வேண்டாம் என மத்திய அமைச்சரிடம் (கஜேந்திர சிங் ஷெகாவத்) கோரிக்கை விடுத்துள்ளேன். கர்நாடகா இந்தப் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாக தீர்க்க விரும்புகிறது” என டி.கே.சிவகுமார் கூறி உள்ளார்.

பெண்ணை ஆறு பிரச்சனையில், தீர்ப்பாயம் அமைக்கக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறது. ஆனால் கர்நாடகா அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தீர்ப்பாயம் அமைக்கக் கோரி தமிழகம் தாக்கல் செய்த மனுவில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. 

அதற்கு பதில் அளித்த ஒன்றிய நீர்வள அமைச்சகம் ஜூலை 5ஆம் தேதிக்கு முன் புதிய தீர்ப்பாயம் அமைக்கப்படும் என்று கூறி உள்ளது.

கோலார் மாவட்டத்தில் உள்ள யர்கோல் கிராமம் அருகே மார்கண்டேய ஆற்றின் குறுக்கே கோலார், மாலூர் மற்றும் பங்கார்பேட்டை வட்டங்கள்  மற்றும் 40 கிராமங்களுக்கு குடிநீர் வழங்க, கர்நாடகா அணை கட்ட திட்டமிட்டுள்ளது. 240 கோடி ரூபாய் செலவில் பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்ட தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

ஆனால், இந்தத் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், பெண்ணையாற்றின் கிளை நதியாக மார்கண்டேய நதி இருப்பதால், கர்நாடகா அணை கட்டுவது அதன் இயற்கையான நீரோட்டத்திற்குத்  தடையாக இருக்கும் என்றும், வர்தூர் குளத்தின் உபரி நீரை திருப்பி மார்கண்டேய ஆற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் கட்டும் பணியை கர்நாடகா மேற்கொண்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்  குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவது வடதமிழ்நாட்டைப் பெரிதும் பாதிக்கும். இப்பிரச்சனையில் தீர்ப்பாயம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர கர்நாடக மாநிலத்தோடு பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வரும் கர்நாடக அரசு, பெண்ணை ஆற்று தண்ணீரையும் தடுக்க முனைந்திருப்பது அநீதியானதும், வன்மையான கண்டனத்துக்கு உரியதும் ஆகும்.

உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு, மேகேதாட்டு அணை மற்றும் பெண்ணையாற்று அணை தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
01.07.2023

அரசியலமைப்புச் சட்டம்ஆளுநருக்கு வானளாவிய அதிகாரம் வழங்கி உள்ளதா? வைகோ MP அறிக்கை!

தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளதாக முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் ஆளுநர்  ஆர்.என். ரவி தெரிவித்திருக்கிறார்.

அக்கடிதத்தில், அரசியலமைப்பு சட்டத்தின் 154, 163, 164 ஆகிய பிரிவுகளின் கீழ் அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் தனக்கு உண்டு என்று ஆளுநர் ஆர். என். ரவி குறிப்பிட்டிருக்கிறார்.

ஆளுநர் குறிப்பிட்டு இருக்கிற சட்டப்பிரிவுகளின் கீழ் வானளாவிய  அதிகாரம் எதுவும் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை.

அரசியல் சட்டப் பிரிவு 154 இன் படி, மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தாலும் , 154(2- ஆ)பிரிவு, மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் அதன் சட்டம் இயற்றும் அதிகார அமைப்பான மாநில சட்டமன்றத்திற்கு உட்பட்டுதான் இருக்கும் என்று தெளிவாக கூறுகிறது.

இதனை மத்தியப் பிரதேச அரசு எதிர்  ஜெயின் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்தத்  தீர்ப்பு (AIR 1981 SC 2045) உறுதி செய்து இருக்கிறது.

அதைப்போல சட்டப்பிரிவு 163, ஆளுநர் தமது பணிகளை நிறைவேற்றும் போது ஒரு சில விதிவிலக்குகள் தவிர அனைத்திலும் அமைச்சரவையின் உதவியுடனும் ஆலோசனையுடனும்தான் செயல்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறது.

அரசியலமைப்பின் 42ஆவது திருத்த சட்டத்தின் மூலம் அமைச்சரவையின் ஆலோசனைப்படியே குடியரசுத் தலைவர் செயல்பட வேண்டும் என்று பிரிவு 74 இல் திருத்தம் செய்யப்பட்டது. 

அதேபோல ஆளுநரும் செயல்பட வேண்டும் என்று பிரிவு 163 இல் உரிய திருத்தங்கள் செய்யப்படவில்லை. எனினும் பொதுவாக தமது அமைச்சர்களின் ஆலோசனைப்படி அல்லாமல் ஆளுநர் செயல்படக்கூடாது என்று உச்ச நீதிமன்றம்  பல வழக்குகளில் தீர்ப்பளித்து இருக்கிறது. ( சஞ்சீவி எதிர் சென்னை அரசு AIR  1970 SC 1102, உ.பி. சர்வீ° கமிஷன் எதிர் சுரேஷ் AIR 1987 SC 1953).

மிக முக்கியமாக அரசியல் சட்டப் பிரிவு 164 பிரிவு 1 இல் கூறப்பட்டிருப்பதை ஆளுநர் தன்னுடைய நடவடிக்கைக்கு ஆதாரமாக துணைக்கு அழைத்து இருக்கிறார்.

