Tuesday, July 4, 2023

தேசிய இனங்களின் மொழிகளைசிறுமைப் படுத்துவதா? வைகோ MP கண்டனம்!

தேசிய இனங்களின் மொழிகளை
சிறுமைப் படுத்துவதா? வைகோ MP கண்டனம்!

டெல்லியில் நடந்த இந்தி ஆலோசனைக்குழு கூட்டத்தில்,  ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்று பேசும் போது,  

“நமது தேசிய மொழியின் முதன்மையைப் புரிந்துகொள்வது முக்கியம். ஏனெனில் இது நமது உணர்வுகளை வெளிப்படுத்த உதவுகிறது. மேலும் நமது ஒற்றுமைக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஒரு பாலத்தை வழங்குகிறது. மாநில மொழிகளை நாம் பேசுவதற்கு பயன்படுத்தலாம்.

ஆனால் இந்தியை தேசிய மொழியாக மதிக்க வேண்டும். நாம் அனைவரும் நமது தேசியத் தன்மையை வடிவமைக்க உதவும் ஒரு மொழியாக இந்தியைப் பயன்படுத்துவோம். ஒன்றிய சுகாதாரத்துறையில் உள்ள அதிகாரப்பூர்வ பணிகளில் இந்தி பயன்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், அலுவல் மொழியான இந்தியைப் பரப்புவதற்கும், ஆண்டுத் திட்டத்தில் உள்ள இலக்குகளை நிறைவேற்றுவதற்கும், உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழித் துறையால் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உறுதியுடன் உள்ளது.

நமது தேசிய மற்றும் கலாச்சார ஒற்றுமையின் அடையாளமாக இந்தியை சுகாதார அமைச்சகம் அங்கீகரிக்கிறது.”  என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் தேசிய மொழிகள் தான். அவற்றை மக்கள் பேசுவதற்கான மொழிகள் மட்டுமே என்று ஒன்றிய அமைச்சர் சிறுமைப்  படுத்துவது கண்டனத்துக்குரியது.

ஒன்றிய பாஜக அரசு இந்தி மொழியை மட்டும் தேசிய மொழி என்று அங்கீகரிப்பதும், இந்தி மொழியைத் திணிப்பதும் நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரானதாகும்.

இந்தியாவின் கலாச்சார ஒருமைப்பாடு என்பது பல்வேறு தேசிய இனங்களின் மொழி உரிமை ,இன உரிமை, பண்பாட்டு உரிமையை ஏற்று மதித்து பாதுகாப்பதில் தான் அடங்கியிருக்கிறது என்பதை பாஜக அரசு உணர வேண்டும்.

அதை விடுத்து ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு என்று இந்து ராஷ்ட்ர செயல் திட்டத்தை பாஜக அரசு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் வேலையாகும்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
04.07.2023

No comments:

Post a Comment