சட்டப்பிரிவு 164 முதல் விதி கூறுவதை கவனிக்க வேண்டும். “The chief minister shall be appointed by the governor and other ministers shall be appointed by the Governor on the advice of the chief minister, and the Ministers shall hold  office during the pleasure of the governor..”

“முதலமைச்சரை ஆளுநர் நியமிக்கிறார்; மற்ற அமைச்சர்களை முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் நியமிப்பார்; ஆளுநரின் விருப்பம் உள்ளவரை அமைச்சர்கள் பதவி வகிக்க முடியும்.”

இதில் ஆளுநரின் விருப்பம் என்பது முதலமைச்சரின் விருப்பம் தான்.  இந்த விதி ஏனெனில், ஒருவர் ஒரு முறை அமைச்சரான பிறகு ஐந்தாண்டுகளும் தான் அமைச்சராக தான் இருப்பேன் என சொல்ல முடியாது. 

முதல்வர் விரும்பும் வரை தான் இருக்க முடியும் என்பதை உணர்த்தவே இந்த விதி இருக்கிறது.

இங்கு ஆளுநரின் விருப்பம் (Pleasure of governor)என்பதை முதல்வரின் விருப்பம் என்று தான் அரசியல் சட்டப் பிரிவு 164 தெளிவுபடுத்துகிறது.

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள், அரசியல் சட்ட பிரிவுகளை துணைக்கு அழைத்து, தன்னிச்சையாக அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் தமக்கு இருப்பதாக கடிதம் எழுதி இருப்பது ஏற்கத்தக்கதல்ல.

முதலமைச்சரின் பரிந்துரை இன்றி ஆளுநர் எப்படி ஒரு அமைச்சரை நியமிக்க முடியாதோ, அதைப்போலவே தன்னிச்சையாக நீக்கவும் முடியாது என்பது தெளிவாகிறது.

அரசியலமைப்பு சட்ட நெறிமுறைகளையும் மரபுகளையும் தொடர்ந்து மீறிவரும் ஆர். என்.ரவி, தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார்.

தமிழ்நாட்டில் அரசியல் குழப்பம் விளைவிக்க முனைந்து வரும் தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும்.

இதனை வலியுறுத்தியே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் குடியரசு தலைவருக்கு ஆளுநரை திரும்ப பெற கையெழுத்து இயக்கத்தை ஜூன் 20 ஆம் தேதி தொடங்கி மக்கள் இயக்கமாக நடத்தி வருகிறது.

ஆளுநருக்கு எதிரான கையெழுத்து இயக்கத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் பேராதரவை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு கோடிக்கு மேலான கையெழுத்துக்களை பெற்று அவற்றை குடியரசு தலைவரிடம் ஒப்படைக்கும் கடமையை மறுமலர்ச்சி திமுக சார்பில் நிறைவேற்றுவோம்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
01.07.2023

Thursday, June 29, 2023

தியாகி "இடிமழை உதயன்" நினைவு இல்லத்தை திறந்து வைத்தார் வைகோ MP!

திமுகவிலிருந்து தலைவர் வைகோ அவர்களை வெளியேற்ற கூடாது என்று தலைவரின் மேல் உள்ள பாசத்தால் தன்னுயிரை தியாகம் செய்த "இடிமழை" உதயன் அவர்களின் குடும்பத்திற்கு, மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ அவர்களின் முயற்சியால் கட்டிக் கொடுக்கப்பட்ட புதிய இல்லத்தை இன்று 29-06-2023 மதிமுக பொதுச் செயலாளர் வைகோ MP அவர்கள் திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்வில் தலைமைக் கழக நிர்வாகிகள், கழக கண்மணிகள், ஊர்மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Wednesday, June 28, 2023

மதிமுக பொதுச் செயலாளரை சந்தித்த மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்!

தமிழ்நாடு சட்டமன்ற மதிமுக உறுப்பினர்களான புதூர் மு.பூமிநாதன் அவர்களும், கு.சின்னப்பா அவர்களும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ MP அவர்களையும், மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ அவர்களையும் பெரம்பலூரில் 28-06-2023 அன்று சந்தித்தார்கள்.



தமிழ்நாடு ஆளுநர் பதவி விலக திருச்சியில் கையெழுத்து இயக்கம் தொடங்கி வைத்தார் முதன்மை செயலாளர் துரை வைகோ!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை அப்பொறுப்பில் இருந்து பதவி நீக்கம் செய்யுமாறு இந்தியக் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி, ஒரு கோடிக்கு மேலான கையெழுத்து இயக்கம் திருச்சியில் இன்று 28.06.2023 காலை, மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தொடங்கி வைத்தார்.

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலையில் தொடங்கி தெப்பக்குளம், பிஷப்ஷூபர் மேல்நிலைப்பள்ளி வரை நடை பயணமாக கழக தோழர்களோடு நடந்து சென்றும், திருச்சி மாநகர பேருந்தில் பயணித்து பயணிகள், பொதுமக்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரையும் நேரில் சந்தித்து ஆளுநரின் அடவாடித்தனத்தையும், தான் சார்ந்த கட்சியின் சனாதனத்தை பரப்பும் பிரச்சார பிரசங்கியை போல் அத்துமீறி செயல்படுவது குறித்தும் அனைவரிடமும் விளக்கி கையெழுத்தினை பெற்றார்.

மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையா சேக்முகமது, மாவட்ட செயலாளர்களான வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், டி.டி.சி.சேரன் உள்ளிட்ட மாவட்டக் கழக நிர்வாகிகள் கழக கண்மணிகள், பொதுமக்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.